World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US envoy raises muted concerns about democratic rights in Sri Lanka

அமெரிக்கப் பிரதிநிதி இலங்கையில் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக ஊமையான கவலையை வெளிப்படுத்துகிறார்

By Nanda Wickremasinghe
21 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர், மே 8 முதல் 10 வரை இலங்கையில் மேற்கொண்ட விஜயத்தின் போது, அரசாங்கத்தாலும் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகளாலும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பாக அமெரிக்காவின் கவலையை முதல் தடவையாக வெளிப்படுத்தினார்.

புஷ் நிர்வாகமானது இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவையும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவரது யுத்தத்தையும் முற்றிலும் ஆதரிக்கின்றது. புலிகளை "பயங்கரவாதிகள்" என கண்டனம் செய்ததோடு இந்த பிரிவினைவாத அமைப்பை தடை செய்யுமாறு ஏனைய அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்த அதே வேளை, வெள்ளை மாளிகையானது 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை இலங்கை இராணுவம் பகிரங்கமாக மீறியதையும் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக விரோத வழிமுறைகளையும் வேண்டுமென்றே தட்டிக் கழித்தது.

இலங்கையில் ஜனநாயக உரிமைகள் தொடர்பான பெளச்சரின் அண்மைய கருத்துக்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதோடு, ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பு சூழ்நிலையில் வைத்துப் பார்க்கும் போது முற்றிலும் பாசாங்கானதாகும். ஆனால், இப்போது அமெரிக்காவின் சிரேஷ்ட அலுவலர் ஒருவர் இத்தகையை கவலையை வெளிப்படுத்துவதானது கொழும்பு அரசாங்கம், இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்து செயற்படும் துணை ஆயுதப் படைகளாலும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் குற்றங்களின் அளவை குறிப்பிடத்தக்க விதத்தில் சுட்டிக்காட்டுகிறது.

தனது விஜயத்தின் போது, ஜனதிபதி இராஜபக்ஷ, அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய இராஜபக்ஷ, உயர்மட்ட அலுவலர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் பெளச்சர் சந்தித்தார். வடக்கில் யுத்தப் பிராந்தியமான யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பெளச்சர், இராணுவத் தளபதிகள், உள்ளூர் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அலுவலர்களோடும் பேசினார்.

மே 10 கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், இந்த அமெரிக்க அதிகாரி மீண்டும் புலிகளை "சிறுவர்களை படையில் சேர்க்கும், பணம் கறக்கும், மனிதர்களைக் கொல்லும், பஸ்களில் குண்டு வைக்கும் மற்றும் அரசாங்க சொத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கும்" ஒரு "பயங்கரவாத" அமைப்பு என கண்டனம் செய்தவாறே ஆரம்பித்தார். "இலங்கை இராணுவத்துடனான அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டுழைப்பு மற்றும் வழங்கள், பணம் மற்றும் ஆயுதங்களைப் பெறுவதில் இருந்து தமிழ்ப் புலிகளின் இயலுமையை குறைப்பதற்காக" ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சிகளையும் சுட்டிக்காட்டிய அவர், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

அதே சமயம், இராஜபக்ஷவுடனான கலந்துரையாடலில் பெளச்சர் தெளிவுபடுத்தியதாவது: "நாங்கள் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக முற்றிலும் கொஞ்சமாவது பேசியுள்ளோம். எங்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு விடயங்கள் உள்ளன. முதலாவது கடத்தல்களும் கொலைகளும். மற்றும் இரண்டாவது ஊடக சுதந்திரம்... நாங்கள் (அமெரிக்காவில்) தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை செய்யப்பட்டமை, கடந்த ஆண்டில் தீவின் பல பாகங்களிலும் மக்கள் கொல்லப்பட்டமை போன்ற சில படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக மிகவும் அக்கறை செலுத்தினோம்."

ஊடக சுதந்திரம் என்ற பிரச்சினை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: "நாங்கள் ஒரு தொகை வேறுபட்ட அறிக்கைகளை பார்த்தோம். நாங்கள் அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவது பற்றிய செய்திகள், மேலும் ஐயத்திற்கிடமின்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை மற்றும் வன்முறை நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் பார்த்தோம்."

அதே மூச்சுடன் அரசாங்கத்தை குற்றச்சாட்டிலிருந்து விளைபயனுள்ள வகையில் விடுவித்த பெளச்சர், கைதுகளுக்காக அரசாங்கம் சரியான வழிமுறைகளை முன்வைத்துள்ளதாகவும் மற்றும் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் அவற்றை அமுல்படுத்த "அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்" என்றும் கூறிக்கொண்டார். அரசாங்கத்திற்கு சார்பான பேர்போன துணைப்படைகள் பற்றி பேசுகையில், அவற்றின் செயற்பாடுகளில் ஆயுதப் படைகளதும் மற்றும் அரசாங்கத்தினதும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி எதுவும் கூறுவதை கவனமாகத் தவிர்த்துக்கொண்டார்.

கொழும்பிலும் மற்றும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தப் பிராந்தியத்திலும் பிரதானமாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அரசாங்க சார்பு கொலைப் படைகளின் நடவடிக்கைகள் சம்பந்தமாக இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பெளச்சரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. 2005 நவம்பரில் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்த நிழல் துப்பாக்கிதாரர்களால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் போயுள்ளனர்". ஏறத்தாழ இந்த எல்லா பிரச்சினைகளிலும் எந்தவொரு குற்றவாளியும் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படவில்லை. மேலும் பலர் நாட்டின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் யாழ்ப்பாண நகரை அண்டிய கடற்படையின் கட்டுப்பாட்டிலான தீவுகளில் மார்ச் 22 காணாமல் போன சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் தொடர்பாகவும் மற்றும் கடந்த ஆகஸ்ட்டில் சோ.ச.க. ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி சோ.ச.க. யும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதுவரை, இந்த இரு பிரச்சினைகளிலும் எந்தவொரு அக்கறையான பொலிஸ் விசாரணையும் நடத்தப்படவில்லை.

இலங்கையில் நடைபெற்றுவரும் அட்டூழியங்களின் அளவை சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவர மனித உரிமை அமைப்புக்கள் பரந்த பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது, "ஒழுங்குகளின்படி விளையாடுமாறு" அனைத்து குழுக்களுக்கும் அழைப்புவிடுத்து, சர்வதேச மன்னிப்புச் சபை பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டதோடு தீவுக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தது. தனது பிரச்சாரத்தைப் பாதுகாத்து சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியதாவது: "இலங்கையில் அதிகரித்துவரும் கடத்தல்கள், சட்ட விரோத கொலைகள் மற்றும் சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற அனைத்தும் கவனிக்கப்படாமல் நடைபெறுகின்ற அதே வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு உக்கிரமடைந்த மோதல்கள் 300,000 மக்களை தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறத் தள்ளியுள்ளது. 2006ல் இருந்து குறைந்தபட்சம் 1,000 பேர் காணாமல் போயுள்ளனர்."

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, இராஜபக்ஷ கடந்த மாதம் வத்திக்கானுக்கு செல்வதற்கு முன்னதாக போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை அரசாங்கத்தின் பதிவுகளையும் அதே போல் புலிகள் தொடர்பாகவும் கவனத்தை ஈர்த்திருந்தது. "அரச படைகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பலாத்காரமாக காணாமல் ஆக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அரசாங்கத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2005 டிசம்பரில் இருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் மாத்திரம் 707 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 492 பேர் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றது. பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் மிகப் பெருந்தொகையானவற்றுக்கு சாட்சிதாரர்களும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இந்த காணாமல் போகும் சம்பவத்தில் பாதுகாப்புப் படைகள் தலையிட்டுள்ளன அல்லது சம்பந்தப்பட்டுள்ளன என குற்றஞ்சாட்டியுள்ளனர்," என அது தெரிவிக்கின்றது.

"தண்டனையில் இருந்து விலக்கீட்டுரிமை விதிமுறையாக உள்ளது" எனக் குறிப்பிடும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் கடிதம் விளக்கியதாவது: "இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இந்த துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு வெறுக்கத்தக்க முறையில் இலாயக்கற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். மார்ச் 8 சமாதான செயலகத்தின் அறிக்கை, கடத்தல் மற்றும் 'காணாமல் போன' ஒன்பது சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் பெறுபேறுகளை வழங்கியுள்ள போதிலும், அது ஒவ்வொரு மாதத்திலும் பதிவுசெய்யப்பட்ட சம்பவங்களின் முழு எண்ணிக்கையில் ஒரு சிறிய துண்டையே பிரதிநிதித்துவம் செய்கின்றது."

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. "அதே சமயம், அரசாங்கமானது ஊடகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுயாதீனமான அல்லது வேறுபாடான கொள்கைகளைக் கொண்ட ஏனையவர்களுக்கும் எதிராக 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்ற கூற்றைப் பயன்படுத்துகிறது. இலங்கையின் பாதுகாப்பு ஸ்தாபனத்தால் இயக்கப்படும் அரசாங்கம், விமர்சகர்களை புலிகளின் பங்காளிகள் எனவும் தேசத் துரோகிகள் எனவும் குற்றஞ்சாட்டுவதையிட்டு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆழமாகக் கவலைகொண்டுள்ளது" என அது எழுதியுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவரான சுனந்த தேஷப்பிரிய அண்மையில் தெரிவித்ததாவது: வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களுக்கு செய்தித்தாளை வைத்திருக்கும், செய்தி அச்சிடும் உரிமை கூட இல்லை. ஊடகவியலாளர்களுக்கு வாழ்வுரிமை கிடையாது. அவர்களால் தனக்குத் தேவையான போட்டோவை எடுக்க முடியாது. அவர்கள் விரும்பியவாறு இணையத்தளத்திற்கு செல்ல முடியாது." கடந்த 15 மாதங்களில் 17 ஊடகவியலாளர்களும் ஊடகத் தொழிலாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊடகங்கள் தொடர்பான, குறிப்பாக தமிழ் மொழி ஊடகங்கள் தொடர்பான அரசாங்கத்தின் போக்கு, யாழ்ப்பாணத்தின் முன்னணி பத்திரிகையான உதயன் பத்திரிகையின் ஊழியர்களுடன் பெளச்சரை சந்திக்க அனுமதிப்பதா இல்லையா என்ற உள் விவாதத்தின் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டது. இந்தக் கலந்துரையாடலை அம்பலப்படுத்திய சண்டே டைம்ஸ் பத்திரிகை, "இத்தகைய அனுமதி கொடுக்கப்பட்டது ஏன்" என்பது தொடர்பாக வெளியுறவு அமைச்சருடன் இராஜபக்ஷ வாதத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளது. "புலிகளுக்கு சார்பான" பத்திரிகைகளுடன் எந்தவொரு சத்திப்பும் நடத்துவதற்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இராஜபக்ஷ கடுமையை குறைத்தார். ஆனால், இத்தகைய ஒரு விஜயத்தில் இருந்து ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரியை தடுப்பது பற்றி இராஜபக்ஷ சிந்தித்தார் என்ற உண்மை, உத்தியோகபூர்வ கொள்கை தொடர்பான எந்தவொரு ஊடக விமர்சனத்தையும் பற்றிய அவரது அரசாங்கத்தின் போக்கை உறுதிப்படுத்துகிறது.

அரசாங்கத்திற்கு சார்பான துணைப்படையான கருணா குழு, சிறுவர்களை படையில் சேர்ப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளதை அம்பலப்படுத்தும் ஒரு விபர அறிக்கையையும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு மார்ச் மாதம் வெளியிட்டது. இரஜபக்ஷ அரசாங்கத்தின் உடனடி கண்டனத்திற்கு உள்ளான இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில், புலிகளுக்கு எதிராக சாட்டப்படும் பிரதான குற்றச்சாட்டுக்களில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதும் ஒன்றாகும். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு சிறுவர்களை கடத்துவது தொடர்பான குறிப்பிடத்தக்க விடயங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமன்றி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவுக்கும் இராணுவத்திற்கும் உள்ள பகிரங்கமான உறவுக்கு நேரடி அறிக்கையின் மூலம் ஆதாரம் காட்டியுள்ளது. இந்த தொடர்பு பற்றி அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக குற்றஞ்சாட்டிய பெளச்சருக்கு, இதேபோன்ற நடவடிக்கையில் கருணா குழுவும் ஈடுபடுவது பற்றி கூறுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

அமெரிக்க காங்கிரஸில் வெளிப்படுத்தப்பட்ட விமர்சனங்கள், இராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதில் வாஷிங்டனும் நெருக்கமாக ஈடுபட்டிருக்கலாம் என்ற கவலையை பிரதிபலித்துள்ளது. வெளியுறவுக் குழுவின் சிரேஷ் உறுப்பினரான குடியரசுக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் லுகர், அமெரிக்க நிதி உதவி அபாயத்திற்குள்ளாகலாம் என எச்சரித்து மார்ச் மாதம் இராஜபக்ஷவிற்கு எழுதியிருந்தார். "இலங்கையின் சுட்டிக்காட்டும் கருவியின் மோசமடைந்துவரும் நிலைமை எம்.சி.சி. (மிலேனியம் சவால் கூட்டுத்தாபனம்) கணக்கில் இருந்து கிடைக்கும் நிதியை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதையிட்டு நான் அக்கறைகொண்டுள்ளேன்," என அக்கடிதம் குறிப்பிடுகின்றது.

மனித உரிமை துஷ்பிரயோகம் மற்றும் பிரமாண்டாமான பாதுகாப்பு செலவை மேற்கோள் காட்டிய பிரித்தானியா, கடன் நிவாரண உதவியில் இருந்து 3 மில்லியன் டொலர்களை இடைநிறுத்துவதாக இந்த மாத முற்பகுதியில் அறிவித்துள்ளது. பெளச்சரின் விஜயத்தின் போது, ஏ.எப்.பி.க்கு கருத்துத் தெரிவித்த கொழும்பில் உள்ள இராஜதந்திரி ஒருவர், இலங்கையின் பெரிய நிதி உதவியாளரான ஜப்பான், நிதி உதவிகள் அரசாங்கத்தின் மனித உரிமைகள் பதிவுகளுடன் இணைக்கப்பட வேண்டும் எனக் கோரும் சர்வதேச நடவடிக்கையாளர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பெளச்சரின் கருத்துக்களைப் போலவே, இத்தகைய ஒப்பனை நகர்வுகள் இராஜபக்ஷவின் கொடூரமான யுத்தத்தை அல்லது அதன் திட்டமிட்ட அடக்குமுறையை நிறுத்த எதுவும் செய்யப் போவதில்லை. ஆனால், இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளின் பரந்த குற்றவியல் பண்பையும் மற்றும் தீவிலும் சர்வதேச ரீதியிலும் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்பையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.