World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP demands urgent inquiry into disappearance of party member

கட்சியின் உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவசர விசாரணை நடத்துமாறு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது

Statement by the Socialist Equality Party (Sri Lanka)
26 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் கடந்த வியாழன் மாலை முதல் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அரசாங்கம் அவசர விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கோருகிறது. இந்த இருவரும் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள தீவுகளைச் சேர்ந்தவர்கள். இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் இந்த சம்பவத்திற்கு இந்தத் தீவுகளைக் கட்டுப்படுத்தும் கடற்படையினரே பொறுப்பாளிகள் என சுட்டிக்காட்டுகின்றன.

சோ.ச.க. இந்த இருவரின் பாதுகாப்பு தொடர்பாக ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதோடு அவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்புச் சொல்ல வேண்டும் எனக் கூறிவைக்கின்றது. ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்ததில் இருந்து கடந்த ஆண்டு பூராவும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தாலும் அதோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைகளாலும் நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு, "காணாமல் போயுள்ளனர்" அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

27 வயதான விமலேஸ்வரன் 1998ல் இருந்தே சோ.ச.க. உறுப்பினராக இருந்து வருகின்றார். அவர் யுத்தத்தை அரசியல் ரீதியில் எதிர்ப்பவராகவும் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பவருமாகவே பிரதேசத்தில் பிரசித்திபெற்றிருந்தார். அவருக்கு மூன்று வயதில் ஒரு பிள்ளை இருப்பதோடு இப்போது அவரது மனைவி சிவாஜினி கர்ப்பினியாக உள்ளார். 24 வயதான மதிவதனன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

மார்ச் 22, ஊர்காவற்துறை தீவில் மீன்பிடித்து முடிந்த பின்னர், விமலேஸ்வரன் தனது நண்பரின் மோட்டார் சைக்களில் ஏறி அருகில் உள்ள புங்குடுதீவில் உள்ள மடத்துவெளி என்ற கிராமத்திற்குச் சென்றார். அவர் தனது வசிப்பிடத்தை மடத்துவெளிக்கு மாற்றுவதற்காக அங்கு அண்மையில் ஒரு வீட்டை வாடகைக்கு பெற்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த சில ஆடைகளை எடுத்து வருவதற்காகவே அவர் அங்கு சென்றார். ஊர்காவற்துறையும் புங்குடுதீவும் ஆழமில்லாத கடற்பரப்பிற்கு குறுக்காக 3.8 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

விமலேஸ்வரனும் மதிவதனனும் ஊர்காவற்துறை எல்லையில் உள்ள வீதித்தடையை சுமார் மாலை 5.30 மணியளவில் கடந்துள்ளனர். இந்த இருவரும் மடத்துவெளியில் உள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்ததை அங்குள்ளவர்கள் கண்டுள்ளனர். தனது உறவினரான அருள் மற்றும் நண்பனான குமரன் ஆகியோருடன் விமலேஸ்வரன் உரையாடியிருந்ததோடு, இருவரும் ஊர்காவற்துறை நோக்கி 6.30 மணியளவில் திரும்பி சென்றுகொண்டிருப்பதையும் அவர்கள் கண்டுள்ளனர். இந்த இருவரும் வீடு வந்து சேராததோடு, NPMR 2098 என்ற இலக்கத்தையுடைய மதிவதனனின் பஜாஜ் மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

இவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக வெள்ளிக்கிழமை அறிந்துகொண்ட உடனேயே, சோ.ச.க. புங்குடுதீவில் உள்ள கோடைம்பர கடற்படை முகாமிலும் மற்றும் ஊர்காவற்துறை தீவில் உள்ள வேலனை கடற்படை முகாமிலும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்தது. புங்குடுதீவில் உள்ள கட்டளை அதிகாரி ஹேமந்த பீரிஸ் மற்றும் வேலனையில் உள்ள கட்டளை அதிகாரி சில்வா ஆகியோர் விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கைதுசெய்யவில்லை என மறுத்ததோடு அவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் பிரகடனம் செய்தனர்.

சனிக்கிழமை, இந்த இருவரும் இருக்கும் இடம்பற்றி அவசர விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சிடம் சோ.ச.க. உத்தியோகபூர்வமாக கோரியது. வடக்கு நகரான யாழ்ப்பாணத்தில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

சனிக்கிழமை காலையில், கோடைம்பர முகாமில் உள்ள கட்டளை அதிகாரியான பீரிஸ், விமலேஸ்வரனின் மனைவியை வந்து சந்திக்கச் சொல்லுமாறு அருள் என்பவரைக் கேட்டுக்கொண்டார். சிவாஜினியும் அவரது தந்தையும் மற்றும் சோ.ச.க. உறுப்பினர்களும் முகாமின் வாசலுக்கு சென்றபோது, அந்த இருவரையும் கடற்படை கைதுசெய்யவில்லை என அங்கிருந்த ஒரு கடற்படை சிப்பாய் கோபத்துடன் கூறினார்.

இந்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என அந்த சிப்பாய் குற்றஞ்சாட்டியதோடு அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலான வன்னிக்கு -- கடற்படை ரோந்து செல்லும் திறந்தவெளி கடற்பரப்பிற்கு குறுக்காக-- சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார். தமிழரான அந்த கடற்படை சிப்பாய், விமலேஸ்வரன் யார் என்பதையிட்டு அறிந்திருந்தார். அவர் விமலேஸ்வரனின் செல்லப்பெயரான ஜீவா என்ற பெயரை பயன்படுத்தியதோடு, மதிவதனனைப் பற்றியும் அவரது குடும்பத்தின் ஏனையவர்களைப் பற்றியும் தனக்குத் தெரியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடற்படை சிப்பாயை உள்ளே அழைத்த பின்னர், கட்டளைத் தளபதி பீரிஸ் வெளியே வந்தார். கடற்படை விமலேஸ்வரனையும் அவரது நண்பனையும் கைதுசெய்யவில்லை என அவர் அங்கு வந்திருந்தவர்களிடம் கூறிய போதிலும், அவர் ஏன் விமலேஸ்வரனின் மனைவியை முகாமுக்கு வரச்சொன்னார் என்பதை தெளிவுபடுத்தத் தவறிவிட்டார். அவர் சிப்பாயின் குற்றச்சாட்டுக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.

இந்த சந்திப்பின்போது நடந்தவை மிகவும் ஆபத்தான நிலையைக் குறிக்கின்றன. விமலேஸ்வரன் ஒரு புலி உறுப்பினர் என்ற கூற்று பொய்யானதோடு இராணுவம் தனது ஒடுக்குமுறை வழிமுறைகளை நியாயப்படுத்திக்கொள்ள பயன்படுத்தும் அவதூறுமாகும். புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை சோ.ச.க. அரசியல் ரீதியில் எதிர்ப்பதால், குறிப்பாக ஊர்காவற்துறை தீவில் அது நன்கு பிரசித்திபெற்றதாகும். விமலேஸ்வரன் தனது இளமைக்காலம் முழுவதும் சோ.ச.க. அங்கத்தவராக இருந்து வந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை, சோ.ச.க. தகவல்களைப் பெறுவதற்காக மீண்டும் கட்டளை அதிகாரி பீரிஸை அனுகியது. மாலை 6.30 மணியளவில் விமலேஸ்வரனும் நண்பரும் வீதித்தடையைக் கடந்துசென்றுள்ளதாக பாலத்தின் புங்குடுதீவு பகுதியில் உள்ள பதிவுப் புத்தகம் காட்டுவதாகத் தெரிவித்தார். தனக்குத் தெரியாமால் எவரையும் கைது செய்வது சாத்தியமற்றது என பீரிஸ் வலியுறுத்தினார். வேலைனை முகாமில் உள்ள கட்டளை அதிகாரி சில்வா, ஊர்காவற்துறைப் பகுதியிலும் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அத்தகைய மறுப்புக்களில் எவையும் நம்பிக்கைக்குரியவை அல்ல. குற்றங்காணுவதற்கு பலமான ஆதாரங்கள் இருந்தாலும் கூட, கடத்தல்கள், காணாமல் போன சம்பவங்கள் மற்றும் படுகொலைகளில் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என பாதுகாப்புப் படைகள் வழமை போல் பொறுப்பேற்க மறுக்கின்றன. கடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், இதுவரையும் எந்தவொரு இராணுவச் சிப்பாயும் குற்றஞ்சாட்டப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வீதித்தடைகளில் தனிநபர்களைக் கைதுசெய்வது பொதுவான சம்பவமாகி வருகின்றது.

யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில், கடற்படை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகில் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்துள்ள ஊர்காவற்துறை மற்றும் அயலில் உள்ள தீவுகளிலும் தனது கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது. கடற்படை தனது பிரதான தளங்களைச் சூழ பல உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்திருப்பதோடு பிரதேசத்தில் உள்ள மீனவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுக்குள்ளாக்கி, புலிகளின் ஊடுருவலுக்கு உதவுவதாக அவர்களைக் குற்றஞ்சாட்டுவதோடு கடலில் வைத்து அவர்களைத் தாக்கியுமுள்ளது. கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பல மீனவர்களின் ஜீவனோபாயத்தை சீரழித்துள்ளது.

உள்ளூர் தமிழ் மக்களை அச்சுறுத்துவதற்காக கடற்படை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி) நேரடிக் கூட்டுழைப்புடன் செயற்படுகிறது. ஈ.பி.டி.பி. இராஜபக்ஷவின் கூட்டரசாங்கத்தில் பங்காளியாக இருந்த போதிலும், ஆயுதம் தரித்த துணைப்படையாகவும் இயங்குவதோடு, ஊர்காவற்துறையிலும் மற்றும் அருகில் உள்ள தீவுகளிலும் தனது அதிகாரத்தை அமுல்படுத்திக்கொண்டிருக்கின்றது.

ஊர்காவற்துறை தீவில் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் அதே போல் புலிகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதில் சோ.ச.க. க்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்ற வேண்டும் எனக் கோரும், மற்றும் தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்தை கட்டியெழுப்பும் போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசைக் கட்டியெழுப்ப தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்த போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும்.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக பேசுவதனாலும் மற்றும் கொழும்பு அரசாங்கத்தின் சிங்களப் பேரினவாதத்திற்கும் மற்றும் புலிகளின் தமிழ் பிரிவினைவாதத்திற்கும், எல்லா வடிவிலுமான இனவாத அரசியலையும் எதிர்ப்பதனாலும் சோ.ச.க. இரு சாராரினதும் இலக்காகியுள்ளது. 2000 மார்ச்சில், மீன்பிடிக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக கூட்டப்பட்டிருந்த கூட்டத்தை பகிஷ்கரித்த ஊர்காவற்துறையில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்களை ஈ.பி.டி.பி. அரசியல்வாதிகளும் அவர்களின் ஆயுதம் ஏந்திய குண்டர்களும் அச்சுறுத்தி சரீர ரீதியில் தாக்கினர்.

2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், புலிகள் அந்த பிரதேசத்தில் தனது அரசியல் ஆதிக்கத்தை ஸ்தாபிப்பதற்குத் தடையாகக் கருதிய சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களை விடுத்தனர். 2002 அக்டோபரில், சோ.ச.க. அங்கத்தவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அம்பிகைநகர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிதியை புலிகள் அபகரிக்க முயற்சித்த நிலையில், சோ.ச.க. உறுப்பினர் என். கோடீஸ்வரனை புலிகள் கொல்ல முயற்சித்தனர். கடந்த ஆண்டு நாடு மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கிய அளவில், ஈ.பி.டி.பி. மற்றும் அதன் குண்டர்களும் கடற்படையின் பாதுகாப்புடன் ஊர்காவற்துறைக்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.

யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவது சம்பந்தமாக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன அபிவிருத்திக்கு மத்தியில், அரசாங்கமும் இராணுவமும் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மிகவும் இரக்கமற்ற வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7, மூதூர் பிரதேசத்தில் நடந்த கடுமையான மோதல்களின் மத்தியில், திருகோணமலையில் முல்லிப்பொத்தானையில் சோ.ச.க. ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, இராணுவம் அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களே இந்தக் கொலைக்கு பொறுப்பாளிகள் எனத் தோன்றுகிறது. அவரது கொலையை அடுத்து, மரியதாஸ் ஒரு புலி ஆதரவாளர் என்ற பொய்யை உள்ளூர் இராணுவம் பரப்பிவிட்டது.

இந்த சூழ்நிலையில், விமலேஸ்வரனும் அவரது நண்பரும் கானாமல் போயுள்ளமை கடுமையான பிரச்சினைக்குரியதாகும். தனது பலமான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக எந்தவொரு பொருத்தமான ஆதாரத்தையும் வழங்க இராணுவம் மறுக்கின்றமை, இந்த சம்பவத்தில் அது தொடர்புபட்டுள்ளதற்கான சூழ்நிலை ஆதாரத்தை வழங்குகிறது. இந்த இருவரையும் கண்டுபிடித்து உடனடியாக விடுதலை செய்வதற்கு, அவசரமான மற்றும் தக்க விசாரணை ஒன்றை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தைக் கோருமாறு இலங்கையில் உள்ள தனது ஆதரவாளர்களிடமும் மற்றும் உலக சோசலிச வலைத்தள வாசகர்களிடமும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது.

கடிதங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529

N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவைக்கவும்.

Socialist Equality Party, P.O. Box 1270, Colombo, Sri Lanka. Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவுக்கு கடிதங்களை அனுப்ப தயவுசெய்து இந்த ஒன்லைன் படிவத்தைப் பயன்படுத்தவும் online form