World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tens of thousands affected by Sri Lankan floods and landslides

இலங்கையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பத்தாயிரக்கணக்கானவர்கள் பாதிப்பு

By Ananda Daulagala and G. Senaratne
31 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் கிழக்கு, மத்திய, மற்றும் தென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பத்தாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த நிவாரண சேவை அமைச்சின்படி, 80 தற்காலிக அகதி முகாம்களில் 80,000 க்கும் அதிகமான மக்கள் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் இந்த நிவாரண நடவடிக்கைக்கு வெறும் 5 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே (50,000 அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கப்பட்டன.

கொழும்பில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் துரத்தில் இருக்கும் மத்திய மலைப் பகுதியான நுவரெலியா மாவட்டத்தின் வலப்பன மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய இடங்கள் இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் குறைந்தபட்சம் 16 பேர்கள் கொல்லப்பட்டு, ஐந்து பேர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த இரு பிரதேசங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவினால் 156 வீடுகள் அழிந்துபோனதோடு மேலும் 741 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளதால், கிட்டத்தட்ட 20,000 பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்தது. ஆயினும், அதே நேரத்தில் அதிகாரிகள் எப்படி இதற்கு மாற்றீடாக பொருத்தமான இடத்தை தேடப்போகின்றார்கள் என்பது பற்றி மூச்சுவிடாததோடு அவ்வாறான இடங்கள் இல்லை என ஏற்கனவே கூறிவிட்டனர். தவிர்க்க முடியாத நிலையில், வீடிழந்த பலர் எதிர்காலத்தில் நிலச்சரிவு அபாயங்களை எதிர்கொள்ளும் அதே இடங்களுக்கு திரும்பிச் செல்லத் தள்ளப்படுவர்.

வலப்பன மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளில் வாழும் அதிகமான மக்கள், நெல் அல்லது மரக்கறி வகைகளை பயிரிட்டு பிழைப்பு நடத்தும் வறிய விவசாயிகளாவர். பலர் மட்டுப்படுத்தப்பட்ட சமுர்த்தி உதவிப் பணத்தில் சார்ந்துள்ளார்கள். பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள் உட்பட உட்கட்டுமானம் பற்றாக்குறையாக உள்ளன.

அதிகாரபூர்வமான தரவுகளின்படி, இதே பருமனளவு இல்லாதபோதிலும், இப்பகுதியில் முன்னரே பல நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், இந்த ஆபத்துக்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான மதிப்பீடுகளையோ அல்லது அழிவுகளைக் குறைப்பதற்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நில அமைப்பியல் துறை பேராசிரியர் சி.பி. திசாநாயக்காவின் படி, மத்திய மலையக மாவட்டத்தில் இதற்கான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தொடக்கத்தில், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, அவரது அரசாங்கம் மற்றும் ஊடகங்களும் இதில் அக்கறை செலுத்துவதாகக் காட்டிக்கொண்டன. ஆனால், தற்போது செய்திகளில் இருந்து இந்த துன்ப நிகழ்ச்சி மறைந்துபோனதோடு, பாதிக்கப்பட்டவர்கள் வழங்கப்பட்ட அற்ப நிவாரண உதவிகளுடன் சமாளிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். 2004 சுனாமி பேரழிவு போல், இந்தப் புதிய பேரழிவும் வறியவர்களின் தலைவிதி தொடர்பாக ஆளும் தட்டின் அலட்சியத்தையே கோடிட்டுக்காட்டுகின்றது.

ஜனவரி 16 மற்றும் 20 ம் திகதிகளில் இப்பகுதிக்கு உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சென்றிருந்தனர்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட துனியகொல்ல கிராமத்தின் நிலைமை திகைப்பூட்டச் செய்கிறது. 22 வயதுடைய பாலித ரொமேஷ் என்பவர் அவரது வீட்டிலிருந்து சகதிகளை அகற்றிக் கொண்டிருந்தார். ஜனவரி 12 ம் திகதி காலை நிலச்சரிவின் பயங்க அதிர்வுச் சத்தத்தைக் கேட்டு கிராமத்தவர்கள் எப்படி அவர்களின் வீடுகளில் இருந்து தப்பி ஓடினார்கள் என்பதை விவரித்தார். இதன்போது, நான்கு வீடுகள் அழிந்து போனதோடு இதர வீடுகளில் அரைவாசி சேதமடைந்தன.

முன்னால் அரச போக்குவரத்து தொழிலாளியான விசும்பெரும என்பவர் இதுபற்றி விளக்குகையில்: ''நாங்கள் எமது வீடுகளிலிருந்து துரிதமாக வெளியேறியதால், மரணத்திலிருந்து எம்மை காப்பாற்றிக்கொண்டோம். இது இரவில் நிகழ்ந்திருந்தால், நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும்''. மக்கள் அடர்ந்த மூடுபனிக்குள்ளால் ஒடியதே அதிகமான காயங்கள் ஏற்பட்டதற்கான காரணம் ஆகும்.

ஒரு விவசாயியான மேர்வின் டைன்டன், வீதிகளைப் பயன்படுத்த ஒரு வாரத்திற்கும் மேலாகும் என்று குறிப்பிட்டார். இவை இன்னமும் நல்ல நிலையில் இல்லை. 10 நாட்களாக மின்சார விநியோகம் இல்லாததால் கிராமத்தவர்கள் மண்ணெண்னை விளக்குகளையே பயன்படுத்துகின்றனர்.

அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் மக்கள் கொதிப்படைந்துபோய் உள்ளனர். உள்ளூர் பாரளுமன்ற உறுப்பினரும் அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சருமான சி.பி. இரட்நாயக்க, நிலச்சரிவு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்பு இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தபோதிலும் மக்களை சந்திக்க முயற்சிக்கவில்லை. அவரது பணியாளர்கள், மீண்டும் விடுகள் கட்டித் தருவதற்கு அமைச்சர் ''உறுதியளித்திருப்பதாக'' உள்ளுர்வாசிகளுக்கு தெரிவித்த போதிலும், அது எப்படி மற்றும் எப்போது என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களை மட்டும் உள்ளடக்கிய, அதிகாரபூர்வமான எண்ணிக்கையைவிட மிகவும் அதிகமான மக்கள் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு குடியிருப்பாளர் குறிப்பிட்டார். ''எங்களில் பலருக்கு மறுவாழ்வு முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டபோதிலும், நாங்கள் அங்கு செல்லவில்லை. அது நாங்கள் பாதிக்கப்படாததால் அல்ல. வடக்கு கிழக்கில் உள்ள யுத்த அகதிகளின் அனுபவங்களிலிருந்து இந்த முகாம்களின் வாழ்க்கை நிலைமை என்னவென்பது எமக்கு தெரியும். நாம் அதே நிலைமைகளுக்கு முகம் கொடுப்போம் என நான் நினைக்கவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

வலப்பனவில் உள்ள கும்பல்கமுவ பாடசாலை ஆசிரியர்களான எச்.எம். ஹேரத், லீலா சிறிவர்த்தன ஆகியோர், இந்த அழிவுக்கு பங்களிப்பு செய்ததாக இலங்கை புகையிலைக் கம்பெனியை (CTC) குற்றம்சாட்டினர். இந்தக் கம்பனி, பல்தேசிய கூட்டுத்தாபனமான W & H O Wills உடன் இணைந்ததாகும். இக்கம்பெனி வலப்பன மற்றும் நில்தந்தகின ஆகிய இடங்களுக்கு இடையிலுள்ள மிகவும் சாய்வான பகுதிகளை துப்புரவு செய்து புகையிலை பயிர்ச் செய்கைக்கு உள்ளூர் விவசாயிகளை ஊக்குவித்ததன் மூலம் மண் அரிப்பை விளைவித்தது.

புகையிலை விளைச்சலில் சி.டீ.சி பாரிய இலாபங்களை ஈட்டியபோதிலும் விவசாயிகள் சற்றே வாழ்க்கையை கொண்டு நடத்தத் தள்ளப்பட்டனர். நில்தந்தகினவில் உள்ள இந்தக் கம்பெனியின் புகையிலையை விலைக்கு வாங்கும் மத்திய நிலையம் தற்போது மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களால் முடிந்தவரை சமாளிக்கத் கைவிடப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட்ட போதிலும், ஏனையவர்கள் தமது விளைச்சல்கள், வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளதோடு அவர்களுக்கு அரசாங்க உதவி ஒன்றும் கிடைக்காது போலவே தெரிகிறது, என சிறிவர்த்தன விளக்கினார். ''அதிகாரிகள் பாடசாலைகளை மீண்டும் திறக்கும்படி கேட்டுக்கொண்டபோதிலும், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்களை எப்படி நாம் வெளியேற்றமுடியும்? பாடசாலைக்கு சிறுவர்கள் வருவதற்கான அனுகூலமான நிலைமைகள் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை'' என்று அவர் கூறினார்.

சிறிவர்த்தனாவிற்கு அரசாங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையும் கிடையாது. ''சுனாமி வந்து இரண்டு வருடங்களுக்குப் பின்பும் அகதிகள் முகாம்களிலேயே இன்னமும் வாழ்கின்றனர்,'' என்றார். அவர் நாட்டில் தீவிரப்படுத்தப்பட்ட இனவாத உள்நாட்டு யுத்தத்தை எதிர்த்தார். "தமிழ் மக்களிடம் இருந்து எதனையும் நாங்கள் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நான் முழுமையாக இந்த யுத்தத்தை எதிர்க்கின்றேன். நாங்கள் இதர இனங்களுடன் அமைதியாகவே வாழ வேண்டும். ஏதாவது சிறப்புரிமைகள் சிங்கள மக்களுக்கு இருக்கத் தேவையில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

கும்பலகமுவ பாடசாலை அதிபர் விளக்குகையில், கல்வி அதிகாரிகள் இந்த அழிவு தொடர்பாக கையாளுவதை அவரிடமே விட்டுவிட்டதாக தெரிவித்தார். "ஆபத்துக்கள் இருக்காது என நீங்கள் நினைத்தால்" நிவாரண முகாம்களாக பயன்படுத்தப்படாத பாடசாலைகளை மீண்டும் திறக்குமாறு கட்டளையிட்டு பிராந்தியக் கல்விக் காரியாலயம் சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்பியுள்ளது.

''எப்படி நாங்கள் ஒரு அபாயமும் இருக்காது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும்?'' என்று அவர் கேட்டார். ''இந்தப் பகுதியில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் நிவாரண முகாம்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைப் பிள்ளைகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிலைமை பற்றி கலந்துரையாட அதிபர்களுக்கான ஒரு கூட்டம் கூட ஒழுங்கு செய்யப்படவில்லை''.

பக்கச் சார்பான அரசியல்பற்றி பாதிக்கப்பட்ட சிலர் முறையிட்டனர். பட்டகொல்ல பாடசாலை அகதி முகாமில் இளைப்பாறிய பாடசாலை அதிபர் ஒருவர், நிவாரண விநியோகத்தின் போது ''அரசாங்கத்திற்கு ஆதரவு காட்டாதவர்கள் பாரபட்சமான நடவடிக்கைக்கு உள்ளாகினர்'' என்று தெரிவித்தார்.

வெவாக்கல கிராமத்தைச் சேர்ந்த ஒரு பஸ் ஓட்டுனரான எம்.எஸ். சமரக்கோன், உணவு உட்பட அவரது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் மண்சரிவுக்குள் அழிந்துபோனதாகத் தெரிவித்தார். அவர் நிவாரண முகாமிற்கு செல்லாமல், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) உள்ளூர் தலைவரான ரேனுகா ஹேரத் விட்டிற்கு சென்ற காரணத்தால், அவருக்கு உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அவரது மனைவி விளக்குகையில்: "எமக்கு வீதிகள் தேவை. ஒரு சரியான மதிப்பீடு இல்லாமல் அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே இந்த வீதிகள் (முந்தைய) அமைக்கப்பட்டன. வீதி அமைப்பு நடவடிக்கையின் போது அகற்றப்பட்ட மரங்கள், மண் ஆகியவை கிராமத்திற்கு மேல்பக்கமாக ஓடும் நீரோட்டத்தினுள் வீசப்பட்டன. இதனால் தடைப்பட்ட நீரோட்டம் உடைத்துக்கொண்டு வீடுகளை சேதப்படுத்தியது.''

வெவாக்கல பகுதியும் அழிந்துபோயுள்ளது. ஒரு போக்குவரத்து தொழிலாளியாகிய ஆர்.எம்.பீ. ராஜகருணா, 44, குறிப்பிடுகையில்: ''நான் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை இழந்துள்ளேன். நாம் மீண்டும் வீட்டைக் கட்ட முடியாததோடு நிலமும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நாம் வேறொரு இடத்தில் குடியேற வேண்டும். அரசாங்கம் மாற்று இடங்களில் நிலத்தை தந்து எமது பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் என்று நாம் நம்பவில்லை. அத்தோடு, கடந்த 20 வருடங்களாக இந்தப் பகுதியில் ஒரு அபிவிருத்தி வேலையும் நடைபெறவில்லை.''

உள்நாட்டு யுத்தம் மீள ஆரம்பிக்கப்பட்டது பற்றி ராஜகருனா ஆத்திரத்தில் உள்ளார். '' இரு தசாப்த கால யுத்தமானது, இந்தப் பகுதியை அலட்சியப்படுத்துவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த யுத்தத்திலிருந்து இலாபமடைவது சிறப்புரிமை பெற்றவர்களும் பாதுகாப்பு படைகளின் தலைவர்களுமே ஆவர். இந்த முரண்பாட்டை நிறுத்தாமல், (இந்த அழிவில்) பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குவதென்பது ஒருபோதும் சாத்தியமில்லை''.

வலப்பன தோட்டத்தில் 104 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 1986 லும் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. ''இந்தக் கிராமத்தில் எமது பெற்றோர்கள் வேலை செய்தனர். 1986 ல் நடந்த நிலச்சரிவுக்குப் பின்பு யூ.என்.பி. ஆட்சியாளர்கள் இந்த ஆபத்தான பகுதியிலேயே எம்மை குடியிருத்தினர். யூ.என்.பி. க்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே நல்ல நிலத் துண்டுகள் கிடைத்தன. இப்போது நாங்கள் மீண்டும் அகதிகளாக இருப்பதுடன் அதே இடங்களிற்கு திரும்பிச் செல்லுமாறு கேட்கப்படுகிறோம். இது மிகவும் ஆபத்தானது" என கே.பி. லீலாநந்த விளக்கினார்.

ஹங்குரான்கத்த பகுதியில் உள்ள படியபெலல்ல என்ற இடத்தின் நிலைமையும் அதுவே. மண்சரிவினால் இந்தப் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதுடன், முக்கியமான வீதிகளில் ஒன்று இன்னமும் திறக்கப்படவில்லை. உணவு வாங்குவதற்காக மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து போக வேண்டியுள்ளது. ஹங்குரான்கத்த ஆஸ்பத்திரி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டதால் மருந்துவகைகள் வீணாகிப் போயுள்ளதோடு ஆஸ்பத்திரியில் குளிர் சாதனங்களும் இயங்கவில்லை.

ஹிங்குரான்கந்த பாடசாலையில் தங்கியுள்ள ஓகந்தகலவை சேர்ந்த ஒரு விவசாயி, கடும் மழையும் நிலச்சரிவும் தனது வாழ்க்கை ஆதாரத்தை அழித்துள்ளதாக விளக்கினார். தானியங்கள், உரம் மற்றும் இரசாயனம் ஆகியவற்றின் விலை உயர்வினால், ஏற்கனவேயே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்கு வீதிகள் இல்லாமல், அவர்கள் இடைத் தரகர்களின் மோசடிக்கு மத்தியில் சாக்குப் பைகளில் உற்பத்திப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு வருவதும் மற்றும் விநியோகிப்பதுமாக உள்ளனர்.