World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military intensifies offensive in the East

இலங்கை இராணுவம் கிழக்கில் தாக்குதல்களை உக்கிரப்படுத்துகிறது

By Sarath Kumara
12 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம், இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய இணைத்தலைமை நாடுகளின் அண்மைய கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளை நிராகரித்துள்ளதோடு, கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தளத்தையும் அழிக்கும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், கடந்த ஆண்டு ஜூலை 26 மாவிலாறில் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த முதலாவது இராணுவத் தாக்குதலின் ஆண்டு நிறைவுடன் சேர்ந்து ஒரு பெரும் "தேசிய கொண்டாட்டத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. அது கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஒரு ஆரவாரமான பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இராணுவம் தொப்பிகல பிரதேசத்தைக் கைப்பற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அது கைப்பற்றப்படுமானால் அரசாங்கத்தால் கிழக்கை "விடுதலை செய்தமை" பற்றி தற்பெருமை கொள்ள முடியும்.

தேசபக்தி விளம்பரப் பிரச்சாரமும், வெற்றுப் பொருளாதார வாக்குறுதிகளும் யுத்தம் மற்றும் சரிந்து வரும் வாழ்க்கை நிலைமை தொடர்பாக வளர்ச்சிகண்டு வரும் எதிர்ப்பைக் கீழறுக்க திட்டமிடப்பட்டவையாகும். அரசாங்கத்தின் பகிரங்கமான இராணுவ வலிந்து தாக்குதல்களின் விளைவால், வருடத்தில் குறைந்தபட்சம் 1,500 பேர் உயிரழந்துள்ளதோடு மற்றும் 250,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இராணுவத்தின் ஆதரவிலான கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்". ராக்கட் வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் அடிப்படைப் பொருட்களின் விலையானது, ஆத்திரத்தையும் அதிருப்தியையும் தூண்டிவிட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வானது அரசாங்கத்திற்கான ஆதரவு துரிதமாக சரிந்து வருவதாக கண்டுகொண்டுள்ளது. "ஆய்வுக்குள்ளாக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தாங்கமுடியாத பொருளாதாரச் சுமைகளைப் பற்றி முறைப்பாடு செய்கின்றனர். புலி கெரில்லாக்களுக்கு எதிரான தற்போதைய இராணுவப் பிரச்சாரத்தை உறுதியுடன் ஆதரத்தவர்களும் இப்போது தமது நோக்கங்களை மாற்றிக்கொண்டுள்ளனர். தங்களுக்கு சரியான சித்திரம் காட்டப்படவில்லை என்றும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள அதிகரித்துவரும் சுமைகளை மூடிமறைக்கும் உபகரணமாக இந்த யுத்தம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், சில அரச புலனாய்வு ஏஜன்சிகளின் சொந்த ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளும் இந்த முடிவுடன் உடன்படுகின்றன," என அந்தக் கட்டுரை தெரிவிக்கின்றது.

சர்வதேச சமாதான முன்னெடுப்புகளுக்கான இணைத்தலைமை நாடுகள் 2002ல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து முதல் தடவையாக இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஆராய ஜூன் 26 ஒஸ்லோவில் கூடியது. ஜூலை 1 வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, இந்தக் கூட்டத்தில் இலங்கையில் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகள், மனித உரிமைகள், இடம்பெயர்வுகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, "இந்த விவகாரங்களை அரசாங்கம் கையாளும் விதம் தொடர்பாக ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்ட," அதே வேளை புலிகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தப் பத்திரிகையின்படி, இரு தரப்பினரதும் சச்சரவுகள் பற்றி இணைத்தலைமை நாடுகள் அவர்களுக்கு தெளிவுபடுத்த இருந்த போதிலும், இந்த மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் கூட, புலிகளின் தலைமைத்துவத்தை நோர்வே சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளவர் சந்திக்க அரசாங்கம் உடன்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதை அடுத்து உடனடியாகவே சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டது. முன்னர் நோர்வேயை புலிகளுக்கு சார்பானதாக கண்டனம் செய்த சிங்கள தீவிரவாதக் கட்சிகள், இந்த விஜயத்திற்கு எதிரான பிரச்சாரத்தை உடனடியாக தொடங்கின. ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நோர்வே சமாதான மத்தியஸ்தர்கள் புலிகளுக்கு ஆதரவளிக்க கிளிநொச்சிக்கு செல்லத் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டதாக நோர்வே தூதரகம் பின்னர் அறிவித்தது.

இணைத் தலைமை நாடுகள் புலிகளுக்கு சார்பாக இருப்பதற்கு அப்பால், புலிகளின் பிராந்தியங்களைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பதன் மூலம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் பகிரங்கமாக மீறுவதையிட்டு குருட்டுத்தனமாக இருக்கின்றன. இந்த பெரும் வல்லரசுகள், இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான அடிப்படை மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை. இப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுமானால், அது புலிகளை இராணுவ ரீதியில் வெற்றிகொள்வதற்கான இராஜபக்ஷவின் இரக்கமற்ற நடவடிக்கைகள் இலங்கையிலும் மற்றும் அயல் பிராந்தியத்திலும் உயர்ந்த அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என்ற கவலையினாலேயே ஆகும்.

சண்டே டைம்ஸ் செய்தியின் படி, இணைத் தலைமை நாடுகள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான துன்பங்களை அணுக ஒரு அரசியல் திட்டப் பொதியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளன. மாவட்ட மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கலுக்கான இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரேரணையை விமர்சித்த இந்தக் கூட்டம், அது "நம்பகத்தன்மை" உடையதல்ல எனத் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக்கள், அரசாங்கம் நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஆர்வங்காட்டவில்லை அல்லது யுத்தத்திற்கு முதலில் வழிவகுத்த தசாப்தக் கணக்கான தமிழர் விரோத பாரபட்சங்களை அணுக ஆர்வங்காட்டவில்லை என்பதை மெளனமாக அங்கீகரிக்கின்றன.

இராஜபக்ஷ தன்னை இன்னமும் சமாதான மனிதனாக தோரணை காட்ட முயற்சிக்கும் அதே வேளை, அவரது அரசாங்கம் புலிகளை இராணுவ ரீதியில் நசுக்கும் எதிர்பார்ப்பில் உள்ளது. கடந்த ஜூலையில் இருந்து, இராணுவம் கிழக்கில் மாவிலாறு, மூதூர் கிழக்கு, சம்பூர், வாகரை உட்பட பிரதான பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் 8, மட்டக்களப்புக்கு வடக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் தொப்பிகல எனும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச்தைக் கைப்பற்றும் புதிய தாக்குதல் தொடங்கப்பட்டது.

இறுக்கமான இராணுவ தணிக்கை காரணமாக, இந்த மோதல்கள் தொடர்பாக சுயாதீனமான செய்திகள் எதுவும் கிடையாது. கடந்த வெள்ளியும் சனியும் 15 புலி உறுப்பினர்களைக் கொன்றதோடு கடலில் நடந்த மோதலில் புலிகளைத் தோற்கடித்துவிட்டதாக இராணுவம் கூறிக்கொண்டது. திங்கள் கிழமை கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை இராணுவம் அழைத்துச் சென்றது. ஜூலை கடைப் பகுதியில் இந்த இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும் என்றும், 1993ல் இருந்து முதற்தடவையாக முழு கிழக்கு மாகாணமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் ஒரு இராணுவத் தளபதி அசோசியேடட் பிரஸ்ஸுக்குத் தெரிவித்தார். தொப்பிகலையைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையின் போது 444 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பில் 20 படையினரும் இரு அதிகாரிகளும் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் தரைப்படையின் தளபதிகள் கூறிக்கொண்டனர்.

இராணுவம் மறுப்புத் தெரிவித்த போதிலும் அது கருணா குழுவுடன் நெருக்கமாக செயற்படுகின்றது. 2004 புலிகளில் இருந்து பிரிந்த இந்தக் குழு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.) என்றும் அழைக்கப்படுகின்றது. சண்டே டைம்சின் படி, தொப்பிகலையின் தெற்குப் பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள் மீது டி.எம்.வி.பி. கெரில்லாக்கல் தாக்குதல் நடத்தி, புலிகள் மீண்டும் பலமடையாமல் இருப்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இராணுவம் வடக்கிலும் தமது தாக்குதலை உக்கிரப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி புலிகளின் கட்டுப்பாட்டிலான மாங்குளத்தில் கிளைமோர் ஒன்றை வெடிக்கச் செய்தது. இதில் புலி உறுப்பினர்கள் உட்பட மருத்துவக் குழுவின் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். விமானப் படையும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடையிடையே தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தை வெளியிட்டு ஜூலை 9 அன்று இராஜபக்ஷ, "இந்த நாட்டுக்கு நிலையான சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக, பயங்கரவாதிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டியது போல் வடக்கு மாகாணத்தில் இருந்தும் அவர்களை விரைவில் விரட்ட அரசாங்கம் அர்ப்பணிப்பு செய்துள்ளது" என்று பிரகடனம் செய்தார்.

அரசாங்கம், அது "சமாதானம்" என சொல்லிக்கொள்வதன் அர்த்தம் என்ன என்பதை ஏற்கனவே சொல்லத் தொடங்கிவிட்டது. இராஜபக்ஷவின் அதே உரையில், "கிழக்கில் கடந்த தசாப்தம் பூராவும் எந்தவொரு அரசாங்கத்தாலும் தொட்டுக்கூடப் பார்க்காத பிரச்சினையான கிராமப்புற வறுமையை தணிக்கவும் மற்றும் அவர்களின் வேலையற்ற பிரச்சினையைத் தீர்க்கவும் பல கைத்தொழில்களை ஆரம்பித்து வைப்பதில் அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்ட நாட்களில் இருந்தே, கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டுவர" தாம் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

வறுமைக்கும் வேலையின்மைக்கும் முடிவுகட்டுவதற்கு பதிலாக, அரசாங்கம் கிழக்கின் பெரும் பகுதிகளை முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்பு வலயமாக மாற்றுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. மே மாதம், கடந்த ஆண்டு புலிகளிடமிருந்து கைப்பற்றிய மூதூர் கிழக்கு மற்றும் சம்பூரின் பெரும் பகுதிகளை சுற்றிவளைத்து ஒரு உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றை இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். இந்த உயர் பாதுகாப்பு வலையம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்காக பிரமாண்டமான விசேட பொருளாதார வலயத்தை உள்ளடக்கி இருப்பதோடு அந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதைத் தடுக்கும்.

அதே சமயம், அரசாங்கம் கிழக்கு பூராவும் பொலிசை கட்டியெழுப்ப தயாராகின்றது. பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 புதிய பொலிஸ் நிலையங்களும் 25 பொலிஸ் காவலரண்களும் நிறுவப்படும். திருகோணமலையில் மேலதிகமாக 5 பொலிஸ் நிலையங்களும் 9 பொலிஸ் காலரண்களும் நிறுவப்படவுள்ளன. அம்பாறை மாவட்டத்தில், 2 பொலிஸ் நிலையங்களும் 8 பொலிஸ் காவல் அரண்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளன. கனரக ஆயுதம் தாங்கிய பொலிஸ் கமாண்டோக்களான விசேட அதிரடிப் படை, அண்மைய இராணுவ நடவடிக்கைகளை அடுத்து கிழக்கில் 33 புதிய முகாம்களை ஏற்கனவே ஸ்தாபித்துள்ளது.

அக்டோபரில் முடிவுக்கு வரும் வகையில் ஒரு விசேட ஆட்சேர்ப்பு பணி நடைபெற்று வருவதாக பெரேரா மேலும் தெரிவித்தார். இந்த பொலிஸ் ஆட் சேர்ப்பானது, இராணுவத்திற்கு மேலும் 50,000 பேரை சேர்ப்பதற்கும் மேலதிகமாக நடைபெறுவதாகும். ஐலண்ட் பத்திரிகையின் படி, "வன்னிப் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை விடுவிப்பதன் பேரில், கிழக்கில் பொலிஸ் மற்றும் அதன் துணைப்படைப் பிரிவை (அதிரடிப்படை) நிலைகொள்ளச் செய்வோம்... இது எமது மூலோபாயத்தின் ஒரு பகுதி, என இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்."

இங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பது என்னவெனில், கிழக்கிலும் மற்றும் வடக்கிலும் "விடுதலை செய்யப்பட்ட" பிரதேசங்களை பரந்த சிறைச்சாலை முகாம்களாக மாற்றுவதற்கு பாதுகாப்புப் படையினரை பிரமாண்டமான அளவில் விரிவாக்குவதேயாகும். இந்த யுத்தம், அடிப்படை ஜனநாயக உரிமை மீறல் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தர வீழ்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பாக தீவில் எல்லாப் பகுதிகளிலும் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை நசுக்குவதற்கும் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும்.