World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan navy commander stonewalls inquiry into disappearance of SEP member

இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி காணாமல் போயுள்ள சோ.ச.க. உறுப்பினர் தொடர்பான விசாரணைக்கு முட்டுக்கட்டை இடுகின்றார்

By our correspondents
17 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

வட இலங்கையில் காணாமல் போன சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பான வழக்கில், ஒரு பிரதான வீதித் தடையில் கடமையில் இருந்த சிப்பாய்கள் தொடர்பான விபரங்களை வழங்க கடற்படைக் கட்டளைத் தளபதி உறுதியாக மறுத்துள்ளார். இது ஒரு குறுக்கீடான புதிய அபிவிருத்தியாகும்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் கடைசியாக மார்ச் 22 அன்று, புங்குடு தீவையும் ஊர்காவற்துறையையும் இணைக்கும் நீண்ட கடல் பாலத்தின் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீதித் தடையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த இருவரும் இரவு ஒரு திருமண வீட்டுக்கு செல்வதற்காக புங்குடு தீவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சில ஆடைகளை எடுத்துக் கொண்டு ஊர்காவற்துறை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர்.

இத்தகைய வடக்கு தீவுகளில் இறுக்கமாக நிலைகொண்டிருக்கும் கடற்படை, பாலத்தின் இரு முனைகளிலும் சோதனை நிலையங்களை பராமரித்து வருகின்றது. விமலேஸ்வரனும் மதிவதனனும் சுமார் மாலை 5 மணியளவில் ஊர்காவற்துறையில் வேலனை நுழைவாயிலில் காணப்பட்டுள்ளனர். பின்னர் சுமார் மாலை 6.30 மணியளவில் புங்குடு தீவு கடற்படை சோதனை நிலையத்தில் காணப்பட்டுள்ளனர். அவர்கள் வேலனைக்குத் திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்குவதை சாட்சிகள் நேரில் கண்டுள்ளனர். அங்கிருந்து புறப்பட்ட பின்னர், பாலத்தின் இடை நடுவில் வேறு எங்கும் செல்ல வழியில்லாததால் அவர்கள் வேலனையில் உள்ள சோதனை நிலையத்தையே வந்தடைந்திருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 3 ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, கஞ்சதேவ அல்லது வேலனை கடற்படை முகாமுக்கு பொறுப்பான கட்டளை அதிகாரி, கடல் பாலத்தின் நுழைவாயிலில் ஒரு வீதித் தடை இருப்பதைக் கூட மறுத்துவிட்டதாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வேலனை மற்றும் புங்குடு தீவில் உள்ள கட்டளைத் தளபதிகளிடம் விசாரணை நடத்துவதை தொடர்ந்தும் கைவிட்டிருந்த ஊர்காவற்துறை பொலிசார், இதற்கு முன்னதாக ஜூலை 27 நடந்த விசாரணையின் போது சாட்சிகளின் பட்டியல் ஒன்றை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டதை அடுத்தே இறுதியாக செயற்பட்டிருந்தனர்.

ஊர்காவற்துறையின் உதவி பொலிஸ் பரிசோதகர் சரணபால தனது தலைமை அலுவலக பரிசோதகர் (எச்.கியு.ஐ.) கொடுத்த கடிதம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். "முறைப்பாட்டின் முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேலனைத்துறை வீதித் தடையில் பணியில் இருந்த அதிகாரிகளின் பட்டியல் ஒன்றை ஊர்காவற்துறை பொலிசுக்கு வழங்குமாறு என்னால் கஞ்சதேவ முகாமின் கட்டளை தளபதிக்கு அறிவிக்கப்பட்ட போதும், குறிப்பிட்ட இடத்தில் அத்தகைய ஒரு வீதித் தடை பராமரிக்கப்படவில்லை என அந்தக் கட்டளை அதிகாரியால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது," என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அதிகாரியின் கூற்று முற்றிலும் பொய்யானதாகும். விமலேஸ்வரனின் சகோதரியான சித்திரகுமார் ஜெயசித்ரா பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது கணவருடன் புங்குடு தீவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது சுமார் மாலை 5 மணிக்கு வேலனை சோதனை நிலையத்தில் விமலேஸ்வரனையும் மற்றும் மதிவதனனையும் தான் கண்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரையும் கடற்படை உத்தியோகத்தர்கள் சரீர சோதனை செய்வதையும் சீருடை அணிந்திராத இரு புலாணாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்வதையும் அவர் நேரில் கண்டுள்ளார்.

ஜெயசித்ராவின் வாக்குமூலத்தையும் அதே போல் மீண்டும் ஊர்காவற்துறைக்கு திரும்புவதற்காக கடல் பாலத்தை நோக்கி செல்வதற்கு முன்னதாக விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடு தீவு சோதனை நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்குவதை கண்ட, அருள் என்றழைக்கப்படும் செல்வதுறை ரஞ்சுதனின் வாக்குமூலத்தையும் பொலிஸ் எச்.கியு.ஐ. நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில் நிராகரித்துள்ளார். "இந்த நபர்களின் வாக்குமூலங்களில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுபவர்கள் தொடர்பாக எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை," என அந்தக் கடிதம் தெரிவிக்கின்றது.

வேலனை கட்டளை அதிகாரியின் பிரகடனம் கெடுநோக்குள்ள உட்பொருளைக் கொண்டதாகும். விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் காணாமல் போன சம்பவத்துக்கும் அவரது சிப்பாய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டால், இந்த அடிப்படைத் தகவலை வழங்க அவருக்கு தயக்கம் இருந்திருக்காது. புங்குடு தீவில் உள்ள கட்டளைத் தளபதி, காணாமல் போன இருவரும் தீவுக்குள் நுழைந்தது மற்றும் வெளியேறியது தொடர்பான தகவல்களை பதிவுப் புத்தகத்தில் பார்த்து சோ.ச.க. க்கு அறிவிப்பதில் எந்த சிரமும் காட்டவில்லை.

வீதித் தடை இருப்பதை மோசமான முறையில் மறுக்கும் வேலனை கட்டளைத் தளபதி, தனக்கு கீழ் உள்ள சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் அல்லது பதிவுப் புத்தகம் பரிசோதிக்கப்படுவதையும் தவிர்க்க முயற்சிக்கின்றார். பொலிசாரின் நடவடிக்கைகள் என்பன இந்த இருவரும் காணமல் போயுள்ளமை தொடர்பான எந்தவொரு அக்கறையான விசாணையை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை மூடி மறைப்பதிலேயே அவர்கள் அதிகம் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. உள்ளூர் வாசிகளுடனான சாதாரண விசாரணைகள் கூட குறிப்பிட்ட இடத்தில் வீதித் தடை இருப்பதை உறுதிப்படுத்தும்.

புங்குடு தீவு கடற்படை கட்டளைத் தளபதிக்கு இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் அழுத்தம் கொடுக்காத போதிலும், இந்த இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பான முறைப்பாடொன்றைப் பெற்றுக் கொண்டாக அங்குள்ள கட்டளைத் தளபதி விபுல ஹேமந்த பீரிஸ் பொலிசுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். நீதவானுக்கு எச்.கியு.ஐ. அனுப்பிய கடிதம், "பிரிஸ்ஸால் இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், காணாமல் போன இருவர் தொடர்பாகவும் எந்தவொரு தகவலையும் பெற்றுக்கொள்வது சாத்தியப்படவில்லை என பொலிசுக்கு அறிவித்ததாகக்" கூறுகின்றது.

வழக்கை விசாரித்த நீதவான் கடிதத்தின் உள்ளடக்கத்தை நிராகரித்ததோடு ஆகஸ்ட் 24 வேலனை கட்டளைத் தளபதியை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டளையிட்டார். பொலிஸ் மற்றும் கடற்படையின் முட்டுக்கட்டையிடும் செயற்பாட்டினால் இந்த வழக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இழுபடுகின்றது. காணாமல் போனவர்கள் சம்பந்தமான விசாரணையில் சுயாதீனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிசார் தவறியுள்ளதோடு, சோ.ச.க. கண்டுபிடித்த விபரங்களைப் பின்பற்றவும் அவர்கள் தவறியுள்ளனர்.

அரசாங்கம் கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்ததில் இருந்தே இடம்பெற்ற நூற்றுக்கணக்கான காணாமல் போன சம்பவங்கள், கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் பாதுகாப்பு படைகள் சம்பந்தப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச விமர்சனங்களையிட்டு அதிக பதட்டத்துடன் உள்ள அரச இயந்திரம், இவற்றுடன் இராணுவத்திற்குள்ள தொடர்பை மூடி மறைக்க முரட்டுத் துணிச்சலுடன் ஈடுபடுகின்றது. ஏறத்தாழ இந்த வழக்குகளில் இதுவரை எவரும் குற்றஞ்சாட்டப்பட வில்லை.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின்படி, வடக்கு மற்றும் கிழக்கிலும் அதே போல் கொழும்புத் தலைநகரிலும் 2006 ஜனவரி முதல் 2007 ஜூன் வரை 1,100 க்கும் மேற்பட்ட கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன. கண்காணிப்புக் குழுவின் ஆசிய நெறியாளர் பிரட் அடம்ஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "இலங்கை அரசாங்கம் 'இழிந்த யுத்த' வழிமுறையைப் பயன்படுத்த பாதுகாப்புப் படைகளுக்கு வெளிப்படையாக பச்சைக்கொடி காட்டியுள்ளது. புலிகளால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் அரசாங்கத்தின் கொலை, 'காணாமல் ஆக்குதல்' மற்றும் இடம்பெயர்ந்தவர்களை பலாத்காரமாக மீண்டும் இருந்த இடத்துக்கு அனுப்புதல் போன்ற பிரச்சாரங்களுக்கு விலக்களிப்பதாகி விடாது."

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. துணைச்செயலாளர் நாயகம் ஜோன் ஹொல்மெஸ் இலங்கைக்கு கடந்த வாரம் வந்திருந்த போது, இந்த நாடு தொண்டு ஊழியர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாகும் என ராய்ட்டருக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பதவிக்கு வந்து --கடந்த 18 மாதங்களில் 30 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். ஏனைய தொண்டு நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 34 என அறிவித்துள்ளன.

அரசாங்கம் உடனடியாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவும் ஹொல்மெஸ்சும் புலிகளுக்கு சார்பாக இருப்பதாகவும் மற்றும் "அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படைகளதும் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும்" குற்றஞ்சாட்டியது. அரசாங்கத்தின் பிரதான கொறடாவான ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ஹொல்மெஸ் புலிகளிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே இலங்கையின் மதிப்புக்கு பங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தான் நம்புவதாகத் தெரிவித்தார். "பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களையும் நாங்கள் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். ஆகவே புலிகளை ஆதரிக்கும் ஹொல்மெஸ்சும் ஒரு பயங்கரவாதியே," என அவர் பிரகடனம் செய்தார்.

இத்தகைய கண்டனத்தின் மனநோய்க்கான பண்பு, அரசாங்கத்திற்கு ஒழித்து மறைத்து வைக்க வேண்டிய ஒரு விவகாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது. கண்காணிப்புக் குழு அல்லது ஹொல்மெஸ் முன்வைத்த உண்மைகளை சவால் செய்ய அது முயற்சிக்கவில்லை.

விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பான விடுதலையை உறுதி செய்ய அவசர விசாரணையொன்றை முன்னெடுக்க இலங்கை அதிகாரிகளைக் கோருமாறு நாங்கள் சோ.ச.க. ஆதரவளர்களிடமும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்கள் அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தைப் பயன்படுத்தவும்.

***

எமக்குக் கிடைத்த கடிதங்களில் சிலவற்றை இங்கு பிரிசுரிக்கின்றோம்:

ஜூலை 27 கொழும்பில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த மாநாடு பின்வரும் தீர்மானத்தை ஒருதலைப் பட்சமாக நிறைவேற்றியுள்ளது:

"இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இந்த மாநாடு, மார்ச் 22 அன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊர்காவற்துறை தீவில் காணாமல் போன சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் தொடர்பாக முழு அறிக்கையொன்றை வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை பலமாகக் கோருகின்றது.

"அவர்கள் புங்குடு தீவு மற்றும் ஊர்காவற்துறையை இணைக்கும் கடல் பாலத்திற்குள் நுழைந்த பின்னர் அவர்கள் காணாமல் போனமைக்கு இராணுவமே நேரடிப் பொறுப்பாகும். பாலத்தின் இரு முனைகளிலும் கடற்படை சோதனை நிலையங்களை பராமரிப்பதோடு இந்தப் பிரதேசம் தொடர்ச்சியாக கடற்படையின் ரோந்துக்கு உட்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னரான ஆதாரங்களை சோ.ச.க. திரட்டி அவற்றை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளது.

"அவர்கள் காணாமல் போய் ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், அரசாங்கமோ அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவோ இன்னமும் தக்க விசாரணைகளை நடத்தவில்லை. விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமைக்கு அரசாங்கமே பொறுப்பு என இந்த மாநாடு கூறிவைப்பதோடு அவர்களின் பாதுகாப்பான விடுதலைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றது.

"சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் தக்கமுறையிலான கடுமையான விசாரணையை மேற்கொள்ள அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தவறியுள்ளனர். சிவப்பிரகாசம் மரியதாஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் முல்லிப்பொத்தானையில் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. இராணுவம் இந்தக் கொலைக்குப் பின்னர் மரியதாஸ் ஒரு புலிகள் இயக்க உறுப்பினர் என்ற பொய்ப் பிரச்சாரத்தை பிரதேசத்தில் பரப்பிவிட்டிருந்தது. ஒரு வருடம் கடந்தும் இந்தக் குற்றத்திற்காக எவரையும் கைது செய்யவோ அல்லது குற்றஞ்சாட்டவோ பொலிசார் தவறியுள்ளமை அந்த ஆதாரத்தை பலமாக மெய்ப்பிக்கின்றது.

"இத்தகைய காணாமல் போகும் சம்பவங்களும் படுகொலைகளும், இந்த நபர்களுக்கும் சோ.ச.க. க்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் குற்றங்கள் என இந்த மாநாடு கண்டனம் செய்கின்றது. சோ.ச.க. யுத்தத்தையும் மற்றும் அனைத்து விதமான இனவாத அரசியலையும் எதிர்ப்பதாலும் மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்ட போராடுவதாலும் அதற்கு எதிராக இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

***

அன்பின் ஐயா,

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளன் என்ற வகையில், நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ள செய்தி எனக்கு மிகவும் கவலை தருகின்றது. நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் "காணாமல் போகும்" அல்லது வெளிப்படையாக படுகொலை செய்யப்படும் ஒரு இழிவான உள்நாட்டு யுத்த சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது அதிர்ச்சியூட்டுகிறது. அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கும் பிரதிபலிப்பு இரக்கமற்ற அலட்சியமாக இருக்கின்ற அதே வேளை, இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை உலகம் பூராவும் உள்ள நூற்றுக்கணக்கான தோழர்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன். இந்த முயற்சியில் எங்களுக்கு உடனடியாக உதவுமாறு உங்களுக்கு (அல்லது உங்களது அமைச்சில் மனசாட்சி உள்ள எவருக்கேனும்) வேண்டுகோள் விடுக்கின்றேன்.

உண்மையுள்ள,

கே.எம்

கலிபோர்னியா, அமெரிக்கா