World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The French Popular Front of 1936: Historical lessons in the "First Job Contract" struggle

1936ம் ஆண்டு பிரெஞ்சு மக்கள் முன்னணி: "முதல் வேலை ஒப்பந்த" போராட்டத்தில் வரலாற்று படிப்பினைகள்

By Peter Schwarz
24 March 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

"முதல் வேலை ஒப்பந்தம்" (CPE) பற்றிய பூசல் டொமினிக் டு வில்ப்பன் மற்றும் ஜாக் சிராக்கின் அரசாங்கத்திற்கும் பிரெஞ்சு சமூகத்தின் பரந்த அடுக்குகளுக்கும் இடையேயான வெளிப்படையான மோதலாக வளர்ந்துள்ளது. ஒரு புறத்தில் முதலாளிகள் கூட்டமைப்புக்களின் ஆதரவுடன் அரசாங்கம் உள்ளது; மறு புறத்தில் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்களுடைய ஆதரவைக் கொண்டுள்ள இளைஞர்கள் நிற்கின்றனர்.

சிறிது காலமாகவே சில அடிப்படைப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. அன்றாட வாடிக்கையாக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் இளைஞர்கள் பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிகளை ஆக்கிரமித்துள்ள நிலையில் தங்களுடைய வாழ்வை பொருளாதார நலன்களின் பாவைகள் என்ற முறையில் தாழ்த்திக் கொள்ளத் தயாராக இல்லை. சமூகத்தில் தங்களுக்கு ஓர் இடத்தை அவர்கள் நாடுகின்றனர்; குறைந்தது தங்களுடைய பெற்றோர்கள் அனுபவித்து வந்திருந்த சமூகப் பாதுகாப்புத் தரத்தையாவது அது ஒத்திருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இது ஒன்றும் அதிகம் கேட்பதாகிவிடாது; ஆனால் சமூகக் கூறுபாடுகள் அனைத்தையும் இலாப கொள்கைக்கு தாழ்ந்திவைக்கும் அரசாங்கத்தால் இது அதிகமாகக் கருதப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் பிரதம மந்திரி டு வில்ப்பன் பின்வாங்க மறுத்துள்ளார். "சட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது என்றால், நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சீர்திருத்தம் என்பதை மறந்துவிடலாம்; அது ஒரு ஆபத்தான அடையாளமாகும்." இது பிரதமரை சந்தித்துவிட்டு வந்த வணிகத் தலைவரால் கூறப்பட்டுள்ள கருத்தாகும். இது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கினரின் கண்ணோட்டத்தையும் சுருக்கமாகக் கூறுகிறது.

அடிக்கடி ஏற்படுவது போலவே, பிரான்சில் போராடப்படும் பிரச்சினைகள் ஐரோப்பாவிற்கும், உலக முழுவதிற்குமே கூட முக்கியமான உட்குறிப்புக்களை கொண்டுள்ளன. பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பது பிரெஞ்சு வணிக சங்கங்கள் மட்டும் இல்லாமல், சர்வதேச வணிகத்தின் பிரதிநிதிகளும், புருஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளும்தான். சர்வதேசப் போட்டித்தன்மை என்ற பெயரில் முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட சமூக நலன்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் அனைவரும் பிடிவாதமாக உள்னர். பிரான்சில் உள்ள நிலைமையை போலவே, ஜேர்மனி, இத்தாலி, ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் உள்ள தொழிலாள வர்க்கமும் தங்கள் சமூகத் தரங்கள், உரிமைகள் ஆகியவை இடையறாமல் தகர்க்கப்படுவதற்கு மிகக் கடுமையான, கசப்புடன் கூடிய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன.

இந்தப் பூசலில் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பிரச்சினைகள் சமரசக்கூறுபாடுகளுக்கான வாய்ப்புக்களை ஒதுக்கியுள்ளன. பெருகிய முறையில் அழுத்தம் ஏற்பட்டாலும்கூட, பிரதம மந்திரி அன்றாட வாடிக்கையாக தன்னுடைய நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக வலியுறுத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை அவர் பாராளுமன்ற கோலிச UMP உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போது "இறுதி எச்சரிக்கைகளுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ" தான் பணிந்து செல்ல முடியாது என்று வலியுறுத்தினார். அதே நேரத்தில் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அதிகரித்த மிருகத்தன்மையுடன் நடந்து கொள்ளுகின்றனர்.

CPE க்கு எதிராக இந்த மக்கள் இயக்கம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்றால், கோலிச அரசாங்கத்தை வீழ்த்தினால்தான் முடியும். எதிர்ப்பாளர்களிடமும் போர்க்குணத்திற்கோ, ஆற்றலுக்கோ குறைவில்லை; இவ்விதத்தில் அரசாங்கம் தெளிவாகவே பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இயக்கத்திடம் இல்லாதது அரசியல் அனுபவமும் நோக்குநிலையும்தான்.

கடந்த 70 ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கம் 1936, 1968 என்று இரு ஆண்டுகளில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிந்து அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு மிகவும் நெருக்கத்தில் வந்திருந்தனர். இரண்டு வாய்ப்புக்களும் தோல்வியில் முடிவடைந்தன; இதற்குக் காரணம் சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் மக்கள் இயக்கத்தை முடக்கி அது மேலே இயங்கமுடியாத வகைக்கு இட்டுச் சென்றன. 1936ம் ஆண்டு இந்தப் பணி, லியோன் ப்ளூம் தலைமையில் இருந்த மக்கள் முன்னணி அரசாங்கத்தால் செய்யப்பட்டது; 1968ம் ஆண்டு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் அதன் தொழிற்சங்க அமைப்பான CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) உடன் சேர்ந்து அவ்வாறு செய்துவிட்டது.

இரு சந்தர்ப்பங்களிலும் தோல்வியின் பலாபலன்கள் பேரழிவு தரக்கூடிய வகையில் போய்விட்டன. 1936ம் ஆண்டு மக்கள் முன்னணி அரசாங்கம், முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு உதவியது; ஸ்பானிய புரட்சியை நாசத்திற்கு உட்படுத்தியது; அதையொட்டி இரண்டாம் உலகப் போர் ஏற்படவும் விச்சி (Vichy) ஆட்சி ஏற்படுவதற்கும் வகை செய்தது. 1968ம் ஆண்டு பொதுவேலை நிறுத்தம் CGT யினால் நாசப்படுத்தப்பட்டது; இது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை வலிமைப்படுத்தி, பின்வந்த ஆண்டுகளில் அதன் எதிர்த்தாக்குதலை திறம்பட நடத்துவதற்கு உதவிவிட்டது.

1980களின் தொடக்கத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் தேக்கமுற்றுள்ளன அல்லது சரிந்து வந்துள்ளன; வேலையற்றோர் எண்ணிக்கை மற்றும் மிக ஒழுங்கற்ற வாழ்க்கை நிலை என்பதும்தான் பெருகி வந்துள்ளது. பிரான்ஸ், இக்காலக் கட்டத்தின் பெரும்பகுதியில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் PCF ஐக் கொண்டுள்ள கூட்டணி அரசாங்கங்களால் ஆளப்பட்டு வந்தது; 1981ல் இருந்து 1995 வரை ஜனாதிபதி Francois Mitterrand ம் 1997ல் இருந்து 2002 வரை பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் அரசாங்கமும் இருந்தன. பிரெஞ்சு முதலாளித்தவ முறைக்கு நம்பிக்கையான தரும கர்த்தாக்கள் போல செயல்பட்டுவந்த இக்கட்சிகள் இப்பொழுது திடீரென்று தொழிலாளர்களுடைய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று எதிர்பார்ப்பது அபத்தமாகும்.

வில்ப்பனுடைய அரசாங்கத்தை, இந்த அனுபவங்களின் படிப்பினைகளை கொள்ளாமல் தோற்கடிக்க முடியும் என்பது இயலாத செயலாகும். இந்தக் கட்டுரை 1936ம் ஆண்டு மக்கள் முன்னணியைப் பற்றி ஆராய்கிறது. சமூக ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் இன்றைய செல்வாக்கு அப்பொழுது இருந்ததை விட மிகக் குறைவானதாகும்; ஆனாலும் அவை தங்களால் இயன்றவரை மக்கள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அது அரசாஙகத்திற்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் உண்மையான ஆபத்தாகிவிடாமல் தடை செய்து வருகின்றன.

அவர்களுடைய இந்த முயற்சிக்கு "தீவிர இடது" என்று அழைத்துக் கொள்ளும் குழுக்கள் ஆதரவு தருகின்றன; உண்மையில் இக்குழுக்கள் இடதும் அல்ல, தீவிரத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), லுத் உவ்றியேர் (LO) தொழிலாளர் போராட்டம் (PT) ஆகியவை சொல்லளவிற்கு தீவிரப்போக்குடை கருத்துக்களை இளைஞர்களுக்கு ஏற்ப எடுத்துக் கொண்டாலும், நடைமுறையில் இவை அனைத்தும் மக்கள் இயக்கத்தை பழைய பாதுகாப்பான அதிகாரத்துவ அமைப்பிற்குள்ளேயே திசை திருப்பத்தான் முயன்று தம்முடைய அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்ள விழைகின்றன. அதிலும் குறிப்பாக LCR உடைய Olivier Besancenot இடைவிடாமல் "தொழிலாளர் போராட்டங்களில் இருந்து சோசலிஸ்ட் கட்சி வரை முழு இடதும் ஐக்கியமாக இருக்க வேண்டிய" தேவையை வலியுறுத்தி வருகிறார்.

இளைஞர்களுக்கு, குறிப்பான அரசியல் அனுபவங்களை முதன்முதலாக காண்போருக்கு வரலாற்றின் படிப்பினைகளை அறியுமாறு அழைப்பு விடுகிறோம். CPE க்கு எதிராக எதிர்ப்புக்களை தெரிவித்தல் மட்டும் போதாது. பழைய அதிகாரத்துவ எந்திங்கள் மற்றும் அவற்றின் பாதுகாவலர்களின் முடக்கும் செல்வாக்கை எப்படி எதிர்கொள்ளுவது என்பது பற்றியும் நாம் அறிய வேண்டும். போராடுவதற்கான உறுதியோடு கூடவே ஓரு அரசியல் மூலோபாயமும் அவசியமாகும்.

இவ்விதத்தில் LCR பிரமாண்டமான குழப்பத்தைத்தான் தோற்றுவித்துள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபுரிமையை தான் பெற்றுள்ளதாக இது பறையறிவிக்கிறது; உண்மையில் இதன் சொந்தக் கொள்கைகள் அந்த மரபிற்கு முற்றிலும் எதிரிடையானவை ஆகும். அண்மையில் LCR ல் சேர்ந்தவர்கள் அல்லது அதன் தலைவர் Olivier Besancenot க்கு வாக்களித்தவர்களில் எவருக்கும், 1930களில் ட்ரொட்ஸ்கி கடுமையான முறையில் மக்கள் முன்னணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு தன்னுடைய மாற்றீட்டை முன்வைத்தார் என்பது தெரியாது.

1936ம் ஆண்டின் மக்கள் முன்னணி அரசாங்கம்

ஏனைய ஐரோப்பிய நாடுகளை போலவே, பிரான்சும் 1930 களில் மிகத் தீவிர சமூக அழுத்தங்கள், வர்க்கப் பூசல்கள் ஆகியவற்றால் அதிர்வுற்று இருந்தது. ஜனவரி 1933ல் ஹிட்லர் ஜேர்மனியில் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். ஓராண்டு கடந்த பின்னர், 1934 பெப்ரவரியில், பல ஆயிரக்கணக்கான பாசிஸ்ட்டுக்கள் மற்றும் முடியரசுக் கொள்கையினர் பிரெஞ்சு அரசாங்கத்தின் வீழ்ச்சியை கொண்டுவந்தனர். பிதம மந்திரி Edouard Daladier இன் ஆட்சி அகற்றப்பட்டது என்பது பாசிஸ்டுக்களின் வலிமையினால் என்றில்லாமல், அதன் ஆதாரத்தை பிரான்சின் மிகப் பழைய முதலாளித்துவ கட்சியான அவருடைய தீவிர கட்சியின் (Radical Party) உட்சீரழிவினால் ஏற்பட்டது என்று கூறலாம்.

Daladier, க்குப் பதிலாக Gaston Doumergue பதவிக்கு வந்தார்; இவருடைய அரைகுறை சர்வாதிகார ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் கடுமையான, கசப்பான எதிர்ப்பிற்கு உட்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் பெருகிய போர்க்குணத்திற்கு விடை கொடுக்கும் வகையில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன், மக்கள் முன்னணி (Popular Frront) என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியது.

ஜேர்மனியில் ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியானது பாசிசத்திற்கு எதிரான ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கு சமூக ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து ஒரு ஐக்கிய முன்னணியை அமைக்க மறுத்து விட்டது. அத்தகைய ஐக்கிய முன்னணியின் தேவையை வலியுறுத்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிஸ்டுகளால் இரக்கமற்ற வகையில் துன்பத்திற்கு ஆளாயினர். ஜேர்மனிய தொழிலாள வர்க்கம் பின்னர் பிளவுற்றதுதான் இறுதியில் ஹிட்லர் பதவியைக் கைப்பற்றுவதவை சாத்தியமாக்கியது.

ஆனால், பிரான்சில் ஸ்ராலினிஸ்டுகள் சமூக ஜனநாயகவாதிகளுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டும் இல்லாமல் முதலாளித்துவ தீவிரப்போக்கினருடன் கூட்டும் வைத்துக் கொண்டனர். தங்களுடைய சொந்த வேலைத்திட்டத்தை, கூட்டணி பங்காளிகளின் நலனுக்காக தாழ்த்திக் கொண்டனர் மற்றும் முதலாளித்துவ முகாமில் தங்களுடைய புது நண்பர்களை ஊக்கம்கெடச் செய்யும் எக்கோரிக்கைகளையும் அவர்கள் ஒடுக்கினர்.

ஸ்ராலினிஸ்டுகள், மக்கள் முன்னணியை, பாசிசத்தின் ஆபத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் ஒரு கூட்டணியாக முன்வைத்தனர். உண்மையில் மாஸ்கோ அதிகாரத்துவத்தின் வெளியுறவு கொள்கையினால் ஆணையிடப்பட்ட மாறிய அரசியல் போக்கிலிருந்து புதிய அரசாங்கம் தோன்றியது. தவறான தலைமையினால் ஏற்பட்ட ஜேர்மனிய பாட்டாளி வர்க்கத்தின் தோல்விக்கு பின்னர், ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கு "ஜனநாயக" ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தினரின் உதவி தேவை என்று அறிவித்தது. வெளிநாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தங்கள் ஆட்சியை சீர்குலைக்கக் கூடிய செயற்பாடுகள் எதையும் செய்யாமல் இருக்குமாறு உத்தரவு இட்டது. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டவாறு, மக்கள் முன்னணியானது, "தீவிரமான திவால்களுக்கு தொழிலாள வர்க்க அமைப்புக்களின் மூலதனத்தின் இழப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அமைப்பு" போன்றது. [1]

குட்டி முதலாளித்துவ வர்க்கத்தில் இருந்துதான் தன்னுடைய உறுப்பினர்கள் அதிகமாக வந்துள்ளனர் என்ற உண்மை இருந்தபோதிலும் கூட, தீவிரவாத கட்சி பெரு முதலாளித்துவத்தின் நலன்களைத்தான் பாதுகாத்தது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக குட்டி முதலாளித்துவத்தை கீழ்ப்படுத்த இக்கட்சி முற்பட்டது. ட்ரொட்ஸ்கி எழுதினார்: "தீவிரவாத கட்சியுடனான கூட்டு என்பது இதன் விளைவாக குட்டி முதலாளித்துவத்துடனான உடன்பாடு என்று இல்லாமல், அதைச் சுரண்டுபவர்களுடன் உடன்பாடு என்றாகிவிட்டது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உண்மையான உடன்பாட்டை காணவேண்டும் என்றால், தீவிரவாத கட்சியில் இருந்து தன்னை குட்டி முதலாளித்துவம் விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று கற்பித்தால் ஒழிய முடியாது; மேலும் தீவிரவாத நுகத்தடியை தன் கழுத்தில் இருந்து இறுதியாக அகற்றிவிடுவதற்கும் கற்பிக்கப்பட வேண்டும். இதற்கிடையில் மக்கள் முன்னணி முற்றிலும் எதிரான முறையில் நடந்து கொள்ளுகிறது: இந்த 'முன்னணியில்' நுழைகையில் சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் தீவிர கட்சிக்கு (Radical Party) பொறுப்பு எடுத்துக்கொண்டு, இந்த வகையில் மக்களை காட்டிக் கொடுக்கவும், சுரண்டவும் உதவி புரிகின்றனர்."

தீவிரப் போக்கினருக்கு ஊறுவிளைவிக்காத வகையில், ஸ்ராலினிஸ்டுகள், தொழிலாளர்களால் எழுப்பப்பட்ட கோரிக்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்தனர். ட்ரொட்ஸ்கி தொடர்கிறார்: "தங்களுடைய வாக்குகளினாலும் போராட்டத்தினாலும் தீவிரவாத கட்சியை அகற்ற மக்கள் நிற்கும்போது, மக்கள் முன்னணியின் தலைவர்கள் அதற்கு மாறாக இதைக் காப்பாற்ற முற்பட்டுள்ளனர். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் திரட்டின் நம்பிக்கையை பெற்றபின்னர், தொழிலாளர் கட்சிகளின் தலைவர்கள் தாங்களே உவந்து வந்து இந்த நம்பிக்கையின் பெரும்பகுதியை தீவிரப் போக்கினருக்கு (Radicals) கொடுத்தனர்; ஆனால் பெரும்திரளான தொழிலாளர்களுக்கு இத்தீவிரப்போக்கினர்பால் சிறிதளவும் நம்பிக்கை கிடையாது. "[3]

1936ம் ஆண்டு மே மாதம் மக்கள் முன்னணி (Popular Front) பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றது; சமூக ஜனநாயகவாதி Leon Blum தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைத்தார்; இதற்கு ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவு கிடைத்தது. ஆதரவான தேர்தல் முடிவுகள் கிடைத்துள்ளது என்ற தோற்றத்தில் ஊக்கம் அடைந்த தொழிலாள வர்க்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், செயற்பாடுகளை மேற்கொண்டது; இவை காட்டுத் தீ போல பரவி இறுதியில் இரண்டரை மில்லியன் மக்கள் பங்குகேற்ற பொது வேலைநிறுத்தத்தில் உச்ச கட்டத்தை அடைந்தது. பிரான்ஸ் ஒரு புரட்சியின் விளிம்பில் நின்றது.

வேலைநிறுத்தத்தினால் வியப்படைந்த ஸ்ராலினிஸ்டுகளே, இப்பொழுது தொழிற் சங்கங்களுடன் ஒத்துழைத்து தொழிலாளர் இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்து, தொழிலாளர்கள் ஆக்கிரமித்திருந்த ஆலைகளில் இருந்து அவர்கள் வெளியேறுமாறு வேண்டினர் அல்லது கட்டாயப்படுத்தினர்; இதையொட்டி புரட்சி நிலையின் தீவிரம் குறைந்து ப்ளூம் அரசாங்கத்தின் அதிகாரம் மீண்டும் நிலைநிறுத்தப்படலாம் என்பது அவர்கள் எண்ணம். PCF இன் தலைவராக அப்பொழுது இருந்த Maurice Thorez கூறினார்: "ஒரு வேலைநிறுத்தத்தை எப்பொழுது முடிவிற்குக் கொண்டுவருவது என்று அறிவது அவசியமானதாகும்."

வேலைநிறுத்தத்தை கணிசமான சலுகைகள் கொடுத்து முதலாளித்துவ வர்க்கம் முடிவிற்கு கொண்டு வந்தது: ஊதிய உயர்வுகள், 40-மணி நேர வாரம், ஊதியத்தோடு கூடிய விடுமுறை ஆகியவை வழங்கப்பட்டன. ஆயினும், இந்த நலன்கள் அனைத்தும் குறுகிய காலம்தான் இருந்தன. முதலாளித்துவ ஆட்சி ஸ்திரமானவுடன் இந்நலன்கள் அகற்றப்பட்டுவிட்டன.

பொது வேலை நிறுத்தம் முடிந்துவிட்டது என்பதன் பொருள் ப்ளூம் அரசாங்கத்தினால் ஆளும் வர்க்கத்திற்கு இனி பயன் ஏதும் இல்லை என்றாயிற்று. எதிர்பார்ப்புக்கள் திகைப்பிற்குட்பட்டுவிட்ட பல தொழிலாளர்களும் அரசாங்கத்திடம் இருந்து வேறுபுறம் திரும்பினர். ஜூன் 1937ல் தீவிரவாதிகள் மீண்டும் மிகப் பெரிய பாராளுமன்ற பெரும்பான்மையை அமைத்து அரசாங்கத்தின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்டனர். இது நடுவில் சிறு இடைவெளி என்பதை தவிர, மூன்றாம் குடியரசு முடியும் வரையில், தொடர்ந்திருந்தது. வேலைநிறுத்தங்களும், பூசல்களும் மீண்டும் வெளிப்பட்டன; ப்ளூம் ஒரு குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தின் தலைவராக 1938 வசந்த காலத்தில் இருந்தார். ஆனால் பொதுவாக அரசியல் போக்கு, அதிகரித்த அளவில் வலதிற்கு திரும்பிவிட்டது.

ஒருகாலத்தில் தீவிரப்போக்கினரை பாதுகாவலில் வைத்திருந்த இடதுசாரியும் அவர்களுடைய முக்கிய பிரதிநிதியாக மக்கள் முன்னணியிலும் இருந்தவருமான Daladier, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டு; ஊதிய வெட்டுக்களுக்கான ஆணைகளையும் பிறப்பித்தார். 1939ல் ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியை தடையும் செய்தார். ஜேர்மன் படையெடுப்பிற்கு பின்னர் பிரெஞ்சு பூர்ஷ்வாவின் கணிசமான பிரிவு விச்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, நாஜிக்களுக்கு ஒத்துழைப்பையும் கொடுத்தது. மக்கள் முன்னணி தொழிலாள வர்க்கத்தை முடக்கி, நம்பிக்கையற்ற தன்மைக்கும் தள்ளிவிட்டதுடன், அரசியலில் முதலாளித்துவ பிற்போக்கை பலப்படுத்தியது.

மக்கள் முன்னணிக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம்.

1933க்கும் 1935க்கும் இடையே பிரான்சில் புலம் பெயர்ந்தவராக வசித்த லியோன் ட்ரொட்ஸ்கி நிகழ்வுகளை பெரும் கவனத்துடன் கண்ணுற்று, விளைவில் செல்வாக்கை செலுத்தவும் முற்பட்டார். பிரான்சில் இருந்து நோர்வேக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அவர் பிரான்சின் நிகழ்வுகளில் பெரும் ஆர்வத்தை கொண்டிருந்ததோடு அவருடைய பிரெஞ்சு தோழர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணிவந்தார்.

மக்கள் முன்னணியின் கொள்கையை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்; ஆனால் தொழிலாளர்கள் ஐக்கியத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி கொண்டிருந்த கடும் முயற்சிகளை புறக்கணித்தார் என்று பொருளாகிவிடாது. இரண்டு கட்சிகளுமே ஏராளமான உறுப்பினர்களை அப்பொழுது கொண்டிருந்தன. பரந்த மக்கள் திரளினர் தங்களை அதிகாரத்துவ கருவிகள் மற்றும் மக்கள் முன்னணியின் முடக்கும் செல்வாக்கில் இருந்து விடுவித்துக் கொள்ள இந்த முயற்சிகளுக்கு ஒரு சுயாதீனமான இலக்கை கொடுப்பதற்கான வழிவகைகளை காண ட்ரொட்ஸ்கி முற்பட்டார்.

இந்த இலக்கை அடைவதற்காக, ட்ரொட்ஸ்கி நடவடிக்கைக் குழுக்களை (Action Committees) அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அத்தகைய குழுக்கள் தொழிலாளர்களோடு மட்டும் இல்லாமல் பல கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக அடுக்குகளின் உறுப்பினர்கள், அரசாங்கப் பணியாளர்கள், கைவினைஞர்கள், வணிகர்கள், சிறு விவசாயிகள் போன்றோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த நடவடிக்கை குழுக்கள் மக்களுடைய விருப்பத்தை அதிகாரத்துவங்களுக்கு எதிராக செயல்படுத்தும் "போராட்டத்தின் கருவிகளாக" இருக்கும் என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

"தொழிலாளர்கள் நடவடிக்கை குழு ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களே ஒருவித நடவடிக்கையில் பங்கு பெறும் போதுதான், புரட்சிகர தலைமையின் தேவையை அவர்கள் உணரமுடியும். முறையான ஜனநாயகப் பிரதிநிதித்துவம் அனைவருக்கும் என்பது இங்கு பிரச்சினை அல்ல; மாறாக போராடும் மக்களுக்கான புரட்சிகர பிரதிநிதித்துவம் என்பதுதான்" [4] அத்தகைய குழுக்கள் எழுச்சி பெறுவதற்கான முதல் முன்னிபந்தனை, நடவடிக்கை குழுக்களின் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை, அதாவது, "இவைதான் கட்சி மற்றும் தொழிற்சங்கக் கருவியின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை முறிக்கக் கூடிய ஒரே வழிமுறை" என தெளிவாக அறிந்துகொள்வதாகும்.

"பிரான்சிற்கான நடவடிக்கை வேலைத்திட்டம்" என்பதை 1934ல் ட்ரொட்ஸ்கி வெளிக் கொண்டுவந்த விதம், அனைத்து வகையான அதிகாரத்துவத்தின் காப்பாளரின் பிடியில் இருந்து வெகுஜனங்களின் சுயாதீனத்தை பேணுவதையும், போரிடும் திறத்தை அதிகரிப்பதையும், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளையும் ஒன்றாகப் பிணைப்பதையும் நோக்கங் கொண்டதாகும்.

பிரான்ஸ் தொடர்பான தன்னுடைய எழுத்துக்களில், ட்ரொட்ஸ்கி மிக தீவிர கோரிக்கைகளை முன்வைக்கத்தயாராக இருந்த அரசியல் போக்குகளை தொடர்ச்சியாக விமர்சித்தார்; ஆனால் நடைமுறையில் பழமைவாத கருவிகளுடனான ஒற்றுமைக்காக அத்தகைய கோரிக்கைகளை தியாகம் செய்துவிடுகின்றன; Marceau Pivert தலைமையில் "புரட்சிகர இடதுகள்" இப்படித்தான் செய்தன.

"ஏதேனும் ஒரு புரட்சிகர கோஷத்தை பலமுறை கூவிக் கொண்டு, Marceau Pivert அதை 'அமைப்பு ஒற்றுமை' யின் ஒரு அருவ கொள்கைக்கு தாழ்த்திவிடுகிறார்; அது நடைமுறையில் புரட்சியாளர்களுக்கு எதிராக நாட்டுப்பற்றாளர்களுடன் ஒற்றுமை என்று ஆகிவிடுகிறது. பொது மக்களை பொறுத்தவரையில் ஐக்கிய சமூக தேசபக்த கருவிகளை உடைத்தல் என்பது முழுமையான 'நன்மை' யாக, அனைத்து புரட்சிகர போராட்ட நலன்களையும் விட உயர்ந்த நிலையில் வாழ்வா, சாவா என இருக்கிறது... பாட்டாளி வர்க்க வெற்றிக்கான நிலைமை தற்போதைய தலைமையை அழித்துவிடுதல் ஆகும். "ஒற்றுமை" என்ற கோஷம் இந்தச் சூழ்நிலையில் முட்டாள்தனமானது மட்டுமன்றி குற்றமானதுமாகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் நாடுகளின் கழகம் (League of Nations) ஆகியவற்றின் ஏஜன்டுகளுடன் எந்த ஒற்றுமையும் தேவையில்லை." [6]

இன்றைக்கான படிப்பினைகள்

1930களின் "புரட்சிகர இடதின்" கூறுபாடுகளை தற்போதைய "தீவிர இடதின்" தன்மையுடன் உணர்ந்து கொள்ளுவது கடினம் அல்ல; Besancenot, Alain Krivine (LCR), Arlette Laguiller (LO), இன்னும் பலரும் Pivert இன் கெடுதல்களை கொண்டாலும், அவருடைய நல்ல குணங்களை கொள்ளவில்லை. Pivert ஒரு இடைநிலைவாதி; அதாவது புரட்சிக்கும் எதிர்ப்புரட்சி அரசியலுக்கும் இடையே மாறிக் கொண்டிருந்தார்; முக்கியமான நேரங்களில் எப்பொழுதும் எதிர்ப்புரட்சி அரசியலுக்கு ஆதரவு கொடுத்தார்.

ஆனால் இன்றைய "தீவிர இடதுகள்" நீண்ட காலத்திற்கு முன்னரே நிலவும் ஒழுங்குமுறைக்கு தங்களை சமரசப்படுத்திக் கொண்டுவிட்டனர். அவர்கள், சோசலிஸ்டுகள் மற்றும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றிய கரிசினை மிக்க குறைகூறலை தவிர்த்துள்ளனர். ஒரு புதிய இடது இயக்கத்தை, PCF ல் உள்ள ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒற்றுமை என்ற அடிப்படையில்தான் வளர்க்கமுடியும் என்று LCR வலியுறுத்துகிறது. அக்கட்சியே 70 ஆண்டுகளாக ஒவ்வொரு நெருக்கடியில் இருந்தும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை காப்பதற்கு விரைந்துள்ளது; கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பகுதியை அரசாங்கத்துடன் இணைந்த வகையில் கழித்துள்ளது.

இந்த போலி இடதுகள் வில்ப்பன் அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவும் நேரடியாகவும் கூறக்கூட திராணியற்றவர்கள். Olivier Besancenot, பிரதம மந்திரிக்கு முறையான இராஜிநாமா கடிதம் ஒன்றை அனுப்பி, "பல முக்கியமான தவறுகளால்" தன்னுடைய தொழிலாளர் ஒப்பந்தம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதை தெரிவித்தார். ஆனால் அத்தகைய வஞ்சப் புகழ்ச்சியான நக்கல்கள் தீவிர அரசியல் முன்னோக்கின் இடத்தை பெறமுடியாது.

வில்ப்பனுடைய இராஜிநாமா என்பது தவிர்க்கமுடியாமல் எழுப்பும் வினா: அடுத்தவர் யார்?

காத்திருப்பவர்களில் ஒருவர் வலதுசாரியான நிக்கோலா சார்க்கோசி ஆவார்; தன்னுடைய உள்கட்சி போட்டியாளரை நெருக்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியானது, இன்னும் கூடுதலான வகையில் அடுத்த ஆண்டு UMP வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவை கொடுக்கும் என்றுதான் அவர் தொடர்ச்சியாக நம்பி வருகிறார். தன்னுடைய குதிக்கால்களுக்கு தற்பொழுது அவர் ஓய்வு கொடுத்துள்ளார்; CPE க்கு ஆறுமாத பரீட்சார்த்த காலம் கொடுக்காலம் என்ற கோரிக்கையை முன்வைத்ததின் மூலம், பிரதம மந்திரிக்கு எதிராக தாக்குதலை கூடத் தொடுத்துள்ளார்.

சார்க்கோசி இப்படிக் காத்திருக்கையில், வில்ப்பனுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது மிகவும் விரும்பத்தகாதது இல்லையா? இதுதான் பல சோசலிஸ்டுகளும், இரகசியமாக பல LCR உறுப்பினர்களும் தங்களையே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியாகும். 2002 ஜனாதிபதித் தேர்தலில் இதே சக்திகள்தான் சிராக்கிற்கு ஆதரவு கொடுத்தன; அவர்தான் குடியரசு மதிப்பீடுகளுக்கு இரண்டாவது சுற்று, வாக்கில் மற்றொரு வலதுசாரி தேசியமுன்னணியை சேர்ந்த ஜோன் மரி லு பென்னுக்கு எதிராக உறுதியளிப்பார் என்று கூறின. உண்மையில் LCR கோலிச UMP ஐ வலுப்படுத்திய வகையில்தான் நின்றது; அதுதான் இப்பொழுது வில்ப்பன் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. CPE க்கு எதிரான மக்கள் இயக்கத்தை தற்போதைய அரசாங்கம் வெற்றி கொள்ள முடிந்தால் இதேவகையில் சார்க்கோசியால் அதனை பயனபடுத்திக்கொள்ள முடியும். மறுபுறம் அரசாங்கத்தின் சரிவு என்பது சார்க்கோசியையும் அத்துடன் கீழே தள்ளும்.

தற்போதைய மக்கள் இயக்கம், CPE க்கு எதிரானது, 2007 தேர்தலில் தங்கள் வாய்ப்பை அதிகரிக்கும் என்று சோசலிஸ்ட் கட்சியும் நம்புகிறது. ஆனால் முந்தைய அரசாங்கம் போர்க்குணம் மிக்க வெகுஜன இயக்கத்தீன்கீழ் சரிவுற்ற நிலையில் அரசாங்க பொறுப்பை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. அது பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும்; ஒரு சோசலிஸ்ட் கட்சி ஆட்சியால் அவற்றை நிறைவேற்ற இயலாது. ஏற்கனவே இந்த சோதனையை 1997ல் லியோனல் ஜோஸ்பன் செய்தார்; கோலிசவாதி அலன் யூப்பேயிடம் இருந்து பதவியை எடுத்துக் கொண்டபோது அது நிகழ்ந்தது; யூப்பே அதற்கு முந்தைய ஆண்டில் பெரும் மக்கள் வேலைநிறுத்தத்தை ஒட்டி சரிந்தார். ஜோஸ்பன் தலைமையிலான அரசாங்கத்துடன் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது சோசலிஸ்டுகளுக்கு 2002 தேர்தலில் பெரும் தோல்வியை கொடுத்தது; அதில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

நீண்ட கால அடிப்படையில், சோசலிஸ்ட் கட்சி வில்ப்பன் அகற்றப்படுவதை எதிர்ப்பதற்கு காரணம், UMP இன் விதி மட்டும் நிர்ணயமாகிறது என்பதால் அல்ல; முதலாளித்துவ ஆட்சியே முழுமையாக ஆபத்திற்குட்படுகிறது; இதை சோசலிஸ்ட் கட்சி மற்றும் கோலிஸ்டுகள் இருவரும் பேரார்வத்துடன் பாதுகாக்க விரும்புகின்றனர். தன்னுடைய பங்கிற்கு LCR, SP மீது அழுத்தம் கொடுக்க இதில் விரும்பவில்லை; ஏனெனில் வருங்காலத்தில் ஒரு திருந்திய பன்முக இடது அரசாங்கத்தின் வடிவம் அவர்களுக்கு சில வேலைகளை கொடுக்கும்; ஏன் காபினெட் தகுதி இடம் ஒன்றுகூட கொடுக்கலாம்.

கோலிச அரசாங்கம் தூக்கி எறியப்படுதவதற்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாமல் சோசலிச முன்னோக்கு கொண்ட ஒரு மாற்றீடு பற்றிய பிரச்சினையை எழுப்புகிறது. பிரெஞ்சு முதலாளித்துவ அமைப்பை 70 ஆண்டுகளுக்கும் மேலாக காத்து வருகின்ற இந்த பழைய அமைப்புக்களின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதை அது முனகருத்தாகக் கொண்டுள்ளது. அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத் தட்டுக்களது பிரச்சினைகளை செவிமடுக்கும் மற்றும் ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த இலக்கிற்காக பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும், அதிகாரத்துவ கருவிகள் மற்றும் அவற்றின் எடுபிடிகளை நிராகரித்து, இதேபோன்ற பிரச்சினைகள், தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கின்ற ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் உள்ள சக இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் மத்தியில் ஐக்கியத்தை நாடவேண்டும்

கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான படிப்பினை ஒரு சுயாதீன, சர்வதேச, சோசலிச கட்சியை கட்டியமைப்பதன் அவசியம்தான்.

Notes:

1. Leon Trotsky. Whither France? London: New Park Publications, p. 113
2. Leon Trotsky on France, Pathfinder Press, p. 197
3. Whither France? p. 99
4. Ibid, p. 101
5. Ibid, p. 102
6. Ibid., p. 104

See Also:

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

பிரான்ஸ்: பல்கலைக் கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றிய பூசல் தீவிரமடைகிறது

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page