World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A day in the life of a Sri Lankan tea worker

இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளியின் ஒரு நாள் வாழ்க்கை

By Jayanthi Perera
9 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் நவம்பர் 23ம் திகதி அரசாங்கத்தின் டெயிலி நியூஸ் பத்திரிகை "தோட்டத் தொழிலாளியின் மேம்பாட்டுக்கு அவசர நடவடிக்கை" என்ற தலைப்பில் ஒரு செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புதிய பெருந்தோட்ட அமைச்சரான மில்ரோய் பெர்னான்டோவுக்கு "பல்வேறு வகையில் வறுமைக்கும் துயரங்களுக்கும் ஆட்பட்டு தவிக்கும் தோட்டப்புற தொழிலாளரின் நிலையை மேலும் உயர்த்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதாக தற்பெருமையுடன் அறிவித்திருந்தது.

அமைச்சரவை திட்ட அறிக்கை ஒன்று, சில வேலைகளில் "சுகாதாரம், கல்வி, பொருளாதார நிலைமைகள், தோட்டப்புற இளைஞரிடையிலான வேலை வாய்ப்பின்மை, குடிநீர், நில அரிப்பு, பாதை, வீதி வசதிகள் மற்றும் போக்குவரத்து போன்று தோட்டப்புற மக்கள் எதிர்கொண்டுள்ள பற்றாக்குறைகள் பற்றி பரந்தளவில் விபரிக்கும்."

இத்தகைய வாக்குறுதிகளுக்கு தோட்டத் தொழிலாளர் செவிமடுப்பது முதல் தடவையல்ல. தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டுவரும் நிலையில், வாழ்க்கைத்தர நிலைமையை அபிவிருத்தி செய்வோம் என்று கடந்த காலத்திலும் அநேக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஆரம்பத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கை ஒன்று, 1991--92 முதல் 2002 வரையான ஒரு தசாப்த காலகட்டத்துள், தோட்டத் தொழிலாளர் மத்தியிலான வறுமை நிலை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழு ஐஸ்லபி தோட்ட குருக்குதே பிரிவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தது. இந்த தோட்டம் கொழும்பிலிருந்து 210 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பண்டாரவளையில் அமைந்துள்ளது. இந்த தனியார் தோட்டம் மல்வத்தவெலி பெருந்தோட்டத்திற்கு சொந்தமானதாகும். இந்தப் பெருந்தோட்டத்தில் ஏறத்தாள 1,300 தொழிலாளர்கள் வரை வேலை செய்வதுடன் குருக்குதே பிரிவில் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பாரதூரமான நிலைமைகள் இலங்கையின் விவசாய தொழிலாள வர்க்கம் அனுபவித்து வரும் நிலைமைகளை வெளிக்காட்டுகின்றன.

இந்த தோட்டத் தொழிலாளர்கள் "லயன் காம்பராக்களிலேயே" வாழ்கின்றனர். இவை 5 அல்லது 6 வீடுகளாக வரிசையாக அமைந்திருக்கும். ஒவ்வொரு குடும்பமும் வாழ்கின்ற வீடுகளின் அளவு 6 x 4 மீட்டர்களாகும். தற்போதைய தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையரான தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்காக பிரித்தானிய காலனித்துவ கால துரைமாரால் முதன் முதலில் கட்டிக்கொடுக்கப்பட்ட தங்குமிடங்களே இந்த லயன் காம்பராக்களாகும். இந்த தொழிலாளர் குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக பெருக, புதிதாக மணம் செய்தவர்களின் இருப்பிட வசதிக்காக இந்த சிறிய காம்பராக்கள் தகரங்கள் மற்றும் பொலித்தீன்களால் மேலும் பிரிக்கப்பட்டு குறுகியதாக்கப்பட வழிவகுத்தது. பல இடங்களில் ஒரு சிறு லயன் வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் பகிர்ந்து வாழத் தள்ளப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்துடன் ஒரு தோட்டத் தொழிலாளி பேசுகையில், "எனக்கு முப்பது வயது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனக்கு ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் உள்ளனர். நான் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். எனது சிறுவயதிலேயே எனது தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். எமக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து பாடசாலைக்கு அனுப்பி செலவழிக்க அம்மாவுக்கு வசதி கிடைக்காததால் எங்களால் கல்வியை தொடர முடியவில்லை. நானும் எனது தங்கைகளும் 14--15 வயதானதும் தோட்டத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததால் எனது தம்பியை 10ம் வகுப்பு வரை படிக்கவைக்க முடிந்தது. 15 வருடங்களாக நான் இங்கு வேலை செய்து வருகிறேன் ஆனால் ஒரு சதமேனும் மிச்சம் பிடிக்க முடியவில்லை," என்றார்.

இத்தொழிலாளி காலை 7.30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக நாளாந்தம் அதிகாலை 4.30 மணிக்கு எழும்ப வேண்டும். காலையில் தனது பிள்ளைகளுக்கு காலை உணவு தயாரித்து முடித்து, அவர்களை எழுப்பி பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாக்கி, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயையும் கவனித்த பின் தனது காலை உணவையும் சாப்பிட அவளுக்கு நேரமிருப்பதில்லை.

"எனது மூத்த பிள்ளைக்கு எட்டு வயது. ஏனைய தோட்டத்து பிள்ளைகளுடன் பாடசாலைக்கு செல்கிறாள்," எனக் குறிப்பிட்ட அவர், "அவள் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே சென்று நடந்தே வருகிறாள். நான் என்ன செய்வது? பாடசாலை வான்களுக்கு செலவழிக்க என்னால் முடியாது. இளைய பிள்ளைகள் இருவரையும் பிள்ளை மடுவத்தில் நான் வேலைக்கு செல்லும் வழியில் விட்டு செல்வேன். அவர்களுக்கு சாப்பாடு மற்றும் குடிநீரையும் கூட பிள்ளை மடுவில் கொண்டு போய் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். ஒரு கறியுடன் சோறு சமைத்து அல்லது ஒரு ரொட்டி சுட்டு அவர்களுக்கு கொடுப்பேன். காலையில் மட்டுமே என்னால் அவர்களுக்கு பால் கொடுக்க முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

காலை 8 மணிக்கு தேயிலை கொழுந்து பறிக்கத் தொடங்கும் தொழிலாளர்கள், மாலை 4 அல்லது 4.30 மணிவரை தொடர்ந்தும் கொழுந்து பறிப்பர். வேலை நேரத்தில் ஒரு நிமிடம் களைப்பாறினாலும் மேற்பார்வையாளர் திட்டுவார். அத்துடன் நிர்வாகமும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் பறிப்பதற்கு கொழுந்து போதியளவு உள்ளதா இல்லை என பார்க்காமல் தினமும் 18--20 கிலேகிராம் வரை கட்டாயம் கொழுந்து பறித்து நிரப்பக் கோருகிறது.

"மத்தியானம் நாம் பறித்த கொழுந்துகளை கையளித்த பின்னர் எமக்கு பகல் சாப்பாட்டுக்கான இடைவேளை உண்டு. பகல் 12.15 மணியளவில் நான் எனது இளைய பிள்ளைகளை பிள்ளை மடுவத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வழமைபோல் வீட்டுக்கு வருவேன். எனது பிள்ளைகளை கவனித்த பின்னர் காலையில் சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு ஓட வேண்டும்," என அந்த தோட்டத் தொழிலாளி தெரிவித்தார்.

"மாலை வீடு திரும்பும் வழியில் நாம் சமையலுக்கு விறகு சேர்த்துக் கொண்டு வருவோம். நாம் திரும்பும் போது 5 அல்லது 5.30 மணியாகிவிடும். எங்களுக்கு பிள்ளைகளுடன் உட்கார்ந்து ஒரு வேளை சாப்பாட்டை சாப்பிட வாய்ப்பு கிடைப்பது இரவில் மட்டுமே. நாளின் முடிவில் நாம் மிகவும் களைப்படைந்திருப்போம். மறுநாளும் வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுமார் இரவு 9 மணிக்கே படுக்கைக்கு போவோம்."

இந்த தோட்டப் பிரிவில் 50 குடும்பங்களுக்கு மூன்று தண்ணீர் குழாயே உள்ளது. அவற்றிலும் ஒரு நாளைக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே தண்ணீர் வரும். தொழிலாளர் தங்கள் குடும்பத்திற்கு தண்ணீர் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கத் தள்ளப்பட்டுள்ளதோடு வரட்சிக் காலங்களில் அவர்கள் தண்ணீர் தேடி பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டும். சிங்கள கிராமங்களிலும் தண்ணீர் பிரச்சினை இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். பெருந்தோட்டத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே தண்ணீர் தாங்கியில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

சுகாதார வசதிகள் மிக மோசமானதாக உள்ளது. தண்ணீர் வசதி இல்லாத ஒரு மலசலகூடத்தை மூன்று குடும்பங்கள் பயன்படுத்த தள்ளப்பட்டுள்ளன. தோட்டத்தில் உள்ள தரமற்ற சுகாதார வசதிகள் பற்றி ஒரு பெண் தொழிலாளி எமது வலைத் தளத்திற்கு விளக்கினார். "தோட்ட மருந்தகத்தில் அவசியமான மருந்துகள் இல்லாததால் தோட்ட வைத்தியரின் வீட்டுக்கு நாங்கள் போக வேண்டும். மருந்தகத்தில் பனடோல், வில்லைகள் மற்றும் காயங்களை கழுவுவதற்கான திரவங்கள் மட்டுமே உள்ளன."

தமிழ் பேசும் பெருந்தோட்ட சிறுவர்களுக்கான கல்வி வசதிகள் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பண்டாரவளை கல்வி வலையத்திற்கு 800 ஆசிரியர்கள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 500 ஆசிரியர்களே சேவையில் உள்ளனர். பெரும்பாலான தோட்டப்புற இளைஞர்கள் 6 அல்லது 7ம் வகுப்புடன் தமது கல்வியை கைவிட்டுவிடுவதோடு சிலர் அதற்கும் முன்னதாகவே கைவிடுகின்றனர். ஐஸ்லபி தோட்டத்தில் 1999ல் இருந்து எவரும் இதுவரை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்ததில்லை.

இளைஞர்களின் வேலையற்ற நிலைமை கடுமையானதாக உள்ளது. இளைஞர்கள் தோட்டத்தில் வேலை தேடிக்கொள்ளும் எதிர்பார்ப்பை முழுமையாக இழந்துள்ளனர். இளைஞர்கள் அருகில் உள்ள நகரங்களில் அல்லது கொழும்பில் சிறிய ஹோட்டல்களிலும் கடைகளிலும் வேலையாட்கள் அல்லது உதவியாளர்கள் போன்ற தரமற்ற வேலைகளை தேடிக்கொள்ள தள்ளப்பட்டுள்ளனர். யுவதிகள் அடிக்கடி நகரங்களில் வீட்டு வேலைக்காரியாக வேலைசெய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறிக்கும் வேலை செய்பவர்களது சம்பளமும் மிக மிகக் குறைவானதாகும். உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஒரு தோட்டத் தொழிலாளி தெரிவித்தது போல்: "எமக்கும் தரமான வாழ்க்கை வாழ ஆசை. ஆனால் எனது மூன்று பிள்ளைகள், எனது தாயார் மற்றும் நான் அனைவரும் எனது சம்பளத்திலேயே தங்கியிருக்கின்றோம். எனது கணவருக்கு நிரந்தரமான தொழில் இல்லாததோடு அவர் அன்றாடம் கிடைக்கும் சில்லறை வேலைகளில் தங்கியிருக்க தள்ளப்பட்டுள்ளார். மழை காலத்தில் அவருக்கு வேலைத் தேடிக்கொள்வது சிரமம். நகரத்தில் (பண்டாரவளையில்) ஒரு தொழிலை தேடிச் செல்வதற்காக அவர் 22 ரூபாய்களை பஸ் கட்டனமாக செலவழித்த போதிலும் ஒரு நாளைக்கு கிடைக்கும் சம்பளம் 150-200 ரூபாய் மட்டுமே. எவ்வாறனினும் தமிழர்களுக்கு தொழில் தேடிக்கொள்வது சிரமமானதாகும்.

"கடையில் மாதாந்தம் பெற்றுக்கொள்ளும் கடனை செலுத்தவே எனது சம்பளம் முடிவடைந்து விடுகிறது. நாங்கள் கடனுக்கு வாங்குவதோடு விலைவாசி அதிகரிக்கும்போது கடனும் அதிகரிக்கும். நான் மாதம் 3,000 - 3,500 ரூபா வரை சம்பாதிப்பேன். கொழுந்து அதிகம் இருக்கும் காலத்தில் என்னால் 1,000 ரூபா மேலதிகமாக சம்பாதிக்க முடியும். ஆயினும் தோட்டம் ஒழுங்காக பேணப்படாததால் அறுவடை வீழ்ச்சியடைகிறது. நாங்கள் சுகயீனமுறும் போது அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது மேலும் கடன்காரர்களாகிறோம்.

"எமக்கு யார் ஜனாதிபதியாக இருக்கின்றார் என்பதில் அக்கறையில்லை. எங்களுக்கு எந்த தலைவரிலும் நம்பிக்கை இல்லை. நான் உங்களுடன் கதைப்பதற்கான காரணம் எனக்கு உங்களுடைய கட்சியை (சோசலிச சமத்துவக் கட்சி) நீண்டகாலமாகத் தெரியும். நீங்கள் கூறியவை ஒப்புவிக்கப்பட்டுள்ளன"

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) மற்றும் செங்கொடி சங்கம் போன்ற பல தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்ளன. "எமது மாதந்த சந்தாவை பெற்றுக்கொள்வதை தவிர அவர்கள் எதையும் செய்வதில்லை" என ஒரு தோட்டத் தொழிலாளி ஆத்திரத்துடன் பிகடனப்படுத்தினார்.

தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் வறியவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினர். 1948ல் சுதந்திரமடைந்த உடனேயே, தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர் மத்தியில் இனவாத பிளவை கிளறிவிடுவதற்காக அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்தது. 1963ல் புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் கைச்சாத்தான ஒரு ஒப்பந்தம் இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தென்னிந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவைதை கண்டது. ஏனைய தமிழ் தோட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளின் பின்னர் பிரஜா உரிமையை பெற்ற போதிலும் இன்னமும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

தோட்ட தொழிலாளர்கள் தாங்க முடியாத சுமைகளை சுமக்கின்றனர். அவர்களுக்கு வறுமை நிலையிலான சம்பளமே வழங்கப்படுவதோடு அவர்கள் மிக மோசமான வாழ்க்கை வசதிகளுடனேயே வாழ்கின்றனர். மறுபக்கம் தோட்ட சொந்தக்காரர்கள் பெரும் இலாபத்தை சுரண்டிக்கொள்கின்றனர். அண்மையில் இலங்கை பத்திரிகைகளில் வெளியான ஒரு செய்தி, ஐஸ்லபி தோட்ட உரிமையாளரான மல்வத்தவெலி பெருந்தோட்டம் ஈட்டியுள்ள இலாபத்தை கோடிட்டு காட்டியது. இந்த ஆண்டு ஜூன் 30ம் திகதி வரை மூன்று மாதங்களுக்குள் 65 மில்லியன் ரூபாய்களை மொத்த இலாபமாக இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. 2004ம் ஆண்டு இந்த நிறுவனம் ஈட்டிய மொத்த இலாபம் 228 மில்லியன்களாகும்.

முன்னரையும் விட மோசமாக சுரண்டும் வகையில் இந்த அமைப்பை மாற்றியமைப்பதிலேயே தற்போதைய அரசாங்கமும் நாட்டங்கொண்டுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷவின் "தோட்டத் தொழிலாளர்களை மேம்படுத்தும்" வாக்குறுதியானது ஏனைய தொழிலாள வர்க்க பிரிவினர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு கொடுத்ததை போலவே வெற்று வாக்குறுதிகளாகும். பல தொழிலாளர்கள் ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதை மேலும் சீரழிப்பதை தவிர சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வேலைத் திட்டத்தால் வேறு எதையும் அமுல்படுத்த முடியாது.

Top of page