World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The execution of Saddam Hussein

சதாம் ஹுசைனின் மரண தண்டனை நிறைவேற்றம்

By the Editorial Board
30 December 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் முன்நாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை நியாயத்திற்கு சேவை செய்யவில்லை. மாறாக அது புஷ் நிர்வாகத்தினதும் மற்றும் அதன் ஈராக் கையாட்களதும் அரசியல் தேவைகளுக்கே சேவை செய்துள்ளது. பதட்டத்துடனும், இரகசியமாகவும், இருட்டில், சட்ட வழிமுறைகளையும் கேலிக்கூத்தாக்கி இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விதமானது ஈராக்கில் முழு அமெரிக்க செயற்பாடுகளதும் சட்டத்தை மீறிய மற்றும் பிற்போக்குப் பண்பை மட்டுமே கோடிட்டுக் காட்டுகிறது.

டிசம்பர் 26 அன்று ஈராக்கிய அரசாங்க நீதிமன்றம் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஹுசைனுக்கு எதிரான மரண தண்டனை, எவ்வாறு மற்றும் எந்த சூழ்நிலையின் கீழ் நிறைவேற்றப்படும் என்பது பற்றி வெள்ளிக்கிழமை பூராவும் முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்துகொண்டிருந்தன. நீதிமன்ற நடவடிக்கைகளை பெயரளவில் மட்டும் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த பிரதமர் நெளரி அல்-மலிகியின் அரசாங்கத்திற்கும், கைதியின் சரீரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்து பின்னர் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள பசுமை வலயத்திற்கு அவரை அனுப்பிவைத்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கும் இடையில் முன்னும் பின்னுமான தகவல் தொடர்புகள் தொடர்ந்துகொண்டிருந்தன.

ஹுசைனை தூக்கு மரத்திற்கு அனுப்புவதற்கான முடிவு, ஒரு அரசியல் முடிவே அன்றி நீதி சார்ந்தது அல்ல. நவம்பர் 5 அன்று விசேட நீதிமன்றத்தால் மரண தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து அல்-மலிகியே இதை சமிக்ஞை செய்தார். ஹுசைன் புது வருடத்திற்கு முன்னர் தூக்கிலிடப்படுவார் என அவர் பிரகடனம் செய்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் தண்டனையை அமுல்படுத்தும் அவசரத்தில், ஈராக் அதிகாரிகள் ஆரம்பக் கொள்கைகளான நீதிமன்ற நேர்மையை மட்டுமன்றி தற்போதைய ஜனாதிபதி ஜலல் தலபானியால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உறுதியைக் கோரும் தமது சொந்த அரசியலமைப்பையும் கூட நிராகரித்துவிட்டனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பின் சர்வதேச நீதி ஆணையாளர் ரிச்சர்ட் டிக்கர், கார்டியன் பத்திரிகையில் வெள்ளியன்று எழுதிய ஒரு கட்டுரையில் விளக்கியதுபோல், இந்த சட்ட நடவடிக்கைகள் ஒரு கேலிக்கூத்தாகும்.

"நவம்பர் 5, தீர்ப்பும் தண்டனையும் அறிவிக்கப்பட்ட உடனேயே விசாரணையின் நீதிமன்றத் தீர்ப்பு முடிந்துவிடவில்லை. நவம்பர் 22 அன்றே இதன் பதிவுகள் குற்றவாளித் தரப்பு சட்டத்தரணிகளுக்கு கிடைத்துள்ளன. நீதிமன்றத்தின் நிரந்தர விதியின்படி, குற்றவாளித் தரப்பு சட்டத்தரணிகள் தமது மேன்முறையீட்டை டிசம்பர் 5ம் திகதி தாக்கல் செய்யவேண்டும். அதாவது அவர்கள் 300 பக்க விசாரணைத் தீர்ப்பிற்கு இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்தில் பதிலளிக்க வேண்டும். மேன்முறையீட்டு மன்றமானது ஈராக் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு முன்வைக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான விவாதங்களை கவனிக்க விசாரணை ஒன்றை நடத்தவில்லை. மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்தில், குற்றவாளித் தரப்பு வக்கீல்களால் எழுதப்பட்ட வாதங்களுடன் சேர்த்து 300 பக்க தீர்ப்பை நேர்த்தியாக மீளாய்வு செய்வதோடு உரிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த மேன்முறையீட்டு மன்றத்தால் முடியும் என நம்ப முடியாது.

ஹுசைனுக்கு வழங்கப்பட்டதை விட பரந்தளவிலான தக்க நீதிமன்ற நடைமுறைகள் சம்பந்தமான உரிமைகளை, உயிருடன் இருந்த நாஸி தலைவர்களுக்கு வழங்கிய நூரெம்பேர்க் நீதிமன்றத்தை முன்னோடியாகக் கொண்ட ஒரு நீதிமன்றமாக இருப்பதற்கு பதிலாக, ஒரு கைப்பொம்மை நீதிபதி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பு, இருட்டுக்குள் நிறைவேற்றப்பட்ட தண்டனை ஆகியவற்றுடனான பக்தாத் நீதிமன்றமானது ஸ்ராலினிச அல்லது நாஸிவாத போலி வழக்கு விசரணைகளையே நினைவூட்டுகிறது.

அரசியல் நோக்கங்கள்

புஷ் நிர்வாகத்தின் மிகவும் அடிப்படை அரசியல் நோக்கமாக இருந்தது, தனது இயலுமையையும் மற்றும் அவ்வாறு செய்வதற்கான உறுதிப்பாட்டையும் வெறுமனே அம்பலப்படுத்துவதன் பேரில் அதன் பிரதான எதிரியை உலகின் கண்களுக்கு முன்னால் பகிரங்கமாக கொல்ல அதற்கிருந்த ஆசையாகும். வெள்ளை மாளிகையின் நோக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எந்தவொரு எதிர்கால எதிரிக்கும் சதாம் ஒரு சிறந்த பாடமாகும்: வாஷிங்டனின் விருப்பதை எதிர்க்கும் ஒருவரது இரத்தம் தோய்ந்த தலைவிதியை உங்களால் காணமுடியும்.

புஷ் நிர்வாகம் ஈராக்கில் "வெற்றிகண்டதற்கான" ஆதாரமாக இந்த மரண தண்டனையை கூறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், ஈராக்கில் நாளாந்தம் ஈராக்கியர்கள் கொன்று குவிக்கப்படும் பயங்கரத்தையும் மற்றும் அங்கு அமெரிக்கள் உயிரிழப்பதையும் மூடி மறைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது உள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தி அறிக்கைகள் ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்க படையினர் உயிரிழப்புபற்றிய செய்திகளுக்கு மூடு திரையை வழங்கியுள்ளன. டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 அமெரிக்கத் துருப்புக்கள் உயிரிழந்துள்ளதுடன் மாதம் முடிவதற்குள் முழு யுத்தத்தையும் குறிக்கும் வகையில் இந்தத் தொகை 3,000 த்தை எட்டியுள்ளது.

இந்த அரச கொலையானது அதிகளவில் வெறுக்கத்தக்க மற்றும் ஸ்திரமற்ற அல்-மலிகியின் முற்றுகையிடப்பட்ட அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் ஒரு குறுகிய கால அரசியல் உந்துதலை கொடுக்க திட்டமிடப்பட்டதாகும். அல்-மலிகியின் முக்கியமான அரசியல் பங்காளிகளில் ஒருவரான தீவிர சியைட் மது குருவான மொக்தாதா அல் சதாரிடம் இருந்து பிரியுமாறு மலிகியை புஷ் நிர்வாகம் நெருக்கி வருவதோடு அல் சதாருக்கு விசுவாசமான ஷியைட் ஆயுதக் குழுவான மகதி இராணுவத்தின் மீது அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தாக்குதலுக்கும் ஒப்புதலளிக்குமாறும் நெருக்கிவருகின்றது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு மீதான ஷியைட் எதிர்ப்பின் மையாமாக விளங்கும், தொழிலாள வர்க்கம் பெரும்பான்மையாக வாழும் பக்தாத்தின் கிழக்குப் பிரதேசங்கள் (சதார் நகர்) மீதான வன்முறைகளை உக்கிரமாக்குவதற்கான திட்டங்களுடன் முன்செல்லும் அதேவேளை, ஹுசைனின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்த ஷியைட் பெரும்பான்மையினர் மத்தியில் மலிகி மீதான நம்பிக்கையை வளர்க்கும் வழிமுறையை ஹுசைனின் மரணதண்டனை அவருக்கு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், ஈராக்கின் முன்நாள் தலைவர் செய்த குற்றங்களில் ஆற்றியுள்ள பிரதான பாத்திரங்கள் பற்றி எந்தவொரு விரிவான விசாரணையையும் நடத்துவதற்கு முன்னதாக அவரது வழக்கு விசாரணைகளை இந்த மரண தண்டனையின் மூலம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளமை இன்னுமொரு முக்கியமான அரசியல் கணிப்பாகும். 1982ல் டுஜயிலில் 148 ஷியைட் ஆண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மலிகி மற்றும் முன்நாள் அமெரிக்க ஆதரவிலான பிரதமர் இப்ராகிம் ஜபாரியியின் டாவா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலும் மற்றும் அதில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டிருக்காத காரணத்தாலுமே அந்த வழக்கு முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சதாம் ஹுசைனின் ஆட்சிக் காலத்தில் மிகவும் இரத்தம் தோய்ந்த பல சம்பவங்களின் நிலைமைகள் இதுவல்ல. ஈரான்-ஈராக் யுத்தத்தின் முடிவை அண்டிய காலமான 1987-88ல் குருதிஷ் மக்கள் கொல்லப்பட்டது சம்பந்தமான அன்பால் பிரச்சாரம் என சொல்லப்படுவது இரண்டாவது வழக்காகும். இது ஜனவரி 8 மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. ஹல்பஜாவில் குர்திஷ் மக்களை வாயுமூலம் தாக்குவதில் உச்சகட்டத்தை அடைந்த அந்த அட்டூழியங்கள் தொடர்பான எந்தவொரு கடுமையான விசாரணையும் ஆட்சியில் இருந்த அமெரிக்க நிர்வாகங்களின் பாத்திரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.

1980 செப்டெம்பரில் கார்டர் நிர்வாகத்தின் இரகசிய ஆதரவுடன் ஹுசைன் ஈரானுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்தார். அப்போது தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு அமெரிக்க அதிகாரிகளை பணயக் கைதிகளாக்கியது சம்பந்தமாக காட்டர் நிர்வாகம் ஈரானுடன் மோதிக்கொள்ளத் தயாராக இருந்தது. அதன் பின்னர் ரீகனின் நிர்வாகம் எட்டு வருட கால யுத்தம் பூராவும் ஹுசைனுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கியிருந்தது. அது இரசாயன ஆயுதத்தில் ஈரானிய படைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக இராணுவ புலனாய்வு முறைகளை வழங்கியதோடு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற அமெரிக்காவின் ஐரோப்பிய பங்காளிகள் மூலம் ஈராக்கிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யவும் உதவியது. 1983 மற்றும் 1984ல் இரு சந்தர்ப்பங்களிலும், மனித உரிமை மீறல்கள் பற்றிய அவ்வப்போது முணுமுணுத்தாலும் யுத்தத்தில் அமெரிக்கா பக்தாத்துடனான பங்களிப்பை தொடரும் என்பதை ஹுசைனுக்கு மீண்டும் உறுதி செய்வதற்காக, டொனால் ரம்ஸ்பெல்ட் விசேட அமெரிக்கத் தூதுவராக ஈராக்கிற்கு அனுப்பப்பட்டார்.

1991ல் குருதுகள் மற்றும் ஷியைட்டுகளின் கிளர்ச்சிகளை இரத்தம் தோய்ந்த முறையில் நசுக்கியது சம்பந்தமான ஹுசைனுக்கு எதிரான இன்னொரு பிரதான வழக்கு புஷ் நிர்வாகத்திற்கு மேலும் பிரச்சினைக்குரியதாக அச்சுறுத்தியது. அது ஏனெனில், புஷ்ஷின் சொந்தத் தந்தையான முதலாவது ஜனாதிபதி புஷ், பாரசீக வளை குடா யுத்தத்தின் முடிவில் முதலில் கிளர்ச்சிகளை ஊக்குவித்து, பின்னர் ஈராக் அரசின் வீழ்ச்சியை விட ஹுசைனின் சர்வாதிகாரத்தை தொடரவிடுவது விரும்பத்தக்கது என்ற இரத்தக்களரி முடிவிற்கு வந்ததாலாகும். அமெரிக்க யுத்தத் திட்டமிடலாளர்களின் முக்கிய இலக்காக இருந்த ஈரானுக்கு ஈராக் அரசின் வீழ்ச்சி நன்மையளிப்பதாக இருக்கும் என அவர்கள் கணக்கிட்டனர்.

சதாம் ஹுசைன் மீதான போலி விசாரணையை எதிர்ப்பதும் மற்றும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டனம் செய்வதும், எந்தவிதத்திலும் முன்நாள் ஆட்சியாளரை அல்லது அவரது கொள்கைகளை அரசியல் ரீதியில் ஆதரிப்பதாக அர்த்தப்படாது. ஹுசைன் பிற்போக்கான மற்றும் ஒடுக்கப்பட்ட நாட்டில் தேசிய முதலாளித்துவத்தின் எடுத்துக்காட்டான பிரதிநிதியாக இருந்தார். தற்செயலாக ஏகாதிபத்தியத்துடன் மோதலுக்கு வந்த போதிலும், அவர் ஈராக்கிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஈராக்கிய முதலாளித்துவத்தின் செல்வந்த மற்றும் சொத்துடமையாளர்களை பாதுகாக்க விட்டுக்கொடுப்பின்றி அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்.

ஹுசைனின் முதலாவது பிரதான வெகுஜன ஒடுக்குமுறை அவர் 1970களின் கடைப்பகுதியில் முதலாவதாக ஆட்சிக்கு வந்ததுடன் உச்சகட்டத்தை அடைந்தது. அப்போது பாத் கட்சி ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கொன்றொழித்ததோடு பக்தாத்தையும் மற்றும் எண்ணெய் வயல்களையும் மையமாகக் கொண்டிருந்த பிரமாண்டமான போர்க்குணம் மிக்க தொழிலாள வர்க்க இயக்கத்தையும் நசுக்கியது. அப்போது அமெரிக்காவின் ஆர்வமான பாராட்டைப் பெற்ற, இவ்வாறான தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான அடக்குமுறையின் நீண்டகால விளைவாகவே தற்போது ஈராக் மத/மதக்குழு அடிப்படையில் பிளவுற்றுள்ளது.

எவ்வாறெனினும், ஈராக்கிய தலைவர் தொழிலாள வர்க்க நீதிமன்ற விதிகளின் கீழ் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. அவர் அமெரிக்காவால் ஈராக்கை ஆக்கிரமித்து கைப்பற்றியதை அடுத்து ஒரு ஆக்கிரமிப்பு அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு காட்டு நீதிமன்றத்தின் இரையாகியுள்ளார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர் செய்த குற்றங்களை விடக் கொடூரமான குற்றங்களை செய்தவர்களால் அவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் வெள்ளியன்று வெளியிட்டுள்ள ஆசிரியர் தலைப்பில், சதாம் ஹுசைனுக்கு எதிரான வழக்கில் புஷ் நிர்வாகம், காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர், மற்றும் அமெரிக்க ஊடகங்களும் அணுகிய பாசாங்கைப் பற்றிக்கொண்டது. இது யாருக்கும் பொருந்துமானால் "கிம் ஜோங் இல் தவிர, உயிருடன் இருக்கும் ஏனையவர்களை விட தனது இரு கைகளிலும் இரத்தக் கறைகளைப் பூசிக்கொண்டிருக்கும் சதாம் ஹுசைனுக்கு இது உரியதாகும்" என பிரகடனம் செய்வதற்கு முன்னதாக, போஸ்ட் மரண தண்டனைக்கு எதிரான தனது பொது எதிர்ப்பை சுருக்கமாக கூறிக்கொண்டது.

எங்களால் இதற்கு உடன்பட முடியாது. ஜோர்ஜ். டபிள்யூ. புஷ் இன்னமும் இரண்டு ஆண்டுகளே அதிகாரத்தில் இருக்கும் நிலையில் ஏற்கனவே சதாம் ஹுசைனை விட அதிகமான ஈராக்கியர்களை கொன்றுள்ளார். பொதுச் சுகாதாரம் சம்பந்தமான ஜோனஸ் ஹொப்கின் பாடசாலையால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2003 மார்ச்சில் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 655,000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்-ஈராக் யுத்தத்தில் ஹுசைனின் அமெரிக்க பங்காளிகளும் உயிருடன் இருக்கும் முன்நாள் அமெரிக்க ஜனாதிபதிகளுமான புஷ்ஷின் தந்தை, கிளின்டன் மற்றும் புஷ் பற்றியும் சொல்லவேண்டியதில்லை. இவர்களின் ஆதரவில் ஈராக் மீது அமெரிக்க தலைமையில் திணிக்கப்பட்ட தடைகளின் காரணமாக 1991 முதல் 2003 வரை ஒரு மதிப்பீட்டின்படி 1.5 மில்லியன் ஈராக்கியர்கள் உயிரிழந்துள்ளனர்.

படையெடுப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு பொறுப்பான புஷ், சென்னி மற்றும் அவர்களது உதவியாளர்களும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முன்னெடுத்த குற்றத்திற்காக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது மட்டுமே, ஈராக்கில் சித்திரவதைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்த மக்களைப் போலவே, அமெரிக்க தலைமையிலான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் மற்றும் ஏனைய மக்கள் சார்பாகவும் நியாயத்தை இட்டு நிரப்ப முடியும்.