World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan's dictator threatens massacre at Islamabad mosque

இஸ்லாமாபாத் மசூதியில் படுகொலைகள் நிகழும் என்று பாகிஸ்தானின் சர்வாதிகாரி அச்சுறுத்துகிறார்

By Keith Jones
9 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஆதரவை கொண்டுள்ள பாகிஸ்தானின் இராணுவ பலவானான தளபதி பர்வேஸ் முஷாரஃப் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தின் லால் மசூதி அல்லது சிவப்பு மசூதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ஆயுதமேந்திய இஸ்லாமிய மதகுருமார்களும் போராளிகளும் சரணடைய வேண்டும் இல்லாவிடில் இறக்க நேரும் என்று கூறினார்.

"மசூதிக்குள் இருப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்: அவர்கள் வெளியேறி சரணடையவேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், இங்கு, இப்பொழுது கூறுகிறேன், அவர்கள் கொல்லப்படுவார்கள்."

முஷாரஃப்பின் மூடி மறைக்காத அச்சுறுத்தல், தேசிய பாராளுமன்றத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில், பாகிஸ்தானின் உளவுத்துறைப் பிரிவு தலைமை அலுவலகம் உட்பட பல முக்கிய அரசாங்க கட்டிடங்களுக்கு அருகே இருக்கும் ஒரு மசூதி--பள்ளிக்கூட வளாகத்தின் மீது-- லால் மசூதி மீது பாகிஸ்தானின் இராணுவம் குவிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது பற்றிய அவருடைய முதல் பகிரங்க அறிவிப்பாகும்.

கடந்த செவ்வாயன்று இந்த முற்றுகை தீவிரமாக தொடங்கியது; கடுமையான துப்பாக்கி சண்டைகள் துணை இராணுவத்தினருக்கும் சிவப்பு மசூதி போராளிகளுக்கும் இடையே நடந்ததில், ஒரு செய்தியாளரும், வழிப்போக்கர்களும் உட்பட 10 பேர் மரணமடைந்தனர், பல இளம் மசூதி பள்ளி மாணவர்கள் உட்பட 150 பேருக்கும் மேலானவர்கள் காயமுற்றனர்.

ஆனால் மசூதியோ ஏற்கனவே நூற்றுக்கணக்கான துணை இராணுவ குதிரைப்படை பிரிவினரால் பல நாட்களாக சூழப்பட்டிருந்தது; செய்தியாளர்கள் சிவப்பு மசூதி மீது அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கையை தொடக்குமா, எப்பொழுது என்ற விவாதங்களில் பல நாட்களாக ஈடுபட்டிருந்தனர். ஜூன் கடைசியில் தடைவிதிக்கப்பட்டுள்ள ஜைஷ்-இ-முகம்மது [முகம்மதின் இராணுவம்] மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட பெரும் ஆயுதமேந்திய போராளிகள் மசூதி வளாகத்தில் நிலை கொண்டிருந்ததாக முஷாரஃப் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் தலைமை படைத்தளபதி என இரு பதவிகளையும் வகிக்கும் முஷாரஃப் இதற்கு ஆதாரம் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சிவப்பு மசூதியின் தலைவர்கள் பல முறையும், இன்னும் தைரியத்துடன் கூடவும், அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறியும், ஷரிய சட்டங்களை மீறுபவர்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டுபவர்கள் மீதும் தாக்குதலை ஊக்குவித்துள்ளனர்.

ஒரு குதிரைப்படையினரும், இராணுவ கேர்னல் ஒருவரும் உள்பட முற்றுகையில் இதுவரை 20 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் மசூதியின் துணை இயக்குனரும் தற்போதைய தலைவருமான அப்துல் ரஷிட் காசி GEO தொலைக்காட்சியிடம் சனியன்று சிவப்பு மசூதி வளாகத்திற்குள் இன்னும் பனிரெண்டு பேர் இறந்தனர் என்று கூறினார். மற்ற செய்தி ஊடகத் தகவல்களும் மசூதிக்குள் இருப்பவர்கள் இறப்பு எண்ணிக்கை அரசாங்கம் கொடுத்துள்ள எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறியதாக தெரிவிக்கின்றன.

முற்றுகையில் சிக்கிக் கொண்டவர்களுள் பெரும்பாலானவர்கள் சிவப்பு மசூதியுடன் தொடர்புடைய பள்ளியில் பயிலும் இளவயது மாணவ, மாணவியராவர். மசூதி வளாகத்தின் ஒரு பகுதியாக ஜமியா ஹப்சா மதக் கல்விக்கூடம் மகளிருக்காக உள்ளது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பள்ளியாக இருக்கும் ஜமியா பரிதா சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. அது எந்த நிகழ்வும் இல்லமலேயே இராணுவத்தால் சனிக்கிழமை காலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிகப்பு மசூதி வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட 1,200 மாணவர்கள் முற்றுகை ஆரம்பித்ததில் இருந்து வெளியேறியுள்ளனர்; ஆனால் பெரும்பாலான சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளே இருப்பதாக கருதப்படுகிறது. இன்னும் இரண்டாயிரம் பேர் மசூதி வளாகத்திற்குள் இருப்பதாக காஜி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய அதிகாரிகள் 500 பேர்தான் இருப்பர் என்றாலும், இவர்களில் பலபேர் ஆயுதமற்றவர்கள், பெண்கள், குழந்தைகள் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சிவப்பு மசூதி அதன் பெரும்பாலான மாணவர்களை ஈர்த்துள்ள பல ஒதுக்கமான பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலும் வறிய குடும்பத்தில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் -- முற்றுகையிடத்தின் அருகே கூடியுள்ளனர் ஏனெனில் தங்கள் மகனோ, மகளோ அல்லது மற்ற உறவினரோ முற்றுகையிடப்பட்டுள்ள மசூதிக்குள் இன்னமும் இருக்கக்கூடும் என்று அவர்கள் அறிவர் அல்லது அஞ்சுகின்றனர்.

முற்றுகையானது பாகிஸ்தானிய இராணுவம் மசூதியை தாக்கி ஏராளமான நிரபராதிகள் கொடூரமான படுகொலைக்கு ஆளாவதில் முடிந்து விடுமோ என்று அவர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

பாகிஸ்தானிய இராணுவத்தின் நீண்ட கால மனித உரிமை மீதான கொடுமைகள், மற்றும் வறுமையினாலோ, அண்மையில் பலூச்சிஸ்தானை உலுக்கிய புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் விளைவாகவோ ஏற்பட்ட பாகிஸ்தானிய மக்களின் துன்பங்கள் தொடர்பான அரசாங்கத்தின் அலட்சியத்தை எடுத்துக் கொண்டால், சிவப்பு மசூதியின் தலைவர்களுடைய சீர்திருத்த எதிர்ப்பு பிற்போக்கு அரசியலை எடுத்துக் கொண்டால், அத்தகைய கொடுரமான விளைவு உண்மையில் சாத்தியமே.

புதனன்று பாகிஸ்தானிய பாதுகாப்புப் படைகள், சிகப்பு மசூதியின் தலைவரான அப்துல் ரஷித் காஜியின் சகோதரரான மெளலான அப்துல் அஜிசை, அவர் ஒரு பர்க்காவின் மறைப்பில் மசூதியை விட்டுத் தப்பியோட முயலுகையில் பிடித்தன. ஜிஹாத் மற்றும் உயிர்நீத்தலுக்கு ஆதரவாக அடிக்கடி வலுவாக உரைகளை முன்பு கொடுத்த அஜிஸ் பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி அவருடைய சகோதரரையும் மசூதியில் இருக்கும் மற்றவர்களையும் சரணடைந்துவிடுமாறு வலியுறுத்தினார்.

இன்றுவரை, அத்தகைய முறையீடுகளை அப்துல் ரஷித் காஜி நிராகரித்து, உயிர் நீத்தல் சரணடைவதைவிட உயர்வானது என்று அறிவித்துள்ளார். அரசாங்கம் அவருக்கும் அவருடைய தொண்டர்களுக்கும் மசூதியை விட்டு தடையின்றி வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் மீது விசாரணை நடத்தும்போது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சனிக்கிழமையன்று அவருடைய போர் ஊக்கம் தரும் உரை விளக்குவது போல், முஷாரஃப் ஒரு வலுவான மனிதராக தான் இருப்பது பற்றிய சான்றுகளை வெளிப்படுத்துவதில் களிப்பு காண்பது தெளிவாகத் தெரிகிறது.

பாகிஸ்தானிய தலைநகரின் சில பகுதிகள் இப்பொழுது இராணுவ முகாம் போல் காட்சியளிக்கிறது; ஆயிரக்கணக்கான குதிரைப்படைகளும் முறையான துருப்புக்களும் சிவப்பு மசூதியை சுற்றி திரண்டு நிற்கின்றனர். அப்பகுதியில் மசூதிக்கு அருகே முழு ஊரடங்கு உத்தரவு சுமத்தப்பட்டுள்ளது, அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் அன்றாட தேவைகளை வாங்குவதற்கு மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

பல நாட்களாக அவ்வப்பொழுதும், சில நேரங்களில் அதிகமான அளவிலும் பலத்த துப்பாக்கி சண்டைகள், வெடிவைப்பு ஓசைகள் அங்கு முழங்குகின்றன. முற்றுகையிடப்பட்ட வளாகத்தில் இருந்து மாணவர்கள் தப்பி ஓடுவதற்கு உதவுதல் என வெளிவேடத்திற்கான நோக்கத்துடன், இராணுவம் கட்டுப்படுத்தப்பட்ட வெடிவைப்புக்கள் மூலம் மசூதியின் வெளிச்சுவர்களை சில இடங்களில் துளைபோட்டுள்ளது. ஆனால் சுவர்களை சரிய வைப்பது இராணுவத் தாக்குதலையும் எளிதாக்கும்.

போக்கில் மாற்றம்

சிவப்பு மசூதிக்கு எதிரான இராணுவ நடவடிக்கை பெருகிய முறையில் ஆட்டம் கண்டிருக்கும் முஷாரஃப் ஆட்சியின் போக்கில் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது.

பாகிஸ்தானின் தாராளவாத செய்தி ஊடகம், எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமைகள், தொழிலாளர்கள் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தும்போது அவற்றை தகர்ப்பதற்கு அரசாங்க அடக்குமுறை, கொலைத்தனமான வன்முறை ஆகியவற்றை பயன்படுத்த தயாராக இருக்கும்போது சிவப்பு மசூதியின் தலைமை வெளிப்படையாக எதிர்த்து நிற்பதை எதிர்கொள்கையில், அரசு தன்னுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்த தவறியதை பலமுறையும் சுட்டிக் காட்டியுள்ளது. மே 12, 13 தேதிகளில் முஷாரஃப்புடனும் மற்ற முக்கிய கராச்சி, சிந்த் முனிசிபல், மாநில அரசாங்கங்களுடனும் தொடர்புடைய கட்சியான MQM ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர்கள், தயாரிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை கொண்டு தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை முஷாரஃப் தற்காலிக பதவிநீக்கம் செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட அணிவகுப்பின் மீது ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்திய பொழுது 40 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த வாரம் வரை, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிராக வன்முறையை தூண்டி, அச்சுறுத்தலை பெருகிய முறையில் பயன்படுத்தி வந்த மெளலான அப்துல் அஜிஸ் மற்றும் அப்துல் ரஷித் காஜியை அரசாங்கம் அசட்டை செய்தது, அல்லது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்தது. கடந்த ஆறு மாதங்களாக சகோதரர்கள் தங்கள் தொண்டர்களை அரசாங்க கட்டிடங்களை ஆயுதங்களுடன் ஆக்கிரமிக்குமாறு உத்தரவிட்டனர்; ஷரிய சட்டத்தை தங்கள் நீதிமன்றங்கள் மூலம் நிறுவ முடிந்தது என அறிவித்தனர், சிவப்பு மசூதி மாணவர்களை "இஸ்லாமிய நெறியற்ற நடவடிக்கைகளில்" ஈடுபடும் குறுந்தகடுகள், வீடியோகாட்சிகள் ஆகியவற்றை விற்கும் கடைக்காரர்கள் போன்றவர்களை அச்சுறுத்தவும் தாக்கவும் தூண்டிவிட்டு வருகின்றனர். சிவப்பு மசூதியின் நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் கூறிய குறைகளுக்கு விடையிறுக்கும் வகையில் சில போலீஸ் அதிகாரிகள்கூட கடத்தப்பட்டனர். சிகப்பு மசூதிக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்படுமானால் தற்கொலை குண்டுவீச்சுக்களை கட்டவிழ்த்துவிட நேரிடும் என்றும் பல முறையும் சகோதரர்கள் மிரட்டியுள்ளனர்.

கராச்சியில் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு தெளிவாக பிரயோகிக்காத அக்கறையான, உயிர்கள் இழக்கப்படலாம் என்ற காரணத்தை கூறிக் கொண்டு, அரசாங்கம் சிகப்பு மசூதியுடனான போராட்டத்திற்கு ஒரே தீர்வு பேச்சுவார்த்தைகளில்தான் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளது. இறுதியில், சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன; ஏப்ரல் மாதம் ஒரு கட்டத்தில் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டங்களுக்காக பல மசூதிகளை இடிக்கும் திட்டம் பற்றிய இஸ்லாமியவாதிகளின் புகார்கள் பற்றி உறுதியாக உடன்பாடு தோன்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆறு இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான MMA என்னும் அமைப்பின் தலைவர்கள் சிலர் சிவப்பு மசூதிச் செயலர்களின் நடவடிக்கைகள் பலவற்றை வெளிப்படையாக ஆதரித்தனர்; ஷரிய சட்டத்திற்கு ஆதரவாக அவர்களுடைய மிரட்டலும் இதில் அடங்கும். MMA என்பது "எதிர்க்கட்சியின்" ஒரு பகுதி என்றாலும், சில நேரங்களில் அது முஷாரஃப் மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கும் நட்பு காட்டுகிறது. 2003ல் முஷாரஃப்பின் ஜனாதிபதி அதிகாரங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு இது உதவியது; அதையொட்டி அவருடைய 1999 ஆட்சி மாற்றம் நடத்தியதற்கும் அத்தி இலை மறைப்பு கொடுக்கப்பட்டது. பலுசிஸ்தானில் இன்றுவரை அது முஷாரப் சார்பு உடைய PML (Q) கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

அரசாங்கத்தின் மோசடித்தன்மை

அரசாங்கம் வேண்டுமேன்ற சிவப்பு மசூதிப் பிரச்சினையை பெரிதாக வளர அனுமதித்து, இஸ்லாமிய வலதின் அச்சுறுத்தலை பயன்படுத்தி மக்களை இராணுவ ஆட்சியை ஏற்கும் வகையில் நடந்து கொள்ள மிரட்டவும், அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்கள் தற்போதைய ஆட்சி ஒன்றுதான் பாகிஸ்தான் "தாலிபான் மயமாகாமல்" தடுத்து நிறுத்தும் இல்லாவிடின் பெருங்குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று உணர்வதற்கும், செயல்படுகிறது என்று முஷாரஃப் ஆட்சியை குறைகூறுபவர்கள் வாதிட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மற்றும் பாகிஸ்தானுக்குள் இருக்கும் இடதிற்கு எதிரான ஒரு தடுப்பு அரணாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தான், காஷ்மீர், மற்றும் இந்தியாவில் இஸ்லாமாபாத்தின் புவி-அரசியல் செல்வாக்கை விரிவாக்குவதற்கும் ஒரு கருவியாக இஸ்லாமிய வலதை பயன்படுத்தும் வண்ணம், அதனை அமைத்தல், அதற்கு ஆதரவு கொடுத்தல் மற்றும் அதனை சூழ்ச்சியாய் கையாளுதல் போன்றவற்றை செய்வதில் பாகிஸ்தானிய இராணுவ, உளவுத்துறை பிரிவுகள் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை.

சிவப்பு மசூதியே நீண்டகாலமாக மூத்த பாகிஸ்தானிய இராணுவ, அரசாங்க, அரசியல் தலைவர்களின் ஆதரவிற்குட்பட்டுள்ளது; பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய வலது, பாராளுமன்ற மதக் கட்சிகள் இன்னும் பல ஆயுதமேந்திய குழுக்களுடன் கொண்டுள்ள பிணைப்பின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

BBC செய்தித் தகவலின்படி, மசூதியின் முன்னாள் தலைவரும், இப்பொழுது தலைவர்களாக உள்ள அப்துல் ரஷித் காஜி மற்றும் மெளலான அப்துல் அஜிஸ் என்னும் இரு சகோதரர்களின் தகப்பனாருமான மெளலானா அப்துல்லா 1977ல் இருந்து 1988 வரை பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்த தளபதி ஜியாவுல் ஹக்கிற்கு "மிகவும் நெருக்கமாக இருந்தவர்" என்று தெரிகிறது. ஒரு இராணுவ ஆட்சிமாற்றத்தின் மூலம் ஹக் அதிகாரத்தை கைப்பற்றி, பின்னர் பாகிஸ்தானை "இஸ்லாமிய மயமாக்குதல்" என்ற கருத்திற்கு முன் நின்று, ஆப்கானிஸ்தானத்தில் சோவியத்திற்கு எதிரான முஜாஹிதீனுக்கு ஆயுதங்கள் கொடுப்பதற்கான அமெரிக்க பிரச்சாரத்திற்கும் முன்னணியில் இருந்தார்.

ஜியாவின் மகனான எஜஸ்-உல்-ஹக் தற்போதைய பாகிஸ்தானிய அரசாங்கத்தில் மத விவகாரங்களுக்கான மந்திரியாக உள்ளார்.

சிவப்பு மசூதிப் போராளிகளுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கையை தொடங்கும் முஷாரஃப்பின் முடிவில் ஐயத்திற்கு இடமின்றி ஒரு காரணி, ஏழு சீனக் குடிமக்களை அவர்கள் சமீபத்தில் ஒரு விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்கூறி கடத்தியதாகும். இஸ்லாமாபாத்தின் முக்கிய இராணுவ, பொருளாதாரப் பங்காளியான சீன அரசாங்கம் தன் குடிமக்களை பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாக்காததற்காக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் அரசாங்கத்தில் மற்ற இலக்குகளுக்கும் பயன்படுகிறது; தன்னுடைய "மறு தேர்தலுக்கு" வழியைமப்பதற்காக தலைமை நீதிபதியை பணிநீக்கம் செய்த முஷரப்பின் முயற்சிகளுக்கு எதிரான பெருகிய போராட்டங்களை திசைதிருப்பும் வகையிலும் இது உள்ளது. (முஷாரஃப்பின் ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புதல் கொடுத்த பல தீர்ப்புக்களில் தலைமை நீதிபதி இப்டிகார் செளதரியின் பங்கு இருந்தாலும், சமீபத்தில் அவர் பல தீர்ப்புக்களை வெளியிட்டார்; அவை அரசாங்கத்தின் செயற்பட்டியலுக்கு மாறுபட்டிருந்தன; இதையொட்டி முஷரப் அவரை "நம்பிக்கை உகந்தவர் அல்ல" என்ற கருத்தைக் கொண்டார்.)

திங்களன்று, சிவப்பு மசூதியில் வன்முறை வெடிப்பதற்கு முதல் நாள், தலைமை நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி தரக்கூடிய கண்டனம் ஒன்றைக் கொடுத்தது; இதுவரை இராணுவத்திற்கு அடங்கியிருந்து இழிவு பெற்றிருந்த நீதிமன்றம் இனி தலைமை நீதிபதி செளத்ரிக்கு எதிரான தயாரிப்பு ஊழல் வழக்குகளை நிராகரிக்கக் கூடும் என்ற கருத்தை கூட நீதிமன்றத்தின் கண்டனம் குறிப்பாக காட்டுகிறது.

அரசாங்கம், தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கில் தனக்கு ஆதரவாக கொடுத்திருந்த ஆவணங்களை நீதிமன்றம் கண்டித்தது; அவை தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் எதிரான அற்ப குற்றச் சாட்டுக்களை கொண்டிருக்கின்றன என்றும் கண்டித்தது. நீதித்துறையில் வேவு பார்ப்பதற்காக பாதுகாப்பு நடைமுறையை அது கண்டித்து, உளவுத்துறை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் வீடுகளில் ஒற்றுக் கருவிகள் அகற்றப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இன்னும் முக்கியமான விதத்தில், சிவப்பு மசூதியுடன் மோதல் என்பது தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முஷார்ஃப் பெனசீர் பூட்டோ மற்றும் அவ்வம்மையாரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் உடன்பாடு கொள்ளுவதையும் பிணைத்துக் காட்டுகிறது. PPP தன்னை ஒரு முற்போக்கான, ஏன் "சோசலிஸ்ட் கட்சி" என்றுகூடக் காட்டிக் கொள்ளுகிறது; ஆனால் 1980 களின் கடைசிப் பகுதியிலும், 1900களிலும் பதவியில் இருந்தபோது அது IMF உடைய ஆணைகளை சுமத்தியதுடன் இப்பொழுது வெளிப்படையாக புஷ் நிர்வாகத்துடன் ஊடல் புரிகிறது.

மத வலதின் நிலப்பிரபுத்துவ மற்றும் மகளிர்-எதிர்ப்புச் செயல்பட்டியல் முறையை எதிர்க்கும் PPP இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக மதசார்பற்ற தன்மையை காத்தல் என்று கூறப்படும் நிலைப்பாட்டிற்காக முஷாரஃப்புடன் பங்காளித்தனத்திற்கு தயார் என்று விருப்பம் காட்டியுள்ளது. தன்னுடைய பங்கிற்கு புஷ் நிர்வாகம் பூட்டோவோ அவர் முன்மொழிபவரோ பிரதம மந்திரியாக அமர்ந்து முஷாரஃப் ஜனாதிபதியாக தொடர்வதற்கு தன்னுடைய ஆதரவை அடையாளம் காட்டியுள்ளது.

லண்டனில் கடந்த வார இறுதியில் முஷாரஃப் ஆட்சிக்கு எதிராக எதிர் கட்சிகளை ஒன்றுபடுத்தும் நோக்கத்தை கொண்ட ஒரு பல கட்சி மாநாட்டில் பூட்டோ பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. PPP ஒரு பேராளர் குழுவை இதற்கு அனுப்பிவைத்திருந்தாலும், அதன் எம்பிக்கள் மற்ற கட்சிகள் தங்கள் தேசிய மற்றும் மாநிலச் சட்டமன்ற இடங்களை இராஜிநாமா செய்து முஷாரஃப் 2012 வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அறிவிக்க அவருக்கு தேவையான குறைந்த ஆதரவை கொடுக்க இருக்கும் முயற்சியில் சேரமாட்டார்கள் என்று அது கூறிவிட்டது (பாகிஸ்தானின் அரசியலமைப்பின்படி சட்டமன்றங்கள் ஜனாதிபதித் தேர்தலை அமைக்கின்றன). இப்பொழுதுள்ள சட்டமன்றங்கள் 2002 தேர்தல்களில் அமைக்கப்பட்டவை; அவற்றில் இராணுவம் பெரும் மோசடிகளை செய்திருந்தது.

பாகிஸ்தானிய தாராளவாதத்தின் முக்கியமான செய்தி ஊடகக் குரலான The Dawn சிவப்பு மசூதிக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவையும் கொடுத்துள்ளது; சில காலமாக இஸ்லாமிய வலதிற்கு எதிராக "நிதானப் போக்கு உடைய" சக்திகள் ஒன்றுசேர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் சிவப்பு மசூதி போன்ற கூறுபாடுகள் "பிராங்கென்ஸ்ரைன் அரக்கன்" போன்றவை என்றும் ஒப்புக் கொண்டுள்ளது --இவற்றிற்கு ஹக் சர்வாதிகாரம், பாகிஸ்தானின் சோவியத் எதிர்ப்பு கூட்டணி றேகன் நிர்வாகத்துடன் சேர்ந்து, இந்தியாவிற்கு எதிராக புவி-அரசியல் நலன்களில் சாதகத்தை அடைய வேண்டும் என்பதற்காக உயிர் கொடுத்திருந்தது.

இஸ்லாமியவாதிகள் தொழிலாள வர்க்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரிகள் என்பதில் கேள்விக்கு இடமில்லை. ஆனால் புஷ் நிர்வாகத்தின் ஆதரவு கொண்ட முஷாரஃப் ஆட்சியுடன் கூட்டு சேர்தல் என்ற அடிப்படையில் , ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்த ஒரு இராணுவ சர்வாதிகாரம்- அல்லது பாகிஸ்தானிய முதலாளித்துவ அரசின் மூலம் முற்போக்கான அடித்தளத்தில் போராட முடியாது.

தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீன அரசியல் இயக்கம், சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் இணைத்து ஒரு சர்வதேச, ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னோக்கில் கொண்டு அமைக்கப்படாத நிலையில், இஸ்லாமிய வலது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் மீதாக, PPP, Dawn உள்ளடங்கலான பாகிஸ்தானிய முதலாளித்துவத்தின் புதிய தாராளக் கொள்கை செயற்பட்டியலில் இருந்து விளைந்துள்ள ஆழ்ந்து பெருகும் வறுமை, பொருளாதார பாதுகாப்பின்மை மீதாக பாகிஸ்தானிய மக்களுடைய உண்மையான இன்னல்களை, இஸ்லாமிய வலது ஆனது செழித்தோங்கவே வைக்கும்.