World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Social movements in France: Political lessons from the last 10 years

பிரான்சில் சமூக இயக்கங்கள்: கடந்த 10 ஆண்டுகளில் அவற்றில் இருந்து அரசியல் படிப்பினைகள்

By Peter Schwarz
14 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனி மற்றும் பெரிய பிரித்தானியாவின் சோசலிச சமத்துவக் கட்சிகள் ஏப்ரல் 17ல் இருந்து ஏப்ரல் 21 வரை பேர்லினில் நடத்திய கருத்தரங்கில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பீட்டர் சுவார்ட்ஸ் கீழ்க்கண்ட உரையை ஆற்றினார்.

வர்க்க முரண்பாடுகள் மிக வெளிப்படையாக பூசலுக்குட்பட்ட நாடு என்றுதான் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் கருதப்படுகிறது; அந்நிகழ்வுகள் ஐரோப்பா முழுவதும் சமூக உந்துதல்களையும் அளித்தது. இது 1789 முதல் 1815 வரையிலான புரட்சிகர காலகட்டத்திற்கும், பின்னர் 1831, 1848, 1871 மற்றும் இறுதியாக பாரிசில் தொடங்கிய 1968ம் ஆண்டு மே-ஜூன் எழுச்சி காட்டுத்தீ போல் ஐரோப்பா முழுவதும் பரவியதற்கும் பொருந்தும்.

கடந்த இரண்டு மாதங்களாக பிரான்சை அதிர்விற்கு உட்படுத்திய "முதல் வேலை ஒப்பந்தம்" (Contrat première embaucheசிறிணி) என்று அழைக்கப்பட்ட CPE ஐ சூழ்ந்திருந்த முரண்பாடுகளின் தன்மையும் முக்கியத்துவமும் பிரெஞ்சு எல்லைகளுக்கு அப்பாலும் உள்ளவை ஆகும். ஐரோப்பா முழுவதும் இருக்கும் உண்மையான சமூக மற்றும் அரசியல் நிலைமைக்கு தேர்ந்த முறையில் உதாரணமாக அவை உள்ளன. வரலாற்று மரபின்படி, உதாரணமாக ஜேர்மனியர்களைவிட, பிரெஞ்சு மக்கள் தெருக்களுக்கு மில்லியன் கணக்கில் வருவதற்கு விருப்பம் உள்ளனர் என்றாலும், இதே வெடிப்புத் தன்மை உடைய அழுத்தங்களும் அரசியல் மோதல்களும் இங்கும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் வேலைசெய்கின்றது.

பிரான்சில் ஏற்பட்ட நிகழ்வுகள் ஒரு சர்வதேச மூலோபாய அனுபவத்தைப் பிரதிபலிப்பதால், அவற்றைப் பற்றிய ஒரு கவனமான பகுப்பாய்வு தேவையாகும். பிரான்சின் இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தேசிய தீர்வுகள் ஏதும் கிடையாது. CPE முரண்பாடுகள் அதன் அனைத்து தீவிரத் தன்மையிலும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியமைக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

சமீபத்திய நிகழ்வுகளில் உலக சோசலிச வலைத் தளம் தீவிரமாக தலையீடு செய்து இந்த நிகழ்வுகளின் போக்கை தன்னுடைய பணியின் இதயத்தானத்தில் இருத்திக் கொண்டது. ஆசிரியர் குழுவின் பல உறுப்பினர்களும் பாரிசில் முறையாக உழைத்தனர். அன்றாட அடிப்படையில் நடப்பு நிகழ்வுகளை நாங்கள் பகுத்தாய்ந்து பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் கட்டுரைகளை வெளியிட்டோம். தொழிற்சங்கங்கள் மற்றும் பல அரசியல் போக்குக்களின் பங்கைப் பற்றி ஆராய்ந்தோம்; 1936ம் ஆண்டு மக்கள் முன்னணி, 1968 இன் பொது வேலை நிறுத்தம் போன்ற வரலாற்று சம்பவங்களில் இருந்து விளையும் படிப்பினைகளையும் கூறினோம்.

அரசியல் நனவை உயர்த்துவது, பழைய சீர்திருத்த அமைப்புக்களுடன் முறித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தெளிவாக்குவது, இந்த அமைப்புக்களுக்கு ஒரு இடது திரை மறைப்பு அளிக்கும் குட்டி முதலாளித்துவ தீவிரக் குழுக்கள் ஆற்றும் பங்கினை அம்பலப்படுத்துவது ஆகியவைதான் எமது பணியின் மையத்தானமாக இருந்தது. இவ்வாறு செய்கையில் நாங்கள் பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை கட்டியமைப்பதற்கு அடிப்படையை நிறுவத் தொடங்கினோம்.

முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கமும் "அதி இடதும்"

அனைத்துலகக் குழுவை தவிர, பிரான்சில் எந்த ஒரு அரசியல் போக்கும் இத்தகைய பணிகளை செய்ய சிறு முயற்சிகூட எடுத்துக் கொள்ளவில்லை. புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR), தொழிலாளர்களின் போராட்டம் (LO), தொழிலாளர்கள் கட்சி (PT) ஆகியவை அரசாங்கம் CPE ஐ திரும்பப் பெற்றுக் கொண்டபின் அறிக்கைகளை வெளியிட்டன; அவற்றின் நோக்கம் முரண்பாடுகள் எழுப்பியிருந்த முக்கிய அரசியல் பிரச்சினைகளை மறைப்பதாகத்தான் இருந்தன.

இந்த மூன்று அமைப்புக்களும் சட்டம் திரும்பப் பெறப்பட்டமை ஒரு பெரிய வெற்றி என்று பிரகடனப்படுத்தின. தொழிலாள வர்க்கம் தன்னுடைய இயக்கத்தை எண்ணிக்கையில் அதிகரித்து "ஐக்கியத்தை" தக்க வைத்துக் கொண்டால் அதன் அனைத்து கோரிக்கைகளையும் பெறலாம் என்பதுதான் அவற்றின் முக்கிய அரசியல் முடிவுரையாக இருந்தது. இதன் பொருள் தொழிற்சங்கங்களுடன் ஐக்கியம் என்பதாகும். ஒரு சோசலிச முன்னோக்கு ஒருபுறம் இருக்க, அவை எதுவுமே ஒரு புதிய அரசியல் நோக்குநிலைபற்றிய பிரச்சினையைக் கூட எழுப்பவில்லை. பிரெஞ்சு எல்லைக்கு அப்பால் செல்லும் வேலைத்திட்டத்தை ஒருவரும் முன்னெடுக்கவில்லை; இவர்களை பொறுத்தவரையில் பிரான்சுக்கு வெளியே உலகம் இயங்கவில்லை என்ற கருத்து இருந்தது போலும். தொழிற்சங்கங்கள் மற்றும் சீர்திருத்தக் கட்சிகள் பற்றி அவை எதுவுமே விமர்சிக்கவில்லை; மிகக் குறைந்த விமர்சனங்கள்கூட அதிக பட்சம் முற்றிலும் தாழ்வான, தந்திரோபாயம் பற்றிய வினாக்களைத்தான் எழுப்பியிருந்தன. சுருங்கக் கூறின், மூன்று அமைப்புக்களும் ஒரு குறுகிய முற்றிலும் தொழிற்சங்கவாத மற்றும் முற்றிலும் தேசிய முனனோக்கைத்தான் பாதுகாக்கின்றன.

CPE திரும்ப பெறப்பட்டதை பொறுத்தவரையில், உதாரணத்திற்கு, LCR எழுதியதாவது: "இந்த வெற்றி, இளைஞர்கள், ஊதியம் பெறுபவர்கள் மற்றும் முழு மக்கட்தொகைக்கு பொருளாதாரப் பாதுகாப்பின்மை, வேலையின்மை இவற்றிற்கு எதிரான உண்மை நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டிய பாதையில் முக்கிய நடவடிக்கையாகும். இளைஞர்கள் இயக்கம் ஒரு பாதையை தொடக்கிவிட்டது; ஒரு ஜனநாயக வடிவைக் கொண்டு, அரசியல் தன்மை பெற்று, நிறுவனங்களை கேள்விக்குட்படுத்தி, பிளவுகளை கடந்து தொழிலாளர்கள், பல்வேறு தலைமுறைகளை இணைக்கும்போது போராட்டத்திற்கு வெற்றி ஏற்படும்."

"அனைத்து தொழிற்சங்கமயமாக்கப்பட்ட அமைப்புக்களும்" இன்னும் கூடுதலான கோரிக்கைளை செயல்படுத்துவதற்கு, இப்பொழுது "ஒரு பொது அணிதிரளலுக்கு தயார் செய்யவேண்டும்" என்ற கோரிக்கையில் இந்த கருத்துரை உச்சநிலை அடைகிறது.

தன்னுடைய பங்கிற்கு லுத் ஊவ்றியேர் தெரிவித்த கருத்தாவது: "எல்லாவற்றிற்கும் மேலாக CPE திரும்பப் பெறப்பட்டது ஒரு வெற்றியாகும்; ஏனெனில் தெருக்களில் நடவடிக்கையில் இறங்கி சாதித்த முறையில் இது முன்னேற்றப்பாதையை காட்டுகிறது. ...சமூக நெருக்கடி ... போராட்டத்தில் மகத்தான அளவில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் என்று அவர்களிடம் உள்ள சமூக சக்தியை காட்டி தலையீடு செய்வதன் மூலம்தான் நிறுத்தப்படமுடியும்; இவைதான் முதலாளிகளையும் அரசாங்கங்களையும் பின்வாங்க வைக்கும்."

"தங்கள் தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் ஐக்கியமாக இருந்ததே" வெற்றிக்குக் காரணம் என்று கூறிய PT அந்த ஐக்கியந்தான் அடிப்படைப் பிரச்சினை என்று பலமுறையும் வலியுறுத்தியது.

இந்த மூன்று அமைப்புக்களில் ஐரோப்பிய ஒன்றிய பிரச்சினையைப்பற்றி எழுப்பிய அமைப்பு PT ஒன்றுதான். "ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக் கொள்ள வேண்டிய தேவையானது, அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான வழிகளைத் திறக்கும் அடிப்படையாக எழுகிறது மற்றும் தொடர்ந்து எழும்." ஆயினும், PT ஐ பொறுத்தவரையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றீடு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் ஐக்கிய சோசலிச அரசுகள் என்றில்லாமல், பிரான்சிற்குள் "ஜனநாயகம்" என்பதாகும்; இவ்வாறு "ஜனநாயகம்" என்பது பிரெஞ்சு அரசுக்கான ஒருபொருட் பன்மொழி ஆகும். மே மாத இறுதியில் இவ்வமைப்பு பாரிசில் "ஜனநாயகத்தை மீண்டும் வெற்றி கொள்வதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறித்துக் கொள்வதற்கும்" என்ற கோஷத்தை எழுப்பி, ஒரு மிகப் பெரிய கூட்டத்தை நடத்தியது.

இந்த தேசிய, தொழிற்சங்கவாத சார்பு முன்னோக்கு ஒரு பிற்போக்குத்தனமானதாகும் மற்றும் தற்போதைய உண்மை நிலையை புரிந்து கொள்வதில் இது முழுமையாக தோல்வியும் அடைந்துள்ளது. இத்தகைய முன்னோக்கு 1960களிலோ அல்லது 1970களிலோ என்றில்லாமல் 2006ல் முன்வைக்கப்பட்டுள்ளது. பூகோளமயமாக்கல் முறை பெருமளவு முன்னேறிய காலகட்டத்தில், ஐரோப்பா முழுவதும் வருடக்கணக்கான இடையறாத நலன்புரி வெட்டுக்களின் பின்னர், உலக உற்பத்தி முறையில் சீனா, இந்தியாவில் உள்ள மிகக் குறைந்த ஊதியத்தில் பெரும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று அமைப்புக்களும் ஒருமித்த வகையில், "தங்கள் போராட்டத்தை தொழிலாளர்கள் முடுக்கிவிட்டால், சமூக நெருக்கடி நிறுத்தப்பட்டு விடலாம்" என்று கூறுகின்றன.

அத்தகைய நிலைப்பாடு முட்டாள்தனத்தையோ, வெகுளித்தனத்தையோ பிரதிபலிக்கவில்லை. தொழிற்சங்கப் போராட்டங்களை போற்றிப்புகழ்வது என்பது தொழிற்சங்கக் கருவிகள் மற்றும் உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளை வலுப்படுத்தி, மக்கள் இயக்கத்தை அவற்றின் பின்னே நிறுத்திவிடும் இலக்கை கொண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரான்சில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்ட வெகுஜன இயக்கங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறையும், தொழிற் சங்கங்களும் உத்தியோகபூர்வ இடது கட்சிகளும், இயக்கத்தை ஒடுக்கவும் நிலவும் முதலாளித்துவ ஒழுங்கை காப்பதற்கும்தான் முயன்றுள்ளன. இதன் விளைவாக, இந்த அமைப்புக்கள் தீவிரமான வகையில் மதிப்பிழந்து வலுவிழந்துள்ளன. பிரான்சின் தொழிற்சங்க உறுப்பினர் தொகை உத்தியோகபூர்வ தொழிலாளர்களில் 8 சதவிகிதத்தை ஒட்டி உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது; ஐரோப்பாவின் மிகக் குறைந்த விகிதங்களில் இதுவும் ஒன்றாகும். 2002ம் ஆண்டு உத்தியோகபூர்வ இடது கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி (PS), கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இரண்டும் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை சந்தித்தன.

கடந்த தசாப்தத்தின் சமூக இயக்கங்களில் இருந்து ஒரு மையப் படிப்பினை பெறப்படலாம் என்றால், அது தொழிலாள வர்க்கம் சீரழிந்த தொழிற்சங்க மற்றும் சீர்திருத்தவாதக் கருவிகளில் இருந்து உடைத்துக்கொண்டு தன்னுடைய சொந்த சுயாதீனமாக அரசியல் இயக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். "அதி இடது" குழுக்களின் பங்கு இந்த அழுகிய அமைப்புக்களிடம் இருந்து ஒரு அரசியல் உடைவை தடுத்துவிட வேண்டும் என்பதும், தற்போதைய அரசாங்கம் சரிந்தால் ஒரு புதிய "இடது அரசாங்க" மாதிரியை சமூக ஜனநாயகத்தின் தலைமையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதும்தான்.

பிரான்சின் நிகழ்வுகள் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும்தான் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்கு அடிப்படையை கொடுக்க முடியும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. ஏனைய போக்குகள் அனைத்தும் இந்நிலைப்பாட்டை நிராகரிக்கின்றன. தன்னியல்பான இயக்கத்தின் மிகத்தீவிரமான பிரிவாகச் செயல்படுவது என்பது பணி அல்ல, மாறாக நிகழ்வுகள் பற்றிய ஒரு அரசியல் புரிதலை ஏற்படுத்துவதாக, சோசலிச நனவை வளர்த்தெடுப்பதான மற்றும் வரலாற்றில் இருந்து அவசியமான படிப்பினைகளை பெறுவதாகும்.

புரட்சிகரத் தலைமையின் நெருக்கடி மற்றும் அதன் தகவமைவு இரண்டும் கடந்த 10 ஆண்டுகளின் நிகழ்வுகளிலும் மத்திய மற்றும் தொடர்ந்த கருவாக வெளிப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முக்கியமான புதிய வளர்ச்சிகளையும் கவனிக்க முடியும். பழைய சீர்திருத்தவாத அமைப்புக்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்குகள் (LCR, LO) அமைப்புக்களில் இருந்து மிகவும் அகற்றப்பட்டு போராட்டத்தில் புதிய தட்டுக்களும் தலைமுறைகளும் நுழைந்துவிட்டன. இரண்டாவதாக, சீர்திருத்தவாத கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அதிகரித்த முறையில் மதிப்பிழந்துவிட்டன. மேலும், மூன்றாவதாக, ஆளும் உயரடுக்கு கடுமையாக வலதிற்கு நகர்ந்துவிட்ட "இடது" குழுக்களை அதிகரித்த அளவில் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய அபிவிருத்தியானது புரட்சிகர தலைமையின் நெருக்கடியை தன்னியல்பாக தீர்த்துவிடப்போவதில்லை; மாறாக அதை இன்னும் தீவிர, கடுமையான வடிவமைப்பில் எடுத்துக் காட்டுகிறது. முதலாளித்துவ முகாமிற்கு நம்மை தவிர வேறு எந்த சக்தியும் எதிர்ப்பாக இல்லாத வகையில் பழைய சீர்திருத்தவாத அமைப்புக்களின் சீரழிவும், தீவிரப்போக்குடைய குழுக்கள் முதலாளித்துவ எந்திரத்துக்குள் இணைந்துள்ளதும் மிகத் தீவிரமான வடிவமைப்பை கொண்டுள்ளன. இதன் பொருள் நாம் மிகப் பெரிய அரசியல் பொறுப்பை எதிர் கொள்ளவுள்ளோம் என்பதேயாகும்.

இப்பொழுது கடந்த 10 ஆண்டுகளின் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஆராய்வோம்.

நவம்பர்/டிசம்பர் 1995 வேலைநிறுத்த இயக்கம்

1995ம் ஆண்டுக் கடைசியில், பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு மூன்றரை வாரம் நீடித்த போராட்டத்தை அலன் யூப்பே மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக நடத்தினர். வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றனர். அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு நலன்கள், ஒய்வூதியங்கள், சுகாதாரக் காப்பீடு, வேலைகள் இவற்றிற்கு எதிராக நடத்திய தாக்குதல்களை எதிர்க்கும் பொருட்டு இவ்வியக்கம் நடந்தது. இதன் இலக்கு போருக்குப் பிந்தைய காலத்தில் பெற்ற சமூக நலன்களை காப்பது என்பதாகும்; இவை ஐரோப்பா முழுவதுமே தாக்குதலுக்கு உட்பட்டிருந்தன. சோவியத் ஒன்றியம் பொறிந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் போருக்குப் பிந்தைய காலத்தில் வர்க்க முரண்பாடுகளை சமாதானப்படுத்தவும் அடக்கவும் கொடுக்கப்பட்டிருந்த சமூக சலுகைகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய எந்தவித அவசியத்தையும் காணவில்லை.

இந்த வெகுஜன இயக்கத்தின் மத்தியில் புகையிரத, போக்குவரத்து, மின்விசை நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என்று பொதுப் பணித் தொழிலாளர்கள் ஏராளமாக இருந்தனர். இப்பிரிவினர் ஒப்பீட்டளவில் மிக உயர்ந்த தொழிற்சங்கத்தன்மை பெற்றிருந்தனர். ஆனால் இந்த இயக்கத்தின் உந்து சக்தி தொழிசங்கங்களால் அளிக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய பணியை, எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அவை அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய அரசியல் இயக்கமாக வளராமல் பார்த்துக் கொள்வதாகக் கொண்டனர்.

தங்கள் பங்கிற்கு "அதி இடதுகள்" தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு காலாட்படை என்ற நிலையை எடுத்துக் கொண்டது. கணக்கிலடங்கா வேலைநிறுத்தக் கூட்டங்களில் LCR அல்லது LO வில் இருந்து எப்பொழுதும் ஒரு பேச்சாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மேடையில் அமர்ந்ததுடன், அவரோ, அவளோ தொழிற்சங்கப் பிரதிநிதியை எப்பொழுதும் ஆதரித்து அதே அரசியல் பாதையைத்தான் முன்வைத்தனர்.

யூப்பேயுடன் ஓர் வங்குரோத்தான சமரசத்திற்கு உடன்பட்ட வகையில் தொழிற்சங்கங்கள் இறுதியாக வேலைநிறுத்தத்தை மூச்சுத் திணற அடித்துவிட்டன. சமீபத்திய CPE முரண்பாடுகளில் நடந்தது போன்றே, யூப்பே அரசாங்கமும் தன்னுடைய திட்டத்தில் மிகவும் விவாதத்திற்குரிய பகுதிகளை திரும்பப் பெற்றுக் கொண்டது; ஆனால் ஏனைய கூறுபாடுகள் அப்படியே தக்க வைத்துக் கொள்ளப்பட்டன. அப்போதைக்கு யூப்பே தொடர்ந்து பதவியில் இருக்க அனுமதிக்கப்பட்டார், சிராக்கிற்கு முறையாக அரசாங்கத்தை மாற்றுவதற்கு தேவையான காலஅவகாசம் கொடுக்கப்பட்டது.

ஜோஸ்பன் அரசாங்கம்

1995 வேலைநிறுத்த இயக்கத்தால் யூப்பே அரசாங்கத்தின் செல்வாக்கு கீழறுக்கப்பட்டதால் சிராக் 1997ம் ஆண்டு வசந்தகாலத்தில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து புதிய தேர்தல்களுக்கு உத்திரவு இட நேர்ந்தது. இந்த யோசனை தற்போது பிரதம மந்திரியாகவும் அப்பொழுது ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவராகவும் இருந்ந்த டொமினிக் டு வில்ப்பனிடம் இருந்து வந்தது எனக் கூறப்படுகிறது.

வலது சாரியின் பெரும்பான்மையை இழக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை சிராக்கும் வில்ப்பனும் எடுக்கத் தூண்டியது எது என்பது பற்றி கணிசமான ஊகங்கள் இருந்தன. உயரடுக்கை சார்ந்த வில்ப்பன், அண்மையில் அவர் நிரூபித்துள்ளது போல அவர் பொது மக்கள் கருத்தை பற்றிக் கவலைப்படுபவர் இல்லை. எனவே அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு தப்புக் கணக்காகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் இதையும் விட ஏற்கக்கூடியது, இதுதான் தொழிலாள வர்க்கத்தின் மீதான கட்டுப்பாட்டை தாங்கள் தக்கவைத்துக்கொள்ளக் கூடிய ஒரே வழி என்பதை அறிந்து, சிராக்கும் வில்ப்பனும் இடது கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதை ஏற்க நனவுடன் தயாராக இருந்தனர்.

சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் சகாப்தம் இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முடிவடைந்து, "சோசலிஸ்ட்டுகள்" மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை ஆழ்ந்த குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. எனவே ஆளும் உயர்தட்டினர் இடது தோற்றத்தை தொடர்ந்து வைத்திருக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து விட்டோடிய ஓடுகாலிகளை நம்பியிருந்தனர். பின்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக ஒருகாலத்தில் இருந்த, OCI (Organisation Communiste Internationaliste) இன் பியர் லம்பேர் தலைமையில் இயங்கிய அமைப்பில் குறைந்தது தன்னுடைய வாழ்வில் 20 ஆண்டுகளையாவது கழித்த, எதிர்கால பிரதமராக வரவிருந்த லியோனல் ஜோஸ்பனை அரசாங்கத்தின் முக்கிய நபராக கொண்டுவந்தனர்.

1964ம் ஆண்டு உயரடுக்கு ENA (Higher Civil Service School) எனப்படும் உயர்மட்ட ஆட்சிப்பணிக் கல்விக்கூடத்தில் ஜோஸ்பன் படித்துக் கொண்டிருக்கும்போது OCI யில் சேர்ந்திருந்தார்; 1972ம் ஆண்டு அவர் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வெகு விரைவில் அவர் மித்திரோனின் நெருக்கமான ஒத்துழைப்பாளர்களில் ஒருவராக தேசிய எந்திரத்தின் தலைமையிடத்திற்கு உயர்ந்தார். குறைந்தபட்சம் 1980களில் முற்பகுதிவரையிலேனும் அவர் OCI இன் கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றினார்.

OCI, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கில் இருந்து விலகிச் செல்லும் கால கட்டத்தில் ஜோஸ்பனுடைய அரசியல் கூறுபாடுகள் வளர்ச்சியுற்றன; இறுதியில் அவை சமூக ஜனநாயக அதிகாரத்துவத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் தூண் போல் வெளிவந்தன.

1960 களில், மிசேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் ஆகியோரின் திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலகக்குழு நடத்திய போராட்டம் நீடித்துநிற்குமா என்ற வினாவை OCI எழுப்பத் தொடங்கியிருந்தது. இந்த மாற்றம் நான்காம் அகிலம் மடிந்துவிட்டது என்று OCI கூறியதில் ஆரம்பத்தில் வெளிப்படுத்தப்பட்டது. நான்காம் அகிலம் பப்லோவாதத்தால் அழிக்கப்பட்டுவிட்டது என்று OCI பிடிவாதமாகக் கூறி அது இனி ஒரு புது அடிப்படையில்தான் நிறுவப்பட வேண்டும் என்றும் கூறியது. 1966-ல் நிகழ்ந்த அனைத்துலகக் குழுவின் மூன்றாம் உலக மாநாட்டில், OCI நான்காம் அகிலம் "மீழ கட்டியமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்திப் பேசியது.

இந்த நிலைப்பாடு மையவாத சக்திகளுக்கு ஒரு பொது அரசியல் மன்னிப்பு அளிப்பதற்கு ஒப்பாயிற்று. பப்லோவாதத்துடனான சர்ச்சையில் பாதுகாக்கப்பட்டிருந்த அரசியற்கோட்பாட்டுடன் அவர்கள் உடன்பட்டிருந்தாலும் அல்லது நிராகரித்தாலும் கூட "நான்காம் அகிலத்தை மீளகட்டியமைக்க வேண்டும்" என்ற கருத்தை பொதுவாக ஆதரித்த அனைத்து அரசியல் போக்குகளின் ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்ததை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.

இந்நிலைப்பாட்டை அனைத்துலகக் குழு கடுமையாக நிராகரித்தது. அதன் பிரிட்டிஷ் பகுதியான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) 1967TM OCI க்கு எழுதியதாவது: "திருத்தல்வாதத்திற்கு எதிரான இப்போராட்டத்திற்கூடாகவே காரியாளர்களை முதலாளித்துவம் மற்றும் அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை எடுப்பதற்கு தயாரிக்கமுடியும்.... பப்லோவாதத்திற்கு எதிரான உயிரோட்டமான போராட்டம் மற்றும் காரியாளர்களையும் கட்சிகளையும் இப்போராட்டத்தின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்படுவதென்பது 1952ல் இருந்து நான்காம் அகிலத்தின் உயிர்ப்பாக இருந்துள்ளது."

1968ல் நிகழ்ந்த பெரும் வர்க்கப் போர் நடவடிக்கைகளுக்கு முன்னதாக SLL, OCI ஐ அதன் நிலைப்பாட்டின் அரசியல் விளைவுகள் பற்றி எச்சரித்தது: "மேற்கு ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக பிரான்சில், தொழிலாளர்கள் தீவிரமயமாக்கப்படல் என்பது விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ...அத்தகைய வளர்ச்சிக் கட்டத்தில் புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்தின் நிலைமைக்கு புரட்சிகர வழியில் அல்லாமல் தங்களுடைய பழைய தலைமையின்கீழ் தொழிலாளர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போராட்டத்தின் மட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் ஆபத்து எப்பொழுதும் உள்ளது; அதாவது தவிர்க்கமுடியாமல் இது ஆரம்ப குழப்பத்திற்கு இடமளிக்கும். இத்தகைய சுயாதீனமான கட்சி மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை அவ்வாறு திருத்துதல் என்பது இறுதி எச்சரிக்கைகள் கொடுக்கப்படாது, மாறாநிலைவாதம் போன்றவற்றைக் கைவிடாது, வழக்கமாக தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாக இருப்பதாக மறைத்துக் காட்டப்படும்; போராட்டத்தில் இருப்பவர்களுடன் ஐக்கியம் என்று காட்டப்படும்."

இந்த எச்சரிக்கைகள் செவிடன் காதுகளில் ஊதிய சங்காயின. 1968 எழுச்சி ஆயிரக்கணக்கான புதிய, அனுபவமற்ற உறுப்பினர்களை OCI, அதன் இளைஞர் பிரிவு அமைப்பு AJS (சோசலிசத்திற்காக இளைஞர்கள்) இவற்றில் தள்ளியது; மேலும் OCI தலைமை இந்தப் புதிய அடுக்குகளின் அரசியல் குழப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டது.

1967TM SLL விமர்சித்திருந்த "ஐக்கிய வர்க்க முன்னணி" என்பற்கான கோரிக்கை இப்பொழுது, OCI தன்னையே சமூக ஜனநாயக அதிகாரத்துவத்திற்கு தாழ்த்திக் கொண்டதுடன், புதிதாக வெற்றிபெற்ற சக்திகளை பழைய அதிகாரத்துவ கருவிகளுக்குள் மீண்டும் இட்டுச்சென்ற சூத்திரம் போல் ஆகியது. "ஐக்கிய வர்க்க முன்னணி" என்று கூறும்போது இதன் பொருள் பிரான்சுவா மித்திரோனின் தலைமையின் கீழ் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு என்று ஆயிற்று; இடதில் இருந்து எந்தவிமர்சனம் வந்தாலும் இதை அது ஆர்வத்துடன் ஆதரித்தது மற்றும் பாதுகாத்தது.

இந்த சூழ்நிலைமையில், 1970களில் OCI சமூக ஜனநாயக அதிகாரத்துவத்திற்கு ஒரு முக்கிய புதிய "நீர்த்தேக்கம்" போல் வளர்ச்சியுற்றது. OCI இன் கல்விக்கூடத்திற்கூடாக வெளிவந்திருந்த கணக்கிலடங்கா தற்காலத்திய தலைவர்களில் ஒருவர்தான் லியோனல் ஜோஸ்பன் ஆவார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்திலும் தன்னுடைய செல்வாக்கை OCI காட்டிக் கொண்டது. பல ஆண்டுகள் இது திளி (திஷீக்ஷீநீமீ ஷீuஸ்க்ஷீவீகக்ஷீமீ தொழிலாளர் சக்தி) இன் தலைமையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது; அது ஒரு தொழிற்சங்க சம்மேளனம் ஆகும்; தொடக்கத்தில் அது ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த CGT JTM (சிஷீஸீயீஙபீஙக்ஷீணீtவீஷீஸீ ரீஙஸீஙக்ஷீணீறீமீ பீu tக்ஷீணீஸ்ணீவீறீ தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பில்) இருந்து ஒரு வலதுசாரிப் பிளவில் தோன்றியிருந்தது.

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப ஜோஸ்பன் அரசாங்கம் நடந்து கொண்டது. யூப்பேயினால் கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்த போர்க்குணமிக்க இயக்கத்தின் போக்கை அவர் தீங்கு ஏதும் இல்லாத வகையில் திருப்பிவிட்டார். வேலைநிறுத்தங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்பட்டிருந்த வேலைநாட்களின் எண்ணிக்கையை வைத்து இதை மிகத் தெளிவாகக் காணமுடியும். 1995ம் ஆண்டு வெகுஜன இயக்கம் யூப்பேக்கு எதிராக உச்சக் கட்டத்தில் இருந்தபோது 5.8 மில்லியன் நாட்கள் இழக்கப்பட்டிருந்தன; 1997ம் ஆண்டு ஜோஸ்பன் அரசாங்கத்தின் முதல் ஆண்டில் இது அரை மில்லியனாகத்தான் இருந்தது.

ஆனால் ஜோஸ்பன்மீது இருந்த ஆரம்பகட்ட நம்பிக்கைகள் கடுமையான ஏமாற்றத்திற்கு இட்டுச் சென்றன. தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை அவரால் காப்பாற்ற முடியாமல் போயிற்று; அவற்றை செயல்படுத்திய போதும் அவை முற்றிலும் வெற்றுத் தன்மை உடையனவாக இருந்தன. சட்டபூர்வக் கட்டுப்பாடான 35 மணி நேர உழைப்பு வாரம் என்பது, குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற வேலை மற்றும் வேலையில் வளைந்து கொடுக்கக்கூடிய நிலை ஆகியவற்றை சுமத்தும் கருவியாயிற்று. 2000ம் ஆண்டை ஒட்டி வேலை நிறுத்தங்களினால் இழக்கப்பட்ட வேலைநாட்கள் 3.1 மில்லியன் என்பது, 1995ம் ஆண்டு வெகுஜன வேலைநிறுத்த ஆண்டில் இருந்ததில் 50 சதவிகிதம் கூடுதலாயிற்று.

2002 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள்

தனக்கு வரவிருக்கும் நிலையை 2002ல் ஜோஸ்பன் பெற்றார். ஜனாதிபதி தேர்தல்களுக்கு மூன்று வாரங்கள் முன்பு எடுத்த கருத்துக் கணக்கின்படி 70 சதவிகித வாக்காளர்கள் முக்கிய வேட்பாளர்களான சிராக்கிற்கும் ஜோஸ்பனுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணவில்லை.

மொத்தத்திலேயே இருவருக்கும் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் கால் பகுதி ஆதரவுதான் இருந்தது. ஜோஸ்பனுக்கு 16 சதவிகித வாக்குளே கிடைத்தது, அவருடைய முக்கிய கூட்டணி பங்காளியான கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு 3.4 சதவிகிதமே கிடைத்தது. "அதி இடது" வேட்பாளர்களுக்கு 10 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் கிடைத்தன. ஆனால் தேர்தலின் மிகப் பரபரப்பான முடிவு, புதிய பாசிச தேசிய முன்னணியின் வேட்பாளரான லு பென்னிற்கு ஜோஸ்பனை விட அதிகமான வாக்குகள் கிடைத்து, அவர் அப்பொழுது இருந்த ஜனாதிபதியான சிராக்கிற்கு இரண்டாம் சுற்றில் போட்டியாளர் ஆனார்.

முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் லு பென்னிற்கு எதிராக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். அடுத்தநாள் மக்கட் தொகையின் ஏனைய பிரிவுகளும் இவ்வாறு செய்தன. ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து நாடு முழுவுதும் பரவின. ஆரம்பத்தில் ஆயிரத்தின் பத்து மடங்குகள், பின்னர் நூறாயிரக்கணக்கு என ஆகி இறுதியில் மே 1ம் தேதி 2 முதல் 3 மில்லியன் மக்கள் பங்கு பெற்றனர். CPE க்கு எதிராக தெருக்களில் சமீபத்தில் தீவிரமாக வந்தவர்களில் பலருக்கும் அவர்களுடைய முதல் அரசியல் அனுபவங்கள் 2002ல் ஏற்பட்டன.

ஐந்தாம் குடியரசின் அடிப்படைக்கே இந்த இயக்கம் ஊறு விளைவித்துவிடும் என்பதை ஆளும் உயரடுக்கு நன்கு அறிந்திருந்தது. தன்னுடைய அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிராக இருந்த தேர்தல் முடிவுகளை ஏற்பதற்கு பெரும்பாலான மக்களும் தயாராக இல்லை.

மே 1ம் தேதி ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், பாரிசில் சுவையான குழுவிவாதம் ஒன்றை நான் கேட்டேன். அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் முக்கியமான பிரெஞ்சு அறிவுஜீவிகள் நிறைந்திருந்த மேடையில் பேச்சாளர்கள், விரைவில் பிரதம மந்திரியான வலதுசாரி ஜோன் பியர் ரஃப்ரன், சந்தை ஆதரவு UDF (Union for French Democracy) ஐச் சேர்ந்த Francois Bayrou, சோசலிஸ்ட் கட்சியின் Dominique Strauss-Kahn, பசுமைக் கட்சியினரின் ஜனாதிபதி வேட்பாளரான Noel Marmere, மெய்யியலாளர்களான Alain Finkielkraut, Bernard Henri Levy, Le Monde பத்திரிகையின் பதிப்பாளரான, முன்னாள் LCR உறுப்பினர் Edwy Plenel ஆகியோர் இருந்தனர். LCR -ம் டானியல் பென்சாயிட்டால் பிரதிநித்த்துவப்பட்டிருந்தது.

இவர்கள் அனைவருமே பிரெஞ்சு அரசின் கட்டமைப்பு ஒரு நெருக்கடி நிலையில் உள்ளது என்பதை ஒருமித்து ஒப்புக் கொண்டனர்; இந்த நெருக்கடி எப்படிக் கடக்கப்படலாம், குடியரசின் முதலாளித்துவ வர்க்க அடித்தளங்கள் எப்படிக் காப்பாற்றப்படலாம் என்பது பற்றி விவாதங்கள் நிகழ்ந்தன. அனைவருமே லெவி வற்புறுத்தியபடி, சிராக்கிற்கு, தங்கள் விருப்பத்திற்கு எதிராக என்றில்லாமல், "பெரும் ஆர்வத்துடன்" வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இதைத் தொடர்ந்த நாட்களில் சிராக்கிற்கு ஆதரவாக பரந்த முறையில் மக்களை திரட்டும் பிரச்சாரம் தொடங்கியது. "லு பென் முன்னேறுவதைத் தடுக்க, சிராக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்பதுதான் கோஷமாக இருந்தது. சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், மற்றும் பசுமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் வெள்ளமெனப் புகுந்து சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி நின்றனர். சிராக்கின் சொந்த தேர்தல் சுவரொட்டிகள், சோசலிஸ்ட் கட்சியின் சின்னங்களைக்காட்டும் ஸ்டிக்கர்களுகடன் அலங்கரிக்கப்பட்டு, "நான் சிராக்கிற்கு வாக்களிக்க இருக்கிறேன்" என்ற வார்த்தைகளையும் கொண்டிருந்தது.

"லு பென்னுக்கு எதிராக தெருக்களிலும் வாக்குச்சீட்டுப் பெட்டிகளிலும் போராட்டம் நடத்துவோம்" என்று LCR அழைப்பு விடுத்திருந்தது. இருக்கும் நிலைமையில் இதன் பொருள் சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதாகும். நீண்ட காலம் தாமதித்த பின்னர் Lutte ouvrière எவருக்கும் வாக்களிக்காது தவிர்த்தலுக்கு அழைப்பு விடுத்து முடிவெடுத்தது.

இடதுகள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கையில், சிராக் வலதுசாரி முகாமை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை பயன்படுத்தினார். வலதுசாரியின் பல பிளவுற்ற பிரிவுகளை ஒரு புதிய கட்சியாக ஆக்கும் (Union for a Presidential Majority- UMP), ஜனாதிபதி பெரும்பான்மைக்கான ஐக்கியம் என்பதை கொண்டுவந்து, இரண்டு மாதங்களுக்கு பின்னர் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு தயார் செய்தார். மொத்த வாக்குகளில் 82 சதவிகிதத்திற்கும் மேலாக பெற்று இறுதியில் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; பாராளுமன்றத்தில் UMP மிக அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. ஜோன் பியர் ரஃப்ரன் அரசாங்கத்தின் தலைவராகவும், நிக்கோலா சார்க்கோசி அவருடைய உள்நாட்டு பாதுகாப்பு என்னும் "உயர் மந்திரி" யாகவும் பொறுப்பேற்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் 2002 முழுவதும் உலக சோசலிச வலைத் தளம் தீவிரமாக அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் சக்தியாகத் திரட்டுவது முற்றிலும் நடக்கக் கூடியதே என்பதை தெளிவுபடுத்தியது.

Lutte Ouvriere, LCR, PT க்கு எழுதிய பகிரங்கக் கடிதம் ஒன்றில், இரண்டாம் சுற்று வாக்குப்பதிவை தொழிலாள வர்க்கம் முறையாக புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுத்தோம். அத்தகைய புறக்கணிப்பு தேர்தலுக்கு சட்டரீதியான தன்மையை மறுத்திருக்கும். வாக்களித்த பின்னர் தவிர்க்கமுடியாமல் வரவிருக்கும் அரசியல் போராட்டங்களுக்கு சிறந்த சூழ்நிலையை அது தோற்றுவித்திருக்கும். இன்னும் குறிப்பாக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அரசியல் கல்வியை அளித்தல் என்பது முக்கியமாக இருந்திருக்கும். சிராக் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக வேட்பாளராக உள்ளார் என்று கூறிய பூர்ஷ்வா அரசியல் அமைப்புமுறையின் பொய்களூடாக அவர்களை பார்க்கக்கூடியவராக செய்திருக்கும்.

முதல் சுற்றில் மொத்த வாக்குகளில் 10 சதவிகிதத்திற்கும் மேலாக இணைந்த முறையில் பெற்றிருந்த இந்த மூன்று அமைப்புக்களும் அத்தகைய ஆரம்ப முயற்சியை நிராகரித்தன. Lutte Ouvrière இன் முக்கிய வேட்பாளரான ஆர்லெட் லாகியே ஒரு பேட்டியில் எதுவும் செய்யமுடியாது, "அதிகாரச் சமநிலை" சரியாக இல்லை என்று கூறிவிட்டார். இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு பற்றி எந்த அறிக்கையையும் கொடுப்பதற்கு PT மறுத்துவிட்டது; எங்களுடன் பேசுவதற்கே LCR தயாராக இல்லை.

2003 வசந்தகாலத்து ஓய்வூதிய இயக்கம்

ஆட்சியை கைப்பற்றி ஓராண்டிற்குள்ளேயே, புதிய அரசாங்கம் 1995 ன் மறுபதிப்பு போல் வந்த வெகுஜன இயக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டது. இது நாட்டின் ஓய்வூதிய முறை "சீர்திருத்தப்படுவதற்கு", நலன்களின் 30 சதவிகிதம் வரை வெட்டிற்கு உட்படுவது, மேலும் தேசிய கல்விமுறை மையப்படுத்தலில் இருந்து அகற்றப்படுவதற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பாகும் அரசாங்கத்தின் பிந்தைய நடவடிக்கை தனியார் மயமாக்கும் வகையில் ஒரு நடவடிக்கை என்றும், பிரான்சில் மையப்படுத்தப்பட்ட கல்விமுறையுடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய சமத்துவ மற்றும் ஜனநாயக மதிப்பீடுகள் மீதான தாக்குதலாகவும் கருதப்பட்டது.

பொதுச்சேவை, தனியார் பிரிவுகளில் மில்லியன் கணக்கான மக்கள் எட்டு நாட்கள் நீடித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். கல்வித்துறையில் 12 நாட்கள் நடவடிக்கையில் பல ஆசிரியர்கள் வாரக்கணக்கில் வேலைநிறுத்தம் செய்திருந்தனர்.

ஆனால் 1995ல் நடந்ததற்கு மாறுபட்ட வகையில் இந்தத் தடவை அரசாங்கம் பின்வாங்கவில்லை. இயக்கமோ தொழிற்சங்கங்களால் நெரிக்கப்பட்டு முழுத் தோல்வியில் முடிவடைந்தது.

கூட்டமைப்புக்களிலேயே மிகப் பெரிய அமைப்பான சிதிஞிஜி (சிஷீஸீயீஙபீஙக்ஷீணீtவீஷீஸீ யீக்ஷீணீஸீஃணீவீsமீ பீஙனீஷீநீக்ஷீணீtவீஹீuமீ பீu tக்ஷீணீஸ்ணீவீறீ பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு) எதிர்ப்புக்களை நாச வேலைக்கு உட்படுத்தி மற்ற தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசாங்கத்துடன் சுதந்திரமாக ஒரு பேரத்தை செய்தது. CGT உம் FO வும் வேலைநிறுத்தங்களை சிதறடிக்கும் உத்தியை தொடர்ந்து, தங்களுடைய இலக்கு அரசாங்கத்தை கீழிறக்குவதல்ல என அறிவித்துவிட்டனர்.

இதன் பின்னர் கல்வி மந்திரியான பிரான்சுவா பிய்யோன், தொழிற்சங்கங்களுக்கு பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டி, ஸ்ராலினிச CGT மற்றும் அதன் செயலாளர் பேர்னாட் திபோ க்கும் அவர்களின் "பொறுப்பான அணுகுமுறைக்கு" பாராட்டுத் தெரிவித்தார். "மிக நெருக்கடியான கணங்களில்கூட", CGT "ஒரு பொறுப்புடைய எதிர்ப்பாளராக இருந்துள்ளது". Le Monde கூறிய கருத்தாவது: "தொழிற்துறை மந்திரி Montreuil ஐ தளமாகக் கொண்ட தொழிற்சங்கத்திற்கு நன்றியறிதலுடன் இருக்க வேண்டும்; அதுதான் இயக்கம் கையைமீறிச் சென்று ஒரு பொது இயக்கமாக விரிவடையாமல் செய்தது."

இம்முறை, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு "அதி இடதின்" அடிபணிவானது 1995ஐ விட தீர்மானமானதாக இருந்தது. எவ்விதமான பரந்த அரசியல் முன்னோக்கையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர். அரசாங்கத்துடன் மோதல்களை எப்படியும் தவிர்த்துவிட்ட தொழிற்சங்கங்களை பற்றிச் சிறிதும் விமர்சிக்காமல் LCR ஒரு "பொது வேலை நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தது. Lutte ouvrière ஐ பொறுத்தவரையில், அத்தகைய அழைப்புக் கூட அதிகம் என்று இருந்தது. பொதுவேலைநிறுத்த கோரிக்கையை வெளிப்படையாக நிராகரித்த அது, தன்னைப் பொறுத்தவரையில் வேலைநிறுத்தம் இன்னும் பரவலாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்த அளவில் திருப்தியைக் கொண்டது.

ஐரோப்பிய ஒன்றியமும் 2005 வசந்த கால பொதுவாக்கெடுப்பும்

பிரான்சில் முந்தைய இயக்கங்கள் முற்றிலும் தொழிற்சங்க வடிவமைப்பை கொண்டிருந்தன என்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவு அரசியலமைப்பு தொடர்பான 2005 வசந்த கால பொதுவாக்கெடுப்பு பற்றிய பிரச்சாரம் முதல் தடவையாகப் பரந்த அரசியல் அணிதிரளலைக் கண்ணுற்றது.

ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடந்த கணக்கிலடங்காக் கூட்டங்களில் நூறாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்கள் கலந்து கொண்டனர். தொலைக்காட்சி விவாதங்களில் பார்வையாளர்களாக மில்லியன் கணக்கில் இருந்தனர். ஒரு குறிப்பிடத்தக்க வகையிலான பாராளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தல்களில் தோற்றுவிக்கப்படும் உணர்வுதான் நாடு முழுவதும் பரவி விரிந்திருந்தது. தேவையற்ற சமூக அபிவிருத்திக்கு தங்கள் வாக்குக்கள் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பல மக்களும் நம்பிக்கை பெற்றிருந்தனர்.

மிகப் பரந்த அளவில் அரசியல் அணிதிரளல் குறியிலக்காக ஆகிய அளவில், தீவிர வலதுசாரியினரால் மிகவும் விரும்பப்பட்ட சக்திவாய்ந்த பிரச்சினைகளான, புலம்பெயர்தல், இனவெறி போன்றவை பின்னுக்கு தள்ளப்பட்டு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் முன்னணிக்கு வந்தன. "வேண்டாம்" வாக்கு பிரச்சாரம் அரசியலமைப்பின் புதிய தாராளவாத மற்றும் ஜனநாயகமற்ற தன்மையை மையமாகக் கொண்டிருந்தது. அது "ஐரோப்பாவிற்கு" எதிராக இயக்கப்படவில்லை, மாறாக பெருவணிகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்த வரைவு அரசியலமைப்பின் சமூக விரோத, பிற்போக்கு உள்ளடக்கத்திற்கு எதிராகத்தான் இயக்கப்பட்டது. "வேண்டும்" முகாம், "ஒரு வலுவான பிரான்சிற்கு" அழைப்பு விடுக்கையில், "வேண்டாம்" முகாமின் மிகப் பிரபலமான முழக்கம் "வேறுவிதமான ஐரோப்பாவிற்கு" என்ற வகையில் இருந்தது.

ஜனாதிபதி ஜாக் சிராக், அரசாங்க கட்சிகள், முக்கிய எதிர் கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் "வேண்டும்" வாக்கை அடைவதற்கு அனைத்தும் செய்தாலும், 55 சதவிகிதம் என்ற தெளிவான பெரும்பான்மையினால் அரசியலமைப்பு இறுதியில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இரண்டு முகாம்களுக்கும் இடையே இருந்த பிளவுகள் பொதுவாக நாட்டின் சமூகப் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை ஒத்திருந்தது. நீல ஆடை தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினர், வெள்ளை ஆடை தொழிலாளர்களில் மூன்றில் இரு பகுதியினர் மற்றும் பெரும்பாலான சிறு விவசாயிகளும் "வேண்டாம்" என்று வாக்களித்தனர். மத்தியதர, உயர் வர்க்க உறுப்பினர்கள் பொதுவாக "வேண்டும்" என்ற வாக்கை அளித்தனர்.

சோசலிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் "அதி இடது" என்று அழைக்கப்படுபவை அரசியலமைப்பு நிராகரிக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தன. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவை இவ்வாறு செய்யவில்லை; அவர்களுடைய கிளர்ச்சி "புதிய தாராளவாத கொள்கை" என்று அழைக்கப்படுவதற்கு எதிராக பிரத்தியேகமாக இயக்கப்பட்டிருந்தது. நிலவும் முதலாளித்துவ முறையின் வடிவமைப்பிற்குள் ஒரு மாற்றீட்டுக் கொள்கை இயலும் என்ற பொய்த் தோற்றத்திற்கு அவை ஊக்கம் அளித்தன; கீழிருந்து அழுத்தங்கள் வந்தால் ஆளும் வட்டங்கள், 1970களின் சமூகச் சீர்திருத்தவாதத்திற்கு திரும்பிவிடமுடியும் என்பதை அவை நம்பின.

இப்பிரச்சாரத்தின் நோக்கம், ஒருவேளை வலதுசாரியினர் அதிகாரத்தில் தொற்றிநிற்பதற்கு இயலாமல் போனால், ஒரு முதலாளித்துவ இடது அரசாங்கத்திற்கு திரும்புவதற்கு தயாரித்தல் என்று இருந்தது. பிரச்சாரத்தின்போது பலவித "வேண்டாம்" போக்குகள் ஒன்றாக வந்து பரஸ்பரம் ஒன்றையொன்று விமர்சிக்காமல் நெருக்கமாகச் செயல்பட்டன.

சோசலிஸ்ட் கட்சியின் மிகத் தீவிர வலதுசாரி தலைவர்களில் ஒருவரான Laurent Fabius "வேண்டாம்" முகாமில் சேர்ந்தது பொருத்தமானதேயாகும். தன்னுடைய ஆசானாகிய பிரான்சுவா மித்திரோனின் நூலில் இருந்து ஒரு பக்கத்தை Fabius தெளிவாக எடுத்துக் கொண்டிருந்தார். 1960 களில் தன்னுடைய அரசியல் வாழ்வை போர்க்கால விச்சி ஆட்சியின் கீழ் தொடங்கிய பூர்ஷ்வா அரசியல்வாதியான மித்திரோன், அல்ஜீரிய போரின்போது உள்துறை மந்திரி என்று உயர் நிலையை எய்தினார்; தன்னை ஒரு "இடது" என்று காட்டிக் கொள்ள அவர் பெரிதும் விரும்பினார். ஆளும் வர்க்கம், போர்க்குணமிக்க தொழிலாள வர்க்க இயக்கத்தை அக்காலக்கட்டத்தில் திசைதிருப்பி நடுநிலையில் தள்ளும் வகையில் ஒரு கருவியாக அவர் சோசலிஸ்ட் கட்சியை நிறுவினார்.

சர்வஜனவாக்கெடுப்பு பிரச்சாரத்தின்போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) தொழிலாள வர்க்கத்தை அரசியல் முட்டுச்சந்துக்குள் இட்டுச்சென்றதில் முக்கியமான பாத்திரம் வகித்தது. தன்னை முதலாளித்துவத்தின் "வேண்டாம்" முகாமில் முழுமையாக இணைத்துக்கொண்ட LCR அந்த முகாமின் தனிப்பட்ட கூறுபாடுகளை இணைத்து அனைத்தையும் தழுவிய ஒரு அரசியல் இயக்கமாக ஒன்றுபடுத்த அப்பொழுதில் இருந்து முயன்று வருகிறது.

வாக்கெடுப்பு காலத்தில் LCR இன் வெளியீடுகள் தொழிலாள வர்க்கத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் வேறுபடுத்திக் காட்டவில்லை; "வேண்டும் முகாம்", "வேண்டாம் முகாம்" என்றுதான் பிரித்துக் காட்டியது. அனைத்தையும் பிடிப்போம் என்ற முறையில் கட்டியமைப்பதற்கு இருந்த இதன் முன்மாதிரிகளில் பிரேசிலில் இருந்து தொழிலாளர் கட்சியும் இருந்தது; அங்கு அக்கட்சி அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதி பதவியையும் சர்வதேச நிதிய மூலதனத்தின் திருப்திக்கு ஏற்றவாறு நடத்தி வருகிறது; அதேபோல் இத்தாலியில் முன்னாள் ஐரோப்பிய குழுவின் தலைவரும், அண்மையில் ரோமனோ புரோடியின் அரசாங்கத்தில் சேர்ந்துள்ள கட்சியான Rifondazione Comunista என்பதும் அடங்கும்.

2005 இலையுதிர்காலத்தில் இளைஞரின் எழுச்சிக்கள்

அக்டோபர் 2005 இறுதியில், போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயல்கையில் இறந்த இரண்டு இளைஞர்களின் மரணம் தொழிலாள வர்க்க புறநகர குடியிருப்புக்களில் மூன்று வார காலத்திற்கு எழுச்சிகளை கட்டவிழ்த்தது. பிரான்சில் இருக்கும் சமூக பதட்டங்களின் அளவுகோலை இது தெளிவாகப் புலப்படுத்தியது. இந்த அமைதியின்மை பலநேரமும் அழிவுப்பாதை வடிவமைப்புக்களை எடுத்துக்கொண்டது; இது தொடர்ச்சியாக இருக்கும் வறுமை, இளவயதில் வேலையின்மை, புறநகர்ப்பகுதிகளில் பாரபட்சம் காட்டல் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியின் சட்டம்-ஒழுங்குப் பிரச்சாரத்தில் காணப்படும் இனவெறிக் கருத்துக்கள் ஆகியவற்றிற்கு எதிர்விளைவுகள் ஆகும். பிந்தையவர் எதிர்ப்புத் தெரிவிக்கும் இளைஞர்களை தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டிய "குப்பைகள்" மற்றும் "கழிசடைகள்" என்று இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தார்.

"உத்தியோகபூர்வ இடதுகளும்" (சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி) குட்டி முதலாளித்துவ இடது குழுக்களும் தான் புறநகர்ப்பகுதிகளில் உள்ள ஏற்க முடியாத நிலைமைகளுக்கும் அதையொட்டி எழுந்த அழிவு வகையிலான எழுச்சிக்கும் பொறுப்பு ஏற்கவேண்டும். இந்த வறிய மாவட்டங்கள் பெரும்பாலும் சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் கட்சி மேயர்களால் ஆண்டுக்கணக்கில் ஆளப்பட்டன என்பது மட்டுமின்றி, இக்கட்சிகள் நடைமுறையில் இருக்கும் அரசியல் நிலையை சவால் விட மறுப்பதும்கூட இளைஞர்கள் நோக்குநிலை தவறுவதற்கு பொறுப்பு ஆகும். சீர்திருத்தவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் முன்னோக்கு இல்லாது, தங்களுடைய சீற்றத்தை அர்த்தமற்ற வன்முறையில் வெளிப்படுத்திய இளைஞர்களின் மிக வறிய அடுக்கினரை கைவிட்டுவிட்டனர்.

எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கம் அவசரகால சட்டம் ஒன்றை சுமத்தியது; அதற்கு 1955ம் ஆண்டு அல்ஜீரியப் போர் நடந்த காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அரசாங்கம் ஆதாரமாகக் கொண்டது; இந்தச் சட்டம் பிரான்சிற்குள் இதற்கு முன் பயன்படுத்தப்படவே இல்லை. இந்த நடவடிக்கை தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடம் இருந்து எவ்விதமான எதிர்ப்பையும் அபூர்வமாகத்தான் சந்தித்தது.

குறிப்பாக, லூத் ஊவ்றியேர் (தொழிலாளர் போராட்டம்-LO) இளைஞர்களின் எழுச்சியை இதற்குப் பின் நடந்த அதன் தேசிய கட்சிப் பேராயக்கூட்டத்தில் கண்டித்து, அரசுடனான அதன் அரசியல் நெருக்கத்தை காட்டியது.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களில் கிட்டத்தட்ட 97 சதவிகிதத்தினர் இந்நிகழ்வுகளை சீற்றத்தின் வெளிப்பாடாக, ஆனால் தங்கள் சக குடிமக்களுக்கு எதிராக வெடித்தன என்று கூறிய தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இளைஞர்களுக்கு, போலீசுக்கும் தீயணைக்கும் படைக்கும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை என்று லூத் ஊவ்றியேர் புலம்பியது. இளைஞர்கள் "தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக இயக்கப்பட்ட நடவடிக்கைகளை" பொறுப்பெடுத்தனர்; மற்றும் அவை மக்களுடைய கருத்துக்களை அவர்களுக்கு எதிராக வைத்தது". இக்காரணத்தினால் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதி என்பதைக்கூட லூத் ஊவ்றியேர் ஏற்க மறுத்துவிட்டது. "மார்க்சிச பார்வையில் தொழிலாளர் இயக்கத்தை வேறுபடுத்திக்காட்டும் நனவைக் கூட அவர்கள் பெற்றிருக்கவில்லை என்று அவர்களுடைய நடவடிக்கைகள் காட்டுகிறது."

ஒரு அடிப்படை சமூக வெடிப்பிற்கு இந்த எதிர்விளைவு என்பது இக்குழுசேர்தலின் மனோபாவத்தை பற்றி அதிகமாகவே கூறுகிறது; இதுதான் பல தசாப்தங்களாகவே ஆழமாய் பழமைவாத தொழிற்சங்க சூழலுக்குள்ளே தன்னை பதிய வைத்துக் கொண்டுள்ளதாகும். இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்லர் என்பதில் இருந்து போலீசார் அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு வெளிப்படையான ஆதரவு கொடுப்பது என்பது ஒரு சிறிய அடி எடுத்துவைதலைத்தான் குறிக்கும்.

பிரதிநிதிகளில் மூன்று சதவிகிதத்தினர்தான் இப்பார்வையை எதிர்த்து எழுச்சியின் சமூக வேர்களை அங்கீகரித்த சிறுபான்மை தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இத்தீர்மானத்தின்படி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு இளைய பிரிவு தெருக்களுக்கு வந்தது; தொழிலாள வர்க்கத்தின் தாக்குதல் ஒன்றுதான் அவர்களுக்கு நோக்குநிலையை தந்திருக்க முடியும். ஆனால் இத்தாக்குதல் அரசியல் அளவில் வரையறுக்கப்படவில்லை; முற்றிலும் தொழிற்சங்கச் சொற்களில்தான் முன்வைக்கப்பட்டது.

"முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான இயக்கம்

முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (சிஷீஸீtக்ஷீணீt ஜீக்ஷீமீனீவீகக்ஷீமீ மீனீதீணீuநீலீமீCPE) எதிரான இயக்கம் பிரான்சில் பல அம்சங்களில் கடந்த 10 ஆண்டுகால சமூக அரசியல் வளர்ச்சியின் உச்சக் கட்டமாகும். இந்த இயக்கம் இதற்கு முன்னால் வந்திருந்த இயக்கத்தைவிட இன்னும் கூடுதலான பரந்த, விரிவான வகையில் இருந்ததுடன் பழைய அமைப்புக்களில் இருந்து கூடுதலான வகையில் சுயாதீனமாக இருந்தது.

பள்ளி மாணவர்களும் பல்கலைக் கழக மாணவர்களும் இதன் முக்கிய கூறுபாடுகளாக விளங்கினர்; அவர்கள்தான் ஆர்ப்பாட்டங்களுக்கு முறைகளை வகுத்தனர். பங்கு பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதிற்கும் குறைந்தவர்களாக இருந்தனர். பலரும் சோவியத் ஒன்றியம் 1991ல் பொறிந்த போது பிறந்திருக்கக்கூடவில்லை; 1995-96 வெகுஜன வேலைநிறுத்த இயக்கத்தின் போது மிகச் சிறிய குழந்தைகளாகத்தான் இருந்தனர்.

இந்த மாணவர்களை "சலுகை பெற்ற இளைஞர்கள்", அனைத்தையும் உடைப்பவர்கள், கலகம் செய்பவர்கள், வறிய சமூக அடுக்குகளின் உருவகமாக இருப்பவர்கள் என்று சித்தரித்துக் காட்டும் வகையிலும் விஷம் கக்கிய செய்தி ஊடக வர்ணனைகள் வெளிவந்தன. ஆனால் இவை அனைத்தும் அவதூறேயாகும்.

"உடைப்பவர்களாகிய" ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர்களின் கும்பல்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியது ஒரு புறநிகழ்வு ஆகும்; அரசு ஆத்திரமூட்டாளர்களாக அவர்கள் அப்படி நடந்து கொண்டனர். இன்றைய பல்கலைக்கழக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 1968ல் இருந்ததைவிடக் கூடுதலான பரந்த சமூகத் தட்டுக்களில் இருந்து வருபவர்கள் ஆவர்; அப்பொழுது கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் சதவிகிதம் ஒப்புமையில் குறைவுதான். ஆர்ப்பாட்டங்களில் மிக அதிகமான விகிதத்தில், புலம்பெயர்ந்த மற்றும் தொழிலாளர் குடும்பங்களின் சிறுவர், சிறுமியர் இருந்தது கவனியாதுவிட முடியாதது ஆகும்.

இந்த இயக்கம், ஐரோப்பிய அரசியலின் உத்தியோகபூர்வ மொழியில் பொதுவாக பொதுநல அரசை "சீர்திருத்தம்" "நவீனப்படுத்துதல்" என்று கூறப்படுபவற்றிற்கு எதிராக எவ்வளவு ஆழ்ந்த எதிர்ப்பு உண்டோ அவ்வளவையும் வெளியே கொண்டுவந்தது. CPE பரந்த அளவில் மற்றும் கடுமையாக நிராகரிக்கப்பட்ட ஒரு சமூக நோக்குநிலையை குறியீட்டால் குறித்துக்காட்ட வந்தது.

CPE என்னும் எழுத்துச் சுருக்கம் எல்லையில்லா கற்பனை வகையில் பயன்படுத்தப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் முதல்தடவையாக வெளிப்பட்டு நின்றது. கணக்கிலடங்கா கையால் எழுதப்பட்ட அட்டைகள், "Contrat poubelle embauche" - குப்பைத் தொட்டி ஒப்பந்தம், "Contrat premières emmerdes"- முதல் வாந்தியெடுப்பின் ஒப்பந்தம், "Villepin cherche pigeon à exploiter" வில்ப்பன் சுரண்டுவதற்கு ஒரு புறாவை தேடுகிறார், போன்றவை வெளிவந்தன.

இதில் கூறப்பட்டுள்ள தகவலில் தவறு ஏதுமில்லை. ஐரோப்பிய உயர்தட்டு முழுவதும் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட வேண்டியது, தவிர்க்கமுடியாத தொழிலாள வர்க்கத்தை ஒரேமாதிரியான மக்களாக பெருவணிகம் சுரண்டத்தக்க வகையில் மாற்றப்பட வேண்டும், தொழிலாளர் பரந்த அளவில் உரிமைகள் இன்றி தங்கள் விருப்பத்திற்கு எதிராக வளைந்து கொடுக்க வேண்டும் போன்ற அரசியலின் முழுத் தீர்ப்பையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்துவிட்டனர். அடிக்கடி "précarité" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது; இதற்கு உறுதியற்ற தன்மை அல்லது பாதுகாப்பற்ற நிலைமைகள் என்று பொருளாகும்.

பொதுமக்களிடையே எதிர்ப்புகளுக்கான ஆதரவு மிகப் பெரிய அளவில் இருந்ததை பல கருத்துக் கணிப்புக்கள் உறுதிப்படுத்தின. précarité யினால் பழைய தலைமுறையினர் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் வருங்காலம் பற்றி கவலைப்படுகின்றனர். இதைத்தவிர பல பெற்றோர்கள் 1968ல் நிகழ்ந்த எதிர்ப்புக்களின் போது இளைஞர்களாக தீவிரப் பணியாற்றியிருந்தனர்.

இந்த இயக்கத்தினால் அரசாங்கம் வியப்படைந்தது. "சம வாய்ப்புக்கள் பற்றிய சட்டம்" என்பது பிரதம மந்திரி டு வில்ப்பனால் முந்தைய இலையுதிர்காலத்தில் புறநகர்ப்பகுதிகளில் நிகழ்ந்த எழுச்சிக்கு விளைவு என்னும் முறையில் இயற்றப்பட்டது. ஐரோப்பிய குழு பரிந்துரை செய்துள்ள நடவடிக்கைகளை இது கொண்டுள்ளது; அண்மை நாட்களில் இவை செயல்படுத்தப்பட்டுள்ளன; அதாவது தொழிலாளர்களின் உரிமைகள் தகர்க்கப்படுதல், பணிநீக்கத்தில் இருந்து பாதுகாப்பு இல்லாத நிலை, சில வகைத் தொழில்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் இன்னும் குறைக்கப்படுதல் போன்றவையாகும் அவை.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு சீர்திருத்தக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் ஆதரவை கொடுத்துள்ளன. ஏறத்தாழ இதேபோன்ற சட்டம், Contrat nouvelle embauche (CNE) ன் படி 20க்கும் குறைவானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்துமாறு கடந்த ஆண்டு இயற்றப்பட்டது; இது பற்றியும் தொழிற்சங்கங்கள் எவ்விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.

CPE க்கு எதிரான இயக்கத்தில் தொழிற்சங்கங்கள் பங்கு பெற்றாலும், அவற்றின் நோக்கம் ஆரம்பத்தில் இருந்தே அதன் கழுத்தை நெரிப்பதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும் ஆகும். ஆர்ப்பாட்டங்களில் அவை துணைப் பங்கைத்தான் கொண்டிருந்தன. அதிக பாதிப்பு இல்லாத வகையில் வேலைநிறுத்தங்கள் அமைந்திருந்தன. இவ்விதத்தில் மார்ச் 28ம் தேதி சுரங்க இரயில் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வேலைநிறுத்தம் செய்திருந்தபோதிலும்கூட, பாரிசில் ஆர்ப்பாட்டத்தின் தொடக்க இடத்திற்கு சுரங்க இரயிலில் செல்லுவது எளிதாகத்தான் இருந்தது.

ஒருங்கிணைப்பு குழுவில் மாணவர்களின் பங்கு ஆர்வமுடையதாக இருந்தது. வேலை நிறுத்தம் செய்திருந்த மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 - 450 பிரதிநிதிகள் ஒவ்வொரு வார இறுதியிலும் வெவ்வேறு நகரத்தில் கூடினர். பல மணி நேரம் அவர்கள் விவாதித்தனர்; சில சமயம் இரவு முழுவதும் பேசினர்; "அதி இடதுகள்" என அழைக்கப்படுபவர்கள் உள்பட, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்களுக்கு பொதுவாக மிக இடதில் இருக்கும் தீர்மானங்களை ஏற்றனர். ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொழிற்சங்கங்கள் பால் திரும்பினர் மற்றும் மாணவர்கள் ஆலைகளில் உள்ள தொழிலாளர்களிடம் நேராக செல்லவேண்டுமென அழைப்பு விடுத்தனர்.

ஜனாதிபதி சிராக் மார்ச் மாத இறுதியில் CPE சட்டத்தில் சிறு மாறுதல்கள் கொண்டுவரும் வகையில் தொலைக்காட்சி உரையில் கூறிய பின், மாணவர்களின் ஒருங்கிணைப்புக் குழு அதை திட்டவட்டமாக நிராகரித்தது, "ஊதிய உயர்வு, வேலைப்பாதுகாப்பு" போன்ற அழைப்புக்களும் விரைந்துசெயல்படல், சாலைத்தடைகள், ஆலைகள் மற்றும் அலுவலகங்கள் ஆக்கிரமிப்பு இவற்றின் மூலம் தொழிலாளர்களையும் அவர்களின் வட்டார தொழிற்சங்கங்களையும் ஒன்றாய் வேலைத்தளங்களிலேயே அணிதிரட்டும் நடவடிக்கை நாளுக்கான அழைப்பும் போன்ற தொழிலாளர்களுடைய போராட்டத்தில் அவர்களால் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு கோரிக்கைக்கும்" ஆதரவு தருவதாக அது முடிவு செய்தது. அத்துடன், அது அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்றும் கோரியது.

மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவை மிகவும் உயர்த்திக் காட்டுவதும் தவறாகிவிடும். உத்தியோகபூர்வ மாணவர் அமைப்புக்களான UNEF (ஹிஸீவீஷீஸீ ழிணீtவீஷீஸீணீறீமீ பீமீs ஙtuபீவீணீஸீts பீமீ திக்ஷீணீஸீநீமீதேசிய பிரெஞ்சு மாணவர் சங்கம்) என்பது பல அரசியல் அமைப்புக்கள் மற்றும் அராஜகவாத சக்திகளின் பிரதிநிதிகளையும் கொண்டது; ஆயினும்கூட, மாணவர் ஒருங்கிணப்புக் குழுவின் பணி பழைய அமைப்புக்களின் கட்டுப்பாடு குறைந்துவருகிறது மற்றும் அங்கு ஒரு புதிய அரசியல் நோக்குநிலைக்குத் தீவிரத் தேடுதல் உள்ளது என்பதற்கு ஒரு குறிகாட்டலாகும்.

ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை கட்டியமைத்தல்

எனது உரையின் ஆரம்பத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பிரெஞ்சு சமூக இயக்கங்களின் மையப் படிப்பினையானது, திவாலாகிவிட்ட தொழிற்சங்க, சீர்திருத்தவாத கருவிகளில் இருந்து தொழிலாளர் வர்க்கம் முறித்துக் கொள்ளவேண்டும் என்றும் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

இப்பணி ஒரு தசாப்தத்திற்கு முன் இருந்ததைவிட இன்று மிகக் கூடுதலான, நேரடியான தன்மையில் வெளிவந்துள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்கும் அரசியல் நடைமுறைக்கும் இடையே இடது நிலைப்பாடு என்பது மிகக் குறைவாக இருக்கும் அளவு தொழிற்சங்கங்கள், இடதுசாரி பூர்ஷ்வா கட்சிகள் மற்றும் அவற்றின் குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கின் இணைஉறுப்புக்கள் (LCR, LO போன்றவை) வலதுக்கு நகர்ந்து விட்டன. குட்டி முதலாளித்துவ "இடதுகளின்" சீரழிவு ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. அவர்கள் முதலாளித்துவ ஆட்சிக் கருவியின் ஒரு பாகமாகி விட்டனர்.

இதுவும் ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்குத்தான்.

இத்தாலியில், LCR இன் சகோதர அமைப்பு உட்பட பெரும்பாலான குட்டி முதலாளித்துவ "இடது" அமைப்புக்கள் தங்களை Rifondazione Communista என்பதில் கரைத்துக் கொண்டுவிட்டன; அது ரோமனோ புரோடியின் தேர்தல் கூட்டணியான Unione இன் ஒரு பகுதியாகும்.

இத்தாலிய உதாரணம் "புதிய தாராள வாதத்தை" அவர்கள் நிராகரித்ததின் உண்மை முக்கியத்துவத்தை அம்பலப்படுத்துகிறது. ஐரோப்பிய குழுவின் தலைவராக ஐந்து ஆண்டுகள் இருந்த புரோடி, எந்த அரசியல்வாதியையும்விட, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தாராளவாத கொள்கைப் போக்கின் உருவமாக உள்ளார்; இந்தப்போக்குத்தான் பிரெஞ்சு பொதுவாக்கெடுப்பை உறுதியாக நிராகரித்திருந்தது. Unione இன் முக்கிய அங்கமாக இருப்பது Margherita கட்சியாகும்; இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஜேர்மனிய Free Democrats க்கள் மற்றும் பிரான்சின் UDF (பிரெஞ்சு ஜனநாயத்திற்கான ஒன்றியம்) ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிறது, இவை இரண்டும் சுதந்திர சந்தை முறையை தீவிரமாக ஆதரிப்பவை ஆகும். ஆனால் இது இத்தாலியில் உள்ள குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் புரோடியுடன் கூட்டுச் சேர்ந்து தங்களை முழுமையாக இணைத்துக் கொள்வதை தடை செய்யவில்லை.

ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஒரு பெரும் கூட்டணியை கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளுடன் கொண்டுள்ளது. தொழிற்சங்கங்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன், அனைத்து முந்தைய சமூக நலன்களை அழிக்கும் பணியையும் சமூக ஜனநாயகக் கட்சி எடுத்திருக்கிறது. இந்நிலையில் SPD க்கும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுக்கும் வேறுபாடு காண்பது இலகுவில் சாத்தியமானதல்ல. கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுக்கு சற்றே இடதில் எப்படியும் SPD உள்ளது என்பது தெளிவான அபத்தமாகும். ஜேர்மனியில் "இடது கட்சி" என்பது இதற்கு எதிர்விளைவாக அமைக்கப்பட்டுள்ளது, இப்பொழுது அதில் கிட்டத்தட்ட அனைத்து குட்டி முதலாளித்துவ "இடது" அமைப்புக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இடது கட்சி என்பது, மேற்கில் அதிருப்தி அடைந்த சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் கலவையாகும்; இவர்கள் கிழக்கில் இருந்து பழைய ஸ்ராலினிச அரசுக் கட்சியில் எஞ்சி இருப்பவர்களுடன், அதாவது ஜனநாயக சோசலிச கட்சி (PDS) உடன் சேர்ந்துள்ளனர். இத்தாலியில் Riofondazione இருப்பது போல், ஜேர்மனியில் உள்ள இடது கட்சி ஐயத்திற்கு இடமின்றி முதலாளித்துவ ஒழுங்குமுறையைத்தான் பாதுகாக்கிறது. அது களத்தில் இறங்குவதற்கு முன்னரே அதன் சொந்த பீதி வெளிவரும் வகையில் இது தெளிவாயிற்று. SPD உடன் நான்கு ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் PDS நிறைந்த பேர்லின் மாநிலச் சட்டமன்றம் தேசம் முழுதும் வேலைத் தகர்ப்புக்கள் மற்றும் பொதுத்துறையில் ஊதியக் குறைப்புக்கள், கல்விக்கான செலவினங்களை குறைத்தல் பொது வீடுகள் கட்டுவதை தனியாருக்கு தாரைவார்த்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முன்னோடிப் பங்கை கொண்டுள்ளது.

எங்கு நோக்கினும் ஒன்று தெளிவாகிறது. இத்தகைய இடதின் அனைத்தையும் பற்றுக என்னும் இயக்கங்கள், அதிருப்தி அடைந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், ஸ்ராலினிசத்திற்கு பிறகு வந்தவர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் ஆகியோர் முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கு தக்க விடை கொடுக்க முடியவில்லை. மிக வளர்ச்சி அடைந்த நிலையில் நெருக்கடியை கொண்டுள்ள தற்போதைய அமைப்பை காக்கும் கருவியாக அவை செயல்பட்டுவருகின்றன.

இதற்கிடையில் வலதுசாரி முதலாளித்துவ வட்டாரங்கள் தங்களுடைய சொந்த அரசியல் தயாரிப்புக்களையும் நடத்தி வருகின்றன.

கோலிச UMP க்குள் பிரதம மந்திரி வில்ப்பனுக்கும் உள்துறை மந்திரி சார்க்கோசிக்கும் இடையே இருக்கும் பூசல் இரண்டு பேரவாக்கள் உடைய மனிதர்களிடையே காணப்படும் பூசலைவிடக் கூடுதலான தன்மையை கொண்டதாகும். ஆளும் வர்க்கம் சர்வாதிகார வகையிலான ஆட்சியை வளர்க்க முயல்கிறது. சார்க்கோசி மரபு வகையிலான கோலிச மற்றும் வலதுசாரி ஆட்சிகளின் இயல்பான கூறுபாடுகளை அதாவது சட்டம் ஒழுங்கு என்ற வனப்புரை, புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை, இன, மத தீவிர வெறிக்கு ஊக்கம் கொடுத்தல் போன்றவற்றை இணைத்துள்ளவர் ஆவார்.

ஒரு வலுவான, சர்வாதிகார அரசு தேசியப் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கையுடன், அதேபோல பெருநிறுவனக் கூறுபாடுகளையும் இணைக்கும் ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்காக அவர் வாதிடுகிறார். இதற்கு எதிரிடையாக வில்ப்பன் CPE க்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்களை மதியாது நின்றபோது, சார்கோசி அவற்றையும் சேர்த்துக் கொள்ள முற்பட்டு இறுதியில் வெற்றிபெற்றார். அவருடைய தலைமையில்தான் உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதியில் இயக்கம் முடிவிற்கு வந்தது.

தொழிற்சங்கங்களையும் ஏனைய சமூக அமைப்புக்களையும் அரசுடன் இணைக்கும் முயற்சியில் சார்க்கோசி ஈடுபட்டுள்ளார்; தொழிற்சங்கங்கள் இதை ஆர்வத்துடன் பின்பற்ற தயாராக உள்ளன.

இச்சூழ்நிலையில் நான்காம் அகிலம் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் பொறுப்பு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்திற்கான அடிப்படையையும் ஒரு புதிய புரட்சிகர கட்சியை நிறுவுதலும் ஆகும்.

போர்க்குணம் மற்றும் தெருக்களில் இருந்து அழுத்தம் கொடுப்பது என்பவை அரசாங்கத்தை தந்திரோபாயமுறையில் சலுகைகளை கொடுக்கக் கட்டாயப்படுத்தினாலும், அரசியல் நோக்குநிலை, தலைமை ஆகியவற்றின் அடிப்படைப் பிரச்சினைகள் தன்னியல்பாக தீர்க்கப்பட முடியாதவை ஆகும். இதற்கு முன்னிபந்தனை அரசியல் நனவை உயர்த்தி வளர்ப்பது ஆகும். தொழிலாள வர்க்கம் அதன் நலன்கள் முழு முதலாளித்துவ ஒழுங்குடனும் இயைந்துபோக முடியாது என்பதை கட்டாயம் உணர வேண்டும். தேசிய எல்லைகளுக்கு அப்பால் பார்வை செலுத்த அது கற்றுக் கொள்ளவேண்டும் மற்றும் தன்னுடைய சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும். முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் அதன் முதல்நிலை மற்றும் துணைநிலை முகவாண்மைகளில் இருந்தும் சுயாதீனமான முறையில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் கல்வியளிக்கும் இப்பணிதான் உலக சோசலிச வலைத் தளத்தின் முயற்சிகளின் மையத்தானமாக உள்ளது. பிரான்சில் கடந்த 10 ஆண்டுகளாக எமது பணி --நூற்றுக்கணக்கான கட்டுரைகளாக எமது கட்சி பத்திரிகையிலும், 1998ல் இருந்து WSWS லும் வெளிவந்துள்ளன-- அவை பெரும் அனுபவச் சொத்து, பல்வித அரசியல் பகுப்பாய்வு, மதிப்பீடு இவற்றைப் பிரதிபலிக்கின்றன; இவை அனைத்தும் அரசியல் பணிகளை புரிந்து கொள்ள பெரும் பங்களிப்புச் செய்கின்றன. இந்த அடிப்படையில்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதி பிரான்சில் வளர்க்கப்பட்டாக வேண்டும்.