World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Bush administration threatens military intervention in Pakistan

புஷ் நிர்வாகம் பாகிஸ்தானில் இராணுவத் தலையீடு செய்வதாக அச்சுறுத்துகிறது

By Peter Symonds
21 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

பாகிஸ்தான் தொடர்பாக கடுமையான புதிய நிலைப்பாடொன்றை சமிக்ஞை செய்துள்ள புஷ் நிர்வாகம், ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் உள்ள அல் கைடா மற்றும் தலிபான் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் பேர்வஸ் முஷராப்பிடம் கோரியுள்ளதோடு அவர் அதைச் செய்யத் தவறினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளது.

வியாழக் கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் பேச்சாளர் டோனி ஸ்னோவ், எல்லைப் பிராந்தியங்களில் பாதுகாப்புப் பிரச்சினைகளை அணுகுவதில் முஷராப் "மிகவும் ஆக்கிரமிப்பு கொள்கையுடையவராக இருக்கப் போகின்றார்" எனத் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு அமெரிக்க இராணுவப் படைகள் அனுப்பப்படுமா எனக் கேட்டபோது, "செயற்படுகின்ற இலக்குகள் மீது தாக்குதல் தொடுப்பது உட்பட எந்தவொரு தெரிவையும் நாங்கள் நிராகரிக்கவில்லை," என பிரகடனம் செய்தார்.

அண்மைய தேசிய புலனாய்வு மதிப்பீடு தொடர்பாக வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது உரையாற்றிய புஷ்ஷின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் பிரான்செஸ் டெளன்சென்ட் தவிர்க்க முடியாத வகையில் இதே செய்தியையே வெளிப்படுத்தினார். இந்த புலனாய்வு மதிப்பீடானது பாகிஸ்தானின் கூட்டாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் வாழும் பிரதேசங்களில் உள்ள "பாதுகாப்பான சொர்க்கங்களில்" அல் கைடா புத்துயிர் பெற்றுள்ளது எனத் தெரிவித்தது. "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" முஷராப் முக்கியமான பங்காளி என இராஜதந்திர ரீதியில் பிரகடனம் செய்த அவர், கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் லால் மஸ்ஜித் அல்லது செம் மசூதியை பாகிஸ்தான் இராணுவம் இரத்தக்களரியுடன் கைப்பற்றியதன் பின்னர் "தீவிரவாதத்திற்கு" எதிராக முஷராப் ஆற்றிய உரையையும் பாராட்டினார்.

ஆயினும், அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் அனுமதியில் தங்கியிருக்காது என டெளன்சென்ட் வலியுறுத்தினார். அவர் விபரங்களை வெளிப்படுத்த மறுத்த அதே வேளை, "ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளவாறு, உலகின் எந்த இடத்திலும் செயற்படும் இலக்குகள் இருந்தால், அது பாகிஸ்தானா அல்லது வேறு எங்காவதா என்ற விடயத்தை ஓரங்கட்டிவிட்டு, நாங்கள் இலக்கை நோக்கி நகர வேண்டும் என்பதில் கேள்விக்கு இடமில்லை," என அவர் பிரகடனம் செய்தார்.

அல் கைடா மற்றும் ஏனைய இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு புஷ் நிர்வாகம் முஷராப்பை நெருக்கி வருவதாக டெளன்சென்ட் தெரிவித்தார். "இந்த யதார்த்தமான விவகாரத்தை அணுகுவதற்காக, துணை ஜனாதிபதியில் (டிக் செனி பெப்பிரவரியில்) தொடங்கி அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர் மட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக ஜனாதிபதி முஷராப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. மற்றும் ஜனாதிபதிக்கும் மற்றும் முஷராப்பிற்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடந்ததும் வெளிப்படையானது. (பாதுகாப்பு) செயலாளர் கேட்ஸ் தொடக்கம் துணை (இராஜாங்க) செயலாளர் நெக்ரோபோன்ட் மற்றும் ஒரு தொகை சிரேஷ்ட புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனர்," என அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் இந்தக் கருத்துக்களுக்கு கூர்மையான எதிர்ப்பை காட்டின. பாகிஸ்தானில் இலக்குகள் மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் தொடுப்பதாக அச்சுறுத்துவதானது "பொறுப்பற்றதும் மற்றும் ஆபத்தானதுமாகும்" என அந்த அறிக்கை பிரகடனம் செய்திருந்தது. பாகிஸ்தான் "தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும்" எதிராகப் போராட அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்ததோடு, "பாகிஸ்தானுக்குள் எந்தவகையிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது எமது சொந்த பாதுகாப்புப் படையினராலேயே மேற்கொள்ளப்படும் என்ற எமது நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம்", என வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறெனினும், பெருமளவில் அத்தகைய அறிக்கைகள் வளர்ச்சி கண்டுவரும் அமெரிக்க விரோத உணர்வை தணிப்பதை இலக்காகக் கொண்ட அரசியல் தோரணைகளேயாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தை ஆதரிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் கற்காலத்திற்கு மீண்டும் திரும்பும் விதத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக புஷ் நிர்வாகம் 2001 செப்டெம்பரில் எச்சரித்தது போலவே, இப்போதும் முஷராப் எல்லைப் பிரதேசத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்க அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இஸ்லாமியப் போராளிகளுடன் சமரசம் செய்யாமல் இருக்கவும் மற்றும் கடந்த வாரம் லால் மஸ்ஜித் மீது தாக்குதல் தொடுக்கவும் முஷராப் எடுத்த முடிவுக்கு அமெரிக்காவின் இடைவிடாத அழுத்தம் பிரதான காரணியாக இருந்தது என்பதில் சந்தேகம் கிடையாது. ஜூலை முற்பகுதியில் தொடங்கிய இந்த முற்றுகையின் போது 11 படையினர் உட்பட 100 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரமான இராணுவ நடவடிக்கை பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணங்களிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் எதிர்ப்பை தூண்டிவிட்டதோடு, பாதுகாப்பு படையினரோடு மோதல்களை நிறுத்த முஷராப்புடன் கடந்த செப்டெம்பரில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டிற்கு முடிவுகட்ட வடக்கு வஸிரிஸ்தானின் எல்லைப் பிரதேசத்தில் உள்ள பழங்குடித் தலைவர்களைத் தூண்டியது.

கடந்த வாரம் பூராவும், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிசார் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் 130 உயிர்களுக்கும் மேல் பலியாகியுள்ளன. நாடு பூராவும் கடந்த வியாழக் கிழமை நடந்த மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் இரண்டு தாக்குதல்கள் வட மேற்கில் இராணுவம் மற்றும் பொலிஸ் மீது நடத்தப்பட்டதோடு மூன்றாவது தாக்குதல் தென் மேற்கு மாநிலமான பலுசிஸ்தானில் சீன சுரங்க கம்பனியின் தொழிலாளர்களின் வாகனத் தொடரணி மீது தொடுக்கப்பட்டது. வடக்கு வஸிரிஸ்தானின் பிரதான நகரான மிரான் ஷாவை அன்டிய பிரதேசத்தில் பாதுகாப்பு சோதனை நிலையத்தின் மீது கார் குண்டுதாரி இடித்ததில் நேற்று மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பழங்குடியினர் வாழும் பிரதேசத்தில் இராணுவத்தின் இருப்பை அதிகரிக்க முஷராப் கட்டளையிட்டதை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கும் அல்கைடா மற்றும் தலிபான் போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. கடந்த வாரம் "உயர்ந்த தூண்டுதல் உணர்வு கொண்ட" வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட வட மேற்கு எல்லை மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்திற்கு ஒரு முழு இராணுவ பிரிவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பகுதிகள் இராணுவ ஊரடங்குச் சட்டத்தின் கீழ் உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு வஸிரிஸ்தானுக்கும் மேலதிகத் துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோதல் நிறுத்த உடன்படிக்கைக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் நேற்று வடக்கு வஸிரிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் பிரதிநிதிகள் தலிபான் சார்பு குழுக்களுடன் சந்திப்பொன்றை நடத்திய போதிலும் எந்தவொரு முன்னேற்றமான பெறுபேறும் வரவில்லை. கடந்த செப்டெம்பர் உடன்படிக்கையில், அமெரிக்க விரோத ஊடுருவல் இயக்கம் எல்லையைக் கடப்பதை தடுப்பதாக பழங்குடித் தலைவர்கள் உத்தரவாதம் வழங்கியதற்கு பிரதியுபகாரமாக பாகிஸ்தான் இராணுவம் அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேற உடன்பட்டது. புஷ் நிர்வாகம் இந்த உடன்படிக்கையையிட்டு தமது எதிர்ப்பை அரைகுறையாக வெளிப்படுத்தியது. இந்த உடன்படிக்கை அல் கைடாவும் தலிபான்களும் மீண்டும் பலமடைவதற்கான பாதுகாப்பு அரணை அனுமதிக்கும் என அது குற்றஞ்சாட்டியது. இந்த வாரம் டெளன்சென்ட் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், "அது பாகிஸ்தானுக்கு பயனளிக்கவில்லை. அது அமெரிக்காவுக்கும் பயனளிக்கவில்லை," என அறிவித்தார்.

முஷராப்பை ஆட்டங்காணச் செய்தல்

இராணுவ நடவடிக்கைக்கான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் தலையீடு செய்யும் அச்சுறுத்தல்கள் என்பன, ஏற்கனவே அலைக்கழிக்கப்பட்டுள்ள முஷராப்பின் அரசாங்கத்தை மேலும் ஸ்திரமற்றதாக்க மட்டுமே முடியும். லால் மஸ்ஜித் முற்றுகையின் இரத்தக்களரி மிக்க முடிவானது பரந்த எதிர்விளைவுகளை தூண்டிவிட்டுள்ளதோடு தேசிய மட்டத்திலும் மற்றும் வட மேற்கு பழங்குடி மாகாணம், பலுசிஸ்தான் போன்று மாகாண மட்டத்திலும் முன்னர் முஷராப்புடன் அணிதிரண்டிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளை மேலும் அந்நியப்படுத்தியுள்ளது. பழங்குடி மக்கள் வாழும் எல்லைகளில் இராணுவ நடவடிக்கைகளை புதுப்பிப்பதானது கடுமையான எதிர்ப்பையும் எதிர்த் தாக்குதல்களையும் உக்கிரமாக்கும்.

அதே சமயம், மதச் சார்பற்ற கட்சிகளுடன் நெருக்கமான அரசியல் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் முஷராப்பின் முயற்சியும் பிரதம நீதியரசர் இஃப்கார் முஹம்மது செளத்திரியை பதவி விலக்கும் அவரது முயற்சிகளுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்புக்களால் பேரிடருக்குள்ளானது. நேற்று உயர் நீதிமன்றம் செளத்திரிக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்களை தூக்கியெறிந்து நீதியரசரை மீண்டும் பதவியில் இருத்தியதன் மூலம் முஷராப்பிற்கு பலத்த அடியைக் கொடுத்தது. இந்த முடிவு, இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் பதவியில் இருக்கும் அதே வேளை ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகும் முஷராப்பின் திட்டங்களை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஒழுங்கை செளத்திரி அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கலாம்.

புதன் கிழமையன்று பத்திரிகை ஆசிரியர்களுடன் நடத்திய கூட்டமொன்றில், இஸ்லாமியவாத வன்முறைகளின் வெடிப்பை அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தவும் தேர்தல்களை ஒத்திப்போடவும் ஒரு சாக்குப் போக்காகப் பயன்படுத்தக்கூடும் என்ற பீதியை முஷராப் மூடி மறைத்தார். எவ்வாறெனினும் அவர் தொடர்ந்தும் இராணுவத் தளபதி பதவியில் இருக்கும் எண்ணத்தில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்தினார். அவ்வாறு செய்ய முஷராப் முடிவெடுத்திருப்பதானது அவருக்கான ஆதரவு குறுகியதாக இருப்பதையும் மற்றும் நேரடிக் கட்டுப்பாட்டை அவர் கைவிட்டால் இராணுவம் அவருக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அவரது பயத்தையும் பிரதிபலிக்கின்றது.

கடந்த செப்டெம்பரில் வடக்கு வஸிரிஸ்தானில் உள்ள தலிபான் சார்பு பழங்குடிகளுடன் முஷராப் உடன்பாட்டைக் கண்டதற்கான காரணங்களில் ஒன்று, அதிகாரிகள் மட்டத்தில் ஏற்கனவே அதிகார எதிர்ப்பு கிளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளதேயாகும். எல்லைப் பிரதேசங்களிலும் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் கூட பழங்குடி குழுக்களுடன் பலமான பிணைப்பைக் கொண்ட பஸ்துன் இனத்தைச் சார்ந்தவர்களே இராணுவத்தின் குறிப்பிடத்தக்க தட்டினராக உள்ளனர். மோதல்களில் சுமார் 600 பாகிஸ்தானிய துருப்புக்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் பரந்த வெகுஜன எதிர்ப்பை கிளறிவிடுவதோடு நாட்டின் பாதுகாப்பு படையினருக்குள் பதட்டத்தையும் விரிவுபடுத்தும். மெக்கல்சி நியுஸ்பேப்பர்ஸுக்கு கருத்துத் தெரிவித்த போது, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஹமீட் குல் எச்சரித்ததாவது: "அந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் உண்மையில் கோபத்தில் உள்ளதோடு நடந்தவை பற்றி (லால் மஸ்ஜித்தில்) ஆத்திரத்துடன் உள்ளனர்... அங்கு எமது இராணுவம் நகருமானால் தொடர்ந்தும் போராட வேண்டிவரும் மற்றும் அது மிகவும் மோசமானதாகவும் இருக்கும் --அத்த வகையிலான சூழலை உங்களால் மீள்கட்டுமானம் செய்ய முடியாததோடு இதயங்களையும் மனங்களையும் கவரும் போராட்டத்தில் நீங்கள் தோல்வி கண்டுவிடுவீர்கள்."

எவ்வாறெனினும், அரசியல் விளைவுகள் என்னவாக இருந்தாலும், இஸ்லாமிய போராளிகள் மற்றும் அமெரிக்க விரோத ஊடுருவல்காரர்கள் மீது பாய்ந்து விழக்கோரும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர முஷராப்பிற்கு வேறு தேர்வுகள் குறைவாகவே உள்ளன. வெள்ளை மாளிகை கலந்துரையாடல்களில் பங்குபற்றிய சிரேஷ்ட அமெரிக்க அலுவலர் ஒருவர் புதன் கிழமை நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: "அவர் கடந்த காலத்தில் ஆட்களை உள்ளே அனுப்ப அவர்கள் துடைத்துக் கட்டப்பட்டதையே நாம் கண்டோம். பழங்குடி பிரதேசங்களில் இருந்து நம்பத்தகுந்த கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றோம் என்பதை இன்றைய பாஷையில் இருந்தே நாம் சொல்ல முடியும். அதைத் தீர்த்துக் கட்ட வேண்டும். அவரால் அதை தீர்க்க முடியுமானால் அங்ஙனமே ஆகட்டும். ஆனால் அவரால் முடியாவிட்டால், அவர் இயலுமையை கட்டியெழுப்பவும் பிறரிடம் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்."

புஷ் நிர்வாகம் தற்போது எல்லைப்புற பழங்குடியினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கின்றது. "இதயங்களையும் மனங்களையும் வெற்றிகொள்ள" ஐந்து ஆண்டுகளுக்கான பொருளாதார அபிவிருத்திக்கு 750 மில்லியன் டொலர்களைத் தருவதாக வாஷிங்டன் வாக்குறுதியளித்துள்ளது --இதை இந்த வறுமைப்பிடிக்குள் அகப்பட்ட பொருளாதார ரீதியில் பின்னடைவான பிரதேசங்களில் உள்ள பிரமாண்டமான சமூகப் பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில் ஒரு வாளிக்கு ஒரு துளி நீர் போன்றதாகும். பழங்குடி பிராந்தியங்களில் ஒழுங்கை நிலைநாட்ட புதிய "பழங்குடி படைப்பிரிவை" ஸ்தாபிப்பது உட்பட பாகிஸ்தான் இராணுவப் படையை பயிற்றுவித்து உபகரணங்கள் வழங்கி நிலைநிறுத்த இஸ்லாமாபாத் விடுத்துள்ள 350 மில்லியன் டொலர் உதவியைப் பற்றி அமெரிக்கா அக்கறை செலுத்துகின்றது.

வாஷிங்டன் ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" கொண்டு சென்றுள்ளது. 2001ல் இருந்தே அல் கைடா மற்றும் தலிபான் தலைமைத்துவத்தின் பிரதான உறுப்பினர்களை வேட்டையாட பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அமெரிக்க புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளனர். அமெரிக்க இராணுவம் பிற இராணுவங்களைப் பயன்படுத்தி மற்றும் சாத்தியமான வகையில் விசேட படைத் துருப்புக்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குள் மூடிமறைக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதை கடந்த ஐந்து வருட கால சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த அக்டோபரில், ஒரு மசூதி மீதான அழிவுகரமான ஏவுகனைத் தாக்குதலில் அமெரிக்க இராணுவம் நேரடியாகத் தலையிட்டிருந்ததாக பஜுவர் பிரதேசத்தின் உள்ளூர் கிராமத்தவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்தத் தாக்குதலில் 80க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த வாரம் வாஷிங்டனின் பகிரங்க நிலைப்பாடுகள் கடுமையடைந்து கொண்டிருப்பதானது மேலும் மிக விரிவான அமெரிக்க நடவடிக்கைகள் தயாராகிக்கொண்டிருப்பதற்கான எச்சரிக்கையாகும். ஜூலை 3 அன்று, "அமெரிக்கா பாகிஸ்தானில் தலிபான்களை வேட்டையாடுகிறது" என்ற தலைப்பில் ஏசியா டைம்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை ஒன்று, வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. அதன் மூலாதாரங்களின் படி, வடக்கு மற்றும் தெற்கு வஸிரிஸ்தானில் குறைந்த பட்சம் நான்கு பிரதேசங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. "பாகிஸ்தான் படைகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்குதல்களில் செயற்படும் அதே வேளை, பாகிஸ்தானுக்குள்ளான நடவடிக்கைகள் பெரும்பாலும் விமானப்படை பலத்துடன் அமெரிக்காவால் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும். இருப்பினும், எல்லா விவகாரங்களிலும், உதாரணமாக, தாக்க வேண்டிய இலக்குகள் தொடர்பான விபரங்களை பாகிஸ்தானியர்களுக்கு வழங்குவதன் மூலம் அமெரிக்கா முன்நோக்கித் தள்ளும்" என்று அந்த கட்டுரை குறிப்பிடுகின்றது.

பாகிஸ்தானுக்குள் இராணுவ நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை விரிவுபடுத்துவதை புதன்கிழமை வெளியான நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. "பாகிஸ்தானில் அல் கைடா அச்சுறுத்தலை அணுகுவது எவ்வாறு என்பதை அளவிடுவதற்காக, அமெரிக்க அதிகாரிகள் அண்மைய வாரங்களாக சந்தித்து வருகின்றனர். சிலர் சொல்வதன்படி இது பகிரங்க மற்றும் இரகசிய சக்திகளை உள்ளடக்கும் புதிய ஆக்கிரோஷமான மூலோபாயத்தை தோற்றுவிக்கும். அல் கைடா இலக்குகள் மீதான எரிச்சலூட்டும் தாக்குதல்கள் போதுமானவையல்ல என்ற கவலை வளர்ச்சியடைவதாக அவர்கள் தெரிவிக்கின்ற போதிலும், ஜெனரல் முஷராப்பை அனைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான சில புதிய அமெரிக்க நகர்வுகள் இரகசியமாக வைக்கப்படலாம்," என அந்தக் கட்டுரை தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் சம்பவத்தில், எந்தவொரு தலையீட்டையும் மறுக்கும் முஷராப்பின் நடவடிக்கையில் ஒரு சிலர் மடையர்களாகலாம். உள்நாட்டில் அதன் சொந்த ஆழமான அரசியல் நெருக்கடியை தடுக்கும் எதிர்பார்ப்பில், புஷ் நிர்வாகம் இரக்கமின்றி இன்னுமொரு நாட்டை ஸ்திரமற்றதாக்குகிறது. இது நிச்சயமாக மேலும் அமெரிக்க விரோத உணர்விற்கு எண்ணெய் வார்க்கும் அதே வேளை பரந்தளவில் பிராந்தியம் பூராவும் எதிரொலிக்கச் செய்யும்.