World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Bhutto and Sharif decry dictatorship, while seeking a deal with Pakistan's US-backed military regime

புட்டோவும் ஷெரிப்பும் சர்வாதிகாரத்தை பழித்துரைத்தாலும், அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியுடன் உடன்பாட்டைக் காண விரும்புகின்றனர்

By Keith Jones
26 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

நடைமுறையில் இராணுவச் சட்டத்தின்கீழ் பாக்கிஸ்தான் இப்பொழுது இருபத்தி மூன்று முழு நாட்களைக் கடந்துள்ளது. அடிப்படை குடிமை உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள் என்று ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பாளர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்க எதிர்ப்பு அணிகளை போலீசார் தடியடிப் பிரயோகம் செய்து கலைக்கின்றனர்; ஏராளமான மக்கள் அன்றாடம் கைது செய்யப்படுகின்றனர்; தளபதி-ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்பின் ஆட்சியை எதிர்க்கும் குடிமக்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று அமெரிக்க ஆதரவு உடைய இராணுவ மேலாதிக்கம் கொண்ட அரசாங்கம் அறிவித்துவிட்டது.

ஆயினும்கூட, இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் சீற்றம் அடைந்தாலும், பாக்கிஸ்தானின் மரபார்ந்த முதலாளித்துவ நடைமுறையின் அனைத்துப் பகுதிகளும் இராணுவம் மற்றும் வாஷிங்டனில் இருக்கும் அதன் ஆதரவாளர்கள், நிதியளிப்பவர்களுடன் ஓர் உடன்பாட்டிற்குத்தான் முயன்று கொண்டு வருகின்றனர்.

இராணுவ ஆட்சி இருமுறை பூட்டோவை வீட்டுக் காவலில் வைத்து அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொடுமையாக நடத்திய பின்தான், பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) "ஆயுட்காலத் தலைவர்" நவம்பர் 12ம் தேதி தான் முஷாரஃப்புடன் அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சு வார்த்தைகளை "உறுதியாக" முடித்துவிட்டதாக அறிவித்தார்.

இப்பொழுது புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு கீழ்ப்படிந்து, தன்னுடைய கட்சியான PPP இராணுவ ஆட்சி நடத்த இருக்கும் ஜனவரி 9ம் தேதி போலித் தேசிய மற்றும் மாநிலதேர்தல்களில் பங்கு கொள்ளப்போவதாக அடையாளம் காட்டியுள்ளார். பதவியில் இருந்து முன்னர் அகற்றப்பட்ட, நேற்று பாக்கிஸ்தானுக்கு திரும்பியுள்ள முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), உட்பட மற்ற முக்கிய கட்சிகளும் இதே வழியில் செல்லக் கூடும் என்று தோன்றுகிறது; இதையொட்டி அவை இராணுவ ஆட்சியின் நேரடி உடந்தையாளர்களாக இருப்பர்.

இராணுவ ஆட்சி நடைமுறையில் இருக்கும்போதே தேர்தல்கள் நடத்தப்படக்கூடும் என்று முஷாரஃப் குறிப்புக் காட்டியுள்ளார்; இதன் பொருள் பெரும்பாலான பிரச்சாரங்கள் சட்டவிரோதம் ஆகிவிடும்; அரசாங்கம் மற்றும் இராணுவம் பற்றி மிகக் குறைவான விமர்சனங்களே அனுமதிக்கப்படும். இதையும் விட முக்கியமாக, ஒரு வலுவான ஜனாதிபதி ஆட்சி மூலம், ஒரு இராணுவ ஆதிக்கம் நிறைந்த தேசியப் பாதுகாப்புக் குழு முக்கிய அரசாங்க செயல்கள்மீது அரசியல் அமைப்பு அடிப்படையில் பெரும் மேற்பார்வை அதிகாரங்களைக் கொண்டிருப்பதன்மூலம் மற்றும் முஷாரஃப்பின் இராணுவ ஆட்சியின் கீழ் நீதித்துறை பாக்கிஸ்தான் தளபதிகளால் "இடையூறு விளைவிப்பவர்கள்" எனக் கருதப்படுபவர்களைக் களையெடுத்து வருவதன் மூலம், பாக்கிஸ்தான் அரசின் மீது இராணுவம் முக்கிய கட்டுப்பாட்டை தொடர்ந்து வைத்திருக்கும் அரசியல் நடைமுறைக்கு ஒரு ஜனநாயக முகப்பு கொடுத்து நெறிப்படுத்தும் விதத்தில்தான் தேர்தல்கள் வடிவமைக்கப்படும்.

கடந்த வியாழனன்று "எங்களுடைய எதிரிகள் எளிதில் வெற்றி பெறுவதை நாங்கள் விரும்பவில்லை" என கூறி, PPP ஜனவரி 8 ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல்களில் முழுமையாக வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என பூட்டோ அறிவித்துள்ளார். ஞாயிறன்று அவரே தேசிய சட்டமன்றத்திற்கு தெற்கு சிந்துப் பகுதியில் இருந்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார். "இறைவன் விருப்பப்படி, தேர்தல்கள் நடைபெறும், மக்கள் கட்சி வெற்றி பெறும்" என்று பூட்டோ நிருபர்களிடம் கூறினார்.

தேர்தலில் போட்டியிடலாமா என்பது பற்றி தன்னுடைய PPP கட்சி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று பூட்டோ கூறுகிறார். இது முஷாரஃப்புடன் இழிந்த வகையில் ஒத்துழைக்கும் செயலுக்கு அவருடைய கட்சியிலேயே இருக்கும் எதிர்ப்பைக் கடந்துவருவதற்குத்தான் என்பது தெளிவு; மிருகத்தனமான இராணுவ ஆட்சியின் தன்மையினாலோ அல்லது பெருகி வரும் பொருளாதார நெருக்கடியின் விளைவினாலோ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்கள் திடீரென அதிகரித்தால் PPP க்கு தப்பித்துக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் இது இருக்கிறது. (தற்போதைய இடைக்கால அரசாங்கம் 15 முதல் 20 சதவீதம் வரையிலான எண்ணெய் விலை உயர்வை அறிவிக்கும் நிலையிலிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.)

பாக்கிஸ்தானின் இரண்டாம் பெரிய கட்சி எனக் கருதப்படுவதின் தலைவரான, 1999ம் ஆண்டு இராணுவ ஆட்சி மூலம் முஷாரஃப் அகற்றிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப், ஒரு 17 கட்சி கூட்டணிக்கு வழி நடத்துவதாக உறுதிபூண்டுள்ளார்; All Parties Democratic Movement என்ற பெயரில் உள்ள அது தேர்தல்களைப் புறக்கணிக்கும். ஆனால் அவரும் தன்னுடைய கட்சியை தேர்தல்களில் பங்கு பெறுவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை அனைத்தையும் நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அவருடைய சகோதரரும் நெருக்கமான ஆலோசகருமான ஷாபாஸ் ஷெரிப் நவாஸோடு பாக்கிஸ்தானில் சேர்ந்து கொள்ளுவதற்காக லண்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்பே நிருபர்களிடம் PPP தேர்தல்களில் பங்கு பெற்றால் தேர்தல் புறக்கணிப்பு ஒத்து வராது என்று கூறியிருந்தார்.

இவருடைய வேட்புமனுவின் தன்மை முஷாரஃப் சார்பு தேர்தல் குழுவினால் முஷாரஃப்பின் ஆட்சியில் நடத்தப்பட்ட போலித்தனமான விசாரணையில் தேசத் துரோகம், கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் காட்டி 2000 த்தில் இவர் தண்டிக்கப்பட்டதைக் காரணமாகக் கூறவும் கூடும் என்று இருந்தாலும், திங்களன்று நவாஸ் ஷெரிப்பே வேட்பு மனுவைத் தாக்கல் செய்யக்கூடும் என்று ஷாபாஸ் கூறினார்.

PPP, PML(N) மற்றும் மூன்றாம் பெரிய கட்சி எனக் கூறக்கூடிய அடிப்படைவாத முத்தாஹிதா மஜ்லிஸ்-ஏ-அமல் (MMA) ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறையும் கூட்டாக மக்களை இராணுவ ஆட்சிக்கு எதிராகத் திரட்ட இருப்பதாகக் கூறியுள்ளன; ஆனால் கடைசி நேரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் முஷாரப்-எதிர்ப்பு போராட்டத்தை எவர் தகர்த்தனர் என்றுதான் பூசலிட்டு வந்தன. பூட்டோவிற்கும் முஷாரஃப்பிற்கும் இடையே நீண்டகாலமாக பின்புற தொடர்புகள் இருப்பதை MMA சுட்டிக் காட்டியுள்ள நிலையில் (அத்தகைய தொடர்புகள்தான் புஷ் நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக முஷாரஃப்பிற்கும் பூட்டோவிற்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் காண முன்வர வைத்தது), PPP முஷராப் ஆட்சிக்கு உதவும் வகையில் வட கிழக்கு எல்லை மாகாணத்தில் அரசாங்கத்தை அமைத்ததற்கும், பலூசிஸ்தானில் முஷாரஃப் ஆதரவு உடைய PML(Q) வுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்ததற்கும் MMA ஐ கடிந்து கொண்டது.

PPP மற்றும் PML(L) இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டால், அதன் கூறுபாடுகளும் வேட்பு மனுவை தாக்கல் செய்து கொண்டிருக்கும் நிலையில் MMA யும் புறக்கணிப்பு வாய்ச்சவடாலை விரைந்து கைவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் MMA இன் முன்னணியில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான மெளலானா பஸ்லூர் ரெஹ்மான் தானும் தன்னுடைய கட்சியான JUF(I) உம் தேர்தல்களில் பங்கு பெறுவது உறுதி என்று கூறியுள்ளார். முஷாரஃப் ஆட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் இழிவாகக் கருதப்படும் ரெஹ்மான் பாக்கிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தூதர் Anne Patterson ஐ நவம்பர் 20ம் தேதியன்று சந்தித்தார். ரெஹ்மானின் கூற்றின்படி அவ்வம்மையார் இவர் இராணுவ ஆட்சியின் தேர்தல்களில் பங்கு பெறவேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ரெஹ்மானுடன் விவாதங்கள் நடத்தியதற்கு முந்தைய நாள் பாட்டர்சன் புட்டோவைச் சந்தித்தார்; இதே தகவலை அவருக்கும் கொடுத்திருக்க வேண்டும்.

நவாஸ் மற்றும் ஷாபாஸ் ஷெரிப் இருவரும் முஷாரஃப் ஆட்சியுடன் ஒப்பந்தம் கண்டதை அடுத்துத்தான் இவர்கள் திரும்ப முடிந்தது என்று கூறப்படுவதை உறுதியாக மறுத்துள்ளனர். அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் விவரங்கள் ஏதும் கொடுக்கவில்லை என்றாலும் உடன்பாடு இருப்பதாக மட்டும் கூறியுள்ளார்.

கடந்த வார ஆரம்பத்தில், பாக்கிஸ்தானின் உளவுத்துறை தலைவருடன் சேர்ந்து கொண்டு முஷாரஃப் செளதி அரேபியாவிற்கு ஷெரிப் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு திடீரெனச் சென்றிருந்தார்; ஷெரிப் 2000 ம் ஆண்டில் இருந்து அங்கு இருந்து வருகிறார். ஷெரிப்புடன் உடன்பாடு காணும் சாத்தியம், பாக்கிஸ்தான் அரசியலுக்கு அவரது மறுவரவு மற்றும் பஞ்சாப்பைத் தளமாகக் கொண்ட PML(N)-ன் புதுப்பிப்பு சிந்துவை தளமாகக் கொண்ட PPP க்கு ஒரு எதிர் எடையாக செயல்படுவதன் மூலம் இராணுவ ஆட்சிக்கு உதவக்கூடும் என்பது பற்றி எல்லாம் முஷாரஃப் கடந்த காலத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். ஆனால் செளதி அரேபிய மன்னர் அப்துல்லா கொடுத்த அழுத்தத்தினால் முஷாரஃப் ஷெரிப்பை நாட்டில் அனுமதித்திருக்கக்கூடும் என்று செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன; ஒருவேளை செளதி மன்னரும் வாஷிங்டனின் வேண்டுகோளுக்கு இணங்க அவ்வாறு அழுத்தம் கொடுத்து, ஷெரிப்பின் சிறைக் காவலர் என்ற பொறுப்பை நிறுத்தியிருக்கக்கூடும். இதுவரை புஷ் நிர்வாகத்திற்கு ஷெரிப் பற்றி கவலைப்பட நேரமில்லை மற்றும் கடந்த செப்டம்பரில் ஷெரிப் பாக்கிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பிவிடப்பட்டதற்கு ஆதரவைத்தான் கொடுத்தது. ஆனால் வாஷிங்டனுடன் ஒத்துழைப்பதில் ஷெரிப்பின் அரசியலில் எதிரிடையாக ஏதும் இல்லை.

முஷாரஃப்பை போலவே புஷ் நிர்வாகத்தின் நெருக்கமான நண்பரும், நிச்சயமாக ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்காதவருமான செளதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா, பாக்கிஸ்தானில் இராணுவ மேலாதிக்கம் கொண்ட அரசாங்கத்தை பராமரிக்கும் வாஷிங்டனுடைய திட்டத்தை ஷெரிப் எதிர்க்கமாட்டார் என்பதை தான் உறுதிசெய்யாதிருந்தால், ஷெரிப்பை அவரது அவரது புலம்பெயர் நிலையின் விதிமுறைகளிலிருந்து விடுவித்திருந்திருக்க மாட்டார் மற்றும் பாக்கிஸ்தானுக்கு அவர் திரும்புவதை பலமாக ஆதரித்திருந்திருக்க மாட்டார் என்பதை உறுதியுடன் கூற முடியும்.

வெள்ளியன்று மன்னர் அப்துல்லா இரண்டு மணி நேரம் ஷெரிப்புடன் சந்திப்பு நடத்தி, அவருக்கு விருந்து கொடுத்தது மட்டும் இல்லாமல், பாக்கிஸ்தானுக்குத் திரும்பிச் செல்வதற்கு ஒரு விமானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

ஒரு தொழில்துறை முன்னணிக் குடும்பம் ஒன்றில் தோன்றிய நவாஸ் ஷெரிப் மரபார்ந்த வகையில் இராணுவம், அவருடைய சொந்த மாநிலமான பஞ்சாபில் இருக்கும் பெருவணிகம் மற்றும் மதப் பிரிவின் வலது ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். 1980ன் நடுப்பகுதிகளில் மற்றொரு இராணுவ சர்வாதிகாரி தளபதி ஜியா உடைய செல்லப்பிள்ளையாக தன்னுடைய அரசியல் போக்கை ஷெரிப் ஆரம்பித்திருந்தார்; ஷெரிப்பை அகற்றியபின், நவாஸ் ஷெரிப்பின் கட்சியிலிருந்து விட்டோடியவர்கள் பெரும்பாலானோரால் முஷாரஃப்பிற்கு ஆதரவான இராணுவம் ஆதரிக்கும் PML(Q) கட்சி நிறுவப்பட்டது.

அவ்வாறு இருந்தாலும், முஷாரஃப்பிற்கும் ஷெரிப்பிற்கும் இடையே மனக்கசப்பிற்கு குறைவு இல்லை. இருவருமே இந்திய ஆக்கிரமிப்பு கஷ்மீர்ப் பகுதியில் பாக்கிஸ்தானின் 1999 கார்கில் இராணுவ சாகச நடவடிக்கை பற்றியதில் மோதிக்கொண்டனர்; ஷெரிப் அக்டோபர் 1999ல் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து முஷாரப்பை அகற்ற முற்பட்டபோது, முஷாரஃப் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பிற்காக வைத்திருந்த திட்டங்களை ஊக்கி விட்டார்.

செப்டம்பர் தொடக்கத்தில், ஷெரிப் சகோதரர்கள் ஏழு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றபோது, இராணுவம் மிகப் பெரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இஸ்லாமாபாத் விமான நிலையத்தை சூழ்ந்து கொண்டு இரு சகோதரர்களையும் காவலில் வைத்து மிக விரைவில் அவர்களை செளதி அரேபியாவிற்கு விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது.

நேற்று அரசாங்கம் மீண்டும் ஒரு முக்கிய பாதுகாப்புப் படைப் பிரிவைத் திரட்டி, 6,000 போலீஸ்காரர்களுக்கு மேல் அனுப்பிவைத்து, ஏராளமான PML(N) ஆதரவாளர்கள் லாகூர் விமான நிலையத்தில் ஷெரிப் சகோதரர்களை வரவேற்பதை தடுத்து நிறுத்த முற்பட்டு, அந்த முயற்சியில் தோல்வியுற்றது. அவர்கள் திரும்பிவர இருப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, PML (N) உறுப்பினர்கள் ஏராளமானோர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். ஷெரிப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இந்த எண்ணிக்கை 1,800 என்று கூறுகையில், அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் எள்ளி நகையாடி 100 பேர்தான் காவலில் வைக்கப்பட்டனர் என்று கூறினார். ஆயினும்கூட செப்டம்பர் துவக்த்தில் இருந்தது போல் இல்லாமல் ஷெரிப்புக்கள் நாட்டிற்குள் வர அனுமதிக்கப்பட்டு விட்டனர்.

முதலாளித்துவ முறையில் எதிர்க்கட்சிகளாக இயங்கும் அனைத்து அமைப்புப் பிரிவுகளும் முஷாரஃப் ஆட்சிக்கு உடந்தையாக இருந்து ஜனவரி 8ம் தேதி போலி தேர்தல்களில் பங்கு பெற நினைப்பற்குக் காரணம் அனைத்துமே அரசியல் அதிகாரத்தில் ஒரு பங்கைக் கொண்டு அதன் மூலம் புரவலர் நிலை, அரசாங்கச் சிறப்பு நிலை ஆகியவற்றைக் கொள்ளலாம் என்றும் தேர்தல்களை நிராகரித்தால் அவற்றின் எதிரிகளுக்குத்தான் இலாபம் என்பதையும் உணர்ந்துள்ளன. இதையும் விட முக்கியமானது அவர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக இருப்பது ஒரு உண்மையான மக்கள் திரள் இராணுவ ஆட்சிக்கு எதிராக வந்துவிடக் கூடாது என்பதுதான்; ஏனெனில் இராணுவ ஆட்சி ஒன்றுதான் தங்களுடைய சலுகைகளுக்கு பெரும் அரணாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர் -- பாக்கிஸ்தானிய தேசிய அரசு மற்றும் பாக்கிஸ்தானின் பரந்த சம உரிமையற்ற சொத்து உறவுகளுக்கும் அதுதான் அரணாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவர்.