World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

As Hussein sentenced to death, US pushes to rehabilitate his functionaries

ஹுசைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கையில், அமெரிக்கா அவருடைய நிர்வாக அதிகாரிகளை பழைய பதவியில் மீண்டும் இருத்த முயலுகிறது

By James Cogan
8 November 2006

Use this version to print | Send this link by email | Email the author

சதாம் ஹுசைன் ஈராக்கிய மக்களுக்கு எதிராக அவருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அமெரிக்கா உருவாக்கிய பாத்திசம் அகற்றல் குழு, ஹுசேன் ஆட்சியின் நடு மட்ட அதிகாரிகள் 28,000 பேர்களை ஈராக்கிய அரச எந்திரத்தில் மீண்டும் பொறுப்புக்களுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்படலாம் என்று பிரேரித்துள்ளது. இக்குழுவின் தலைவரான ஷியைட் அரசியல்வாதி அலி அல்-லமி: "இம்முன்மொழிவுகள் பற்றி அடுத்த சில நாட்களில் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க உள்ளோம்." என செய்தி ஊடகத்திற்கு கூறினார்.

சுன்னி அரேபியர்கள் 75 சதவிகிதத்தினரையாவது கொண்டிருந்த 1.5 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாத் கட்சி 2003 அமெரிக்கப் படையெடுப்பை அடுத்து சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டு, 30,000 உயர்மட்ட பாத்திஸ்ட் அதிகாரிகள் எந்த அரசாங்க வேலையிலும் இருக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்டனர். பாத்திசம் அகற்றல் குழு, அந்த எண்ணிக்கை 1,500 ஆக இருந்தால் போதும் என்று ஒரு வரைவு சட்டத்தை கொண்டு வரவேண்டும் எனக் கூறியுள்ளது.

வாஷிங்டன் செயல்படுத்த உள்ள "போக்கின் திருத்தம்" (Course Correction) என்ற முயற்சியில் இக்கொள்கை முக்கியமான கூறுபாடு ஆகும்: தற்போதைய பிரதம மந்திரி நெளரி அல்-மாலிகியின் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தில் மேலாதிக்கத்தில் இருக்கும் ஷியைட் அடிப்படை வாதிகளின் இழப்பில், பெரும்பாலும் சுன்னி கிளர்ச்சியெழுச்சியை குறைக்கும் வகையில் சுன்னி உயர்மட்ட பிரிவினருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுவது. இச்சட்டம் பாத்திச அரசின் அன்றாட நடவடிக்கைகளை இயக்கி வந்த பலருக்கும் புது வாழ்வை அளிக்கும்.

புஷ்ஷின் உடனடி உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக ஹுசைனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில், வெள்ளை மாளிகை அவருடைய சர்வாதிகார ஆட்சி தளமாகக் கொண்டிருந்த அதே அதிகாரிகளை மீண்டும் பதவிகளில் இருத்துவதற்கு முயல்கிறது. ஈராக்கில் ஹுசைன் ஆட்சியை நடத்தியபோது, எதிர்ப்புக்களை வன்முறையில் அடக்க கையாண்ட முறையைப் போன்றே அமெரிக்காவும் இப்பொழுது செய்ய முயலுகிறது.

முன்னாள் பாத்திஸ்டுகள் மற்றும் சுன்னி உயரடுக்கினர் பால் இத்தகைய தந்திரோபாய நகர்தல் என்பது அக்டோபர் 24ம் தேதியன்று அமெரிக்கத் தூதர் Zalmay Khalilzad மற்றும் தளபதி ஜோர்ஜ் கேசி இருவராலும் கோடிட்டுக் காட்டப்பட்டு, புஷ்ஷினாலேயே சில நாட்களுக்கு பின்னர் விரிவாக ஒரு செய்தி ஊடகத்தில் விளக்கவும் பட்டது. பாத்திச அதிகாரிகளை புனர்நிர்மாணம் செய்வதுடன், அமெரிக்கா, அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக கொரில்லாப் போரில் ஈடுபட்டுவரும் சுன்னி எழுச்சியாளர்களின் குறிப்பிடத்தக்க கூறுபாடுகளுக்கு ஒரு பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் உள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி டேவிட் சாட்டர்பீல்ட், கடந்த மாதம் சுன்னி எழுச்சித் தலைவர்கள் சிலருடன் கலந்துரையாடல்களை நடத்துவதில் புஷ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அக்டோபர் 26 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்: "நாம் கூறியபடி, கிளர்ச்சியெழுச்சியின் சார்பாகப் பேசுகிறோம் எனப்படுபவர், கிளர்ச்சியெழுச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியெழுச்சியில் தொடர்பு உடையவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளோம். உண்மையில் வன்முறைக்கு நம்பக்கூடிய வகையில் முடிவுகட்டும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளதா இல்லையா என்பதை பார்க்கும் நோக்கத்துடன் நாங்கள் இவ்வகையில் தொடர்பு கொண்டுள்ளோம்; அவர்கள் உண்மையில் வன்முறையை கைவிட்டு, அரசியல் வழிவகைகளை மேற்கொள்ள விருப்பத்தை கொண்டுள்ளனரா, தயாராக உள்ளனரா என்பதை அறிய முயற்சிக்கிறோம்."

பாத்திசம் அகற்றல் என்பதை திரும்பப்பெறுவது இந்த ஒப்பந்தத்தில் முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாகும். போர் நிறுத்தத்திற்கு இணங்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்க ஆக்கிரமிப்பு, அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவும் சலுகைகள் சிலவற்றைக்கொடுக்கவும் தயாராக உள்ளது. சுன்னி அமைப்புக்களில் மிகப் பெரியவற்றுள் ஒன்றான ஈராக்கி இஸ்லாமிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்மர் வாஹிஹ் இந்த திங்கள் அறிவிப்பை பாராட்டி, "நாட்டை உறுதிப்படுத்தும் பாதையில் இயக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே பாலங்களை திறக்கும்" என்று கூறியுள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் புஷ் நிர்வாகம், சுன்னி பாத்திச மேலாதிக்க அமைப்புமுறையுடன் கொண்டுள்ள போக்கில் பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆக்கிரமிப்பின் முதல் வாரங்களில் மிருகத்தனமான தாக்குதல்கள் இருந்தன. இராணுவம் கலைக்கப்பட்டு 30,000 அதிகாரிகள் மற்றும் கர்னல் தகுதியில் இருந்த உயர்மட்ட அதிகாரத் தொகுப்பு அனைத்தும் கலைக்கப்பட்டதுடன் அவர்கள் புதிய அரசாங்கத்தில் எந்த பதவியையும் வகிக்கக்கூடாது என்றும் தடை செய்யப்பட்டது.

"பாத்திஸ்ட்டுகளில் எஞ்சியவர்கள்", மற்றும் அல் கொய்தாவினர் அத்தோடு "வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்" விளைவிப்பதுதான் எழுச்சியாகும் என்று அதை புஷ் கண்டனத்திற்கு உட்படுத்தியிருந்தார். முன்னாள் பாத்திஸ்ட்டுகள் ஆயிரக்கணக்கில் சிறைபிடிக்கப்பட்டு பல துன்பங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் அபு கிரைப் சிறைச்சாலையில் உட்படுத்தப்பட்டனர். ஈராக்கிய மக்களை அடிபணிய வைப்பதற்கு "அதிர்ச்சியும்-பெருவியப்பும்" என்பதைத்தவிர வேறு எந்த திட்டத்தையும் அமெரிக்கர்கள் கொண்டிருக்கவில்லை.

பாத்திஸ்ட் அரசாங்கத்தை தகர்த்து, அதற்கு பதிலாக குறுங்குழு வாத ஷிடையட், குர்டிஷ் கட்சிகளில் ஆட்சியை கைப்பாவை அரசாக நியமித்த முயற்சி ஒரு இராணுவ, அரசியல் பேரழிவை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்பிற்கு எதிரான சுன்னி மற்றும் ஷியைட் எதிராளிகள் இருவராலும் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக சூழ்ந்துகொள்ளப்பட்ட கிளர்ச்சி எழுச்சிபோல், இது தவிர்க்க முடியாமல் குறுங்குழு வாத படுகொலைகளுக்கும் வழிவகுத்தது.

இந்த வன்முறை அதிகரித்த வகையில் பெப்ருவரி 22, 2006ல் ஷியைட் அல்-அஸ்காரியா மசூதி தகர்க்கப்பட்ட பின்னர் உள்நாட்டுப் போருக்கு வகை செய்தது. ஷியைட் குடிப்படைவீரர்கள் சுன்னிக்களுக்கு எதிராக இனக் கொலைகளில் ஈடுபட்டனர். பல்லாயிரக் கணக்கான சுன்னிகளும், ஷியைட்டுக்களும் பழிவாங்கும் கொலைவெறிச் செயல்களில் படுகொலையாயினர்; நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது.

இந்த விபரீத நிகழ்வுகள் புஷ் நிர்வாகத்தின் கூற்றான ஜனநாயகத்தை ஈராக்கிற்கு கொண்டுவந்துவிட்டோம் என்பதை தகர்த்ததுடன், நாட்டின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுதல், நீண்ட கால இராணுவத் தளங்களை அமைத்தல் போன்ற திட்டங்களையும் தகர்த்தது. இதற்கு மாறாக பொருளாதாரம் இப்பொழுது முழு அளவில் அழிவில் இருக்கிறது; பாக்தாத் மற்றும் மத்திய ஈராக்கில் குறுகிய இனப்பற்று வாய்ந்த படுகொலைகள் சீற்றத்துடன் நிகழ்கின்றன; பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள், சுன்னி அரேபிய கொரில்லாக்களுடனான போரில் கட்டுண்டு கிடக்கின்றன. அமெரிக்கா தோற்றுவித்த ஈராக்கிய இராணுவம் மற்றும் போலீஸ் படைகளில் பெரும்பகுதி ஷியைட் மற்றும் குர்து அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு என்று உள்ளனவே அன்றி, ஈராக்கிய அரசாங்கத்திற்கு என்று இல்லை.

அமெரிக்க நிறுவனத்திற்குள்ளே, குடியரசுக்கட்சியின் அதிகாரத்தரகர் மூன்றாம் ஜேம்ஸ் பேக்கரால் தலைமை தாங்கப்பட்ட, இரு கட்சிகளும் பங்கு கொண்ட, ஈராக் ஆய்வுக் குழுவினால் "மாற்றுப் பாதைக்கு" விடுத்த அழைப்பின் மையத்தில் இருக்கும் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளினால்தான் இப்படிப்பட்ட பேரழிவுகர நிலை ஏற்பட்டது.

ஹுசன் ஆட்சியில் இருந்து அடிப்படையில் அதிகம் வேறுபாடு கொண்டிராத, பாக்தாத்தில் சர்வாதிகார ஆட்சியை மீண்டும் நிறுவுவதின் மூலம்தான் அமெரிக்க நலன்கள் சிறந்த முறையில் காக்கப்படும் என்ற ஒருமித்த கருத்து இப்பொழுது உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக புஷ் நிர்வாகம் மாலிகி அரசாங்கத்திற்கு பதிலாக ஒரு "தேசிய மீட்பு" இராணுவக் குழுவின் ஆட்சியை நிறுவத் திட்டமிட்டுள்ளது என்று தொடர்ச்சியான செய்திக் கசிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

1990-91ல் நடைபெற்ற வளைகுடா போருக்குப் பின்னர் புஷ்ஷின் தந்தையார் மேற்கொண்ட முடிவுகளை ஒத்துத்தான் தற்போதைய புஷ் நிர்வாகத்தின் கருத்துக்களும் வந்துவிட்டன. அப்பொழுது ஜனாதிபதி மூத்த புஷ் ஈராக்கிலும் மத்திய கிழக்கிலும் இருக்கும் சிக்கல் வாய்ந்த ஜனநாயக, தேசிய, சமூக விரோதங்களை அடக்குவதற்கு சிறந்த கருவியாக ஹுசைனின் போலீஸ் அரசை அப்படியே விட்டுவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார். தற்போதைய கொள்கையும் ஹுசைன் இல்லாமல் அத்தகைய ஆட்சியை அதே காரணங்களுக்காக மீழ்கட்டமைப்பு செய்வதாகத்தான் இருக்கிறது.

இதன் இன்றியமையாத ஒரு பக்க விளைவு, மாலிகி அரசாங்கத்தின் முக்கிய ஷியைட் கட்சிகளால் பராமரிக்கப்பட்டுள்ள குடிப்படைகளுக்கு எதிராக மிருகத்தனமாக அடக்கு முறையை கையாள்வது என்பதாகும்; குறிப்பாக மதகுரு மொக்தாதா அல் சதர் தலைமையில் இருக்கும் ஷியைட் மஹ்தி இராணுவ குடிப்படைக்குழு, சற்று குறைந்த வகையில் ஈரானிய தொடர்புடைய SCIRI எனப்படும் ஈராக்கில் இஸ்லாமியப் புரட்சிக்கான தலைமைக் குழு எனப்படும் பதர் பிரிகேட் குடிப்படை குழுவும் நசுக்கப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஷியைட் குடிப்படைகளை அழித்தல் என்பதற்கு, வாஷிங்டன் இரு முக்கிய உந்ததுல் கருத்துப்பாடுகளை கொண்டுள்ளது.

முதலாவதாக, முக்கிய பாத்திஸ்ட்டுக்கள் மீண்டும் திரும்பிவருவது என்பது பாத்திச அரசாங்கத்தின் குருதி தோய்ந்த அடக்குமுறையால் பல தசாப்தங்கள் துன்புற்ற ஷியைட் மக்களால் கடுமையாக எதிர்க்கப்படும். பாக்தாத்தின் பெரும் ஷியைட் தொழிலாள வர்க்க புறநகர்ப்பகுதிகளில் உள்ள மஹ்தி குடிப்படை குழுவை குறிப்பாக நசுக்க வேண்டும் என்ற கோரிக்கையானது இந்த மாற்றத்திற்கு எந்தவித மக்கள் எதிர்ப்பும் வருவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, ஈரானில் "ஆட்சி மாற்றத்தையும்" தன்னுடைய செயற்பட்டியலில் புஷ் நிர்வாகம் கொண்டுள்ளது. ஈரானுடன் எந்த மோதல் ஏற்பட்டாலும், 1980-88 காலத்தில் ஈரானுக்கு எதிரான கடுமையான போரில் ஈடுபட்ட பாத்திஸ்ட்டுகள், தெஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள பல ஷியைட் கட்சிக்காரர்களை விட கூடுதலான நம்பிக்கைக்கு உரிய ஆதரவாளர்களாக இருப்பர் என்ற கருத்து உள்ளது.

ஈராக்கில் "பாதை மாற்றத்திற்கு" முன்வைக்கப்பட்டுள்ள நயமற்ற வாதங்களில் சில 2003 படையெடுப்பிற்கு தீவிரமாக வாதிட்ட, புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம் என்ற குழுவின் உறுப்பினரான ரால்ப் பீட்டர்ஸிடம் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 26ம் தேதி "இப்பொழுதே மொக்தாதாவை கொன்றிடுக" என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரையை நியூ யோர்க் போஸ்ட்டிற்காக எழுதியுள்ளார்; அதில் அவர் அறிவிப்பதாவது:

"முதலாவதாக நாம் செய்ய வேண்டியது ஓசாமா பின் லேடனையும் விட எமது மூலோபாய இலக்குகளுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் மொக்தாதா அல்-சதாரைக் கொன்றுவிட வேண்டும் என்பதுதான்... அவரை கைப்பற்றக் கூடாது; மொக்தாதாவை கொன்றுவிட வேண்டும்; பின்னர் அதற்கு பழிதீர்க்க தெருக்களுக்கு வரும் ஒவ்வொரு துப்பாக்கி ஏந்தியவனையும் கொல்லவேண்டும்... இதற்கு "என்னைவிட நீ தூய்மையா" என்று விடையிறுப்பு எதிர்பார்க்க கூடியதே. அதாவது "இந்த நிலைமையில் இருந்து தப்பிக்கும் நமது வழியை நாம் சிதைத்துவிட முடியாது!" எனப் புலம்பி அழுவர். இதைச் சிறிதும் சட்டை செய்யக் கூடாது. நட்பு முறையில் உரைத்தது, பில்லியன்கணக்கான டாலர்களை செலவழித்தது அனைத்தும் வேலையை முடிக்கமுடியவில்லை. வன்முறை என்ற மருந்தை கையாள ஒரு வாய்ப்பு கொடுங்கள்."

அல் சதரை கொல்ல அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி பீட்டர்ஸ் மற்றொரு கட்டுரையில் கூறியிருப்பதாவது: "வரவிருக்கும் மாதங்களில் ஒழுங்கை மீண்டும் நிறைநிறுத்த ஒரே நம்பிக்கை இராணுவ ஆட்சி ஒன்றை அங்கு அமைப்பதுதான். மனத்திற்கு உவப்பு கொடுக்காமல் இக்கருத்து இருக்கலாம்; ஆனால் அமெரிக்க ஆதரவுடன் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றுதான் முடிவிலா ஒழுங்கின்மைக்கு முடிவு கட்டக்கூடிய ஒரே மாற்றீடாகும். ஜனநாயக முறையில் அரேபியர்கள் தங்களை ஆட்சி செய்துகொள்ள முடியாதவர்கள். எமது ஈராக்கிய பரிசோதனையின் கொடூரமான படிப்பினை அதுதான். ஒரு இராணுவ ஆட்சிதான் ஒழுங்கை நிலைநிறுத்தி சாதாரண மக்களை பாதுகாக்க முடியும்."

இவ்விதத்தில் பாத்திசம்-அகற்றலை திரும்பப்பெறும் முடிவு, ஷியைட் கட்சிகள் ஒரு புதிய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு தயாராக உள்ளனர் என்று புஷ் நிர்வாகத்தை நம்ப வைப்பதற்கு ஆற்றொணா முயற்சியில் அவரது முந்தைய ஆட்சேபனைகளை பிரதம மந்திரி மாலிகி கைவிட்டுவிட்டார் என்பதின் அடையாளமாகும். இதையொட்டி புதிய ஒப்பந்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான இளைய ஷியைட் குடிப்படையினர் பலிகடாக்களாகக் கூடும்.

இந்த அறிவிப்பு ஹுசைன் தீர்ப்பில் இருக்கும் முழுப் பாசாங்குத்தனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய ஆட்சிக்கு விரோதமாக இருந்த 148 ஷியைட்டுக்களை 1982ல் அவர் படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது; அதேவேளை வாஷிங்டன், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக இருக்கும் ஷியைட்டுக்களை படுகொலை செய்வதற்கு, தன்னுடைய கைப்பாவை அரசாங்கத்தில் ஆயிரக்கணக்கான பாத்திஸ்ட் அதிகாரிகளை இணைக்கும் சதியை மேற்கொண்டுள்ளது.

See Also:

சதாம் ஹுசைன் மீதான தீர்ப்பு: அமெரிக்க அரசியல் வாதிகள், செய்தி ஊடகம் தூக்கு மேடை மற்றும் தூக்குக் கயிற்றை பாராட்டுகின்றன

சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை: நீதியின் கேலிக்கூத்து