World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After first round of French election: the contest for the "centre"

பிரெஞ்சு தேர்தலில் முதல் சுற்றுக்குப் பின்: "மையத்திற்கான" போட்டி

By Peter Schwarz
26 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

மே 6ம் தேதி பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு கடினமான தேர்வை செய்ய வேண்டிய நிலையை எதிர் கொண்டுள்ளனர். சோசலிச கட்சியின் வேட்பாளரை அவர்கள் நிராகரித்தபோதும் மற்றும் வெறுத்தபோதும், கோலிச UMP -ன் வலதுசாரி வேட்பாளர் நிக்கோலா சார்க்கோசி வெற்றிபெறுவதை தடுக்கும்பொருட்டு, பலர் செகோலென் ரோயாலுக்கு வாக்களிப்பர்.

சார்க்கோசி தோற்றுவிக்கக்கூடிய ஆபத்து பற்றிச் சந்தேகம் ஏதும் கிடையாது. பாரிஸ் புறநகர் Neuilly யின் உயர் வர்க்க மேயர், செல்வந்தர்கள் பங்குச் சந்தை மற்றும் பெருவணிகத்தின் விருப்பத்திற்குரிய வேட்பாளர் ஆவார். தீவிர வலது தேசிய முன்னணியின் (FN) திட்டங்களில் சிலவற்றை இவர் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், கடுமையான சட்டம், ஒழுங்கு அரசியல் வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்துள்ளார். இவர் ஜனாதிபதியாக பதவியேற்றால், வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை குறைத்தல், புலம்பெயர்தலை கட்டுப்படுத்தல் மற்றும் செல்வந்தர்களுக்கு இன்னமும் குறைந்த வரிவிதிப்பு ஆகியவை இவருடைய முதல் நடவடிக்கைகளாக இருக்கும். இவருடைய அரசியலில் பலமான போனப்பார்ட்டிச கூறுபாடுகள் உள்ளன.

ஆனால் பலரும் நன்கு அறிந்துள்ள வகையில், ரோயால் ஒன்றும் உண்மையான மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இவ்வம்மையாருடைய திட்டம் சார்க்கோசியின் திட்டத்தைத்தான் கணிசமாக ஒத்திருக்கிறது; தேர்தல் பிரசாரத்தில் இவர் தொடர்ந்து தன்னுடைய போட்டியாளரின் வலதுசாரி கொள்கைகளை எடுத்துக் கொண்டார். ரோயால் பெருவணிகத்தின் நலன்களின் நிபந்தனையற்ற ஆதரவாளர் ஆவார்.

இரண்டாம் சுற்றுத் தேர்தலில் ரோயால் வெற்றி பெற்றால், பிற்காலத்தில் வலதுசாரி அதிகாரத்திற்கு திரும்புவதற்கான முன்னிபந்தனைகளைத்தான் அவர் உருவாக்குவார். பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் அனுபவங்களில் இருந்து இது மிகவும் தெளிவாகும்; அங்கெல்லாம் சமூகஜனநாயக அரசாங்கத்தின் வலதுசாரிக் கொள்கைகள் அனைத்தும் மிகவும் பிற்போக்கான சக்திகளுக்கு வலுக் கொடுத்துள்ளன. பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான லியோனல் ஜோஸ்பன் அரசாங்கம் தங்களை துன்பகரமாக செல்வாக்கிழக்கவைத்து, 1997ல் பதவியைவிட்டு துரத்தப்பட்டபின், 2002ல் கோலிச அரசாங்கம் மீண்டும் ஆரவாரமாக பதவிக்கு வருவதை அனுமதித்தது.

செகோலென் ரோயால் தேர்தல் முதல் சுற்று முடிவுகளுக்கு விடையிறுக்கும் வகையில் இன்னும் கூடுதலான வகையில் வலதிற்கு மாறியதைத்தான் கீழ்க்கண்ட சொற்கள் மூலம் வெளிப்படுத்தினார்: "இப்பொழுது நான் சோசலிஸ்ட் வாக்காளர்களுக்கு மட்டும் பிரத்தியேக வேட்பாளராக இருக்கவில்லை." என்று முடிவுகள் தெரிந்துவுடனேயே வலதுசாரி முதலாளித்துவ UDF ற்கு அவர் முறையிட்டார். UDF ன் வேட்பாளரான பிரான்சுவா பேய்ரூ தன்னை மையவாதி என விவரித்துக் கொள்ளுகிறார்; முதல் சுற்று முடிந்தபின் வாக்காளர்களின் 18.6 சதவிகித ஆதரவில் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பசுமைக் கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதியும் முன்னாள் 1968-ன் தீவிரப்போக்காளருமான Daniel Cohn Bendit, இப்பொழுது ஆசிரியர் குழு அலுவலகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில், ரோயாலின் இடதுசாரி பிரச்சாரம் "வெற்றிக்கு வாய்ப்பில்லாதது", வரவிருக்கும் வாக்களிப்பில் அவருடைய வாய்ப்புக்களை மூழ்கடித்துவிடும் என்ற தகவலுடன் சுற்றி வருகிறார். "மரபார்ந்த சோசலிஸ்ட் துருப்புச்சீட்டை வைத்து ரோயால் முயற்சித்தாலும் அவர் தோல்வியுறுவார்; ஏனெனில் பிரான்ஸ் வலதிற்கு மாறிவிட்டது" என்று அவர் பிரிட்டிஷ் கார்டியன் நாளேட்டிடம் கூறினார்.

இதே பல்லவிதான் அலுத்துப் போகும் வரை அனைத்துப் புறங்களில் இருந்தும் வெளிவந்துள்ளது. சார்க்கோசியை நிறுத்தும்பொருட்டு ரோயாலுக்கு அவர்கள் வாக்களித்தாக வேண்டும் என்ற வாதம் பெரிதும் வாக்காளரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது; அதேபோல் ரோயால் "மையத்தில் இருந்து வாக்குகள் பெற வேண்டும் என்றால்" அவர் வலதிற்கு திரும்பியாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வேறுவிதமாக கூறினால், ரோயால் வலதுசாரி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுவது என்பது சார்க்கோசி ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கு கொடுத்தாக வேண்டிய விலை என்று பொருள் ஆகும்.

இத்தகைய வாத வழிமுறை முற்றிலும் தவறானது ஆகும். தேர்தல் முடிவை நிர்ணயிப்பதாக கூறப்படும் "மையம்" சமூக உண்மையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிராத ஒரு அருவக் கட்டமைவு ஆகும். ஒரே மாதிரி தன்மையுடையது என்பதைத்தவிர மத்தியதர வர்க்கங்கள் வேறு எப்படியும் இருக்கலாம். அவர்களும் சமுதாயம் ஒட்டுமொத்தத்தையும் போல ஆழ்ந்து பிளவுற்று உள்ளனர். மத்தியதர வகுப்பின் சில உறுப்பினர்கள் செல்வந்தர்களாகி ஆளும் உயரடுக்கின் வரிசைக்குள் உயர்ந்துள்ளனர் என்பது உண்மையானாலும், இடைவிடாமல் பொதுநல, சமூக செலவின வெட்டுக்கள் என்ற சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் தொழிலாள வர்க்கத்தை போன்ற வகையில்தான் பிரச்சினைகளையும் தேவைகளையும் கொண்டுள்ளனர்.

மில்லியன் கணக்கான பல்கலைக்கழக பட்டதாரிகள், சுய வேலை பார்ப்போர், சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுடைய சமூக நிலைமை ஒன்றும் சிறந்ததாக இல்லை; சொல்லப்போனால் பெரும்பாலான தொழிலாளர்களையும்விட மோசமாகத்தான் உள்ளது. இப்படிப்பட்ட நிலை, கடந்த ஆண்டில் முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) எதிரான வெகுஜன எதிர்ப்புக்களில் வலுவாக உறுதிசெய்யப்பட்டது. பள்ளிகள், பல்கலைக் கழக பட்டதாரிகளை ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பாக மாற்றும் நோக்கத்தை கொண்ட ஒரு சட்டத்திற்கான வெகுஜன எதிர்ப்பு மிகப் பரந்த தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளின் ஆதரவை பெற்றிருந்தது.

Cohn Bendit எதிர்க் கருத்தை கூறினாலும், பிரெஞ்சு மக்களின் பரந்த வெகுஜனம் சமீப ஆண்டுகளில் இடதிற்கு நகர்ந்துள்ளது என்பதுதான் உண்மை. CPE க்கு எதிரான எதிர்ப்பு மற்றும் 2005ல் ஐரோப்பிய அரசியலமைப்பை பிரெஞ்சு வாக்காளர்கள் நிராகரித்மை மற்றும் ஏராளமான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் என்று 12 ஆண்டுகளாக பலமுறை நாட்டை முடக்கம் செய்த நிகழ்வுகளில் இருந்து இது மிகவும் தெளிவாகத் தெரியும். தேர்தல் முதல் சுற்றில் மிக அதிக அளவு வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ததும் மிகப் பெரிய அளவில் 85 சதவிகிதமாக அது இருந்தது என்பதும் இதுகாறும் ஒதுங்கி இருந்த ஒடுக்கப்பட்ட சமூக வர்க்கங்களிடையே பெருகிய அரசியல் நனவின் வெளிப்பாடு ஆகும்.

Cohn Bendit குறிக்கும் "பிரான்ஸ்" செல்வந்தர்கள் மற்றும் சொத்துடையவர்களின் பிரான்ஸ் ஆகும்; குறிப்பாக பிரான்சில் இந்த அடுக்கிற்கு "போபோ (Bobo)", பூர்ஷ்வா பொஹீமியர்கள் என்று பெயராகும். அவர்கள் பெருநகரங்களில், புதுப்பிக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர்கள் பகுதியில் வசித்து, சிறப்பான உடை உடுத்தி, பிரத்தியேகமான உணவு வகைகளை உட்கொண்டு, நல்ல கல்வியறிவு கொண்டு, தேர்ந்த நயமான ஆர்வத்தைக் கொண்டு அவர்களுடைய இளவயதில் தீவிர இடது தீவிரப்போக்கு கருத்துக்களையும் எப்போதாவது கொண்டவர்கள் இல்லை. இக்கூறுபாடுகள்தான் மிகப் பெரிய அளவில், தற்செயலாக, Cohn Bendit ன் நெருக்கமான நண்பருக்கு, பேய்ரூவிற்கு வாக்களித்தன.

தன்னுடைய பங்கிற்கு பேய்ரூ, சமூகம் பெருகிய முறையில் துருவமுனைப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள மற்றும் கற்பனையில் கடந்த காலத்துக்கு ஏங்கித்தவிக்கின்ற, பழமைவாத, கிராமப்புற அடுக்குகள் மேலாதிக்கம் செய்யும் வாக்காளர்களுக்கு முறையிட்டார். அவருடைய திட்டம் பிரமை மற்றும் ஏமாற்றுத்தனம் ஆகியவற்றின் கலவையாகும். கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் பொது அதிகாரங்களை செலுத்திய இந்த வலதுசாரி முதலாளித்துவ பிழைப்புவாதி, "அமைப்புமுறைக்கு" எதிரான புரட்சிவாதி என்று காட்டிக் கொள்ளுகிறார். சமூக துருவமுனைப்படல் முன்பு இருந்திரா அளவிற்கு தெளிவாய் தோன்றுகிறபோது, வலதிற்கும் இடதிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இல்லாதாக்கப்பட வேண்டும் என்று இவர் உபதேசிக்கிறார்: தன்னுடைய பிரசாரத்தின் மையப் பகுதியாக அரச செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறிய இவர் அதே நேரத்தில் சமூக முன்னேற்றங்களுக்கு உறுதிமொழி கொடுத்தார்.

பேய்ரூ தன்னுடன் கொண்டிருக்கும் அனைத்தும் வெற்றுத்தனமும் ஏமாற்றுத்தனமும் ஆகும். ஒப்புமையில் இவர் தேர்தலில் பெற்ற நல்ல முடிவுகள் ஒரு கணநேர உணர்வின் வெளிப்பாடு ஆகும். சமூக அழுத்தங்களை சார்க்கோசி அதிகப்படுத்தக்கூடும் என்று அஞ்சியவர்கள், அதே நேரத்தில் சோசலிஸ்ட் கட்சிக்கு எத்தகைய மாற்றீடும் இல்லை என்ற ஏமாற்றத்தில் உள்ள அனைவரிடமும் இருந்து ஆதரவை வென்றெடுக்க அவரால் முடிந்தது. பேய்ரூவின் தேர்தல் முடிவுகளை உறுதியான "மைய அரசியலின்" வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளுவது முற்றிலும் தவறாகிவிடும். முதல் சுற்று வாக்களிப்பிற்கு முன் நிகழ்ந்த கருத்துக் கணிப்புக்கள் மிகவும் முடிவற்ற தன்மையைத்தான் பிரதிபலித்தன; பலவும் UDF வேட்பாளர்களுக்கு கடைசி நேரத்தில்தான் வாக்குகள் போட இருப்பதாகக் கூறின.

1934ம் ஆண்டு பிரான்சின் மத்தியதர வர்க்கத்தை விளக்கும் வகையில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய சொற்கள் இன்றளவும் பொருந்துகின்றன: "தன்னுடைய பொருளாதார நிலைமையை ஒட்டி, குட்டி முதலாளித்துவம் தனக்கென சொந்தமாய் ஒரு கொள்கையை கொள்ள முடியாது. அது எப்பொழுதும் முதலாளித்துவத்திற்கும் தொழிலாளிகளுக்கும் இடைய ஊசலாடும். அதன் உயர்மட்டபிரிவு அதை வலதிற்கு தள்ளும்; ஒடுக்கப்பட்டு, சுரண்டப்படும், அதன் கீழ்ப் பிரிவு, சில குறிப்பிட்ட சூழ்நிலையில் தீவிர இடதிற்கு திரும்பும் திறனை உடையது."

ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்பு ஒரு புதிய கட்சியை தோற்றுவிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள பேய்ரூ, இரண்டாம் சுற்றில் அதிக வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய வேட்பாளருக்கு ஆதரவு தருவார்; அத்தகையவர் இவருக்கு அதிகமான மந்திரி பதவிகளை கொடுக்க உறுதியும் தரவேண்டும்; ஒருவேளை இது சார்க்கோசியாக இருக்கக்கூடும். இதற்கிடையில் ரோயால் பேய்ரூவிடம் நெருக்கம் கொள்ளுகிறார்; தீவிர இடது வேட்பாளர்கள், Buffet, Laguiller, Bsancenot ஆகியோரும் கணிக்கத்தக்க வகையில் ரோயாலுக்கு ஆதரவைத் தருவர். இது பேய்ரூ ஆதரவாளர்களில் - அல்லது இச்சுற்றில் தோற்றாலும் 3.8 மில்லியன் வாக்குகளை பெற முடிந்த, தேசிய முன்னணி வேட்பாளர் Jean Marie le Pen, ஆதரவாளர்களில் ஊசலாடுவோரை சார்க்கோசி முகாமிற்கு ஓட்டிச்செல்ல உதவும்.

தொழிலாள வர்க்கம் மத்தியதர வர்க்கத்தின் கீழ் அடுக்குகளின் ஆதரவை ஒரு உறுதியான அரசியல் மாற்றீட்டை கொண்டால்தான் பெறமுடியும். "தொழிலாள வர்க்கத்திற்கும் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையே உண்மையான கூட்டு என்பது பாராளுமன்ற புள்ளி விவரம் அல்ல, மாறாக புரட்சிகர இயக்கவியலாகும்" என்று ட்ரொட்ஸ்கி 1934ல் எழுதினார். "இக்கூட்டு கட்டாயம் தோற்றுவிக்கப்பட்டு போராடுவதற்காக இணைக்கப்பட வேண்டும்."

அத்தகைய போக்கிற்கு ரோயல் உறுதியான எதிர்ப்பைத்தான் கொண்டுள்ளார். தன்னுடைய பங்கிற்கு சார்க்கோசி தன்னுடைய அரசியல் போக்கை தொடர்வதற்கு நலன் கிடைக்கும் வகையில் தன்னம்பிக்கையையும், ஆக்கிரோஷத்தையும் கொண்டுளார். சார்க்கோசிக்கு சக்திமிக்க எதிர்ப்புக்கு தொழிலாள வர்க்கத்தின் இயக்கம்தான் தேவைப்படும்; அந்த இயக்கம் சிறிதும் சமரசமற்ற தன்மையையும் ஆற்றலையும் இணைத்துக் கொண்டு அதன் சொந்த நலன்களை பின்பற்றும். பாராளுமன்ற தந்திரவகைகளை எதிர்பார்க்காமல், சமூக நெருக்கடிக்கு தீர்வைக் காண விரும்புகின்ற மத்தியதர வர்க்கத்தின் ஊசலாடும் தட்டுக்களை வெல்வதற்கு இதுதான் ஒரே வழி.

இப்பணி மே 6ம் தேதி வாக்குப் பெட்டி மூலம் தீர்வு காணப்பட முடியாதது ஆகும். அதற்கு ஒரு புதிய அடிப்படையிலான அரசியல் நோக்கு நிலையும், புதிய அரசியல் கட்சியை கட்டியமைத்தலும் தேவைப்படுகிறது. சார்க்கோசி, ரோயால் எவர் வெற்றி பெற்றாலும், தொழிலாள வர்க்கம் வன்முறைப் போராட்டங்களுக்கு கட்டாயம் தயாரிக்க வேண்டும். அதற்கு ஓர் அரசியல் ஐந்தொகையை வரைவது முக்கியமாகும்.

சமீபத்திய தேர்தலில் முக்கிய விளைவுகளுள் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தவறாக "தீவிர இடது" என்று விவரிக்கப்படும் அனைத்து அமைப்புக்களுக்கும் இருந்த ஆதரவு சரிந்ததாகும்.

Marie George Buffet க்கு கிடைத்த 1.9 சதவிகித வாக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறையில் மெய்யாய் பொறிந்துவிட்டது என்பதை சமிக்கை காட்டுகிறது; இரண்டாம் உலகப் போருக்கு பின் இது பிரான்சில் பெரிய கட்சியாக இருந்தது. 1981ல்கூட கட்சி சரிவுற்றிருந்தாலும் CP இன் வேட்பாளர் Georges Marchais 15.3 சதவிகித வாக்குகளை பெற முடிந்தது. 1.6 மில்லியன் வாக்குகளை 2002ல் பெற்ற LO இன் வேட்பாளரான Arlette Laguiller கடந்தவார இறுதித் தேர்தலில் 500,000 வாக்குகளைத்தான் பெற முடிந்தது.

இரண்டு அமைப்புக்களும் சோசலிஸ்ட் கட்சி சில சலுகைகளை கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டு, அது தன்னுடைய பழைய சமூக சீர்திருத்தவாத திட்டத்திற்கும் புத்துயுர் கொடுக்க வேண்டும் என்று விரும்பின. 1970களில் இருந்து சோசலிஸ்ட் கட்சிக்கு மிகவும் விசுவாசமான நட்புக் கட்சியாக CP விளங்கி வருகிறது. அநேகமாக ஒவ்வொரு சோசலிஸ்ட் தலைமையிலான அரசாங்கங்களிலும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது. Buffet, லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார். Laguiller க்கான ஒரு வாக்கு என்பது ரோயாலுக்கு ஒரு எச்சரிக்கை என்ற அடிப்படையில் LO பிரச்சாரம் இருந்தது; மேலும் ரோயால் தடையற்ற முறையில் வலதுசாரிக் கொள்கையை செயல்படுத்துவதற்கு தாராளமாய் ஆதரவு தந்துவிடவில்லை என்று குறிப்பையும் இது காட்டியது.

இந்த இரு அமைப்புக்களும் சோசலிஸ்ட் கட்சியின் நிழலில் இருந்து வெளிவர பிடிவாதமாகத் தவிர்ப்பதுதான் வாக்காளர்களில் அதிகப் பிரிவினர் இவர்களை ஒதுக்கி வைத்ததற்கு காரணமாகும். முடிவு தெரிந்த உடனேயே, இரு வேட்பாளர்களும் தடையற்ற ஆதரவை ரோயாலுக்கு அறிவித்தனர். Buffet கூறினார்: "இடது மற்றும் ஜனநாயகப்பற்றாளர்கள் ஆண்கள், பெண்கள் வேறுபாடின்றி, அனைவரும் செகோலென் ரோயலுக்கு மே 6 அன்று வாக்களித்து அவருக்கு பிரச்சாரம் செய்யுமாறு தயக்கமின்றிக் கேட்டுக் கொள்ளுகிறேன்." அதேவேளை Laguiller, "நான் ரோயாலுக்கு வாக்களிப்பேன் மற்றும் அனைவரையும் அதுபோல் செய்யுமாறு அழைப்பேன்" என்றார்.

புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (LCR) விதியை நிரூபிப்பதில் விதிவிலக்காகும். இதன் வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ 1.5 மில்லியன் வாக்குகளை, 2002ல் பெற்றதைவிட அதிகமாகப் பெற்றார். இவரும் ரோயாலுக்கு ஆதரவை கொடுக்கிறார்; அதே நேரத்தில் சார்க்கோசிக்கு எதிரான போராட்டம் வாக்குப் பெட்டி மற்றும் தெருக்களில் இணைந்து நடத்தப்பட வேண்டும் என்கிறார். சார்க்கோசிக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மே 1ல் நடத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் பற்றி பெசன்ஸநோ மெளனமாக இருக்கிறார். உண்மையில் சில காலமாகவே LCR ஆனது CP, LO இன்னும் பல எதிர்ப்பு இயக்கங்களுடன் இணைந்து ஒரு பரந்த இடது முன்னணி அமைக்க வேண்டும் என்று முற்பட்டுள்ளது; அது சாத்தியமான வருங்காலத்தில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு ஒரு கூட்டணிப் பங்காளியாக அமைய விருக்கும். LCR க்கு முன்மாதிரி Rifondazione Comunista என்னும் இத்தாலிய கட்சிதான்; அது ரோமனோ பிரோடி தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

சர்வதேச யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு புதிய அரசியல் நோக்குநிலை கட்டாயம் தொடங்கப்பட வேண்டும். உலக பொருளாதாரத்தின் அடிப்படை மாறுதல்களான, உற்பத்தி பூகோளமயமாக்கல் மற்றும் ஒவ்வொரு தேசியப் பொருளாதாரத்தின்மீதும் உலகப் பொருளாதாரத்தின் ஆதிக்கம் ஆகியவை மற்ற இடங்களைப் போலவே பிரான்சிலும் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சமரசக் கொள்கைகள் அடிப்படையிலான எந்தக் கொள்கைக்குமான அடிப்படையை அகற்றிவிட்டது. இன்று மிக அடிப்படையான சமூக வெற்றிகளின் பாதுகாப்பிற்கு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படுகிறது, அது முதலாளித்துவ அமைப்புக்க எதிரான போராட்டத்தில் தேசிய எல்லைகளை கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகிறது.

அத்தகைய சர்வதேச வேலைத்திட்டத்தை பிரதிபலிக்கும் ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் ஆகும். பிரெஞ்சுத் தேர்தலின் முடிவுகள் பிரான்சில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை கட்டியமைப்பதற்கு உகந்த நிலை கனிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் மிக அவசரமான அரசியற் பணியாக வெளிவந்துள்ளது இதுதான்.