World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Four Sri Lankan workers beheaded in Saudi Arabia

சவுதி அரேபியாவில் நான்கு இலங்கை தொழிலாளர்கள் சிரச்சேதம்

By Parwini Zora
26 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

சவுதி அராபிய அரசாங்கம் கடந்த திங்கட் கிழமை சனத் புஷ்பகுமார, இ.ஜே.விக்டர் கொரேயா, ரன்சித் டி சில்வா, சங்கீத் குமார ஆகிய நான்கு இலங்கையர்களை சிரச்சேதம் செய்தது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல ஆண்டுகளாக கண்டனம் தெரிவித்துவந்த போதிலும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கருணை கோரியும் கூட இந்த சிரச்சேதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2006ல் 38 பேர் சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த சம்பவம் சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்தியுள்ளது.

ஒரு மதிப்பீட்டின்படி 350,000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் தொழில் புரிகின்றனர். அந்த நாட்டில் வாழும் மற்றும் வேலை செய்யும் 8.8 மில்லியன் வெளிநாட்டவர்களில் இது குறிப்பிடத்தக்க தொகையாகும். 2004 ஜூலையில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் வெளியிடப்பட்ட, கெட்ட கனவுகள்-சவுதி அரேபியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான சுரண்டலும் துஷ்பிரயோகமும் என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, தொழிற்படையில் வெளிநாட்டுப் பிரஜைகள் 67 வீதமாக இருப்பதோடு தனியார் துறை தொழில் செய்பவர்களில் 90 முதல் 95 வீதம் வரையானவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்காசிய மற்றும் ஆபிரிக்காவில் இருந்து, வளர்ச்சிகண்டுவரும் வேலையின்மை மற்றும் வறுமையில் இருந்து தப்புவதற்காக வந்தவர்களாவர்.

மிகப் பெரும்பான்மையானவர்கள் குறைந்த சம்பளத்தையே பெறுவதோடு வேலைவாய்ப்பு முகவர்கள் அளவுகடந்த கட்டணத்தை பெறுவதன் காரணமாக பெரும் கடனாளியாகியுள்ளனர். இவர்கள் அடிக்கடி பாடசாலைகளிலும் ஆஸ்பத்திரிகளிலும் துப்புரவு தொழிலாளர்களாகவும், குழாய் பொருத்துபவர்களாகவும், தச்சு வேலை செய்பவர்களாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் மற்றும் குப்பை சேகரிப்பவர்களாகவும் வேலை செய்கின்றார்கள். பெண்கள் எப்போதும் வீட்டுப் பணிப்பெண்களாகவும், அழகுக்கலை நிலையங்களில் உதவியாளர்களாகவும் மற்றும் தையல் வேலை செய்பவர்களாகவும் பணிபுரிகின்றனர். பல மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை, மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றமை போன்ற விடயங்கள் அறிக்கையில் உதாரணங்களாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள போதிலும், திடீரென வேலைநீக்கம் செய்யப்படக்கூடும் என்ற பீதியின் காரணமாக மிகக் குறைவாகவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலைகளின் கீழ், மரண தண்டனை மற்றும் ஏனைய கொடூர வடிவிலான தண்டனைகள் உட்பட இந்த மத்தியகாலத்திய இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்துவதானது, ஒரு மிக நிச்சயமான அரசியல் காரணத்திற்கு சேவை செய்கின்றது. அதன் சமயம் சார்ந்த நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலும், இந்த சட்ட வழிமுறையானது எதேச்சதிகார சவுதி அரசாங்கத்தால் பெருந்தொகையான புலம்பெயர் மலிவு உழைப்புத் தொழிலாளர்களை அச்சுறுத்தவும் பயமுறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் சிறிய செல்வந்தத் தட்டு இந்த புலம்பெயர் தொழிலாளர்களிலேயே மேலும் மேலும் தங்கியிருக்கின்றது.

"பல கம்பனிகளில் திருட்டு வேலை செய்த, கணக்காளர்களையும் தொழிலாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி, அவர்களில் ஒருவரை சுட்டு, அவரது காரையும் திருடிய ஒரு குற்றவியல் கும்பலை அமைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே" இந்த நான்கு இலங்கையர்களுக்கும் பகிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்கள் மார்ச் 2004 கைதுசெய்யப்பட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்லாமிய மத நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.

2005 மார்ச்சில் இந்த மரண தண்டனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, ஒரு அறிக்கையை வெளியிட்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (ஏ.எச்.ஆர்.சி), புஷ்பகுமார, கொரேயா மற்றும் டி சில்வாவின் உயிரைக் காப்பாற்ற தலையிடுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. நான்காவது கைதியான சங்கீத் குமாரவுக்கு நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்படாத காரணத்தால் அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அவருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கைதிகளுக்கு சர்வதேச சட்ட நியமங்கள் மற்றும் அவர்களது சொந்த நாட்டில் உள்ள சட்ட நியமங்களையும் விட மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரியாத்தில் உள்ள அல் நயாத் சிறைச்சாலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு சட்டப் பிரதிநிதித்துவமும் மறுக்கப்படுவதால் அவர்கள் குற்றத் தீர்ப்பை தொடர்ந்தும் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் உறுதியான சாட்சிகள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் இலங்கையில் ஒரு நம்பிக்கைக்குரிய விசாரணைக்கு முகங்கொடுத்த பின்னர் பொருத்தமான தண்டனையை ஏற்றுக்கொள்வதற்கு உத்தரவாதமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

பாதகமான சர்வதேச அவதானத்தை திசைதிருப்பும் முயற்சியில், இந்த கைதிகளின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் 2005 மார்ச்சில் வாகுறுதியளித்தது. தண்டனையை குறைக்கும் எதிர்பார்ப்பிலான சட்ட நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்காக, வெளிநாட்டுக்கு தொழிலாளர்கள் அனுப்பப்படுவதை ஒழுங்கு செய்யும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையுடன் கலந்துரையாடல் நடத்தியதாக தூதரகம் உறுதிப்படுத்தியது.

சிறையில் உள்ள தமது உறவினர்களின் தலைவிதியை பற்றி இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அடுத்து அடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சவுதி அதிகாரிகளிடம் எழுத்துமூலம் கருணை கோரியுள்ளதாக கூறிக்கொண்டார். ஆயினும் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இந்த விடயம் தொடர்பான விபரங்களை ஏ.எச்.ஆர்.சி. க்கு வழங்கவில்லை.

குடும்ப அங்கத்தவர்கள் அவசர உதவி கோரி தற்போதைய இலங்கை ஜனாதிபதியான மஹிந்த இராஜபக்ஷவை அவர் 2005 நவம்பர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்பிருந்தே கூட தனிப்பட்ட முறையில் பல தடவை சந்தித்திருந்தனர். அப்போதைய பிரதமராக இருந்த இராஜபக்ஷ ஒரு பிரதிநிதிகள் குழுவை சந்தித்ததோடு தலையீடு செய்வதாக தனிப்பட்ட முறையில் உத்தரவாதமளித்த பின்னரும், பல நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இராஜபக்ஷ குடும்பத்தவர்களை சந்திக்கும் நிழற்படம் ஒன்றும் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

தனது ஒரே மகனை காப்பாற்ற உதவுமாறு டி சில்வாவின் தாயார் அடுத்தடுத்து இராஜபக்ஷவிற்கு தனிப்பட்ட வேண்டுகோள்களை விடுத்திருந்த அதேவேளை, சவுதி அரேபியாவிற்கு சென்ற பின்னர் பிறந்த தனது குழந்தையை பார்ப்பதற்கு புஷ்பகுமார அனுமதி கோரியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆர்வமின்மையையும் போலி பாசாங்குகளையும் எதிர்கொண்ட நிலையில், டி சில்வா தனது மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு சற்றே இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, தனது தலைவிதியைப் பற்றி புத்தகம் ஒன்று எழுதத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அவர் நியாயம் கோரி பரந்தளவில் வேண்டுகோள் விடுப்பதற்காக புத்தகத்தை வெளியிட உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், தனது இணையத் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு, "(இலங்கை) அரசாங்கம், புனராலோசனை செய்யப்பட்டுவருவதாக கூறப்பட்ட இந்த மூவரது மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டது தொடர்பாகவும் மற்றும் சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்பட்டிருந்த இன்னொருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாகவும் தெளிவுபடுத்த வேண்டும்," எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் படி, "இந்த விவகாரம் சவுதி அரேபிய அதிகாரிகளால் நடைமுறையில் ஆராயப்பட்டுவருவதாகவும் இவர்களது மரண தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்படவுள்ளதாகவும்" இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது உள்ளூர் செய்திச் சேவைகளின் ஊடாக மட்டுமே சில குடும்ப அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, அரசாங்கம் சடலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் "வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் அந்த நாட்டின் சட்டத்திற்கு இணங்கச் செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்துவதாகவும்" பி.பி.சீ. யின் சிங்கள சேவைக்கு தெரிவித்தார். சட்ட பிரதிநிதித்துவம் எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், இவ் விசாரணை சர்வதேச நியமங்களில் இருந்து நெறிபிறழக்கூடும் என அரசாங்கம் முன்னர் கருத்து கூறியிருந்ததை பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகளும் சர்வதேச சட்டங்களும் மீறப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் நிலையிலும் கூட, இலங்கை தொழிலாளர்களின் அவலநிலையில் இலங்கை அரசாங்கம் அற்ப அக்கறை கூட காட்டவில்லை என்பதையே இந்த வஞ்சகம் மீண்டும் அம்பலப்படுத்துகிறது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டவாறு, தமது பிரஜைகளுக்கு வெளிநாடுகளில் குற்றத் தீர்ப்பளிக்கப்படும் போது, விசேடமாக அவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கும் போது, அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவது எந்தவொரு அரசாங்கத்தினதும் அடிப்படைக் கடமையாகும்.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளது. "இந்த நான்கு தனிநபர்கள் மீதான அக்கறைக்கும் அப்பால், இந்த மரண தண்டனை நிறைவேற்றமானது ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு தொடர்பாக, குறிப்பாக பெருமளவிலான உள்ளூர் பிரஜைகள் தொழில் செய்யும் ஒரு நாட்டுடனான உறவு தொடர்பாக கேள்விகளை எழுப்புகிறது. வர்த்தக உறவு மற்றும் அந்நிய செலாவணி வருமானங்கள் மீதான நாட்டத்தில் பிரஜைகளின் உரிமைகள் கைவிடப்படுகின்ற நிலையில், இத்தகைய உறவுகள் அடிமைத் தொழிலாளர்களை விநியோகிக்கும் வடிவிலான உறவை குறிக்கின்றதா? வர்த்தக உறவுகளை அல்லது ஏனைய ஒப்பந்தங்களை இழக்கக்கூடும் என்ற பீதியால், பலமான முறையில் பிரஜைகளின் உரிமைகள் பற்றிய விவகாரத்தை கையாளும் நிலையில் இலங்கை இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தெளிவானவை. ஒரு மில்லியன் இலங்கைத் தொழிலாளர்கள் தமது குடும்பங்களுக்கு உதவுவதன் பேரில் வெளிநாடுகளில் வேலை செய்கின்ற நிலையில், இத்தகைய ஏறத்தாழ அடிமை உழைப்பு ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை அரசாங்கம் எதையும் செய்யாது. இந்தத் தொழிலாளர்கள் நாட்டின் தொழிலாளர் படையில் எட்டில் ஒரு பகுதியாக உள்ளனர். கடந்த ஆண்டு வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்கள் தமது வீட்டுக்கு அனுப்பிய 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து அரசாங்கம் நேரடியாக வருமானம் பெற்றது. இதில் 50 வீதம் வளைகுடா நாடுகளில் இருந்தே வருகின்றது.

கடந்த ஆண்டு லெபனான் மீதான கடுமையான குண்டுத் தாக்குதல்களில் ஆபத்திற்குட்பட்டிருந்த 90,000 இலங்கையர்களை அவசரமாக காப்பாற்ற இராஜபக்ஷ அரசாங்கம் மறுப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, வெளிநாட்டில் பணி புரிந்த இந்த நான்கு தொழிலாளர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக இராஜபக்ஷ காட்டிய கலக்கமற்ற அலட்சியப் பிரதிபலிப்பானது வெறுமனே இன்னுமொரு புதிய உதாரணமேயாகும்.