World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German rail strike: report from Berlin and Frankfurt-Main

ஜேர்மன் இரயில்வே வேலைநிறுத்தம்: பேர்லின் மற்றும் பிராங்பேர்ட் நிலையங்களில் கிடைத்த அறிக்கை

By WSWS reporters
17 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

பொதுவாக சில நிமிடங்களுக்கொரு இரயில் வீதம் ஓடும் பேர்லினின் புறநகர் இரயில்கள், வேலைநிறுத்தம் காரணமாக 20-40 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன. பெரும்பாலான பயணிகள் இந்த போராட்டத்திற்கேற்ப தங்களை மாற்றி கொண்டதுடன், பிற வகையான போக்குவரத்து வாகனங்களை ஏற்றுக் கொண்டனர். இதனால் இரயில் நிலையங்களும் காலியாகவே இருந்தன. சாரதிகளின் தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகளை ஜேர்மன் இரயில்வே (Deutsche Bahn) நிர்வாகம் தடை விதித்திருப்பதன் காரணமாக, GDL தொழிற்சங்க வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் காணமுடியாது இருந்தது.

முக்கிய பேர்லின் நிலையமான Ostbahnhof இன் GDL உறுப்பினர்கள் அவர்களின் ஓய்வு அறையில் இருந்து மற்றும் காலை ஐந்து மணிக்குள் இரயில் நிலையத்தை விட்டே வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இரயில் நிலையம் அருகில் ஒரு சிறிய உணவுவிடுதியினுள் சென்ற இரயில் சாரதிகள், அதிலிருக்கும் ஓர் அறையை போராட்ட குழுவினர் பயன்பாட்டிற்கென பாவித்துக்கொண்டிருந்தனர்.

உலக சோசலிச வலைத் தள பத்திரிகையாளர் குழுவுடன் விவாதிக்க இரயில் சாரதிகள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர்; பல சாரதிகள் வேலைநிறுத்தம் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் பிரசுரங்கள் மற்றும் கட்டுரைகள் தொடர்பாக ஏற்கனவே நன்கு அறிந்திருந்தனர். மற்றொரு புறத்தில், பிற ஊடகங்கள் குறித்து ஓட்டுனர்கள் மிகுந்த சந்தேகம் கொண்டிருந்தனர். பரபரப்பு நாளிதழான Bild Zeiting இன் பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளிக்க யாரும் முன்வரவில்லை என்பதுடன், இந்த "பொய்யர்களுக்கு" பேட்டி அளிக்க தாங்கள் விரும்பவில்லை என சாரதிகள் தெரிவித்தனர்.

இரயில் சாரதியான முப்பத்தைந்து வயதான அண்ட்ரயாஸ் வொன் ரேப்பர்டு, 2006ம் ஆண்டு மே முதல் GDL இல் இருந்து வருகிறார். அவர் முன்னதாக Transnet தொழிற்சங்க உறுப்பினராக இருந்தார், ஆனால் அவ்வமைப்பால் தாம் கைவிடப்படுவதாக உணர்ந்தார். "Transnet மெஹ்டோர்னின் (ஜேர்மன் இரயில்வேயின் தலைமை அதிகாரி) ஒரு கருவியாக இருக்கிறது" என்றார் அவர். நாடு முழுவதும் இரயிலை ஓட்டி செல்ல வேண்டிய பணிமுறை மாற்றத்திற்காக (Shift) காலை 5:00 மணிக்கு பணியைத் தொடங்கி மாலை 05:47 க்கு முடிக்க வேண்டி இருப்பதால் ரேப்பர்டு காலை மூன்று மணிக்கு எழவேண்டி இருக்கிறது. அவர், "என்னால் எப்போதாவது தான் என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பார்க்க முடிகிறது", என்று கூறினார்.

GDL, இரயில் சாரதிகளுக்காக மட்டும் போராடவில்லை, இந்தபணியில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், இரயில் பெட்டி மேற்பார்வையாளர்கள், சமையல்காரர்களிலில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் உட்பட இரயில்வே தொழிலாளர்கள் அனைவருக்காகவும் போராடுகிறது என தெரிவித்த அவர், இதனால் எதிர்காலத்தில் GDL தனது பெயரை "இரயில்வே ஊழியர்களுக்கான தொழிற்சங்கம்" என மாற்றிக் கொள்ள இருக்கிறது என கூறினார்.

இது இரயில்வே ஊழியர்களை பிரிக்கும் பொறுப்பை ஏற்று கொண்டிருக்கும் சங்கமல்ல எனக் கூறிய ரேப்பர்டு, "உண்மையில், நாம் நீண்ட காலமாக தாக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் வந்திருக்கிறோம். சரக்கு போக்குவரத்து அதன் சொந்த அமைப்பான Railion என்பதன் கீழும், பிராந்திய போக்குவரத்து Railway Regio என்றும் மற்றும் தொலைதூர போக்குவரத்து ஜேர்மன் இரயில்வேயின் தொலைதூர போக்குவரத்து என்ற பெயரிலும் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாக ஜேர்மன் இரயில்வேயில் தற்போது சுமார் 60 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எங்களின் போராட்டத்தால் இரயில்வேதுறை தனியார்மயமாக்கலை நாங்கள் தடுக்க விரும்புகிறோம். ஏனென்றால், நிறுவனத்தின் இலாபம் தரும் பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களையும் தனியார்மயமாதல் பாதிக்கும்." என்று தெரிவித்தார்.

பிரெஞ்சு இரயில் சாரதிகளின் வேலைநிறுத்த போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவரின் கருத்து கேட்கப்பட்டபோது, பிற நாடுகளில் நடைபெறும் போராட்டங்களையும் தாம் வரவேற்பதாக கூறிய அவர், எதிர்காலத்தில், சர்வதேச ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படலாம் என்று தெரிவித்தார். "அடுத்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய போக்குவரத்து முறை உலக சந்தைக்குத் திறந்து விடப்படலாம். அதாவது, அனைத்து நாடுகளைச் சேர்ந்த இரயில் சாரதிகளும் அவர்களின் சொந்தநாட்டு நிபந்தனைகளின் கீழ் ஜேர்மனியில் இரயில் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நாம் தற்போது வெற்றியடைவது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏற்கனவே நாம் பல வெளிநாட்டு இரயில்வே தொழிலாளர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெற்று வருகிறோம்." எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து கேட்கப்பட்டபோது, இரயில் சாரதிகளுக்கு சாதகமாக கூட்டணி அரசாங்கம் தலையீடு செய்யும் என தாம் தொடர்ந்து நம்புவதாக ராப்பேர்டு கூறினார். வேலைநிறுத்தம் தொடரும் பட்சத்தில் பொருளாதார பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இந்த வகையில் தொடர்ச்சியான முறையில் வேலைநிறுத்தம் நீடித்தால், அது வெற்றிகரமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், "நமது கூட்டாளிகள் உறுதியாக இருந்தால், பின் நாம் நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB) ஒருங்கிணைந்த முனைவை முன்னிறுத்தலாம்." என்றார்.

ஐம்பது வயதான வொல்வ்காங் மில்க்க இரயில்வேயில் 33 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அரசாங்கத்தின் நிலை குறித்து அதிருப்தி அடைந்திருக்கும் அவர், "அவர்கள் எங்களை குற்றவாளிகள் போல் கருதி எங்களை அச்சுறுத்தல்காரர்கள் என வரையறுக்கின்றனர்" என்று தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், வேலைநிறுத்த நெருக்கடியை தாங்க முடியாமல் அந்த கூட்டணி பின்வாங்கும் என அவர் நம்பினார். "இந்த இரயில்வே நிர்வாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும்." என கூறிய அவர், "அரசாங்கம் இரயில் சாரதிகளுக்கு எதிராக திரும்புமேயானால், அவர்கள் பெரியளவில் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள். செயற்குழு உறுப்பினர் சம்பள அதிகரிப்புடன் ஒப்பிடும்போது எங்களின் சம்பள கோரிக்கைகள் வெறும் கடலை அளவேயாகும்." என்று தெரிவித்தார்.

"நாங்கள் பின்வாங்கவில்லை"

பிராங்பேர்ட், வியாழன், நவம்பர் 15: இரயில்வே வலையமைப்பின் பெரும்பான்மையான பிரிவுகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தன. ஹெஸ்சேவில், புறநகர் மற்றும் பிராந்திய இரயில் போக்குவரத்தின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு நெருக்கமாகவை இயங்கவில்லை. விரைவு இரயில்கள் மற்றும் முக்கிய வழித்தட இரயில்களுக்காக அவசர திட்டம் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியற்ற விதத்தில் அவை இயக்கப்பட்டன மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து புதன்கிழமை மதியம் வரை பாதிக்கப்பட்டு இருந்தது.

பிராங்பேர்ட்டின் முக்கிய இரயில் நிலையத்திற்கு எதிர்புறம் இருக்கும் GDL இன் வேலைநிறுத்த தலைமையகத்தில் உலக சோசலிச வலைத் தள பத்திரிகையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தனர். அந்த அலுவலக அறைகள், முன்புற வளாகம் மற்றும் படிக்கட்டுகள் முழுவதும் சிரித்த முகத்துடன் நிறைந்திருந்த போர்க்குணமிக்க இரயில் சாரதிகளை விசாரித்த போது, அவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் இறங்க தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

பெர்ண்ட் ஹெப்ட்மான், மோனிக். பீ மற்றும் சில கூட்டாளிகளும் இதை உறுதிப்படுத்தினார்கள். "இது எவ்வாறு தொடரும் என கூறுவது சிரமமானதாகும்." என தெரிவித்த பெர்ண்ட், "ஆனால் நாங்கள் பின்வாங்குவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை." எனத் தெரிவித்தார். அவரின் கூட்டாளிகள் கூறும் போது, "இது காலவரையற்ற வேலைநிறுத்தமாக தொடர்ந்தாலும் நல்லதே; அது இரயில்வே நிர்வாகசெயற்குழுவை பொறுத்திருக்கிறது - அது உடன்பாட்டை அளிக்குமா இல்லையா என்பதைப் பொறுத்தது." என்று தெரிவித்தனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் பங்கு என்ன என்பதை அந்த நால்வரும் மீண்டும் விளக்கினார்கள்: ஞாயிற்றுகிழமை மற்றும் இரவு நேரப்பணிகளை சார்ந்து இரயில் சாரதிகளுக்கு மாதத்திற்கு 1,500-1,600 யூரோவிற்கு மேல் சம்பாதிப்பதில்லை. "மேலதிக வேலைக்கான வருவாய் பெறாமல் அல்லது ஒருவர் விடுமுறையில் சென்றால், அது மேலும் குறைந்து விடும்." என மோனிக் தெரிவித்தார். இரயில் ஓட்டுனர்களுக்கு அதிகளவு சம்பளம் அளிக்கப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை மறுத்து பேர்ண்ட் கூறும் போது, "பிடிப்புகள் போக கையில் 2,200 யூரோ எங்களுக்கு கிடைப்பதாக பொதுமக்களுக்கு தொடர்ந்து கூறப்படுவது துரதிஷ்டவசமானதாகும். அந்த தொகை பெரும்பாலும் பிடிப்புகளுடன் கூடிய மொத்த சம்பளமாகும் என்பதுடன் அதுவே சம்பள விகிதத்தில் அதிகபட்ச அளவாகவும் உள்ளது." என தெரிவித்தார்.

இந்த பணத்திற்காக இரயில் ஓட்டுனர்கள் ஒரு சிக்கலான பணிமுறை மாற்ற முறையைக் கொண்ட கடினமான பணியை ஏற்று கொள்ள வேண்டும். கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் அதிகபட்ச வேகத்தில் உயர் வேக இரயில்களில் பலநூறு பயணிகளின் வாழ்க்கைக்கு சாரதிகளே பொறுப்பேற்று கொள்ள கூடிய இந்த பணி பெரியளவிலான பொறுப்பைக் கொண்டிக்கிறது.

"இந்த சம்பளம் ஒரு செலுத்தமதியை கட்ட கூட போதுமானதாக இல்லை." என்று கூறிய பெர்ண்ட் தொடர்ந்து கூறுகையில், "அதனால் எவ்வித சேமிப்பும் இல்லை." என்று தெரிவித்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனியின் மறு இணைப்பைத் தொடர்ந்து நாட்டின் கிழக்கில் இருந்து பெரும்பான்மையான சாரதிகள் பிராங்க்பேர்ட்டிற்கு வந்திருந்தனர். பெரும்பான்மையானவர்கள் வெகு தொலைவில் இருந்து பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது இரண்டாவதாக ஒரு வீட்டை ஒழுங்குபடுத்தி கொள்ள வேண்டி இருக்கிறது - இதனால் அவர்கள் இரண்டு குடியிருப்புகளுக்கு வாடகை அளிக்க வேண்டிய பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. "ஒரு புதிய மூக்குகண்ணாடி அல்லது செயற்கை பற்கள் போன்றவை வாங்குவதற்கான மேலதிக செலவுகளுக்கு கூட ஏற்கனவே சிரமப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் உடல்நல காப்பீட்டு நிறுவனங்களும் மிக மிக குறைவான தொகையே அளிக்கின்றன." என விவரித்தார்.

"பிரான்சுடன் இணைந்து போராடுங்கள்"

பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்ட போது, போராட்டக்காரர்கள் மிகவும் நேர்மறையாக பதிலளித்தனர் என்பதுடன் ஐக்கிய ஐரோப்பிய நடவடிக்கைக்கு பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர். பிரான்ஸ் இரயில்வே ஊழியர்களின் பிரச்சனை அவர்களின் சொந்த பிரச்சனை என ஒரு நபர் கூறிய போது, புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய ஐக்கிய ஆணையங்களால் ஊக்குவிக்கப்பட்டு அதிகரித்து வரும் தனியார்மயமாக்கும் போக்கின் மீது ஒரு நேரடி விவாதம் உருவானது.

"பிரான்சில், தொண்ணூறுகளில் ஏற்பட்ட நீண்ட வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பிரான்சில் தனியார்மயம் என்பது ஒரு பிரச்சனையே அல்ல." என இரயில் சாரதி ஒருவர் குறிப்பிட்டார். "எவ்வாறிருப்பினும், தற்போது, மீண்டும் அனைத்தும் திரும்ப வருகிறது. உண்மையிலேயே போராட்டங்கள் கூட்டாக செயல்படுத்தப்பட வேண்டும்." என அவர் தெரிவித்தார்.

திட்டமிட்ட தனியார்மயமாக்கல் பெரியளவில் அபாயங்களை கொண்டிருப்பதாகவும், அந்த முக்கிய காரணத்திற்காகவே ஜேர்மன் இரயில்வே செயற்குழு பிடிவாதமாக, விட்டு கொடுக்காமல் இருந்து வருவதாக பல சாரதிகள் தங்கள் கருத்தை வெளியிட்டனர். "தனியார்மயமாதலை பொறுத்த வரை சந்தை மதிப்பு மற்றும் இலாபம் மட்டுமே அனைத்திற்கும் முக்கியமானதாகும்." என மோனிக் தெரிவித்தார். "அவர்களின் நோக்கத்தை அடையவதற்காக எங்களின் ஒப்பந்த உடன்படிக்கையை பெறுவதில் அவர்கள் எங்களை - என்ன விலை கொடுத்தும் தடுக்க விரும்புகிறார்கள். இந்த வேலைநிறுத்தத்தால் தற்போது எவ்வளவு செலவாகிறது என கணக்கிடுங்கள்: அது மில்லியன்களை தொட்டுவிடும். அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே இதைவிட குறைவான செலவில் எங்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டிருக்கலாம்."

பொருளாதார நலன்கள் மற்றும் அரசாங்க கட்சிகளைக் கொண்ட ஒரு ஐக்கிய கூட்டணியை இரயில்வே செயற்குழு பின்புலத்தில் கொண்டிருப்பதாக அவரின் கூட்டாளி பெர்ண்ட் குறிப்பிட்டார்: "இதில் ஜேர்மன் இரயில்வே நிர்வாகம் மட்டும், நிறுவனங்களின் கூட்டமைப்பும் இதில் இருக்கிறது; மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் அடங்கி இருக்கின்றன. பீட்டர் ஸ்ட்ருக் (சமூக ஜனநாயக கட்சி) போன்ற முன்னணி அரசியல்வாதிகள், ஜேர்மன் இரயில்வே உறுதியுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.' என கூறுவதை நான் கேட்கும் போது, அவை விளக்க முடியாதவையாக உள்ளன. அடிப்படையில் அவர்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும்."

தொழிலாளர்களுக்கென ஒரு புதிய கட்சி தேவை என்பதற்கு இதுதான் ஒரு முக்கிய காரணம் என உலக சோசலிச வலைத்தள பத்திரிக்கையாளர்கள் தெரிவித்த போது, "நிறைய பேர் எங்களிடம் இதை தான் கூறி வருகிறார்கள். சமூக ஜனநாயக கட்சி வெகு சில வாக்குகளே பெறும் போதிலும் அவர்களின் வலதுசாரி கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்." என பெர்ண்ட் பதிலுரைத்தார்.

மக்கள்தொகையின் ஒரு பெரும்பகுதி போராட்டக்காரர்களுக்கு அதிகளவிலான ஆதரவை கொடுப்பதாக வலியுறுத்திய மோனிக் கூறியதாவது: "நாங்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என ஊடகங்கள் தெரிவிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. அது சரியானதல்ல. மொத்தம் 35,000 உறுப்பினர்களைக் கொண்ட GDL இல், 80 சதவீதத்தினர் இரயில் சாரதிகள் உள்ளனர். இதிலிருந்தே ஒருவர் நாங்கள் சிறுபான்மையினர் அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம், ஆனால் வரும் நாட்களில் இது மிக தெளிவாக விளங்கிவிடும். நாங்கள் இரயில் சாரதிகளின் ஆதரவை மட்டுமின்றி, பெரும்பான்மையான பொதுமக்களிடம் இருந்து ஆதரவு பெற்றிருக்கிறோம். எங்களின் நிலைமை தொடர்பாக பெரும்பான்மையினர் இரக்கம் கொண்டிருக்கின்றனர், ஏனென்றால் அவர்களும் அதே சூழலில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் மற்றும் யாரோ முன்வந்து ஆரம்பித்து வைக்கின்றார்கள் என்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்." என தெரிவித்தார்.