World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WSWS speaks to families of soldiers killed in Sri Lanka's war

இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர்

By our correspondents
25 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தை தொடர்கின்ற நிலையில், உயிரிழந்த மற்றும் காயமடைந்த படைவீரர்களின் எண்ணிக்கை நாடகபாணியில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து மோதலின் போது 159 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக ஜூலை 26 அன்று ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஈடுபடுத்தி ஒரு "மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான" எதிர்த் தாக்குதலுக்கு ஆத்திரமூட்டும் விதத்தில் கட்டளையிட்டார். அதிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடரும் மோதல்களுடன், தீவின் வடக்கு மற்றும் கிழக்கின் ஏனைய பாகங்களுக்கும் மோதல்கள் விரிவடைந்து கொண்டிக்கின்றன. 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை வெற்றுக் காகிதமாகியுள்ளது.

மீண்டுமொருமுறை யுத்தத்தில் கொல்லப்படும் சிப்பாய்களின் சவப்பெட்டிகள் தெற்குக்கு வந்துகொண்டிருக்கின்றன. துருப்புக்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புற இளைஞர்கள். இவர்கள் குடும்பத்திற்கு உதவுவதற்காக படையில் சேர்ந்து கொள்வதோடு பின்னர் யுத்தத்தில் பலி கடாக்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் சிங்களப் பேரினவாத குழுக்களும், "தாயகத்திற்கான அதி உயர்ந்த அர்ப்பணிப்பு" என்ற தேசாபிமான வார்த்தைகளாலான பாராட்டுக்களின் மூலம் குவிந்துவரும் துயரத்திலிருந்து கவனத்தைக் கலைக்க முயற்சிக்கின்றன.

எவ்வாறெனினும், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உயிரிழந்த சிப்பாய்களின் குடும்பத்தாருடன் உரையாற்றும் போது அறிந்துகொண்டதன் படி, மீண்டும் ஒரு முறை வறிய உழைக்கும் மக்கள் யுத்தத்தின் வேதனைகளைத் தாங்க வேண்டியிருப்பதைப் பற்றி கணிசமான அதிருப்தியும் ஆத்திரமும் அவர்களிடம் இருந்துகொண்டுள்ளது.

19 வயது படை வீரனான சம்பிக பிரசாத், ஆகஸ்ட் 12 அன்று கிரனேட் விழுந்து வெடித்ததில் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 11 இரவு, யாழ்ப்பாணக் குடாநாட்டை நோக்கி புலிகள் வடக்குப் பக்கமாக முன்னேற முயற்சித்த நிலையில் மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன. முகமாலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள பிரதான இராணுவ முன்னரங்காகும்.

பிரசாத் பாடசாலையை விட்டு வெளியேறியவுடன் 2005 மார்ச்சில் இராணுவத்தில் சேர்ந்ததோடு கடந்த டிசம்பரில் முகமாலை பாதுகாப்பு முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டார். அவர் கடைசியாக ஜூலை 13 தனது குடும்பத்தை சந்தித்திருந்தார். அவரது சடலம் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டியில் அனுப்பப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் கூறியவாறு அவரது முகம் மோசமாக உருக்குலைந்திருந்தது.

அவரது வீடு கொழும்பில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருணாகல் மாவட்டத்தில் வறிய, தனிமைப்படுத்தப்பட்ட நெத்திபொல என்ற கிராமத்தில் உள்ளது. அருகில் உள்ள சிறு நகரான குலியாபிட்டியவில் இருந்து செல்லும் சிறிய பஸ் மட்டுமே இந்த கிராமத்திற்கான போக்குவரத்தாகும். பாடசாலை முடிந்தவுடன், தொழில் வாய்ப்பு கிடைக்காத மிகப் பெரும்பாலான இளைஞர்கள் ஒரே தேர்வாக இராணுவத்திற்குச் செல்கின்றனர்.

பிரசாத்தின் தந்தை பி. சிம்பீனஸ், அவர் இராணுவத்தில் இணைவதை தனது குடும்பம் விரும்பவில்லை என உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு தொழில் கிடைக்காததோடு இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டார். "யுத்த நிறுத்தம் நல்லதாக இருந்தது. ஆனால் (புலிகள்) நாட்டைப் பிளவுபடுத்துவதை நாம் விரும்பவில்லை. பிரச்சினை சமாதானமாகத் தீர்க்கப்படுமானால் நல்லதாக இருக்கும். எனது மகன் பல தடவைகள் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இராணுவத்தை விரும்புவதாகத் தெரிவித்தாலும் தனது சகோதரரை இராணுவத்தில் இணைய அனுமதிக்க வேண்டாம் என அவர் தனது அம்மாவிடம் கேட்டுக்கொண்டார்" என அவர் தெரிவித்தார்.

பிரசாத்தின் பாட்டனாரான பி. ரன்கிர, யுத்தத்திற்காக புலிகளை விட சிங்கள இனவாதக் கட்சிகள் மீதே குற்றஞ்சாட்டினார். தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் இந்தப் பிரதேசத்தில் முன்னர் ஒன்றாக வாழ்ந்தாக அவர் தெளிவுபடுத்தினார். தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலையில் கற்பித்துள்ளனர். 1983ல் தமிழர் விரோத வன்முறைகளே யுத்தத்திற்கான பிரதான காரணம் என அவர் கூறினார். தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் சிங்களக் குண்டர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். "அவ்வாறுதான் யுத்தம் தொடங்கியது. எனக்கு அகரவரிசை கூட தெரியாது. ஆனால் நான் நிலைமையைப் புரிந்துகொண்டது இவ்வாறுதான்," என அவர் கூறினார்.

1989ல் மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி.) முன்னெடுக்கப்பட்ட பேரினவாத பயங்கரவாதப் பிரச்சாரத்தைப் பற்றியும் அவர் பேசினார். "அந்த நாட்களில் அவர்களின் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் எங்கள் வீட்டுக் கதவை மாலை 5 மணிக்கே மூடிவிடுவோம். இப்போது யுத்தத்தைக் கொண்டு வருபவர்களும் அவர்களே. சில பெளத்தப் பிக்குகளும் யுத்தத்தைக் கோருகிறார்கள்."

சிரமத்தின் காரணமாக பிரசாத் விவசாயம் செய்வதில் சந்தோசமடையவில்லை என அவரது மூத்த சகோதரர் தெரிவித்தார். நெல்லையும் ஏனைய பயிர்களையும் பயிரிடுவதற்கு ஹெக்டருக்கும் குறைவான அளவு நிலம்தான் அவர்களது குடும்பத்திற்கு உள்ளது. கடந்த பருவத்தில் அவர்களால் முழு நெல்லையும் விற்க முடியாமல் போய்விட்டதோடு அவர்கள் விற்ற நெல்லிற்கும் குறைந்த விலையே கிடைத்தது. மரணச் சடங்கிற்கான செலவுக்காக அரசாங்கம் அவர்களுக்கு ரூபா 30,000 அல்லது 300 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கொடுத்தது.

பிரசாத்தின் கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அல்கிட்டியாவ கிராமத்தின் அசேல திலகரத்ன, 26, கிழக்கு நகரான மூதூரில் ஆகஸ்ட் 2 கொல்லப்பட்டார். அவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

அசேலவின் தாய் சுமனாவதி கூறியதாவது: அசேல 2000 ஆண்டு இராணுவத்தில் சேர்ந்தார். சிரமங்களுக்கு மத்தியில் அவர் 2001ல் அவரது அப்பாவின் மரணச் சடங்கிற்கு மட்டுமே வீட்டுக்கு வந்தார். எனது மகள் பிஸ்கட் உற்பத்தி செய்யும் கம்பனி ஒன்றில் தொழில் செய்கின்றார். மாவு விலையேற்றத்தால் அதையும் மூடப் போகின்றார்கள். அவருக்கு மாதம் 3,000 ரூபா மட்டுமே கிடைக்கும். எனது அடுத்த மகன் கொழும்பில் ஒரு வாகனம் திருத்தும் இடத்தில் பயிற்சி பெற்ற போதிலும் வருமானம் கிடையாது."

அசேலவின் மனைவி கிருஷாந்தி நதீகா விளக்கியதாவது: "அசேல இரண்டு மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. எல்லா இடங்களிலும் கிளேமோர் குண்டுகள் இருப்பதாக கடந்த முறை அவர் என்னிடம் கூறினார். அவர் மோட்டார் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை திருகோணமலைக்குச் சென்ற அவரது சகோதரர்களே அடையாளங் கண்டுள்ளனர். நாங்கள் அவநம்பிக்கையான நிலைமையில் உள்ளோம், எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்றே தெரியவில்லை.

"நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் முடிவுக்கு வருமா, சமாதானம் நிலவுமா என்பது எங்களுக்குத் தெரியாது. யுத்தத்திற்கு எதிரான கூட்டத்தில் பெளத்த பிக்குகள் செய்தது என்ன என்பதை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம். அவர்கள் யுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றார்கள்." கடந்த வாரம் பெளத்த பிக்குகள் யுத்தத்திற்கு எதிரான கூட்டமொன்றில் பேச்சாளர்களை தாக்கியதோடு கூட்டத்தைக் குழப்ப முயற்சித்தனர்.

எச். எம். சோமதிலகே ரணசிங்க, மாவிலாறு மதகைக் கைப்பற்றுவதற்காக நடந்த இராணுவத் தாக்குதலின் போது ஜூலை 31 அன்று கிளேமோர் குண்டு ஒன்றால் கொல்லப்பட்டார். அவர் குலியாபிட்டியவில் அடம்பொல பாடசாலையில் சாதாரண தரம் வரை கற்ற பின்னர் 1991ல் இராணுவத்தில் இணைந்துகொண்டார். உயிரிழந்த போது அவர் பதுளை மாவட்டத்தில் ரில்பொல கிராமத்தில் வசித்து வந்தார்.

அவரது தாய் மகிலின் நோனா, வட மேற்கு மாகாணத்தின் நாரம்மல கிராமத்தில் அவரது குடும்பம் ஏழு பிள்ளைகளுடன் பெரும் சிரமமான வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்ததாக விளக்கினார். அவரது கணவரும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் கூலிக்கு வேலை செய்துள்ளனர். அவரது பிள்ளைகளில் நான்கு பேர் ஏதாவது வருமானத்திற்காக இராணுவத்தில் சேர்ந்த போதும், அவரது மகளும் மூத்த மகனும் பின்னர் அதிலிருந்து விலகிக்கொண்டனர். அவரது இளைய மகன் இன்னமும் சேவையில் உள்ளார்.

"நாம் யுத்தத்தின் காரணமாக எமது மகனை இழந்துவிட்டோம். இப்பொழுது எங்களுக்கு வயதாகிவிட்டது. இப்பொழுது எங்களைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை. விவசாயம் செய்வதற்கு ஒரு துண்டு நிலம் கூட எங்களிடம் கிடையாது. மீண்டும் கூலி வேலை செய்வதைத் தவிர வாழ்வதற்கு வேறு வழியில்லை."

சோமதிலகவின் மனைவி எச். எம். ரூபவதி, தனது இரு பிள்ளைகளுடன் தான் முற்றிலும் உதவியற்றவளாக இருப்பதை உணர்வதாகத் தெரிவித்தார். "இலட்சக்கணக்கான ரூபாய்களாலும் உறவினர்களாலும் இந்த இடைவெளியை இட்டு நிரப்ப முடியாது. எனது திருமணத்திற்கு முன்னர், நான் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றினேன். என்னால் இப்பொழுது அங்கு வேலை செய்ய முடியாது. அது பலமாதங்களாக மூடப்பட்டுள்ளது."

தனது இரண்டு வயது மகள் அப்பாவைப் பற்றிக் கேட்பதாக அவர் கூறினார். "நான் இப்பொழுது என்ன செய்வது? நான் யுத்தத்திற்கு எதிரானவள். இதனால் எத்தனைபேர் இவ்வாறு உதவியற்றவர்களாகியிருப்பார்கள்? நாங்கள் யுத்த நிறுத்த காலத்தில் சந்தோசமாக இருந்தோம். யுத்தம் இல்லாததால் எனது கணவரும் சந்தோசமாக இருந்தார்."

இன்னொரு உறவினரான டபிள்யூ. பீ. கருணாரத்ன, ஜே.வி.பி. யின் பாத்திரத்தைப் பற்றி மிகவும் ஆத்திரமடைந்திருந்தார். "இப்போது ஜே.வி.பி. யுத்தத்தைத் தூண்டுகிறது. முன்னர் (1980களில்) அவர்கள் தேசப்பற்று யுத்தத்திற்குப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் மக்களை அச்சுறுத்தியதோடு மக்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரினர். நான் மஹாவலி நீர்த்தேக்கத் திட்டத்தில் சேவையாற்றும் போது இதற்கு முகம் கொடுத்தேன்.

"வறிய இளைஞர்கள், தொழில் இன்றி அல்லது எதிர்காலமின்றி இராணுவத்தில் சேர்ந்து டசின் கணக்கில் கொல்லப்படுகின்றனர். சொத்துள்ள செல்வந்தர்கள் எவரும் மோதலுக்குச் செல்வதில்லை. அவர்களில் எவரும் சாவதற்கு விருப்பமில்லை. அனைவருக்கும் சமாதானமே வேண்டும்."

கோப்ரல் ஆர். சிரிவர்தன, 38, ஆகஸ்ட் 14 நாகர்கோவிலில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். அவரது அப்பா ஒரு புகையிரதத் தொழிலாளியாக இருந்தார். அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திற்கு கிடைக்கும் 350 ரூபாவில் அவரது குடும்பம் சீவிக்கின்றது. அவர்களது வீட்டில் 10 பேர் இருக்கக் கூட இடம் இல்லாததால் மரணச் சடங்கை அங்கு நடத்த முடியாமல் போனது என ஒரு உறவினர் அவர்களது வீட்டைக் காட்டி குறிப்பிட்டார்.

"இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இது ஒரு இனவாத யுத்தம். இந்த யுத்தத்தில் சாவது ஏழைகளே," என அவர் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.