World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military assassinates LTTE political leader in air strike

புலிகளின் அரசியல் பொறுப்பாளரை இலங்கை இராணுவம் விமானத் தாக்குதல் மூலம் கொலை செய்தது

By Sarath Kumara
5 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான சு.ப. தமிழ்ச்செல்வன், வெள்ளிக்கிழமை காலை வடக்கில் புலிகளின் கோட்டையான கிளிநொச்சிக்கு அருகில் இலங்கை விமானப் படை மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். "மிகவும் நம்பத்தகுந்த தகவலை" அடிப்படையாகக் கொண்டு நடத்தியதாக விமானப் படை பேச்சாளர் விபரித்த இந்தத் தாக்குதலில், புலிகளின் மேலும் ஐந்து சிரேஸ்ட அலுவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ்ச்செல்வன் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டமை, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாக இலங்கை அரசாங்கம் கூறிக்கொள்வதும் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு கட்ட அடிக்கடி அது அழைப்பு விடுப்பதும் கேலிக்கூத்தானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. புலிகளின் அரசியல் பிரிவின் பொறுப்பாளர் என்ற முறையில், தமிழ்ச்செல்வன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்துள்ளார் அல்லது அதற்குத் தலைமை வகித்துள்ளார்.

2006 ஜூலையில் இருந்தே, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி தீவின் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொள்ள ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டிருந்தார். அவை "தற்பாதுகாப்புக்கானது" என அவர் கூறிக்கொண்டமையானது பெரும் வல்லரசுகளின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும். புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரை திட்டமிட்டுக் கொன்றமையானது தக்க பேச்சுவார்த்தைகளை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதையும் அது புலிகளை இராணுவ ரீதியில் அழிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மேற்பார்வை செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய சக்திகளில் எதுவும், இந்த வெளிப்படையான யுத்த நடவடிக்கையைப் பற்றி விமர்சிக்க ஒரு வார்த்தை தன்னும் கூறவில்லை. கடந்த வியாழக் கிழமை, புலிகளின் அண்மைய தாக்குதலொன்றை கண்டனம் செய்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் பிளேக், தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார். இலங்கை பேச்சுவார்த்தைகளில் தலையீடு செய்யும் பல இராஜதந்திரிகளுக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமாகியிருந்த தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து இத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக பெரும் வல்லரசுகள் மெளனம் காப்பதானது அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை அங்கீகரிப்பதற்கு சமமானதாகும்.

கொழும்பில் தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பு ஆளும் வட்டத்தில் பெருமளவில் கட்டுப்பாடற்ற பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முயற்சித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதிய நாணயக்கார, புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்மையில் நடந்த இராணுவ நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறிக்கொண்டார். 40 வயதான தமிழ்ச்செல்வன், 1993ல் இலங்கை இராணுவத்துடன் நடந்த மோதலில் கடும் காயமடைந்த பின்னர் ஊன்றுகோளுடனேயே நடந்துகொண்டிருந்தார்.

தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பு ஆயுதப் படைகளுக்கு "மனவுறுதியை மேம்படுத்துவதாகவும் புலிகளுக்கு ஒரு பெரும் இழப்பாக இருக்கும்" என்றும் நாணயக்கார பெருமிதம்கொண்டார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் புலி கெரில்லாக்கள் இலங்கையின் வடக்கு நகரான அனுராதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு பிரதான இலங்கை விமானப் படைத் தளத்திற்குள் ஊடுருவி பல விமானங்களை அழித்து அல்லது சேதப்படுத்தியதை அடுத்தே புலிகள் மீது இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரீர ரீதியான சேதங்களையும் விட, இராணுவம் புலிகளை விரட்டுவதாக அரசாங்கம் மேற்கொண்ட பிரச்சாரத்தை விமானப்படை தளம் மீதான புலிகளின் தாக்குதல் தகர்த்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை பேசிய இராஜபக்ஷ, "மிகச் சிறந்த உறுதிப்பாட்டையும் மற்றும் தாய்நாட்டை அடுத்து வரவுள்ள ஆபத்தான பிளவில் இருந்து காப்பாற்ற அவர்களின் அர்ப்பணிப்புக்காகவும்" ஆயுதப் படைகளைப் பாராட்டினார். தமிழ்ச்செல்வனின் கொலை பற்றி நேரடியாக குறிப்பிடாத ஜனாதிபதி, அரசாங்கம் "கெளரவமான சமாதானத்திற்காக" அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாகவும் புலிகளால் "நிபந்தனைகள் விதிக்க" முடியாது எனவும் வலியுறுத்தினார். இவை புலிகளுக்கு சலுகைகள் வழங்காமல் இருக்கவும் அதனால் பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் இருக்கவும் கூறப்படும் சொற்றொடர்களாகும்.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, தனது உள்நோக்கத்தை மறைக்க முயற்சிக்கவில்லை. "அவர்களின் தலைவர்கள் எங்குள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதற்கான ஒரு செய்தியே இது. அனைத்து தலைவர்களதும் இருப்பிடங்கள் எனக்குத் தெரியும்... எங்களுக்கு வேண்டுமானால் அவர்களை ஒவ்வொருவராக அழிக்கலாம்," என அவர் ராய்ட்டருக்கு வீராப்பாகத் தெரிவித்தார். அவர் புலிகளின் தலைவர்களை தாமதம் இன்றி "வெளியில் வருமாறு" அழைத்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால் நிபந்தனையின்றி சரணடைவு என்பதாகும்.

யுத்தம் உக்கிரமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), வெற்றிக்களிப்புடன் இருந்தது. ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச, இந்தக் கொலையை இராணுவத்திற்கும் மக்களுக்குமான வெற்றியாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அனுராதபுரம் தாக்குதலை அடுத்து சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குமாறு அழைப்பு விடுத்தவர்களுக்கு இந்தத் தாக்குதல் ஒரு பெரும் அடி என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் விவரித்தார்.

கொழும்பு ஊடகங்களிலும் ஒரு தொகை கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன. வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை, "விமானப்படை அனுராதபுரம் தாக்குதலுக்கு பழி தீர்த்து, புலிகளின் பொதுமக்கள் பிரதிநிதியை வேட்டையாடியுள்ளது" என தலைப்பிட்டிருந்தது. புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் படம் ஒன்றை வெளியிட்டிருந்த ஞாயிற்றுக்கிழமை லக்பிம நியூஸ், "இந்த முறை இவர் - அடுத்தமுறை...?" என தலைப்பிட்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இது பிரபாகரனைக் கொல்லுமாறு தூண்டுவதாகும்.

2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, தமிழ்ச்செல்வன் உட்பட புலிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவந்த எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), இன்னமும் அறிக்கையொன்றை வெளியிடவில்லை. ஆனால் யூ.என்.பி. ஏற்கனவே அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு கீழ்படிந்துள்ளதோடு இனவாத பதட்டங்களுக்கும் தீமூட்டிக் கொண்டிருக்கின்றது. டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த யூ.என்.பி. தேசிய ஒழுங்கமைப்பாளரான எஸ்.பி. திசாநாயக்க, "இந்தக் (தமிழ்ச்செல்வன்) கொலை சம்பந்தமாக வருத்தம் இருக்கக் கூடாது" என பிரகடனம் செய்தார்.

புலிகள் தமது சொந்த இனவாத அரசியல் பாணியில் தமிழ்ச்செல்வனின் கொலைக்கு பதிலளித்தனர். சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரகடனம் செய்ததாவது: "தமிழ் பேசும் மக்களால் ஆழமாக விரும்பப்பட்ட மற்றும் சர்வதேச சமூகத்தின் மதிப்புக்குரியவராக இருந்த அரசியல் தலைவரின் உயிரை சிங்கள தேசம் பறித்துவிட்டது." எவ்வாறெனினும், பெரும்பான்மையான சாதாரண சிங்கள உழைக்கும் மக்களால் எதிர்க்கப்படும் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு, அவர்கள் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களாக இல்லாதது போல், தமிழ்ச்செல்வனின் கொலைக்கும் அவர்கள் பொறுப்பு சொல்லவேண்டியவர்கள் அல்ல.

தொழிலாளர்களை பிளவுபடுத்தி, தமது சொந்த சமூக அத்திவாரத்தை பலப்படுத்த தமிழர் விரோத பேரினவாதத்தை சுரண்டிக்கொள்ளும் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களே 1983ல் இருந்து நடைபெறும் யுத்தத்திற்கு நேரடி பொறுப்பாளிகளாகும். எவ்வாறெனினும், புலிகளின் தனியான தமிழ் அரசு முன்நோக்கு, தமிழ் தொழிலாளர்களின் நலன்களை அன்றி தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. 2002ல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதில், ஆளும் தட்டின் அனைத்துப் பிரிவினராலும் தொழிலாளர் வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதற்கான ஒரு மலிவு உழைப்புக் களமாக தீவை மாற்றியமைக்க வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாட்டையே புலிகள் எதிர்பார்த்தனர்.

சமாதானப் பேச்சுக்களின் தோல்வியும் மற்றும் யுத்தத்திற்கு மீண்டும் திரும்பியமையும், பேரினவாத அரசியலில் இருந்து கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தை பிரித்தெடுக்கவே முடியாது என்பதற்கு சான்றுகள் பகர்கின்றன. தமிழ்ச்செல்வன் குறிவைத்துக் கொல்லப்பட்டமையானது, இனவாத பதட்டங்களை மேலும் எரியச்செய்ய கணக்குப்பார்த்து செய்யப்பட்டதாகும். இது யுத்தம் மேலும் உக்கிரமடைவதற்கே தவிர்க்க முடியாமல் வழிவகுக்கும். இராஜபக்ஷ இத்தகைய வழிமுறைகளை நாடுவதானது, யுத்தத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார சுமைகள் தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் அதிருப்தியினதும் எதிர்ப்பினதும் விளைவாக அவரது அரசாங்கம் எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடியின் அளவை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த வாரம் 20,000 அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்களின் வேலைநிறுத்தம், கடைசி நிமிடத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து போராட்டத்தை இரத்து செய்ததினால் மட்டுமே தவிர்க்கப்பட்டது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வேலைநிறுத்தம் செய்த ஆயிரக்கணக்கான ஆஸ்பத்திரி ஊழியர்கள், சம்பள உயர்வு கோரியதோடு தமது நிலைமைகள் மோசமடைந்து வருவதையும் எதிர்த்தனர். கடந்த செவ்வாய்க் கிழமை, ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தை பொலிசார் வன்முறையுடன் தகர்த்தனர்.

யுத்தத்திற்கான அரசாங்கத்தின் பிரமாண்டமான செலவின் பாகமாக விலைவாசி அதிகரித்துள்ளமையானது உழைக்கும் மக்கள் மீது தாங்கமுடியாத சுமைகளை ஏற்றியுள்ளது. அக்டோபரில் வாழ்க்கைச் செலவு சுட்டெண் 5,723 வரை 210 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இது ஆண்டு வீதத்தின்படி 19.3 ஆகும். செப்டெம்பரில் இது 17.3 வீதமாக இருந்தது. அரசாங்கம் பாதுகாப்புச் செலவை இந்த ஆண்டு 45 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் அடுத்த ஆண்டுக்கு மேலும் 20 வீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக, அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் சேவைகள், அதே போல் அரசாங்கத் துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகள் வெட்டித்தள்ளப்பட்டு வருகின்றன.

அமைதியின்மையை அடக்குவதற்காக, அரசாங்க அமைச்சர்கள் வழமை போல் ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் தேசப்பற்றற்ற நடவடிக்கை என வகைப்படுத்துவதோடு ஒரு தொகை ஜனநாயக விரோத அவசரகாலச் சட்டங்களையும் அமுல்படுத்துகின்றனர். மிக அண்மையில், பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுதல் உட்பட, இராணுவ நிலைப்படுத்தல்கள் அல்லது நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு செய்தியையும் தணிக்கை செய்வதற்காக இராஜபக்ஷ அக்டோபர் 29ம் திகதி புதிய அவசரகால விதிகளை பிரகடனம் செய்தார். இந்த நடவடிக்கை யுத்தத்தைப் பற்றிய விமர்சனங்களை அடக்குவதற்காக மட்டுமன்றி, உக்ரேயினில் இருந்து மிக்-27 ரக விமானங்களை கொள்வனவு செய்தது தொடர்பான அவதூறுகளை மூடி மறைக்கவும் எடுக்கப்பட்டது. எதிர்ப்பு அலைகளை அடுத்து, அரசாங்கம் இந்த விதிகளை அகற்றிக்கொள்ளத் தள்ளப்பட்டது.

வீதித் தடைகள், அடையாள அட்டை சோதனைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை உடனடியாக உக்கிரமாக்கிய இராணுவம் அதை நியாயப்படுத்துவதற்காக தமிழ்ச்செல்வனின் கொலையை பயன்படுத்திக் கொண்டது. புலிகள் பதில் தாக்குதல் நடத்தலாம் என அது கூறிக்கொண்டது. சனிக்கிழமை, பாதுகாப்புப் படைகள் மத்திய கொழும்புக்கான அனைத்து அதிவேகப் பாதைகளிலும் தடைகளை ஏற்படுத்தியதோடு அனைத்து வாகனங்களையும் பயணிகளையும் சோதனை செய்தன. கொழும்புக்கான உப பொலிஸ் மா அதிபர், தலைநகரின் பாதுகாப்பை இறுக்குவதற்காக மேலதிக துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தமிழ்ச்செல்வனின் கொலையானது மீண்டும் ஒரு முறை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் ஆபத்தை சுட்டிக்காட்டுவதோடு, சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழ் பிரிவினைவாதம் போன்ற அனைத்துவிதமான இனவாத அரசியலில் இருந்தும் முழுமையாக உடைத்துக்கொண்டு, யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்காக ஒரு சோசலிச பதிலீட்டின் பக்கம் திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக்காட்டியுள்ளது.