World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: May-June 1968 and today

பிரான்ஸ் : மே-ஜூன் 1968ம் இன்றும்

By Ulrich Rippert
25 March 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

"இது மற்றொரு மே-ஜூன் 1968 ஆ?" இந்தக் கேள்விதான் பிரான்சிலும், சர்வதேச செய்தி ஊடகத்திலும் சமீபத்தில் பலமுறையும் எழுப்பப்பட்டுள்ள வினாவாகும்.

1.5 மில்லியன் மக்கள் பிரான்ஸ் முழுவதும், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் ஜனாதிபதி சிராக்கின் கோலிச அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" (CPE) எதிராக நடைபெற்ற 160 ஆர்ப்பாட்டங்களில் கடந்த சனிக்கிழமை அன்று பங்கு பெறுவதற்கு முன்னரே, மக்களிடையே பெருகி வரும் எதிர்ப்பு அலைகளை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடப்பட்டு வந்தன.

தற்போதைய நிலைமை 1960களின் கடைசியில் நிகழ்ந்தவற்றுடன் ஒப்பிடப்பட முடியாது என்று சில வர்ணனையாளர்கள் ஆறுதல் தரும் வகையில் பேசியுள்ளனர். 1968 வசந்த காலத்தில் கோரப்பட்டது போல் சமூகத்தின் மாற்றத்தைக் கோரி மாணவர்கள் தற்போதைய போரட்டத்தை நடத்தவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். சமீபத்திய நாட்களில் தெருவிற்கு போராட வந்துள்ள மாணவர்கள், இந்தப் பண்டிதர்களின் கணக்கின்படி, இருக்கும் சமூக ஒழுங்கின் வடிவமைப்பிற்குள் ஓர் இடத்தைத்தான் நாடுகின்றனர்.

இத்தகைய வர்ணனைகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கேள்வியை தவிர்க்கின்றன: முதலாளித்துவ அமைப்பினால் "புரட்சித் தன்மையற்ற" விழைவுகள் தீர்வு காணப்படவில்லை என்றால் என்ன நிகழும்?

மற்றொருவித செய்தி ஊடக வர்ணனை, பிரான்சில் 1968 நடந்த நிகழ்வுகள் மத்தியதர வர்க்கத்தின் தீவிரமயமாக்கப்பட்ட இளைஞர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது என்ற உணர்வைக் கொடுக்கிறது.

இது ஒரு தீவிர வரலாற்றுச் சிதைவாகும். ஒரு போர்க்குணமிக்க மாணவர் எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்க வகையில் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்தபொழுது வரலாற்று நிகழ்வாயிற்று; ஒரு பொது வேலை நிறுத்தத்தை தொடங்கி பொருளாதாரத்தை இரண்டு வாரங்களுக்கும் மேலாக முடக்கியபோது அந்நிகழ்வு தொழிலாள வர்க்கத்தின் சக்தியையும், புரட்சித் திறனையும் நிரூபித்த தன்மையை பெற்றது. தொழிலாளர்கள் அதிகாரபூர்வ தொழிற்சங்கங்களுக்கு பெரும்பாலும் சுயாதீனமான முறையில் மற்றும் எதிராக நடந்து, கொள்கையில், அடிப்படை தொழில்களில் முக்கிய ஆலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு பிரான்சில் பொருளாதாரத்தின் "இரட்டை அதிகாரம்" இருந்த நிலை எனக் கூறக்கூடிய நிலைமையை நிறுவினர்.

சார்ல்ஸ் டு கோலின் அரசாங்கமும் முழு பிரெஞ்சு முதலாளித்துவ அரசும் அவற்றின் அஸ்திவாரங்களில் பெரும் அதிர்விற்கு ஆளாகியதோடு, ஒரு கால கட்டத்தில் சிதைந்த, பெரும்பீதியுற்ற நிலையில் சோசலிச புரட்சி ஒன்றால் தாங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிடுவோமோ என்று கலக்கமுற்றன.

பிரான்சின் தற்போதைய நிகழ்வுகள் மிகப் பரந்த அளவில் 1968 ஆவியை புதுப்பித்துள்ளன என்றால், அந்த வசந்த கால நிகழ்வுகள் மிக அடிப்படையான முறையில் பிரான்சின் ஆளும் உயரடுக்கு தப்பிக்குமா அல்லது தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த அபிலாஷைகள் தப்பிப் பிழைக்குமா என்ற வினாவை எழுப்பின.

அந்த நிகழ்வின் அரசியல் படிப்பினைகள் இன்றையை போராட்டங்களுக்கு மிக முக்கியமாக இருப்பதால், அந்த முக்கிய வசந்தகால நிகழ்வுகளின் போக்கை ஆராய்வது மிகவும் தேவையாகும்.

மாணவர் எதிர்ப்பில் இருந்து பொது வேலை நிறுத்தத்திற்கு

1968 மே 3ம் தேதி, சோர்போன் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக் கழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டபோது, ஏற்கனவே பல முக்கிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. அதற்கு முந்திய நாள் பாரிசின் தொழில்துறை புறநகர்ப்பகுதியில் இருந்த University of Nanterre மூடப்பட்டு விட்டது. அங்கிருந்த மாணவர்கள் பிற்போக்கான பொருளுரை மற்றும் சாதாரண உடையணிந்த போலீசார் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தமை ஆகியவற்றை எதிர்த்து பல வாரங்களாக விரிவுரைகளை புறக்கணித்திருந்தனர்.

போலீசார் தடியடிப் பிரயோகம், கண்ணீர்ப்புகை ஆகியவற்றின் மூலம் சோர்போனை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை தாக்கி ஏராளமானவர்களை கைதும் செய்தனர். இத்தூண்டுதலையொட்டி பல நாட்கள் பாரிசின் இலத்தின் பகுதியில் தெருக் கைகலப்புக்களும் பிரான்ஸ் முழுவதும் பல்கலைக் கழகங்கள் ஆக்கிரமிப்பு அலையும் ஏற்பட்டிருந்தது.

மாணவர்கள், போலீஸ் மிருகத்தனத்தையும் அடக்குமுறையையும் கண்டித்ததோடு மட்டும் இல்லாமல் வியட்நாம் போர் மற்றும் அமெரிக்க, பிரெஞ்சு அரசாங்கங்களின் ஏகாதிபத்தியக் கொள்கைகளையும் கண்டித்தனர்.

பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) ஸ்ராலினிச PCF ன் அரசியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பும் (CGT) மாணவர்களை வெறும் தீரச்செயல் நிகழ்த்த விரும்பமுடையவர்கள், குண்டர்கள் என்று இகழ்ந்தனர். எதிர்-ஆர்ப்பாட்டங்களை கூட அமைத்து ஸ்ராலினிச இளைஞர் இயக்கத்தின் பிரதிநிதிகளை மாணவர்கள் கூட்டங்களை கவிழ்க்கும் வகையில் செயலாற்றவும் அனுப்பினர்.

அப்படி இருந்தும், மாணவர்களிடையே "தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமை" என்ற கோஷம் இன்னும் புகழடைந்தது. மாணவர்கள் குழுக்கள் தொழிலாளர்களை ஆலைகளில் சந்தித்து கூட்டுத் துண்டுப்பிரசுரங்களை எழுதினர், கூட்டு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டனர்.

மே 13ம் தேதி, CGT ஐ தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் போலீஸ் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒருநாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அன்று மிகப் பெரிய தொழிலாளர்கள், மாணவர்களுடைய கூட்டு ஆர்ப்பாட்டம் முதல் தடவையாக நிகழ்த்தப்பட்டது.

Renault தொழிலாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கை கூறியதாவது: "எமது ஊதிய உயர்வுகளை விரும்பினாலும், எமது வேலை நிலைமைகள் பற்றிய கோரிக்கைகள் வெற்றிபெற விரும்பினாலும், நாம் நிரந்தரமாக அச்சறுத்தலுக்கு உட்படக்கூடாது என விரும்பினாலும், நாம் உடனடியாக எமது சமூகத்தில் ஓர் அடிப்படை மாறுதலுக்குப் போராட வேண்டும்.... தொழிலாளர்கள் என்னும் முறையில் எமது நடவடிக்கைகளின் போக்கை கட்டுப்படுத்த நாம் முயலுதல் வேண்டும். எமது கோரிக்கைகள் மாணவர்களுடைய கோரிக்கைகள் போன்றதேயாகும். தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அங்கு பணியாற்றுபவர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும்."

மே 14ம் தேதி மாலை, Aviation Sud விமானத்தயாரிப்பு ஆலையின் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை தொடக்கினர். தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் மறியல் பகுதிகளுக்கு வந்தனர். மே 16ம் தேதி ரெனோல்ட் தொழிலாளர்கள் தங்கள் ஆலையை ஆக்கிரமித்து, நிர்வாகத்தினரை அவர்களுடைய அலுவலகங்களில் பூட்டிவைத்தனர். Paris Press தொழிலாளர்கள் சுயாதீனமான வேலைநிறுத்தம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர்.

இப்படிப்பட்ட தன்னியல்பு வேலைநிறுத்த இயக்கம் கூடுதலான ஆலைகளில் பரவியது; தொடக்கத்தில் பாரிசில் இருந்தாலும், பின்னர் பெருகிய முறையில் பல நகரங்களுக்கும் பரவியது. சோர்போனை ஆக்கிரமத்திருந்த மாணவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறியது: "தோழர்களே, Nantes ல் உள்ள Sud Aviation ஆலை இரண்டு நாட்களாக நகரத்தில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்று இயக்கம் (NMPP Paris, Renault-Cleon, போன்றவற்றிற்கும்) பரவியுள்ளது. எனவே சோர்போனை ஆக்கிரமித்துள்ள குழு உடனடியாக அனைத்து ஆலைகள் ஆக்கிரமிக்கப்பட அழைப்புக் கொடுப்பதுடன் தொழிலாளர்கள் குழுக்களை நிறுவவும் அழைப்பு விடுகிறது. தோழர்களே, இந்த அறிக்கையை நகலெடுத்து செய்தியை விரைவாகப் பரப்பவும்.!"

கூட்டாக தொழிலாளர்களும், மாணவர்களும் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் பல நகரங்களிலும், "ஆலைகளை ஆக்கிரமிப்புச் செய்யவும்! அதிகாரங்கள் அனைத்தும் தொழிலாளர் குழுக்களுக்கே! வர்க்க சமுதாயத்தை அகற்றிடவும்!" என்ற கோரிக்கைகளை கொண்டு வெளிவந்தன.

ஸ்ராலினிச PCF மற்றும் CGT அமைப்புக்கள் அச்சத்துடன் எதிர்விளைவை காண்பித்து தங்களால் இயக்கத்தை எதிர்க்க எவ்வளவு செய்யமுடியுமோ அவற்றைச் செய்தன. பல ஆலைகளிலும் CGT அறிக்கைகளை ஒட்டி வைத்தது; அவை கூறியதாவது: "இளந் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புரட்சிகரக் கூறுகள் நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தி நம்மை வலுவிழக்கச் செய்யும் வகையில் நடந்து வருகின்றன. இத்தீவிரவாதிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கூலிகள்தான்; அவர்கள் மிகத் தாராளமாக முதலாளிகளிடம் இருந்து பணம் பெறுகின்றனர்."

Union of Communist Students (UEC) இன் கட்சி செயலர்கள் ஆலை ஆக்கிரமிப்பு அழைப்புக்களை திரும்பப் பெற முயற்சித்து சோர்போனில் உள்ள ஒலிபெருக்கி கருவிகளை கைப்பற்ற முற்பட்டனர்; இது கைகலப்புக்களுக்கு வகை செய்தது.

PCF இன் எதிர்ப்பு இருந்தபோதிலும், ஆலை ஆக்கிரமிப்புக்கள் விரைவில் பரவின. மே 16க்குள் கிட்டத்தட் 50 ஆலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. மே 17 அன்று 200,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; அதற்கு பிந்தைய நாட்களில் "திடீரென்ற பொது வேலைநிறுத்தம்" பெருகிய வகையில் இயக்கம் பிரெஞ்சு வரலாற்றில் விரிவை கண்டது; இதில் 11 மில்லியன் தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்; இரண்டு வாரங்களுக்கும் மேலாக இது தொடர்ந்தது.

வேலைநிறுத்த இயக்கத்தை தடுப்பதில் தோல்வியை கண்டதில், CGT தன்னுடைய வலிமை முழுவதையும் பயன்படுத்தி தொழிலாளர்கள் கோரிக்கைகள் பொருளாதார பிரச்சினைகளான ஊதியங்கள், வேலை நிலைமைகள் இவற்றுடன் நிற்க வேண்டும் என்பதற்குப் பாடுபட்டன. ஆனால் வேலைநிறுத்தக்காரர்களுடைய கோரிக்கைகள் அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று இருந்ததால், அரசியல் மாறுதல்கள் ஏற்பட்டன.

எப்படி கம்யூனிஸ்ட் கட்சியும் CGT யும் வேலைநிறுத்தத்தை கழுத்தை நெரித்ததுடன் பூர்ஷ்வா ஆட்சியை காப்பாற்றின

மே 24ம் தேதி ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் அரசாங்கம் மாணவர்கள் கோரியுள்ள கல்விச் சீர்திருத்தங்களை செயல்படுத்தும் என்றும் வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்றும் அறிவித்தது. PCF மற்றும் CGT இரண்டும் இதை மகத்தான வெற்றி எனக் கொண்டாடி, ஆர்ப்பாட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று கோரின -- அதாவது அரசாங்கத்துடன் இறுதி உடன்பாடு ஏற்படும் வரைக்கும்.

மூன்று நாட்களுக்கு பின்னர் CGT ஆனது அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடைய பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது, இதுதான் பின்னர் "Grenelle agreement" என்று அழைக்கப்பட்டது. செய்தி ஊடக தகவல்களின்படி, CGT குறைந்த ஊதியம் 30 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரியதாகவும், முதலாளிகள் ஆக்கிரமிப்பும் வேலைநிறுத்தங்களும் கைவிடப்பட்டால் 35 சதவிகிதம் தருவதாகவும் கூறின. அரசாங்கத்திற்கும் CGT க்கும் இடையே இருந்த சமரசவாதிகளில் ஒருவர்தான் சமூக விவகாரங்கள் அமைச்சரகத்தில் துணைச் செயலராக இருந்த ஜாக் சிராக் ஆவார்.

இதற்கு அடுத்த நாள், CGT தலைமை செயலாளர் Georges Seguy சமரசத் திட்டக் கருத்துக்களை ரெனோல்ட் தொழிலாளர்களுக்கு முக்கிய ஆலையான Boulogne Billancourt ல் அடிக்கோடிட்டுக் காட்டி, அவர்களை வேலையை மீண்டும் தொடருமாறு அழைப்பு விடுத்தபோது, வேலைநிறுத்தம் செய்தவர்கள் அவரைப் பேசவிடாமல் செய்தனர். மற்ற ஆலைகளிலும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது; மே மாத இறுதிக்குள் எங்கும் எரிபொருள் வழங்குதலில் பெரும் தொய்வு ஏற்பட்டது.

நாட்டின் உள்கட்டுமானம் மிகப் பெரிய அளவில் முடங்கிப்போயிருந்தது அல்லது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. உதாரணமாக, பாரிசில் மின் வழங்குதலுக்கான வேண்டுகோள்கள் அரசுக்கு சொந்த ஆற்றல் நிறுவனத்தில் தொழிலாளர்கள் குழுவிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆயிற்று.

மிக மிக இரகசியமான முறையில், ஜனாதிபதி டு கோல் ஹெலிகாப்டர் மூலம் ஜேர்மனியில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த பாடன்-பாடனுக்கு சென்றார். இதன் பின்னர் பல அமைச்சரகங்களிலும் அதிகாரிகள் முக்கியமான ஆவணங்களை கிழித்துவிடும் பணிகளில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டது.

மே 27ம் தேதி PCF மத்திய குழு நிலைமையை "புரட்சிகரமானது" என்று விளக்கியவர்களை வெளிப்படையாக கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. நிதானமான மனப்பாங்கு வேண்டும் என்று கூறிய மத்திய குழு அறிக்கை சட்டமும் ஒழுங்கும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடைபெற்றால் மீண்டும் நிலைநிறுத்தப்பட இயலும் என்றும் ஆலோசனை கூறியது.

கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என டு கோல் நம்ப வைக்கப்பட்ட பின்னர், அவர் பிரான்சிற்கு திரும்பினார். வானொலியில் நிகழ்த்திய உரை ஒன்றில் புதிய தேர்தல்கள் வேண்டும் என்ற PCF கோரிக்கையை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற கலைப்பை அறிவித்து ஜூன் 23ல் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதே நேரத்தில், தான் நாட்டின் சக்தியை இயக்குபவர் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பவேண்டும் என்றும், வேலைநிறுத்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவும் அதிகாரத்தை வழங்கும் நெருக்கடி நிலையைச் சுமத்துவேன் என்றும் அச்சுறுத்தினார்.

அதே நேரத்தில், ஆழ்ந்த செய்தி ஊடகப் பிரச்சாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக தொடங்கியது. மே 30ம் தேதி பொதுவேலை நிறுத்தத்தை எதிர்ப்பவர்கள் கிட்டத்தட்ட 1 மில்லின் பழமை பாதுகாப்புவாதிகள் பாரிசில் அணிவகுத்துச் சென்றனர். கோலிச அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை தடுத்து, தொழிலாளர் அரசாங்கத்திற்காக தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக திரட்டப்படுதவதை எதிர்க்கவும் செய்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி வலது சக்திகளுக்கு முயற்சியை விட்டுக் கொடுத்தது.

ஒவ்வொன்றாக ஆலை ஆக்கிரமிப்புக்கள் கைவிடப்பட்டன; தொழிலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத இடங்களில் போலீசாரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதேபோன்ற நடவடிக்கைகள் பெரும்பாலான பல்கலைக்கழக ஆக்கிரமிப்புக்களிலும் நடந்தது. ஆனால் ஜூன் 18 வரை, அதாவது ரெனோல்ட் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிய வரை வேலைநிறுத்தம் உறுதியாக முடிந்துவிட்டது என்று கூறமுடியவில்லை.

இதன் பின்னர், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆலைகள் அரசு அடக்குமுறையின் தீவிரத்திற்கு உட்பட்டன. ஏராளமான இடதுசாரி, சோசலிஸ்ட் அரசியல் அமைப்புக்கள், வேலைநிறுத்தத்தில் முக்கிய பங்கு கொண்டவை, அப்பொழுதிருந்த ட்ரொட்ஸ்கிச அமைப்பான Communist Internationalist (OCI) உட்பட, தடைசெய்யப்பட்டன.

PCF இன் ஸ்ராலினிச தலைமை பிரான்சில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை காத்ததில் தன்னுடைய பங்கை பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டது: "எல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்ட் கட்சியின் அமைதியான, முடிவெடுக்கும் அணுகுமுறைதான் எமது நாட்டில் குருதிப் போராட்டத்தை தடுத்தது என வலியுறுத்துவேன்." என்று Maurice Thorezz இன் மரணத்திற்கு பின்னர் 1964ல் PCF தலைமையை ஏற்றுக் கொண்ட Waldeck Rochet கூறினார்.

இதைத் தொடர்ந்த பாராளுமன்ற தேர்தல்களில் கோலிசவாதிகள் தங்களுடைய பெரும்பான்மையை அதிகரிக்க முடிந்தது: 487 இடங்களில் 358ஐ அவர்கள் கைப்பற்றினர். PCF இன் செல்வாக்கு அலைகளில் குறைந்தது; பல தொழிலாளர்களும் கட்சியை ஒதுக்கத் தொடங்கினர்; இந்த நிகழ்ச்சிப்போக்கு பின்னர் சோவியத் டாங்குகள் அந்தக் கோடையில் செக்கோஸ்லோவாக்கியாவின் மீது அனுப்பப்பட்டபோது, அதிகமாயிற்று.

அரசியல் படிப்பினைகள்

பல வாரங்கள் பொது வேலைநிறுத்தம், ஆலை ஆக்கிரமிப்பு அலை என்பவை தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் சமூகத்தின் முக்கிய கூறுபாடுகள் இருந்தன என்பதை அர்த்தப்படுத்தியது. தொழிலாளர் அரசாங்கம் நிறுவுதல், மற்றும் சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் என்பது அவர்களால் பெரிதும் அடையக்கூடிய நிலையில் இருந்தது.

பொதுவேலைநிறுத்தம் பிரான்சின் எல்லைகளுக்கு மிகத் தொலைவில் விளைவுகளை கண்டது என்ற உண்மையில் புரட்சிகர இயக்கத்தின் பரப்பு தெளிவாயிற்று. ஐரோப்பா முழுவதும் ஏழாண்டுகள் நீடித்த சமூக எழுச்சிகளின் தொடக்கத்தை அது குறித்தது.

இதற்கு ஒராண்டிற்கு பின்னர், ஜேர்மனியில் மிகப் பெரிய திடீர் வேலைநிறுத்தம் வளர்ந்தது; வில்லி பிராண்ட் என்னும் சமூக ஜனநாயகவாதி முதல் தடவையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்கத்தில் இருந்து இராணுவச் சர்வாதிகார ஆட்சியுடன் போர்த்துகலிலும் ஸ்பெயினிலும் பாசிச அரசாங்கங்கள் கவிழ்ந்தன. இங்கிலாந்தில் ஒரு சுரங்கத் தொழிலாளர் வேலநிறுத்தம் எட்வார்ட் ஹீத்தின் டோரி அரசாங்கத்தால் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது; அமெரிக்காவில் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் இராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்.

பிரான்சில் பொது வேலைநிறுத்தம் என்பது தளபதி டு கோல் ஆட்சியின் முடிவிற்கு அடையாளமாயிற்று. ஏப்ரல் 1969ல் பிரான்சின் ஜனாதிபதி ஒரு வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய அளவில் பதவியில் இருந்து விலகினார்.

1970èOTM Francois Mitterand ஒரு புதிய அரசியல் கருவியை தோற்றுவித்து முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்தவும், கோலிசவாதிகளுக்கு பதிலாக செயல்படவும், தேவையானால் "இடது" முதலாளித்துவ அரசாங்கமாக செயல்படவும் ஏற்படுத்தினார். Union of the Left என்று அழைக்கப்பட்டு, இது சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிரவாத கட்சியின் தேர்தல் கூட்டணியாக இருந்தது.

1981ம் ஆண்டு மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான பிரதம மந்திரி Pierre Mauroy அரசாங்கத்தில் சேர்ந்தது; இதற்கு மூன்று அமைச்சுக்கள் கொடுக்கப்பட்டன (பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை); இதையொட்டி அவர்களும் சமூக வெட்டுக்கள், கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு பொறுப்பை கொண்டுள்ளனர்.

தற்போதைய கோலிச அசாங்கம் நடத்தும் தாக்குதல்களின் தன்மையை PCF, CGT ஆகியவை கொண்டிருந்த பழைய பங்கை புரிந்து கொள்ளாமல் உணர்வது என்பது முடியாததாகும். சமூகத் தரங்கள், வேலை நிலமைகள், ஊதியங்கள் ஆகியவற்றின்மீது நடக்கும் தாக்குதல்கள், அவை மீண்டும் மில்லியன் கணக்கான மக்களை தெருப் போராட்டத்திற்கு கொண்டுவந்துள்ள நிலை, CGT மற்றும் பிற பிரெஞ்சு தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான ஒற்றுமையுடன் நிகழ்பவை ஆகும்.

இன்றைய நிலைமையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, CPE வில்ப்பனுடைய அரசாங்கத்தால் அவர்களை கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்படுகிறது என்ற உண்மையை நோக்கி செலுத்தப்படுகிறது. அவர்களுடைய கோரிக்கை தொழிற்சங்கங்களை அரசாங்கம் அனைத்து சமூக கொள்கைகளிலும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான்; அப்பொழுதுதான் தொழிலாளர்களுடைய எதிர்ப்பு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட முடியும்.

1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கினர் சமூக நலன்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் இன்று உலகந்தழுவிய உற்பத்திமுறை என்ற நிலையிலும், குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்கு உலகந்தழுவிய போட்டி உள்ள நிலையிலும், எல்லா இடங்களிலும் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் பழைய சலுகைகளையும் அழிக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளனர்; இதன் விளைவாக மிகத் தீவிர முறையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களை அழிக்கவும் முற்பட்டுள்ளன.

நிலைமை இப்பொழுது 1968ஐ விட சற்றே புரட்சித் தன்மை குறைவாக உடையது என்று கூறப்படுவதற்கு காரணம் மாணவர்கள் சமூகப் புரட்சிக்கு அழைப்பு விடவில்லை என்பது, நிகழ்வுகளை பற்றிய ஒருதலை, மேம்போக்குத் தன்மை நிறைந்த மதிப்பீடு ஆகும். மிகப் பெரிய அளவில், இடைப்பட்ட காலத்தில், சமூக அரசியல் முழு நனவில் சரிவு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை; இதற்கு முக்கிய காரணம் பல தசாப்தங்கள் பழைய அதிகாரத்துவ வகை தொழிலாளர் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் காட்டிக்கொடுப்பு ஆகும். ஆனால் இன்னும் அடிப்படையான, பொதுநிலைத் தன்மையில், பிரான்ஸ், ஐரோப்பா, சர்வதேச அளவில் பூர்ஷ்வா சமூகத்தின் நெருக்கடி 1968ல் இருந்ததைவிட மிகவும் ஆழ்ந்துதான் உள்ளது.

இன்றைய முதலாளித்துவ முறையின் மீது வெளிப்படையாக ஒரு சலுகை பெற்ற உயரடுக்கு இலாபம், சுய செல்வக் கொழிப்பு இவற்றிற்கான அப்பட்ட உந்துதலை கொண்டிருப்பது ஆகும். பெரும்பாலான இளைஞர்களுடைய உணர்வுகளுக்கு அங்கு இடம் இல்லை; வேலையில்லா பட்டாளத்தின் இருப்பு உறுப்பினர்கள், பெரும் சுரண்டலுக்கு ஏற்றவர்கள் என்பதை தவிர இவர்களுக்கு வேறு நிலைப்பாடு இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட முதலாளித்துவ முறை தற்போது திறன் குறைந்துதான் உள்ளது; ஏனெனில் இளைஞர்கள், தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளைக்கூட அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இவ்விதத்தில், "சீர்திருத்த" கோரிக்கைகள் புரட்சிகர உட்குறிப்புக்களை கொண்டுள்ளன.

ஒரு சில அரசியல் வர்ணனையாளர்கள் தற்போதைய நெருக்கடியில் புரட்சித் திறனை உணர்கின்றனர். உதாரணமாக Serge Faubert மார் 20 அன்று France Soir ல் எழுதினார்: "தவறைச் செய்துவிடாதீர்கள். மே 68ன் பதிப்பு போல தொடங்கியுள்ளது அதைவிட ஆயிரம் மடங்கு புரட்சிகர தன்மையை கொண்டுள்ளது. உண்மையில், தற்போதைய நெருக்கடி அதற்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையை கொண்டுள்து. 1968ல் முழு வேலை நிலை இருந்து, எதற்கும் இடம் கொடுக்கா தன்மையில் இருந்த பிரான்சில் எதுவும் நிகழலாம் என்றும் இருந்தது. இன்று பணம், நல்ல வேலை இருப்பவர்களுக்கு எல்லாம் உண்டு; ஆனால் பெரும்பாலான அவர்களுடைய சக குடிமக்களுக்கு எதுவும் இல்லை என்ற நிலைதான் உள்ளது."

ஆனால், தற்பொழுதைய பிரான்ஸ், ஐரோப்பா அல்லது மற்ற இடங்களில் உள்ள, புரட்சித் திறன் பற்றி, "தன்னிலை" கூறுபாடு அதாவது தொழிலாள வர்க்கத்தின் தலைமை, வர்க்கத்தின் போராட்டங்களை இயக்கும் அரசியல் முன்னோக்கு என்பவற்றை தவிர்த்து, தனியே விவாதிக்க இயலாது. தொழிலாள வர்க்கத்தில் வேர்களை கொண்டுள்ள ஒரு புரட்சிகர சோசலிச கட்சி இல்லாத நிலை பிரான்சின் ஆளும் உயரடுக்கிற்கு மகத்தான அரசியல் ஆதாயத்தை கொடுக்கிறது; தொழிலாளர்கள், மாணவர்களின் தைரியம், போர்க்குணம் இவை இருந்தோபோதிலும் உண்மை அதுதான். சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க முகவர் அமைப்புக்கள், மற்றும் நெருக்கடியில் உதவிக்கு நிற்கும் "மிகத் தீவிர இடது" என்று அழைக்கப்படும் Ligue Communiste Revolutionnaire, Lutte Ouvriere என்பவை இருக்கும்போது, மக்களின் அரசியல் ஆயுதங்களை களையவும், அரசியலில் செயலற்ற தன்மை ஆக்குவதற்கும் முதலாளித்துவ வர்க்கம் பலவகைப்பட்ட வழிவகைகளை கொண்டுள்ளது.

இன்றைய பிரான்சின் நிகழ்வுகளினால் வெளிப்பட்டுள்ள முக்கியமான பிரச்சினை, 1968ல் ஏற்பட்டது போலவே, தொழிலாள வர்க்கத்தின் சோசலிச, சர்வதேச கட்சியை கட்டமைப்பதுதான். அந்தப் போராட்டம்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும், அதன் சர்வதேச வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

See Also:

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page