World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military bombards refugee camp, killing dozens

இலங்கை இராணுவம் அகதி முகாம் மீது குண்டு வீசியதில் பெருந்தொகையானோர் பலி

By K. Ratnayake
10 November 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவம் நேற்று கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைக்கு அருகில் கதிரவெளியில் உள்ள அகதிகள் முகாம் மீது பொழிந்த ஆட்டிலறிக் குண்டுகளால் அங்கிருந்த பெருந்தொகையான இடம்பெயர்ந்த பொது மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் அடங்குவர். இந்த தமிழ் அகதிகள் கொல்லப்பட்டமை, இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு அது மேற்கொண்ட புதிய கோரச் செயலாகும்.

இந்தத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் 125 பேர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் அறிவித்திருந்தனர். கடும் காயமடைந்த பலர் பின்னர் உயிரிழந்தனர். 17 சிறார்கள் உட்பட சுமார் 70 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆஸ்பத்திரிகளில் உள்ள மருத்துவ உத்தியோகத்தர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலையில் அண்மையில் அமைக்கப்பட்ட இந்த முகாமில் சுமார் 3,000 அகதிகள் தங்கியிருந்ததோடு அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பரில் மூதூர் மற்றும் சம்பூர் மீதான இராணுவத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்தவர்களாகும்.

அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், இராணுவத்தின் நடவடிக்கையை பாதுகாத்தார். "நாம் இந்த சம்பவங்களையிட்டு வருந்தும் அதே வேளை, எமது எண்ணங்களில் தேசிய பாதுகாப்பு உயர்ந்ததாக உள்ளது என்பதையும் நாம் கூற வேண்டும்," என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொது மக்களை "மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்தியதாக புலிகள் மீது குற்றஞ்சாட்டிய இராணுவம் வருத்தம் தெரிவிக்கவில்லை. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், இராணுவம் தனது முகாம் மீது தொடுத்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ராடாரைப் பயன்படுத்தி புலிகளின் மோட்டர் மற்றும் ஆட்டிலறித் தளங்களை அடையாளங்கண்டு தாக்குதல் தொடுத்ததாகத் தெரிவித்தார்.

2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு, இந்த கூற்றுக்கள் எதையும் ஆதரிக்கவில்லை. கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃவ்ஸ்டோடிர், தனது உறுப்பினர்கள் ஸ்தலத்தில் 23 சடலங்களை எண்ணியதாக உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். "அவர்கள் (கண்காணிப்பாளர்கள்) பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்குச் சென்றார்கள். அது கதிரவெளியில் உள்ள ஒரு பாடசாலையாகும். அங்கு அந்தப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் முகாம் ஒன்று உள்ளது. பிரதானமாக உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் மற்றும் முதியவர்களும் அடங்குவர்," என அவர் தெரிவித்தார்.

ஒல்ஃவ்ஸ்டோடிர் இராணுவத்தின் கூற்றுக்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. "அந்த முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இராணுவ நிலைகள் இருந்ததற்கான எந்தவொரு அடையாளத்தையும் காணவில்லை. இந்தப் பிரதேசத்தில் இருந்து புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது. அங்கு அதற்கான அடையாளங்கள் எதுவும் கிடையாது." கண்கண்ட சாட்சிகளின்படி பாடசாலை மீது 40 தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கண்காணிப்புக் குழு "இந்த தாக்குதலின் பண்பு மற்றும் காரணங்கள் பற்றி இராணுவத்திடம் இருந்து பதிலை நிச்சயமாக விரும்புகிறது" என ஒல்ஃவ்ஸ்டோடிர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தையும் மனித உரிமைகளையும் கடுமையாக மீறும் நடவடிக்கை என கண்டனம் செய்த சர்வதேச மன்னிப்புச் சபை, விசாரணை நடத்தவும் கோரியது. "இடம்பெயர்ந்தவர்களின் முகாம் மீது இராணுவம் தாக்குதல் தொடுப்பது திகைக்கச் செய்கிறது --இவர்கள் ஏற்கனவே மோதல்களின் காரணமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்ட பொது மக்கள்," என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் இயக்குனர் பூர்னா சென் தெரிவித்தார்.

சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதில் நெருக்கமாகத் தலையீடு செய்துவரும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெயிம், இந்தத் தாக்குதலைப் பற்றி கவலை தெரிவித்த போதிலும் அதைக் கண்டனம் செய்யவில்லை. "இலங்கையின் கிழக்குப் பகுதியில் வாகரை மீதான அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நான் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் மேற்கொள்வதை கைவிடுவதாக ஒன்றரை கிழமைக்கு முன்னதாக ஜெனீவாவில் கொடுத்த வாக்கை தரப்பினர் மதிக்காததால் நான் மோசமாக அவமதிக்கப்பட்டுள்ளேன்," என அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், ஜெனீவா சமாதானப் பேச்சுக்கள் முழுமையாகத் தோல்வி கண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் ஜூலை பிற்பகுதியில் இருந்து 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடுத்ததோடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து குறிப்பிடத்தக்க பகுதிகளையும் கைப்பற்றியது. அரசாங்கம் பிரதிநிதிகள், தற்போதைய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கிய அடியெடுப்பாக வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான பிரதான நெடுஞ்சாலையை மீண்டும் திறக்குமாறு புலிகள் விடுத்த சிறிய கோரிக்கையையும் நிராகரித்தனர்.

"சமாதான முன்னெடுப்புகளை" மேற்பார்வை செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற சர்வதேச சக்திகள், இராணுவத்தின் தாக்குதல்கள் பற்றியோ அல்லது அதன் அட்டூழியங்கள் பற்றியோ கண்டனங்களைத் தெரிவிக்காததன் மூலம் அரசாங்கம் அதனது நடவடிக்கைகள் உக்கிரப்படுத்த மெளனமாக ஊக்கமளிக்கின்றன. யுத்தத்தின் ஒரு பாகமாக, பாதுகாப்புப் படைகள் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தப் பிராந்தியத்தில் உள்ள முழு ஜனத்தொகையையும் பீதிக்குள்ளாக்கும் திட்டமிட்ட பிரச்சாரமொன்றை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையகத்தின்படி (யூ.என்.எச்.சீ.ஆர்), கதிரவெளி உட்பட வாகரைப் பிரதேசத்தில் சுமார் 11,000 குடும்பங்கள் அல்லது 42,880 பேர் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவிகள் உட்பட அனைத்தையும் தடுத்துள்ளதால் அவர்கள் பயங்கரமான நிலைமையின் கீழ் வாழ்கின்றனர். இந்தப் பிரதேசம் அரசாங்கத்தின் அடுத்தடுத்த விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களுக்கும் புலிகளின் பதில் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றது.

இராணுவமானது மாவிலாறு மற்றும் சம்பூரில் வெற்றி கண்டதை அடுத்து, புலிகளுக்கு எதிரான மேலும் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு நெருக்குகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கதிரவெளியில் தங்கியிருக்கும் அகதிகளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருமாறு அழைத்த போதிலும் சொற்பமானவர்களே அதை செய்தனர். எல்லாவிதத்திலும் பார்த்தால், நேற்றைய தாக்குதலானது பிரதேசத்தின் மீது மேலும் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழி வகுப்பதற்காக மக்களை மிரண்டு ஓடச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கதிரவெளியில் நடந்த கொடூரம் தனியான சம்பவம் அல்ல. ஆகஸ்ட் 14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது விமானப்படை குண்டுவீசியதில் 61 மாணவர்கள் கொல்லப்பட்டதோடு 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்களே என கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெப்பின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்திய போதும், உயிரிழந்தவர்கள் "சிறுவர் போராளிகள்" என்ற பொய்யை அரசாங்கமும் இராணுவமும் தொடர்ந்தும் சொல்லிக்கொண்டிருந்தன.

நவம்பர் 2, புலிகளின் கோட்டையான கிளிநொச்சி மீது விமானப்படை தாக்குதல் தொடுத்தது. சில குண்டுகள் நகரில் உள்ள வைத்தியசாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் விழுந்தன. இதனால் சுமார் 500 நோயாளர்கள் வெளியேறத் தள்ளப்பட்டனர். இந்த விமானத் தாக்குதலில் ஒரு வீடு அழிந்ததோடு அங்கிருந்த ஐந்து பேரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஆஸ்பத்திரியில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புலிகளின் துப்பாக்கித் தளத்தை தமது யுத்த விமானங்கள் இலக்கு வைத்து அழித்துவிட்டதாக இராணுவம் கூறிக்கொண்டது. ஆனால் அந்தக் குண்டுகள் ஆஸ்பத்திரி சீலிங் மற்றும் யன்னல்கள் மற்றும் அருகில் உள்ள வீட்டையும் சேதப்படுத்தியுள்ளதாக கண்காணிப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெனீவா பேச்சுக்களின் பின்னர் ஒரு சில நாட்களுக்குள் கிளிநொச்சி மீது நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதல் குறிப்பாக ஆத்திரமூட்டுவதாகும். யுத்த நிறுத்தத்திற்கு அடிபணிவதாகவும் "தற்காப்பு" நடவடிக்கைகளோடு இராணுவத்தை கட்டுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிக்கொள்வதை கேலிக்கூத்தாக்கியுள்ளது. பாதுகாப்புப் படையினர் குறிப்பாக தமிழ் சிறுபான்மையினரிடம் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க புலிகளுக்கு எதிரான ஒரு இனவாத யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திங்களன்று இராஜபக்ஷ மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிக்க ஒரு குழுவை நியமிப்பதாக அறிவித்தார். இராணுவம் சம்பந்தப்பட்ட அதிகரித்துவரும் பல கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் சம்பந்தமாக வளர்ச்சிகண்டுவந்த வெகுஜன எதிர்ப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களின் மத்தியில் அவர் 15 பேர் அடங்கிய ஒரு குழுவை நியமித்தார். மீண்டும் மீண்டும் சர்வதேச விசாரணைகள் கோரப்பட்ட போதிலும், இராஜபக்ஷ சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு மேற்பார்வையாளர் தரத்தை மட்டுமே வழங்கியுள்ளார்.

இரண்டே நாட்களின் பின்னர் கதிரவெளி அகதி முகாம் மீது நடந்த செல் வீச்சுக்கள், இராணுவத்தை கட்டுப்படுத்தும் எண்ணம் இராஜபக்ஷவிற்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.