World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Clintons, the Doles and the Dubai port deal: political duplicity and class interest

கிளின்டன்களும், டோல்களும், துபாய் துறைமுக பேரமும்: அரசியல் வஞ்சனையும் வர்க்க நலனும்

By Bill Van Auken
4 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

துபாய் துறைமுக பேரம் சம்பந்தமாக புஷ் அரசாங்கத்தை ஜனநாயகக் கட்சி நியூயோர்க் தொகுதி செனட் உறுப்பினரான ஹிலாரி கிளின்டன் தாக்கிக்கொண்டிருந்த வேளையில், அவர் கணவர் பில் ஐக்கிய அராபிய முடியாட்சி அதிகாரிகளுக்கு இந்த வேறுபாட்டை நீக்குவது எப்படி என்பது பற்றியும் இந்த பேரத்தை எப்படி சாதகமாக முடிப்பது என்பது பற்றியும் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

வாஷிங்டனில் அவரது மனைவி கிளப்பி விட்ட அரசியல் அலைகளில் சிறப்பாக நீந்துவது எப்படி என்று அரசுடமையான துபாய் துறைமுக ஆணையத்திற்கு (Dubai Ports World) சொல்லித்தருவதில் ஜனநாயகக் கட்சியை சார்ந்த முன்னாள் அதிபரின் பங்கை முதன் முதலில் வியாழனன்று வெளியிட்டது பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையாகும்.

ஹிலாரி கிளின்டனின் பிரபலம் என்கிற அந்தஸ்திற்காகவும் 2008ம் வருடத்திய ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளர் என்கிற நிலைக்காகவும் இந்தச் செய்தியானது உடனேயே அமெரிக்க வானொலியினாலும் பத்திரிகை துறையினாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசியல் மற்றும் தனிப்பட்ட ஒழுக்கத்தில் கிளின்டன்களை தார்மீக நெறி அற்றவர்களாக சித்தரிக்க அவர்கள் நடத்திவரும் நெடிய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் குடியரசுக் கட்சியின் வலதுசாரி பகுதியினராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகமில்லாமல், இது அரசியல் பேராசை, வஞ்சகம் இவற்றின் வெளிப்பாடேயாகும். ஹிலாரி கிளின்டன், மற்ற ஜனநாயகக் கட்சியினர்போல், துறைமுக பேர சம்பந்தமான பரபரப்பை, வலதுபுறத்திலிருந்து புஷ் மீது தாக்குதல் தொடுக்க ஒரு வாய்ப்பு என்கின்ற அளவிலும், குடியரசுக் கட்சியின் ஆட்சி தேசத்தின் பாதுகாப்பில் வலுவற்றது என்பது போலவும், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை தொடர்ந்து நடத்துவதில் மெத்தனமாக இருக்கிறது என்பது போலவும் சித்தரிக்க ஒரு வாய்ப்பு என்பதாலும் வரவேற்றார். இந்தப் பிரசாரத்தின் முதனிலை என்னவென்றால், துறைமுகங்களை இயக்கும் நிறுவனங்களில் உலகிலேயே மூன்றாவது இடத்திலுள்ள துபாய் நிறுவனம் அராபியர்களுக்கு சொந்தமானது. இது அரசாங்கத்தால் கிளறிவிடப்பட்ட அராபியர்களுக்கு எதிரான தற்பெருமை வாதத்தையும் பயத்தையும் தூண்டிவிட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராகவே அதை திசை திருப்பச் செய்யப்படும் ஒரு குறைகூறும் முயற்சியாகும்.

அமெரிக்கத் துறைமுகங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் நிர்வகிப்பதை தடைசெய்யும் சட்டத்தை கொண்டு வருவதிலும் துபாய் துறைமுக ஆணைய பேரத்தை உயிரிழக்கச்செய்வதிலுமான முயற்சியில் இவ்வம்மையார் மற்ற ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டார். "9/11க்குப் பின்னான உலகத்தில் எமது துறைமுகங்களின் நிர்வாகத்தை வெளிநாட்டு அரசாங்கங்களிடம் ஒப்படைக்கும் தவற்றை செய்யக்கூடாது," என்று கிளின்டன் தன்னுடைய அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார். "துறைமுகப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு; தேசிய பாதுகாப்பு என்பது துறைமுகப் பாதுகாப்பு."

இந்த நடவடிக்கையை நிறுத்த, முதல் கட்டமாக, 45 நாள் விசாரணைக்கு நிறுவனம் ஒப்புக்கொண்டதை அவ்வம்மையார் வரவேற்றிருக்கிறார்.

ஆயினும், ஃபைனான்ஷியல் டைம்ஸ் கூற்றுப்படி, விசாரணைக்கு தானாகவே முன் வந்து ஒப்புக்கொண்ட துபாய் தறைமுக ஆணையத்தின் முடிவு, பேரத்தை நிறைவேற்றுவதற்கான சூழலை உண்டாக்கும் விதமாக பில் கிளின்டனின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்பட்டது.

வலதுசாரி பத்திரிகையாளர் ராபர்ட் நோவக் கூற்றுப்படி, கிளின்டன் தன்னுடைய முன்னாள் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜோ லொக்கார்ட்டை இந்த பேரத்தில் மக்கள் தொடர்பான இடையூறுகளை சமாளிக்கும் வேலையில் அமர்த்தும்படி துபாய் அதிகாரிகளிடம் தெரிவித்தாராம். இன்னும் கிளின்டனுக்கு நெருக்கமாக வேலை செய்துகொண்டிருக்கும் லோகார்ட், இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாகச் சொல்கிறார்.

UAE உடனான பில் கிளின்டனின் உறவுகள் நீண்டகாலமானதும் இலாபகரமானதும் ஆகும். 2002ம் வருடம் ஐக்கிய அராபிய நாட்டில் ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு அவருக்கு $300,000 கொடுக்கப்பட்டன. சமீபத்தில் நடத்திய ஒரு சொற்பொழிவிற்க்காக $450,000 பெற்றார். யூ. ஏ. இ. கிளின்டனின் அதிபர் நூலகத்திற்காக சுமார் அரை மில்லியனிலிருந்து ஒரு மில்லியன் டாலர்கள் வரை நன்கொடையாக கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

துபாய் அரசுக்குச் சொந்தமான ஒரு நிதி நிறுவனத்திற்கும் ஜனநாயகக் கட்சியின் நிதி வசூலிப்பாளர் ரான் பர்கிளுக்குச் சொந்தமான ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்திற்கும் இடையில் ஒரு கூட்டுத்தொழிலுக்கான பேரத்தில் தரகராக கிளின்டன் மற்றுமொரு தொடர்பில் செயல்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. கிளின்டன், யுகெய்பா என்கிற அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் சம்பளம் வாங்கும் ஒரு உறுப்பினராவார்.

அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்ட, ஜனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் எந்தவொரு உரிமையுமில்லாத வெளிநாட்டு உழைப்பாளிகளாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள வம்சாவளி ஆட்சியை மத்திய கிழக்கிற்கான ஒரு "உதாரண" ஆட்சியாகவும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" ஒரு மிக முக்கியமான நண்பர் என்றும் வர்ணித்ததின் மூலம், கிளின்டன் பிரதியுபகாரம் செய்துவிட்டார்.

தான் தன் கணவருடன் அவருடைய ஐக்கிய அரபு எமிரேட் தொடர்பைப் பற்றி ஒருபொழுதும் விவாதித்ததில்லை என்றும் "பாதுகாப்பு பற்றிய நியாயமான கவலையில் தன்னுடைய நிலையை அவர் எப்பொழுதுமே ஆதரிக்கிறார்" என்றும் ஹிலாரி கிளின்டன் ஊர்ஜிதப்படுத்தினார்.

துறைமுகத்தை நிர்வகிக்கும் நிர்வாகத்தை துபாய்க்கு விற்றது பற்றிய ஹிலாரி கிளின்டனின் வெளிப்படையான கோபத்திற்கும் அவருடைய கணவரின் அராபிய முடியரசுடனான அரசியல் மற்றும் பண சம்பந்தமான நெருக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் அரசியல் ரீதியாகக் குறைகூறத்தக்கதாகும், ஆனால் வினோதமானதல்ல.

1996 தேர்தலில் கிளின்டனின் குடியரசுக்கட்சி எதிராளியான பொப் டோல் துபாய் துறைமுகப் பேரம் சம்பந்தமாக இதைவிட நேரடியானதும் இலாபகரமானதுமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். இந்த முன்னாள் குடியரசுக் கட்சி போட்டியாளரின் மனைவி எலிசபெத்தும் அமெரிக்க செனட்டிற்கு, வடக்கு கரோலினாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியரசுக்கட்சி உறுப்பினர்தான். இந்த துறைமுகப் பேரம் சம்பந்தமாக தான் மிகவும் கவலைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் செனட் பெரும்பான்மை கட்சித்தலைவரான பொப் டோல் துபாய் துறைமுகப் பேரத்தை மத்திய அரசு அதிகாரத்துவத்தின் மூலமாக வழி நடத்திச் சென்ற வழக்கறிஞர் ஸ்தாபனத்தில் ஒரு பங்காளியாவார். சமீபத்தில் அவர் துபாய்க்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஊதியத்திற்கு பணிபுரிபவராக சேர்ந்துள்ளார். ஹிலாரி கிளின்டனைப்போல், எலிஸபெத் டோலும் அவரும் அவரது கணவரும் துபாய் பேரம் பற்றி ஒருபொழுதும் விவாதித்ததில்லையென்று கூறிக்கொள்கிறார்.

மேலும், கிளின்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான மடெலின் ஆல்ப்ரைட்டின் ஆதரவு திரட்டும் நிறுவனம் துபாய் துறைமுக நிறுவனத்திற்கு உதவி வருகிறது.

புஷ் குடும்பத்தின் ஐக்கிய அரபு நாட்டுடனான தொடர்புகள் நாட்பட்டதும் நெருக்கமானதுமாகும். புஷ், அவரது தகப்பனார் மற்றும் பல உயர்ந்த குடியரசு அதிகாரிகளை வேலையில் அமர்த்தியிருந்த தனியார் பங்கு நிறுவனமான கார்லில் குழு, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு சொந்தமான ஒரு முதலீட்டு நிறுவனத்திடமிருந்து முதலீடு பெற்றதன் மூலம் பல கோடி டாலர்களை சம்பாதித்துள்ளது. அதிபரின் சகோதரரான நீல் புஷ், தவறாமல் அடிக்கடி துபாய்க்கு சென்றுவருவதன் மூலமும், இக்னைட் எனப்படும் அவருடைய கல்வி மென்பொருள் நிறுவனத்திற்கு 23 மில்லியன் டாலர்களை அரசு முதலீடாகப் பெற்றதன் மூலமும் யூ. ஏ. இ. யுடன் தனக்கு இலாபகரமான உறவுகளை உருவாக்கியுள்ளார்.

மிகப் பெரிய இரண்டு அரசியல் உயர் அதிகாரிகளுக்கும் துபாய்க்கும் இடையே பரவலாகவும் நெருக்கமாகவும் நிதி சம்பந்தப்பட்ட உறவுகள் உள்ள இந்தப் பின்னணியில், கடந்த இரண்டு வாரங்களாக துறைமுகப் பேரத்தில் சகலவித கோஷங்களோடு வீசிக்கொண்டிருக்கும் அரசியல் அமளி சுகவீனமான, வஞ்சனையான நிறத்தை பெறுகிறது.

ஒரு விதண்டாவாதி, கிளின்டன்களையும் டோல்களையும் பற்றிக் கூறும்பொழுது, நடந்தது என்னவென்றால் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட ஒரு மோசடி என்று கூறுவார். மனைவிகள் துபாய் துறைமுகப் பேரத்திலுள்ள "பாதுகாப்பு கவலைகள்" பற்றி அமெரிக்க சட்டசபையின் தளத்திலிருந்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள்; இப்படிப் பேசுவதன் மூலம் தங்கள் கணவன்மார்களின் அராபிய இளவரசர்களுக்கான தனிப்பட்ட சேவையின் பண மதிப்பை உயர்த்துகிறார்கள்.

நாட்டை தன் சொந்த நலனிற்காக அடக்கி ஆள்கின்ற ஒரு பிற்போக்கான, ஊழலான சிலவராட்சியின் அரசியல் வாழ்க்கை இங்கு வெளிப்படுகிறது; முக்கியமான அரசியல் நபர்கள் இந்த ஆளும் கட்சியின் மேல்மட்டத்திலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது, அந்த நிலைக்கு விரைவாக உயர்த்தப்படுகிறார்கள், அவர்களுக்கும் அவர்கள் எந்த கோடீஸ்வரர்களுக்கு பிரதிநிதிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கும் மட்டுமே நன்மை பயக்கக்கூடிய கொள்கையை உருவாக்குகிறார்கள்.

இந்த நடவடிக்கைகளெல்லாம் அநேகமாக, அரசியல் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விடுகின்றன. மேல் மட்டத்திலுள்ள ஒரு சதவிகித நபர்களை மட்டுமே பணக்காரர்களாக்க அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்த அரசியல் ஸ்தாபனம் மக்கள் ஆதரவைத் திரட்டமுடியாமல் போவதால், பொய்கள், பயம் இவற்றின் மூலம் பொது மக்கள் கருத்தை சாமர்த்தியமாக கையாள முயற்சிக்கிறது.

துறைமுகப் பேரம், அமெரிக்க மக்களின் மேல் சுமார் ஐந்து வருடங்களாக, "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்கிற பெயரில் திணிக்கப்பட்ட மோசடியை வெளிக்கொணர்ந்து விட்டது. அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுமே -வெளிநாட்டில் நடத்தப்பட்ட படையெடுப்புகள், உள்நாட்டில் ஜனநாயக உரிமை பறிப்பு"- இவை எல்லாமே மக்களின் பாதுகாப்பைப் பற்றிய அதீத கவலையின் பிரதிபலிப்பே என்பது அவர்கள் தரப்பு வாதம். மாறாக, இந்த பேரம் உந்தப்பட்ட விதத்திலிருந்தும், இதை நடைமுறைப்படுத்தியதில் இரண்டு பெரிய கட்சிகளின் மூத்த தலைவர்களின் பங்கும், இதற்கு முக்கியமான தூண்டுசக்தி தனி நபர் இலாபமேயாகும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

Top of page