World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy prepares strikebreaking law for public transport

பொதுப் போக்குவரத்து வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கான சட்டத்தை சார்க்கோசி தயாரிக்கிறார்

By Alex Lantier
7 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

அரசு போக்குவரத்துத்துறையில் "குறைந்தபட்ச பணி" உறுதிசெய்வதை நிறுவும் வகையில் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் தயாரித்து வருகிறது. சில காலமாக ஆளும் வட்டங்கள் தெளிவாக இதற்காக திட்டமிட்டுவரும் நடவடிக்கைகள் இப்பொழுது முதலாளிகளுடைய அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஆலோசனைகளுக்காக காட்டப்பட்டுள்ளன. ஜூலை 4ம் தேதி அரசாங்கத்தின் மந்திரி சபையினால் ஒப்புக் கொள்ளப்பட்டதால், இது ஜூலை 12ம் தேதி செனட்டில் விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த விவாதங்களின்போது, சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சரகங்கள், தொழில்துறை குழுக்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களால் சட்ட மசோதாவின் விதிகள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரெஞ்சு பெருநிறுவன செய்தி ஊடகத்தில் சில சட்டவிதிகள் வெளிப்பட்டுள்ளன. சட்டவரைவு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை மீதான பெரிய தாக்குதல் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது; இது இரயில் மற்றும் பிற போக்குவரத்து தொழிலாளர்களை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; வரலாற்றளவில் அவர்கள் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் மிகப் போர்க்குணமிக்கவர்களுள் ஒரு பகுதியினர் ஆவர்; அவர்கள் 1980களின் கடைசிப் பகுதியிலும், 1995லும் முக்கியமான வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொடங்கி இருந்தனர்; மேலும் 2003ல் பல மில்லியன் தொழிலாளர்கள் பங்கு பெற்ற ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு எதிரான வலுவான போராட்டங்கள் மற்றும் 2006ல் நடைபெற்ற "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றனர்.

சட்டத்தின் முதல் பகுதியானது, ஒரு வேலைநிறுத்தம் அறிவிக்கப்படுமுன் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைகள் கால அளவு கட்டாயமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது -- இத்திட்டம் பாரிசின் பொதுப் போக்குவரத்து துறை, (Paris Autonomous Transport Authority- RATP) பயன்படுத்திய "சமூக எச்சரிக்கை" முறையை பின்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது RATP க்கும் தேசிய இரயில் வழி வலைப்பினல்கள் (Societe Nationale des Chemins de Fer Francais -SNCF), மற்றும் அனைத்து உள்ளூர் பஸ்கள், சுரங்க இரயில், சாதாரண இரயில் மற்றும் டிராம் தடங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

இரண்டாம் பகுதியின்படி, போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு "குறைந்த பணித் திட்டத்தை" இயற்றி, வேலைநிறுத்த நேரத்திலோ அல்லது "பணியில் சீர்குலைதல் இருக்கக்கூடும்" என்ற நிலையிலோ செயல்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றன. "குறைந்த பணி" அல்லது "பணியில் சீர்குலைதல் இருக்கக்கூடும்" என்றால் என்ன என்பதை சட்டம் விளக்கவில்லை; இதைத் தனி நிறுவன அதிகாரிகளின் முடிவிற்கு விடுவதுடன் எந்த அளவு பணி தொடரும் என்பதையும் அவர்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களை இத்தகைய "சீர்குலைதல் இருக்கக்கூடும்" என்ற காலத்தில் உள்ளூர் அதிகாரிகளின் பணி இலக்குகளுக்கு ஏற்ப அவசர காலப் பணிக்கு அழைக்கும் உரிமை அனுமதிக்கப்படும்.

வேலைநிறுத்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தங்களுக்கு வேலை கொடுத்துள்ளவர்களிடம் தாங்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக தொழிலாளர்கள் "தனித்தனியே அறிவிக்க வேண்டும்" என்றும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் வேலைநிறுத்தம் தொடரப்பட்டு "அதிக பட்சம்" எட்டு நாட்களுக்குள் நிர்வாகத்தின் விருப்புரிமையில் வேலைநிறுத்தம் தொடரப்படலாமா என்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு வாக்குகள் ஏற்பட்டோ, வேலைகொடுப்பவர்களுக்கு தெரிவிக்காமல் வேலைநிறுத்தம் செய்தாலோ என்ன அபராதம் விதிக்கப்படும் என்பது பற்றி இன்னமும் பகிரங்கமாக கூறப்படவில்லை.

மூன்றாம், இறுதிப் பிரிவு உள்ளூர் அதிகாரிகள்மீது பணவகையில் அபராதம் விதிப்பதற்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது; உறுதியளிக்கப்பட்டுள்ள தரப்பணி ஒரு வேலைநிறுத்த காலத்தில் அடையப்படவில்லை என்றால் பயணிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது. பயணிகள் நலன்கள் என்ன என்பதும் தெளிவாக்கப்படவில்லை; உள்ளூர் அதிகாரிகளே பணித்தர இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்; ஆனால் இவற்றை காரணமாகப் பயன்படுத்தி தொழிலாளர்களை வேலைக்கு திரும்பிவரச் செய்ய முடியும்.

இத்தகைய திட்டங்கள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை மீறவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பு அதிகாரிகள் கூறுவது இயல்பான பொய்யாகும். உத்தரவாதம் செய்யப்பட்ட குறைந்த பட்சப் பணியை நிறுவுதல் என்பது, எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும், குறைந்த பட்ச தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருக்க மாட்டார்கள் என்ற பொருளை தரும். இந்த சட்ட மசோதாவின் தனி விதிகளும் கூட பலமான வேலைநிறுத்தத்தை தொடக்கக்கூடிய தொழிலாளர்களின் திறனை மட்டுப்படுத்தவும், அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மீறவும் செய்கின்றன.

சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான நடுநிலைச் செயல் என்று செய்தி ஊடகத்தால் கூறப்பட்டுள்ள வேலைநிறுத்தத்திற்குமுன் குறைந்த பேச்சு வார்த்தை கால அளவு என்பது, வரலாற்று அனுபவம் காட்டுவது போல் வேலைநிறுத்தங்களை குறைக்கவும் அடக்கவும் பயன்படும் திட்டமாகும். RATP இன் "சமூக எச்சரிக்கை" திட்டம், 1995 வேலைநிறுத்தங்களுக்கு பின் ஏற்கப்பட்டது, சட்டவரைவு இயற்றப்பட்டால் தொழிலாளர்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதை ஓரளவு குறியிட்டுக் காட்டுகிறது. ஒரு வேலைநிறுத்த மோதல் வரக்கூடும் என்று நிர்வாகம் அறிவிக்கும் முதல் அறிவிப்பிற்கும் முறையான வேலைநிறுத்தத்தின் தொடக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 11 நாட்கள் தாமதம் இருக்கும்; ஒரு வேலைநிறுத்தத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் ஆதரவு கொடுத்தாலும் நிர்வாகம் அங்கீகரிக்க மறுத்து தொழிலாளர்களுக்கு வார அல்லது மாத ஊதியங்களை நிறுத்திவைக்கும் வகையிலும், தேர்வு சான்றுகள், உத்தியோக உயர்வுகள் ஆகியவற்றை மறுப்பதின் மூலமும் விடுமுறைகளை இரத்து செய்வதின் மூலமும் செயல்பட முடியும். திடீரென்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பல முறையும் பணிநீக்க அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது.

பழமைவாத நாளேடான Le Figaro, "RATP இன் நடைமுறை பணிப்பூசல்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளது; கருத்து வேறுபாடுகளில் 90 சதவிகிதம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.

நடக்கும் வேலைநிறுத்தங்கள் பற்றிய இதன் ஜனநாயக விரோத விதிகள் மூலம் இச்சட்ட வரைவு, பகிரங்கமாகவும், ஆத்திரமூட்டல் முறையிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வேலை கொடுப்பவர்களுடன் இணைந்துள்ளது. தாங்கள் வேலைநிறுத்தம் செய்யத் தயார் என்று கூறுவதின் மூலம் தொழிலாளர்கள் வேலைகொடுப்பவர்கள் அவர்களை கரும்பட்டியலில் சேர்க்குமாறு செய்துவிட முடியும்; ஆனால் வேலைகொடுப்பவர்களுக்கு ஊதிய வெட்டுக்கள், வேலை நீக்கங்கள், புதிய கருவிகளில் முதலீடு செய்வதை ஒத்திவைத்தல் அல்லது அவர்கள் மேற்கொள்ளும் மற்ற முடிவுகளை பற்றி கூறத் தேவையில்லை. வேலை நிறுத்தத்தை தொடர்வதற்கு குரல் எழுப்பி வாக்களிப்பதற்கு பதிலாக இரகசிய வாக்கெடுப்பை தொடக்கும் முடிவு தொழிலாளர்களின் ஐக்கியத்தை உடைக்கும் வகையில் வடிவைக் கொண்டுள்ளது; வாக்குப் பெட்டிகளில் மோசடி செய்வதற்கும் இடம் அளிக்கிறது.

ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இருப்பது தொழிற்துறை நடைமுறையாக இருந்தபோதிலும், வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியம் அளிக்கப்படமாட்டாது என்று சட்டம் கூறுகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் தற்பொழுது வேலைநிறுத்த நாட்களிலும் ஊதியம் பெறுகிறார்கள் என்ற கருத்தை விவரம் தெரியாத மக்கள் கொள்ளவேண்டும், தொழிலாளர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக இன்னும் குழப்பமடைந்த கூறுபாடுகளை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறெந்த நோக்கத்தையும் கொண்டிருக்க முடியாது.

தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ளவிதம், அவை சட்டத்திற்கு எதிராக தீவிர அரசியல் போராட்டத்தை நடத்துவதை விரும்பவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இதுவரை அவற்றில் ஒன்றுகூட -- போக்குவரத்துச் சங்கம் கூட -- சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்புவிடவில்லை.

Confédération Générale du Travail (CGT, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மேலாதிக்கம் செய்யும் தொழிற்சங்கம்), சட்டத்தை விமர்சித்து "மோதல்களை தவிர்க்க வேண்டும், காரணங்கள் பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும், உண்மையிலேயே சகோதரத்துவம் நிறைந்த பொதுப் பணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்" என்பதுதான் நாம் விரும்புவது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அரசு கிழித்தெறியும் நிலைமைக்கு இது ஒத்து இருக்கவில்லை; CGT அறிக்கை குறிப்பிடுவது போல், இதே நேரத்தில் போக்குவரத்து வலைப்பின்னல்களுக்கு குறைந்த நிதியம்தான் ஒதுக்கப்படுவது; பேருந்துகள் பழுதடைந்து நின்றுவிடுதல், பணிகள் நிறுத்தப்படுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

ஏனைய தொழிற்சங்கங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் எடுக்கின்றன. CFDT (Confédération Française et Démocratique du Travail) என்னும் தொழிற்சங்கம் பல செய்தியாளர் பேட்டிகளை கொடுத்து சட்டவரைவின் இன்னும் ஆத்திரமூட்டும் தன்மையுடைய விதிகளை விமர்சித்துள்ளது. ஆனால், அதன் சொந்த வலைத்தளமே குறிப்பிடுவது போல், CFDT ஆரம்பத்தில் RATP 1996 "சமூக எச்சரிக்கை" திட்டத்தை தொடக்கியது; அதனைத்தான் தற்போதைய சட்டத்தின் பெரும்பகுதி மாதிரியாக கொண்டுள்ளது.

சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பிரெஞ்சு உயரடுக்கிற்கு தொழிலாள வர்க்கத்துடன் உறுதியான முறையில் கணக்கை தீர்த்துக் கொள்ளுவதற்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. மைய-இடது நாளேடான Le Monde அவருடைய வெற்றியை பற்றி ஒரு தலையங்கத்தில் எழுதியது: "முறிவு. இச்சொல் இனிப்பாக்கப்பட்டு பின்னர் [தேர்தல்] பிரச்சாரத்தின்போது அதன் மிருகத்தன்மையான கருத்துக்களை மறைப்பதற்கு, மக்களுக்கு அச்சத்தை போக்குவதற்காக கைவிடப்பட்டது. ஆனால், உண்மையில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது; திருகுப்புரி சுருள் அல்லது ஒப்புமை வீழ்ச்சிக்கு இட்டுச்சென்ற, 20 ஆண்டுகால அசையாத்தனமை மற்றும் தவறுகளிலிருந்து முறித்துக்கொள்ள பிரான்ஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது." சார்க்கோசிக்கு நெருக்கமான தடையற்ற வணிக சார்பு உடைய வர்ணனையாளரான Nicolas Baverez, இன்னும் அப்பட்டமான முறையில் Revue des Deux Mondes கட்டுரையில் குறிப்பிட்டதாவது: "2007 தேர்தல்தான் கடைசி வாய்ப்பு, ஒரு உள்நாட்டுப் போர் இல்லாமல் நமது நாட்டை நவீனப்படுத்த கடைசி வாய்ப்பு ஆகும்"

பிரெஞ்சு முதலாளித்துவமே வெளிநாட்டில் இராணுவவாதம், உள்நாட்டில் சமூகநல செலவின வெட்டுக்கள் என்ற பாதைக்குத் தவிர்க்க முடியாமல் சென்று கொண்டிருப்பதாக உணர்கிறது. பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனின் பாராளுமன்றத்திற்கான ஆரம்ப உரையில் இது வெளிப்படையாக கூறப்பட்டது: "பல நூற்றாண்டுகளாக, பிரான்சும் இன்னும் சில நாடுகளும், உலகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் செய்திருந்தன. இந்த இணையற்ற அதிகாரம் நம்மை ஒரு செல்வம் கொழிக்கும் சிறப்புடைய நாகரிகத்தை கட்டியமைக்க அனுமதித்தது. இன்று உலகம் விழித்துக் கொண்டு வரலாற்றின்மீது அதன் பழிவாங்குதலை செய்கிறது. முழு கண்டங்களும் முன்னேற்றம் வேண்டும் என்று விரும்புகின்றன. இந்தப் புதிய வரலாற்று உண்மை, கவலையையும், ஈர்க்கும் தன்மையையும் கொண்டிருந்தாலும், பிரான்ஸ் நீண்ட காலமாக தாமதித்துவிட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது, என்றுமில்லாதவாறு கூடுதலாக வலியுறுத்துகிறது."

ஆசியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா கண்டத்திலேயே நிறைய போட்டியாளர்களிடம் இருந்து ஆழ்ந்த, கசப்பான போட்டியை எதிர் நோக்கியிருக்கும் பிரெஞ்சு உயரடுக்கு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை இரக்கமற்ற முறையில் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கிறது.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் ஆர்வம் மற்றும் இரத்தவெறி இவற்றின் நச்சுக் கலவையின் கீழே, 1980 களில் றேகனின் கீழ் அமெரிக்காவிலும் பிரிட்டனில் 1980 களில் தாட்சரின் கீழும் காணப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளும் சார்கோசியின் முக்கிய இலக்கு மகத்தான முறையில் மக்களிடையே வெறுப்பைக் கொண்டுள்ளது என்ற விழிப்புணர்வாகும். ஆனால் முதலாளித்துவம் "20 ஆண்டுகளாக அசையாமல் இருப்பது" எனக்கூறுவது தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரையில் தன்னுடைய சமூக நிலைமையை தக்க வைத்துக்கொள்வதற்கான பெரும் போராட்டங்களால் இருந்துள்ளது. சார்க்கோசிக்கு முன்பு இருந்த கடைசி அரசாங்கங்கள் --Jean Pierre Raffarin மற்றும் டொமினிக் டு வில்ப்பன் ஆகியோருடையவை-- அவற்றின் சமூகத்திட்டத்தின் உண்மையான தன்மை பரந்த அளவில் தெரியப்பட்டவுடன் தேர்தல்களில் சரிந்தன.

தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்களைவிட சார்க்கோசி கூடுதலான உறுதியுடன் செயல்பட்டாலும், அவருடைய சமூகத் தளம் பரந்தது அல்ல. அண்மையில், விற்பனை வரியைக் கூடுதலாக்குவது என்ற அவருடைய பிற்போக்குத் திட்டம் வந்தபோது பொதுமக்கள் அதை எதிர்க்கும் வகையில் 2007 பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாம் சுற்றில் சார்க்கோசி கட்சிக்கு வலிமை குறைந்த நிலையை ஏற்படுத்தியதில் இருந்து இது அடிக்கோடிடப்பட்டது. தன்னுடைய சமூக வேலைத் திட்டத்தை மறைத்து மக்களை மயக்கி உறங்க வைக்கும் காரணத்தை துல்லியமாக கொண்டுதான் சார்க்கோசி தன்னுடைய அரசாங்கத்தில் முன்பு சோசலிஸ்ட் கட்சியில் இருந்தவரும் இப்பொழுது தொழிற்சங்கத் தலைவர்களுடன் வேலைநிறுத்தத்தை உடைக்கும் சட்டம் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதாக காட்டிக்கொள்ளும் வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் போன்ற "இடது" மந்திரிகளை சேர்த்துக் கொண்டுள்ளார்.