World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Two years after the Asian tsunami: Sri Lankan survivors face civil war and squalor

ஆசிய சுனாமியின் பின்னர் இரண்டு ஆண்டுகள்: இலங்கையில் உயிர்தப்பியவர்கள் உள்நாட்டு யுத்தத்தையும் இழிநிலையையும் எதிர்கொள்கின்றனர்

By Panini Wijesiriwardane
30 December 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஆசிய சுனாமி இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து உட்பட 14 நாடுகளின் கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியை அழித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பத்தாயிரக்கணக்கான வீடுகளையும், பாடசாலைகளையும் மற்றும் ஆஸ்பத்திரிகளையும் பிரமாண்டமான அலைகள் அரித்துச் சென்றபின், குறைந்தபட்சம் 230,000 பேர் உயிரிழந்ததோடு 1.7 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகினர். மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வறியவர்கள் தமது வீடுகள், குடும்ப உறுப்பினர்கள், பற்றாக்குறையான சொத்துக்கள் மற்றும் ஜீவனோபாயத்தையும் இழந்துவிட்டனர்.

இந்தோனேஷியாவை அடுத்து, இலங்கையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாகும். 35,000 பேர் கொல்லப்பட்டதுடன் கிட்டத்தட்ட 120,000 வீடுகள் அழிக்கப்பட்டன. 516,150 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளின் பின்னர், பெரும்பாலானவர்கள் தரமற்ற தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் கொஞ்ச உதவிகளுடன் அல்லது அரசாங்க உதவிகளே இன்றி அன்றாடம் உயிர்பிழைக்க போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வெளியிட்ட உத்தியோகபூர்வ செய்தியொன்றில், "சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் பாதுகாப்பான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதன் பேரில் பல்வேறு சமூகத்தினர் மத்தியிலும் ஐக்கியத்திற்கு" அழைப்பு விடுத்தார். அவரது அரசாங்கம், சுனாமி தாக்கிய டிசம்பர் 26ம் திகதியை இலங்கையின் "தேசிய பாதுகாப்பு தினமாக" கூறிக்கொள்கின்றது.

இராஜபக்ஷவின் பாசாங்கு திகைப்புக்குரியதாகும். சுனாமியின் பின்னர் முதலாவது வருடத்தில், அவர் பிரதமர் என்ற வகையில் அரசாங்கத்தின் முற்றிலும் பற்றாக்குறையான நிவாரண நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டு நிவாரண நடவடிக்கைகளை ஸ்தாபிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற சிங்களப் பேரினவாத குழுக்களின் எதிர்ப்பினால் முற்றிலும் தடைபட்டுப்போயின.

2005 நவம்பரில் ஜனாதிபதி வேட்பாளர் என்றவகையில், இராஜபக்ஷ சுனாமியால் உருவாக்கப்பட்ட கடுமையான வீடின்மை நிலையை "ஆறு மாதங்களுக்குள்" தீர்த்துவைப்பதாக வாக்குறுதியளித்தார். புலிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை உள்ளடக்கிய ஜே.வி.பி.யுடனான தேர்தல் உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டிருந்த போதிலும் அவர் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தார்.

கடந்த ஆண்டு பூராவும், "ஐக்கியத்தை" ஸ்தாபிப்பதற்குப் பதிலாக, இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிவிட்டுள்ளனர். கிழக்கிலும் வடக்கிலும் யுத்தப் பிராந்தியத்தின் கடற்கரைப் பிரதேசங்கள் சுனாமியால் மிகவும் மோசமாக சேதமாக்கப்பட்ட பிரதேசங்களாகும். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கான அரசாங்க உதவிகள் கொஞ்சமாகவே கிடைத்தன அல்லது முற்றாகக் கிடைக்கவில்லை. இப்போது இந்த பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களாலும் மேலும் அழிவை எதிர்கொண்டுள்ளனர்.

அவரது ஏனைய தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே, இராஜபக்ஷ ஆறு மாங்களுக்குள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான வீடுகளை வழங்கத் தவறினார். வாழ்க்கைக்கு அடிப்படையில் அத்தியாவசியமானவை இன்றி பத்தாயிரக்கணக்கான மக்கள் வாடும் போது, அவரது அரசாங்கம் இனவாத யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்காக பாதுகாப்புச் செலவை 45 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது.

மீள்கட்டுமான அபிவிருத்தி ஏஜன்சியின்படி, தேவையான 114,069 நிரந்தர வீடுகளில் 63,469 மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 47,859 வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் அல்லது திருத்தியமைக்கும் நடவடிக்கை இப்போதுதான் நடைபெற்றுக்கொண்டிக்கின்றது.

பெரும்பாலான வீடுகள் அரச சார்பற்ற நிறுவனங்களாலேயே கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் நிதியளித்துள்ளன. தமது வீடுகளை மீளக் கட்டியெழுப்ப அல்லது திருத்தியமைக்க வீட்டு உரிமையாளர்களே பொறுப்பு. முழுமையாக கட்டுவதற்கு 250,000 ரூபாவும் (2,500 அமெ. டொலர்கள்) பகுதியை கட்டி முடிக்க 100,000 ரூபாவும் வழங்கப்படுகின்றன. பணம் வழங்கப்பட்ட உடனேயே, அந்த வீடு கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.

புதிய வீடுகள் தரம் குறைந்தவையாகும். அதிகளவிலான வீடமைப்புத் திட்டங்களுக்கு செல்வதற்கு ஒழுங்கான வீதிகள் கிடையாது மற்றும் உட்புற பாதைகளும் கிடையாது. சில வீடுகள் சரிவான நிலங்களில் கட்டப்பட்டுள்ளதோடு உடைந்து விழும் ஆபத்தில் உள்ளன. இப்பொழுதே வெடித்த சுவர்களையும், உடைந்த கதவுகளையும் மற்றும் ஜன்னல்களையும் மற்றும் ஈரமான தரைகளையும் காணமுடியும். பெரும்பாலானவைக்கு குழாய் நீர் கிடையாது. வடிகால் மற்றும் பொருத்தமான கழிவுப்பொருள் அகற்றும் வசதிகள் கிடையாது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற கிழக்கு மாவட்டங்களில் 60,280 குடும்பங்கள் சுனாமியால் இடம்பெயர்ந்துள்ளதுடன் 43,382 குடும்பங்கள் இன்னமும் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளன. இந்தக் குடும்பங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற வடக்கில் உள்ள மாவட்டங்களில் 16,433 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு 11,641 குடும்பங்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் வசிக்கின்றன.

தீவின் தெற்கில் புதிய வீடுகளைக் கட்டும் அதன் இலக்கில் சுமார் 90 வீதத்தை முடித்துள்ளதாக கெயார் இன்டர்நஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயினும், வடக்கில் அது இந்த இலக்கில் 10 வீதத்தையே அடைந்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள், ஜே.வி.பி. போன்ற சிங்களத் தீவிரவாத அமைப்புகளின் இனவாத குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகி வருகின்றன. அவை புலிகளுக்கு உதவுவதாக இந்த அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இப்பொழுது யுத்தப் பிராந்தியத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்காலிகமான தங்குமிடங்களில் பெரும்பாலானவை முற்றிலும் வசதியற்றவையாகும். பல தங்குமிடங்கள் தகரத்தால் அமைக்கப்பட்டு பனை ஓலைகளால் கூரைகள் வேயப்பட்டுள்ளன. மலசல கூடங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதோடு இருப்பவை மழைகாலத்தில் அடிக்கடி நிறைந்துபோகின்றன. சுகாதாரத்திற்கு ஒவ்வாத நிலைமைகள் பலவித தோல் மற்றும் நீரின் மூலம் தொற்றும் நோய்களுக்கு வழிவகுத்துள்ளன. தமக்கு புதிய வீடுகள் கிடைக்கும் என்ற எண்ணம் பல குடும்பங்களுக்கு கிடையாது. சுனாமியின் பின்னர் உறவினர்களுடன் தஞ்சம் புகுந்த எவருக்கும் அல்லது நலன்புரி நிலையங்களிலேயே மணம் முடித்தவர்களுக்கும் புதிய வீடுகளைப் பெறுவதற்கான தகுதி கிடையாது.

பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீண்டும் கட்டியெழுப்பப்படவில்லை. கொள்கை ஆய்வு நிறுவனமொன்றின் (ஐ.பி.எஸ்.) ஆய்வின்படி, அழிவுக்குள்ளான பாடசாலைகளில் 18 பாடசாலைகள் மட்டுமே மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி சேதமடைந்த 255 பாடசாலைகளில் 38 பாடசாலைகள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 30 வீதமான மாணவர்களுக்கு பாடசாலை கிடையாது. கல்வியமைச்சின் அதிகாரி ஒருவர் டெயிலி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் 25 பாடசாலைகள் மற்றும் திருகோணமலையில் 13 பாடசாலைகளையும் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் "பாதுகாப்பு நிலைமையின்" காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஐ.பீ.எஸ். ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் இதே நிலைமையைக் கண்டுள்ளன. மறுசீரமைப்பு மற்றும் திருத்தங்களும் 33 மருத்துவ நிலையங்களில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 69 மருத்துவ நிலையங்களின் வேலைகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும், எஞ்சியுள்ள 189 மருத்துவ நிலையங்களின் வேலைகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.

பொருளியலாளர் முத்துக்கிருஷ்ண சர்வானந்தனின் ஆய்வு, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் சுனாமியில் உயிர்தப்பியவர்கள் மத்தியில் வறுமையின் மட்டம் 64 வீதத்தில் இருந்து 80 வீதம் வரை அதிகரித்துள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. உயிர்தப்பியவர்களுக்கு வழங்கிய மட்டுப்படுத்தப்பட்ட நிதி உதவியை நிறுத்தியுள்ள அரசாங்கம், இப்பொழுது அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதாக கூறுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் வேலையின்மை 37 வீதத்தில் இருந்து 54 வீதமாக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

சுனாமியால் வாழ்க்கை சீரழிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளுக்கு, இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக காலங்கடந்து வாக்குறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் போன்ற உலகத் தலைவர்கள் மீதும் குற்றம் சுமத்த தகுதியானவர்கள்.