World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE expresses "regret" over killing of Indian prime minister

புலிகள் இந்தியப் பிரதமர் கொல்லப்பட்டது சம்பந்தமாக "வருத்தம்" தெரிவிக்கின்றனர்

By Sarath Kumara
13 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 27 அன்று, இந்தியத் தொலைக்காட்சி சேவையான என்.டி.ரி.வி. க்கு வழங்கிய பேட்டியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம், முன்நாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டமைக்கு தமது இயக்கமே பொறுப்பு என்பதை முதற்தடவையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இலங்கை மீண்டும் ஒருமுறை யுத்தத்திற்குள் இறங்கியுள்ள சமயத்தில், அவர் மறைமுகமாக வருத்தம் தெரிவிக்கின்றமையானது புலிகள் சர்வதேச ரீதியில் தனிமைப்பட்டிருக்கும் நிலையை தகர்ப்பதற்கான இன்னொரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

ராஜீவ் காந்தி, 1991 மே மாதம் பொதுத் தேர்தலின் போது தென் மாநிலமான தமிழ் நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம் ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது புலிகளின் நீண்டகால உரிமைக்குறியாகும். புலிகளின் தலைமைத்துவம் பொறுப்பேற்காத அதே சமயம், புலிகளை பலாத்காரமாக அடக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்தியத் துருப்புக்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது காந்தியின் "காட்டிக்கொடுப்புக்கான" பழிவாங்கலே இந்தத் கொலை என பரந்தளவில் கருதப்பட்டு வந்தது.

பாலசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், அந்தப் படுகொலை "பெருந் துன்பம், ஒரு நினைவுக்குரிய வரலாற்று துன்பம்," அதையிட்டு புலிகளின் தலைவர்கள் "ஆழமாக வருந்துகிறார்கள்" எனத் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் "கடந்த காலத்தை தள்ளிவைப்பதில் பரந்த மனப்பான்மை காட்டுவதோடு" அந்தக் கொலையை "இந்தியாவின் இராணுவத் தலையீடு மற்றும் இந்திய அமைதிப்படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தமும் இடம்பெற்ற அந்த சமயத்தின் அரசியல் மற்றும் வரலாற்று சூழ்நிலைக்குள் போட வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்."

ஒரு தனித் தமிழீழ அரசுக்கான புலிகளின் அபிலாஷைகளுக்கு புது டில்லி ஆதரவு தருகிறது என நினைத்துக்கொண்டு, இந்திய--இலங்கை உடன்படிக்கைக்கும் இந்திய துருப்புக்களை அனுப்புவதற்கும் ஆரம்பத்தில் புலிகள் உடன்பட்டதை பாலசிங்கம் குறிப்பிடத் தவறிவிட்டார். இந்தியா ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாக இலங்கையில் உள்ள தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இரகசியமாக ஆதரவளித்தது. குளிர் யுத்த சூழ்நிலையின் போது, புது டில்லி சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த அதே வேளை, ஜயவர்தன அமெரிக்காவின் நெருங்கிய பங்காளியாக இருந்தார்.

எவ்வாறெனினும், இந்திய அரசாங்கம் தென்னிந்தியாவில் தமிழ் தேசியவாத உணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் தனித் தமிழீழ அரசுக்கு ஒப்புதல் அழிக்கத் தயாராக இருக்கவில்லை. ஜயவர்தன அரசாங்கத்துடனான உடன்படிக்கையின் ஒரு பாகமாக, இந்திய "அமைதிகாக்கும் படையினர்" புலிகளை நிராயுதபாணிகளாக்க முயற்சித்தபோது உடனடியாக கசப்பான மோதல்கள் வெடித்தன. பாலசிங்கம் அடக்கத்துடன் தெளிவுபடுத்தியது போல்: "இந்தியாவால் பிரேரிக்கப்பட்ட அரசியல் தீர்வில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, ஏனெனில் அது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை திருப்திபடுத்தவில்லை.

முடிவில் "இந்திய ஏகாதிபத்திய" தலையீட்டுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முன்னெடுத்த சிங்கள தீவிரவாத பிரச்சாரத்தின் அழுத்தத்தின் கீழ் கொழும்பு அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை கையாண்ட நிலையில் இந்திய அமைதி காக்கும் படையினர் வெளியேறத் தள்ளப்பட்டனர். இறுதியாக பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஜே.வி.பி. க்கு எதிராக மட்டுமன்றி வேலையற்ற சிங்கள இளைஞர்கள் மத்தியில் நிலவிய பரந்த அமைதியின்மையையும் நசுக்க இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டார். ஒரு மதிப்பீட்டின்படி 60,000 பேர் கொல்லப்பட்டனர் அல்லது "காணாமல் போயுள்ளனர்". தெற்கில் ஆற்றல் மிக்க கிளர்ச்சியை நசுக்கிய பிரேமதாச, தனது துருப்புக்களை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டதை அடுத்து, இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் துரிதமாக வெடித்தது.

இந்த முழு நிகழ்வுகளும், இலங்கையின் வடக்குக் கிழக்கில் ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிப்பதற்காக ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவை நாடும் புலிகளின் முன்நோக்கின் அரசியல் வங்குரோத்தை கோடிட்டுக் காட்டியது. ஒழுக்கமான வாழ்க்கை நிலைமை மற்றும் பாரபட்சங்களுக்கு முடிவு தேடும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அப்பால், புலிகளின் வேலைத் திட்டமானது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான வழிமுறையாக தனது சொந்த அரசை ஸ்தாபிக்க முயற்சிக்கும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது.

காந்தியை கொன்றதன் மூலம், தமிழீழத்தை ஸ்தாபிப்பதற்கு ஆதரவளிக்க தவறியமைக்காக புலிகள் இந்திய ஆளும் வர்க்கத்தை கோழைத்தனமாக சீற்றத்துடன் தாக்கியது. அண்மையில் 2002ல் இலங்கை அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதை அடுத்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னதாக புலிகள் இந்தப் படுகொலையை ஒப்புக்கொள்ள முன்வந்தனர். ஒரு நேரடியான கேள்வியை தட்டிக்கழித்த பாலசிங்கமும் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் இந்தக் கொலையை கடந்த காலத்தில் நடந்த ஒரு துன்பியல் என விவரித்தனர்.

எவ்வாறெனினும், 2002 யுத்த நிறுத்தம், இன்னுமொரு அரசியல் முட்டுச் சந்தை நிரூபித்தது. தனித் தமிழீழ அரசுக்கான தனது கோரிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்ட புலிகள், அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவாலாக்கல் ஒழுங்குக்குள் நுழைய தனது விருப்பத்தை அறிவித்தது. ஆயினும், பேச்சுவார்த்தைகள் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதை பற்றி கலந்துரையாடாமலேயே 2003ல் கவிழ்ந்து போனது. இனவாத அரசியலில் முழுமையாக ஊறிப்போயுள்ள கொழும்பு அரசாங்கங்கள், புலிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் ஒரு காட்டிக்கொடுப்பாக கருதும் ஜே.வி.பி. போன்ற பேரினவாதக் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு தலைவணங்கியது.

அதிகரித்தளவில் புலிகள் ஒரு மூலைக்குள் இறுக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஜே.வி.பி.யின் ஆதரவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், இராணுவத்தின் பங்காளிகளான துணைப்படைகளுடன் சேர்ந்து புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் தீவிரமான மோதல்களுக்கு எண்ணெய் வார்த்து வந்தது. புலிகளை சர்வதேச ரீதியில் "பயங்கரவாத இயக்கமாக" தடைசெய்யும் வாஷிங்டனின் பிரச்சாரத்தையும் அவர்கள் எதிர்கொண்டனர். அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ், கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அண்மையில் புலிகளை தடை செய்தன. இது ஐரோப்பாவில் வாழும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் நிதி மற்றும் அரசியல் ஆதரவை விளைபயனுள்ள விதத்தில் துண்டித்தது.

காந்தியின் படுகொலையை பற்றி பாலசிங்கம் வருத்தம் தெரிவிப்பதானது இந்தியாவுடன் இராஜதந்திர வழியை திறப்பதற்கான தெளிவான முயற்சியாகும். இந்தக் கொலையை அடுத்து, புது டில்லி புலிகளை "பயங்கரவாத அமைப்பாக" முத்திரை குத்தியதோடு இதற்கு முன்னர் புலிகள் தடையை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தபோதிலும் புது டில்லி விலக்கிக்கொள்ளவில்லை. 1987ல் போல், இந்திய அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கான எந்தவொரு அரசியல் தீர்வினதும் பாகமாக ஒரு தனித் தமிழீழத்தை நிறுவுவதற்கு தனது எதிர்ப்பை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

பாலசிங்கம் அடிமைத்தனத்தின் பரிதாபமான தோற்றத்தில், 1991 அனுபவங்களை புலிகள் மீண்டும் ஏற்படுத்த மாட்டார்கள் என இந்தியாவிற்கு உறுதிப்படுத்துவதற்காக மிகவும் சிரமப்பட்டார். "எந்தவொரு சூழ்நிலையிலும் நாங்கள் இந்திய அரசாங்கத்தின் நலன்களுக்கு எதிராக செயற்படமாட்டோம் என நாம் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதியளித்துள்ளதோடு ராஜீவ் காந்தியின் படுகொலையில் இருந்தே இந்தியா ஆர்வமிழந்த பாத்திரத்தையே இட்டுநிரப்புகிறது. இந்தியா சமாதான முன்னெடுப்புகளில் நடைமுறையில் தலையீடு செய்ய வேண்டும் என நாம் விரும்புகிறோம்."

இந்தியா புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் தடைசெய்துள்ள நிலையில், இந்தியாவால் மத்தியஸ்த பாத்திரம் வகிப்பது சிரமமானதாக இருக்கும் என்பதை பாலசிங்கம் சுட்டிக்காட்டினார். பின்னர் அவர் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு புது டில்லியிடம் வேண்டுகோள் விடுத்தார். "பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்காக இலங்கைக்கும் மற்றும் புலிகளுக்கும் இராஜதந்திர ரீதியிலும் மற்றும் அரசியல் ரீதியிலும் வலியுறுத்துவது மட்டுமே இந்தியாவால் இட்டு நிரப்பப்படக் கூடிய பாத்திரமாகும்," என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பிரதிபலிப்பு முகத்தில் அறைவது போன்றதாகும். வெளிவிவகார அமைச்சர் ஆனன்த் ஷர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பாலசிங்கத்தின் கவலையை ஏற்றுக்கொள்வதானது, "பயங்கரவாதம், வன்முறை மற்றும் அரசியல் படுகொலைகளின் தத்துவத்தை அங்கீகரிப்பதற்குச் சமமாகும்," என்றார். இந்தியா எந்த சலுகையும் வழங்காது என்பதை சுட்டிக்காட்டிய அவர், "புலிகளால் இழைக்கப்பட்ட கோழைத்தனமான குற்றத்திற்கு இந்திய மக்களால் மன்னிப்பு வழங்கமுடியாது," என மேலும் தெரிவித்தார்.

இந்தியா அமைதியாக இலங்கை இராணுவத்துடனான ஒத்துழைப்பை பலப்படுத்திவருகிறது. அது இலங்கைக்கு அண்மையில் இரு ராடார் அமைப்புக்களை கொடுத்ததோடு இலங்கை இராணுவச் சிப்பாய்கள் இந்தியாவில் பயிற்சியெடுப்பதற்கு உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துமுள்ளது.

இலங்கை அரசாங்கம் மீண்டும் புலிகளை கண்டனம் செய்வதன் மூலம் பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு பதிலளித்தது. பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெளிவுபடுத்தியதாவது: "எண்ணிலடங்கா படுகொலைகள் மற்றும் இலங்கை தலைவர்கள், குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் இருந்து வந்த அரசியல் ஆளுமை கொண்டவர்களை படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகள், அத்துடன் அப்பாவி பொது மக்களை படுகொலை செய்தல் ஆகியவை புலிகளின் வேலை என்பதை மறுக்க முடியாது."

சர்வதேச ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை புதுப்பிப்பதாக காட்டிக்கொள்கின்றனர். பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு அரசாங்கம் வழங்கிய பதில்கள், நேர்மையான பேச்சுவார்த்தைகளை பிரேரிப்பதற்கு பதிலாக, கொழும்பு அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய வல்லரசுகளின் மெளன ஆதரவுடன் மீண்டும் தீவை ஒட்டு மொத்த யுத்தத்திற்குள் தள்ளத் தயாராகிக்கொண்டிருக்கின்றது.