World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 3: யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்

விஜே டயஸ்

Use this version to print | Send this link by email | Email the author

1964ல் தொழிலாளர்களின் 21 கோரிக்கைகள் இயக்கம் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யும் விதத்தில் வளர்ச்சி கண்டு வருகையில், அரசாங்கத்தை காக்கும் பொருட்டு கம்பளம் விரித்து அழைத்துக் கொள்ளப்பட்ட சமசமாஜத் தலைவர்கள், அதில் இருந்து 11 ஆண்டுகளின் பின்னர் 1975ல் காலால் உதைக்கப்பட்டு கலைக்கப்பட்டமையானது உலகளாவிய ரீதியில் பற்றிப் படர்ந்து வந்த வலதுசாரிப் போக்கினை சுட்டிக்காட்டியது. 1968-75க்கு இடைப்பட்ட காலத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு முகம் கொடுத்த நெருக்கடி நிலைமையின் மத்தியில் தோன்றிய மக்கள் கிளர்ச்சி அலைகளை பின்வாங்கச் செய்து சீரமைத்துக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு பதில் நடவடிக்கையும் அதன் மூலம் வெளிப்பாடாகியது. இலங்கையில் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே உலகம் பூராவும் ஸ்டாலினிச மற்றும் சீர்திருத்தவாத முதலாளித்துவ கையாட்கள் பப்லோவாதிகளின் உதவியுடன் பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிலும் அவ்வாறே இந்தியத் துணைக்கண்டம் போன்ற பின்தங்கிய நாடுகளிலும் பற்றிப் படர்ந்து வந்த ஒரு தொகை மக்கள் கிளர்ச்சிகளை முதலாளித்துவ சிறையினுள் சிறைபிடித்து வைக்க முயன்றனர். 1975ல் வியட்நாமிலும் கம்போடியாவிலும் லாவோசிலும் அமெரிக்க ஏகாதிபத்திய கைப்பொம்மை ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டமை இந்த மக்கள் கிளர்ச்சியின் உச்சக் கட்டமாக விளங்கியது. தேசியவாத ஸ்டாலினிஸ்ட்டுகள், இவற்றையும் சோசலிச விடுதலையை நோக்கிய பாய்ச்சலாக அல்லாது காலனித்துவ பின்தங்கிய நிலைமையின் அதி உயர்ந்த கட்டமாக வரையறுத்துக்கொள்வதில் கண்டிப்பாக இருந்தனர். எனினும், தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் தமது ஆட்சி அதிகாரத்திற்கு சவால் விடுப்பது சம்பந்தமாக, அவர்கள் தொடர்பாக பீதியும் ஆத்திரமும் கொண்ட ஆளும் வர்க்கம் 1975 கடைப்பகுதியில் நடவடிக்கையில் இறங்கிக்கொண்டன.

இந்தியாவில் இந்திரா காந்தி பிரசித்திபெற்ற அவசரகால சட்ட ஆட்சியை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு எதிராக 1975ல் களத்தில் குதித்தார். 1971ல் சுதந்திரம் எனப்படுவதை பெற்றுக்கொண்ட பங்களாதேஷின் விடுதலை நாயகனாக நடித்த முஜுபுர் ரஹுமான் 1975ல் தனிக்கட்சி ஜனாதிபதி சர்வாதிகாரத்தினை திணித்தார். அதே ஆண்டில் அவரின் மரண சடங்கின் மீதாகவே இராணுவம் "மார்ஷல் சட்ட" ஆட்சிக்கு பங்களாதேஷ் மக்களை கீழ்ப்படுத்தியது. பாகிஸ்தானில் அலி பூட்டோ ஜனநாயகத்துடன் கொண்டிருந்த இரத்தம் தோய்ந்த காதலை முடிவுக்கு கொண்டுவந்து, 1977ல் ஷியா ஹுல் ஹக் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இலங்கையினுள் கூட்டரசாங்கத்தின் கீழ் பீலிக்ஸ் பண்டாரநாயக்கவை சுற்றி திரண்ட அதிகாரம் படைத்தவர்களின் கும்பல், சமசமாஜக் கட்சி தலைவர்களின் துரோகத்தினால் குழம்பிப்போயிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஒடுக்கப்படும் மக்கள் மீதும் மிலேச்சத் தாக்குதல் தொடுப்பதற்கு களம் அமைத்துக்கொள்ள இணைந்து கொண்டது. இந்நிலையில் சமசமாஜக் கட்சி இழைத்த காட்டிக்கொடுப்பிற்கு அதற்குக் கிடைத்த பரிசு கால் உதையாகும்.

இதன் மூலம், சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களை கூட்டரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த கோரிக்கையை சூழ, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக பொது மக்களிடையே முன்னெடுத்த இயக்கத்தின் காலப் பொருத்தம் மேலும் ருசுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களினதும் உரிமைகளைக் காக்கும் போராட்டத்திற்கு அத்தியாவசியமான நிலைமை, முதலாளி வர்க்கத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக அரசியல் நடைமுறையில் கால் ஊன்றுவதாகும். ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மையமான இதற்கு புறமுதுகு காட்டியவர்களுக்கு வரலாற்றில் இந்த நூற்றாண்டு பூராவும் கிடைத்துள்ள கசையடி படுமோசமானது. சமசமாஜ தலைவர்களுக்கு கிடைத்த காலுதை இதில் இருந்து வேறுபட்டது அல்ல.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாளர் வர்க்க சுயாதீன அரசியல் நடைமுறைக்காக முன்னெடுத்த போராட்டம் நனவான தொழிலாளர் இளைஞர் பகுதியினர் இடையே ஈர்ப்பை வெற்றிகொண்ட போதிலும் இன்னமும் அது பொது மக்கள் இயக்கத்தினுள் சிறிதாக விளங்கியது. இதன் கொடிய எதிரியாக சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களைப் போலவே சகல வகையறாக்களைச் சேர்ந்த திரிபுவாதிகளும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் செயல்பட்டனர். இவர்கள் சகலரும் வலதுசாரிகளை பலப்படுத்துவதிலும் 1977ல் யூ.என்.பி. க்கு ஐந்தில் நான்கு பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை கையளிப்பதிலும் பங்காளர்களாக விளங்கினர்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பரிணாமம்

இந்த வலதுசரி அழுத்தம் தமிழ் முதலாளித்துவ அரசியல் இயக்கத்தின் உள்ளும் சமகாலத்தில் வெளிப்படச் செய்தது.

இந்த வலதுசாரி ஈர்ப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணி தனித் தமிழீழ அரசு பற்றிய சுலோகத்தைக் கையாண்டதன் மூலம் வெளிப்பாடாகியது. 1975 பெப்பிரவரி 6ல் நடைபெற்ற காங்கேசன்துறை இடைத்தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரச்சாரங்களில் அடிநாதமாக விளங்கியது இதுவே.

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஸ்டாலினிஸ்டான வி. பொன்னம்பலம் ஆவார். அது ஸ்டாலினிசம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பத்தில் இருந்து எடுத்த திருப்பத்தைக் குறித்து நிற்கின்றது. இங்கு நிச்சயமாக ஒருவருக்கு நினைவுக்கு வருவது ஸ்டாலினுக்கு எதிராக லெனின் தமது நோய்ப்படுக்கையில் இருந்தபடியே நடாத்திய போராட்டக் காலகட்டமாகும். ஸ்டாலினுக்கு எதிராக லெனின் சமரசம் அற்ற முறையில் போராடிய ஒரு அம்சம், ஜோர்ஜியா சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டதில் இருந்து ஜோர்ஜியன் தேசிய இனத்தவர்களுக்கு எதிராக ஜோர்ஜியன் தேசிய இனத்தவரான ஸ்டாலினால் ரூஷ்ய பேரினவாதத்தினைக் கட்டியணைத்துக் கொண்டு பலாத்காரத்தையும் காடைத்தனங்களையும் கையாண்டதாகும். அது பற்றிய விபரங்களை தர இந்தக் கட்டுரையில் அவகாசம் இல்லாத போதிலும், அந்த காட்டுமிராண்டி பேரினவாத சம்பிரதாயங்களை முன்னெடுத்த இலங்கை ஸ்டாலினிஸ்டுகள், தமது வேட்பாளரை தமிழ் மக்களிடையே தேர்ந்தெடுத்துக் கொண்டு சிங்கள பேரினவாத முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரதிநிதியாக காங்கேசன்துறைத் தொகுதிக்கு நிறுத்தியமை நிச்சயமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இடைத் தேர்தலில் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். வெற்றியின் பின்னர் செல்வநாயகம் ஆற்றிய உரையில், அனைத்து சிங்கள அரசாங்கங்கள் மீதும் குற்றஞ்சாட்டி பின்வருமாறு குறிப்பிட்டார். "ஆட்சியிலிருந்த சகல சிங்கள அரசாங்கங்களும், எமது அடிப்படை உரிமைகளை மறுத்தும் எம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்குத் தள்ளுவதற்காக சுதந்திரத்தில் இருந்து பெருக்கெடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் வந்துள்ளன என்பது துன்பகரமானது. நான் எனது மக்களுக்கும் நாட்டுக்கும் கூற விரும்புவது என்னவெனில், ஏற்கனவே தமிழ் மக்களுக்குரிய இறைமையை அனுபவித்த தமிழீழ தேசிய இனம் சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒரு ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன் என்பதையே ஆகும். தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்."

அதில் இருந்து தனித் தமிழீழ அரசுக்காக தமிழர் ஐக்கிய முன்னணி தொடுத்த பிரச்சாரத்தின் முக்கிய பேச்சாளராக அ. அமிர்தலிங்கம் விளங்கினார். அது அவரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் குத்துக்கரணமாக விளங்கியது. அதற்குக் காரணம், தனித் தமிழ் அரசு பற்றிய கோரிக்கை 1964ல் முதலில் தலைநீட்டிய போது அதன் முக்கிய எதிர்ப்புப் பேச்சாளராக அவர் விளங்கியதேயாகும்.

தனித் தமிழீழ அரசு பற்றிய கருத்து முதன் முதலில் சுந்தரலிங்கத்தினால் 1960களின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. அக்கருத்தின் அடிப்படையில் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற ஒரு கட்சியையும் அமைத்துக்கொண்டு, 1960 மார்ச், ஜூலை பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். அந்தத் தேர்தல் இயக்கத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சுந்தரலிங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றவர் அமிர்தலிங்கம்.

இருப்பினும் 1960 டிசம்பரில் தமிழரசுக் கட்சி செயற் குழுவினுள் சுந்தரலிங்கத்தின் கருத்து ஒரு பிரேரணை உருவில் வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. அது 1960ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதன் பின்னராகும். கமிட்டியின் 37 பேர் பிரேரணைக்கு ஆதரவாகப் பேசிய நிலைமையில், அதற்கு எதிரான விவாதத்துக்கு மீண்டும் முன்னணியில் நின்றவர் அமிர்தலிங்கமே. இன்னமும் அத்தகைய ஒரு பிரச்சாரத்துக்கு காலம் வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். "பிரிந்து போவது பற்றி யோசிப்பதற்கு இன்னமும் காலம் வந்துவிடவில்லை" என அவர் அன்று கண்டிப்பாகக் குறிப்பிட்டார்.

1975 அளவில் தமிழர் ஐக்கிய முன்னணியினுள்ளும் அமிர்தலிங்கத்தினுள்ளும் உருவான பரிணாமத்தின் பின்னணியில் இருந்த முக்கிய காரணி, சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்குகொண்ட முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் 1972 அரசியலமைப்புச் சட்டமும் அதன் அடிப்படையில் யுத்தப் பாதையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் உக்கிரமாக்கியமையும் விளங்கியது. ஒரு தமிழ் முதலாளித்துவக் கட்சி என்ற முறையில், தமிழர் விடுதலைக் கூட்டணியானது தமிழ் மக்களிடையே சிங்கள இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்புக்களைச் சுரண்டிக் கொண்ட தமிழ் முதலாளிகளின் வசதி வாய்ப்புக்களை உறுதிசெய்யும் தனிநாட்டை இலக்காகக் கொண்டே ஒழுங்கமைக்கப்பட்டது. அது தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்யும் அவசியத்தினால் உருவானது அல்ல. தமிழ் மக்களை சுரண்டிக்கொள்ளும் அவகாசத்தினை வழங்குவதற்கான பிற்போக்கு முதலாளித்துவ அவசியங்களுக்கு மட்டும் அவர்கள் தயாரானார்கள்.

1975 இலும் அதன் பின்னரும் கொழும்பு ஆளும் வர்க்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் உக்கிரமாக்கப்பட்டதைப் பற்றி எந்தவொரு மன்னிப்பும் வழங்காவிட்டாலும், தனி அரசு கோட்பாட்டை நோக்கி தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் திரும்பியமை, உலக அரசியல் நிலைமையினுள் வலதுசாரி நிலைப்பாடுகள் பலமடைந்ததுடன் தொடர்புபட்டதே என்பதை கூறாமல் இருக்க முடியாது.

முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினைப் போலவே, இனவாத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்கு வேலைத்திட்டங்களைத் தோற்கடிக்கும் சாத்தியம், இன்று போலவே அன்றும் அனத்துலகவாத புரட்சிகர வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் போராடிய ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கே உரியதாக விளங்கியது.

1975 பெப்பிரவரியில் இடம்பெற்ற காங்கேசன்துறை இடைத் தேர்தலை வென்றதன் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினால் வெளியிடப்பட்டதும் அமிர்தலிங்கத்தினால் மக்கள் பிரச்சாரத்துக்காக முன்வைக்கப்பட்டதுமான தனிநாடு கோரிக்கை, 1976 மே 14ம் திகதி நடைபெற்ற கட்சியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில் அக் கட்சியின் உத்தியோகபூர்வமான அரசியல் நிலைப்பாடாகியது. அந்த மகாநாட்டில் தமிழர் ஐக்கிய முன்னணியை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) எனப் பெயர் மாற்றவும் தீர்மானம் செய்யப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும் தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டிருந்தது.

1. கூட்டரசாங்கத்தின் குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஆண்டு நிறைவான 1975 மே 22ம் திகதி, தமது கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியில் இருந்து இராஜினாமாச் செய்த யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, இடைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்தார். அன்றைய கூட்டரசாங்கத்திற்குப் பதிலாக எதுவிதமான ஈடாட்டமும் இல்லாது ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய சபதம் பூண்ட, ஒரு பயங்கரமான வலதுசாரி அரசாங்கத்தினை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு மத்தியதர வர்க்கத்தினையும் குட்டி முதலாளித்துவத் தட்டினைரையும் அணிதிரட்டும் முயற்சியின் ஒரு திருப்பு முனையாக அது விளங்கியது.

யூ.என்.பி. அத்தகைய 'ஒரு துணிச்சலான' ஆரம்பிப்பில் இறங்கியமை, அனைத்துலக அரசியல் நிலைமையின் தாக்கத்தினால் ஏற்பட்டது அல்ல என பிறப்பிலேயே குருடாகப் பிறந்த ஒரு தேசியவாதியினால் மட்டுமே கூற முடியும். 1975ம் ஆண்டு ஏப்பிரலின் முதல் இரண்டு கிழமைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பெற்ற பிரமாண்டமான தோல்விகளால் நிறைந்து போயிருந்தது. கம்போடியா, லாவோஸ், வியட்னாமைக் கைப்பற்றிக் கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், பொது மக்களின் போராட்டங்களின் எதிரில் உயிரைப் பிடித்துக் கொள்வதற்காக கிடுநடுக்கம் பிடித்து ஓட்டம் பிடிக்கும் நிலை உருவானது. தெற்காசியாவில் இந்த ஆட்சி மையங்கள் சிதறடிக்கப்பட்ட ஒரு நிலைமையில், வெகு விரைவில் வேறு முகாம்களை அமைத்துக் கொள்ளும் அவசியம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டது. இலங்கையில் யங்கி டிக்கி (ஜே.ஆர். ஜயவர்தன) இதற்குப் பொருத்தமான கைப்பொம்மையென அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டனர். அதற்கு அவரின் ஆட்சியை உறுதியாக்க செய்யவேண்டிய சகலதையும் செய்ய அவர்கள் முன்வருவர் என எதிர்பார்க்க முடிந்தது. 1975 மே மாதத்தில் யூ.என்.பி.யின் "துணிச்சலான" சவாலின் பின்னணியாக, இந்த பிற்போக்கு ஏகாதிபத்திய ஆதரவு விளங்கியது.

இந்த ஏகாதிபத்திய திட்டங்களை சவால் செய்வதை முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் நிராகரித்தது. கொழும்பு தெற்கு தொகுதியில் சமசமாஜக் கட்சி தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருந்த போதிலும், கூட்டரசாங்கம் யங்கி டிக்கியுடன் தேர்தலில் போட்டியிட சிங்கள இனவாத கூச்சல்களுக்குப் பேர் போனவரான ஆர். ஆர். சூரியப்பெருமவையே நிறுத்தியது. இவர் பிற்போக்கு முகாமில் இருந்து கொண்டு காலத்துக்கு காலம் முகாமை மாற்றிக் கொண்டு, தோல்வி கண்டு வந்தவராவார். யங்கி டிக்கியை வெற்றியீட்ட வைக்கும் அமெரிக்கத் திட்டத்திற்கு இணங்க இது இடம்பெற்றது என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. சிறப்பாக கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியைச் சேர்ந்த வெள்ளவத்தை, கிருலப்பனை பகுதிகளில் வாழ்ந்த இலட்சோப லட்சம் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மேலும் குழப்பியடித்து நிராயுதபாணியாக்க இது திட்டமிடப்பட்டு நடைமுறைக்கிடப்பட்டது என்பதில் ஐயம் கிடையாது. தமிழர் ஐக்கிய முன்னணி வெளிப்படையாக இல்லாது போனாலும் யூ.என்.பி. க்கே ஆதரவு வழங்கியது. தொண்டமான் தமது யூ.என்.பி. ஆதரவு நிலைப்பாட்டை முன்கூட்டியே பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்ற விதத்தில் யூ.என்.பி. ஆட்சியை அமைப்பதற்கான இந்த ஆரம்ப நடவடிக்கைக்கு ஏற்றவாறு, சமசமாஜ-ஸ்டாலினிச துரோகிகளும் பங்கு கொண்ட முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தினதும் மற்றும் தமிழ் முதலாளித்துவப் பகுதியினரதும் வேலைத் திட்டங்களுக்கும் எதிராக, அந்த இடைத் தேர்தலினுள் சவால் செய்த ஒரே அரசியல் கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். அனைத்துலக சோசலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு முதலாளித்துவ கூட்டரசாங்கம் ஒரு பெரும் சவாலாக இருக்காதது போலவே, ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த யூ.என்.பி.யும் ஒரு சவாலாக இருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அன்று மத்திய குழு உறுப்பினரான ஆனந்த வக்கும்புரவை இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தி, சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டி இட்டு நிரப்ப வேண்டிய அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் இறங்கியது. கூட்டரசாங்கத்தின் வலதுசாரி ஈர்ப்பு மற்றும் யூ.என்.பி.யின் சவாலுக்கும் மத்தியில் சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முகம் கொடுத்து வந்த பெரும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி, அவர்கள் எடுக்க வேண்டிய அரசியல் தயாரிப்புக்களை தெளிவுபடுத்தியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். அந்தத் தெளிவுபடுத்தல்களின் பொருத்தத்தையும் செல்லுபடியான தன்மையையும் அளவிட வேண்டியது பு.க.க. பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. அன்று போலவே பிற்காலத்திலும் பொது மக்கள் புறநிலை ரீதியில் கண்ட வரலாற்று நிலைமைகளுக்கு இணங்கவே அளவிட்டாக வேண்டும். அன்று பு.க.க. முன்வைத்த அரசியல் ஆய்வுகளுக்கும் மாற்று வேலைத் திட்டத்துக்கும் முழுப் புள்ளி கிடைக்கின்றது.

2. கொழும்பு தெற்கு தொகுதி இடைத் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன அதிகப்படியான பெரும்பான்மை (25,800) வாக்குகளால் வெற்றி கண்டதன் பின்னர் கூட்டரசாங்கத்தின் வலதுசாரி பயணம் யூ.என்.பி.யுடன் போட்டிக்கு இடம்பெற்றது. ஜூலை 18ம் திகதி இடம்பெற்ற இடைத் தேர்தலின் சூடு இன்னமும் தணியாத ஒரு நிலையில், முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சித் தலைவர்களை கூட்டரசாங்க்ததில் இருந்து வெளியில் தள்ளத் தீர்மானித்தது. 1975 ஆகஸ்ட் 12ம் திகதி இடம்பெற்ற ஹர்த்தால் நினைவுதினக் கூட்டத்தில் என்.எம். பெரேரா நிகழ்த்திய பேச்சு இதற்கு சாட்டாக கொள்ளப்பட்டது.

என்.எம். பெரேரா அன்று நிகழ்த்திய உரை, இன்று வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் எதிரில் செய்யும் கோழைத்தனமான கெஞ்சல்களைக் காட்டிலும் அப்படி ஒன்றும் சவாலானதாக இருக்கவில்லை. சமசமாஜ தலைவர் அரசாங்கத்துக்கு நினைவூட்டியது எல்லாம் மக்களை குழப்ப தம்மால் சோடிக்கப்பட்ட கட்டுக் கதையையேயாகும். அதாவது "சோசலிசத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவே நாம் அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டுள்ளோம்" என்பதேயாகும்.

இந்தப் பொய் கட்டுக்கதைகளுள் ஒழிந்துகொண்ட சமசமாஜ தலைவர்கள், கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொண்ட நாளில் இருந்து அதுவரை ஆற்றிய ஏகாதிபத்தியச் சார்பு கடமை பற்றி எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடம் இருக்கவில்லை. எனினும், சிறப்பாக ஐரோப்பா பூராவும் 1968-75க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பரந்து வந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டத் தொடர்களினால் உருவான பீதியில் இருந்து தலையெடுக்க துரோத் தலைவர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்திக் கொண்ட ஏகாதிபதியவாதிகள், இலங்கையில் வர்க்கக் கிளர்ச்சிகளின் நிலைமைகளை முன்கூட்டியே சிதறடித்துவிட ஊக்கத்துடன் செயற்பட்டனர். இரத்தம் தோய்ந்த துரோகங்களினால் பொதுமக்களின் எதிரில் நாற்றம் கண்டுபோய்க் கிடந்த சமசமாஜத் தலைவர்களை வெளியே தள்ளி, வலதுசாரி அகதிகளாக்குவது அதற்கு உதவியாக இருக்கும் என அவர்கள் கணக்குப் போட்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த எச்சரிக்கை

எதிர்வந்து கொண்டுள்ள இந்த நிலைமையைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்தது ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் முன்னணி வாதத்தை எதிர்த்துப் போராடி வந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். "முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்து வெளியேறு" என சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களை நெருக்க பு.க.க. முன்வைத்த சுலோகத்தைச் சூழ, முன்கூட்டியே தனது அரசியல் சுயாதீனத்தினை மீண்டும் ஸ்தாபிதம் செய்யப் போராடாமல் இருந்திருக்கும் அளவுக்கு, தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியில் நிராயுதபாணியாகி, ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவில் இருந்து தனிமைப்பட்டும் இருந்தது. பிற்போக்காளர்களின் கால் உதையை வாங்கிக் கொண்டு ஈடாட்டம் கண்டவர்களாக பின் கதவினால் வெளியே தூக்கி வீசப்படும் "தொழிலாளர் கட்சிகள்" அத்தகைய ஒரு நிலைமையில் இட்டு நிரப்பக்கூடிய முற்போக்குப் பாத்திரம் எதுவும் கிடையாது. சமசமாஜக் கட்சி தனது நடைமுறை மூலம் அன்றில் இருந்து இன்றுவரை இந்த உண்மையை நிரூபித்துக்கொண்டுள்ளது.

நாம் மேலே காட்டிய ஒரு அரசியல் பின்னணியின் கீழேயே தனிநாடு கோரிக்கையையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகப் பெயர் சூட்டிக்கொள்வதையும் நிறைவேற்றிக்கொண்டிருந்த வட்டுக்கோட்டை மகாநாடு, தமிழர் ஐக்கிய முன்னணியால் நடாத்தப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியானது முதலாளித்துவ, முதலாளித்துவ சார்பு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கலாக அரசியல் மேற்கட்டுமானத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மட்டும் அல்லாது வர்க்கப் போராட்டங்களின் தீவிரத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருந்தது. சிங்களம் பேசும் தொழிலாளர் வர்க்கத்தினை முதலாளித்துவ கூட்டரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்களில் இருந்து மீட்டு போராட்டப் பாதையில் இழுத்து வைத்திருந்ததைப் போலவே, வடக்கில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களும், கூட்டரசாங்கம் இனவாத தாக்குதல்களுக்குள் கட்டிப்போட்டு தமது வாழ்க்கைக்கு தொடுத்த தாக்குதல்களுக்கு எதிராகவும் கிளர்ந்து போராடும் நிலைமைக்கு கிளம்பினர். இத்தகைய ஒரு கூட்டுத் தாக்குதலை நசுக்குவதற்கு அப்பால், தாங்கிப் பிடித்துக்கொள்ளக் கூடிய நிலைமையிலும் முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் இருக்கவில்லை. ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ சேவைக்கு அர்ப்பணம் செய்த ஆயுதப் படைகளின் தலைமையும் கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி - யூ.என்.பி. ஆகிய இரண்டுக்கும் இடையில் சிறைபட்டுக் கிடந்தது.

இந்த நிலைமையில் இருந்து தலையெடுப்பதற்காக, சமசமாஜக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி அகதி நிலைமைக்குள் தள்ளுவது சாத்தியமானது என ஆளும் வர்க்கம் சிந்தித்த அதே வேளை, தமிழ் மக்களை பொறுத்த மட்டில் தமிழர் ஐக்கிய முன்னணி தலைவர்களை சிறைக்குள் தள்ளி அதை இட்டு நிரப்பிவிட முடியும் எனவும் எண்ணியது.

தமிழர் ஐக்கிய முன்னணியின் வட்டுக்கோட்டை மகாநாடு நடைபெற்று ஒரு கிழமை கழிவதற்குள் அதன் தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு முதலாளித்துவ ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தது.

கூட்டரசாங்கத்தினால் குடியரசுத் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த மே 22ம் திகதி இடம்பெறும் கொண்டாட்டங்களைப் பகிஷ்கரிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குற்றத்தின் பேரில் 1976 மே 21ம் திகதி அ. அமிர்தலிங்கம் வீ.என். நவரத்தினம், கே.பி. இரத்தினம், கே. துரைரத்தினம், எம். சிவசிதம்பரம் முதலான தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மே 22ம் திகதி தம்புள்ளையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டார்: "குடியரசு அரசியலமைப்பையும் நாட்டின் அமைதியையும் காப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க எனக்கு நேரிட்டது" என்றார்.

அவர் ஒரே வசனத்தில் பொருத்திச் சொன்ன இரண்டு காரணங்களும் பொய்யானவை. 1. குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுவதைக் கட்டாயமாக்கும் சரத்துக்கள் அரசியலமைப்பில் இருக்கவில்லை. ஆதலால் விழாவைப் பகிஷ்கரிக்கும்படி கோருவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. ஆதலால் அத்தகைய கோரிக்கையை விடுத்தவர்களை கைது செய்வது அரசியலமைப்புச் சட்டத்தினைக் காப்பதாக இருக்கவில்லை.

2. இந்தக் நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு 1972 அரசியலமைப்புச் சட்டம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் தமிழ் மக்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான உள்நாட்டு யுத்தத்தின் திட்ட வரைவாக விளங்கியது. அதனைக் காப்பது என்பது சமாதானத்தைக் காப்பதன் எதிரிடையாக விளங்கியது. அரசியலமைப்புக்கு எதிர்ப்புக் காட்டியவர்களை கைது செய்வது என்பது நாட்டில் சமாதானத்தைக் காப்பதாகி விடாது. மாறாக, யுத்தத்தினை நோக்கி மேலும் ஒரு படி முன்செல்வதாகும். அந்தப் பிற்போக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வரைஞரான கொல்வின் ஆர். டி. சில்வாவின் முதுகில் விழுந்த கால் உதையில் அதுவே பொறிக்கப்பட்டு இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கின் தன்மையும் அதையே சுட்டிக்காட்டியது. நீதிமன்ற வழக்கு விசாரணை, ஜூரிகள் அற்ற விதத்தில் சிறப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட ஒரு நீதிமன்றத்துக்கு, சந்தேக நபர்களை பற்றிய ஒரு வழக்கு விசாரணையை நடத்த நியாய ஆதிக்கம் கிடையாது என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடக விளங்கியது. அப்பட்டமாகச் சொன்னால் அதன் அர்த்தம்: நிறுவப்பட்ட நீதிமன்றம் சட்டவிரோதமானது.

வழக்கு விசாரணைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் -1976 செப்டெம்பர் 19ம் திகதி இந்தச் சட்டப் பிரச்சினை மீது தீர்ப்பு வழங்கப்பட்டது- மாபெரும் சட்ட வல்லுனராக துள்ளிக்கொண்டிருந்தவரும் பிற்போக்கு வலதுசாரியாகப் புகழ் பெற்றவருமான நீதி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டையன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டையே நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதாவது அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் சட்டவிரோதமானது. நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்தது.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த அரசாங்கம், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தது. அதன் இலக்காக இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை எதுவிதத்திலும் சிறைக்குள் தள்ளி விடுவது அல்ல. 1977ல் நடைபெற இருந்த பொதுத் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தேர்தல் இலாபத்துக்கான பிற்போக்கு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும் நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பை மேன் முறையீடு இல்லாமல் ஒதுக்கி விடுவது முடியாது போயிற்று. ஏனெனில் அந்த தீர்ப்பு பாரதூரமான நிர்வாக நெருக்கடியைத் தோற்றுவித்தது.

நடைமுறையில் இருந்துகொண்டிருந்த அவசரகாலச் சட்டம் சட்டவிரோதமானதாயின் அதன் கீழ் அது வரை காலமும் எடுக்கப்பட்ட சகல நிர்வாக நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது போகும். அது முதலாளித்துவ ஆட்சியின் வீழ்ச்சியை தோற்றுவித்தது. பாராளுமன்றம் என்ற திரையினால் மூடி பொலிஸ்-இராணுவ ஆட்சிக்கு கதவுகளைத் திறந்து விடும் அவசரகாலச் சட்ட ஆட்சி வீழ்ச்சி காணுமானால், முதலாளி வர்க்கத்தின் புறத்தில் இருந்து கொண்டுள்ள தீர்ப்பு, இராணுவ-பாசிச சர்வாதிகாரத்துக்கு மாறுவதாகும். அன்று அதைச் செய்யக் கூடியதாக இருந்ததா? ஒரு புறத்தில் தெற்கில் தொழிலாளர் வர்க்கம் கொதித்து வர்க்கப் போராட்டப் பாதையில் இறங்கக் கர்ஜித்துக் கொண்டிருந்த நிலையில், வடக்கில் தமிழ் இளைஞர் பகுதியினர் ஆயுதம் தாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். இராணுவ சர்வாதிகாரத்துக்கு மாறிச் செல்வது என்பது பெரும் ஆபத்துக்களைக் கொண்ட ஒரு சூதாட்டமாக மாற இடமிருந்தது.

ஆதலால் ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் செய்துகொள்ளும் சமரசத்தின் மூலம் அதன் தலைவர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளவும் அவசரகாலச் சட்ட ஆட்சியைச் சட்டரீதியானதாக்கவும் முயன்றது.

அரசாங்கத்தின் மேன்முறையீட்டினை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதியரசர் விக்டர் தென்னக்கோன் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐவரைக் கொண்ட சபை, அவசரகாலச் சட்டம் சட்ட ரீதியானது எனத் தீர்ப்பு வழங்கியது. அப்போது எழுந்து நின்ற சட்டமா அதிபர் 'தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பது இல்லை' எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

முதலாளித்துவ அரசின் இன்றியமையாத பாகமான நீதிமன்றத்தின் பக்கச் சார்பற்ற தன்மை எனப்படுவதைப் போலவே முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையே பேரம் பேசுவதிலும் அதன் நாற்றம் கண்ட தன்மைக்கு இது நல்ல ஒரு எடுத்துக்காட்டான சந்தர்ப்பமாகும்.

யூ.என்.பி.யுடனான கூட்டை நோக்கி

எனினும் ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் கணக்குகள் சறுக்கிப் போயின. வழக்கில் இருந்து விடுதலையான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உடனடியாக யூ.என்.பி.யுடன் கூட்டு அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அது தமிழ் மக்களை இனவாத முதலாளித்துவ கூட்டரசாங்கத் தாச்சியுடன் கட்டிப் போடுவதற்குப் பதிலாக அடுப்புக்குள் தள்ளிவிடும் ஒரு விதிமுறையாகும் என்பதை அறியாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த தீர்மானம் அல்ல. அது தமிழ் முதலாளி வர்க்கம் நனவான விதத்தில் எடுத்த ஒரு தீர்மானம் ஆகும். சிறப்பாக அமெரிக்க ஆட்சியாளர்களை முன்னணியில் கொண்ட ஏகாதிபத்தியவாதிகள் யூ.என்.பி. க்கு வழங்கியிருந்த ஆதரவுக்கு அமைய எடுத்த ஒரு தீர்மானமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், முதலாளித்துவ ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தொடர்பான தமது எதிர்ப்பையும் மாற்று ஏகாதிபத்தியச் சார்பு யூ.என்.பி. தொடர்பான தமது நட்பையும் மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொண்டது "அணிசேரா மகாநாடு" எனப்படுவதன் பின்னராகும். "அணிசேரா மகாநாடு" ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சோவியத் ஸ்டாலினிச முகாமுக்கும் இடையேயான சுற்று மாற்றுக்களுக்கு, பின்தங்கிய நாடுகளில் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் திணித்த ஒரு மேடையாகியது. மூன்றாம் உலகம் எனப்படுவதன் குரலாகக் காட்டிக் கொண்ட இந்த மேடை உண்மையில் அந்தப் பின்தங்கிய நாடுகளில் வாழ்ந்த "நான்காம் உலகைச் சேர்ந்த" ஒடுக்கப்படும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த இருபக்கமும் தலைகள் உள்ள பாம்புகளின் இருப்பிடமாகியது.

1976 ஜூலை-ஆகஸ்ட் காலங்களில் அந்த ஊர்வன கும்பல் இலங்கைக்கு வந்தது சரிந்து வீழ்ந்து வந்த முதலாளித்துவக் கூட்டரசாங்கத்துக்கு பிராணவாயு ஏற்றுவதற்கேயாகும். இன்னமும் தமது ஏகாதிபத்தியச் சார்பு தன்மையை முழுமனே அம்பலமாக்கிக் கொள்ளாமல் இருந்து வந்த காஸ்ட்ரோ, கடாபி, அரபாத் போன்றவர்களை அணைத்துக்கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்க, இக்கட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த சமசமாஜக் கட்சித் தலைவர்கள் உட்பட முழு இடதுசாரி வேடதாரி கும்பல்களதும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கூட்டுச் சேரா நாடுகளின் தலைவியாகிக் கொண்டார். ஆனாலும் ஏகாதிபத்தியவாதிகளோ அக்கட்டத்தில் யூ.என்.பி. ஆட்சியாளர்களை இலங்கையில் ஆட்சிக்கு கொணரத் தீர்மானம் செய்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் தலைவர்கள் சாய்ந்தது ஏகாதிபத்திய சூறாவளி வீச்சுக்கு அமைய யூ.என்.பி. பக்கம் ஆகும். அது தற்செயலானது அல்ல. அது இந்தச் சகாப்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் மீது ஆதிக்கம் கொண்டிருந்த சகல முதலாளித்துவ இயக்கங்களதும் ஏகாதிபத்தியச் சார்பு தன்மையைச் சுட்டிக்காட்டியது. இத்தகைய முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் ஆதரவுத் தேடித் திரும்பவில்லை. பொது மக்களை ஒடுக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் பக்கமே திரும்பின.

ஒடுக்கப்படும் மக்களைப் பற்றி அனுதாபம் கொண்டுள்ளதாகக் காட்டிக் கூச்சல் போடும் முதலாளித்துவத் தலைவர்கள், தலைவிகளின் கால்சட்டைகளிலும் சேலைத் தலைப்புக்களிலும் தொங்கிக் கொண்ட இடதுசாரி தீவிரவாதிகள், என்றும் தமது ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி வர்க்கத்தின் இந்தப் பிற்போக்குத் தன்மையை மூடி மறைக்க முயன்று வந்தனர். இந்த மூடிமறைப்புக்களில் அவர்கள் கட்டித் தொங்கவிட்ட குஞ்சம் எதுவெனில், தொழிலாளர் வர்க்கப் புரட்சியாளர்கள், தமது சுயாதீன அரசியல் விதிமுறைகளை கை கழுவிவிட்டு, முதலாளித்துவ மோசடிக்காரர்களின் சுலோகங்களிலும் வேலைத் திட்டங்களிலும் தொங்கிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதற்கு உதாரணமாக, இத்தகைய ஊமைக் கோட்டானொன்றின் சமீபகாலக் குரலைக் காட்ட முடியும். சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் தீர்வுப் பொதியினை கற்றுக்கொள்ளச் சபதம் பூண்ட 'தியச' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அஹிங்சக பெரேரா என்பவர், 1970பதுகளின் நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கும் நற்சான்றிதழ் வருமாறு; "அரச நிர்வாகிகள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொள்ளும் போது, அதற்கு எதிராக அணிதிரள தமிழ் தலைவர்கள் சிங்கள சமூகத்துடன் உறவை கட்டியெழுப்பிக் கொண்டு முற்படாததற்குக் காரணம், சிங்களத் தீவிரவாதிகள் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தொடுத்த தாக்குதலேயாகும்." (சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? பக்கம் 21)

கழுதைத்தனத்தை வெளிப்படுத்தும் இந்த ஆய்வின்படி "அரச நிர்வாகிகள்" அல்லது "சிங்கள சமூகம்" அல்லது "சிங்கள தீவிரவாதிகள்" அல்லது "தமிழ் தலைவர்கள்" ஆகியவற்றில் ஒன்றுக்குத் தன்னும் வர்க்கத் தரம் கிடையாது. ஆதலால் "சிங்கள சமூகம்" சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தாக்குதல் தொடுக்கும் "சிங்களத் தீவிரவாதிகள்" கொண்டதாக மாறுகிறது. அது மட்டுமன்றி வர்க்கமற்ற "தமிழ் தலைவர்கள்" இதற்குப் பதில் நடவடிக்கையாக "சிங்கள சமூகத்துடன்" உறவுகளை வெறுக்கின்றார்கள். தீர்வுப் பாற்கடலில் இருந்து தோன்றும் வெண்ணெய் படலத்தைப் போன்ற ஒரு பொதுஜன முன்னணியின் அரசியல் தீர்வுப் பொதியைப் பற்றி, இதைக் காட்டிலும் திரிக்கப்பட்ட பார்வையும் அங்கவீனமான ஆய்வும் வேறு இருக்க முடியுமா?

அத்தகைய ஒன்று இருக்க முடியாது என நாம் சந்தேகித்து இருந்தால் எமக்கு நல்லதே நடக்கட்டும். அத்தகை கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. அஹிங்சக பெரேராவின் மேற்சொன்ன உன்னத வாக்கியங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் நூலாக வெளிவந்த போது, அதற்கு முன்னுரை வரைந்த பேர்வழி அதை திரையிட்டுக் காட்டுகின்றார். அது வேறு யாரும் அல்ல. அரசியல் அரங்கில் நீண்டகாலமாக விநோத பாத்திரங்களை வகித்து வந்த பேராசிரியர் கார்லோ பொன்சேகாவே. அஹிங்சக பெரேராவின் நூலுக்கு வழங்கியுள்ள தமது முன்னுரையின் இறுதி பந்தியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"தேசியவாத செயற்பாட்டு முறைகள் மனித செயற்பாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டதல்ல. ஆதலால், அவை முக்கியமாக வழிநடாத்தப்படுவது பொருளாதாரக் காரணிகளாலா என்பது சந்தேகத்துக்கு இடமானது. மார்க்சின் சிந்தனையில் முதல் இடம் வகிப்பது பொருளாதாரக் காரணிகளாகும். ஆதலால் தேசியவாத செயற்பாட்டு முறைகளில் உள்ள தன்மையை புரிந்துகொள்ள கார்ல் மார்க்சைக் காட்டிலும் உதவுவது உயிரின பண்புகளை சிறந்த முறையில் ஆய்வு செய்த சர்ள்ஸ் டார்வினின் சிந்தனை மரபுகள் என நான் நினைக்கின்றேன்." (முன்னுரை: சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன?)

இலங்கையில் நாகரீகத்தின் ஆரம்ப காலம் தொட்டே, தேசிய இனங்களுக்கு தேசிய அரசும் இருந்து வந்ததாகக் கூறும் சிங்கள இனவாதிகளுக்கும் அப்பால் செல்லும் கார்லோ பொன்சேகா, ஆதி மனிதனின் காலத்தில் இருந்தே தேசியவாத பண்புகள் இருந்ததாகவும் கூறுகின்றார். இது இப்படியானால், தேசியவாதத்தில் இருந்து மீட்சி பெறவே முடியாது. தேசியவாத இனவாத மோதுதல்களை நியாயப்படுத்தும் இரத்தப் பிசாசுகள் இடையே மட்டுமே அத்தகைய கருத்துக்கள் வேரூன்றும். சுயநிர்ணய உரிமையை முன்வைத்து பொதுஜன முன்னணியின் "அரசியல் தீர்வுப் பொதியை" தூக்கிப் பிடித்து இனவாத யுத்தத்துக்கு வக்காலத்து வாங்கும் அஹிங்சக பெரேரா, கார்லோ பொன்சேகாவுக்கு கம்பளம் விரிக்கும் போது வெளிப்பட்டிருப்பதும் இதுவே. பெரேரா இவ்வாறு குறிப்பிடுகின்றார்: "முன்னுரையின் இறுதியில் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தலையீடு செய்துள்ளமையானது இந்த விடயத்தை மேலும் கற்றுக்கொள்பவர்களுக்கு மேலுமொரு விசேடமான வழிகாட்டியாக இருக்கும் என நான் நம்புகிறேன்."

லங்கா சமசமாஜக் கட்சியை வெளியேற்றி ஸ்தாபித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்தின் ஆயுள் காலத்தை நீடிக்கும் பொருட்டு இடம்பெற்ற சதி, 1976 டிசம்பரில் வெடித்த தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் பொது வேலை நிறுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்தப் பிற்போக்கு கூட்டையும் உடைத்தெறிந்தது. ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இன்னமும் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் பதுங்கிக்கொண்டிருந்த ஒரு நிலையில் தலைநீட்டிய அரசியல் நொருக்கடியின் சகல இலாபங்களையும் சுரண்டிக் கொள்ள யூ.என்.பி.க்கு அவகாசம் வழங்கிய சமசமாஜ கட்சி தலைவர்கள், தொழிலாளர் வர்க்க வேலை நிறுத்தத்தில் இருந்து முழுமனே கைகழுவிக் கொண்டனர். போராட்டத்தின் தலைமையினை வாய் வீச்சுக்களுக்குப் பேர்போன தொழிற்சங்க தீவிரவாதிகள் கும்பல் சுருட்டிக் கொண்டது. இவர்களுக்கு இயைந்து போவதற்கு நெருக்கிவந்த பல்வேறு அழுத்தங்களுக்கும் எதிராக, தொழிலாளர் போராட்டங்களுக்கு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து, அத்தருணத்தில் நாடு பூராவும் வளர்ச்சி கண்டு வந்த வலதுசாரி அச்சுறுத்தலை நசுக்கும் பொருட்டு, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது. அது முன்வைத்த வேலைத் திட்டமானது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தை சூழ கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கட் பகுதியினரை அணிதிரட்டுவதன் மூலம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வுகாணக் கூடிய தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வதாக விளங்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் வரலாற்றில் சாதித்தது என்ன? என்ற கேள்வியை பல்வேறுபட்ட அரசியல் போக்குகளின் மூடர்கள் எழுப்புவதன் பின்னணியில் இன்றைய முதலாளித்துவ ஆட்சி முறையை துக்கி வீசும் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுக்கு இருந்து வரும் முடிவுறாத ஐயமும் பகைமையும் பதுங்கிக் கொண்டுள்ளன. வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த முதலாளித்துவ அமைப்பைக் காத்துக் கொண்டு, அதன் கீழ் குறுக்கு வழிகள் மூலம் விரைந்து தீர்வு காணும் குட்டி முதலாளித்துவ அவஸ்தைகளில் இருந்து தலைநீட்டும் அவசரம் இருந்து கொண்டுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்ததும், தமது போராட்டத்தின் அத்திவாரமாக கொண்டதும் இக்காலத்தில் மக்கள் மத்தியில் சிதறுண்டு போய்க் கிடந்த உணர்வுகளுக்கு பொருத்தமான வேலைத்திட்டம் அல்ல. மாறாக, அது முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தினுள் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையை ஊர்ஜிதம் செய்யவல்ல விஞ்ஞானரீதியான வேலைத்திட்டமாகும்.

இந்த வேலைத்திட்டத்தினை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லைதானே என்பது மேற்சென்ன கேள்வியுடன் சேர்ந்த விதத்தில் எழுப்பும் இரண்டாவது கேள்வியாகும். சரியான முறையில் என்றால் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியது, பொதுமக்களை அழிவில் இருந்நு விடுதலை செய்யக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தினை முன்வைத்து, அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பிடம் அல்ல. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக பல போலி வாதப்பிரதிவாதங்களை பின்னிக்கொண்டு பொதுமக்களை அதிலிருந்து அந்நியப்படுத்தி வைக்க முதலாளி வர்க்கத்தின் சார்பில் வக்காலத்து வாங்குபவர்களாக தொழிற்பட்ட அமைப்புக்களிடமே இந்தக் கேள்வியை எழுப்பவேண்டும். முதலாளி வர்க்கத்திடம் உதவி பெற்று, அந்த அமைப்புக்கள் முன்னெடுத்த முதலாளித்துவ சார்பு பிரதிவாதங்கள் இல்லாது இருந்திருக்குமானால், தமது விடுதலைக்கு அவசியமான புரட்சிகர வேலைத்திட்டத்தினை அரவனைத்துக்கொள்ள முடியாது செய்யும் மையத்தடை தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு இருந்தும் இருக்காது, இருக்கவும் மாட்டாது. தம்மால் வழிதடுமாறச் செய்யப்பட்ட வெகுஜன இயக்கம் அதற்குச் செலுத்தும் இரத்தப்பலியைக் கண்டு கூத்தாடும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர யதார்த்தம் ஒழிந்து போய்விட்டது எனவும் கோஷிக்கின்றார்கள்.

சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களின் துரோகங்களினாலும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளின் வழிதடுமாறல்களாலும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த அரசியலில் தொழிலாளர் வர்க்கம் நிராயுத பாணியாக்கப்பட்டு, குழப்பத்துக்குள் தள்ளப்பட்டு இருந்தது. இதனால் தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து உருவாகும் சுயாதீனமான அரசியல் சவாலுக்கு முகம் கொடுக்காமலே யூ.என்.பி. 1977ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு சக்தி வாய்ந்த முறையில் வெளிப்பாடாகவில்லை. இதன் காரணமாக யூ.என்.பி. முன்னொருபோதும் கண்டிராத பாராளுமன்ற ஆசனங்களை - பாராளுமன்ற ஆசனங்களில் ஆறில் ஐந்து பங்கினை- வெற்றி கொள்ள முடிந்தது.

இந்தப் பிரமாண்டமான வாக்குகளை சேகரிக்கும் பொருட்டு யூ.என்.பி. தலைவரான கிழட்டு நரி -ஜே.ஆர்.ஜயவர்தன- பல முன்னணிகளில் சதிகளில் இறங்கினார். கைது செய்யப்பட்டிருந்த விஜேவீர உட்பட்ட ஜே.வி.பி. தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, ரொனி டீ மெல்லைக் கொண்டு எடுத்த முயற்சி அன்று நன்கு பிரசித்தமான இரகசியமாகும். சிங்ஙள இனவாத ஜே.வி.பி.க்கு ஒரு கையை நீட்டும் அதேவேளையில் மறுகையை தமிழர் விடுதலைக் கூட்டனிக்கு நீட்டும் முயற்சியும் கூட இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் யூ.என்.பி. க்கும் இடையேயான இரகசியப் பேச்சுவார்த்தைகள், கொழும்பு றோயல் கல்லூரி எதிரில் உள்ள எஸ். தொண்டமானின் வீட்டில் இடம்பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எஸ். கதிர்வேற்பிள்ளை, அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரமும் யூ.என்.பி. சார்பில் ஜே.ஆர். ஜயவர்த்தன, எம்.டி. பண்டா, எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் (ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை) இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடல்களில் யூ.என்.பி தலைவர்களுடன் கதிர்வேற்பிள்ளை ஆற்றிய உரையை பிற்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் கேலிக்கூத்தானதாக இருந்தது. ''நாம் இங்கு வந்தது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அல்ல. இது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான காலமும் அல்ல. ஜனநாயகம் அனாதரவாகியுள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் உங்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்க நாம் தயார்'' என அவர் குறிப்பிட்டார்.

 

யூ.என்.பி. - தமிழர் விடுதலைக் கூட்டணி உடன்பாட்டின் அடிப்படை

அனாதரவாகிப் போன ஜனநாயகத்தின் மையப் பிரச்சினையாக தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக உரிமை விளங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் தலைவர்கள் அதைப் பாதுகாப்பதை பகிரங்கக் கட்டளை மூலம் யூ.என்.பி.யிடம் ஒப்படைத்தனர். இது ஒன்றும் புரியாமல் செய்யப்பட்டது அல்ல. 1958ல் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான யூ.என்.பி.யின் கண்டி பாதயாத்திரையின் பிரதம அமைப்பாளர் ஜே.ஆர். ஜயவர்தனவே. இது 1977 ஏப்பிரல் 5ம் திகதி செல்வநாயகம் காலஞ்சென்றாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்களின் நினைவில் இருந்து மறைந்து விடக்கூடிய ஒன்றல்ல. எனினும் தமிழ்-சிங்கள இரு தரப்பையும் சேர்ந்த முதலாளித்துவத் தலைவர்கள் 1976ன் இறுதியில் ஆரம்பமான வர்க்க நிலைமையையிட்டு குரோதம் கொண்டனர். தமது கோரிக்கைகளையும் கூடக் கைகழுவி விட்டு விட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி யூ.என்.பி.யுடன் இனக்கத்துக்கு வந்ததற்கான அடிப்படை அதுவே.

யூ.என்.பி.க்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே தமிழ் மக்களுக்குத் தெரியாமல் உருவான சதிகார உடன்பாட்டின் இலக்கு, தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒருமைப்பாட்டைச் சிதறடித்து, அதை தவிடுபொடியாக்குவதாக விளங்கியது.

சுதந்திரம் எனப்பட்டதன் பின்னர், இலங்கையில் 1953ல் நடந்த ஹர்த்தாலை அடுத்து, முதலாளித்துவ ஆட்சியை பாரதுரமான நெருக்கடிக்குள் தள்ளிய வர்க்கப் போராட்டமாக 1976 போராட்டம் விளங்கியது. அது தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக உள்ளீர்த்துக்கொள்ளாது போனாலும், அது ஒரு தொகை பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் கோரிக்கைகளை முன்வைப்பதற்க்கும் அப்பால், தொழிலாளர்கள் நடைமுறையில் போராட்டத்தில் குதித்த ஒரு நிலையாகும். மறுபுறத்தில் அது பழைய சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் பிடிக்கு ஒரு சவாலாகத் தலையெடுத்த ஒன்றாகவும் விளங்கியது. அது அதன் பலமாக விளங்கிய போதிலும் மாற்று புரட்சிகர முன்னோக்கும் தலைமையும் அதனிடம் இல்லாமை அத்துடன் இணைந்த பலவீனமாக விளங்கியது. புரட்சிகரத் தலைமையினாலும் நனவினாலும் வழிநடத்தப்படாத தொழிலாளர் வர்க்க இயக்கம், அதன் வரலாற்று முற்போக்கு யதார்த்தம் இருந்தாலும் எதிரி வர்க்கத்தின் சூழ்ச்சிகளுக்கும் பொறிகளுக்கும் அகப்படுவதை தவிர்க்க முடியாது.

தமது சூழ்ச்சி, பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளும் தொழிலாளர் வர்க்கம் தொடர்பாக அனுதாபம் காட்டும் வகையில் சலுகை காட்டும் வழக்கம் முதலாளி வர்க்கத்துக்கு கிடையாது. ஆட்சியைக் கைப்பற்றிய யூ.என்.பி. இதன்படி முதலாளி வர்க்க ஆட்சியை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் கிளர்ந்து வந்த தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும், அதற்கு தாக்குதல் தொடுக்கவும் வாய்ப்பான நிலைமைகளை சிருஷ்டிப்பதில் இறங்கியது.

தமிழ் முதலாளி வர்க்கமும் அதன் முக்கிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும், தொழிலாளர் கிளர்ச்சி தொடர்பாகக் காட்டிய மனோபாவம் இதில் இருந்து வேறுபட்டதல்ல. வேறுபடக் கூடியதும் அல்ல. அவ்வாறே தொழிலாளர் வர்க்கத்தை பிளவு படுத்தவும் நசுக்கித் தள்ளவும் யூ.என்.பி. திட்டமிட்ட வேலைத் திட்டத்துக்கு அது இயைந்து போவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக விளங்கியது.

யூ.என்.பி யைப் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் முகம் கொடுத்த மற்றொரு பொதுப் பிரச்சினையும் இருந்து வந்தது. தீவிரமடைந்து வந்த இளைஞர் இயக்கத்தினை தமது பிடிக்குள் கொணர்வது எப்படி? என்பதே அப்பிரச்சனை.

அனைத்துலக ஐக்கியத்துக்கான தொழிலாளர் வர்க்க வேலைத்திட்டத்துக்கு எதிராக, சிங்கள சோவினிசத்தை தலைமேல் கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர்கள், சதிகார ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தனர். அதன்படி அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களேயானால், அவர்களால் திரட்டக்கூடிய குட்டி முதலாளித்துவ மக்கள் பகுதியினரை இனவாத குளறுபடிகளால் குழப்பியடித்து தம்பின்னால் ஈர்க்கும் வழி பற்றி சிந்திக்கும் வண்ணம் யூ.என்.பி. தள்ளப்பட்டது. அவ்வாறே சிங்கள இனவாத பாகுபாடுகளினதும் அடக்குமுறைகளினதும் தாக்கத்திற்கு உள்ளாகி பிரிவினைவாதத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை தமது பிடிக்குள் கொணர்வது எப்படி என்பது முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் பகுதியினர் மீது அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் இரு சாராரும், தொழிலாளர் விரோத முதலாளித்துவ காட்டுமிராண்டி இலக்குகளை இட்டுநிரப்புவதற்கான மார்க்கமாக இனவாதத்தை கிளறிவிட முடிவுசெய்தனர். தமது ஆட்சியைக் காக்க அர்ப்பணித்துக்கொண்ட பிற்போக்கு முதலாளி வர்க்கம், தோலின் நிற வேறுபாடு மட்டும் அல்ல, ஒரே தோல் நிறத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களிடையே மொழி வேறுபாடுகளையும், ஒரே மொழி பேசுவோருக்கு இடையேயான வரலாற்று ரீதியில் நாற்றம் கண்ட சாதி, மத வேறுபாடுகளையும் கூடப் பாவித்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை ஆளுக்காள் மோதவைக்கும் மற்றும் கொன்று தள்ளும் கடைகெட்ட சமூக நிலைமைகளை நிர்மானிப்பதற்கும், இந்தச் சகாப்தத்தில் திரும்பியுள்ளது. ஒடுக்கும் தேசிய இனத்தினதும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தினதும் முதலாளித்துவ வர்க்கப் பகுதியினர் இடையேயும் இது சம்பந்தமாக எதுவித கருத்துவேறுபாடும் கிடையாது. முதலாளித்துவ அமைப்பின் செழிப்புக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்கள் மூலம், தம்பின்னால் ஈர்த்துக் கொண்ட கிராமப்புற, நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கங்களின் நுகர்வுக்கு முதலாளி வர்க்கத்தால் இன்று வழங்கக் கூடியது, அழிவுநிறைந்த இனவாதம் மட்டுமேயாகும்.

சிங்கள-தமிழ் வேறுபாடு இல்லாமல், முதலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இரண்டு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை சுரண்டி, ஒடுக்கி வந்த ஒரு காலப்பகுதியும் இருந்து வந்தது. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி உக்கிரம் கண்டதனாலும் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து தோன்றிய சவாலினதும் எதிரில், தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடு உக்கிரம் கண்ட ஒரு நிலமையினுள், சிங்கள-தமிழ் முதலாளி வர்க்கத்தின் இரு சாராரினதும் அரசியல் ஐக்கியமும் சிதறுண்டு போயிற்று. அதன் பெறுபேறாக தமிழ் முதலாளி வர்க்கம் முற்போக்குத் தன்மையை கைவரப் பெற்றதோ அல்லது பெறப்போவதோ கிடையது. சிறுபான்மை மக்கள் குழுக்களுக்கு எதிரான இன, மத மற்றும் வேறு அழுத்தங்களைக் கட்டவிழ்த்துவிட உடன்பட்டு, இனவாத பாகுபாடுகளை ஒழித்துக்கட்ட தொழிலாளர் வர்க்கத்துக்கு உள்ள பலத்தை நிராகரிக்கும் அதே வேளையில் போலி வீரியத்தை காட்டும் பொருட்டு ஒடுக்கப்படும் மக்களின் முதலாளித்துவ பகுதியினருக்காக வக்காலத்து வாங்குவதையே குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் செய்கிறார்கள். இந்த முதலாளித்துவ சார்பு விதிமுறையை நிராகரிக்கும் மார்க்சிச புரட்சியாளர்கள், அனைத்துலகவாத தொழிலாளர் வர்க்கத் தீர்வுக்காக போராடுகின்றார்கள். என்றும் நிஜ மார்க்சிஸ்டுக்களின் விதிமுறை இதுவாகவே இருந்து வந்தது.

ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி முன்கூட்டியே தேசியவாத சேற்றினுள் புதைந்து கொண்டிருந்தது. இத்தருணத்தில் தோள்வரை புதையுண்டு போன சமசமாஜக் கட்சி, மார்க்சிச வேலைத்திட்டத்தில் இருந்து அன்னியப்பட்டுப் போயிருந்தது மட்டுமன்றி, முதலாளி வர்க்கத்துக்கு அவசியமான விதத்தில் இனவாதப் பிளவுகளைத் தோளில் சுமந்து கொண்டும் இருந்தது. இந்த அரசியல் வீழ்ச்சியினால் முதலாளி வர்க்கத்தின் இனவாதத்தினை எதிர்த்துப் போராடும் பலமோ அல்லது அவசியமோ சமசமாஜக் கட்சிக்கு இச்சமயத்தில் இல்லாது போயிற்று. 1964ல் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொள்ளும் சலுகைக்கான கப்பமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை சமசமாஜ கட்சி ஆதரித்தது. இதில் இருந்து பத்து ஆண்டுகளின் பின்னர், 1974 அளவில் சமசமாஜக் கட்சி மலைநாட்டு சிங்கள மக்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டி விடுவதில் இறங்கியது. தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை உக்கிரமாக்கி அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்த அரசியலமைப்பு விவகார அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவியையும் வகித்த லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவின் வார்த்தைகளில் இந்த நச்சுத்தனத்தின் பரிணாமம் வெளிப்பாடாகி இருந்தது.

இயக்கவியலில் சிலதை எடுத்துக்கொண்டு பலவிதமான அர்த்த திரிப்புக்களின் மூலம் பிற்போக்கு இலக்கு நோக்கி வழிநடத்தும் இயலுமை கொண்ட கொல்வின் ஆர்.டி.சில்வா, தோட்டத் தொழிலாளர் பிரச்சினை பற்றி 1974ல் பின்வருமாறு எழுதியுள்ளார்; ''சகல திசைகளிலும் பரந்துபட்டு வாழும் கிராமப்புற மக்களால் தோட்டப் பகுதிகளில் காணிகளைக் கைப்பற்றுவது இடம்பெறாமல் இருக்க முடியாத சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அத்தகைய பரந்த காணிகளை கைப்பற்றும் இயக்கம், நிச்சயமாக ஒரு ஆழமான புரட்சிகர நடவடிக்கையாகும். எனினும் அத்தகைய காணிகளைக் கைப்பற்றுவதன் நோக்கம், காணிகளை பங்கிட்டு வழங்குவதும் பின்னர் தோட்டத் துறையை உடைத்து எறிவதாக இருப்பதால், அந்த நடவடிக்கையின் இலக்கு குட்டி முதலாளித்துவ இலக்காகுவது மட்டுமன்றி, அது வர்க்க குழு என்ற முறையில் தோட்டத் துறையில் தொழிலாளர்களின் அடிப்படை அவசியங்களையும் பிரச்சனைக்கு உள்ளாக்குகின்றது.

''எம்மால் கவனத்தில் கொள்ளப்பட்ட இப்பிரச்சனை, இருந்துவரும் வர்க்க உறவுகளின் சிக்கலில் இருந்து தோன்றும் இலங்கைப் புரட்சியின் சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சிக்கல் தொடர்பாக விதிமுறையைக் கையாள்கையில் இடர்பாடுகள் தோன்றுகின்றது. எனினும் விதிமுறை தெளிவானது. அதாவது, புரட்சியின் வெற்றிகரமான அபிவிருத்தியை பற்றிய பரந்த அவசியத்துக்காக, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் உடனடி அவசியத்தை அவ்வாறே இட்டுநிரப்ப அர்ப்பணிக்க வேண்டும்.'' (கட்சியும் புரட்சியும் -கொல்வின் ஆர்.டி.சில்வா கட்சிக் காரியாளர்களுக்கு நிகழ்த்திய விரிவுரை- 1974, சமசமாஜ கட்சி வெளியீடு)

யூ.என்.பி.யில் இருந்து சி.ல.சு.க. ஊடாக ஜே.வீ.பி. வரையிலான சகல தொழிலாளர் எதிர்ப்புக் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் ஆழமான குரோதத்தினை சமசமாஜக் கட்சித் தலைவர் சுடச் சுட வாந்தியெடுக்கும் விதத்தை அந்த வாந்தியின் ''சிக்கலினால்'' தன்னும் மூடிக்கொள்ள முடியாது.

இத்தகைய ஒரு கட்சி 1977ல் வகித்த பாத்திரம், முதலாளி வர்க்கம் சுதந்திரமாக தமது இனவாத வேலைத் திட்டத்தினை நடைமுறைக்கிட இடமளித்ததும் அதனுடன் கூட்டுச் சேர்ந்ததுமேயாகும்.

1977 ஜூலை தேர்தலில் சி.ல.சு.க. பெற்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 8 ஆக விளங்கிய அதே வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 17 ஆசனங்களைப் பெற்றது. இதனால் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தனிநாட்டுக்கு போராட சபதம் செய்திருந்தது. இது சம்பந்தமான கொள்ளை விளக்க அறிக்கையின் பந்தி பின்வருமாறு கூறுகின்றது; ''வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் தமிழ் பேசும் பிரதிநிதிகள், சமாதான வழியிலோ தீர்க்கமான வேலைத்திட்டத்தின் அடிப்படையிலோ ஒரு போராட்டத்தின் மூலம் தமிழ் ஈழத்தின் சுயாதீனத்தினை ஊர்ஜிதம் செய்யும் ஈழம் அரசுக்கான அரசியலமைப்பினை வரையும் பொருட்டு, தமிழ் ஈழத்தின் தேசிய சபையாகவும் ஒருங்கு திரள்கின்றார்கள்.'' பிரிவினைவாதத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கத்தின் தாக்கமும் அதைத் தமது கைக்குள் கொணரும் பொருட்டு தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் திருப்பமும் அந்த அறிக்கையின் மூலம் வெளிப்பாடாகியது.

தேர்தல் இயக்கத்தினுள் தமது நலனை முன்னிட்டு தாமும் அடிபணிந்து தூண்டிவிட்ட பிரிவினைவாத உணர்வுகள், இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்பதற்கு மட்டுமன்றி, அங்கு ஆசனங்களில் அமர்வதற்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தன. இளைஞர் முன்னணி வெளியிட்ட பிரசுரம், ''தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்காமல், அரசியலமைப்பினை வரைந்து கொள்ளும் பொருட்டு தமிழ் ஈழ தேசிய சபையாக தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரளவேண்டும்'' என்று கூறியது.

குட்டி முதலாளித்துவ இளைஞர்களின் உத்வேகம் என்னவாக இருந்த போதிலும், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக்கான நடவடிக்கையில் இறங்க இது தருணம் அல்ல எனத் தீர்மானம் செய்தது. அது கையைச் சுட்டுக் கொள்வதாகும். அந்தத் தீர்மானத்தின் பின்னணியில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய காரணி, பழைய தலைமைத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த, இந்நாட்டின் சிங்கள-தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தினுள் இன்னமும் முழுமையாக சிதைந்து போயிருக்காத ஐக்கியமும் பலமுமே ஆகும். அந்தப் பலம் உடைந்து போகும் வரை தனிநாடாக அணிதிரள முடியாது என்பதை தமிழ் முதலாளிகள் புரிந்து கொண்டிருந்தது மட்டுமன்றி, அப்பணியை நிறைவேற்ற மத்திய அரசாங்கத்தில் ஆட்சிக்கு வந்த யூ.என்.பி. யின் உதவி இல்லாமலும் செய்ய முடியாது என்பதும் அந்த விளக்கத்தில் அடங்கி இருந்தது.

தொழிலாளர் வர்க்கத்தினை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கான முன்நிபந்தனையாக சிங்கள குட்டி முதலாளித்துவக் காடையர்கள் குண்டர்கள் பகுதியினரை இனவாதக் கலகங்களுக்குத் தூண்டும் பொருட்டு எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் ஜயவர்தன ஆட்சி உடன் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சிங்கள இனவாத, சாதிவாத இயக்கத்தின் முன்னணியில் நின்று பிரசித்தி பெற்ற சிறில் மத்தியூ, காவி உடை தரித்த கும்பலின் தோள்களில் ஏறி முன்னணிக்கு வந்தார்.

See Also :

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 1: இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

பகுதி 2: 1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும்

பகுதி: 4: 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

பகுதி 5 : 1983 கறுப்பு ஜூலை

பகுதி 6 : இனவாத யுத்தம் நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டது