World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

EU conference in Dresden

German Interior Minister Schäuble advocates police state measures

ட்ரெஸ்டெனில் ஐரோப்பிய ஒன்றிய மாநாடு

ஜேர்மனிய உள்துறை மந்திரி ஷ்யொய்பிள போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளுக்காக வாதிடுகிறார்

By Martin Kreickenbaum
17 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

ட்ரெஸ்டெனில் ஜனவரி 14-15 தேதிகளில் நடைபெற்ற ஒரு சாதாரண கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை, நீதித்துறை மந்திரிகள் ஐரோப்பா முழுவதும் போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை சுழற்சிமுறையில் ஜேர்மனி ஏற்பதை தொடக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்திருந்தது. ஜேர்மனியின் உள்துறை மந்திரியான, கிறிஸ்துவ ஜனநாயக யூனியனை (CDU) சேர்ந்த Wolfgang Schäuble ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்கும் இலக்குகளுக்கான செயற்பட்டியலை முன்வைத்தார்.

இத்திட்டங்களில் Prüm உடன்படிக்கையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் கருத்தும் இருந்தது; அதன்படி பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் உளவுத்துறை தகவல்களை பெருகிய முறையில் பகிர்ந்து கொள்ளுதல், ஐரோப்பிய எல்லைகளை பாதுகாப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துதல், Europol எனப்படும் ஐரோப்பிய போலீஸ் அமைப்பின் விரிவாக்கம் ஆகியவை கூறப்பட்டிருந்தன.

இதைத்தவிர, ஜேர்மனிய நீதித்துறை மந்திரி, சமூக ஜனநாயக கட்சியை (SPD) சேர்ந்த Brigitte Zypries கண்டம் முழுவதும் கருத்துக்கள் வெளியிடும் சுதந்திரத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை தொடக்கினார். மிகத் தீவிர வலதுசாரி அடையாளங்கள், பிரச்சாரங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுதல், விநியோகிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் காட்டினாலும், இதன் பொருளுரை இன்னும் பரந்தவகையில் செயல்படுவதற்கு உதவும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனிய தலைமையில் நடத்தும் முதல் மந்திரிகள் கூட்டம், உள்நாட்டு, நீதித்துறைகளில் கவனத்தை குவித்தது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் அதிபர் அங்கேலா மேர்க்கெலின் கீழான ஜேர்மனிய அரசாங்கம் ஐரோப்பிய தலைமையை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் நடத்துதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் தேசிய அரசாங்கங்களின் அதிகாரங்களை பெருக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தும் தீவிரத்தை பற்றிய தெளிவான அடையாளத்தை கொடுத்துள்ளது.

இந்த நோக்கங்களை அடையும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கூட்டுத் தலைமையை நிறுவும் ஒரு புதிய சிந்தனையையும் ஜேர்மனிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இதன் பொருள் கொள்கைகள், அவற்றின் செயல்பாடு ஆகியவை அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை கொள்ளும் போர்த்துக்கல், ஸ்லோவேனியா ஆகியவற்றுடன் இணைந்து விவாதங்களை கொள்ளும் என்பதாகும்.

இதன் விளைவாக, இந்த இரு நாடுகளையும் விடக் கூடுதலான மக்கட் தொகையையும், வலுவான பொருளாதாரத்தையும் கொண்டிருக்கும் ஜேர்மனி அந்த இரு நாடுகள் தங்கள் அடுத்த ஆறு மாத காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை கொள்ளும்போதும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். திட்டங்களும், முடிவுகளும் பெரும்பாலும் பேர்லினில் எடுக்கப்படும்; இதையொட்டி வழக்கமான 6 மாதங்களுக்கு பதிலாக பேர்லினுடைய நடைமுறை பங்கு தலைமை 18 மாதங்களாக நீடிக்கும்.

ட்ரெஸ்டெனில் நடந்த சாதாரண பேச்சுக்கள் இறுதியான நடவடிக்கைகளை இயற்றவில்லை என்றாலும், வருங்கால திட்டங்கள் பற்றி உடன்பாட்டை நிறுவ அவை உதவின. ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டுக் கொள்கையை எவ்விதத்தில் தலைமை தாங்கி Schauble நடத்துவார் என்பது பற்றி அது புலப்படுத்தியது.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போர்வையில், திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் குடியேறுவோர் மீதான கட்டுப்பாடு ஆகியவை பற்றி கூட்டம் சில நடவடிக்கைகளை விவாதித்தது; இவை தற்பொழுதுள்ள ஐரோப்பிய ஒன்றிய மற்றும் உறுப்பு நாட்டுகளில் உள்ள தகவல்கள் பயன்படுத்துததலுக்கான தனிப்பட்ட தடைகளை விரைவாக நீக்கி, போலீசிற்கு கண்காணிப்பில் பரந்த அதிகாரங்கள் கொடுப்பது பற்றியும் விவாதித்தது. வழக்கம்போல் குடியேறுபவர்களும், தஞ்சம் கோருபவர்களும் கடுமையான பாதிப்பிற்கு உட்படுவர்.

எல்லை கடந்த தகவல் பங்கீடு

ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடான Prüm Convention விதிகளை விரைவில் கொண்டுவர வேண்டும் என்று Schauble கருதியது குறிப்பிடத்தக்கதாகும். அதிகம் அறியப்பட்டிராத, விளம்பரத்திற்குள்ளாகாத இந்த உடன்பாடு மிகத் தீவிர ஜனநாயக-எதிர்ப்பு நடவடிக்கைகளை கொண்டுள்ளது என்பது மட்டும் இல்லாமல், ஐரோப்பிய சட்டமன்றத்தின் ஜனநாயகமற்ற தன்மையின் மொத்த உருவமாகவும் உள்ளது.

மே 2005ல் கையெழுத்திடப்பட்ட Prüm விதிகள், அப்பொழுது ஜேர்மனிய உள்துறை மந்திரியாக இருந்த சமூக ஜனநாயக கட்சியின் ஒட்டோ ஷில்லியின் ஆரம்ப முயற்சியில், ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்பெயின், பிரான்ஸ், பெனிலுக்ஸ் நாடுகள் ஆகியவற்றால் கையெழுத்திடப்பட்டன. இந்த உடன்பாடு ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகியவற்றில் மட்டும்தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த நாடுகளில் மட்டும்தான் செல்லுபடியாகும்.

ஜேர்மனிய மாநிலமான Rheinland-Pfalzல் உள்ள Prüm என்னும் ஒரு சிறுநகரத்தில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் மற்ற நாடுகளின் மரபணு (DNA) மற்றும் கைரேகை தகவல் தளத்தில் இருந்து தகவல் பெறும் உரிமை கொடுப்பதுடன், அந்நாடுகளில் உள்ள மோட்டார் வாகனங்கள் பதிவு ஏடுகளில் இருந்தும் தகவல் பெறும் உரிமையை கொடுத்துள்ளது. இப்பொழுதுள்ள விதிமுறைகளின்படி அமைச்சரகத்துறை பிரிவுகள்தாம் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்க முடியும்; அதை அகற்றும் வகையில் இவ்வுடன்பாட்டின் விதிகள் உள்ளன.

தகவல்களை நாடும் உரிமை குற்றங்கள் மீது விசாரணை நடத்துவதற்கு மட்டும் என்று இல்லாமல் அவற்றை தடுப்பதற்கும் பயன்படுத்தப்படும்; இதையொட்டி போலீசும், இரகசிய உளவு பிரிவுகளும் தகவல்களை அறிய மீன்தூண்டில் போடுவது போல் செயல்பட்டு, "வன்முறை குற்றவாளிகள்", "பயங்கரவாத ஆபத்துக்கள்" என்று கூறி தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். பிந்தைய சொற்றடர் மிகப் பரந்த முறையில், பலவற்றையும் உள்ளடக்கிய முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

Prüm உடன்பாடு எல்லை கடந்த போலீஸ் நடவடிக்கைகளையும் அனுமதிக்கிறது. இது உள்ளூர் போலீஸ் செயற்பாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இரகசிய முகவர்களின் செயல்களையும் அரவணைத்துச் செல்லும். இந்நாடுகளின் உளவுத்துறை பிரிவுகள், எங்கு செயல்களை மேற்கொள்ளுகின்றனரோ அந்த வெளிநாட்டிலுள்ள சட்டங்களுக்கு உட்படமாட்டார்கள்; இதையொட்டி அவர்கள் தங்கள் விருப்பப்படி அநேகமாக எதையும் செய்து கொள்ளலாம்.

இத்தகைய முறையில் அந்தரங்க தகவல்களை எல்லை கடந்த முறையில் பகிர்ந்து கொள்ளுவது என்பது தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் குறிக்கும். Prüm உடன்பாட்டின்படி, "கிடைக்கும் கோட்பாடு" ("principle of availability") என்ற முறை, குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் குறிப்பிட்ட தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தற்பொழுது இருக்கும் விதிகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படும். இதன் விளைவு Prüm உடன்பாடு அனைத்து தகவல்களையும் எப்பொழுதும் பறிமாறிக்கொள்ள முடியும் என்று அனுமதிக்கிறது.

2005ல் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு "கிடைக்கும் கோட்பாடு" என்பதை வரையறை செய்தது. தகவல் பாதுகாப்பு பற்றிய விவாத அறிக்கை ஒன்றில், ஆணைக்குழு தகவல் அந்தரங்கம் பற்றிய பொதுக் கொள்கை பற்றி பல குறிப்புக்களை கூறியது; ஆனால் இயன்றளவு பிறரும் இதைப் பயன்படுத்தலாம் என்ற முடிவிற்கு வந்தது; பெயரளவுக்கு கட்டுப்பாடு உறுப்பு நாடுகளின் தேசிய சட்டங்களுக்கு அது உடன்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததுதான்.

"குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்தல், கண்டுபிடிப்பு, விசாரணை, தடுப்பு ஆகியவற்றிற்காகவும், தனிநபர் அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும் அந்தரங்க தகவல்கள் பரிமாற்றம் நடக்கலாம்; ஆனால் தகவலுக்குரிய நபரின் அடிப்படை நலன்கள், உரிமைகள்மீறம் வகையில் இருந்தால் இது பயன்படுத்தப்படக்கூடாது" என்று அறிக்கை கூறுகிறது.

ஷிலேஸ்விக் ஹோல்ஸ்டைன் மாநிலத்தில் உள்ள தகவல் அந்தரங்கம் பற்றிய அரசாங்க பிரதிநிதி, Thilo Wichert இவ்விதியை பற்றி கீழ்க்கண்ட வகையில் விளக்கினார்: "போலீஸ் விசாரணையினால் தனி நபர்களின் அந்தரங்க தவகல்கள் பாதிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு போலீஸ் துறைகளிடம் ஒப்படைக்கப்படும்." இப்படி இருந்தும், Prüm உடன்பாடு "தற்கால தகவல் பாதுகாப்பின் மிக உயர்ந்த கோரிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் முக்கியமான அந்தரங்கம் பற்றிய விதிகளை கொண்டுள்ளது" என்று Schäuble அறிவித்தார். ஜோர்ஜ் ஓர்வெல்லின் அரசாங்கக் கண்காணிப்பை ஒத்திருக்கும் ஐரோப்பாவை மட்டும் Schäuble தோற்றுவிக்க முற்படவில்லை; இவர் ஓர்வெல்லின் "newspeak" (சிந்திக்கும் குற்றம்) ஏற்றுள்ளார்.

"ஐரோப்பிய குழு மற்றும் பிற சர்வதேச உச்சிமாநாடுகள்" தகவல் பகிர்வு மற்றும் எல்லை கடந்த போலீஸ் நடவடிக்கைகள் பயன்படுத்துவது பற்றி விவாதிக்கும் அரங்குகளாக இருக்காலம் என்று Schäuble கூறியுள்ளார். இது ஏராளமான கைதுகள், சிறைவாசங்கள் ஆகியவற்றிற்கு வழிவகுப்பதுடன் பயணத் தடைகள் மற்றும் பதிவுத் தேவைகள் சுமத்தப்படுதலுக்கும் வழிவகுக்கும்.

"பொதுப் பாதுகாப்பின் மீதான அச்சுறுத்தல்களை தடுத்தல்" என்பது மிகப் பரந்த அளவில் விளக்கம் கொடுக்கப்பட்டு சர்வதேச எதிர்ப்பு இயக்கங்களை, ஈராக் போர் அல்லது ஈரானுக்கு எதிராக ஒருவேளை வரக்கூடிய இராணுவத்தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் போன்றவற்றையும் உட்படுத்தக் கூடும்.

இரகசிய முகவர்கள் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை தூண்டிவிடுபவர்களாக நடந்து கொள்ளுவதற்கும் Prüm கட்டுப்பாடுகள் எளிதாக வகைபுரியும்; இதனால் அரசாங்கத்திற்கு அத்தகைய இயக்கங்களை அடக்கவும், தாக்குவதற்கும் போலிக் காரணங்கள் கிடைக்கும்.

Prüm விதிகள் பொதுமக்களுக்கு எதிராக இயக்கப்படும் என்பது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தில் அவை எப்படிச் சேர்க்கபடுகின்றன என்பதிலேயே தெளிவாக தெரிகிறது. எல்லைக் கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்தும் Schengen உடன்பாட்டை போலவே, அதிக அதிகாரமில்லாத பாராளுமன்றத்தை கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே இருக்கும் குறைந்த அளவு ஜனநாயக வழிவகைகளையும் கடக்க Schäuble விரும்புகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகம் மூலம் இச்சட்டங்கள் நேரடியாக இயற்றப்பட வேண்டும் என்று Schäuble விரும்புகிறார். மாற்றம் ஏதும் இல்லாமல் முழுமையாகத்தான் தேசிய அரசாங்கங்கள் இவற்றிற்கு இசைவு தரவேண்டும். ஐரோப்பிய பாராளுமன்றம் கடக்கப்பட்டு, அதற்குப் பங்கு ஏதும் இராது. எனவே Prüm உடன்பாடு ஐரோப்பிய சட்டத்தில் ஏற்கப்படும் முறை 1930களின் ஆரம்பத்தில் ஜேர்மனிய வைமார் குடியரசின் இறுதிக்காலத்தில் ஜனாதிபதியின் நெருக்கடிக்கால ஆணைகள் உரிமையைத்தான் நினைவுபடுத்துகின்றன.

புதிய விதிகளின் விளைவுகள் உடனடியாக உணரப்படும். கீழேயுள்ள தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்: EURODAC தகவல் தளத்தில் உள்ள தஞ்சம் கோருவோரின் கைவிரல் ரேகைப் பதிவுகள், VIS (Visa Information System) இல் உள்ள தகவல்கள், Schengen Information System (SIS II) இல் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கும் கடவுச்சீட்டுக்களில் உள்ள உடலியல் (Biometric) தகவல்கள் ஆகியவை ஒன்றிணைக்கப்படும். Prüm உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதல் என்பது திட்டமிட்டமுறையில் ஐரோப்பிய மக்களை கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கு வழிசெய்து விடும்.

இந்த நடவடிக்கைகளுடன் இணைந்து ஐரோப்பிய போலீஸ் பிரிவான Europol ஐ விரிவாக்க வேண்டும் என்றும் Schäuble விரும்புகிறார். இது தேசிய போலீஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் விசாரணை, பின்தொடரல் ஆகியவற்றை பிற நாடுகளில் செய்யும் உரிமை கொடுப்பதுடன், எவ்வித ஜனநாயக கட்டுப்பாடும் இல்லாமலும் அனுமதிக்கும்.

ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிற்குள்ளும் Europol இன் செயற்பாடு அதிகாரங்கள் வலுப்படுத்தப்படும்; இதையொட்டி கூடுதலான முறையில் அது தேசிய போலீஸ் பிரிவுகள் போன்றே பெருகிய அதிகாரத்தை கொள்ளும். இதைத்தவிர, இணைய தள கண்காணிப்பின் பொறுப்பை தேசிய போலீசாரிடம் இருந்து Europol எடுத்துக் கொள்ளும்; அதேபோல் பெரும் நிகழ்வுகளில் பொது ஒழுங்கை காக்கும் பணியையும் பெறும். இதன் விளைவாக Europol "வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள்" என்று அழைக்கப்படுவபர்களை பற்றி அதனுடைய சொந்த தகவல் தளத்தை நிறுவ அனுமதிக்கப்படும்.

ஐரோப்பாவின் உள்துறை மந்திரிகள் இதையொட்டி Europol ஒரு அரசியல் போலீஸ் சக்தியாக வளர்வதற்கு தளத்தை அமைக்கின்றனர்; எதிர்ப்பு அரசியல் இயக்கங்கள் மீது கண்காணிப்பு நடத்தவும் அவற்றிற்கு எதிராகக் குறுக்கிடவும், எவ்வித ஜனநாயக கட்டுப்பாடு, மேற்பார்வை இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் அமைப்பான Stastewatch இல் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, பிரிட்டனின் சட்டப் பேராசிரியர் Steve Peers, "ஒரூ கூட்டாட்சி வகையிலான போலீஸ் அமைப்பாக நெருக்கமாக போகும் அளவிற்கு Europol இருக்கும்; Europol இன் உருவாக்கம் ஜேர்மனிய கூட்டாட்சி பிரிவுகளின் போலீஸ் அமைப்புக்களுக்கு இணையாக இருக்கும். ஆனால் ஒரு தேசிய போலீஸ் படையின் பொறுப்புக் கூறும் தன்மை சிறிதளவேனும் Europol இன் உருவாக்கத்தில் இருக்காது.

புகலிடம் நாடுவோரும், குடியேறுபவர்களும்

புகலிடம் நாடுபவர்கள், குடியேறுபவர் ஆகியோருடைய பிரச்சினையில், ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய தலைமை கண்காணிப்பை விரிவாக்க வேண்டும் என்று விரும்புவதோடு மட்டும் அல்லாமல், அகதிகளை தடுக்கும் இராணுவத்தின் திறனைப் பெருக்க வேண்டும் என்றும் தங்கள் நாட்டிற்கு வெளியேயும் போலீசார் தேசிய எல்லைகளை காக்க அனுமதியும் வேண்டும் என்று விரும்புகிறது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள எல்லை அமைப்பான Frontex குறிப்பிடத்தக்க வகையில் கூடுதலான ஆதாரங்களை பெறும். மத்தியதரைக் கடலை பகுதியை ரோந்து செய்வது தவிர, Frontex ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளையும் குடியேறுபவர்கள் வராமல் பாதுகாக்கும். இத்தாலிய உள்துறை மந்திரியான ஜனநாயக சோசலிசக் கட்சியின் Giuliano Amato, Frontex ற்கு போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை ஐரோப்பிய எல்லைகளை பாதுகாக்க கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். கடந்த ஆண்டு மட்டும் 6,000க்கும் மேற்பட்ட குடியேறுபவர்கள், புகலிடம் கேட்டவர்கள் ஐரோப்பாவை வந்தடையும் முன்னரே மடிந்து போயினர்; தற்போதைய கூடுதலான இராணுவ முறை இன்னும் கூடுதலான வகையில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும்.

ஐரோப்பிய கடலோர பகுதிகளுக்கு வந்துவிட முடிபவர்கள் இன்னும் கடுமையான அடக்குமுறையை போலீஸ், பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து எதிர்கொள்ளுவர். இதில் Visa Information System (VIS) இன் உருவாக்கமும் அடங்கியுள்ளது; இதில் Biometric தகவல் சேகரிக்கப்படும்; இதையொட்டி அவர்களுடைய நடவடிக்கைகள், செயற்பாடுகள் ஆகியவை நெருக்கமாக கண்காணிக்கப்படும். ஒரு புதிய Schengen Information System (SIS II) என்ற புதிய முறையும் நிறுவப்படும்; இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், தஞ்சம் கோருவாரின் கைரேகைப் பதிவிற்காக புதிய தகவல் தளமான EURODAC நிறுவப்படும்.

இந்த EURODAC குடியேறுபவர் துறைகளுக்கு மட்டும் தகவல் கொடுக்காமல் போலீசாருக்கும் தகவலை கொடுக்கும் வகையில், விண்ணப்பதாரர்கள் பற்றி முழு விவரங்களையும் ஆய்வு செய்யும் திறனை கொண்டிருக்கும். மற்றவற்றை போலவே இந்த நடவடிக்கையையும் நியாயப்படுத்திய Schäuble இது "பயங்கராவாதத்திற்கு எதிரான போர்" நடவடிக்கை என்று முத்திரையிட்டார்; இதன் உட்பொருள் அரசியல் அடக்கு முறை, சித்திரவதை ஆகியவற்றினால் தங்கள் தாய்நாடுகளைவிட்டு வந்து தஞ்சம் கோருபவர்கள் பயங்கரவாதத்திறன் உடையவர்கள் என்று உட்குறிப்பாக முத்திரையிடப்படுவர். இனவெறி, நாட்டு வெறி ஆகியவற்றை எரியூட்டுவதின்மூலம், Schäuble ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதிலும் வெளிநாட்டினருக்கு எதிரான தாக்குதல்களை அதிகமாக்குவதற்கு முயற்சிகளை கொண்டுள்ளார்.

தீவிர வலதுசாரி அடையாளங்கள் தடுப்பு

வலதுசாரி தீவிரவாதிகள் நிகழ்த்தும் குற்றங்கள் பெருகியுள்ளதை எதிர்கொள்ளும் வகையில் ஜேர்மனிய நீதித்துறை மந்திரி Brigitte Zypries நாஜி அடையாளங்கள் மற்றும் ஹோலாகோஸ்ட்டை (Holocaust) மறுக்கும் (நிராகரிக்கும்) சின்னங்கள் ஆகியவற்றின் மீது ஐரோப்பா முழுவதும் தடை வேண்டும் என்ற துவக்க முயற்சியைக் கொண்டார். இத்தகைய நடவடிக்கை தீவிர வலதுசாரி மற்றும் புதிய பாசிச அமைப்புக்களை கடுமையாகப் பாதிக்காது; ஆனால் செய்தி ஊடகச் சுதந்திரம், கூட்டம் கூடுதல், கருத்துத் தெரிவித்தல் என்று கண்டம் முழுவதும் இருக்கும் உரிமைகளுக்கு எதிரான தடைகள்தாம் வரும். தவிர்க்க முடியாமல் இது இடதுசாரி அமைப்புக்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

Zypries மக்களை தூண்டிவிடுதலுக்கு எதிரான தற்போதைய ஜேர்மனிய சட்டம் ஐரோப்பா முழுவதும் வரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இக்குறிப்பிட்ட சட்டம் பேர்லின் மாநிலத்தில் உள்துறை மந்திரியாக இருந்த Ehrhart Korting (SPD) ஆல் ஆகஸ்ட் 2006ல் ஆயிரக்கணக்கான சாதாரண மக்களுடைய உயிர்களை கவர்ந்து, மக்களை சேதப்படுத்தியிருந்த, லெபனோன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது, ஹெஸ்போல்லா இயக்கத்திற்கு பரிவுணர்வு காட்டும் அறிக்கைகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

சமூக ஜனநாயக கட்சியின் உள்நாட்டு விவகாரச் செய்தித் தொடர்பாளரான Dieter Wiefelsputz நீதித்துறை மந்திரியின் கருத்துக்களை வரவேற்று, அதன் பிரத்தியேக வரலாற்றின் காரணமாக ஜேர்மனி வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக இத்தகைய வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு "தகுந்த காரணத்தைக் கொண்டுள்ளது" என்று விளக்கினார்.

இந்த வரலாற்றை பின்னோக்கினால், வைமார் குடியரசின் காலத்தில் சமூக ஜனநாயக கட்சி தான் மிகப் பெரிய அளவில் முடியரசு ஆதரவாளர்கள், நாஜிக்கள் இவர்களுக்கு எதிரான இயக்கப்படும் நோக்கத்தை கொண்ட சட்டங்கள், விதிகள் என்பவற்றை இயக்கினர்; உண்மையில் அவை நடைமுறையில் கம்யூனிச இயக்கத்திற்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன. சமூக ஜனநாயக கட்சியை பொறுத்தவரையில் முதலாளித்துவ அரசாங்கத்தை மக்களுக்குள் வளர்ச்சியுற்றிருந்த சோசலிச எதிர்ப்பில் இருந்து காப்பதற்கு போலீசை பயன்படுத்துவதில் எவ்வித உளைச்சலும் இருந்ததில்லை.

ஆகஸ்ட் 1921ல் ஜேர்மனியின் நிதிமந்திரி Matthias Erzberger , ஜூன் 1922இல் வெளியுறவு மந்திரி Walter Rathenau ஆகியோர் "Organisation Consul" என்னும் ஒரு தேசிய அமைப்பின் உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு (அதன் உறுப்பினர்கள் பலரும் Wiking Bund எனப்பட்ட துணை இராணுவப் பிரிவிலும் நாஜி அதிரடிப்படையிலும் சேர்ந்தனர்) சமூக ஜனநாயக கட்சி உடன் மற்றும் ஜேர்மனிய ஜனநாயகக் கட்சியுடனும் இணைந்து ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய அப்பொழுதைய கத்தோலிக்க மத்தியக் கட்சியின் அதிபராக இருந்த Josef Wirth அறிவித்தார்: "அங்குத்தான் விரோதி நிற்கின்றார்--இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை. அவர் வலதுபக்கம்தான் நிற்கிறார்."

ஜூலை 1922ல், குடியரசின் பாதுகாப்பிற்கான சட்டம் (Law for the Protection of the Republic) என்பது அவசரமாக இயற்றப்பட்டது; இது அரசியல் குற்றங்களுக்காக விசாரணை நடத்தப்படுவதற்கு சட்ட அடித்தளத்தை கொடுத்தது. அணிவகுப்புக்கள், கட்சிகள், அவற்றின் செய்தித்தாட்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை தடுக்குப்படுவதற்கு அது வழி செய்தது.

ஆனால், பாசிச அமைப்புக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படவில்லை. 1923ம் ஆண்டு ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு எதிராக இருந்த தடை 1924ல் நீக்கப்பட்டது. மாறாக இச்சட்டம் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி (KPD) க்கு எதிரான ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தப்பட்டது. அரசாங்க வக்கீலின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் 1922ல் இருந்து 1924 வரை இச்சட்சத்தின்படி தண்டனைக்குட்பட்டவர்களில் 75 சதவிகித்திற்கும் மேலானவர்கள் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று தெரியவருகிறது. இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் எண்ணிக்கை இன்னும் அதிகமாயிற்று.

மற்றவற்றுடன் இணைந்து, 1929ல் மே தின அணிவகுப்புக்களை தடைசெய்யவும் இச்சட்டம் தளம் கொடுத்தது; எனவே "இரத்தம் தோய்ந்த மே" என்று அழைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலையில் இது பங்கைக் கொண்டிருந்தது. பேர்லினில் இருந்த தொழிலாளர்களை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யுமாறு ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. போலீஸ் கண்டபடி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 30 தொழிலாளர்களுக்கும் மேலானவர்கள் மடிந்தனர்.

இதற்குப் பின்னர், குடியரசுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் Red Front Fighters League (RFB) என்ற அமைப்பையும் செங்கொடி (Red Flag) என்னும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாள் ஆகியவற்றை தடைக்கு உட்படுத்தினர்; பிந்தையது பல வாரங்கள் வெளியீட்டை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

1929ம் ஆண்டு குடியரசுப் பாதுகாப்புச் சட்டம் தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால் சமூக ஜனநாயக கட்சியின் அதிபர் Hermann Muller தலைமையிலான பெரும் கூட்டணி இதை பாராளுமன்றத்தில் குடியரசிற்கான பாதுகாப்பிற்கு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. தேவையான மூன்றில் இரு பங்கு பாராளுமன்ற பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் என்பதில் இது தோல்வியுற்றாலும், 1930ம் ஆண்டு ஜனாதிபதி ஹிண்டன்பேர்க்கினால் அவசரகால ஆணையாக இது இயற்றப்பட்டது.

இன்று, அப்பொழுதை போலவே, ஆனால் பெயரளவிற்கு வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டு அரசாங்கத்தின் கூடுதலான போலீஸ் அதிகாரங்கள், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், தற்போது இருக்கும் அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக, அதற்கு வெளியே சுயாதீனமான சோசலிச அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.