World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP demands full investigation into murder of Sivapragasam Mariyadas

இலங்கை சோ.ச.க. சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை பற்றி முழு விசாரணையை கோருகிறது

Statement of the Socialist Equality Party
5 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) உலக சோசலிச வலைத் தளமும், சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஆகஸ்ட் 7 அன்று படுகொலை செய்யப்பட்டமையை கண்டனம் செய்கின்றன. இந்தப் படுகொலை பற்றிய ஒரு முழு விசாரணையையும் மற்றும் இந்தக் குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் கோரும் எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு நாம் எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.

இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், கொலையாளிகள் இலங்கை இராணுவம், பொலிஸ் அல்லது இவற்றோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களே என்பதை சுட்டிக்காட்டுவதோடு, மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டமையானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையின் வடகிழக்கில் வாழும் வெகுஜனங்களை அச்சுறுத்தி பயமுறுத்துவதன் பேரில் நடத்தப்படும் நச்சுத்தனமான பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும். இந்தப் பிரச்சாரத்தின் குறிக்கோள், யுத்தத்தை நனவுடன் எதிர்ப்பவர்களை மெளனமாக்குவதாகும்.

32 வயதான மரியதாஸ் புகைப்படவியலை தனது தொழிலாக கொண்டிருந்ததோடு திருகோணமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தான என்ற கிராமப்புற நகரில் ஒரு ஸ்டூடியோவையும் தொலைத்தொடர்பு நிலையத்தையும் நடத்தி வந்தார். அன்றாடம் வேலைக்காக பயணிப்பது சிரமமாகையால், அவர் கொல்லப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர்தான் தனது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி மரியதாசையும் தனது மூன்று வயது மகனையும் அழைத்துக்கொண்டு நகரில் சென்று குடியேறியிருந்தார்.

மரியதாஸ் ஆகஸ்ட் 7 இரவு 7.45 மணிக்கு வீடு திரும்பினார். சுமார் இரவு 9.30 மணியளவில், இரவு சாப்பாட்டை முடித்தவுடன், யாரோ ஒருவர் "மரியதாஸ் அண்ணா" என கூப்பிடுவதை கேட்டவுடன் கதவுக்கருகில் சென்றார். அவர் கதவை அண்டியவுடனேயே துப்பாக்கிதாரி அவரை நெற்றியிலும் கழுத்திலும் சுட்டான். அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

சூட்டுச் சத்தத்தை கேட்டவுடன் சமயலறையில் இருந்து விரைந்த அவரது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி, மரியதாஸ் நிலத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார். கட்டை கால்சட்டையும் டீ சேர்ட்டும் மற்றும் ஹெல்மட்டும் அணிந்திருந்த கொலையாளி கேட்டை நோக்கி ஓடுவதை அவர் கண்டார். மதில் மேல் ஏறிக் குதித்த கொலையாளி காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான்.

கிருஷாந்தி உதவி கேட்டு சத்தமிடுவதை கேட்ட அயலவர்கள் இரு ஊர்காவற்படையினருடன் வீட்டுக்கு வந்தனர். அரை மணித்தியாலத்தின் பின்னர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் இருந்தும் அலுவலர்கள் வந்துசேர்ந்தனர். கிருஷாந்தியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட அவர்கள், மரியதாசின் உடலை 10 கிலோமீட்டர்கள் தெற்காக உள்ள கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் நீதவான் விசாரணை நடந்ததோடு வழமையான ஒரு தீர்ப்பும் வெளியிடப்பட்டது: அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் செய்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். பூர்வாங்க விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்தப் படுகொலை நடந்துள்ள சூழ்நிலையானது ஒரு படுகொலை, பாதுகாப்புப் படையினர் அல்லது துணைப்படை குண்டர்களால் திறம்பட குறிவைத்து செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இந்த பிரதேசம் முற்றிலும் யுத்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ளதோடு துருப்புக்கள், பொலிஸ் மற்றும் ஊர்காவற் படையினரின் கண்காணிப்பில் உள்ள பிரதேசமாகும். இரவில் பயணிக்கும் எவரும் வழமை போலவே வீதித் தடைகளில் சோதனைக்குட்படுத்தப்படுவர்.

இந்தக் கொலை, முல்லிப்பொத்தானயில் இருந்து கிழக்காக 50 கிலோமீட்டர்களில் உள்ள மூதூர் பிரதேசத்தில் நடந்த கடுமையான மோதல்களை அடுத்து உடனடியாக நடந்துள்ளது. ஜூலை 26ம் திகதியே ஜனாதிபதி இராஜபக்ஷ எதிரிகளின் பிராந்தியத்தில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தை மீறி ஒரு பெரும் தாக்குதலை முன்னெடுத்தார். ஆகஸ்ட் 1, தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்து மூதூர் நகருக்குள் நுழைந்ததன் மூலம் பதில் தாக்குதலை தொடுத்ததோடு, இராணுவத்தின் விநியோகப் பாதையையும் துண்டிக்க அச்சுறுத்தினர்.

இராணுவம் ஆட்டிலறி மற்றும் ரொக்கட் குண்டுகளை நகரின் மீது தொடர்ச்சியாக பொழிந்து இறுதியாக மீண்டும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதை அடுத்து, பத்தாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள், மிகப் பெரும்பாலும் முஸ்லிம்கள், இருப்பிடத்தில் இருந்து வெளியேறினர். மூதூர் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் பாடசாலையில் இருந்து ஒரு சில மீட்டர் தூரத்திலேயே மரியதாசின் வீடும் உள்ளது. முல்லிப்பொத்தான எங்கும் துருப்புக்கள் நிற்பதோடு திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதியிலும் ரோந்து சென்றுகொண்டிருக்கின்றனர். கனமாக ஆயுதபாணிகளாக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் பாடசாலையிலும் நிலைகொண்டிருந்தனர்.

ஆகஸ்ட் 5, மரியதாஸ் படுகொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர், பிரான்சை தளமாகக் கொண்ட அக்ஷன் பாம் அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 உள்ளூர் தொண்டர்கள் மூதூரில் கொல்லப்பட்டிருந்தனர். 15 சடலங்கள் இந்த நிறுவனத்தின் வளாகத்தல் வரிசையாக கிடந்தன. இவர்கள் மரணதன்டனை பாணியில் தலையில் சுடப்பட்டிருந்தனர். தப்பி ஓட முயற்சித்த ஏனைய இருவர் பின்புறம் சூடப்பட்டுக் கிடந்தனர். யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கும் இலங்கை கண்காணிப்புக் குழு தனது சொந்த விசாரணைகளின் பின்னர், ஆகஸ்ட் 30 அன்று இந்தக் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

கடந்த நவம்பரில் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடந்த பல அவலங்களில் ஒன்றான மூதூர் படுகொலைகள், யுத்தத்தின் இனவாத பண்பை கோடிட்டுக் காட்டுகின்றன. சிங்கள பேரினவாதத்தில் தோய்ந்து போயுள்ள பாதுகாப்பு படைகள் தமிழ் சிறுபான்மையினரை எதிரிகளாக நடத்துகின்றன. சிங்கள தீவிரவாத கட்சிகள், வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை "புலி ஆதரவாளர்கள்" என மீண்டும் மீண்டும் கண்டனம் செய்துவந்துள்ளன.

இரு நாட்களின் பின்னர், இந்த நச்சுத்தனமான அரசியல் காலநிலையின் மத்தியிலேயே மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலைக்கு அருகில் அவரது ஊரான செல்வநாயகபுரத்தில் ஆகஸ்ட் 9 அவரது இறுதிக் கிரியைகள் நடந்தபோது, அந்தப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்நு சென்ற பாதுகாப்புப் படையினர் மக்களை அங்கு செல்லாமல் தடுக்க முயற்சித்தனர். இறுதிக்கிரியைக்காக வந்த சிங்களவர்களிடம் படையினர் கூறியதாவது: "புலி உறுப்பினரின் இறுதிக் கிரியையில் எதற்காக பங்குபற்றுகிறீர்கள்? நீங்கள் அங்கு போகலாம், ஆனால் நீங்கள் அங்கிருந்து திரும்பி போவதையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்."

முல்லிப்பொத்தானயில் உள்ள சிப்பாய்களும் இதே பொய்யை பரப்பிவிட்டனர்: மரியதாஸ் ஒரு புலி உறுப்பினர், அவருக்கு இறுதிக் கிரியைக்கு புலிகள் பதக்கம் கொடுத்துள்ளனர் என அவர்கள் கூறத்திருந்தனர். இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் முயற்சிகள் இருந்த போதிலும், கிட்டத்தட்ட 500 தமிழ் சிங்கள மக்கள் அதில் கலந்துகொண்டு தமது மரியாதையை செலுத்தினர். ஏனையவர்களுக்கு உதவுவதிலும் சமூக நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதிலும் பேர் போன மரியதாஸ் ஒரு பிரசித்திபெற்ற இளைஞராவார்.

மரியதாஸ் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. அவர் சோ.ச.க. யின் அரசியல் நடவடிக்கையில் பகிரங்கமாக பங்குகொள்ளாவிட்டாலும், அவர் புலிகளின் பிரிவினைவாத முன்நோக்குக்கு அன்றி, கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்துடனேயே உடன்பாடுகொண்டிருந்தார். யுத்தம் 1983ல் தொடங்கியதில் இருந்தே அதை எதிர்த்துவருவதிலும் மற்றும் ஸ்ரீலங்கா--ஈழம் சோசலிசக் குடியரசிற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதிலும், சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் நீண்டகால போராட்டத்தை மரியதாஸ் பெரிதும் மதித்தார்.

மரியதாஸ் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சோ.ச.க. உடன் தொடர்புகொண்டார். அவர் தொடர்ந்தும் உலக சோசலிச வலைத் தள தமிழ் கட்டுரைகளை வாசித்ததோடு தன்னால் முடிந்த சகல சந்தர்ப்பங்களிலும் அதன் நிருபர்களுக்கு உதவினார். அவரும் அவரது குடும்பத்தாரும் எமது நிருபர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கியுள்ளனர். அவர்களது நிர்ணயம் ஆபத்தானதாக இருந்தால், தானும் அவர்களோடு சேர்ந்து வரவேண்டும் என அவர் வலியுறுத்துவார். அவரது பரந்த எண்ணிக்கையிலான நண்பர்கள் மற்றும் தொடர்கள் மூலம் அவரால் எப்பொழுதும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் மற்றும் பேட்டிகளை ஒழுங்குசெய்யவும் முடிந்தது. அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அவர் வலைத் தளத்துக்காக மூதூர் அகதி ஒருவரை பேட்டிகாண ஏற்பாடு செய்து தந்தார். இலங்கையில் நடப்பது என்ன என்பதை சர்வதேச வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான ஒரு யதார்த்தமான சித்திரத்தையே அவர் விரும்பினார்.

அவர் யுத்தத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை மிகவும் சாதாரணமாக வெளிப்படுத்தினார்: "பாருங்கள், நாம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இங்கு நெருக்கமான பினைப்புடனும் உறவுடனும் வாழ்கின்றோம். இந்த மூன்று தரப்பிலும் உள்ள ஒரு சிறு அளவானவர்கள் இங்கு வந்து தமது சொந்த முன்னேற்றத்திற்காக இன வேற்றுமைகளை கிளறுகிறார்கள்." யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பதோடு அனைத்து ஆளும் வர்க்கத்தின் மீதும் பகைமையுணர்வு கொண்ட அவர், "இந்த யுத்தத்தில் உயிரிழப்பது சாதாரண தமிழர்களும் அப்பாவி சிங்கள பொது மக்களும், அதேபோல் படையினருமே ஆகும்," என கூறுவார். அவர் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தாலும் ஈர்க்கப்பட்டது தற்செயலானது அல்ல.

மரியதாசுக்கு தனிப்பட்ட எதிரிகள் கிடையாது. அவரது குடும்பத்தார் அவரை முல்லிப்பொத்தானையில் குடியேற வேண்டாம் என கூறியபோது, உள்ளூர் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தன்னுடைய நண்பர்களாக இருப்பதால் நான் பயப்பட வேண்டியதில்லை என மரியதாஸ் கூறியிருந்தார். அவர் யுத்தத்தின் வெளிப்படையான எதிரி என்பதாலேய கொல்லப்பட்டார். அவரது படுகொலை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தீவை இனவாத யுத்த புதைச் சேற்றுக்கு வெளியே ஒரு முற்போக்கான அரசியல் பாதையைத் தேடும் ஏனையவர்களையும் பீதிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.

செப்டம்பர் 4, சோ.ச.க. தம்பலகாமம் பொலிசுடன் பேசிய போது, குற்றப் பிரிவின் பதில் தலைவர் சேர்ஜன்ட் பெரேரா, விசாரணைகளில் எதுவித தடயமும் கிடைக்கவில்லை என்றார். பொலிசார் புலிகளில் இருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் கருணா குழு போன்ற ஒரு பயங்கரவாத குழு மீது சந்தேகம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினருக்கு தகவல்களை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தில் புலிகளும் அவரை கொன்றிருக்கலாம் எனவும் பெரேரா குறிப்பாய் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால் பொலிஸ் திறம்பட விசாரணைகளை தொடரவில்லை.

விசாரணைகள் தொடரும் மற்றும் இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 7 அன்று உள்ளூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என சேர்ஜன்ட் பெரேரா சோ.ச.க. யிடம் தெரிவித்தார். ஆபத்து என்னவெனில், இலங்கை பாதுகாப்பு படையினர் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும்போது மீண்டும் மீண்டும் நடந்துள்ளது போலவே, மிகப்பெரும் மூடி மறைப்பு ஒன்று தயாராகிக்கொண்டிருக்கின்றது.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை கோரும் சர்வதேச பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் இந்த படுகொலையை கண்டித்தும் மற்றும் இதுபற்றி பூரணமாக விசாரணை செய்யப்பட்டு பொறுப்பாளிகள் கைதுசெய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட வேண்டும் எனக் கோரியும் இலங்கை அதிகாரிகளுக்கும் எழுதுமாறு எமது வாசகர்களிடமும் மற்றும் எமது ஆதரவாளர்களிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஆட்சேபனை கடிதங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரிகள்:

Inspector General of Police Chandra Fernando,

Police Headquarters, Colombo 1, Sri Lanka.

Fax: 0094 11 2446174

Email: igp@police.lk

Attorney General K.C. Kamalasabeyson,

Attorney General's Department,

Colombo 12, Sri Lanka.

Fax: 0094 11 2436 421

சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் பிரதிகளை அனுப்பிவையுங்கள்.

Socialist Equality Party,

P.O. Box 1270,

Colombo, Sri Lanka.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த ஒன்லைன் படிவத்தை பயன்படுத்துங்கள்.

Top of page