World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A sign of political crisis: coalition of Sri Lankan parties formed

அரசியல் நெருக்கடியின் அறிகுறி: இலங்கை அரசியல் கட்சிகளின் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

By K. Ratnayake
3 November 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) முதற்தடவையாக கடந்தவாரம் ஒரு கூட்டணிக்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டன. வர்த்தகத் தலைவர்களும் மற்றும் ஊடகங்களும் இந்தப் பெரும் கூட்டணியை "குறிக்கோள்களை நிறைவேற்றும் காலகட்டம்" எனப் புகழ்ந்தன. யதார்த்தத்தில், இது நாட்டின் ஆழமான அரசியல் நெருக்கடியின் இன்னுமொரு அறிகுறியாகும்.

ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. யும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கசப்பான எதிரிகளாக இருந்து வந்ததோடு தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக முன்னர் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தையும் நிராகரித்து வந்துள்ளன. ஆளும் வட்டாரங்கள், இந்தப் புதிய அரசியல் கூட்டு ஏதாவதொரு வழியில் நாட்டில் துரிதமடைந்துவரும் உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டி, வெளிநாட்டு முதலீடுகளை பெருக்குவதற்கான சந்தை மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல வழியமைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறிசேனவும் ஐ.தே.க. தலைவர் மலிக் சமரவிக்கிரமவும் அக்டோபர் 23 அன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டனர். இரண்டு வருடகால உடன்படிக்கையின் கீழ், நான்கு பிரதான விவகாரங்களைத் "தீர்ப்பதில்" அரசாங்கத்திற்கு உதவுவதாக ஐ.தே.க. வாக்குறுதியளித்துள்ளது. "வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் மோதல்கள்", தேர்தல்தொகுதி சீர்திருத்தம், "சிறந்த ஆட்சி" மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவையே இந்த நான்கு விவகாரங்களாகும்.

இன்னமும் இராஜபக்ஷவிற்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் "ஒத்துழைப்பதற்கான கட்டமைப்பு" ஒன்று தீர்மானிக்கப்படவில்லை. விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க. தலைமைத்துவத்தின் ஒரு பகுதியினர் எந்தவொரு அமைச்சரவை பதவிகளையும் ஏற்றுக்கொள்ள தீவிரமாக தயக்கங்காட்டி வருகின்றனர். பொதுமக்களின் வெறுப்புக்குள்ளான கொள்கைகளால் உருவாகியுள்ள தவிர்க்கமுடியாத பகைமைக்கு கட்சி முகங்கொடுக்க வேண்டிவரும் என்பது அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். இந்த நிலையில், ஐ.தே.க. எதிர்க்கட்சி ஆசனங்களிலேயே இருக்கட்டும் என விக்கிரமசிங்க பிரேரித்துள்ளார்.

இரு கட்சியின் தலைவர்களும் ஆபத்து என்ன என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். இராஜபக்ஷ, ஒப்பந்தம் கைத்திடப்பட்ட நிகழ்வில், "இந்த நாடு அரசியல் கட்சிகளுக்கிடையிலான வேறுபாடுகளின் காரணமாக, செங்குத்தான மலையில் இருந்து கிழே விழாமல் காக்க வேண்டும்" என எச்சரிக்கை செய்தார். விக்கிரமசிங்க, பின்னர் நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டின் போது, "மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஒரு நெருக்கடியின்போது எதிர்க் கட்சியும் அரசாங்கமும் சேர்ந்து இயங்குகிறது. எதிர்க்கட்சியானது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது அரியதாகும்.... நாம் எமது நாட்டின் வரலாற்றில் இந்த தீர்க்கமான வளர்ச்சிப்படிக்கு வந்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடிக்கான மையம் என்பது புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தமாகும். இராஜபக்ஷ கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை கைச்சாத்திட்டுக்கொண்டு விக்கிரமசிங்கவை குறுகியளவில் தோற்கடித்தார். அவரது வெற்றியை அடுத்து, இராணுவமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக துரிதமடைந்துவரும் மூடிமறைக்கப்பட்ட படுகொலை யுத்தத்தையும் ஆத்திரமூட்டல்களையும் தொடங்கி வைத்தது. கடந்த ஜூலையில் இராஜபக்ஷ தாக்குதலை நடத்துமாறு இராணுவத்திற்கு கட்டளையிட்டதை அடுத்து பகிரங்கமான யுத்த நடவடிக்கைகள் வெடித்தன.

ஸ்ரீ.ல.சு.க, ஐ.தே.க. யுடன் உடன்படிக்கையொன்றுக்கு செல்வதற்கு முன்னதாக, ஜே.வி.பி. யுடன் ஒரு கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. ஆயினும், அரசாங்கம் 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு புலிகளுக்கு எதிராக மிகவும் வலிந்து தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்தியதை அடுத்து அந்தப் பேச்சுக்கள் தோல்விகண்டன. வெளிப்படையாக யுத்தத்தை பிரகடனம் செய்வதானது அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி இராஜபக்ஷ மிகவும் விழிப்பாக இருந்தார். அவர் உள்நாட்டில் பரந்த யுத்த எதிர்ப்பு உணர்வுகளைத் தணிக்கவும் அதே போல் சர்வதேச ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும் இராணுவத்தின் நடவடிக்கைகளை "தற்காப்புக்காக" என உருமறைத்துக் காட்டுகிறார்.

ஸ்ரீ.ல.சு.க. இப்போது மாறாக 2002ல் யுத்த நிறுத்தத்தை கைச்சாத்திட்டு 2003ல் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐ.தே.க. யின் பக்கம் திரும்பியுள்ளது. ஆயினும், ஸ்ரீ.ல.சு.க.--ஐ.தே.க உடன்படிக்கை சமாதானத்தை நோக்கிய பாதையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இந்த உடன்படிக்கை 2002 யுத்த நிறுத்தத்திற்கு மீண்டும் திரும்புதலை அடிப்படையாகக் கொண்டிராத நிலையில் தொடர்ந்தும் இராணுவத்திற்கு ஒரு சுதந்திரத்தை வழங்குகிறது. 1983ல் யுத்தத்தை தொடங்கியதற்கு பொறுப்பாளியான ஐ.தே.க, தனது எதிரியைப் போலவே சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ளது. அது 2002ல் சமாதானப் பேச்சுக்குத் திரும்பியது உழைக்கும் மக்கள் மீது யுத்தம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பந்தமான கவலையினால் அன்றி, மாறாக இந்த மோதல்கள் முதலீடுகளுக்கு ஒரு தடையாக உருவாகியிருப்பது சம்பந்தமாக வர்த்தகர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியின் பிரதிபலிப்பாகவேயாகும்.

கூட்டுக் கொள்கைகள் சம்பந்தமான விபரங்கள் எதுவும் அறிவிக்கப்பட்டிராத போதிலும், சண்டே லீடர் பத்திரிகை, இரு கட்சிகளாலும் வரையப்பட்ட பல கலந்துரையாடல்கள், ஏடுகளின் உள்ளடக்கத்தை வெளியிட்டிருந்தது. "வடக்கு கிழக்கில் மோதல்கள்" என்ற தலைப்பிலான ஆவனம் பிரகடனம் செய்வதாவது: "அரசானது தேவையானபோது இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது உட்பட, அதன் செயல்முடிவுகளிலான அனைத்து வழிமுறைகளிலும் நாட்டின் இறைமையை காப்பதை எல்லாவற்றுக்கும் மேலான கடமையாகக் கொண்டுள்ளது." அதே சமயம், அது "இனப் பிரச்சினைக்கு" -- வேறு வார்த்தைகளில் சொன்னால், யுத்தத்தைத் தூண்டிய தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களுக்கு-- அரசியல் தீர்வு காணவும் அது அழைப்பு விடுக்கின்றது.

ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடரும் அதே வேளை, இத்தகைய சூத்திரங்கள் அரசாங்கத்திற்கு சமாதானத்தை நிலைநாட்டுவதாக காட்டிக்கொள்ள பயன்படுகின்றன. யுத்தத்திற்கு ஒரு அரசியல் தீர்வை பிரேரிப்பதற்காக இராஜபக்ஷவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு மீண்டும் செல்ல ஐ.தே.க. உடன்பட்டுள்ளது. ஜே.வி.பி. பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இந்த மாநாடு, புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை மூடி மறைக்கும் மூடு துணியே தவிரே வேறொன்றும் அல்ல.

ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க. உடன்படிக்கையானது கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஒரு சுற்று சமாதானப் பேச்சுக்களுக்கு சில நாட்களுக்கு முன்பே கைச்சாத்திடப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்த கொடுக்கல் வாங்கலை, "மோதல்களுக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதன் பேரில் ஒன்றிணைந்து செயற்பட தீவின் இரு பிரதான கட்சிகளும் தீர்மானித்துள்ளதற்கான" அறிகுறி என பாராட்டியது. உண்மையில், வாஷிங்டன் நன்கு விழிப்பாக இருப்பது போல், அரசாங்கம் ஐ.தே.க. யின் ஆதரவுடன் 2002ற்கு முன்பிருந்ததையும் விட விரும்பத் தகாத கோரிக்கைகளை புலிகள் மீது திணிக்கும். ஜெனீவா பேச்சுக்கள் இன்னுமொரு சுற்றுக்கான பிரேரணைகள் எதுவுமின்றி கவிழ்ந்து போனது ஆச்சரியத்திற்குரியதல்ல.

புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த யுத்தத்திற்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் ஜே.வி.பி. யின் அரசியல் குழு, "பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகளின் வீரியத்தைக் குறைக்கக் கூடிய" ஐ.தே.க.யின் பொறி என இந்த புதிய கூட்டணியைக் கண்டனம் செய்துள்ளது. கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்ய ஜே.வி.பி. தீட்டமிட்டிருப்பது அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை அணிதிரட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே ஆகும். புதன் கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா எச்சரித்ததாவது: "அவர் (இராஜபக்ஷ) சரியான வழிக்கு வராவிட்டால், நாம் அவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டு வேறுயாரையாவது பதவியில் இருத்துவோம்."

ஜே.வி.பி, 2004ல் முன்னைய ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்த பின்னர், அதன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் உருவான பரந்த அதிருப்தியால் இழந்த ஆதரவை மீண்டும் கட்டியெழுப்பும் மிக அவநம்பிக்கையான முயற்சியே ஜே.வி.பி.யின் பிரச்சாரமாகும். யுத்தத்திற்கு வெகுஜன ஆதரவு இல்லாத அதே வேளை, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளின் சமூகத் தாக்கத்தால் பெரும்பாலான உழைக்கும் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்துள்ளனர். ஐ.தே.க. 2002 மற்றும் 2004க்கும் இடையில் துரிதமாக அமுல்படுத்திய சந்தை சார்பு மறுசீரமைப்புகள் பரந்தளவில் வெறுக்கப்படுவதை நன்கு தெரிந்துகொண்டே ஜே.வி.பி. தனது தாக்குதலை ஐ.தே.க மீது குவிமையப்படுத்தியுள்ளது.

பொருளாதாரக் கொள்கைகள்

பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க கூட்டுக் கலந்துரையாடல் பத்திரிகைகள் ஒரு தொகை பட்டினி நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன. இவை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஆதாள பாதாளத்தை தவிர்க்க முடியாமல் பெரிதுபடுத்துவனவாகும். இவற்றில் பின்வருவன அடங்கும்:

* வர்த்தக வரிகளுடன் "பிரஜைகளால்" நிதியளிக்கப்படும் "தேசிய சுகாதார நிதியம்" ஒன்று பிரேரிக்கப்பட்டுள்ளது. 1950கள் மற்றும் 1960 களிலும் ஸ்தாபிக்கப்பட்ட இலவச சுகாதார சேவை, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் படிப்படியாக சீவித் தள்ளப்பட்டுள்ளன. ஒரு நிதியமானது தற்போதைய இரு--வர்க்க சுகாதார அமைப்பை மேலும் ஆழமாக்கும்: அவை செல்வந்தர்களுக்கு ஒரு தனியார் துறையை விரிவுபடுத்துவதும் மற்றும் ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு சீரழிந்துகொண்டிருக்கும் பொது சுகாதார அமைப்புமாகும்.

* ஏழைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி சேவை இப்போது "சமூக சந்தை சக்திகளையும்" உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சமுதாயத்தில் மிக மிக வறிய தட்டினருக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கும் மானியங்கள் அதிகளவில் "இலக்குவைக்கப்படும்". செல்வந்தர்கள் சந்தேகத்திற்கிடமின்றி இலாபமடையும் அதே வேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் முழு சமூக செலவுகளையும் வெட்டித்தள்ளுவதற்காகவே அன்றி வறியவர்களுக்கு உதவுவதற்காக அல்ல.

* போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உட்பட பொதுதுறை நிறுவனங்களை மேலும் மறுசீரமைப்புச் செய்து தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்கம் "பங்குதாரர் சமுதாயம் என்ற கொள்கையை" முன்கொண்டுவர உள்ளது. இந்தக் கொள்கையின்படி, "சமுதாயத்தின் ஒவ்வொரு தனி நபரும் இத்தகைய வணிகத்தின் பங்குதாரராக" இருப்பார். தனியார்மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பெருந்தொகையான பங்குகளை வாங்க பணவசதி படைத்தவர்களே இலாபமடைவார்கள். பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய சேவைகளில் அதிக விலை உயர்வை எதிர்கொள்வர்.

* விவசாயத் துறையில், "சந்தைக்காக விவசாயம்" செய்யும் திட்டம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகும். இதில் விவசாய வர்த்தகர்களும் மற்றும் சர்வதேச சந்தைக்காக பயிர்செய்யும் இயலுமை கொண்ட செல்வந்த விவசாயிகளுமே இலாபத்தை சுருட்டிக்கொள்வர். இலங்கை விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு மூலதனமோ நிலமோ கிடையாது. அவர்களுக்கு மூலப் பயிர்களை மிகவும் இலாபகரமான ஏற்றுமதிப் பயிராக்குவது எப்படி என்பதும் தெரியாது.

பெரும் வர்த்தகர்கள் கொழும்பு பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன், ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க. கூட்டு பற்றிய செய்திக்கு உத்வேகத்துடன் பிரதிபலித்தனர். இலங்கை வர்த்தக் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் நவாஸ் ராஜாடீன், கூட்டுத்தாபன கும்பல்களின் எதிர்பார்ப்புக்களை சுருக்கிக் கூறினார். "பக்கச்சார்பு அரசியலும் பிரதான கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியும் ஆட்சிக்கு வந்த தலைவர்களை, பிரசித்திபெறாத ஆயினும் தீர்க்கமான மறுசீரமைப்புக்களை கைவிடத் தள்ளியுள்ளன. அவர்கள் குறுகிய கால விளைவுகளைக் கொண்ட மக்கள்வாத அரசியலில் அகதியாக மட்டுமே இருந்து வந்துள்ளனர்," என அவர் பிரகடனம் செய்தார்.

ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க கூட்டணி அமைக்கப்பட்டமையானது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. பழமைவாத ஐ.தே.க. எப்பொழுதும் பரந்த கூட்டத்தாபன நலன்களுக்காக வெட்கமின்றி வக்காலத்து வாங்கிவரும் அதே வேளை, ஸ்ரீ.ல.சு.க. கடந்த காலங்களில் குறிப்பாக தீவின் கிராமப்புற சிங்களவர்களுக்கு மக்கள்வாத வேண்டுகோள்களை விடுக்க முயற்சித்தது.

ஸ்ரீ.ல.சு.க. 1950களில் சிங்கள இனவாதம், சோசலிச வாய்வீச்சுக்கள் மற்றும் மறுசீரமைப்பு வாக்குறுதிகளின் உள்ளடக்கமாக முன்னணிக்கு வந்தது. இந்தக் கட்சி தேசியப் பொருளாதார ஒழுங்குத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு அதற்கு சோசலிசத்தில் செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அதன் மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்களும் சிங்களப் பேரினவாதமும் கிளர்ச்சியடைந்துவரும் தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்படுத்துவதையும் பிளவுபடுத்துவதையும் இலக்காக்க கொண்டதாகும்.

ஆயினும், ஏனைய நாடுகளைப் போல், உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது கடந்த மூன்று தசாப்த காலங்களாக தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரத்திற்கான எல்லா அடித்தளங்களையும் அழித்துவிட்டது. தமது வேலைத்திட்டத்தை பிரித்தறிய முடியாத நிலையில் ஸ்ரீ.ல.சு.க. சந்தை மறுசீரமைப்பை அமுல்படுத்த ஐ.தே.க.யை பின்பற்றுகிறது. உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் மீதான நீண்டகாலத் தாக்குதல்கள் பரந்த அதிருப்தியையும் ஆத்திரத்தையும் உருவாக்கிவிட்டுள்ளன.

குவிந்துவரும் எதிர்ப்பிற்கு அரசாங்கம் -- ஐ.தே.க. தலைமையிலான அல்லது ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான-- கொடுக்கும் பதில்கள் தொழிலாளர்களை குழப்பி பிளவுபடுத்துவதன் பேரில் தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதாக உள்ளது. இனவாத அரசியலில் தங்கியிருக்கின்றமை முதலாவதாக உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு காரணமாக இருந்ததோடு அது புதுப்பிக்கப்படுவதற்கும் அதுவே வழிவகுத்துள்ளது. யுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் முழுமையாக ஏற்றுவதை விட, இத்தகைய எளிதில் கையாள முடியாத பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் எந்தவொரு தீர்வும் கிடையாது.