World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE attack on Sri Lankan air force base

இலங்கை விமானப் படைத் தளம் மீதான புலிகளின் தாக்குதல்

By Sarath Kumara
25 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த திங்களன்று கொழும்பில் இருந்து 210 கிலோமீட்டர் தூரத்தில் அனுராதபுரத்தில் உள்ள இலங்கையின் பிரதான விமானத் தளம் ஒன்றின் மீது பெரும் தாக்குதலொன்றை நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 13 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, புலிகளின் தற்கொலைக் கொமாண்டோ படை உறுப்பினர்கள் என நம்பப்படும் 21 போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பல விமானங்களும் ஹெலிகொப்டர்களும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன.

அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை மீண்டும் மீண்டும் மீறிவந்துள்ளதற்கு பிரதிபலிப்பாக கடந்த ஆண்டு பூராவும் புலிகள் முன்னெடுத்த சில எதிர்தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தத் தாக்குதலும் ஒன்றாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து, தீவின் கிழக்கில் புலிகளின் பிரதான கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து அவர்களை இராணுவம் வெளியேற்றியதோடு அண்மைக் காலமாக புலிகளின் வடக்கில் உள்ள கோட்டைகளுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

அரசாங்கமும் இராணுவமும் திங்கள் கிழமை நடந்த தாக்குதலில் திகைத்துப் போனது தெளிவு. இறுக்கமாக பலப்படுத்தப்பட்டிருந்த முகாமுக்குள் சுமார் விடியற்காலை 3.20 மணியளவில் ஊடுருவிய புலி உறுப்பினர்கள், பல விமானங்களை அழிப்பதற்கு முன்னதாக காவல் அரண்கள் மற்றும் விமான எதிர்ப்பு எறிகணை நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். பின்னர் இந்தத் தளம் மீது சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் புலிகளின் இலகு விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. புலிகள் பல மணிநேரம் விளைபயனுள்ள விதத்தில் தளத்தை கட்டுப்பாட்டில் கொண்டிருந்துள்ளனர்.

இந்த பயிற்சி மற்றும் துருப்புக்கள் ஒழுங்குபடுத்தும் தளம், தலைநகரில் இருந்து வடக்கு நகரான வவுனியாவுக்கான பிரதான விநியோகப் பாதையில் அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் உள்ளது. இந்தத் தாக்குதல் கொழும்பில் கசப்பான எதிர்க் குற்றச்சாட்டுக்களை தூண்டிவிட்டது. விமானப் படைக்கு செலவுமிக்க சேதங்களை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதல், புலிகள் மீதான இராணுவ வெற்றி சாத்தியமானது மற்றும் ஒப்பீட்டளவில் விரைவில் வெற்றிகாண முடியும் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு குழி பறித்துள்ளது.

பாதுகாப்பு பேச்சாளர் கேஹெலியே ரம்புக்வெல்ல, எம்.ஐ-24 ஹெலிகொப்டர் இரண்டும் மற்றும் ஒரு பயிற்சி விமானமும் மட்டுமே சேதமடைந்துள்ளதாக திங்களன்று தெரிவித்தார். அந்தத் தளத்தில் அரசாங்கப் படைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக வவுனியாவில் இருந்து புறப்பட்ட இன்னுமொரு ஹெலிகொப்டர் "விபத்துக்குள்ளானது. எவ்வாறெனினும், இழப்புக்களை மூடி மறைப்பது சம்பந்தமாக அரசாங்கம் உடனடியாக விமர்சனங்களுக்குள் சிக்கிக்கொண்டது.

பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, விபத்துக்குள்ளான ஹெலிகொப்டருக்கு மேலதிகமாக மூன்று ஹெலிகொப்டர்களும் நான்கு பயிற்சி விமானங்களும் மற்றும் ஒரு வேவுபார்க்கும் கடல் விமானமொன்றும் இந்தத் தளத்தில் அழிவுக்குள்ளாகியுள்ளதாக நேற்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டார். "விபத்துக்குள்ளான" ஹெலிகொப்டரை புலிகளின் இன்னுமொரு விமானம் என நினைத்து, இராணுவத்துக்கு சொந்தமான விமான எதிர்ப்பு எறிகணைகளே பீதியில் சுட்டுவீழ்த்தியதாக பல செய்திகள் தெரிவித்தன.

அரசாங்கம் உண்மையை மறைக்கவில்லை என தற்காப்பான நிலையில் விக்கிரமநாயக்க தெரிவித்தார். ஆயினும், திங்களன்று தேதமடைந்த பல விமானங்கள் வந்தது எப்படி என்பதை அவர் விளக்கவில்லை. யுத்த முயற்சிகளுக்காக அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், "எங்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு நாடு இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், தளத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அதிகளவிலானதாக இருக்கும் என இந்துஸ்தான் டைம்ஸ் க்குத் தெரிவித்துள்ளார். ஒரு பிரதான கடல் வேவு விமானம் உட்பட 12 முதல் 18 வரையான விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சேதங்கள் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டும் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட டெலிகிராப் மதிப்பிட்டுள்ளது. இராணுவச் செலவின் விளைவாக ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ள கொழும்பு அரசாங்கத்திற்கு இது பிரமாண்டமான தொகையாகும்.

தளத்தில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர். விமான ஓட்டிகள் நால்வர் விபத்துக்குள்ளான விமானத்தில் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண் உறுப்பினர்கள் உட்பட புலிகளின் அனைத்து தற்கொலைப் படை உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர். புலிகளின் இரு இலகுரக விமானங்கள் தளத்திற்குத் திரும்பியுள்ளன. அரசாங்க மற்றும் இராணுவ இலக்குகள் மீதான தாககுதல்களுக்கு ஒற்றை இயந்திரம் கொண்ட இலகுரக விமானத்தை புலிகள் நான்காவது தடவையாக பயன்படுத்தியுள்ளனர்.

புலிகளை கண்டனம் செய்யும் அதேவேளை, எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), "அரசாங்கத்தின் அலட்சியம் பாதுகாப்புப் படையினரை ஆபத்துக்குள் தள்ளியுள்ளதாக" தெரிவித்தது. புலிகளின் விமானங்களை எதிர்க்கத் தேவையான உபகரணங்களை இராணுவத்திற்கு வழங்காததையிட்டு யூ.என்.பி. அரசாங்கத்தை விமர்சிப்பதோடு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷவும் மற்றும் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலகவும் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோருகின்றது.

யூ.என்.பி. யின் விமர்சனங்கள் அதன் வாய்வீச்சுக்களில் ஒரு நிச்சயமான மாற்றத்தை குறிக்கின்றது. புலிகளுடன் 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாதிட்ட யூ.என்.பி., இப்போது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, எச்சரிக்கைகளை விடுப்பதோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறும் தூண்டுகிறது. ஆயினும், மிகவும் அண்மையில், இப்போதும் இருந்துகொண்டுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கான தமது ஆதரவை அமைதியாக கைவிட்டதோடு அரசாங்கம் தொடர்பான அதன் விமர்சனங்களில் அதிகளவில் யுத்தத்திற்கு சார்பான தொனியை பின்பற்றியது.

அதே சமயம், யுத்தத்திற்கு திரும்புவதானது பொருளாதார மற்றும் பெருமளவிலான இராணுவப் பேரழிவையும் ஏற்படுத்தும் என்பதையிட்டு ஆழமாக கவலையடைந்துள்ள இலங்கை வர்த்தகர்கள் பிரிவினரின் அக்கறையையும் இன்னமும் யூ.என்.பி. பிரதிபலிக்கின்றது. குறிப்பாக பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அரசாங்கத்தின் இராணுவ வெற்றிகள் சம்பந்தமான அதன் வெற்றி ஆரவாரம் புலிகளின் திருப்பித் தாக்கும் இயலுமையை குறைத்து மதிப்பிடுகிறது என கடந்த ஆண்டில் எச்சரித்து வந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற அதன் கோரிக்கையை வலியுறுத்த இந்தத் தாக்குதலை பற்றிக்கொண்டது. ஜே.வி.பி. பாராளுமன்றக் குழு தலைவர் விமல் வீரவன்ச, வடக்கில் புலிகளின் கோட்டையான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் மீது தாக்குல்களை உடனடியாக முன்னெடுக்குமாறு இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார். இராணுவத்தின் பாதுகாப்பை பலப்படுத்த மேலும் பணம் செலவிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

புலிகளின் தாக்குதல், யுத்தத்தை உக்கிரமாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் திருத்தம் ஏற்படுத்தப் போவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்கிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசாங்கம் "பயங்கரவாதத்தை" பொறுத்துக் கொள்ளாது என்றும் "அது முழுமையாக அழிக்கப்படும் வரை" அது போராடும் என வலியுறுத்தினார்.

புலிகளின் தாக்குதலின் பின்னர், அனுராதபுர பாதுகாப்பை ஜெனரல் சனத் கருணாரட்னவின் முழு கட்டளையின் கீழ் கொண்டுவந்தார். இவர் அனுராதபுரத்தில் உள்ள இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், வர்த்தக பாதுகாப்பு ஏஜன்சிகள் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகளின் சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருப்பார். நகரமும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய இராஜபக்ஷ, அவரை இராஜினாமா செய்யுமாறு யூ.என்.பி. விடுத்த கோரிக்கையை நிராகரித்தார். அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனுராதபுர முகாமின் மீதான தாக்குதல், புலி பயங்கரவாதிகளுக்கும் வன்னியில் உள்ள அவர்களின் தளங்களுக்கும் எதிரான திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை எந்த விதத்திலும் குழப்பாது" என மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அவர் "பாதுகாப்புப் படைகளின் செலவில் அரசியல் நடத்த வேண்டாம்" என எதிர்க்கட்சிக்கு அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவம் வட இலங்கையில் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது விமானத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடிகொடுத்தது. விமானப் படை வன்னியில் இரணைமடு மீது தாக்குதல் தொடுத்தது. புலிகள் தமது இலகுரக விமானங்களை அங்கு வத்திருப்பதாக விமானப்படை கூறிக்கொள்கின்றது. கடந்த செவ்வாய் கிழமை, வவுனியாவில் பல இடங்களில் 12 புலி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் செய்தி வெளியிட்டது. கடந்த புதன் கிழமை, முல்லைத் தீவு பிரதேசத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் உள்ளன எனக் கூறி இராணுவத்தின் ஜெட் விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்தின.

எவ்வாறெனினும், நாடு பூராவும் இராணுவ மற்றும் அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் இயலுமை இன்னமும் புலிகளுக்கு உள்ளது என்பதையே திங்கள் கிழமை தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கம் இரக்கமின்றி ஏற்கனவே இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவந்துள்ள யுத்தத்திற்குள் நாட்டை மீண்டும் மூழ்கடித்துள்ளது. அத்துடன் இது மேலும் சாவுகளையும் அழிவுகளையும் மற்றும் தீவுபூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு சிரமங்களையும் தவிர்க்க முடியாத விளைவுகளாக்கும்.