World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Behind talk of peace, threat of full-scale war looms

இலங்கை: சமாதானம் பற்றிய பேச்சுக்களுக்கு பின்னால் முழு யுத்த அச்சுறுத்தல் வெளிப்படுகிறது

By K. Ratnayake
6 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும், தீவின் யுத்த பிராந்தியமான வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் குறையாமல் தொடர்கின்றன.

இரு சாராரும் பொறுப்பேற்க மறுக்கும் நிலையில், பல மாதங்களாக தொடரும் தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து, கடந்த வாரத்தில் வெளிப்படையான யுத்த நடவடிக்கைகள் வரை பகைமை வெடித்துள்ளது. ஏப்பிரல் 25 அன்று கொழும்பில் உள்ள கடும் பாதுகாப்புக்குட்பட்ட இராணுவ தலைமையகத்தின் மீது கவனமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என புலிகள் மறுத்துள்ள போதிலும், ஒட்டுமொத்தத்தில் நிச்சயமாக புலிகளே இதை திட்டமிட்டிருக்க முடியும்.

இலங்கை இராணுவம் கிழக்கு நகரமான திருகோணமலைக்கு அருகில் உள்ள பிரதேசமான புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாம்பூர் பிரதேசத்தை இலக்குவைத்து விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் உடனடியாக பதில் தாக்குதல்களை நடத்தியது. குறைந்தபட்சம் 11 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்ற அச்சத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த தற்கொலை தாக்குதலும் அதற்கெதிரான பழிவாங்கும் தாக்குதலும், 2002ல் கைச்சாத்திடப்பட்ட ஆட்டங்கண்டு போயுள்ள யுத்தநிறுத்த உடன்படிக்கையை தெளிவாக மீறுவதாகும்.

மோதல்கள் வெடித்துள்ளது தொடர்பாக பெரும் வல்லரசுகளும் மற்றும் சர்வதேச ஊடகங்களும் புலிகள் மீது குற்றஞ்சாட்டிய போதிலும், தொடர்ச்சியான திட்டமிட்ட ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்ட, சிங்கள தீவிரவாத கட்சிகளின் ஆதரவை கொண்ட இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இதற்கான பிரதான பொறுப்பாளிகளாவர். புலிகள் மீது தாக்குதல் தொடுப்பதில் ஈடுபட்டுள்ள பல தமிழ் துணைப்படைகளுடன் எந்தவொரு தொடர்பும் கிடையாது என ஆயுதப் படைகள் சாதாரணமாக மறுத்த போதிலும், இந்த மறுப்புக்கள் ஜெனரல் பொன்சேகா கொலை முயற்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என புலிகள் கூறுவதைப் போலவே நம்பகத்தன்மையற்றவை ஆகும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே போன்ற பெயரளவிலான சமாதான முன்னெடுப்பின் இணைத் தலைமைகள் ஏப்பிரல் 28ம் தேதி ஒஸ்லோவில் கூடிய பின்னர், "அனைத்து வன்முறை நடவடிக்கைகளையும்" கண்டனம் செய்ததோடு அவற்றுக்கு முடிவுகட்டுமாறும் அழைப்பு விடுத்தன. இந்த மோதலானது கட்டுப்பாடில்லாத சுருள் என இந்திய பிரதிநிதிகளும் தமது கவலையை வெளிப்படுத்தினர். ஆயினும், இலங்கை இராணுவம் புலிகளின் நிலைகள் மீதான விமானத் தாக்குதல்களை நிறுத்தியுள்ள அதேவேளை, பாதுகாப்புப் படைகள் யுத்த தயாரிப்புகளில் விளைபயனுள்ள வகையில் தொடந்தும் இயங்கிக்கொண்டிருப்பதோடு, மோசடியான தாக்குதல்களும் மற்றும் எதிர்த் தாக்குதல்களும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பொலிசாரும் படையினரும் வலைவீசித் தேடுதல் நடவடிக்கைகள், சுற்றி வளைப்புக்கள், விசாரணைகள் மற்றும் தமிழர்கள் "பயங்கரவாத சந்தேக நபர்களாக" தடுத்துவைத்தல் போன்ற ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த வாரம் நடந்த தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, கொழும்பில் குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில், நூற்றுக்கணக்கானவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த வியாழக் கிழமை புத்தளம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், செங்கற் களவாய் மற்றும் கால்நடைப் பன்ணைகளிலும் நடத்திய சுற்றிவளைப்பில் 83 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை, திருகோணமலையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் ஒரு கடற்படை சிப்பாயும் நான்கு பொது மக்களும் கொல்லப்பட்டதையடுத்து, தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இராணுவமும் பொலிஸும் தேடுதல்களை நடத்தினர். புலிகள் சார்பு தமிழ் நெட் இணையத்தின் படி, மட்டகளப்புக்கு அருகில் கல்லடி, திருசெந்தூர் மற்றும் டச்பார் உட்பட பல கிராமங்களிலும் தேடுதல்கள் நடைபெற்றுள்ளன.

இராணுவத்தின் செயற்பாடுகளும் மிகவும் வெளிப்படையானது என்பது கடந்த வாரக் கடைசியில் இலங்கை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது: "வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்க பாதுகாப்பு படைகள் சட்டத்திற்கு புறம்பாக மக்களை கொலை செய்வதில் ஈடுபட்டுள்ளதையிட்டு நாங்களும் பீதியடைந்துள்ளோம். இந்த குற்றத்தீர்ப்பானது களத்தில் எமது மேற்பார்வைகள் மற்றும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்." அரசாங்கத்தினதும் மற்றும் ஊடகங்களினதும் மோசமான விமர்சனங்களுக்கு பிரதிபலிப்பாக, கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃவ்டோடிர், அரசாங்கமும் மற்றும் இராணுவத் தலைமையும் இந்தக் கொலைகள் சம்பந்தமாக அறிந்திருக்காமல் இருக்கலாம் என விட்டுக்கொடுத்த போதிலும், இராணுவத்தில் உள்ள "மோசடி சக்திகள்" அல்லது "தனிப்பட்டவர்கள்" சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற விடயத்தை விட்டுக்கொடுக்கவில்லை.

இரத்தக் களரி ஆத்திரமூட்டல்கள் தொடர்கின்றன. கடந்த செவ்வாயன்று யாழ்ப்பானத்தில் இருந்து வெளிவரும் புலிகள் சார்பு நாளிதழான உதயன் ஆசிரியர் பீட அலுவலகத்திற்குள்ளும் அச்சகத்திற்குள்ளும் தாக்குதல் நடத்திய ஒரு ஆயுதக் கும்பல், முகாமையாளரையும் இன்னுமொரு ஊழியரையும் படுகொலை செய்தது. மேலும் இருவர் கடுமையாக காயமடைந்தனர். அரசாங்க அமைச்சர்கள் ஆதாரமின்றி புலிகள் மீது குற்றஞ்சாட்டிய அதேவேளை, பத்திரிகையின் உத்தியோகத்தர்கள் அரசாங்கத்துடனும் இராணுவத்துடனும் இணைந்து செயற்படும் ஒரு துணைப்படையே இதற்குப் பொறுப்பு என சந்தேகமின்றி தெரிவித்துள்ளனர்.

வியாழனன்று நெல்லியடியில் உள்ள ஒரு முகாமைத் தாக்க எத்தனித்ததாக கூறி இரு முச்சக்கர வண்டிகளில் பயணித்த ஏழு இளைஞர்களை படையினர் கொன்றதாக இராணுவம் அறிவித்தது. ஆயினும் புலிகள் சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், உயிரிழந்த ஒரு இளைஞன் பற்றி விபரங்கள் அவர்கள் முற்றிலும் அப்பாவிகள் என்பதை வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலிகளும் தம் சார்பில் யுத்தத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரக் கடைசியில், வெலிகந்தை பிரதேசத்தில் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான கும்பலின் மூன்று முகாம்களை புலிகள் தாக்கியதோடு 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில் ஒரு கப்டன் உட்பட ஐந்து இலங்கை படையினர் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் கூறிய போதிலும் இராணுவம் அதை நிராகரித்துள்ளது.

புலிகள் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்க கட்டுப்பாட்டிலான பிராந்தியங்களில் இருந்து இயங்கும் கருணா குழுவையும் மற்றும் ஏனைய துணைப்படைகளையும் இலங்கை இராணுவம் நிராயுதபாணிகளாக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்துள்ளது. கடந்த புதன் கிழமை டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த புலிகளின் பேச்சாளர் தயா மோகன், "அரசாங்கம் அதை செய்யாவிட்டால் (கருணா குழுவை நிராயுதபாணியாக்கல்) நாங்கள் செய்வோம்," எனத் தெரிவித்தார். இராணுவம் மற்றும் பொலிசால் சூழப்பட்டுள்ள அரசாங்க கட்டுப்பாட்டிலான பிராந்தியத்திலேயே இந்த மூன்று முகாங்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று கடலில் இடம்பெற்ற மோதல் வெளிப்படையான யுத்த நடவடிக்கைகளுக்கு மேலும் சாட்சி பகர்கின்றது. கடற்படையானது மன்னார் கடற்கரைக்கருகில் புலிகளின் ஒரு படகை மூழ்கடித்ததோடு மேலும் மூன்று படகுகளை சேதப்படுத்திய அதேவேளை, நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கனரக துப்பாக்கியின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த நான்கு படகுகளும் கடற்படை படகை தாக்க வந்ததாக இராணுவம் குறிப்பிட்ட போதிலும், இந்தத் தாக்குதல் இதே பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் ஒரு கடற்படை துப்பாக்கி படகு மூழ்கடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

கொழும்பில் யுத்த ஆரவாரங்கள்

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தன்னை சமாதானத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக மீண்டும் மீண்டும் பிரகடனம் செய்துகொண்ட போதிலும், கடந்த நவம்பரில் அவர் தேர்தெடுக்கப்பட்டமையானது மிகவும் உக்கிரமான நிலைப்பாடொன்றை எடுக்க இராணுவத்திற்கு உற்சாகமளித்துள்ளது. அவர் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்களத் தீவிரவாத கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியை பெற்றார். அவர்களுடனான தேர்தல் உடன்படிக்கை, புலிகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இராணுவத்தை பலப்படுத்தும் விதத்திலும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்தியமைக்கவும் மற்றும் சமாதான முன்னெடுப்புகளின் உத்தியோகபூர்வ அணுசரணையாளரான நோர்வேயை விலக்கவும் இராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகின்றது.

மூன்று வருடங்களின் பின்னர் முதல் முறையாக அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் பெப்பிரவரியில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்தியமைக்க அரசாங்கப் பிரதிநிதிகள் முயற்சித்த நிலையில் அந்தப் பேச்சுக்கள் முறிவின் விளிம்பை எட்டின. முகத்தை காப்பாற்றிக்கொள்ளும் ஒரு அறிக்கை, இரு சாராரும் 2002 யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாகவும் ஏப்பிரலில் அடுத்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் பிரகடனம் செய்தது. இந்த சந்திப்பு, கிழக்கில் உள்ள புலிகளின் தளபதிகள் வன்னிப் பிராந்தியத்தில் உள்ள புலிகளின் வடக்குத் தலைமையகத்திற்கு பயணிப்பதற்கு போக்குவரத்து வழங்குவது தொடர்பான தீர்க்கப்படாத பிளவுகளுக்கு மத்தியில் கலவரையறையின்றி தாமதமாகியது. அரசாங்கம் முன்னைய சந்தர்ப்பங்களில் போல் இம்முறை இராணுவ ஹெலிகொப்டர்களை வழங்க மறுத்துவிட்டது.

இந்த தாமதத்திற்கான உண்மையான காரணம் போக்குவரத்து சம்பந்தமான விட்டுக்கொடுப்பற்ற நிலையல்ல, மாறாக, வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்துவரும் வன்முறைகளும் மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் எந்தவொரு குறிப்பிடத்தக்க முடிவுகளையும் அடைவது நிகழ்தற்கரியதாக இருப்பதுமேயாகும். கடந்த வெள்ளிக் கிழமை இராஜபக்ஷ கூட்டிய அனைத்து கட்சி மாநாடு இதைத் தெளிவுபடுத்தியது. சமாதானம் பற்றி பேசிக்கொள்ளும் அதேவேளை, முழு அரசியல் ஸ்தாபனமும் யுத்தத் தயாரிப்புகளுக்காக நெருக்கமாக கரம்கோர்க்கின்றன. இந்தக் கூட்டம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் அதன் பங்காளிகளான ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய, அதேபோல் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் (ஐ.தே.க) உள்ளடக்கிக்கொண்டிருந்தது.

வெளியான கூட்டறிக்கை, அனைத்துக் கட்சிகளும் "எமது ஜனநாயக சமுதாயத்தை அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஐக்கியத்துடனும் ஒரு மனதுடனும் செயற்படுவதோடு" "பயங்கரவாதத்தை வெல்ல மனவுறுதிகொள்ளவும் மற்றும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக சமாதானத்திற்கு வழியமைக்கவும்" இராஜபக்ஷவிற்கு ஆதரவு கொடுக்கும், என பிரகடனம் செய்துள்ளது. "பிராந்திய ஒருமைப்பாட்டையும் இலங்கையில் ஜனநாயகத்தையும் காக்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும்" எனவும் அந்த அறிக்கை அழைப்புவிடுக்கின்றது.

சமாதானம் பற்றி பேசியபோதிலும், யுத்தத்திற்கான கருத்துவேறுபாடின்மை வளர்ச்சியடைவதை இந்தக் கூட்டம் அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், யுத்தத்திற்கு முடிவுகட்டக் கோரும் கூட்டுத்தாபன தட்டுக்களின் கோரிக்கையை முன்னர் கூறித்திரிந்த ஐ.தே.க.யும் அதே வழியில் விழுந்துள்ளது. மே 02 நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் ஐ.தே.க பேச்சாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்ததாவது: "பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரேவழி சமாதான முன்னெடுப்பாக இருந்த போதிலும், அரசாங்கத்திற்கு யுத்தத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் அதற்கு ஆதரவளிப்போம்."

யுத்தத்திற்கான தயாரிப்புகளில் அரசாங்கம் இராணுவத்தை தூக்கிநிறுத்துகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய இராஜபக்ஷ, புலிகளின் கட்டுப்பாட்டிலான எல்லை பிரதேசங்களில் ஆயுதப் படைகளின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக 25,000 பேர்கொண்ட பலம்வாய்ந்த ஊர்காவல் படையினருக்கான ஆணையாளர் நாயகமாக கடற்படை அதிகாரிகளின் துணைத் தலைவரான சரத் வீரசேகரவை நியமித்துள்ளார். வீரசேகரவும் ஜெனரல் பொன்சேகாவை போல் புலிகளுக்கு எதிரான தனது உக்கிரமான கடும்போக்கு நிலைப்பாட்டை எடுப்பதில் பேர்போனவராகும்.

இராஜபக்ஷ அரசாங்கம் பாகிஸ்தானிடமிருந்து இராணுவத் தளபாடங்களை வாங்க திட்டமிட்டிருப்பதோடு "ஒரு நீண்ட பட்டியலையும்" அனுப்பிவைத்துள்ளதாகவும் புதனன்று இன்டியன் எக்ஸ்பிரஸ் செய்திவெளியிட்டிருந்தது. பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கூட்டுப்படைகளின் தளபதி தயா சந்தகிரி இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு மார்ச் 1ம் திகதி எழுதிய கடிதத்தில், "T- 55 தாங்கிகள் மற்றும் C-130 ஹேர்குலஸ் போக்குவரத்து விமானத்தையும்" உடனடியாக பார்வையிடுவதற்காக கொழும்புக்கு ஒரு தொழில்நுட்பவியலாளர் குழுவை அனுப்புமாறு கேட்டுள்ளார். இலங்கை இராணுவத்திற்கு உதிரிப் பாகங்கள் அவசரத் தேவையாகியுள்ளன.

இலங்கை மீண்டும் யுத்தத்திற்குள் இழுபட்டுச் செல்கின்ற நிலையில், பெரும் வல்லரசுகள் வன்முறைகளுக்கு முடிவுகட்டுமாறு அழைப்புவிடுத்த போதிலும், போக்கில் பளிச்சென்று தெரிகின்ற மாற்றம் உள்ளது. பொன்சேகா மீதான கடந்த வார தாக்குதலை அடுத்து புலிகளுக்கு எதிராக சர்வதேச கண்டனங்களும் மிகவும் ஆபத்தான அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான ரிச்சர்ட் பெளச்சர், "தமிழ் புலிகள் மீது எம்மால் முடிந்த அழுத்தங்களை திணிப்பதற்கு உலகம் பூராவும் உள்ள ஏனைய அரசாங்கங்களுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டுள்ளது" என பிரகடனம் செய்தார்.

தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நேபாளம் மற்றும் இலங்கையில் நிலவும் ஸ்திரமற்ற நிலைமை பற்றி கலந்துரையாடியுள்ளார். இந்திய கரையோர பாதுகாப்பு துறையும் கடற்படையும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாக்கு நீரிணையில் தமது ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதோடு புலிகளின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இலங்கை கடற்படையுடன் ஒத்துழைத்து செயற்படுகின்றனர். இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் புது டில்லி செல்லவுள்ளதோடு உயர்ந்த இராணுவ உதவியையும் எதிர்பார்ப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஒஸ்லோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தை அடுத்து, அரசாங்கத்துடனும் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று இலங்கைக்கு வரவுள்ளார். செவ்வாயன்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு அகாசி வழங்கிய செவ்வியில், ஒரு முழு யுத்தம் வெடிக்கும் சந்தர்ப்பத்தில், ஐ.நா சமாதானப் படைகள் பற்றி அக்கறை செலுத்தப்படலாம் என சமிக்ஞை செய்ததானது, ஒஸ்லோவில் மூடிய கதவுகளுக்கு பின்னால் கலந்துரையாடப்பட்டிருப்பது என்ன என்பது பற்றி ஒரு அறிகுறியாகும். அகாசி அடுத்தவாரம் புது டில்லியிலும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அரசாங்கமும் புலிகளும் ஜெனீவாவில் இன்னுமொரு சுற்று பேச்சுக்களை நடத்துவது சாத்தியமானதாக இருந்த போதிலும், எந்தவொரு முன்னேற்றமான முடிவுகளையும் காண்பது நிச்சயமற்றதாகும். புதனன்று அசோசியேடட் பிரஸ்சுடன் உரையாடிய கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்வ் ஹென்ரிக்ஸன் நம்பிக்கைவாதியாக இருக்க முயற்சித்தார். "இரு சாராரதும் நடவடிக்கைகளை நோக்கும்போது, விரைவில் சமதானப் பேச்சுக்கள் பற்றி நம்பிக்கைத் தெரிவிக்க முடியாதவனாக உள்ளேன். ஆனாலும், நாம் அதற்காக வேலை செய்கின்றோம், நாங்கள் பார்ப்போம்," என்றார். எவ்வாறெனினும், நேற்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃவ்ஸ்டோடிர் தெளிவாகப் பிரகடனம் செய்ததாவது: "தற்போது நடைபெறும் அதிகரித்துவரும் வன்முறைகள் முற்றிலும் கட்டுப்பாட்டை மீறியதாகும். அடிமட்டத்தில் குழப்பம் இருந்துகொண்டுள்ளது."

நாடு ஏற்கனவே 65,000 உயிர்களை பலிகொண்ட உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் இருக்கின்றது என்ற உண்மை, முழு ஆளும் வர்க்கத்தின் மீதும் குற்றச்சாட்டை சுமத்துகிறது. ஒரு புதிய ஒட்டுமொத்த இராணுவ மோதலின் அழிவுகரமான சமூக மற்றும் பொருளாதார விளைவுகளையிட்டு நன்கு அறிந்துகொண்டுள்ள இலங்கையில் உள்ள தட்டுக்கள் பிறப்பில் இருந்தே தமது நச்சுத்தனமான இனவாத அரசியலைக் கைவிட இலாயக்கற்றவையாகும். இலங்கை ஆளும் தட்டுக்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமது ஆளுமைக்கான அடிப்படையாக இனவாதத்தை சுரண்டிக்கொண்டுள்ளதோடு யுத்தத்திற்கு வழிவகுத்த முதல் காரணி அதுவேயாகும்.

Top of page