World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French parliamentary elections: The collapse of the "left"

பிரெஞ்சு பாராளுமன்றத் தேர்தல்கள்: "இடதின்" சரிவு

By Antoine Lerougetel and Peter Schwarz
8 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கையில், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கோலிச UMP கட்சிக்கு மாபெரும் வெற்றி என்பது முன்கூட்டியே தெரிந்துள்ள முடிவாகிவிட்டது. கருத்துக் கணிப்புக்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்துமே UMP பாராளுமன்றத்தின் 577 இடங்களில் 400ல் இருந்து 460 இடங்களை பெறும் என கணித்துள்ளன. தற்பொழுது இக்கட்சிக்கு மன்றத்தில் 359 உறுப்பினர்களே உள்ளனர்.

முக்கிய எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி, UMP வெற்றிக்கு ஒரு தீவிர சவால் கொடுக்கும் விருப்பத்தை கூட கொண்டிருக்கவில்லை. அதன் செயலாளரான பிரான்சுவா ஹொலந்த் தன்னுடைய கட்சி "வழக்கமான அடையாள எண்ணிக்கையான" 120 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் நோக்கத்தை கொண்டுள்ளது என்று அறிவித்தார்.

"இந்த தரத்தை அடைவது பல சோசலிஸ்ட்டுக்களாலும் மிகவும் கெளரவமானது என கருதப்படுகிறது" என்று ஹொலந்த் கூறினார்.

நீண்ட காலம் சோசலிஸ்ட் கட்சிக்கு தோழமைக் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியானது பேரழிவின் விளிம்பில் தடுமாறுகிறது. இப்பொழுது உள்ள மொத்த 21 இடங்களுக்கு பதிலாக இதற்கு 4 முதல் 12 இடங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ பாராளுமன்ற குழுவிற்கு (குறைந்தது 20 இடங்களாவது வேண்டும்) கொடுக்கப்படும் பல சலுகைகள், நிதியங்கள் ஆகியவற்றை இது உறுதியாக இழக்கக்கூடும். ஏற்கனவே நிதிநெருக்கடிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பாப்லோ பிக்காசோ மற்றும் பேர்னாண்ட் லெஜேர் ஆகியோரின் ஓவியங்களை விற்றுவிடலாம் அல்லது Place du Colonel Fabien ல் உள்ள இதன் பாரிஸ் தலைமையகத்தை விற்றுவிடலாம் என்று வதந்திகள் உலவுகின்றன.

பிரான்சுவா பேய்ரூ மேற்கொண்டிருக்கும் ஒரு புதிய முதலாளித்துவ மையவாதக் கட்சியை (Democratic Movement) ஐ நிறுவும் முயற்சியும் தடுமாறியுள்ளது. அவருடைய கட்சிக்கு 2 முதல் 6 இடங்கள்தான் கிடைக்கும் என்று கணிப்புக்கள் கூறுகின்றன. பேய்ரூவின் முந்தைய கட்சியான ஹிஞிதி (Union for French Democracy), ல் இருந்து அநேகமாக எல்லா பிரதிநிதிகளும் சார்க்கோசியின் UMP க்கு சென்றுவிட்டனர்.

வலது தீவிர தேசிய முன்னணியும் சார்க்கோசியிடம் தன்னுடைய வாக்காளர்களை இழந்து கொண்டிருக்கிறது. கருத்துக் கணிப்புக்களின்படி, 6 சதவிகித ஆதரவைக் கொண்டிருக்கும் Jean-Marie Le Pen உடைய கட்சி 1980களுக்கு பின்னர் மிக மோசமான முடிவுகளை பெறக் காத்துக் கொண்டிருக்கிறது.

பிரான்சின் பெரும்பான்மை வாக்கு முறை மிகப் பெரிய அளவில் உண்மையான சக்திகளின் உறவை சிதைக்கிறது. 41 சதவிகிதம் வரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், UMP பாராளுமன்றத்தில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வெல்லக் கூடும்; அதேநேரத்தில் 29 சதவிகித வாக்குகள் பெறலாம் எனக் கணிக்கப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சிக்கு நான்கில் ஒரு பங்கு இடங்கள்தாம் கிடைக்கும்.

இந்த முறையானது, தொகுதி அடிப்படையை கொண்டது ஆகும். ஜூன் 10 முதல் சுற்றில் எத்தனை வேட்பாளர்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஜூன் 17 இரண்டாம் சுற்றில், முதல் சுற்றில் மொத்த வாக்காளர்களில் (பதிவான வாக்குகளில் அல்ல) 12.5 சதவிகிதம் பெற்றவர்கள் மட்டுமே வாக்குப்பதிவில் இடம் பெறுவர். இதையொட்டி பல மும்முனைப் போட்டிகள் ஏற்படும்; மூன்று வேட்பாளர்கள் போட்டியில் இருப்பர்.

இவ்வாறு இருந்தபோதிலும்கூட, UMP யின் மகத்தான வெற்றிக்கு ஒரு அரசியல் விளக்கம் கொடுக்கப்பட்டாக வேண்டும். மொத்தத்தில், மே 6ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் 53 சதவிகித மக்கள் வாக்குடன், சார்கோசியின் வெற்றி போதுமானதாக இருந்தபோதிலும், அது அபரிமிதமானதாக இல்லை..

அப்படியானால், இளைஞர்கள், தொழிலாளர்கள் என்று அநேகமாக அனைத்துப் பிரிவினராலும் ஆழ்ந்து வெறுக்கப்படும் இந்த மனிதன், அரசியலில் பிளவை ஏற்படுத்துபவர் என்ற இழிபெயர் கொண்டவர், குடியேற்றம், தொழிலாளர் சட்டம், "சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை போன்ற வற்றில் வலதுசாரிக் கொள்கைகளை வளர்ப்பவர், மற்றும் அதீத செல்வந்தர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான நட்பினால் பகிரங்கமாக அறியப்பட்டுள்ளவர், தன்னுடைய ஜனாதிபதி பதவிக்கு மிகப் பெரிய பாராளுமன்ற பெரும்பான்மையை அடிப்படையாக கொள்ள முடிந்தது ஏன்?

சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலென் ரோயாலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுத்து, மத்தியதர வர்க்கத்தின் தாராளப் பார்வையை வெளிப்படுத்தும் நாளேடான Liberation ஏற்கனவே சார்க்கோசியின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டுவிட்டது போல் எழுதி, ஒருவித அரசியல் முடக்கத்தாலும் அவதியுறுகிறது. புதனன்று "Sarkozyraptor" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை எழுதி, "ஓர் அரசியல் சீற்றப்புயலின் தாடைகளை" சார்க்கோசி பெற்றுள்ளார் என்று எழுதியுள்ளது.

ஒரு UMP வெற்றி பற்றி தவிர்க்கமுடியாமல் "சுனாமி" போன்றது என்று விளக்கியுள்ள Liberation கொடுக்கும் எச்சரிக்கையாவது: "சார்க்கோசி எங்கும் நிறைந்திருப்பது ஓர் அச்சுறுத்தல், வலதுசாரிக்கும்கூட --இது ஒரு அளவுக்கு மீறிய இறுமாப்பின் தன்மையை அளித்துவிடும். இடது விழித்துக் கொள்ளவில்லை என்றால், வாக்காளர் பாதுகாப்புடன் செயல்படவில்லை என்றால், ஐந்து ஆண்டுகள் ஒற்றை சக்தியின் ஆட்சியின் அபாயத்தைத்தான் கொள்ளுவோம். இது ஆபத்தானது..."

இதே அச்சமும் வியப்பும்தான் சோசலிஸ்ட் கட்சியாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதுவும் இயற்கை பேரிடரான "சுனாமி" என்ற சொல்லை, தவிர்க்கமுடியாத UMP வெற்றிக்கு எதிராக இருக்கும் தன்னுடைய இயலாமை, கோழைத்தனம் இவற்றை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளது.

உண்மையில், சார்க்கோசியின் வெற்றியின் இரகசியம் புரிந்துகொள்ளுவதற்கு கடினமானது அல்ல. லிபரேஷன் விளக்கியுள்ளது போல் "Sarkozyraptor" என்ற அனைத்து சக்திகளும் நிரம்பியவர் அல்லர் அவர். மாறாக, அவருடைய அடிப்படை பலம் உண்மையான எந்த அரசியல் எதிர்ப்பும் முற்றிலும் இல்லாததுதான். இன்னும் அப்பட்டமாக கூறவேண்டும் என்றால், சோசலிஸ்ட் கட்சி மற்றும் "இடதின்" மற்ற பிரிவுகளும் அடிப்படை பிரச்சினைகள் அனைத்திலும் அவரோடு உடன்பாடு கொண்டுள்ளன.

இது அவருடைய ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே தெளிவாகியிருந்தது; அப்பொழுது செகோலென் ரோயால் சார்க்கோசியுடன் வாடிக்கையான வலதுசாரிக் கருத்துக்களான தேசியம், "சட்டம் மற்றும் ஒழுங்கு" என்பவற்றை கொண்டு போட்டியிட்டார். தேர்தலுக்கு பின்னர் முக்கிய "இடதின்" பிரதிநிதிகளையும் தன்னுடைய அரசாங்கத்திற்காக சார்க்கோசி தேர்ந்தெடுக்கையில் இன்னும் வெளிப்படையாயிற்று.

Medecins Sans Frontieres இன் இணை நிறுவனர் மற்றும் நீண்ட கால சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர், வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர், இதற்கு மிகச் சிறப்பான உதாரணம் ஆவார். இன்னும் பலர், அவர்களுள் மறைந்த Abbé Pierre இன் Emmaus அறக்கட்டளையின் தலைவரான Martin Hirsch, சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் பிரான்சுவா மித்திரோன் உடைய நீண்ட கால ஆலோசகரும் நெருக்கமான நண்பரும், சமீபத்தில் கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை நூலை எழுதியவரும், மற்றும் புதிய ஜனாதிபதிக்காக சிறப்புப் பணிகளை வெளிநாடுகளில் மேற்கொள்ள தயாராக இருக்கும் Jacques Attali போன்றோரும் உதாரணமாவர்.

சோசலிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் சார்க்கோசி அரசாங்கத்தில் குஷ்நெர் சேர முடிவு எடுத்துள்ளது பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால் இவை தந்திரோபாய வேறுபாடுகள்தாம்; அவர்களுடைய அரசியல் பார்வை அடிப்படையில் குஷ்நெருடையதைத்தான் ஒத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சிக்காக முக்கிய பிரச்சாரகராக வெளிப்பட்டுள்ள ரோயால் ஏற்கனவே சார்க்கோசியுடன் ஒத்துழைக்கத்தயார் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் UMP பெரும்பான்மைக்கு தீவிர எதிர்ப்பை கொடுக்காது என்று அறிவித்துள்ளார்; மேலும் UMP வெற்றி ஒரு முடிவானதுதான் என்ற கருத்தையும் அவர் கொண்டுள்ளார். ஜூன் 4ம் தேதி செய்தி ஊடகத்திடம் அவர் கூறினார்: "நேரடி எதிர்ப்பு என்ற கோட்பாட்டிற்கு நான் இனியும் ஒத்துப்போக தயாராக இல்லை. பிரெஞ்சு மக்கள் "எல்லாவற்றையும் மாற்றுவோம்" என்று கூறப்படுவதை இனியும் கேட்கத்தயாராக இல்லை."

சார்க்கோசி, முன்னாள் சோசலிச அரசியல் வாதிகள் குஷ்நெர் போன்றோரை வரவேற்றிருப்பது பற்றிக் குறிப்பிடுகையில் ரோயால், "வலது இப்பொழுது வேறுவிதமாகப் பேசுகிறது... நாம் நேரடி எதிர்ப்பை அதிகம் கையாண்டால், எவ்வித நம்பகத்தன்மையும் நம்பால் இருக்காது." என்று வலியுறுத்தினார்.

சார்க்கோசியின் பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன், சோசலிஸ்ட் கட்சி பற்றி ஒளிவுமறைவற்ற இகழ்வுடன்தான் பேசுகிறார்; பொதுவாக பிரெஞ்சு பாராளுமன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வெளிப்படுத்தும் வாடிக்கையான தூதரக மரியாதையையும் இவர் காட்டவில்லை. "ஞாயிற்றுக்கிழமை அறச்செயல் கூட்டங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கு மிருதுவான இனிப்பை வழங்க முன்வரும் மிகவும் விழிப்பானவர்கள் போன்று சமூக நீதியை செயல்முறைப்படுத்தும் வெற்று மனிதர்களின்", "அறநெறிப் போலித் தோற்றம்" பற்றி அவர் கண்டனம் செயகிறார். சார்க்கோசி முகாமின் இரக்கமற்ற உறுதிப்பாட்டோடு ஒப்பிடும்போது இந்த வர்ணனை முற்றிலும் சரியானதுதான்.

"இடது" தாள்பணிந்து தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் நின்றதை சார்க்கோசி மிகத் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டுள்ளார். குஷ்நெரும் மற்றவர்களும் கட்சி மாறியது இவருடைய தேர்தல் வாய்ப்புக்களை வலுப்படுத்தியதில் முக்கிய காரணியாகும். மிக அதிக எண்ணிக்கையில் செய்தி ஊடக வல்லுனர்களை இவர் வேலைக்கு அமர்த்தியுள்ளார் மற்றும் பெயரளவு "இடதின்" சரிவினால் ஏற்பட்டுள்ள குழப்பம், அவநம்பிக்கைத்தன்மை, பல தசாப்தங்களாக முறிக்கப்பட்ட உறுதிமொழிகள், இடதுசாரி அரசாங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கள் ஆகியவற்றை திறமையுடன் பயன்படுத்துகின்ற வல்லுனர்களையும் தொழில் நேர்த்தி கொண்ட பொது உறவு மேலாளர் ஆகியோரையும் வேலைக் கமர்த்தியுள்ளார்..

சார்க்கோசியின் பிரச்சாரம் உயர்ந்த அளவு வேலையின்மை, சரிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைத் தரங்கள், நெருக்கடியில் இருக்கும் சமூகம் ஆகியற்றினால் விளையும் சிதைவு, அச்சம், பெரும் திகைப்பு, மற்றும் சமூகச் சீற்றத்தை கூட பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஹங்கேரிய பிரபுவின் மகனும், செல்வந்தர்களின் நண்பருமான இவர் தன்னை ஒரு வெளியாள், ஏன் குடியேறியவர், பிரெஞ்சு நடைமுறையின் உயர்பதவிகளுக்கு தளமாக இருக்கும் பள்ளிகளில் பயிலாதவர் என்றும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளுகிறார்.

இவர் அனைவருக்கும், கடுமையான வேலை செய்யத் தயாராக இருந்தால், வாய்ப்பு அளிக்கப்போவதாக உறுதிமொழி கொடுத்துள்ளார். "நேர்மையான" மக்களை "அற்ப ஏமாற்றுக்காரர்களோடு" ஒப்பிட்டுள்ளார்; சீக்கிரம் எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமுடையவர்களை, அரசாங்கத்தை நம்பியிருக்கும் "சோம்பேறிகளுடன்" ஒப்பிட்டுள்ளார். "இடது", "வலது" என்ற பூசல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அரசியல்வாதி, தான் என்று காட்டிக் கொள்ளுகிறார். "பிரெஞ்சு நாட்டின் அரிய சிறப்பு" பற்றி முடிவில்லாமல் முறையீடு செய்கிறார்; ஒருவரது இனம், தோலின் நிறம் இது பற்றி பொருட்படுத்தாமல் பிரெஞ்சு என கூறுக்கொள்ளுவதில் பெருமிதம் வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

இதையொட்டியும் ஒரு குறிப்பிட்ட தாக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய முறையீடுகள் பலமுறையும் பெரும் வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று கடந்த தசாப்தம் முழுவதும் வெளிப்பட்டு தெளிவான அரசியல் வெளிப்பாட்டையும் தெளிவான நோக்குநிலையையும் கண்ட பரந்த சமூக எதிர்ப்பிற்கு இடையே சிறிதளவே பாதிப்பைக் கொண்டிருக்கும்; ஆனால் உத்தியோகபூர்வ "இடதால்" அர்த்தமுள்ள எதிர்ப்பு ஏதும் முற்றிலும் சரிந்துவிட்டது என்பதை எடுத்துக் கொண்டால், சார்க்கோசியின் வலதுசாரி ஜனரஞ்சகவாதம் பரந்த சமூக அடுக்குகளிடையே குறிப்பிட்ட பதிலைக் காண முடிந்தது.

ஆனால் குஷ்நெர்கள், அட்டாலிக்கள், சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், சுற்றுச் சூழல் வாதிகள் என்று சார்க்கோசி முகாமிற்கு ஒடிவருபவர்களுக்கும் சாதாரண மத்தியதர மக்கள், தொழிலாளர்கள் என்று திகைப்பில் இவருக்கு வாக்களித்துள்ளவர்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. முந்தையவர்கள் சமூகப் பிளவு மற்றும் பெருகிவரும் அரசியல் அழுத்தங்களினால் அச்சமுற்று ஒரு வலுவான அரசாங்கம் ஒழுங்கையும் இவர்களுடைய சலுகைகளையும் காக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். "மனிதாபிமான" புதிய காலனித்துவ முறையின் ஆரம்ப ஆதரவாளரான குஷ்நெர் இதற்கு தக்க முன்மாதிரி ஆவார். பிந்தைய தொகுப்போ, குழப்பம், சிதைவு ஆகியவற்றை கொண்டிருந்தாலும் சமூக இக்கட்டில் இருந்து வெளியேற வழிவேண்டும் என்று விரும்புகிறது.

சார்க்கோசியின் ஜனாதிபதி பதவிக்காலம், அரசாங்கம் மற்றும் அரசியல் அமைப்புக்கருவிகள் மீது உறுதியான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தாலும்கூட, சமூகப் பிளவுகள் ஆழ்ந்து வெடிக்கும் தன்மையுடைய ஆபத்தை கொண்டிருக்கும் சமுதாயத்தை நம்பியுள்ளது. இதுதான் இவருடைய ஆட்சியில் வரவிருக்கும் கணக்கற்ற போனப்பார்ட்டிச பகட்டான வகைகளுக்கு காரணமாகும்.

முந்தைய ஜனாதிபதிகளை போலல்லாமல், இவர் அரசாங்கத்தின் ஒவ்வொரு பணிக் கூறுபாட்டின் மீதும் கடுமையான கட்டுப்பாட்டை கொண்டுள்ளார். மந்திரிகள் நேரடியாக ஜனாதிபதி மாளிகைக்கு அறிக்கைகளை கொண்டு செல்ல வேண்டும்; பொதுவாக பிரதம மந்திரி அமைச்சரவையில் தனி உரிமையான, உள்துறை மற்றும் சமூக அமைச்சக கொள்கைகள் மீதான செய்தியாளர் கூட்டங்கள் கூட, இப்பொழுது ஜனாதிபதியின் செயற்பாடு ஆகிவிட்டன.

பாராளுமன்றத்தில் ஒரு மகத்தான UMP பெரும்பான்மை அமைந்துவிடுவது, சார்க்கோசிக்கு அரசின் சட்டமியற்றல் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின்மீது சவாலற்ற அதிகாரத்தை கிட்டத்தட்ட கொடுத்துவிடும்; அது அதிகாரப் பிரிவினை கொண்ட ஜனநாயக ஆட்சியின் அடிப்படை கோட்பாட்டை மீறும்.

Liberation எழுதுவது போல், "UMP யின் போக்கை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கும் அதேவேளை, ஒவ்வொரு மணி நேரமும் அரசாங்க செயலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதோடு ஜனாதிபதி திருப்தி அடைந்துவிடவில்லை. தன்னுடைய சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சட்டரீதியான தன்மையை அவருக்கு வழங்கும் ஆழ்ந்த, சீரான நீலப் (UMP இன் நிறமான) பாராளுமன்றத்தை அவர் விரும்புகிறார்."

"இடது" சரிவினால் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பமானது, தொழிலாள வர்க்கத்தை எதிர்பாராது அணுகி தன்னுடைய வலதுசாரி கொள்கைகளை செயல்படுத்துவதில் குறுகிய கால அவகாசத்தைத்தான் கொடுத்துள்ளது என்பதை சார்க்கோசி நன்கு அறிவார். இதுதான் மிகப் பரந்த அளவில் அவருடைய சுறுசுறுப்புத்தனம் பற்றிப் பேசப்படுவதற்கு காரணமாகும். சமூக பதட்டங்கள் தவிர்க்கமுடியாமல் வெளியே வெடித்து எழும்.

1993 தேர்தல்களில், மித்திரோன் ஜனாதிபதி பதிவிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில், கோலிச RPR (UMP க்கு முன்பு இருந்தது) மற்றும் "தடையற்ற சந்தை" தாராளவாத UDF 472 இடங்களை பாராளுமன்றத்தில் பெற்றது; சோசலிஸ்ட் கட்சி 53 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் பிரதம மந்திரி அலன் யூப்பேயின் அரசாங்கத்தை முழங்கால் மண்டியிட வைத்த மாபெரும் வேலைநிறுத்த இயக்கம் வெடிப்பதற்கு இரண்டே ஆண்டுகள்தான் எடுத்தன. இதற்கிடையில், யூப்பேதான், தற்போதைய அரசாங்கத்தின் துணை பிரதம மந்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு சமூகத்தின் பெரும் கொந்தளிப்புத் தன்மை சார்க்கோசி ஆபத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறுவதற்கு பயனபடுத்தப்பட்டுவிடக் கூடாது. உண்மை அதற்கு நேர்மாறானது ஆகும்.

முந்தைய அரசாங்கங்கள் பல சமூக இயக்கங்களுக்கு எதிரான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை கடைப்பிடித்து முட்டுக்கட்டை நிலையில் முடிவுற்று, இறுதியில் கடந்த ஆண்டு முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு இணங்கியதுபோல், இறுதியில் ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்படும்; சார்க்கோசியோ இன்னும் வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை பெற்றவர்; சூழ்ச்சிக்கையாளலுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரையும் மற்ற சக்திகளையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போலானல் மிகவும் மிருகத்தனமான முறையில் எதையும் எதிர்கொள்ளுவார். போலீசுடன் நெருக்கமான தொடர்பிற்கு இழிபெயர் பெற்றவர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே செல்வாக்கை கொண்ட தேசிய முன்னணியுடன் அரசியல் ஊடாடலுக்கும் இழிபெயர் பெற்றவர்

மேலும், தன்னுடைய ஜனாதிபதி பதிவிக்காலத்தின் ஆரம்ப மாதங்களில் வலதுசாரித் திட்டத்தை செயற்படுத்துவது பற்றி எதையும் இரகசியமாக வைத்திருக்கவில்லை. தன்னுடைய நிர்வாகத்திற்கு பாராளுமன்றத்தில் மிகப் பெரிய பெரும்பான்மை கொடுத்து சட்டரீதியானதன்மை அளித்திருப்பதை, இன்னும் கூடுதலான வகையில் தொழிலாளர் வாழ்க்கைத் தரங்களை குறைப்பதற்கும் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளில் அத்துமீறல் செய்வதற்கும் உபயோகிப்பார் என்பது உறுதி.

அனைத்து முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் ஆதரவையும் சார்க்கோசி நம்பலாம்; அவர்கள் ஏற்கனவே இருமுறை இவரைச் சந்தித்துள்ளனர். அனைவரும் ஜனாதிபதியோடு ஒத்துழைப்பதாக உடன்பட்டு, தொழிலாளர்கள் பணி நிலைமை, ஓய்வூதிய உரிமைகள் ஆகியவற்றில் உடன்பாடுகள் காணப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

சார்க்கோசி முன்வைக்க்க் கூடிய சட்டங்கள் அரசாங்கத்திற்கும் பிரான்சின் "சமூகப் பங்காளிகளுக்கும்", முதலாளிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே கணிசமான பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதியளிக்கும், ஒவ்வொரு தொழில் ரீதியாகவும் ஒவ்வொரு துறைரீதியாகவும் இது நடைபெற அனுமதிக்கும்.. பொதுச் சேவைகள் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேலைநிறுத்த உரிமையிலும் ஒரு வகை தானாகவே முன்வந்து கொடுக்கப்படும் வரம்பு வலியுறுத்தப்படும். இதன் விளைவாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மொத்த தொழிலாள வர்க்கத்தையும் போலீசாரின் தயவிற்கு விட்டுவிட முடியும்.

இதேபோல், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சார்க்கோசி, அவருடைய மூத்த மந்திரிகள் ஆகியோருடன் வட்ட மேசை விவாதத்தில் இருந்து வெளிப்பட்டு ஜனாதிபதிக்கும் சுற்றுச் சூழல் பிரச்சினையை அவர் உயர்த்தியுள்ளதற்கும் பெரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து Dominique Voynet என்னும் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இப்பிரச்சினைகள் பற்றி அவருக்கு ஆலோசனைகள் கொடுப்பதற்கு சார்க்கோசியை சந்தித்தித்துப் பேசினார்.

"இடது" எனப்படும் அமைப்புக்களின் பொறிவிலிருந்தும் அவற்றின் அப்பட்டமான அடிபணிதலில் இருந்தும் அரசியல் படிப்பினைகளை பெற வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் உலக சோசலிச வலைத் தளம் "சார்க்கோசியை நிறுத்துவதற்காக" ரோயாலுக்கு வாக்களியுங்கள் என்று கூறியவர்கள் அனைவரையும் எதிர்த்தது. அந்த நிலைப்பாடு முற்றிலும் சரியென்று நிரூபணம் ஆகியுள்ளது.

தவறாகப் பெயரிடப்பட்டுள்ள "இடது" என்பது "குறைந்த தீமை" யை பிரதிநிதித்துவப்படுத்துகிறது அல்லது சோசலிஸ்ட் கட்சியை தங்கள் நலன்களின்படி நடக்க அழுத்தம் கொடுக்க முடியும் என்ற பிரமைகளின் கீழ் தொழிலாளர்கள் இருக்கும் வரையில், சார்க்கோசியும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் பிற்போக்கு சக்திகளும் தடையற்று செயற்படுவர். வரவிருக்கும் வர்க்க மோதல்களுக்கு தயார் செய்வதற்கு ஒரே வழி, "இடது" கட்சிகள் உட்பட முதலாளித்துவ அரசியல் அமைப்பு முழுவதிலும் இருந்து சுயாதீனமாகவும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்புவதாகும்.