World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Death threats against protesters in northern Sri Lanka

வட இலங்கையில் கண்டனக்காரர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்

By S. Jayanth
25 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுவர்களில் மே 14 அன்று நாட்டைக் காக்கும் தமிழ் கூட்டமைப்பு என அழைத்துக்கொள்ளும் ஒரு இரகசிய கும்பலால் ஒழுக்கக்கேடான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகளில் கொலைசெய்யப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டு மாணவர்கள், கல்விமான்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நூற்றுக்கணக்கான பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வட இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் இரு பாடசாலைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் கண்டனப் போராட்டத்தின் மத்தியிலேயே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

"இந்த மாணவர்களையும் ஊழியர்களையும் உன்னிப்பாக பின்தொடர்ந்ததில், இவர்கள் புலிப் பயங்கரவாதிகளுடன் (பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்) நெருக்கமாக செயற்படுவதும் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது," என இந்த சுவரொட்டி பிரகடனம் செய்கின்றது. அது நடுங்க வைக்கும் எச்சரிக்கையுடன் பின்வருமாறு முடிக்கப்பட்டுள்ளது: "இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இவர்களைத் தண்டிக்க நாங்கள் தக்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்."

இந்த சுவரொட்டியில் 324 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாணவர்களில் கலை மற்றும் நுண்கலைப் பீடத்தைச் சேர்ந்த 85 பேரும், முகாமைத்துவ வணிக பீடத்தில் 69 பேரும், விஞ்ஞான பீடத்தில் 57 பேரும், மருத்துவ பீடத்தில் 42 பேரும், விவசாய பீடத்தில் 39 பேரும் மற்றும் சித்த மருத்துவ பீடத்தில் 7 பேரும் மற்றும் 24 நிர்வாக ஊழியர்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

"புலிகளுக்கு ஆயுதம் கடத்தல், பாதுகாப்பு படையினருக்கு உயிரிழப்பை ஏற்படுத்துதல், பாதுகாப்புப் படையினர் பற்றிய தகவல்களை புலிப் பயங்கரவாதிகளுக்கு வழங்குதல், பாதுகாப்பு படையினரை அவதூறுபடுத்தி அறிக்கைகள் பிரசுரங்களை வெளியிடல், ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசை அவதூறுபடுத்தும் பயங்கரவாத நிகழ்வுகளை நடத்துதல், புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்தல்... மற்றும் நிதி மற்றும் ஏனைய வழிகளில் பயங்கரவாதிகளுக்கு உதவுதல்" ஆகியவை இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுப் பட்டியலானது எவரையும், குறிப்பாக தமிழர்களை மற்றும் அரசாங்கம் நாட்டை மீண்டும் மூழ்கடித்துள்ள திட்டமிட்ட இனவாத யுத்தத்தை எதிர்ப்பவர்களையும் பீதிக்குள்ளாக்கும் கொலைக் கும்பல்களை ஏற்பாடு செய்வதில் அரசாங்கத்திற்குச் சார்பான துணைப் படைகளுடன் கூட்டாக செயற்படும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசிடமிருந்து தவிர வேறு எங்கிருந்தும் வர முடியாது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டதில் இருந்து கடந்த 18 மாதங்கள் பூராவும், கொழும்பிலும் மற்றும் நாட்டின் யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

இந்தப் புதிய மரண அச்சுறுத்தலானது குறிப்பாக பலர் காணாமல் போன சம்பவங்களுக்கு எதிராக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மூன்று மாணவர்களும் சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் ஒருவரும் யாழ்ப்பாணத்தில் அவர்களின் வீடுகளில் இருந்து மே 4 அன்று பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்து தமது உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களாவர்.

ஏனைய பல சம்பவங்களைப் போலவே, இந்தக் குண்டர் கும்பல் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த இரவு வேளையில் தமது இழிந்த வேலையை நிறைவேற்றியுள்ளனர். யாழ்ப்பாண நகரமும் மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களும் பாதுகாப்புப் படைகளின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவையாகும். பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் எவரும் நகருவது இப்பகுதிகளில் சாத்தியமானதல்ல. இந்தக் கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏறத்தாழ நிச்சயமாக இராணுவத்துடன் சேர்ந்து அல்லது அவர்களது நேரடி கட்டளைகளின் கீழ் செயற்படுபவர்களாவர்.

எதிர்ப்பும் பகிஷ்கரிப்பும் தொடங்கிய உடனேயே, இதற்கு முன்னர் அறியப்பட்டிராத நாட்டைக் காக்கும் தேசிய கூட்டமைப்பு, ஒரு ஆசிரியருக்கும் மற்றும் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரமொன்றை விநியோகித்தது. இந்தப் பிரசுரம், மாணவர்கள் "தமது புத்தகப் பைகளில் ஆயுதங்களை எடுத்துச் செல்கின்றனர், கைத்துபாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் கிளேமோர் குண்டுகளையும் ஒழித்து வைத்திருக்கின்றனர், கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்துகின்றனர் மற்றும் வகுப்புப் பகிஷ்கரிப்புகளை மேற்கொள்கின்றனர்" என குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த எதிர்ப்பு விரிவடையக் கூடும் என்பதை தெளிவாகக் கருத்தில் கொண்டு, எந்தவொரு எதிர்ப்பும் வன்முறையின் மூலம் நசுக்கப்படும் என இந்தத் துண்டுப் பிரசுரம் எச்சரிக்கின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பகிஷ்கரிப்பு தொடர்கின்றது. மாணவர்களின் நடவடிக்கையை ஆதரிக்கும் பல ஆசிரியர்களும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். கண்டனத்தை அடக்குவதில் தோல்விகண்ட நிலையிலேயே, ஒரு பெரும் எச்சரிக்கை மே 14 அன்று விடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கு மறுப்புத் தெரிவிக்கும் ஒரு திறனற்ற முயற்சியில், இராணுவத் தலைமையகம் இந்த மரண அச்சுறுத்தலுடன் தொடர்பில்லை என மே 15 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எவ்வாறெனினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியைப் போலவே, இந்த அறிக்கையும் "அரச சொத்துக்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட" புலிகள் மாணவர்களைத் தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டுகிறது.

"இதுவரை அனைத்து ஆதாரங்களும் ஒப்புவித்துள்ளவாறு, இந்த சக்திகள், பலவித குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், இல்லையெனில் புலிகள் அமைப்பின் சார்பில் குற்றங்களை இழைக்கவும் தமது பிரதான மையங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை வசதியாக பயன்படுத்தி வந்துள்ளது," என்றும், "இந்த சூழ்நிலையானது பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் ஊழியர்களினதும் விருப்பத்திற்கு எதிராக பல தடவைகள் காலவரையறை இன்றி பல்கலைக்கழகத்தை மூட நிர்வாக அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்," என்றும் இந்த அறிக்கை பிரகடனம் செய்கின்றது.

இராணுவத்தின் முறைகேடான தர்க்கத்தின் படி, மாணவர்களும் ஊழியர்களும் இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தாலும் கூட, அவர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களுக்கு புலிகளே பொறுப்பு என்பதாகும்: "தமது கல்வி நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 'மரண அச்சுறுத்தல்' விடுக்கும் புலிகளின் புதிய மூலோபாயமானது, இதன் முக்கிய புள்ளியாகும் மற்றும் இது சமாதானத்தை விரும்பும் மக்களை ஆத்திரமூட்டுவதையும் அதே போல் செய்யாத பிழைக்காக பாதுகாப்புப் படையினரை குற்றஞ்சாட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்டதாகும்."

மாணவர்களின் இந்த புதிய ஆர்ப்பாட்டம் முதலாவது அல்ல. கடந்த ஆகஸ்ட்டிலும், தமது பாடசாலைகளுக்கு நெருக்கமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ காவலரன்களையும் சோதனைச் சாவடிகளையும் அகற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் மற்றும் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவிகளும் வகுப்புப் பகிஷ்கரிப்பொன்றை முன்னெடுத்தனர். இதே காரணத்திற்காக ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பரந்தளவில் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். அத்துடன் பெற்றோர்களும் ஏனையவர்களும் இந்தக் கண்டன நடவடிக்கையில் சேர்ந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பல தடவை மூடப்பட்டுள்ளது. அது கடந்த பெப்பிரவரியில் மீண்டும் திறப்பதற்கு முன்னதாக, வேலாயுதம் மகா வித்தியாலயம் மற்றும் ஹாட்லிக் கல்லூரியின் இரு மாணவர்கள் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதில் இணைந்து கொண்ட போது அதிகாரிகள் அதை இழுத்து மூடினர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் அரைவாசிப் பேர் --சுமார் 600 பேர்-- மீண்டும் கற்றல் நடவடிக்கைக்கு வந்து சேரவில்லை. புதிய மரண அச்சுறுத்தலை அடுத்தும் மற்றும் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களினாலும் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் எதிர்ப்பு தொடர்பாக அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் மனப்பான்மை, 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷ வெற்றிபெற்றதை அடுத்து வெளிப்படையாகியது. தேர்தலுக்கு அடுத்த மாதம், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தமிழர்கள் மீதான இராணுவத்தின் தொந்தரவுகளை நிறுத்தத் தலையீடு செய்யுமாறு, 2002 யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழுவுக்கு மனுவொன்றை எடுத்துச் சென்ற 200 க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.