World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Dispute escalates over "First Job Contract"

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

By Peter Schwarz
21 March 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து, இளம் தொழிலாளர்களின் வேலை உரிமைகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டமான "முதல் வேலை ஒப்பந்தம்" (Contrat première embauche- CPE) குறித்த பூசல் தீவிரமாகியுள்ளது.

எந்தக் காரணமும் இல்லாமல் 26 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை அவர்கள் முதல் வேலையில் இரண்டு ஆண்டுகளுள் பணி நீக்கம் செய்யும் உரிமை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மாற்றத்தை கொண்ட இத் தொழில்துறை சட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மீளஉறுதிப்படுத்தியுள்ளார். கோலிச அரசாங்க செய்தித் தொடர்பாளரான François Copé சட்டத்தை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிட்டார். அதிகபட்சம் "ஏதேனும் திருத்தம்" செய்யப்பட முடியும் என்று அவர் கூறினார்.

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிர இடது ஆகியவை மக்களின் பரந்த அடுக்குகளை தழுவியுள்ள ஓர் இயக்கத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டை கொண்டுவர முயன்று கொண்டு இருக்கின்றன. அரசாங்கம் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் விருப்பத்தையோ தன்மையையோ கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானாலும், இந்த அமைப்புக்கள் அனைத்தும் அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோருவதைக் கவனமாகத் தவிர்த்து வருகின்றன. மாறாக, அவை பூசலை விரைவாகத் தீர்த்து அரசாங்கத்திற்கு உறுதி கொடுக்க வேண்டும் என்பதற்குத்தான் அவை பாடுபடுகின்றன.

செய்தி ஊடக தகவலின்படி, வில்ப்பன் ஞாயிறு முழுவதும் பல மந்திரிகளுடன் விவாதித்ததுடன், ஜனாதிபதி ஜாக் சிராக்குடனும் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பொருளாதார நிபுணர்கள் மற்ற முக்கியமானவர்கள், "சமூகத்தில் உள்ளவர்களுடனும்", அவர் விவாதங்களை கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் எவர் என்பது இரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. திங்களன்று அவர் பெருவணிகத் தலைவர்கள் 20 பேரைச் சந்தித்தார்; அவருடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ள மந்திரிகள் நான்கு பேரும் உடனிருந்தனர். அவர்கள் பெரும் ஏமாற்றமடையும் வகையில், வில்ப்பன் தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதிக்கவில்லை.

இதற்கிடையில், சட்டத்திற்கு மக்களுடைய எதிர்ப்பு பெருகிவருகிறது. ஒரு கருத்துக் கணிப்பின்படி கிட்டத்தட்ட அனைத்து பிரெஞ்சுக் குடிமக்களில் நான்கில் மூன்று பங்கினரால் எதிர்க்கப்படுகிறது. 38 சதவிகிதத்தினர் சட்டம் மாற்றப்படவேண்டும் என்று அறிவித்துள்ளனர்; 35 சதவிகிதத்தினர் இது முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு 15 - 24 வயதுப் பிரிவினரில் 80 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளது.

Dijon இல் ஆக்கிரமிப்பிற்குட்பட்டுள்ள பல்கலைக் கழகங்களில் இருந்து 450 மாணவர்கள் ஞாயிறன்று கூடினர். பிரான்சில் உள்ள 84 பல்கலைக் கழகங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு, CPE க்கு எதிராக நடக்கும் எதிர்ப்புக் காலத்தில் மூடப்பட்டுள்ளது. 17 மணி நேர விவாதத்திற்கு பின்னர் மாணவப் பிரதிநிதிகள் அரசாங்கம் CPE ஐ திரும்பப் பெறும் வரை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுள்ளனர். இதைத்தவிர மாணவர் பிரதிநிதிகள் இந்த வாரம் புதன், வியாழன் கிழமைகளில் அடுத்த நடவடிக்கை தினங்களாக அறிவித்துள்ளனர். இதற்கும் FIDL எனப்படும் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்குப்பின், தொழிற்சங்கங்களும் அரசாங்கம் பின்வாங்காவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளன. CGT இன் தலைவரான Bernard Thibault ஒரு பொதுவேலை நிறுத்தம் கூட வரலாம் என்று கூறினார். FO தொழிற்சங்கத்தின் தலைமை செயலாளர் அணிதிரளுதல் தொடர்ந்து நிகழும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது என்று அறிவித்தார். அதன் வெற்றிகளை உறுதிப்படுத்தும் பொருட்டு பல தொழிற்சங்கங்கள் தொழில்துறையின் பரந்த பிரிவுகள் சம்பந்தப்படும் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புக் கொடுக்க வேண்டி வரும். CFDT தொழிற்சங்கம் "இந்த வார இறுதிவரை விடையிறுப்பதற்கு" அரசாங்கத்திற்கு அவகாசம் கொடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறது.

இதன்பின் பல செய்தித்தாட்கள் "பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை" என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டன; அரசாங்கம் 48 மணிநேரத்திற்குள் விடையிறுக்காவிட்டால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக குறிப்புக் காட்டின. உண்மையில், தொழிற்சங்க தலைமை அரசாங்கத்துடன் பகிரங்க மோதலைத் தவிர்க்கும் நம்பிக்கையிழந்த நிலையில் உள்ளது, அது வீழ்ச்சியுறுவதை நோக்கமாக கொண்ட நடவடிக்கைகள் பற்றி பேசுவதில்லை.

ஆசிரியர்கள் தொழிற்சங்கமான FSU வின் தலைவர் Gérard Aschieri, தொழிற்சங்கத் தலைவர்களின் நோக்கங்களை வெளிப்படையாகவே தெரிவித்தார்: "நாம் இனியும் பொறுத்துக் காத்திருக்கமுடியாது; ஏனெனில் மாணவர்கள் இயக்கம் தொடரும், அது ஆபத்தானதாகவும் ஆகக்கூடும்." என்று அவர் Le Figaro செய்தித் தாளிடம் கூறினார். "எனவே நமக்கு அடுத்த வாரம் ஒரு வேலைநிறுத்தம் தேவை; நாம் ஓர் அறைகூவலை வெளியிடுவோம்." வேறுவிதமாகக் கூறினால் Aschieri இன் கவலை ஏதேனும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்துவிடுவர் என்பதாகும்.

திங்கட்கிழமையன்று தொழிற்சங்கத் தலைவர்கள்கூடி மிகவும் வருந்தத்தக்க ஒரு சமரசக் கருத்தை கூறினார்கள். 12 தொழிற்சங்க தலைர்கள் அடுத்த நடவடிக்கை பற்றி விவாதிக்க கூடி, பின்னர் மார்ச் 28 அன்று அடுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

இதன் பொருள் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 10 நாட்களுக்கு பெரும் திகைப்பில் ஆதரவின்றி கைவிடப்படுவர்; அரசாங்கத்திற்கு இதையொட்டி நிறைய அவகாசம் கிடைத்து தன்னுடைய தூண்டுதல்கள், திரித்தல்களில் ஈடுபடமுடியும். வசந்தகால விடுமுறை ஏப்ரலில் தொடங்குகிறது மற்றும் அதையொட்டி எதிர்ப்புக்களும் மடிந்துவிடும் என்று தொழிற்சங்க தலைவர்கள் நம்புகின்றனர்.

CFDT இன் தலைமை செயலாளரான Francois Chérèque ஏற்கனவே ஞாயிறன்று France Inter க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் கணிசமாக பின் வாங்கிவிட்டார். 48 மணிநேர இறுதி எச்சரிக்கை பற்றிய கருத்து குறித்து அவர் கூறுகையில் அவருடைய அமைப்பு "ஒரு போதும் அத்தகைய இறுதி எச்சரிக்கையை கொடுக்கவில்லை" என்று அவர் விடையிறுத்தார். அவர்களுடைய முக்கிய கவலை "இதில் தொடர்புடைய அனைவருக்கும் இரண்டு நாட்கள் இதைப்பற்றி சிந்திக்க நேரம் உள்ளது" என்பதாகும். வேலைநிறுத்தம் பற்றிக் கூறுகையில், அத்தகைய நடவடிக்கைக்கு அனைத்து வட்டார, உள்ளூர் கூட்டமைப்புக்கள் என்று அவருடைய தொழிற்சங்கத்தின் பிரிவுகளைக் கேட்காமல் அவர் முடிவெடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், "பொதுவாக நாங்கள் பொது வேலைநிறுத்தத்தை ஒரு வழிவகையாக கொள்ளுவதில்லை." என்றும் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் CPE ஐ தொடர்ச்சியாக குறைகூறிவந்துள்ளமை சட்டத்தின் பொருளுரைக்காக அல்ல, மாறாக அவர்களை கேட்காமல் பாராளுமன்றத்தில் விரைவாக வில்ப்பன் அதைக் கொண்டு வந்தார் என்பதற்காக ஆகும். கடந்தகாலத்தில் அவர்கள் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு காட்டிவந்ததோடு எந்த எதிர்ப்பையும் நசுக்குவதற்கு வேலைசெய்தனர். கடந்த ஆண்டு கோடை காலத்தில் அரசாங்கம் இதே போன்ற சட்ட முறையை, Contrat nouvelle embauche (CNE) கொண்டுவந்தபோது, 20க்கும் குறைவான தொழிலாளர்கள் உள்ள நிறுவனத்தில் இத்தகைய விதிமுறைகள் வந்தபோது, தொழிற்சங்கங்கள் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.

மற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போலவே, பொதுநல செலவினக் குறைப்புக்கள் இடையறாமல் பிரான்சிலும் நடத்தப்பட்டதானது தொழிற்சங்கங்களின் ஆதரவு இல்லாமல் முடிந்திருக்காது. ஆனால் இப்பொழுது அவை அரசாங்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள தங்கள் நிலை பறிபோய்விடுமோ, அத்தேவை இல்லாமற்போய்விடுமோ என்று பயப்படுகின்றனர்.

CPE மீதான பூசல் பிரான்சின் அரசியல் கட்சிகளுக்குள் தீவிரச் செயற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான சோசலிஸ்ட் கட்சியின் (PS) எதிர்ப்புக்கள் அதன் தேர்தல் வாய்ப்புவளங்களை அதிகரிக்கக் கூடும் என்ற நம்பிக்கைக்கும் பூசல் தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடுமோ என்ற பயத்திற்கும் இடையே மாறிமாறி திகைப்புக் கொண்டுள்ளது. தலைவர் François Hollande உட்பட முக்கிய கட்சி உறுப்பினர்கள் சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் PS, CPE ஐ அகற்றிவிடும் என்று Hollande உறுதிமொழி கொடுத்தார்; அதுவரை எதிர்ப்புக்களை நிறுத்திவைக்குமாறும் ஆலோசனை தெரிவித்துள்ளார். "இப்பொழுது தன்னுடைய நிலையில் இருந்து அரசாங்கம் நகரத் தயாராக இல்லை என்றால், பின் அது 2007 வரை நிறுத்திவைக்கப்பட வேண்டும்; 2007ல் பிரெஞ்சு மக்கள் தங்கள் வாக்கை பயன்படுத்தலாம்."

பூசலின் தீவிரத்தைக் குறைப்பதற்குத் தம்மால் இயன்றதை "சோசலிஸ்டுகள்" செய்து வருகின்றனர். பழமைவாத செய்தித்தாளான Figaro சோசலிஸ்ட் கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை பற்றி கருத்துக் கூறுகையில் தெரிவித்ததாவது: "கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தயக்கத்தில் உள்ளனர்: எரியூட்டலாமா, வேண்டாமா? என்பதே அக்கேள்வி." அவர்கள் அனைவரும் நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஒரு வழி காண முற்பட்டுள்ளனர். Hollande அனைவரையும், இளைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சி கூட என்று எல்லோரையும் அழைத்து "சரியான சூத்திரத்தை" காண விரும்புகிறார். Laurent Fabius அனைவரும் "ஒரே மேசையில்" கூடி விவாதிக்க வேண்டும் என்கிறார். Dominique Strauss-Kahn ஒரு "தீர்வை" காணுமாறு ஜனாதிபதி சிராக்கிற்கு முறையிட்டுள்ளார்.

PS இன் செய்தித் தொடர்பாளரான Julien Dray தன்னுடைய பிடிவாதத்தால் அமைதியற்ற சூழலை தோற்றுவிக்கிறது என்று அரசாங்கத்தின்மீது குற்றம் சாட்டியுள்ளார். "இளைஞர்கள் தெருக்களுக்கு வந்துவிட்டால், என்ன நிகழும் என்று யார் கூறமுடியும்? பெரும் சூறாவளியில் அனைத்தும் தள்ளப்படலாம்."

"சோசலிஸ்டுகள்" ஒழுங்குமுறையில் உடைவு ஏற்பட்டால் கவலைப்படுவதற்கு ஒவ்வொரு உரிமையும் உள்ளது. கடந்த முறை லியோனல் ஜோஸ்பன் தலைமையில் சோசலிஸ்ட் அரசாங்கம், தற்போது வில்ப்பனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒத்த செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியது. 2002ல் ஜோஸ்பனுடனான அதிருப்தி ஜனாதிபதித் தேர்தலில் தேசிய முன்னணி (FN) கட்சியிடம் அவர் தோற்க வகை செய்தது; இதற்கு விடையிறுக்கும் வகையில் PS சிராக்கிற்கு பிரச்சாரம் செய்து அவரை "குடியரசு மதிப்பீடுகளின்" மொத்த உருவம் என்று வர்ணித்தது. CPE யினால், தூக்கி எறியப்படும் பொருளாக நடத்தப்பட்டு ஒரு க்ளீனெக்ஸ் தலைமுறை என்று தள்ளப்பட்டுள்ளோம் என்று கருதும் இளைஞர்களைவிட சோசலிஸ்ட் கட்சி வில்ப்பனுடனும், சிராக்குடனும் அவர்களுடைய பெருவணிக ஆதரவாளர்களுடனும் ஆயிரம் மடங்கு கூடுதலான பொதுக் கருத்துக்களை கொண்டுள்ளது.

PCF உம் PS நடந்து கொள்ளும் வகையில்தான் நடந்து கொள்ளுகிறது. CPE திரும்ப பெற வேண்டும் என்று கோருவதுடன் அரசாங்கத்தின் "அரசியல் பொறுப்பிற்கும்" முறையீடு செய்துள்ளது. PCF தலைமையை கொண்டுள்ள Marie-George Buffet அரசாங்கத்தை "ஒரு சுவர் போல் நடந்துகொள்ளுவதை" நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளது.

இரண்டு கட்சிகளும் CPE யில் இருந்து தோன்றியுள்ள பூசலை, அது பெரிதாகிவிடாமல், இன்னும் கூடுதலான வகையில் தேசிய அதிகாரத்தின் மதிப்புக் குறைவு ஏற்படுவதை தடுக்கும் கருத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. எதிர்ப்புக்களில் இருந்து விளையும் மக்கள் அழுத்தத்தின்மூலம் அரசாங்கம் ஆபத்திற்குட்பட்டுவிடக் கூடாது என்பதை எப்படியும் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதை அவர்கள் கவனத்துடன் தவிர்க்கின்றனர்; மேலும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் பலமுறையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலைப்பாட்டில், அவற்றிற்கு ஆதரவை போலி இடது புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) கொடுத்துள்ளது. ஒரு புறம் "அனைத்து வயதினர், வேலை புரிவோரையும் கொண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு" அணிதிரட்டலை விரிவுபடுத்துவதற்காகவும் என்று LCR கூறினாலும், மறுபுறம் PS, PCF, தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பாதையில் இயக்கம் சென்றுவிடக் கூடாது என்ற கருத்தையும் கொண்டுள்ளது; அதே நேரத்தில் இந்த அமைப்புக்கள் பற்றி எவ்வித குறைகூறல்களும் கூடாது என்று அடக்கியும் வைத்துள்ளது.

LCR இன் செய்தித் தொடர்பாளரான Olivier Besancenot "லுத் உவ்றியேரில் இருந்து சோசலிஸ்ட் கட்சிவரை" அனைத்து இடது சக்திகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும், பொது முன்னெடுப்பு முயற்சியில் பங்கு பெறுமாறு ஓர் அழைப்பு விடுத்துள்ளது. "முழு இடதும், கருத்து வேறுபாடுகள் எப்படி இருந்தபோதிலும் தன்னுடைய பொறுப்பை அறிந்துகொள்ளவேண்டும், மாணவர், இளைஞர் அமைப்புக்கள் திட்டமிட்ட வகையில் திரட்டப்படுவதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

PS, PCF ஆகியவற்றின் அரசியல் பற்றி, மாறுபட்ட கருத்துக்கள் உடையவர்களை LCR அமைப்பின் ஏடான Rouge இனால் குறைகூறலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். இந்த ஏடு கூறுவதாவது: "சோசலிஸ்ட் கட்சியின் நோக்கங்கள், அரசியல் கணக்குகள் எப்படி இருந்தாலும், அரசாங்கம், நாட்டுடன் மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைமைகள் கொண்டுள்ள பயங்கள் ஒருபுறம் இருக்க, இவை அனைத்தும் இயக்கத்தை தொடர்ந்து வரவும், ஆதரிக்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. இதற்கான உந்துசக்தி போராட்டத்தை எடுத்துக் கொண்டுள்ள இளைஞர்களாவர்; அவர்கள் வெற்றிக்குப் போராடுகின்றனர்; இயக்கத்தின் விரிவாக்கத்திற்கு போரிடுகின்றனர்; ஊதியம் பெறுவோர் தங்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் பொருட்டு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதுடன், போராட்டத்தில் பங்கேற்கவும் விரும்புகின்றனர்."

வேறுவிதமாகக் கூறினால், இந்த அமைப்புக்களின் துரோகப் பாத்திரம் மீதான பிரச்சினை குறித்து கவலையில்லை, ஏனெனில் இளைஞர்களுடைய துடிப்பான இயக்கம் அவர்களை, "இயக்கத்துடன் உடன்செல்லவும், அதற்கு ஆதரவு கொடுக்கவும்" நிர்ப்பந்திக்கும்.

உண்மையில், CPE க்கு எதிரான பரந்த இயக்கமானது இந்த அமைப்புக்களில் இருந்து சுயாதீனமாக தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னுடைய சுயாதீனமான மூலோபாயத்தை வளர்த்தெடுக்கவில்லை என்றால் தோல்வியில்தான் முடியும். அரசாங்கம் தான் பின்வாங்குவதாக இல்லை என்ற தன்னுடைய விருப்பத்தை தெளிவாக்கியுள்ளது. தங்கள் பங்கிற்கு PS, PCF மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன இவ்வியக்கம் மேலே செல்லா நிலைக்கு திருப்பி விடுவதற்கு தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்யும்.

See Also:

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page