World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's Communist Party Congress: a celebration of private wealth and market success

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு : தனியார் செல்வம், சந்தையின் வெற்றி கொண்டாடப்படல்

By John Chan
26 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 21ம் தேதி பெய்ஜிங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) ஒரு வார கால 17வது தேசிய காங்கிரஸ், அதன் சந்தை சார்புடைய பொருளாதாரச் செயல்திட்டம் அல்லது ஆட்சி நம்பியிருக்கும் போலீஸ்-அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலோ எவ்வித முக்கிய மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முடிவைடைந்தது. மாநாட்டு பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ கொள்கைகளுக்கு கடமையுணர்வுடன் ரப்பர் முத்திரையிட்டு, எந்தவித எதிர்ப்பு, முணுமுணுப்பும் இல்லாமல் பொறுக்கி எடுக்கப்பட்டிருந்த தலைமையையும் அதிகாரத்தில் இருத்தினர்.

உத்தியோகபூர்வ Xinhua செய்தி நிறுனத்தின்படி, ஜனாதிபதி ஹு ஜின்டாவோ தன்னுடைய ஆரம்ப உரையில் 60 தடவைகளுக்கும் மேலாக "ஜனநாயகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால், சோசலிசம் அல்லது கம்யூனிசத்துடன் எவ்வித தொடர்பற்றது ஒருபுறம் இருக்க, அதிகாரத்துவமயமான, நாடக பாணியிலான காங்கிரசை எவ்விதத்திலும் ஜனநாயகம் எனக் கூறுவது பெரும் அபத்தமாகும். 1.3 பில்லியன் சீனமக்கள் இந்த சம்பவங்களில் எவ்வித பங்கையும் கொண்டிருக்கவில்லை.

2,200 க்கும் மேற்பட்ட மாநாட்டு பிரதிநிதிகள் 74,3 மில்லியன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை; மாறாக வெவ்வேறு பகுதிகளில், அதிகார அமைப்புகளால் நியமிக்கப்பட்டனர். கடந்த வார இறுதியில், பிரதிநிதிகள் ஒரு சிறிய 204 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவிற்கு ஒப்புதல் கொடுத்தது; அது தன் பங்கிற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் குழுவையும் சக்தி வாய்ந்த ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிரந்தர அரசியல் குழுவையும் (Standing Political Committee) பதவியில் இருத்தியது. மத்திய குழு உறுப்பினர்களில் பாதிக்கும் மேலானவர்கள் மாற்றப்பட்டனர்; அவர்கள் பெரும்பாலும் ஹுவின் ஆதரவிலான கம்யூனிஸ்ட் இளைஞர் குழு என அழைக்கப்படும் அமைப்பில் இருப்பவர்கள் ஆவர்.

"சந்தைச் சீர்திருத்தம்" தொடக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு பின்னர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தற்காலச் சீனாவின் செல்வம், சலுகைகள் படைத்த சமூக அடுக்குகளின் பிரதிநிதிகளுடைய ஆட்சிக்குழுவாக வெளிப்பட்டுள்ளது; அரசாங்க மற்றும் கட்சி அதிகாரத்துவத்தினர், இராணுவ உயர் அதிகாரிகள், தனிப்பட்ட வணிகர்கள், வசதிபடைத்த உயர்தொழில் புரிவோர் மற்றும் நாட்டின் சிறுபான்மை இனத்தினரின் உயரடுக்கு ஆகியோர் இதில் உள்ளனர். மாறுபட்ட, எதிரெதிரான நலன்கள் அவர்களுக்கு மத்தியில் இருந்த போதிலும், இவர்கள் அனைவரும் மிகவும் அதிகரித்துவரும் தொழிலாள வர்க்கத்திடம் விரோதப்போக்கை பொதுவாக கொண்டிருப்பதுடன், அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை சர்வாதிகார வழிவகைகள் மூலம் இறுக்கமாகிக் கொள்வதில் உடன்பாடுடையவர்கள்.

ஹுவின் ஒரே "அரசியல் சீர்திருத்தம்" உட்கட்சி தேர்தல்களில் இன்னும் கூடுதலான வேட்பாளர்களை அனுமதிப்பதாகும். உதாரணமாக மத்திய குழுவிற்கான வேட்பாளர்களில் 8 சதவிகிதத்தினர் அகற்றப்பட்டனர்; முன்பு இது 5 சதவிகிதமாக இருந்தது. இவையனைத்தும் அதிகாரத்துவம் முன்னைவிட கூடுதலான வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்தது என்று பொருளாகும். உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்களுடைய ஓய்வுபெறும் வயது 68 என்றும் அவர் முறைப்படுத்தினார்; அதிகாரம் உறுதியான வகையில் மாற்றப்படும் என்பதைச் சந்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், தன்னுடைய பழைய குழுவாத போட்டியாளர்களை வெளியே அகற்றும் வகையிலும் இது நடந்தது.

அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகம் காங்கிரஸுக்கு முன்பு அரசியல் எதிர்ப்பாளர்களையும், நடவடிக்கையாளர்களையும் மெளனப்படுத்துவதற்கு, குறிப்பாக பெய்ஜிங்கில் எதிர்ப்புக்களை தடை செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய போலீஸ் செயற்பாடுகளை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. நாட்டின் இணையதள போலீஸும் தணிக்கை வழிகாட்டி நெறிகளை இறுக்கமாகப் பிடித்து வலைத்தளங்களை முக்கிய கட்சிக் குழுக்களில் இருக்கும் தலைவர்களை பற்றிய விவாதம் நடத்துவதைத் தடை செய்தது.

பெரும் பரபரப்புக்கு இடையே, ஹு பெரும் நம்பிக்கையுடன் புதிய நிரந்தர அரசியல்குழுவை கடுமையான படிநிலை ஒழுங்கின்படி திங்கள் அன்று செய்தியாளரிடம் முன்வைத்தார். தலைமை முடிவெடுக்கும் குழுவின்மீது அவர் உறுதியான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்து, கட்சியின் செயலாளராகவும் மற்றும் மத்திய இராணுவக் குழுவின் தலைவராகவும் "மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்."

முந்தைய காங்கிரஸில் 2002ல் ஹு பொறுப்பு எடுத்துக் கொண்டபோது, அப்பொழுது தலைவர் பதவியில் இருந்து விலகிய Jiang Zem இன் நிரந்தர அரசியல்குழு ஷாங்காயைத் தளமாகக் கொண்ட கட்சி அமைப்பில் இருந்த தன்னுடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட வகையில் இருக்குமாறு செய்திருந்தார். இப்பொழுது அப்பிரிவில் இருந்து மூன்று முக்கிய நபர்கள் கீழிறங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்; உத்தியோகபூர்வமாக வயது முதிர்வுதான் காரணம் ஆகும்: துணை ஜனாதிபதி Zeng Qunghong, நாட்டின் பாதுகாப்புத் தலைவர் Luo Gang மற்றும் கட்சிக் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பான Wu Guanzheng ஆகியோரே அவர்கள். Huang Ju இவ்வாண்டின் முதல் பகுதியில் இறந்தபோனார். Jia Qinlin உம் Li Changchun உம் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர்; ஆனால் இருவர்மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகின்றன.

Jiang கின் செல்வாக்கை ஹு குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறார். காங்கிரஸிற்கு சில நாட்களுக்கு முன்பு, உயர்மட்டத் தலைமைக் குழு ஒன்று முன்னாள் ஷாங்காய் கட்சித் தலைவர் Chen Liangyuவை அகற்றி அவரை அரசாங்க வக்கீலிடம் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளுவதற்கு ஒப்படைத்தது. பொருளாதார வளர்ச்சியின் வேகம் பற்றி Jiang இன் பிரிவுடன் ஹு தீவிரமான கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். வணிகத்தின் சக்தி வாய்ந்த பிரிவு ஒன்றும், உட்கட்சித் தலைவர்களும் ஹுவின் ஊக முதலீட்டைக் கட்டுப்படுத்தும் கொள்கையை எதிர்க்கின்றனர்; இதில் ஷாங்காயின் பிரிவு, Chen இன் கீழ் முன்னணியில் உள்ளது.

நான்கு புதிய, இளைய நிரந்தரக்குழு உறுப்பினர்களாக, இப்பொழுது ஷாங்காய் கட்சி செயலாளராக இருக்கும் Xi Jinping (Chen இற்கு பதிலாக கடந்த ஆண்டு வந்தவர்), வடகிழக்கு லியோனிங் மாநிலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கும் Li Keqiang, பொதுப் பாதுகாப்பு மந்திரியாக உள்ள Zhou Yongkang மற்றும் கட்சி அமைப்பாளர் He Guoqiang நியமிக்கப்பட்டுள்ளனர். Xi, Li இருவரும் 50 வயதின் முற்பகுதியில் இருப்பவர்கள்; 2012 ல் இரண்டாம் வரைகாலம் முடிந்த பின் ஹுவிற்கு பின் வரக்கூடிய வேட்பாளர்களாக இருக்கக்கூடியவர்கள். குறிப்பாக Li, ஹுவின் நெருக்கமான ஆதரவு பெற்ற, கம்யூனிஸ்ட் இளைஞர் குழுவில் இருந்து கொண்டுவரப்பட்டவர் ஆவார். நிரந்தரக்குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்கள் ஹு, அவருடைய நெருக்கமான நண்பர் பிரதமர் Wen Jiabao மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் தலைவரான Wu Bangguo ஆகியோர் ஆவர்.

அக்டோபர் 22ம் தேதி நியூயோர்க் டைம்ஸ், Li தனக்குப் பின் பதவிக்கு வருவார் என முடிசூட்ட ஹு முயற்சி செய்கிறார் என்றும் நிரந்தரக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 9இல் இருந்து 7 ஆகக் குறைக்க முயல்கிறார் என்றும் இரண்டு முயற்சிகளிலும் தோல்வியுற்றார் என தகவல் கொடுத்தது. Xi Jinping திடீரென வெளிப்பட்டுள்ளது ஹு பிளவுப்பூசல் அதிகாரப் போட்டியில் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் என்பதைக் காட்டுகிறது. Xi கட்சியின் "இளவரசர்களில்" ஒருவராவார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பெருந் தலைவர் Xi Zhongxun உடைய மகன் ஆவார்.

Xi, Li இருவரும் ஹு போன்ற குணநலன்களையே கொண்டவர் ஆவர். உயர் வர்த்தக பதவி வகிப்பவர்களாக(Technocrats) இருவரும் இருப்பதுடன் 1949 புரட்சியுடன் எவ்விதத் தொடர்பும் அற்றவர்கள். 1960 களின் அழிவைத் தந்த கலாச்சாரப்புரட்சிக் காலத்தில் ஹு செம்படையின் உறுப்பினராக இருந்து கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கில் இருந்து படிப்படியாக முன்னேறி Gansu மற்றும் Tibet இல் கட்சித் தலைவரானார். Xi, Li இருவரும் மாவோவிற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; அவர்களுடைய வாழ்க்கைப்போக்கு முழுவதும் கடந்த கால் நூற்றாண்டின் "சந்தைச் சீர்திருத்தங்களுடன்" பிணைந்தது ஆகும்.

இந்த இரு புதிய அரசியல் "நட்சத்திரங்களுக்கும்" மக்களிடையே ஆதரவு உடையவர்கள் அல்ல. பெய்ஜிங்கில் ஒரு சைக்கிளில் சுற்றும் ஜவுளி வியாபாரியான Zhai Hongwei Australian ஏட்டிடம் "நிரந்தரக்குழுவில் இருக்கும் நபர்களைப் பற்றி நான் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. இவர்கள் சாதாரண மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்வர், எங்களைப் போன்றவர்களுக்கு ஏதேனும் நடைமுறை நன்மை செய்வர் என்று, நாங்கள் நம்புகிறோம்." வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள Li Xiaohong கூறினார்: "வேலையின்மை பற்றி புதிய தலைவர்கள் ஏதேனும் செய்வர் என்று நம்புகிறோம். எங்களைப் போன்றவர்கள், 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறோம்; விலைவாசிகளும் அதிகம் உயர்ந்துவருகின்றன." எனக்கூறினர்.

ஆனால் Li, Xi இருவரும் உலக நிதிய வட்டங்களில் நன்கு அறியப்பட்டவர்கள். அமெரிக்க நிதி மந்திரி ஹென்ரி பெளல்சன் Xi ஐ, "இலக்கை எப்படி கடப்பது என்பது பற்றி நன்கு அறிந்த நபர்" என்று பாராட்டியுள்ளார். Goldman Sachs இன் தலைவராக இருக்கையில் பெளல்சன் வணிக தொடர்புகள் மூலம் Xi ஐத் தெரிந்திருந்தார். Citigroup இல் மூத்த ஆலோசகராக இருக்கும் Rober Kuhn, Bloomberg செய்திநிறுவனத்திடம் "இவர்கள் இருவரும் (Xi, Li) வணிகச் சார்புடையவர் என அறியப்பட்டுவர்கள், இதைவிட ஒரு சிறந்த குழுவை நான் கற்பனை செய்தும் பார்க்க முடியாது." என தெரிவித்தார்.

Wall Street Journal ஆர்வத்துடன் எழுதியது: "தங்களுக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே, இளைய தலைவர்களும் கட்சிக்கு விசுவாசமான உறுப்பினர்கள் ஆவர்; கொள்கை மாற்றுவதில் தீவிரப்போக்கை கடைப்பிடிக்க மாட்டார்கள். முந்தைய தலைமுறையின் பின்னணி அந்த சகாப்தத்தின் நோக்கமான அணைகள், பாலங்கள், மற்ற உள்கட்டுமானங்களை அமைப்பதில் இருந்ததோ, அதே போல்தான் இந்தப் புதிய தலைமையின் சட்டம் மற்றும் சமூக அறிவியல்களை பொறுத்தவரையிலான அனுபவங்கள் சீனாவின் அரசியல், நிதிய முறைகள் அதன் வளர்ச்சி பெற்றுவரும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் உள்ளன."

ஹு ஜின்டாவோவின் "கொள்கை"

இவருக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே, ஹுவும் தன்னை ஒரு புதிய சிந்தனையாளர் என்று காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார். "அபிவிருத்திக்கு அறிவியல் சார்ந்த பார்வை'' வழங்கும் தன்னுடைய உறுதிப்பாட்டை கொடுக்கும் வகையில் அது கட்சியின் அமைப்புவிதிகளுக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறது. மாநாட்டில், ஜனாதிபதி மீண்டும் ஒரு "இணக்கமான சமூகத்தை" கட்டமைப்பதாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மக்களுக்கு பெயரளவு சமூகச் சலுகைகள் கொடுப்பது ஆகியவற்றை உறுதி கொடுத்துளார். இவை அனைத்தும் தொழிலாளர் வர்க்கம் அல்லது விவசாயிகளுடைய நலன்களுடன் எவ்விதத் தொடர்பும் கொண்டவை அல்ல; ஆனால் சீனாவை தொழில்நுட்பத் துறையில் அதிநவீனம் நிறைந்த பொருளாதார சக்தியாக மாற்றி வளர்க்கும் புதிய முதலாளித்துவ உயரடுக்கின் முனைவுகளை வெளிப்படுத்துகின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் ஆரம்பமானதை ஷாங்காய் பங்குச் சந்தை கொண்டாடும் வகையில் கடந்த திங்கள் அன்று முதல் தடவையாக 6,000 புள்ளிகளைக் கடந்தது. 2002ல் ஹு பதவிக்கு வந்தபோது சீனாவில் பில்லியனர்கள் இருந்தது இல்லை. காங்கிரஸிற்கு முன்பு வெளியிடப்பட்ட சமீபத்திய செல்வந்தர் பட்டியல் எப்படி "கம்யூனிஸ்ட்" சீனாவில் இப்பொழுது 106 பில்லியனர்கள் உள்ளனர் என்றும் 400 பில்லியனர்கள் இருக்கும் அமெரிக்காவிற்கு அடுத்த நிலை இங்குத்தான் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில், சீனாவின் 40 மிகப் பெரிய செல்வந்தர்கள் தங்கள் வருமானங்களை மும்மடங்காக்கினர்; இப்பொது அவர்கள் 120 $ பில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் குழந்தைகள் பலரும் பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

தொடர்ச்சியான புள்ளிவிவரங்கள் பல ஹுவின் கீழ் முதலாளித்துவ வளர்ச்சியின் விரைவுத் தன்மையைக் காட்டுகின்றன. சீனாவின் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் 2002ல் $286.4 பில்லியனில் இருந்து $1.41 டிரில்லியன் ஆக இந்த ஆகஸ்டில் பெரும் உயர்வைப் பெற்றுள்ளன. சீனாவின் வெளிநாட்டு வணிகம் 2002 இல் $620.8 பில்லியனில் இருந்து 2006 இல் $1.76 டிரில்லியன் என்று வளர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், நாட்டின் நிலக்கரி பாவனை 1.37 பில்லியன் டன்களில் இருந்து 2.37 டன்களாக உயர்ந்துள்ளது; எரிபொருள் பாவனை 247.8 மில்லியன் டன்களில் இருந்து 320 டன்களாக உயர்ந்துள்ளது. சில ஆய்வாளர்கள் சீனா ஜேர்மனியைக் கடந்து அமெரிக்காவிற்கும், ஜப்பானுக்கும் அடுத்ததாக உலகின் மூன்றாம் பொருளாதாரமாக இவ்வாண்டு இறுதிக்குள் வந்துவிடும் என்று கணித்துள்ளனர்.

ஹு "தொழிலாளர் வர்க்கம்" என்ற சொற்றொடரை தன்னுடைய இரண்டரை மணி நேர ஆரம்ப உரையில் ஒரு முறைதான் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. ஆயினும் இந்தச் சமூக சக்தியைச் சுரண்டுதல்தான் முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பெரும் செல்வத்தைத் திரட்டுவதின் உண்மையான அடிப்படையாகும். பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் விளைவாக கிட்டத்தட்ட சீன ஜனத்தொகையில் பாதிபேர் இப்பொழுது நகரங்களில் (560 மில்லியன் மக்கள்) வாழ்கின்றனர்; இது 1980ல் 20 % ஆகத்தான் இருந்தது. குறைந்தது 109 மில்லியன் சீனத் தொழிலாளர்களாவது உற்பத்தித்துறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; இது அனைத்து G7 தொழில்துறை நாடுகளின் மொத்தக் கூட்டுத் தொகையைவிட (53மில்லியன்) இரு மடங்கு ஆகும். சீனாவின் சராசரி ஊதியம் மாதம் ஒன்றிற்கு $230 என 2006இல் இருந்தது (பல மில்லியன்கள் மிகக்குறைவான ஊதியம் பெறும் கிராமப்புற நகரும் தொழிலாளர்களை தவிர்த்து). இது அமெரிக்க தரத்தில் 7 சதவிகிதம்தான். இத்தகைய மிகப் பெரிய குறைவூதியத் தொழிலாளர் பிரிவு சீனப்பொருளாதாரத்தின் செயற்பாடுகளுக்கு மட்டும் இல்லாமல் உலக முதலாளித்துவத்திற்குமே முற்றிலுமாக முக்கியமானது ஆகும்.

2002இல் நடந்த கடைசிக் கட்சிக் காங்கிரஸில் Jiang Zemin சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு "தொழிலாளர் வர்க்க" கட்சி என்ற பொய்யைப் புதைத்து, தனி வணிகர்களுக்கு இதன் கதவுகளைத் திறந்துவிட்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது "சீன மக்களின்" கட்சி, "தேசிய புத்துணர்வின்" கட்சி என்று அறிவித்த வகையில், ஜியாங்கும், ஹுவும் சீனச் சமூகத்தில் இருக்கும் ஆழ்ந்த வர்க்கப் பிளவை மறைக்க முற்பட்டனர். அவர்களிடையே தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், 1949 புரட்சிக்குப் பிறகு அகற்றப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்ற சீனாவில் நடைபெறும் மிருகத்தனமான முதலாளித்துவச் சுரண்டலின் உண்மைகளை மறைத்தல் என்று வரும்போது ஹுவும் ஜியாங்கும் நெருக்கமான தோழர்களே.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் அப்பட்டமான ஒரு கருவி என்ற உண்மை சர்வதேச செய்தி ஊடகத்தில் நன்கு அறியப்பட்டு ஒரு நகைச்சுவை போல் கையாளப்படுகின்றது. The Financial Times "அரசாங்க வணிகத்தின் முக்கிய இருப்புக்கள்மீது கட்சியின் கட்டுப்பாடு, மற்றும் தனியார் துறையை ஆதிக்கத்தில் கொள்ள அது கொண்ட முயற்சிகள் ஆகியவை இந்த அமைப்பை "உலகின் மிகப் பெரிய பங்கு நிறுவனம்போல்" ஆக்கியுள்ளது என்று பெய்ஜிங்கில் உள்ள Carnegie Endowment for International Peace அமைப்பை சேர்ந்த Ding Xueliang கூறுகிறார். மற்றவர்கள் இது அரசியல் கட்சி என்பதை விட வணிகர்களின் சங்கம் போல் இருக்கிறது என நகைச் சுவையுடன் கூறுகின்றனர்'' என குறிப்பிட்டது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்டுள்ள Independent பத்திரிகை அக்டோபர் 22 பதிப்பில் காங்கிரஸின் பிரதிநிதியும், ஆசியாவிலேயே அலுமனியம் கலந்த உலோகங்களின் கலவை சக்கரங்களை மிகஅதிகளவில் உற்பத்தி செய்யும் Wanfeng Auto Holding Group நிறுவனத்தின் 49 வயதான தலைவர் சுட்டிக்காட்டியது. இந்த அம்மையார் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரில் செல்லுகிறார்; பெரும் வளர்ச்சி பெற்று வரும் Zhejiang மானிலத்தின் "கம்யூனிஸ்ட்" தனியார் முதலாளிகளைப் பிரதிபலிக்கிறார். இவர் 1995ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்; இப்பொழுது இவருடைய நிறுவனத்திலேயே கட்சிக் கிளை ஒன்றும் உள்ளது. "கடந்த ஆண்டு 1,554 முதலாளிகள் கட்சியில் சேர்ந்தர்; ஒரு சிறிய எண்ணிக்கைத்தான், ஆனால் அவர்களுடைய செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் முக்கியமான எண்ணிக்கையாகும். பங்குச் சந்தையின் ஏற்றம் மற்றும் பல ஆண்டுகளாக இரு இலக்கப் பொருளாதார வளர்ச்சியும் ஒரு புதிய முதலாளிவர்க்கத்தின் எழுச்சிக்கு வகை செய்துள்ளது; அதே போல் சீனாவின் 345,000 டாலர்-மில்லியனர்களும் கட்சிக்குள் நல்ல வரவேற்பையே பெருகின்றனர்" என்று Independent எழுதியுள்ளது.

சந்தை நடைமுறை, தனியார் நிறுவனங்களின் செல்வம் மற்றும் பெருநகரங்களில் எழுச்சி பெற்று வரும் மத்தியதர வகுப்பு ஆகியவை "ஜனநாயக சீர்திருத்தம்", "சட்டத்தின் ஆட்சி", அரசாங்க அதிகாரத்துவத்தை நெறிப்படுத்துதல் போன்றவற்றிற்கு ஹு போலித்தனமாக கட்டியம் கூறும் வகையில் இருப்பதின் பின்னணியில் உள்ளவை ஆகும். சீனாவில் ஒரு கட்சி அரசாங்கம் ஒற்றைப் பெரும் அமைப்பாக இப்பொழுது இல்லை; மாறாக மத்திய, உள்ளார் அரசாங்கங்களின் நலன்களுக்கு இடையே போட்டி, மற்றும் பொருளாதாரப் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் போட்டிகள் மற்றும் தனியார்மய நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி இவற்றையெல்லாம் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஆளும் உயரடுக்கு ஆழ்ந்த சமூகப் பிளவுகளை ஒடுக்குவதற்கும், தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், கிராமப்புற வறியவர்களை அடக்குவதற்கும், முதலாளித்துவப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஆதரவைக் கொடுப்பதற்கும் சர்வாதிகார வகையிலான ஆட்சியைத்தான் பெருகிய முறையில் நம்பியுள்ளது.

ஹுவின் கோஷமான "இணக்கமான சமூகத்தை" கட்டமைத்தல் என்பது இந்த எதிரெதிர் கோரிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும், பெருகிய முறையிலுள்ள ஜாலவித்தையில் இருந்து வருகிறது. எரிபொருள் மற்றும் இயற்கை இருப்புக்களின் நுகர்வைக் குறைப்பதற்கு ஒரு "சமப்படுத்தப்பட்ட" வளர்ச்சி வேண்டும் என்று இவர் வாதிடுகிறார். 1990 களில் இருந்து தொழிலாளர் அதிகமாக உடைய மற்றும் எரிபொருள் கூடிய தேவையுடைய தொழில்களின் மிகப் பெரிய விரிவாக்கம் துவங்கியது. இது சீனாவின் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி, பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. உள்நாட்டு நுகர்வு மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு பற்றிய புதிய வலியுறுத்தல் சீனாவின் பெரும் ஏற்றுமதிச் சந்தைகளான அமெரிக்க, ஐரோப்பாவில் பெருமந்த நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற பெருகிய அச்சங்களுடன் பிணைந்துள்ளது.

தொழில்நுட்பரீதியாக முன்னேற்றமடைந்த முதலாளிகளை பொருளாதார வளர்ச்சியின் வெற்றியாளர்களாக பெய்ஜிங் முன்வைக்கின்றது. இது ஒரு சந்தைப்படுத்தும் மூலோபாயமே தவிர சுற்றுச்சூழல் பாதிப்பை நிறுத்தவோ, சமூகச் சமத்துவமின்மையை அகற்றவோ இது ஏதும் செய்யாது. ஹுவின் "பசுமை" கொள்கையினால், இந்த ஆண்டு Forbes பட்டியலின் 40 உயர்மட்ட சீன பில்லியனர்களில் சூரிய விசை பெருநிறுவனங்கள் இரண்டின் உரிமையாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பெய்ஜிங் பசுமை இல்ல வாயு (Greenhouse gases) பற்றி உறுதியான உத்தரவாதம் எதையும் கொடுக்க மறுக்கிறது; அது சீனாவின் பெரும் வளர்ச்சி பெற்றுவரும் ஆனால் கட்டுப்படுத்தமுடியாத தொழில்துறை உற்பத்தியைக் குறைத்துவிடும் என்று அஞ்சுகிறது.

ஹு ஒரு அடிப்படை சமூகப் பாதுகாப்பிற்கும் உறுதி கொடுத்துள்ளார்; "இதையொட்டி ஒவ்வொருவருக்கும் அடிப்படை வாழ்க்கைத்தர உத்தரவாதங்கள் கிடைக்கும்." "மத்தியதர வருமானம்" இருக்கும் குடும்பங்கள்தான் வருங்காலத்தில் மக்களின் பெரும்பான்மையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சீன ஜனாதிபதி சீன மக்களை எதிர்கொண்டிருக்கும் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தீவிர நடவடிக்கைகளைக் கூறவில்லை: அதாவது வாங்கமுடியாத விலைகளில் இருக்கும் வீடுகள், கெளரவமான வேலைகள் இன்மை, கிராமப்புற வறுமை மற்றும் அதிக செலவில் இருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றி ஏதும் செய்யவில்லை.

நாட்டின் 1.3 பில்லியன் மக்களுடனை பிணைந்து பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு அரசாங்கத்தினால் ஓரளவு நிதியம் கொடுக்கப்படும் குறைவான சமூகக் காப்பீட்டுத் திட்டங்கள் அல்ல. இதற்கு சமூகத்தின் செல்வத்தை பில்லியனர்களிடம் இருந்து மில்லியனர்களிடம் இருந்தும் உழைக்கும் மக்களுக்கு தீவிரமான முறையில் மறுபங்கீடு செய்வதுதான் முக்கியமாகும். ஹுவின் "இணக்கமான சமுதாயம்" என்பது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெருகியுள்ள பரந்த பிளவு இன்னும் கூடுதலான சமூக உறுதியற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்பிற்கு வழிசெய்யும் என்ற ஆளும் உயரடுக்கின் அச்சங்களைத்தான் வெளிப்படுத்துகிறது.

Financial Times வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டு "சிறுபொருளாதார சமசீரற்ற தன்மைகள் --கூடுதலான முதலீடு, அந்நிய செலாவணி இருப்பின் அதிகரிப்பு--தொடர்கின்றன. சுற்றுச் சூழல் சீரழிவும் தொடர்கிறது. வருமான சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது." தற்பொழுதைய ஊக முதலீட்டு குமிழ்களின் சரிவு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். "திரு.ஹுவிற்கு சிறந்த விளைவு 17வது மாநாட்டில் தன்னுடைய அதிகாரத்தை முற்றிலும் நிறுவுவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்; அரசியல் தேக்கத்தை முறிக்கிறார், நீண்டகாலம் தாமதிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களைத் தைரியமாக செயல்படுத்துகிறார். அவருக்கு வேறு வழி இல்லாமல் இருக்கலாம். புயலுக்கு முன் காங்கிரஸ் கடைசி கட்சியாக இருக்க வேண்டும் என்று எந்த சீனத் தலைவரும் விரும்பமாட்டார்." எழுதியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை உறுதித்தன்மை, பொருளாதார வளர்ச்சி, இலாபங்கள் ஆகியவற்றிற்கு உறுதி அளிப்பதாக காட்ட முயற்சித்தாலும், சீனாவின் ஆளும் வர்க்கங்கள் மற்றும் சர்வதேச அளவிலும் பொருளாதார அதிசயம் என அழைக்கப்படுவது விரைவில் சரியக் கூடும் என்ற தீவிரக் கவலையையும் உள்ளது.