World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Detention of three leftists by Sri Lankan government signals new round of state repression

இலங்கை அரசாங்கம் மூன்று இடதுசாரிகளை தடுத்துவைத்துள்ளமை புதிய சுற்று அரச ஒடுக்குமுறையின் அறிகுறி

Statement by the Socialist Equality Party (Sri Lanka)
12 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் முதல் மூன்று இடதுசாரிகளை தடுத்துவைத்துள்ளதுடன் அதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கைதுசெய்துள்ளமை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெளிப்படையான அரச ஒடுக்குமுறைக்கான தயாரிப்பேயாகும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெகுஜனங்களால் வெறுக்கப்பட்ட யுத்தத்தை துரிதப்படுத்துகின்ற நிலையில், இந்த மோதலின் பொருளாதார சுமைகளை சுமக்கத் தள்ளப்பட்டுள்ள சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியிலான எதிர்ப்பை அடக்கி ஒடுக்க அது முயற்சிக்கின்றது.

இராணுவம் இந்த மூவரையும் பெப்பிரவரி 5 கைது செய்தது. தட்டச்சு செய்பவரான நிஹால் சேரசிங்க மத்திய கொழும்பில் வைத்து கடத்தப்பட்டார்; லலித் செனவிரத்ன அன்றிரவு ஆயுததாரிகளால் அவரது வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட அதே வேளை, புகையிரதத் துறை ஊழியரான சிசிர பிரியங்கர அன்று பின்னிரவு கொழும்பில் தெமட்டகொடையில் உள்ள பிரதான ரயில்வே கட்டிடம் ஒன்றில் நுழைவாயிலில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இந்த மூவரும் புகையிரத ஊழியர்களின் கூட்டு என்ற பெயரில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மாத சஞ்சிகையான அகுன (இடி) சஞ்சிகையை வெளியிடுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் கடத்தல்களை கண்டனம் செய்து நூற்றுக்கணக்கான புகையிரத ஊழியர்களும் ஊடகவியலாளர்களும் பெப்பிரவரி 6 கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதோடு பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாகவும் அச்சுறுத்தின. இராணுவ அதிகாரிகள் இந்த மூவர் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறினர். ஆயினும், பெப்பிரவரி 6 இரவு, தமது இணையத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு, இந்த மூன்று "புலி சந்தேகநபர்களும்" இராணுவத்தின் காவலில் இருப்பதாக ஏற்றுக்கொண்டது.

சந்தேக நபர்கள் கிளிநொச்சியில் உள்ள புலிகளின் படைத்தளத்தில் இராணுவப் பயிற்சி பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக அந்த அறிக்கை அறிவித்தது. வெடிபொருட்கள், தானியங்கி கைத்துப்பாக்கிகள், கிளேமோர் குண்டுகள் மற்றும் இலக்ரோனிக் டெடனேட்டர்கள் உட்பட "ஆயுதங்கள் பதுக்கிவைக்கும் பல இடங்களை கொழும்பில் கண்டுபிடித்ததாகவும்" இராணுவம் கூறிக்கொண்டது.

அடுத்தநாள் நடத்திய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், அரசாங்க மற்றும் இராணுவ சிரேஷ்ட பேச்சாளர், "ஒப்புதல் வாக்குமூலங்கள்" அடங்கிய வீடியோ படத்தைக் காட்டினார். அதில் இந்த மூவரும் 2004 கடைப்பகுதியிலும் 2005 முற்பகுதியிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இரண்டு முறை சென்றுவந்ததாக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட ஏனையவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டதோடு கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் நடந்த குண்டுத் தாக்குதல்களை ஏற்பாடு செய்ததாகவும் எதிர்காலத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்டிருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். புலிகளின் உதவியுடன் இலங்கையின் தெற்கில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக "புரட்சிகர விடுதலை அமைப்பு" ஒன்றை அமைப்பதில் தாம் ஈடுபட்டிருந்ததாகவும் இந்த மூவரும் தெரிவித்துள்ளனர்.

இந்த "ஒப்புதல் வாக்குமூலத்தில்" பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன. சேரசிங்க, செனவிரத்ன மற்றும் பிரியங்கரவும் நாட்டின் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலும் அவர்களைப் பார்வையிட வழக்கறிஞர்கள், குடும்பத்தவர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படாமலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் இறுதியாக மார்ச் 7 நீதவான் நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்த போதிலும், எவருடனும் அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. குடும்ப அங்கத்தவர்கள் கைதிகளை கிழமையில் ஒரு நாள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதுவும் பொலிசாரின் முன்னிலையிலேயே சந்திக்க வேண்டும்.

இந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விடயம் என்னவெனில், அவை 48 மணித்தியாலத்திற்கும் குறைவான காலத்தில் கறந்துகொள்ளப்பட்டமையாகும். அவை இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல கைதுகளிலும் பார்க்க முதல் தடவையாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட பரபரப்பூட்டும் தரவுகளை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் வழங்கியுள்ளன. இங்கு சாத்தியமான மூன்று விளக்கங்கள் உள்ளன. இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்டுள்ளன, அல்லது அவர்கள் அரசாங்க முகவர்களாக இருந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர், அல்லது இரண்டும் ஒருங்கிணைந்தது. இலங்கையின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் போது, இராணுவப் புலனாய்வுத் துறை மற்றும் பலவித பொலிஸ் ஏஜன்டுகளும் இந்த அனைத்து நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளன.

அரசாங்கம் அனைத்து கைதிகளும் "புலி பயங்கரவாதிகள்" என வலியுறுத்துவது மட்டுமன்றி, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை "எதிரிக்கு உதவுபவர்கள்" எனவும் வலியுறுத்துகிறது. அதன் நிலைப்பாட்டின் இனவாத பண்பை பெப்பிரவரி 6 ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்களைத் தாக்கி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்துகிறது. "பயங்கரவாத சார்பு ஊடகப் போக்கிரிகளும் புலிகளின் இரத்தம் தோய்ந்த பணத்தில் தங்கியிருக்கும் ஏனைய இலங்கை விரோத இயக்கங்களும்" என அது ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குகிறது.

இதே பாங்கில், சிங்களத் தீவிரவாதிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் இந்த மூன்றுக் கைதிகளையும் "சிங்களப் புலி" என கண்டனம் செய்தன. இந்தப் பதம் அரசாங்கத்தின் யுத்தத்தை எதிர்க்கும் எவருக்கும் எதிராக அடிக்கடி சுமத்தப்படும் அவதூறாகும். ஜே.வி.பி. அதன் லங்கா பத்திரிகையில் இந்த "ஒப்புதல் வாக்குமூலங்களின்" சில பகுதிகளை மீள் பிரசுரம் செய்திருந்தது. அதோடு சேர்ந்த இன்னுமொரு கட்டுரை மேலும் கைதுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. "பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் பலர் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெறிவிக்கின்றன. இதில் அரச சார்பற்ற அமைப்புக்களின் தலைவர்களும் சுதந்திர ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பத்திரிகையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் இடதுசாரிகளும் அடங்குவர்," என அது பிரகடனம் செய்கின்றது.

ஜாதிக ஹெல உறுமய தலைவரும் தற்போது இராஜபக்ஷவின் அமைச்சரவையின் உறுப்பினருமாக உள்ள சம்பிக ரணவக்க, மேலும் ஜனநாய விரோத நடவடிக்கைகளுக்கும் யுத்தத்தை எதிர்க்கும் எவரையும் ஒழித்துக்கட்டவும் அழைப்புவிடுத்து ஒரு மூர்க்கத்தனமான அறிக்கையை வெளியிட்டார். "நீங்கள் அவர்களை (யுத்தத்தை எதிர்ப்பவர்களை) உயிருடன் விட்டுவிடச் சொல்கிறீர்களா? அந்த ஒழுக்கங்கெட்டவர்கள் துரோகிகள். இந்த நாட்டில் உள்ள காட்டுக் கழுதை சுதந்திரத்தின் காரணமாக எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை... சட்டத்தால் அந்த ஒழுக்கங்கெட்டவர்களை நசுக்க எம்மால் முடியாவிட்டால், நாம் வேறு ஏதாவது வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்," என அவர் ராவய பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

உக்கிரமடைந்துவரும் அடக்குமுறை

பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே சேரசிங்க, செனவிரத்ன மற்றும் பிரியங்கரவின் ஒப்புதல் வாக்குமூலங்களை குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் குறிவைக்கப் பயன்படுத்தியுள்ளன. தனது "தொடர்புகளை" காட்டுவதற்காக சேரசிங்க தீவின் மத்திய தேயிலைத் தோட்ட பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மூன்று தமிழ் ஆசிரியர்களும் இரண்டு தமிழ் மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாவோவாத புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்ததாகவும் புலிகளிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

புகையிர ஊழியர்களின் கூட்டு மற்றும் புகையிரத தொழிற்சங்கங்களின் சமாசத்தினதும் தலைவரான சரத் குமார பெர்னான்டோ பொலிசாரிடம் சரணடைந்துள்ளதோடு தற்போது பூஸ்ஸ தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்ச்சியின் பங்காளியாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரியன்த நிஹால் குனரட்ன, பெப்பிரவரி 13 இரத்தினபுரி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது கைகளைக் கட்டி தொங்கிவிட்டு சித்திரவதை செய்ததால் அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

பெப்பிரவரி 17 முதல், பல தோட்டங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் வேட்டைகளின் போது பொலிசார் சுமார் 400 தமிழ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சுற்றிவளைத்து விசாரணை செய்துள்ளனர். அவர்களில் 109 பேர் தென் மாவட்டமான காலியில் உள்ள பூஸ்ஸையில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 30 இளஞர்கள் பல பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலதிக பொலிசாரும் படையினரும் இந்த வலைவீச்சு நடவடிக்கையை முன்னெடுக்க அழைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் மேல் கொத்மலை நீர் மின் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்டவர்களாவர். பொலிஸ் இப்போது இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மீது குவிமையப்படுத்தியுள்ளது.

தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் இலக்குவைக்கப்பட்டிருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல. தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் தொழில்புரியும் அரை மில்லியன் தொழிலாளர்கள், பல சந்தர்ப்பங்களிலும் தொழிற்சங்கங்களை நிராகரித்து கடந்த டிசம்பரில் சம்பள உயர்வு கோரி இரண்டு வாரங்களுக்கும் மேல் வேலை நிறுத்தம் செய்தனர். ஏனைய துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும் இதே போன்ற கோரிக்கைகளை எழுப்புவதைத் தடுப்பதற்கு தடுமாறிக்கொண்டிருந்த அரசாங்கத்திற்கு இந்த வேலைநிறுத்தம் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த வேலை நிறுத்தம் "தோட்டப்புறங்களில் புலி பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடிய" அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக இராஜபக்ஷ ஆத்திரமூட்டும் விதத்தில் பிரகடனம் செய்தார்.

ஒரு காலக்கேடான முன்னேற்றத்தில் மார்ச் 1 பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டது. "சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு" "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்" எந்தவொரு தனி நபரையும் கைதுசெய்து விசாரிக்க உரிமை உண்டு, என அது பிரகடனம் செய்தது. இந்த அறிக்கை குறிப்பாக எதேச்சதிகாரமான கைதுகள், காணாமல் போன சம்பவங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கண்டனம் செய்தவர்களையே இலக்காகக் கொண்டிருந்தது. "தனிநபர்கள் கைதுசெய்யப்படும் போது மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகள் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மட்டுமன்றி அரசாங்கத்தின் ஸ்திர நிலைமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என அது வலியுறுத்துகிறது.

"அரசாங்கத்தின் ஸ்திர நிலைமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்" சட்டவிரோத கண்டனங்கள் என பிரகடனம் செய்வதன் மூலம், எந்தவொரு மற்றும் அனைத்து அரசியல் எதிர்ப்பின் மீதும் ஒட்டுமொத்த தாக்குதல்களை நடத்துவதற்கான கதவுகளை இந்த அறிக்கை திறந்துவிடுகிறது. இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே ஆழமான அரசியல் நெருக்கடியில் உள்ளது. அது உயர்ந்தளவில் ஸ்திரமற்ற பாராளுமன்றக் கட்சிகளின் கூட்டணி ஒன்றில் தங்கியிருப்பதோடு வாழ்க்கைத் தரம் சீரழிந்துவருவது தொடர்பான உழைக்கும் மக்களின் பரந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது. சமூக நெருக்கடிகளை தீர்க்க இலாயக்கற்ற இராஜபக்ஷ, உழைக்கும் மக்களை இனரீதியில் பிளவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே சிங்களப் பேரினவாதத்தை கிளறுவதோடு புலிகளுக்கு எதிரான யுத்தத்தையும் உக்கிரப்படுத்திக்கொண்டிருக்கின்றார். மேலும் மேலும் தனிமைப்பட்டுவரும் மற்றும் முறிந்துபோயுள்ள அரசாங்கம், ஒரு பொலிஸ் அரசுக்கு சமமான ஒன்றை அமுல்படுத்துவதற்கான சாக்குப் போக்காக "தேசியப் பாதுகாப்பை" பயன்படுத்த இப்போது தயாரகிக்கொண்டிருக்கின்றது.

அரச பயங்கரவாதத்தின் வரலாறு

இலங்கை அரசாங்கம் இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவது முதற்தடவையாக அல்ல. 1989-1990 களில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஜே.வி.பி. யை நசுக்குவதன் பெயரில் தீவின் தென் பகுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான ஒரு அடக்குமுறை அலையை கட்டவிழ்த்துவிட்டது. இந்த காலகட்டத்தில் பாதுகாப்புப் படைகளால் அல்லது அதனோடு இணைந்து செயற்படும் கொலைக் குழுக்களால் ஒரு மதிப்பீட்டின்படி 60,000 இளைஞர்கள் "காணாமல் போயுள்ளனர்" அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

2002ல் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முந்திய காலத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் சுற்றிவளைக்கப்பட்டு பல மாதங்களாக, இல்லையேல் வருடக்கணக்காக விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு, சில வழக்குகளில் மோசமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்த பின்னர், மீண்டும் பாதுகாப்புப் படைகளின் கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்டன. பல மாதங்களாக, இராணுவமும் மற்றும் அதனுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைக் குழுக்களும், புலிகளுக்கும், முன்னணி தமிழ் கூட்டமைப்பு புள்ளிகளுக்கும் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான ஆத்திரமூட்டல் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. மீண்டும் கடத்தல்களும் காணமல் போகும் சம்பவங்களும் மற்றும் முடிவில்லாத படுகொலைகளும் ஒவ்வொரு நாளும் வழமையானதாகின. இராஜபக்ஷ 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி எதிர்த்தாக்குதல்களை நடத்த இராணுவத்திற்குக் கட்டளையிட்டதோடு, இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு, சம்பூர், வாகரை போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டது.

புலிகளுக்கு எதிராக இராஜபக்ஷ நடத்துகின்ற யுத்தத்துடன், தமிழ் சிறுபான்மையினர், ஊடகங்கள் மற்றும் இராஜபக்ஷவின் அரசியல் எதிரிகளுக்கும் எதிராக இலக்குவைக்கப்பட்ட அதிகரித்துவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் இணைந்துகொண்டுள்ளன. தொடர்ந்துகொண்டிருக்கும் கடத்தல்களும் கொலைகளும், இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் கண்டன அலைக்களை தூண்டிவிட்டுள்ளன. 2006 ஆகஸ்ட் முற்பகுதியில், கிழக்கு இலங்கையில் மோதல் நடந்துகொண்டிருந்த போது, பிரான்ஸைத் தளமாகக் கொண்ட அக்ஷன் பாம் தொண்டு நிறுவனத்தின் 17 உள்ளூர் ஊழியர்கள், மூதூரில் அந்த அமைப்பு இயங்கிவந்த கட்டிடத்தில் மரணதண்டனை பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, தனது சொந்த விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், இந்தப் படுகொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என ஆகஸ்ட் 30 உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

முல்லிப்பொத்தானையில் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சோ.ச.க. ஆதரவாளர் சிவபிரகாசம் மறியதாசின் கொலையாளிகளை கண்டுபடித்து வழக்குத் தொடருமாறு சோ.ச.க. இலங்கியினுள்ளும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாகவும் அதனது சொந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது. அவர் இலங்கை இராணுவத்தால், பொலிசாரால் அல்லது அவர்களோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களால் கொல்லப்பட்டிருப்பதாகவே இதுவரைக் கிடைத்துள்ள ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த இரத்தம் தோய்ந்த அரசியல் கொலை தொடர்பாக பொலிஸ் இன்னமும் தக்க விசாரணையை முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் வசதியான ஒரு நேரத்திலேயே சேரசிங்க, செனவிரத்ன மற்றும் பிரியங்கரவும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் "ஒப்புதல் வாக்குமூலங்களும்" வெளிவந்துள்ளன. நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் விடுக்கப்படும் கோரிக்கைகளை திசைதிருப்புவதற்கு இராஜபக்ஷவும் இராணுவமும் அவநம்பிக்கையான நிலையில் உள்ளனர். ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையிலும் இதுவரை பொலிஸ் எவரையும் கைதுசெய்யவோ அல்லது எவர்மீதும் குற்றஞ்சாட்டவோ இல்லை.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்கள் உள்ளடங்கிய இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் அரசாங்கத்தின் அதிகரித்துவரும் அரச ஒடுக்குமுறையினை எதிர்க்குமாறு சோ.ச.க. அழைப்புவிடுக்கின்றது. நாம் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால அதிகாரங்கள் உட்பட அனைத்து ஜனநாயக விரோத நடமுறைகளும் நீக்கப்பட வேண்டுமெனவும் கோருகின்றோம்.

யுத்தத்திற்கும், சமூக சமத்துவமின்மைக்கும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான எந்தவொரு உண்மையான போராட்டத்திற்குமான ஆரம்பப் புள்ளி, அனத்துவிதமான பேரினவாதத்தையும் வகுப்புவாதத்தையும் நிராகரிப்பதாகும் --அது இலங்கை அரசாங்கத்தின் சிங்களப் பேரினவாதமானாலும் சரி அல்லது புலிகளின் தமிழ் பிரிவினைவாதமானாலும் சரி. தமது ஆட்சியை பேணிக்காப்பதன் பேரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இனவாதத்தை சுரண்டிக்கொள்ளும் பலவித ஆளும் தட்டுக்களில் உள்ளவர்களுக்கு நேர் எதிராக, அனைத்துத் தொழிலாளர்களும் பொது வர்க்க நலன்களையும் அபிலாஷைகளையும் பங்கிட்டுக்கொள்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளாத வரையிலும், தொழிலாளர் வர்க்கத்தால் முன்நோக்கி நகர முடியாது.

நிறுவனக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாகவும் சோசலிச அனைத்துலவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப சோ.ச.க. அழைப்புவிடுக்கின்றது. அத்தகைய ஒரு இயக்கம், ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தவரும் வடக்கு மற்றும் கிழ்க்கில் இருந்து அனைத்து பாதுகாப்புப் படைகளும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனக் கோர வேண்டும். அது தொழிலாளர்கள் விவசாயிகளின் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கப் போராடுவதோடு தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிக்கவும் போராட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும் எமது சர்வதேசக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வுகளையும் வேலைத்திட்டத்தையும் படிக்குமாறும், அதன் வழியில் இணைந்துகொள்ள முடிவெடுக்குமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது.