World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Escalating violence in eastern Sri Lanka

கிழக்கு இலங்கையில் அதிகரித்துவரும் வன்முறைகள்

By Vilani Peiris
15 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஒட்டு மொத்த உள்நாட்டு யுத்தத்தை நோக்கி இழுபட்டுச் செல்கின்ற நிலையில், கடந்த ஆறு மாதங்களாக பல அப்பாவி பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பத்தாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

கிழக்கு மாவட்டமான திருகோணமலை மோதல்கள் அதிகரிக்கும் மையங்களில் ஒன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தால் இரகசியமாக ஆதரிக்கப்படும் எதிர் தமிழ் துணைப்படைக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்றன. திருகோணமலை நகரில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஒன்று இருப்பதோடு அங்கு ஒரு பிரதான கடற்படைத் தளமும் உள்ளது.

கிழக்கில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதியான கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான புலி எதிர்ப்பு இராணுவக் குழு இந்த நிலைமையில் ஒரு வெடிக்கும் காரணியாக உள்ளது. சுமார் மூன்றில் ஒரு பகுதி போராளிகளுடன் 2004ல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா, "வடக்குத்" தலைமைத்துவம் "கிழக்கில்" உள்ளவர்களுக்கு எதிராக பாரபட்சங்களை செய்கின்றது எனக் குற்றஞ்சாட்டினார். இராணுவத்துடன் கூட்டாக தனது சொந்த அரசியல் முன்னணியை இயக்கும் கருணா குழு, புலிகள் மீதும் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகள் என பரவலாக நம்பப்படுகிறது.

தற்போதைய யுத்த நிறுத்தத்தையும் மற்றும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் எதிர்க்கும் சிங்களத் தீவிரவாதிகளால் கிழக்கில் இனவாத பதட்டங்கள் வேண்டுமென்றே உக்கிரமாக்கப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய மற்றும் வடக்கு கிழக்கு சிங்கள அமைப்பு (NESO) ஆகிய அனைத்தும் திருகோணமலை மாவட்டத்தில் இயங்குவதோடு உள்ளூர் தமிழ் மக்களுக்கு எதிரான பல ஆத்திரமூட்டல்களில் இந்த அமைப்புக்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

டிசம்பர் 25, மட்டக்களப்பில் தேவாலயப் பூஜையின் போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் புலிகள் சார்பு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பின்னரே வடக்கு மற்றும் கிழக்கில் வன்முறைகள் துரிதமாக அதிகரித்தன. இந்தப் படுகொலைக்கு புலிகள் மீது குற்றஞ்சாட்ட இராணுவம் முயற்சித்த போதிலும், அரசாங்கத்திற்கு சார்பான துணைப்படை ஒன்று இதல் சம்பந்தப்பட்டுள்ள விடயம் தெரியவந்தவுடன் உடனடியாக அந்தக் குற்றச்சாட்டைக் இராணுவம் கைவிட்டது. இந்தப் படுகொலைக்கு இதற்கு முன்னர் அறியப்படாத கிழக்கு மண்ணின் சென்னன் படை என்ற ஒரு குழு பொறுப்பேற்றிருந்தது.

திருகோணமலை நகருக்கு அண்மையில் சென்றிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) ஆதரவாளர் ஒருவர் அந்தப் பிரதேசத்தில் அடக்குமுறையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி விவரித்தார். 2002ல் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், கொழும்பில் இருந்து திருகோணமலைக்கான பிரதான பாதையில் வீதித் தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன. இப்போது ஹபரனையிலிருந்து திருகோணமலைவரை 84 கிலோமீட்டர்களுக்கு சுமார் 7,000 படையினரும் பொலிசாரும் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

"அனைத்து இராணுவ சிப்பாய்களும் தலைக்கவசம் அணிந்திருப்பதோடு முழுமையாக ஆயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர். சிலர் தமது முகங்களை மூடிக் கட்டியுள்ளனர். ஹபரனையில் இருந்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒவ்வொரு சோதனைச் சாவடிகள் காணப்படுவதோடு, ஒவ்வொரு சந்தியிலும் உள்ள சோதனைச் சாவடியிலும் இராணுவமும் பொலிசும் நிறுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை நகரை நெருங்கும் போது 200 மீட்டர்களுக்கு ஒரு சோதனை சாவடியைக் காணலாம்.

"இந்த சோதனைச் சாவடிகளில், நாங்கள் சிங்களவராயிருந்தால் அந்தளவு பிரச்சினை இல்லை. படையினர் வெறுமனே உங்களது அரசாங்க அடையாள அட்டையை மட்டும் பார்ப்பர். நீங்கள் தமிழராகவோ அல்லது முஸ்லிமாகவோ இருந்தால் ஒரு தொகை அடக்குமுறையை எதிர்கொள்வீர்கள். அவர்கள் உங்களது அடையாள அட்டையையும், பைகள் மற்றும் பொதிகளையும் பரிசோதிப்பதோடு எல்லா வகையிலான கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டிவரும். சோதனை நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலேயே பயணிகள் தமது வாகனங்களில் இருந்து இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து தமது பொதிகள் மற்றும் பிள்ளைகளையும் சுமந்துகொண்டு சோதனை நிலையம் வரை நடக்கவேண்டும். பின்னர் இன்னும் 50 மீட்டர்கள் அல்லது அதற்கு மேலும் நடந்து சென்றே வாகனத்தில் ஏறவேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நகரத்தில், இராணுவமும் பொலிசும் நடந்து சென்று காவல்புரிவதோடு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களும் சுற்றித் திரிகின்றன. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நிலையான அடக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. படையினரோ அல்லது பொலிசோ தீடீரென மக்களை நிறுத்தி அவர்களது அடையாள அட்டையையும் உடமைகளையும் பரிசோதித்து விசாரணை செய்ய முடியும். இந்த நகரம் முற்றுகையிடப்பட்ட நகரம் போல் உள்ளதுடன், அனைவரும் பாதுகாப்பு தேடுதல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களையிட்டு பீதியுடன் வாழுத் தள்ளப்பட்டுள்ளனர்.

இரவில் திருகோணமலை நகரம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேசங்களில் இராணுவமும் பொலிசும் தமது முகாம்களுக்கு சென்று விடுகின்றனர். மாவட்டத்தின் பல பிரதேசங்களை இருன்ட பின்னர் புலிகள் ஆதிக்கம் செய்கின்றனர். இரு பெளத்த கோவில்கள் இராணுவத் தங்குமிடங்களாக மாற்றம் பெற்றுள்ளன. இந்த கோவில்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்குவதோடு அதன் முன்னரங்கப் பகுதிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விலைவாசி ஏற்றத்தால், குறிப்பாக எண்ணெய் விலை மற்றும் போக்குவரத்து கட்டண ஏற்றத்தால் முழு இலங்கை மக்களும் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை, வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் படு மோசமாகி வருகின்றது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மற்றும் வன்முறைகள் பற்றிய தொடர்ச்சியான பீதியும் வியாபாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலையில் உள்ள மீனவர்கள், கடற்படை மீன்பிடிக்கத் தடை விதித்ததை அடுத்து எந்தவொரு வருமானமும் இன்றி வெளியேறியுள்ளனர். .

சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,226 பேர் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் 95 வீதமானவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடும் சிரமமான தமது பயணத்தில், வடமேற்கில் உள்ள மன்னாருக்கு தீவிற்கு குறுக்காக சென்று அங்கிருந்து பாக்கு நீரிணையைக் கடந்து இந்தியாவிற்கு செல்கின்றனர். ஒரு மதிப்பீட்டின்படி, இரு தசாப்த கால யுத்தத்தின் காரணமாக தென்னிந்தியாவில் உள்ள முகாம்களில் 60,000 இலங்கை அகதிகள் வாழ்கின்றனர்.

மே 22, மீன்பிடி படகுகளில் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 122 தமிழர்களை கடப்படையினர் கைது செய்தனர். அவர்கள் இப்போது மன்னார் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் தங்கியிருக்கின்ற போதிலும், மீண்டும் திருகோணமலைக்கு செல்லுமாறு இராணுவம் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. டெயிலி மிரர் பத்திரிகைக்கு செவ்வி கொடுத்த ஒரு பெண் அகதியான பசுபதி: "நாங்கள் திருகோணமலையில் உள்ள எங்களது வீட்டுக்கு போகமாட்டோம். அரசாங்கம் எங்களை பலாத்காரமாக கொண்டுசெல்ல முற்பட்டால், அவர்கள் எங்களை சுட்டுக் கொன்றுவிட்டு எங்களது சடலங்களை எடுத்துச் செல்லட்டும், அல்லது நாங்கள் தற்கொலை செய்துகொண்டால் எங்களை திருகோணமலைக்கு கொண்டு செல்ல முடியும்," என்றார்.

கிழக்கு மாவட்டமான திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் ஜூன் மாத ஆரம்பத்தில் இருந்து பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்த வன்முறைச் சம்பவங்கள் மக்கள் முகங்கொடுத்திருப்பது என்ன என்பதற்கான அறிகுறியாகும்.

*ஜூன் 1, கூட்டுறவு அபிவிருத்தி அலுவலரான செல்வராஜா கஜநாதன், நிவராணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்தை ஒழுங்கு செய்வதன் பேரில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து மூதூரில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துகொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டார்.

* ஜூன் 2, மூதூரில் இருந்து திருகோணமலைக்குப் செல்லும் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் உட்பட இரு பயணிகளை அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்ததோடு மேலும் பலரை காயமடையச் செய்தனர்.

* ஜூன் 7, மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ட்ரைக்டர் (tractor) வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டதோடு ஏனையவர்கள் காயமடைந்தனர். புலிகள் இராணுவத்தின் மீதும் மற்றும் அதேடு இணைந்து செயற்படும் துணைப்படை மீதும் இந்த சம்பவத்திற்கு குற்றஞ்சாட்டினர். இராணுவம் வழமை போலவே எந்தவொரு தலையீட்டையும் நிராகரித்தது.

* ஜூன் 9, துணைப்படை குழுவொன்றின் ஆயுதபாணிகள் மட்டக்களப்பு நகரில் ஆறு மாணவர்களை கைது செய்தனர். உள்ளூர் மக்கள் இதுபற்றி மிக ஆத்திரத்துடன் குற்றஞ்சாட்டினர்.

* ஜூன் 9, பாதுகாப்புப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் 21 இளைஞர்களை தடுத்து வைத்தனர். இவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்களாகும். 12 பேர் மட்டுமே பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

* ஜூன் 12, மட்டக்களப்பில் புலிகளின் அரசியல்துறை அலுவலர்களில் ஒருவரான ரமணிதரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இராணுவத்தின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியே இதற்குப் பொறுப்பு என புலிகள் குற்றஞ்சாட்டினர். அதே தினம், மட்டக்களப்பின் வவுனதீவு பிரதேசத்தில் புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி லான்ஸ் கோப்ரல் எம். கருணாரட்னவை கொலை செய்ததாக இராணுவம் அறிவித்தது.

* ஜூன் 12, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்களில் 300 இளைஞர்களை இராணுவம் எதேச்சதிகாரமாக சுற்றி வளைத்தது. அவர்கள் துணைப்படைக் குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்படும் முகமூடியணிந்த நபரின் முன்னால் வரிசையில் நிறுத்தப்பட்டனர். ஒரு இளைஞன் கைதுசெயப்பட்டு புலி சந்தேக நபராக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

வலுவற்றுப்போன 2002 யுத்தநிறுத்தத்தை கண்காணிக்கும் இலங்கை கண்காணிப்புக் குழு, "கீழ் மட்டத்தில் நடக்கும் ஒரு யுத்தம்" என தீவின் வடக்கு கிழக்கு நிலைமைகளைப் பற்றி விபரித்ததோடு, இராணுவம் புலிகள் மீது தாக்குதல் தொடுப்பதில் கருணா குழு போன்ற தமிழ் ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து செயற்படுகின்றதாகவும் தெரிவித்தது. வழமைபோல் அரசாங்கமும் இராணுவமும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த அதே வேளை, நாட்டை மீண்டும் ஒட்டுமொத்த யுத்தத்திற்குள் தள்ளிச் சென்றமைக்கு அவர்களே பொறுப்பாளிகளாவர்.

Top of page