World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

In wake of Nandigram massacre
West Bengal's Stalinist chief minister invited to Washington

நந்திக்கிராம் படுகொலையை அடுத்து

மேற்கு வங்க ஸ்ராலினிச முதல்மந்திரிக்கு வாஷிங்டன் அழைப்பு

By Arun Kumar and Kranti Kumara
21 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின் முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளுக்கு மாபெரும் நம்பிக்கை வாக்களிப்பது போன்ற வகையில், புஷ் நிர்வாகம் அம்மாநிலத்தின் முதல் மந்திரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) (CPM) அரசியற்குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜியை அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் வணிகப் பிரதிநிதியான Susan Schwab, அவ்வம்மையாரும் உயர்மட்ட அமெரிக்க வணிகக் குழுவும் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் முதல் மந்திரியுடன் வணிகம் மற்றும் முதலீடு தொடர்பாக விவாதித்த பின்னர், இத்தகைய பகிரங்க அழைப்பை ஏப்ரல் 14 அன்று விடுத்துள்ளார்.

"அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல நிறுவனங்கள்" ஏற்கனவே பட்டாச்சார்ஜியை அமெரிக்காவிற்கு அழைத்துள்ளன என்று குறிப்பிட்ட பின், ஷ்வாப் கூறியதாவது: "அந்த அழைப்புக்களுடன் என்னுடைய குரலையும் இன்று சேர்த்துள்ளேன். அவருடைய வெற்றியின் அரசியல் மற்றும் வளர்ச்சிக் கூறுபாடுகள் பற்றி நாங்கள் கேட்க விரும்புகிறோம்."

மேற்கு வங்கத்தின் CPM தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் உத்தரவுப்படி பாதுகாப்புப் படைகள் நந்திக்கிராமில் 14 விவசாயிகளை கொன்று, 70 பேருக்கும் மேலாக காயப்படுத்தி சரியாக ஒரு மாதம் கடந்த பின்னர், இந்த அமெரிக்க அழைப்பு வந்துள்ளது. கொல்கந்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமப்பகுதியான நந்திக்கிராம், மாநில அரசாங்கத்தின் திட்டமான, இந்தோனேசியாவை தளமாக கொண்ட சலிம் குழுமம் நடத்துவதற்கு தேவையான சிறப்பு பொருளாதார பகுதிக்காக 10,000 ஏக்கர்கள் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக பல மாதங்கள் எதிர்ப்புக்களினால் அதிர்வுற்றுள்ளது.

அரசாங்கத்தின் அதிகாரத்தை அப்பகுதியில் மீண்டும் வலியுறுத்தும் காரணத்தைக் கூறி, இடது முன்னணி அரசாங்கம் மிக அதிக அளவில் ஆயுதமேந்திய 4,000 பாதுகாப்புப் படையினரை நந்திகிராமை தாக்குவதற்கு திரட்டியது. போலீசார் தற்காப்பிற்காக சுட வேண்டியிருந்தது என்று காரணத்தை கூறி பின்னர் படுகொலையை அரசாங்கம் நியாயப்படுத்த முயன்றது. ஆனால் நேரில் நிகழ்வுகளை கண்ட சாட்சிகளின் பார்வையில் இக்கருத்து ஏற்கப்படவில்லை; மேலும், ஒரு போலீஸ்காரர் கூட கடுமையாய் காயம் ஏதும் அடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேண்டுமென்றே விவசாயிகளை படுகொலை செய்து அவர்கள் வாழ்க்கை ஆதாரத்தை நிறுத்த முற்படும் வகையில் அரசாங்கம் சர்வதேச நிறுவனத்தின் சார்பாக நடந்து கொண்டமை இந்தியா முழுவதும் சீற்றப்புயலை தூண்டிவிட்டது.

ஆனால் தன்னுடைய "தொழில் மயமாக்கும்" கொள்கையை விரைவுபடுத்துவதாகத்தான் இடது முன்னணி அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது; அதாவது குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு, முதலீட்டாளர் சார்பு வரிக் கொள்கை, கட்டுப்பாடுடைய ஆட்சியை நாடும், இந்திய, சர்வதேச முதலாளித்துவத்தை ஈர்ப்பதற்கு மேற்கு வங்கம் காந்தம் போல் இருக்கும் என்பதுதான் அக்கொள்கையாகும். இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற, இடது முன்னணி கூட்டணியில் மேலாதிக்கம் கொண்டுள்ள ஸ்ராலினிச CPI (M) இன் மத்திய குழுக் கூட்டம் ஒன்றில், நந்திக்கிராமில் நடந்த போலீஸ் நடவடிக்கை பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டு, விவசாயிகளுடைய போராட்டம் [இந்து மேலாதித்ககவாத BJP இன் வட்டாரத் தோழமைக் கட்சி] "திருணாமூல் காங்கிரஸ், SUCI இந்திய சோசலிஸ்ட் ஒற்றுமை மையம், நக்சலைட்டுக்கள், மாவோயிஸ்டுக்கள் போன்ற மிகத் தொந்திரவு கொடுக்கும் கூறுபாடுகள் ஒன்று சேர்ந்து நடத்திய அரசியல் நிகழ்வு" என்று கூறியுள்ளது.

முதலாளித்துவத்தின் விருப்பங்களை செயற்படுத்துவதில் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் உறுதிப்பாடு மேற்கு வங்க இடது முன்னணிக் கூட்டணி மற்றும் CPM ஆகியவை மேற்கு வங்கத்தை "முதலீட்டாளர்களுக்கு சார்புடையதாக செய்வது" என்று தாமே அறிவித்துக் கொண்ட உறுதிப்பாட்டில் தீவிரமாக உள்ளனர் என்று புஷ் நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது; அதாவது அமெரிக்கா வணிகம் செய்யக் கூடிய, செய்ய வேண்டிய ஆட்சி அவர்களுடையது என்பதாகும்.

இந்தியாவின் ஆளும் உயரடுக்குடன் இணைந்து, CPM மற்றும் இடது முன்னணி 1991ல் இருந்தே மேற்கு வங்கம் மற்றும் தேசியளவில், தனியார் மயமாக்குதல், கட்டுப்பாடு அகற்றுதல், விவசாயப் பொருட்களுக்கு ஆதரவுத் தொகை அளித்தலை குறைத்தல், பொதுப் பணிகள், சமூக நலத் திட்டங்களை குறைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு, வெளி முதலீட்டை ஈர்த்து ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வளர்ச்சியை பெருக்குதல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

2004 மே மாதத்தில் இருந்து இடது முன்னணி இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு (UPA) கூட்டணிக்கு --அதன் புதிய தாராள சீர்திருத்த கொள்கையில் உறுதியாக நின்று, அமெரிக்காவுடன் "மூலோபாய பங்காளித்துவத்தையும் விரும்பும் அரசாங்கத்திற்கு, அவற்றை நிறைவேற்ற-- அதிகாரத்தில் நிலைப்பதற்கு தேவையான பாராளுமன்ற வாக்குகளையும் கொடுத்து வருகிறது.

ஆனால் மேற்கு வங்க அரசாங்கமும் CPM உம் கடந்த 18 மாதங்களில் இன்னும் கூடுதலான முறையில் முதலாளித்துவத்தை வசியப்படுத்துவதில் தீவிரத்தை காட்டியுள்ளன. மே 2006 மேற்கு வங்க மாநில தேர்தலில் மறுபடியும் வெற்றியடைவதற்கு "தொழில்மயமாக்கும் கொள்கை" என்பதை பிரச்சாரத்தின் மையக் கருவாக இடது முன்னணி ஆக்கியது; CPM தலைவர்கள் தங்களது கட்சியானது அனைத்து வர்க்கங்களிடம் இருந்தும் ஆதரவை வென்றெடுப்பதற்கு முயலும் என்று வெளிப்படையாக தம்பட்டம் அடித்துக் கொண்டனர்.

நந்திக்கிராமில் விவசாயிகள் மீது போலீஸ் தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதற்கு முன் இடது அரசாங்கம் கடந்த ஆண்டு டாட்டா மோட்டார்ஸ் கார் ஆலைக்காக சிங்கூர் என்ற பகுதியில் 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு காலனித்துவ காலத்து கடுஞ்சட்டங்களை துணை கொண்டு அப்பகுதியில் எதிர்ப்புக்களை சட்டவிரோதமாக்கியது.

செய்தி ஏடுகளின் தகவல்படி, பல மாதங்களாக பட்டாச்சார்ஜி, அமெரிக்காவில் இருந்து உத்தியோகபூர்வ அழைப்பிற்காக தூண்டிலிட்டுக் காத்திருந்தார் எனத் தெரிகிறது; எனவே இதைப் பயன்படுத்தி அவர் அமெரிக்க பெருநிறுவன தட்டிற்கு மேற்கு வங்கத்தில் கிடைக்கும் நலன்களை பற்றி தனிப்பட்ட அளவில் பேரம் செய்ய முடியும்.

மார்ச் 7ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தலைமைத் துணைத் தூதரான Henry V. Jardine இந்திய-அமெரிக்க வணிக குழுவிற்கு "மேற்கு வங்கத்தின் பொருளாதார, வணிக நிலைமகள் பற்றிய மதிப்பீடு" என்ற தலைப்பில் உரையாற்றினார். பல "உறுதியான" பொருளாதாரக் குறியீடுகளை பற்றி குறிப்பிட்டு, மேற்கு வங்க அரசாங்கத்தை அதன் வணிக நட்பு நிலைப்பாட்டிற்கு புகழாரம் சூட்டியபின், ஜார்டைன் கூறினார்: "தற்போதைய வழிவகை தொடர்ந்தால், மேற்கு வங்கத்தில் விரைந்து பெருகும் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அமெரிக்க முதலீடு, வணிகம் பெரும் அளவில் வரும் என்று நான் எதிர்பார்ப்பேன்."

இடது முன்னணி அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை மாற்றங்களை பற்றி வெளிப்படையான குறிப்பை காட்டும் வகையில் ஜார்டன் அறிவித்தார்: "சமீபத்திய ஆண்டுகளில் மேற்கு வங்க அதிகாரிகள் தனியார் துறையை தூற்றுவதில் இருந்து அதைத் தழுவும் தன்மைக்கு மாறியுள்ளனர் -- குறைந்த பட்சம் டெங் சியாவோபிங் பலமுறை கூறிய கருத்தான, 'எலிகளை நன்கு பிடிக்கும் உணர்வு இருந்துவிட்டால், பூனை கறுப்பா, வெளுப்பா என்பது முக்கியமில்லை' என்பதின் உணர்வை ஏற்றுள்ளனர்."

சீன ஸ்ராலினிச அரசாங்கத்தின் முதலீட்டிற்கு "திறந்த கதவு (Open Door)" கொள்கையை நிர்மாணித்த டெங் சியாவோபிங்கில் இருந்து கூறப்பட்ட மேற்கோள் தற்செயலாகக் கூறப்பட்ட கருத்து அல்ல. CPM தலைமை சீனாவை பெரிதும் பாராட்டுகிறது; அங்கோ தொழிலாளர்கள் சீன தொழில்முயல்வோர்கள் மற்றும் சர்வதேச பெருநிறுவனங்களுக்காக இங்கிலாந்தில் தொழிற்புரட்சி காலத்தில் இருந்த நிலைமைகள் போன்றவற்றில் சிக்கி தொழிலாளர்கள் அடிமை போல் உள்ளனர்; பெரும்பாலான மக்களுக்கு தக்க சுகாதார பாதுகாப்புக் கூட கிடையாது; ஒரு "சோலிஸ்ட்" என்ற வகையில், இவர்களோ மேற்கு வங்கத்தை தொழில்மயமாக்கும் தற்போதைய உந்துதலுக்கு சீனாவை ஒரு "முன்மாதிரி" என்று அறிவிக்கின்றனர்.

மேற்கு வங்க அரசாங்கம், சாதாரண வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவை அகற்றப்பட்டு, சிறப்பு பொருளாதார பகுதிகளை நிறுவுவதில், சீன கம்யூனிஸ்ட் ஆட்சியை பின்பற்றும் என்று ஜார்டைன் மற்றும் புஷ் நிர்வாகம் எதிர்பார்ப்பதோடு மட்டும் இல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தியை அடக்குவதில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

சீன முன்மாதிரிக்கு இணங்கும் வகையில், பட்டாச்சார்ஜி மேற்கு வங்கத்தின் மரபார்ந்த தொழிலாளர் போர்க்குணத்தை களையெடுப்பதில் இன்னும் கூடுதலான ஆக்கிரோஷத்தைத்தான் காட்டியுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை, அது தொடர்புடைய (வணிக வழிவகைகள்) துறைகளில் வேலைநிறுத்தங்கள் சட்டத்திற்கு புறம்பானவை என்று அறிவித்ததில், முதல் மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. செப்டம்பர் 2005ல் UPA அரசாங்கத்தின் வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் இப்பிரிவுகளை பாதித்த பின்னர், பட்டாச்சார்ஜி வணிக தலைவர்களுக்கு தன்னுடைய அரசாங்கம் இனி அத்தகைய தடைகள் வராமல் காக்கும் என்று உறுதியளித்தார். "இந்த [வேலைநிறுத்தங்களின்] கேடு பற்றி நான் அறிவேன். வருங்காலத்தில் இதைச் செய்பவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதிகூறுவேன். நிர்வாக, அரசியல் அளவில் இவ்விஷயத்தை தொடர்வேன்." (See "Indian Stalinists pledge to stamp out further IT work disruptions")

பட்டாச்சார்ஜி மற்றும் CPM தலைமை, வேலைநிறுத்தங்களை தடுக்கவும், தொழிலாளர் அதிருப்தியை நெரிக்கவும் பெருகிய அழுத்தத்தை CPM உடன் இணைந்துள்ள CITU அமைப்பில் கொண்டுவந்துள்ளன.

மார்ச் 13ம் தேதி ஹிந்துஸ்தான் மோட்டார்சின் உத்தர்பாரா ஆலையில் 15 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது மற்றும் இரண்டு மாதங்கள் ஊதியம் வராததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்தபோது, அந்நடவடிக்கையை CITU எதிர்த்தது. பட்டச்சார்ஜியின் நிலைப்பாட்டை எதிரொலிக்கும் வகையில் CITU தொழிற்சங்கத் தலைவர் சாந்தஸ்ரீ சாட்டர்ஜி அறிவித்தார்: "இப்பொழுது ஆலையில் உற்பத்தியை நிறுத்துவது சரியல்ல. வேலைநிறுத்தத்தின் மூலம் அல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் இரண்டு மாத ஊதியத்தை பெறுவதுதான் முக்கியமாகும்."

CITU வின் எதிர்ப்பு, பேச்சோடு நின்றுவிடவில்லை. மார்ச் 28 அன்று இரண்டு போட்டித் தொழிற்சங்கங்களால் பராமரிக்கப்பட்டுவரும் மறியல் பாதைகள் வழியே பலவந்தமாக மீறிச் செல்லுமாறு CITU தொழிலாளர் குழுவை ஒழுங்குசெய்தது. ஆலை வாயில்களுள் சென்றபின்னர் CITU தலைமையிலான குழு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை புட்டிகளாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கியது.

Statesman கருத்தின்படி, போலீஸ் மற்றும் CITU குண்டர்கள் ஏப்ரல் 15ம் தேதி கொல்கத்தா புறநகரமான ஹூக்ளியில் உள்ள கங்கை சணல் ஆலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தாக்கினர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும் அலங்காரப் பேச்சு

இடது முன்னணி, குறிப்பாக CPM, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு, ஈராக்கின் மீதான படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பற்றி தங்கள் எதிர்ப்பை பெரிதும் காட்டினர்.

நவம்பர் 2005ல் மேற்கு வங்கத்தில் இந்திய அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சிக்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்புக்களை அமைத்தனர். தன்னுடைய மாநில அரசாங்கம் எவ்விதத்திலும் பயிற்சிக்கு தடைவராமல் காக்கும் என்று பட்டாச்சார்ஜி இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கு தனியாக உறுதியளித்தார் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி புஷ் இந்தியாவிற்கு மார்ச் 2006ல் வந்தபோது, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இதேபோல் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். புஷ்ஷும் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் புஷ்ஷின் வருகையின் போது செய்துகொண்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிக் கடுமையாக விமர்சன நோக்கை கொண்டிருந்தனர். ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிடம் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் "அமெரிக்க எதிர்ப்பு" அலங்காரப் பேச்சுக்கள் இரண்டு நோக்கங்களை கொண்டவை. ஆக்கிரோஷமான மற்றும் சரிந்துவரும் அமெரிக்காவுடன் இடர்ப்படும் நிலையை தாமதப்படுத்தல் மூலம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்கள் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கணக்கிடும் இந்திய ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவிற்கு ஆதரவு கொடுப்பது ஒன்று. இரண்டாவதாக, அது சமூக அளவில் எரியூட்டக்கூடிய சமூக பொருளாதார செயற்பட்டியலையும், வாஷிங்டனுடன் மூலோபாயப் பங்கு என்ற இரண்டையும் பின்பற்றுகின்ற, அரசியலில் இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த ஆளும் கட்சியான காங்கிரசின் தலைமையில் உள்ள இந்திய அரசாங்கத்திற்கு CPM மற்றும் இடது முன்னணியின் ஆதரவிற்கு அரசியல் மூடிமறைப்பை கொடுக்கிறது மற்றும் மேற்கு வங்க அரசாங்கத்தை பொறுத்தவரை அதன் சொந்த முதலீட்டாளர் சார்பு செயற்பட்டியலுக்கு மூடிமறைப்பை வழங்குகிறது.

தன்னுடைய அரசியல் பகுப்பாய்வின் நுட்பமான திறமைக்கு ஒன்றும் புஷ் நிர்வாகம் புகழ் பெற்றது அல்ல. இடது முன்னணி அரசாங்கம் முதலாளித்துவத்திற்காக விவசாயிகளை சுட்டுக் கொண்டிருக்கும்போது, அது CPM இன் "அமெரிக்க எதிர்ப்பு" சொற்ஜாலங்களை சரியாகத்தான் கணித்து எடுத்துள்ளது.

See Also:

மேற்கு வங்க ஸ்ராலினிச ஆட்சி விவசாயிகளை படுகொலை செய்து குற்றம் புரிகிறது

மேற்கு வங்க படுகொலையை பின்தொடர்ந்து: இந்திய தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்