World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

No Sri Lankan legal aid for young maid facing death sentence in Saudi Arabia

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளம் பணிப்பெண்னின் சட்ட நடவடிக்கைக்கு இலங்கை உதவவில்லை

By Vilani Peiris
21 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

சவுதி அரேபிய உயர் நீதி மன்றத்திற்கு மேன் முறையீடு செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை பணிப்பெண் ரிஸான நஃபீக்கின் விதி அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. தனது எஜமானின் குழந்தையை கொலை செய்ததாக அவருக்கு கடந்த ஜூன் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கானது சவுதி சட்ட அமைப்பின் பிற்போக்கு பண்பை மட்டுமன்றி, இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கில் உள்ள இலட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதுகாக்கத் தவறியுள்ளதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

19 வயதான நஃபீக், சவுதி அரேபியாவின் தவாதமி என்ற இடத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்ய இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்த போதிலும், ஏனைய பல வேலைகளுக்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பராமரிக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். குழந்தையைப் பராமரிப்பதில் அவருக்கு அனுபவமோ பயிற்சியோ இருக்கவில்லை. 2005 மே மாதம் நஃபீக் குழந்தைக்கு போத்தலில் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் குழந்தை இறந்து போனது.

நஃபீக் கூறியதன் படி, அவர் தனிமையில் இருந்து குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த போது குழந்தைக்கு மூச்சுத் திணறியது. அவர் உதவி கேட்டு கத்திய போதிலும், குழந்தையின் தாய் வருவதற்கு முன்னர் அது உயிரிழந்தது. குழந்தையின் குரல்வளையை நெரித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டி அதன் பெற்றோர் நஃபீக்கை தவதாமி பொலிசில் ஒப்படைத்தனர். அந்தக் குடும்பத்துக்கு பக்கச் சார்பாக நடந்துகொண்ட பொலிசார், கொலையை ஒப்புக் கொண்டு ஒரு அறிக்கையில் கையெழுத்திடுமாறு நஃபீக்கிற்கு அழுத்தம் கொடுத்தனர்.

பெப்பிரவரியில் நடந்த வழக்கில் நீதிமன்றத்தில் வைத்து ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்த நஃபீக், பொலிசார் தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்தார். அவரது அறிக்கையை நிராகரித்த தவதாமி நீதிமன்றம் ஜூன் 16 நஃபீக்குக்கு மரண தண்டனை விதித்தது. சவுதி அரேபியாவில் பகிரங்கமாக தலையைத் துண்டித்தே மரண தண்டனை நிறைவேற்றப்படும். மேல் முறையீட்டுக்கான காலக்கெடு ஜூலை 16 ஆகும்.

ஒரு இளம் ஒப்பந்தத் தொழிலாளியின் தலைவிதியைப் பற்றி முற்றிலும் அலட்சியம் செய்த இலங்கை அரசாங்கம், எந்தவொரு சட்ட உதவியும் வழங்காமல் அவரை தனிமைப்படுத்தி உள்ளது. அத்தகைய உதவி இன்னுமொரு நாட்டின் இறைமையை மீறுவதற்கு சமமானதாகும் என அது கூறிக்கொள்கின்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் கெஹேலியே ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தனது உத்தியோகத்தர்கள் ஆற்றல் மிக்க ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கலாச்சாரம், பழக்க வழக்கம் மற்றும் அவர்கள் தொழில் செய்யப் போகும் நாட்டின் சட்டம் பற்றியும் கல்வியறிவூட்டுகின்றனர் எனக் கூறினார். "ஆயினும் அவர்கள் பிரச்சினையை எதிர்கொள்ளும் போது அந்த நாட்டின் சட்டமே செயற்படும்," என அவர் பிரகடனம் செய்தார்.

மேன் முறையீடு செய்வதற்கு தேவையான பணத்தை வழங்கவும் அரசாங்கம் பங்களிப்பு செய்யவில்லை. ரியாத்தில் உள்ள சட்டத்தரணி காடெப் ஃபாஹட் அல்-ஷம்மாரி, 250,000 சவுதி ரியால்களை கோருகின்றார் (67,000 அமெரிக்க டொலர்கள்). இது நஃபீக்கின் குடும்பத்தால் நினைத்துப் பார்க்க முடியாத தொகையாகும். ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு முதலில் 50,000 சவுதி ரியால்களை வழங்கியதோடு ஏனைய நிதி உதவியாளர்கள் எஞ்சிய தொகைக்கும் பங்களிப்பு செய்துள்ளனர்.

"இந்த வழக்குடன் தொடர்புபட்ட அனைத்து விபரங்களுடன் நீதிமன்றத்தில் ஒரு எதிர் மனுவைத் தாக்கல் செய்வதற்கான ஆவனங்களை தற்போது தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்" என அல்-ஷம்மாரி அரேப் நியுஸுக்கு தெரிவித்துள்ளார். நஃபீக்கின் "ஒப்புதல் வாக்குமூலம்" அச்சுறுத்தல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதை ஓரங்கட்ட அவர் முயற்சிக்கின்றார். குழந்தை இறக்கும் போது நஃபீக்குக்கு இளம் பிராய வயது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஒரு மீளாய்வையும் இந்த சட்டத்தரணி கோருகின்றார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்த அக்கறையின் காரணமாக இலங்கை அரசாங்கத்தால் இந்த விவகாரத்தை தள்ளிவைக்க முடியாமல் போனது. ஒரு வெற்று ஆதரவை வெளிப்படுத்திய உப வெளிநாட்டு அமைச்சர் ஹுசைன் பஹிலா, இந்த யுவதியைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக ஜூலை 20 அன்று எக்காளமிட்டார். அவர் சவுதி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதற்காக, நஃபீக்கின் தந்தை மொஹமட் சுல்தான் நஃபீக், மற்றும் அவரது தாயார் ஃபரீனா நஃபீக்குடன் சவுதி அரேபியாவுக்கு பயணித்தார்.

பஹிலா வழங்கிய பேட்டியொன்றில் தனது மூஞ்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் பண்பை வெளிப்படுத்தினார். "எங்களால் தூதரக உதவிகளை வழங்க முடியும். ஆனால் சட்ட சேவைகளுக்காக அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விதிமுறைகள் அங்கு கிடையாது," என அவர் தெரிவித்தார். குற்றவாளியாக்கப்பட்டுள்ள யுவதியின் உயிரைப் பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கத்தால் இப்போது கொஞ்சமே செய்ய முடியும்" என அவர் குறிப்பிட்டார்.

நஃபீக்கின் எஜமானர்களை சந்தித்து அவர்களின் கருணைக்கு வேண்டுகோள் விடுக்க பஹிலா முயற்சித்த போதிலும் அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர். குழந்தையின் தந்தையான நாய்வ் ஜிசியன் காலிவ் அல் ஒட்டைபோ, எந்த விட்டுக்கொடுப்பையும் நிராகரித்துவிட்டார். நஃபீக்கின் பெற்றோர்கள் தமது மகளை சிறையில் சென்று பார்த்தனர். அவள் அவர்களுடன் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என கெஞ்சினாள். எந்தவொரு முன்னேற்றமும் கிட்டாத போதிலும், ஜூலை 29 நாடு திரும்பிய பஹிலா, "சாத்தியமானதை நாங்கள் செய்துள்ளோம், அது நல்ல பயனளிக்கும் என நான் நம்புகிறேன்" என்று தற்பெருமை கொண்டார்.

நஃபீக்கை விடுதலை செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, இலங்கை அதிகாரிகள் கவனத்தை இரண்டாந்தர பிரச்சினைகளுக்குள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். நஃபீக்குக்கு 23 வயது என ஒரு பிறப்புச் சான்றிதழைக் காட்டி சவுதி அரேபியாவில் வேலைக்கு ஒப்பந்தம் செய்யும்போது அவருக்கு வயது 17 ஆகும். இப்போது அரசாங்கம் வயது குறைந்த தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்த பொறுப்பாளிகள் தொடர்பாக கூச்சல் போடுகின்றது.

ஆகஸ்ட் 2, அமைச்சரவை பேச்சாளரான அனுர பிரியதர்ஷன யாப்பா ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டதாவது: "கிராம சேவையாளர்கள் முதல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒவ்வொரு நபருக்கும் எதிராக அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்." நஃபீக்கை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து அரசாங்கத்தின் கைகளைக் கழுவிட்ட அவர், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இந்த வழக்கில் ஈடுபாடு கொண்டுள்ளன என பிரகடனம் செய்தார்.

நஃபீக்கின் வழக்கானது சவுதி அரேபியாவிலும் மத்திய கிழக்கிலும் வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலைமைகளை கோடிட்டுக் காட்டுகின்றது. அடிமைத்தனமான தொழிலை செய்யத் தள்ளப்பட்டுள்ள இவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுவதோடு ஒரு சில சட்ட உரிமைகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டுப் பணிப்பெண்ணாக இருப்பவர்கள் கிட்டத்தட்ட அடிமைகள் போல் நடத்தப்படுவதோடு அதிக மணித்தியாலங்கள் வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளதுடன் அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

நஃபீக்கின் தாயார் அசோசியேடட் பிரஸ்ஸுக்கு கூறியதாவது: "எனது மகள் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளாள் எனக் கேள்விப்பட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் மிகவும் அப்பாவி மற்றும் அத்தகைய ஒரு குற்றத்தை செய்வது பற்றி சிந்திக்கூட அவள் பெரியவள் அல்ல. தான் அன்றாடம் மேலதிகமாக வேலை செய்ய வேண்டியிருப்பதாகவும் காலை மூன்று மணிக்கு எழும்பி பின்னிரவு வரை வேலை செய்ய வேண்டும் எனவும் பல முறை அவள் எங்களுக்கு எழுதியிருந்தாள். தான் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகிறாள் மற்றும் எஜமானால் சரீர துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகிறாள் என்பதையும் அவள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள். அவளுக்கு வீட்டை பராமரிக்கும் வேலையே வழங்கப்பட்டிருந்தது. குழந்தையை அல்ல. அது அவளின் ஒப்பந்தத்தின் பகுதி அல்ல."

சவுதி அரேபியாவில் உள்ள 8 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 400,000 பேர் இலங்கையர்களாவர். இந்த பிரமாண்டமான எண்ணிக்கையிலான தொழிலாளர் படையின் மத்தியில் எந்தவொரு அதிருப்தியோ அல்லது எதிர்ப்போ எழாமல் நசுக்கும் வழிமுறையாக நாட்டின் கொடூரமான சட்டங்களை அமுல்படுத்த சவுதி அரேபிய அரசாங்கம் தயங்குவதில்லை. இது வரை இந்த ஆண்டில் மட்டும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட 103 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த பெப்பிரவரியில் நான்கு இலங்கையர்களும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவர்கள் சார்பாக உக்கிரமாக தலையீடு செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்பது, மத்திய கிழக்கில் இருந்து வரும் பணத்தில் அதன் பொருளாதாரம் தங்கியிருப்பதினாலாகும். ஒரு மதிப்பீட்டின் படி கடந்த ஆண்டு வெளிநாட்டில் வேலை செய்யும் 1.5 மில்லியன் இலங்கை தொழிலாளர்கள் 2.3. பில்லியன் அமெரிக்க டொலர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்த தொகை 1.09 டொலர் பில்லியன்களாகும். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 17 வீத அதிகரிப்பைக் காட்டுகிறது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தீவை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் அவருக்கு அத்தியாவசியமானதாகி உள்ளது. அரசாங்கம் கடந்த ஆண்டு பெருந்தொகையான இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்ததோடு இந்த ஆண்டும் மீண்டும் இராணுவ செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷ மத்திய கிழக்குக்கு மலிவு உழைப்பை விற்பனை செய்யப் பேணுவதை முன்நிலைப்படுத்தியுள்ளாரே அன்றி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் நிலைமையை எதிர்ப்பதை அல்ல. ஆதலால், ரிஸ்ஸான நஃபீக்கின் தலைவிதி பற்றிய அரசாங்கத்தின் அக்கறை எல்லாவற்றிலும் மிகக் குறைந்தபட்சமானதாகும்.