World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE overruns naval outpost on key Sri Lankan island

புலிகள் இலங்கையின் பிரதான தீவின் கடற்படை புறக்காவல் நிலையை கைப்பற்றினர்

By Sarath Kumara
29 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வியாழக்கிழமை இலங்கை பாதுகாப்பு படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் தொடர்ந்தும் கொடூரமாக நீடிக்கும் என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மோதல்கள் தொடர்பாக பரந்தளவில் காணப்படும் வெகுஜன எதிர்ப்பையிட்டு அக்கறை கொண்ட இராணுவம், இந்த சம்பவத்தை மூடி மறைத்ததோடு உயிரிழந்தவர்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு பொய் தகவல்களையும் கொடுத்தது.

புலிகள் நெடுந்தீவில் ஒரு முன்கூட்டிய தாக்குதலை நடத்தியுள்ளனர். நெடுந்தீவானது நாட்டின் வடமேற்கு கடற்கரையில், தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்துள்ளது. புலிகளின் பேச்சாளரான இராசையா இளந்திரையன், புலிகள் கடற்படை முகாம் ஒன்றைக் கைப்பற்றியதாகவும், சுமார் 35 கடற்படையினர் அதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல படகுகள் அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புலிகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வலுவூட்டுவதற்காக தீவுக்கு விரைந்த படையினரையும் தாக்கியுள்ளனர். தமது நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இளந்திரையன் அறிவித்துள்ளார்.

கடந்த வாரக் கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, இலங்கைக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதையும் மற்றும் புலிகளின் நடமாட்டங்களையும் கண்காணிப்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தத் தீவில் அமைக்கப்பட்ட ராடார் கட்டமைப்பை பாதுகாப்பதில் அங்கிருந்த கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். கொரில்லாக்கள் தானியங்கி துப்பாக்கிகள், கனரக கலிபர் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கிரனேட் ஏவு இயந்திரங்கள் உட்பட ஒரு தொகை ஆயுதங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

அனைத்து இராணுவ செய்திகளையும் நெருக்கமாக நிர்வகிக்கும் அரசாங்கத்தின் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம், புலிகளின் கூற்றை முழுமையாக மறுத்தது. கடற்படை இத் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் 18 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது பிரகடனம் செய்தது. சரியான எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்துவது சாத்தியமற்ற போதிலும், ஒரு திகைப்பூட்டும் பின்னடைவை சுருக்கிக்காட்ட இராணுவம் முயற்சிப்பதாக சண்டே டைம்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

"ராடார் கட்டமைப்பை மீண்டும் கைப்பற்றுவதற்கு அங்கு அனுப்பப்பட்ட படையினரின் துப்பாக்கி ரவைகளின் வேகத்தை விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. ஒரு சந்தர்ப்பத்தில், மீண்டும் தீவுக்குள் சென்ற கடற்படையினர், ஆறு கடற்படையினரின் சடலங்களை அந்தப் பிரதேசத்தில் கண்டதாக ஊடக மத்திய நிலையம் அறிவித்தது. அது பின்னர் ஏழாக அதிகரித்தது. பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறுமாறு கடற்படை தலைமையகத்தின் உயர்மட்டத்தில் இருந்து வரும் கட்டளைகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளதாக ஊடக மத்திய நிலையத்தின் அலுவலர்கள் உடனடியாக வருத்தம் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் சிலர் இராணுவ உயர்மட்டத்தினரால் உயிர்பெற்றெழச் செய்யப்பட்டனர் என்பது முன்பின் அறிந்திராத ஒன்றாக இருந்தாலும் அது உண்மை. நான்கு கடற்படையினர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நால்வர் மட்டுமே காயமடைந்துள்ளனர் என அவர்கள் பிரகடனம் செய்தனர்," என அந்த செய்தித்தாளில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளார்.

சண்டே டைம்ஸ், சண்டே லீடர் ஆகிய பத்திரிகைகள், இந்த மோதலில் குறைந்தபட்சம் எட்டு கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தின. மீண்டும் தளத்தை பற்றிக்கொண்ட பின்னர், பீதிகொண்ட இராணுவம் நெடுந்தீவு மற்றும் அதைச் சூழவுள்ள தீவுகளிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோடு பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. சுமார் 6,000 மீனவக் குடும்பங்களைக் கொண்ட நெடுந்தீவுக்கான அனைத்துப் படகுச் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான தவறான தகவல்கள், எந்தவொரு பின்னடைவு மற்றும் பெருந்தொகையானவர்களின் உயிரிழப்பு பற்றிய செய்திகளையிட்டு இராணுவமும் அரசாங்கமும் எந்தளவுக்கு நுன்ணுனர்வுடன் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. 2005 தேர்தலில் குறுகிய வெற்றியைப் பெற்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, எந்தவொரு தோல்வியும் பாதுகாப்பு படையினரின் மத்தியில் உளவலிமையை துரிதமாக சீரழிக்கவும் மற்றும் யுத்தத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு வெடிக்கவும் துரிதமாக வழிவகுக்கும் என்பதையிட்டு பீதிகொண்டுள்ளார்.

இராஜபக்ஷ, கடந்த ஜூலையில் புலிகளுடன் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி தாக்குதல்களை முன்னெடுக்கக் கட்டளையிட்டார். அப்போதிருந்து இராணுவம் கிழக்கு இலங்கையில் மாவிலாறு, சம்பூர் மற்றும் வாகரை உட்பட புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்கள் சிலவற்றைக் கைப்பற்றியது. கிழக்கில் புலிகளிடம் எஞ்சியிருக்கும் கணிசமான பிரதேசமான தொப்பிகலவும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்த வெற்றிகள் இரு பிரதான காரணிகளில் தங்கியிருக்கின்றன: அவை 2004ல் புலிகளின் மத்தியில் கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பலவீனமாக்கும் பிளவும் மற்றும் இராணுவம் தமது தாக்குதல் விமான வசதிகளையும் ஆட்டிலறித் தாக்குதல்களையும் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களுக்கு எதிராகவும் பயன்படுத்த விரும்பியமையுமாகும்.

முதலாவது இலக்கு கிழக்காக இருந்து வந்த அதே வேளை, இப்போது இலங்கை இராணுவம் யுத்த அரங்கை வடக்கிற்கு நகர்த்தி வருகின்றது. அது புலிகளின் பிராந்தியத்தின் மீது தொடர்ந்தும் குண்டுத் தாக்குதல் நடத்துவது உட்பட பல தூண்டுதல் நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களின் அளவு மே 20 அன்று பிரகேடியர் பிரசாத் சமரசிங்க விடுத்த அறிவிப்பில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. இராணுவம் மன்னார் மற்றும் வவுனியா போன்ற வடக்கு பிரதேசங்களில் கடந்த நான்கு மாதங்களில் 500க்கும் மேற்பட்ட புலி எதிரிகளைக் கொன்றுள்ளது என அவர் அறிவித்தார். இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்கிடமின்றி மிகைப்படுத்தப்பட்டதாக உள்ள போதிலும், புதிதாக இலக்கு வைக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சுட்டிக்காட்டுகிறது. இராணுவம் இன்னமும் வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் எந்தவொரு குறிப்பிடத்தக்க ஊடுருவல்களையும் செய்யவில்லை.

இராஜபக்ஷவின் அரசாங்கம், இராணுவம் "மனிதாபிமான" அல்லது "தற்காப்பு" நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற சாக்குப் போக்கை ஏறத்தாள முழுமையாக கைவிட்டுள்ளது. இராஜபக்ஷ தனது பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் என சொல்லப்படுவது புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை தொடரும் என்ற பிரகடனத்தை பதிவுசெய்துகொண்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான அவரது சகோதரர் கோதபாய இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அர்த்தமில்லை என பகிரங்கமாக பிரகடனம் செய்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பரப்பை கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சர்வதேச மன்னிப்புச் சபையின் 2006 ஆண்டறிக்கை விளக்குகிறது. கடந்தாண்டின் கடைசிவரை, வடக்கு மற்றும் கிழக்கில் 215,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 10,000 பேர் தென்னிந்தியாவிற்கு சென்றுள்ளனர். இந்த மோதலோடு சம்பந்தப்பட்ட வன்முறைகளில் சுமார் 3,000 பொதுமக்கள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. அரசாங்கத்தின் பயங்கரமான ஜனநாயக உரிமை துஷ்பிரயோகம் மற்றும் "அமுல்படுத்தப்பட்ட காணாமல் போகும்" சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் தோன்றியிருப்பதைப் பற்றியும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகரித்துவரும் தாக்குதல்களின் காரணமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அரசாங்க மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடையில் உள்ள சோதனை நிலையங்களில் இருந்து கடந்த புதன் கிழமை வெளியேறியுள்ளனர். குறிப்பாக, வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிக்குள் பொருட்களும் பொதுமக்களும் நகர்வதை செஞ்சிலுவைச் சங்க கண்காணிப்பாளர்கள் கண்டுள்ளனர். புலிகள் தாக்குதல்கள் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டிய இராணுவம், மே 18 அன்று உயிலங்குளம் நுழைவாயிலை மூடியதோடு கடந்த வாரம் ஓமந்தை சோதனை நிலையத்தையும் மூடியது. இந்த முடிவு வன்னிப் பிரதேசத்தில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என செஞ்சிலுவைச் சங்கம் கடந்த வெள்ளியன்று எச்சரித்த போதிலும், அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்துவதே இராணுவத்தின் தடையின் நோக்கமாகும்.

புலிகள் தமது இலகு விமானங்களைப் பயன்படுத்தி அண்மையில் மேற்கொண்ட தாக்குதல்களுடன் நெடுந்தீவில் அவர்கள் மேற்கொண்ட தாக்குதலானது தனது சொந்த உறுப்பினர்களின் உள வலிமையை கூட்டுவதற்கும் மற்றும் இராணுவத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் எடுத்த முயற்சியாகும். இத்தகைய சிறியளவிலான இராணுவ நடவடிக்கைகளின் மூலம், சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மீண்டும் தொடங்குமாறு "சர்வதேச சமூகத்திற்கு" புலிகள் பயனற்ற வேண்டுகோளை விடுக்கின்றனர். மே 20 அன்று, தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில், இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு பெரும் வல்லரசுகள் விளைபயனுள்ள வகையில் ஆதரவளிக்கின்றனர் என்பதை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் மெளனமாக ஏற்றுக்கொண்டார். ஆயினும் அவர் மேலும் சமபல நிலையை ஏற்படுத்த இன்னுமொரு அழைப்பு விடுத்தார்.

இராஜபக்ஷ அரசாங்கத்திடம் சமரசத்தில் ஆர்வம் காட்டுவதற்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது. பயிற்சி விமானம் ஒன்றுடன் மேலும் நான்கு மிக் 29 பல்குழல் யுத்த விமானங்களை அரசாங்கம் கொள்வனவு செய்யும் என கடந்த புதன் கிழமை ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்தார். இராணுவம் மூன்று எம்.ஐ. 35 எம் ஹெலிகொப்டர்களை வாங்குவதாகவும், எம்.ஐ.-24 ஹெலிகொப்டர்களை தரமுயர்த்துவதாகவும் மற்றும் அதன் ஹெலிகொப்டர்களை பராமரிக்கும் இயலுமையை விரிவுபடுத்தவுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இம்முறை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய இராஜபக்ஷ தலைமையிலான வரையறுக்கப்பட்ட அரச கம்பனி ஒன்றின் ஊடாக பில்லியன்கள் பெறுமதியான இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படுகின்ற அளவில், யுத்தத்திற்கான செலவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது," என அந்தக் கட்டுரை தெரிவிக்கின்றது.

எவ்வாறெனினும், இராணுவம் தளபாடங்களை முன்னேற்றிய போதிலும் புலிகளுக்கு இன்னமும் கணிசமான இராணுவக் கொள்ளளவு உள்ளது என்பதையே நெடுந்தீவு மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. ஆயினும், அரசாங்கம் தெளிவாக கணக்கிட்டுள்ளவாறு புலிகளுக்கு எதிராக மீண்டும் எழும்பாத தாக்குதல் ஒன்றைத் தொடுக்கும் இயலுமை இலங்கை இராணுவப் படைகளுக்கு இருந்தும் கூட, முதலில் 24 ஆண்டுகால நீண்ட இனவாத யுத்தத்திற்கு வழிவகுத்த அடியில் இருக்கும் அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளைத் தீர்ப்பதில் முற்றிலும் அது இலாயக்கற்றுள்ளது.