World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Class issues in the French presidential election

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் வர்க்க பிரச்சினைகள்

By the Editorial Board
4 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

இந்த ஞாயிறன்று இரண்டாம், மற்றும் இறுதிச்சுற்றுக்கு செல்லும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலானது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் நலன்கள் மற்றும் போராட்டத்திற்கான வெளிப்பாடு எதையும் தடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் மேலாதிக்கம் செய்யப்பட்டுள்ளது.

செகோலென் ரோயால் மற்றும் நிக்கோலா சார்க்கோசிக்கு இடையேயான போட்டி இரு முற்றிலும் மாறுபட்ட அரசியல் மாதிரிகளுக்கு இடையேயான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்ற கூற்றின் பின்னணியில் இதுதான் உள்ளது. சார்க்கோசி எலிசே மாளிகையில் நுழைந்தால் பிரான்ஸ் உடனடியாக ஒரு பாசிச அதிகார கைப்பற்றுதலுக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல் இருக்கிறது என்பதால், ஒரு வெறித்தனமான சூழ்நிலை தட்டி எழுப்பப்படுகிறது. இந்த வெறித்தனம், தற்போதைய நிலைமைக்கான காரணங்கள் மீதான எந்தவித விமர்சன ரீதியான எதிரொலிப்பையும் தடுக்கும் நோக்கத்தையும் ரோயால் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளை மறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

உண்மையில், உழைக்கும் மக்கட்பகுதியினருக்கு இத்தேர்தலில் எவ்வித விருப்பமும் இல்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கத்தின் பல தசாப்தகால சரிவின் இறுதி முடிவைத்தான் இது குறிப்பிடுகிறது. ரோயாலுக்கும், சார்க்கோசிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தந்திரோபாயம் பற்றியவையே அன்றி, அடிப்படையானவை அல்ல. ஞாயிறன்று மாலை எவர் வெற்றிபெற்றாலும், தேர்தல் ஆழ்ந்த வலதுபுற பாய்தலை நோக்கித்தான் செல்லும், வெகு அருகாமையில் வன்முறை சார்ந்த வர்க்க மோதல்கள் வரும் என்று வருவதுரைக்கின்றன. அத்தகைய மோதல்களுக்கு தயார் செய்துகொள்ளுவதற்கு தொழிலாள வர்க்கம் தன்னுடைய சுயாதீனமான, சோசலிச அரசியலை வளர்த்துக் கொள்ளுவது ஒன்றுதான் வழியாகும்.

ரோயால் எதற்காக நிற்கிறார்?

பிரான்சிற்கு அரசியல் போக்கில் அடிப்படை மாற்றம் தேவை என பெருவணிகங்களின் தலைவர்கள் கூறுவதற்கு ரோயாலும் சார்க்கோசியும் முழு உடன்பாட்டை தெரிவித்துள்ளனர். இப்போக்கின் தேவை பற்றி அவர்களுக்கு இடையே எந்த பூசலும் கிடையாது; அதைச் செயல்படுத்துவதில் எவை சிறந்த வழிவகைகள் என்பது பற்றித்தான் பூசலாகும். ஜேர்மனிய செய்தி ஏடான Der Spiegel துல்லியமாக குறித்துள்ளபடி, "தங்களுடைய வேலைத்திட்டங்களில் பல முன்மொழிவுகளை அவர்கள் முன்வைக்கலாம்; ஆனால் இருவருமே 2007ல் பிரான்ஸ் என்பது நெருக்கடியில் உள்ள நாடு என்ற அடிப்படை பகுப்பாய்வில் ஒன்றுபட்டுத்தான் உள்ளனர்."

பொருளாதார வளர்ச்சி ஐரோப்பிய சராசரியைவிட குறைவாகும்; வெளிநாட்டு வணிக இருப்பு ஐந்தொகை 30 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறையை காட்டுகிறது; இது கடந்த 15 ஆண்டுகளில் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது; மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) அரசாங்கச் செலவினங்கள் ஐரோப்பாவிலேயே இரண்டாம் அதிக நிலையில் 54 சதவிகிதமாக உள்ளது; 12 குடிமக்களில் ஒருவர் பொதுத் துறையில் பணியாற்றுகிறார்.

அரசாங்க வரவு செலவுத் திட்டம் சீரமைக்கப்பட வேண்டும், பொதுத் துறைப் பணிகள் தகர்க்கப்பட வேண்டும், அரசாங்க உடமை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும், ஓய்வூதியங்கள், சமூக செலவினங்களில் வெட்டு வேண்டும், குறைவூதியம் கொண்ட துறை வளரவேண்டும் என்று பெருவணிகம் கோரி வருகிறது. ஆனால் அத்தகைய கொள்கைகளை செயல்படுத்துதல் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பலமுறையும் கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.

சில நேரங்களில் தொடர்ச்சியான பெரும் வேலைநிறுத்தங்கள் பல வாரங்கள் நாட்டை முடக்கியுள்ளன. அத்தகைய நிலைமையை 1996ல் அலன் யூப்பே எதிர்கொண்டார். 2002ல், அவருடைய சோசலிஸ்ட் கட்சி பின்தோன்றலும் பதவியில் தனக்கு முன்பு இருந்த மூன்று வலதுசாரிகளையும் விட அதிகமான தேசிய உடைமைகளை தனியார் மயமாக்கியவருமான லியோனல் ஜோஸ்பன், ஜனாதிபதி தேர்தலில் மிகத் தீவிர வலதுசாரி Jean Marie Le Pen இடம் தோற்று, பலத்த அடிவாங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பிரெஞ்சு மக்கள்தொகுதி முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் உரத்த எதிர்த்தக்குதல் முறையில் ஐரோப்பிய அரசியலமைப்பை நிராகரித்தது. மீண்டும் கடந்த ஆண்டில், மாணவர்களும் இளைய தொழிலாளர்களும் வெறுக்கப்பட்ட முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) எதிராக பல வாரங்கள் தெருக்களுக்கு வந்து பெரும் போராட்டங்களை நடத்தி அதை வாபஸ்வாங்குமாறு செய்தனர்.

இந்த நிலை ஏற்கத்தக்கது அல்ல, மாற்றப்பட வேண்டும் என்று சார்க்கோசியும் ரோயாலும் ஒப்புக் கொண்டுள்ளனர். மிரட்டுதல், அச்சுறுத்தி எதிர்கொள்ளுதல் என்ற வழிவகைகளை பயன்படுத்த வேண்டும் என்பதில் சார்க்கோசி தீவிரமாக உள்ளார். நாட்டுவெறி உணர்வை தூண்டியுள்ள அவர், குற்றங்கள் பற்றிய பிரச்சினையை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய "கடுமையான மனிதர்" தான் தீர்க்க முடியும் என்று காட்ட முற்பட்டுள்ளார். அத்தகைய மூலோபாயம் பெரும் ஆபத்து நிறைந்தது என்று ரோயால் கருதுகிறார். சார்க்கோசி அடையவிரும்பும் அதே இலக்குகளை மோதல் ஆபத்து இல்லாமல் அடையமுடியும் என்று அவர் உறுதிமொழி கொடுக்கிறார். "இணக்கமான" பிரான்ஸ், "சமூகப் பங்காளிகளின்" ஒத்துழைப்பை தளமாக கொண்ட பிரான்ஸ், அதாவது தொழிற்சங்கங்களும் வணிகர்கள் சங்கங்களும் இணைந்து இதைச் செயல்படுத்த முடியும் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். டோனி பிளேயர், ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ரோமனோ பிரோடி போன்றவர்களின் அரசியல் அடிச்சுவடுகளில் இவர் நடக்க முற்படுகிறார்; அவருடைய கருத்தின்படி இவர்கள் தங்களின் பழமைவாத கூட்டாளிகள் பலரையும்விட மிகத் திறமையான முறையில் "சீர்திருத்தவாதிகளாக" நிரூபிக்கப்பட்டுள்ளவர்கள்.

ரோயாலின் சமூக வனப்புரைகளின் பின் ஒரு சர்வாதிகார பிரான்ஸ் வெளிப்படும் காட்சி உள்ளது. உதாரணமாக இளங்குற்றவாளிகளை சிறையில் தள்ளுதல் அல்லது பயிற்சிக்காக இராணுவத்திடம் ஒப்படைத்தல் வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். குறைவூதியத்தில் சற்று கூடுதல், கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைகளுக்கு கூடுதல் பணம் என்னும் இவருடைய சில சமூக வாக்குறுதிகள் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான தூண்டிலில் இட்ட இரை ஆகும். 1981 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின் இவருடைய முன்மாதிரியும் ஆசானுமான பிரான்சுவா மித்திரோன் சர்வதேச நிதியச் சந்தைகள் கோரிய பொழுது, கெடுபிடிக் கொள்கைகளுக்கு ஆதரவாக அவர் அத்தகைய வாக்குறுதிகளை வடிகால் மூலம் வடியவிட்டதுபோல்தான் இவரும் விரைந்து வெளியேற்றுவார்.

பத்து நாட்களுக்கு முன் தேர்தலின் முதல் சுற்று முடிந்த பின் ரோயால் இன்னும் வலதிற்கு கூடுதலான முறையில் நகர்ந்துள்ளார். வலதுசாரி முதலாளித்துவ UDF உடன் கூட்டு அமைத்துக் கொள்ளுவதிலில் ஆர்வம் காட்டுகிறார்; இதன் தலைவர் பிரான்சுவா பேய்ரூ, ரோயால் தலைமையிலான அரசாங்கத்தில் பிரதம மந்திரி பதவியைப் பெறலாம். ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் தான் அனைத்து சமூக வர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டு, எந்தக் கட்சியிடத்தும் கட்டுப்பாடமல் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இது சமூக "இணக்கத்தை" இடையூறுக்கு உட்படுத்தும் அல்லது ஒழுங்கு நிலையில் இருந்து பிறழச்செய்யும் துணிவுடையவர்களுக்கு தெளிவான அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

வாக்குப் போடாமல் இருக்குமாறு லூ பென் அழைப்பு விடுவது ஏன்

தீவிர இடது என்று அழைக்கப்படும் குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் ரோயலுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மிகுந்த உற்சாகம் காட்டுகின்றனர்.

ஏப்ரல் 22 அன்று வாக்குச் சாவடிகள் மூடப் பெற்ற சில நிமிஷங்களிலேயே, LCR இன் ஒலிவியே பெசன்ஸநோ, LO வின் ஆர்லெட் லாகியே, Alter-mondialists அமைப்பின் ஜோசே போவே, CP யின் Marie George Buffe, பசுமைக் கட்சியின் Dominique Voynet ஆகியோர் இரண்டாம் சுற்றில் ரோயாலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரியதில் ஒன்றுபட்டு நின்றனர். ரோயாலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்குமுன் அவர்களில் எவரும் எத்தகைய கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை, எந்த வினாவையும் எழுப்பவும் இல்லை. மொத்தத்தில் அவர்கள் அனைவரும் சேர்ந்து பத்து சதவீதத்திற்கு மேலாக வாக்குகளை பெற்றுள்ளனர்; பெசன்ஸநோ மட்டும் ஒன்றரை மில்லியன் வாக்குகளை பெற்றார்; ஆயினும்கூட அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி ரோயாலை ஆதரிக்கின்றனர்.

"சார்க்கோசியை தவிர எவரும்" என்ற அவர்களுடைய கோஷம், ரோயாலை பின்பற்றாமல் சுயாதீன அரசியல் சார்பை பின்பற்ற விரும்புபவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தை கொண்டதாகும். பசுமைக் கட்சியின் Noel Mamère, இந்த விதத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்து ரோயாலின் தேர்தல் கூட்டத்தில் தான் பங்கு பெற்றதை நியாயப்படுத்தும் வகையில் கூறினார்: "சார்க்கோசிக்கும் லூ பென்னிற்கும் கூட்டணி வரலாம் என்ற நிலையில், வீடு தீப்பற்றி எரிகிறது. வினாக்களை எழுப்புதற்கு இது நேரமல்ல."

உண்மையில், ரோயாலுக்கான வெற்றியானது, லூ பென்னின் செல்வாக்கை கீழறுக்கும் என்ற வாதத்திற்கு எந்த அடிப்படையும் கிடையாது; தேசிய முன்னணியின் தலைவருக்கு இது நன்கு தெரியும். இரண்டாம் சுற்றில் எவருக்கும் வாக்குப் போடவேண்டாம் என்று இவர் அழைப்பு விடுத்துள்ளார்; தன்னுடைய வாக்காளர்கள் சார்க்கோசி முகாமுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்துள்ள இவருடைய அழைப்பு ரோயாலுக்கு மறைமுக ஆதரவு என்றுதான் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

பிரெஞ்சு வரலாற்றை பற்றி சிறிதேனும் அறிமுகம் உடையவர்களுக்கு சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோற்றுவித்த வலதுசாரிக் கொள்கைகளால் ஏற்பட்ட பரந்த அதிர்ச்சி, திகைப்பு இவற்றின் நேரடி விளைவுதான் தேசிய முன்னணியின் வளர்ச்சி என்பது தெரியும். தேசிய முன்னணியின் தற்போதைய வலுவான தொகுதிகள் முன்பு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு மையங்களாக இருந்தன.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் இழிவான ஆதரவுடன் சேர்த்து மித்திரோன் மற்றும் ஜோஸ்பனுடைய பிற்போக்குக் கொள்கைகள், லூ பென்னை சமூக பதட்டங்களை பயன்படுத்தி தன்னுடைய பிற்போக்குத்தன செயற்பட்டியலை முன்வைக்க அனுமதித்தன. தேசிய முன்னணிக் கொள்கையின் இதயத்தானத்தில் இருக்கும் புலம்பெயர்வோருக்கு எதிரான குறுகியவெறி பிடித்த கிளர்ச்சிகள், முதலில் ஸ்ராலினிசவாதிகளால் தொடக்கப்பட்டன. 1981ம் ஆண்டு, பிற்காலத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளராக ஆகவிருந்த Robert Hue, Montigny-les-Vitrolles என்னும் இடத்தில் ஒரு மொரோக்கோ புலம்பெயர் குடும்பத்தின் இல்லத்தை முற்றுகையிட்ட இனவெறிபிடித்த கும்பலுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

வாக்குப்பதிவில் Jean Marie Le Pen உடைய பங்கு, பிரான்சுவா மித்தரோன் ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே விரைவாக 15 சதவிகிதத்தை எட்டியது. 2002ல் லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தால் தொடரப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்ப்பு கொள்கைகள் நிகழ்ந்த காலத்தில், தன்னுடைய அரசியல் வாழ்வில் மிகப் பெரிய வெற்றியான ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றில் நுழைதல் என்பதை லூ பென் பதிவு செய்தார். ரோயால் ஜனாதிபதியாக பதவி ஏற்றால், தேசிய முன்னணிக்கு மீண்டும் ஒரு புதிய வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இக்கட்சி சோசலிஸ்ட் கட்சியின் காட்டிக்கொடுப்புக்களில் இருந்து வரும் தவிர்க்க முடியாத விளைவான மனச்சோர்வை பயன்படுத்தியே காலம் தள்ளுகிறது.

அரசியல் கணக்கை புரிந்து கொள்ளுபவர்கள் இதை அறிவர்; LCR, LO ன் கிலிபிடித்துப்போன சீர்திருத்தவாதிகள் மட்டுமே, தங்கள் அற்பக் கணக்கில் சோசலிச அரசாங்கத்தில் செல்வாக்குப் பெறலாம் என்ற நினைப்பில், ரோயால் மோசமானதை தவிர்ப்பார் என்று நம்பி அவ் அம்மையாருடைய சட்டை கொழுக்கியில் தொங்குகின்றனர்.

சார்க்கோசியை எது வலிமைப்படுத்தியது?

குறைந்த தீங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பேரழிவுக் கொள்கையின் விளைபொருளாக சார்க்கோசியும் உள்ளார்; இது தவிர்க்க முடியாமல் இன்னும் பெரிய தீங்கின் தோற்றத்தை விளைவிக்கும். பகட்டாரவாரமான, பேயாட்டம்போடும் பேரவாக் கொண்ட, மடத்தனமான இந்த பிழைப்புவாதி, தன்னுடைய வலிமையை, சுயாதீன தொழிலாள வர்க்கம் இல்லாமையில் இருந்து பெறுகிறார். ஒரு துணிவான அரசியற்தாக்குதல் அவரை உரிய தரத்தில் விரைந்து வெட்டிக் குறைத்துவிடும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர், அவர்கள் கூறிக் கொண்டவாறு, லூபென்னை தடுத்து நிறுத்தும் பொருட்டு, ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்ததன் மூலம்; லியோனல் ஜோஸ்பன் தோல்விக்கு பதில்கொடுத்தனர். இதன் மூலம், முதல் சுற்றில் வாக்காளர் தொகுப்பில் ஐந்தில் ஒருவர் ஆதரவைக் கூட பெற முடியாத முற்றிலும் செல்வாக்கிழந்துவிட்ட கோலிசவாதியான சிராக்கின் பெரும் வெற்றியில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர். பின்னர் தளர்ந்திருந்த வலதுசாரிகளை ஒன்றிணைத்து UMP ஐ அமைப்பதற்கு சிராக் நேரத்தையே செலவழிக்கவில்லை, அது இப்பொழுது சார்க்கோசியின் ஜனாதிபதி அபிலாசைகளை ஆரம்பித்து வைக்கும் தளமாக ஆகிவிட்டது.

இப்பொழுது பெசன்ஸநோவும் லாகியேயும் சார்க்கோசியை தடுக்கும்பொருட்டு, பிரெஞ்சு தொழிலாளர்கள் ரோயாலை, தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பின்னர் அவ்வம்மையாரை தெருக்களில் எதிர்க்கலாம் என்றும் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இது ஒரு பொய்யாகும். இன்று சார்க்கோசிக்கு எதிராக ரோயாலை ஆதரிப்பது தேவை என்றால், நாளை இதே தேவை ஆயிரம் மடங்கு பெரிதாகும்; ஏனெனில் வலதுசாரி அவரை பதவியில் இருந்து விலக்க தீவிரத் தாக்குதல்களால் அச்சுறுத்தும். ரோயாலுக்கு வாக்குப் பெட்டியில் ஆதரவு என்பது பின்னர் முற்றிலும் அடையாள எதிர்ப்பிற்கு மேலான எந்த தீவிர அணிதிரட்டுதலையும் தவிர்த்துவிடும்.

இந்த அரசியல் உண்மைக்கு நிறைவான நிரூபணம் இத்தாலியில் காணப்படலாம். அங்கு பிரெஞ்சு குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கிற்கு முன்மாதிரியாக நீண்ட காலம் பணியாற்றியிருந்த கட்சியான Rifondazione Communista, சில்வியோ பெர்லுஸ்கோனி, Gianfranco Fini ஆகியோரை சுற்றியிருக்கும் வலதுசாரி சக்திகளை தடுத்து நிறுத்தவதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஆதரவைக் கொடுத்தது. இன்று Rifondazione Comunista இத்தாலிய அரசாங்கத்தில் பங்கு பெற்றுள்ளது; உட்குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ சமூகநலச் செலவின வெட்டுக்கள், இத்தாலிய இராணுவத்தின் சர்வதேச நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு ஆதரவை கொடுக்கிறது; இத்தகைய கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் சாடுகிறது; இவை அனைத்தும் "வலதிற்கு எதிரான போராட்டம்" என்ற பெயரில் நடைபெறுகிறது.

Rifondazione உடைய கொள்கை தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் நிராயுதபாணியாக்கி பெரும் சோர்வையும் ஏற்படுத்திவிட்டது. தன்னுடைய பதவியில் இருந்து இருமுறை விரட்டியடிக்கப்பட்ட மனிதரும், ஒரு காலை சிறையில் வைத்துள்ளவருமான, சில்வியோ பெர்லுஸ்கோனி மீண்டும் மூன்றாம் முறை பதவியை ருசி காணக்கூடிய வாய்ப்பை பெறுவதற்கு இது உரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் புதிய பாசிச Gianfranco Fini இத்தாலிய அரசியில் முன்னுக்கு வரும் நபர் என்று கருதப்படுகிறார்.

சந்தர்ப்பவாதம் -- பிரெஞ்சு வரலாற்றின் படிப்பினைகள்

பிரான்சில் ஒரு பழமொழி உள்ளது: "Plus ca change, plus ca reste le meme -- பொருட்கள் அதிகமாக மாறும்போது, பொருட்கள் அப்படியேதான் இருக்கும்". இந்த வாதங்கள்தாம் இப்பொழுது குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்காளர்களால் ரோயாலுக்கு ஆதரவு திரட்ட முழக்கப்படுகின்றன; இவை ஒன்றும் புதிதானவை அல்ல.

1899ம் ஆண்டு, Dreyfus ன் வலதுசாரி மற்றும் செமிட்டிச எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குடியரசை பாதுகாத்தல் என்ற வாதத்தை பயன்படுத்தி அலெக்சான்டர் மில்லரென்ட் (Alexandre Millerand) பிரெஞ்சு அரசாங்கத்தில் நுழைந்த முதல் சோசலிஸ்ட் ஆனார். அந்த நேரத்தில் மில்லரென்டின் நடவடிக்கைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. ஒருவித அர்த்தத்தில் அதுதான் சந்தர்ப்பவாதத்தின் தொடக்க பாவம் ஆகும். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு சோசலிஸ்ட் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தில் சேர்ந்தார்.

புரட்சிகர மார்க்சிஸ்ட்டான ரோசா லுக்சம்பேர்க் மிகத் தெளிவான முறையில் "பிரான்சில் ஏற்பட்டுள்ள சோசலிஸ்ட் நெருக்கடி" என்ற தன்னுடைய கட்டுரையில் இந்த நடவடிக்கையின் விளைவுகளை விளக்கினார்: "குடியரசு ஆபத்தில் உள்ளது! எனவேதான் ஒரு சோசலிஸ்ட்டிற்கும் முதலாளித்துவ அரசாங்கத்தின் வணிக மந்திரியாக வருவது தேவை என்று ஆகியுள்ளது. குடியரசு ஆபத்திற்கு உட்பட்டுள்ளது! எனவேதான் மார்ட்டினிக் தீவிலும் சலோனிலும் வேலை நிறுத்தம் செய்த தெழிலாளர்கள் படுகொலைக்கு பின்னரும் கூட சோசலிஸ்ட் மந்திரிசபையில் இருக்க வேண்டியிருக்கிறது. குடியரசு ஆபத்தில் உள்ளது! இதன் விளைவாக, படுகொலைகள் பற்றிய விசாரணைகள் தடைக்குட்படுத்தப்பட வேண்டும்; காலனிகளில் நடந்த கொடூரங்கள் பற்றி பாராளுமன்ற விசாரணைகள் கைவிடப்பட வேண்டும், பொதுமன்னிப்புச் சட்டம் ஏற்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து பதவிகளும், சோசலிஸ்ட்டுகளின் வாக்குகள் அனைத்தும் அச்சுறுத்தலுக்குள்ளான குடியரசு, அதன் பாதுகாப்பு என்ற அக்கறையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்."

நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தச் சொற்கள் அவற்றின் பெரும் உண்மைத்தன்மையை சிறிதும் இழந்துவிடவில்லை. மில்லரென்ட் விரும்பிய சந்தர்ப்பவாதம் முதல் உலகப் போருக்கு சர்வதேச சமூக ஜனநாயகத்தின் ஆதரவு என்ற அளவிற்கு இட்டுச் சென்றது. இதற்கிடையில் சோசலிஸ்ட்டுக்களுடன் முறித்துக் கொண்டுவிட்ட மில்லரென்ட் போர் நடவடிக்கைகள் தொடங்கிய நேரத்தில் பிரான்சின் யுத்த மந்திரியானார்.

1930 களின் சமூக அரசியல் நெருக்கடிக்களுக்கு மத்தியில் இதே போன்ற பாதையைத்தான் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. பாசிசத்திற்கு எதிரான மத்தியதர வர்க்கங்களுடனான கூட்டு என்று நியாயப்படுத்தி, சமூக ஜனநாயக மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினருடன் மக்கள் முன்னணி ஒன்றை அமைக்க அது முடிவுசெய்தது.

அந்த நேரத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: "இந்த மனிதர்கள் பாராளுமன்ற நிழல்களை தவிர வேறு எதையும் காண்பதில்லை. மக்களின் உண்மையான பரிணாமவளர்ச்சியை இவர்கள் அசட்டை செய்து, "தீவிரப் போக்குடைய கட்சியின்" பின்னே செல்கின்றனர்; அதுவோ தானே காலத்திற்கு ஒவ்வாததாகி, இடைக்காலத்தில் இவர்களுக்கு தன்னுடைய முதுகை திருப்பிக் கொள்கிறது .... தொழிலாள வர்க்கம் மற்றும் மத்திய வர்கங்களிடையேயான உண்மையான கூட்டானது பாராளுமன்ற புள்ளிவிவரங்கள் பற்றிய பிரச்சினை அல்ல, மாறாக புரட்சிகர இயக்கவியலாகும். அப்படிப்பட்ட கூட்டு அவசியம் தோற்றுவிக்கப்பட்டு போராட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். தற்போதைய அரசியல் நிலைமையின் முழுப் பொருளும், திகைப்படைந்துள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கம் பாராளுமன்ற கட்டுப்பாடு என்னும் நுகத்தடியில் இருந்து முறித்துக் கொள்ள தொடங்கி இருப்பதை காட்டுவதுடன், எப்பொழுதுமே மக்களை ஏமாற்றி வரும், இப்பொழுது உறுதியாக அதனை காட்டிக் கொடுக்கும், பழமைவாத "தீவிரப் போக்குடைய" கும்பலின் பாதுகாப்பிலிருந்தும் முறித்துக் கொள்கிறது என்ற உண்மையில் தங்கி இருக்கிறது; இந்த நிலையில் தீவிரப்போக்கினருடன் சேர்வதன் அர்த்தம் மக்களுடைய வெறுப்பிற்காளாகி, பெரும் கண்டனத்திற்கு ஆளாவது என்பது மட்டும் அல்லாமல், பாசிசம்தான் ஒரே பாதுகாப்பு எனத் தழுவும் நிலைக்கு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை தள்ளுவதும் ஆகும்."

ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை விரைவில் உறுதிப்படுத்தப்பட்டது. லெயோன் புளுமின் தலைமையிலான மக்கள் முன்னணி அரசாங்கம் 1936ம் ஆண்டு பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தை ஒடுக்கியதுடன் ஸ்பெயின் புரட்சியையும் தனிமைப்படுத்தியது. இதன் பொருள் இரண்டாம் உலகப் போர் வருவது தவிர்க்கப்பட முடியாது என்பதும் பின்னர் ஜெனரால் பெத்தனின் தலைமையில் விச்ஷி அரசாங்கம் வெளிப்படுவதற்கு வழி வகுத்ததும் ஆகும்.

ஒரு கொள்கையின் நச்சு வட்டத்தை முறித்தல் இன்றியமையாதது ஆகும். குறைந்த தீமை என்று கூறப்படுவதற்கு ஆதரவு என்ற வகையில் உண்மையில் அந்நிலைப்பாடு கடந்த காலத்தை புறக்கணிப்பதுடன் வருங்காலத்தை தியாகம் செய்துவிடுகிறது. தொழிலாள வர்க்கம் இந்த அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஒன்றுதான் வருங்கால வர்க்க மோதல்களுக்கான தயாரிப்பிற்கு ஒரே வழியாகும்; அத்தகைய மோதல்கள் உலகம் முழுவதும் மிக விரைவில் பெருகி வரும் சமூக துருவமுனைப்படல், மற்றும் பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான போட்டி நிலைமைகளின் கீழ், தவிர்க்க முடியாமல் உறுதியாகத் தோன்றும். ஒரு சர்வதேச, சோசலிச முன்னோக்கை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய சுயாதீனமான தொழிலாள வர்க்க கட்சியை கட்டியமைப்பது ஒன்றுதான் முன்னேறுவதற்கான ஒரே வழியாகும்.