World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government rams war budget through parliament

இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக யுத்த வரவுசெலவுத் திட்டத்தை திணிக்கின்றது
By K. Ratnayake
23 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம் அதன் யுத்த வரவுசெலவுத் திட்டத்தை கடந்த திங்களன்று பாராளுமன்றத்தின் ஊடாக 118க்கு 102 என்ற வாக்குக் கணக்கில், வெறும் 16 பெரும்பான்மை வாக்குகளால் முன்தள்ளியது. எதிர்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எதிர்த்து வாக்களித்த போதிலும், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரமாக்க தமது ஆதரவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.

நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுப் பதவிகளையும் தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நவம்பர் 7ம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார். இந்த வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு சாதனைத் தொகையான 166 பில்லியன் ரூபாய்கள் வரை 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) இராஜபக்ஷ 2005 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, கிழக்கிலும் இப்போது வடக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களைக் கைப்பற்ற இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பதன் ஊடாக 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஒழித்துக்கட்டுவதற்கு பொறுப்பாளியாவார்.

இந்த வரவுசெலவுத் திட்டம், விலைவாசியை மேலும் உயர்த்தக் கூடிய ஏராளமான புதிய மறைமுக வரிகளை அமுல்படுத்துவதன் மூலம், உழைக்கும் மக்களின் முதுகுகளில் யுத்தத்தின் முழு நிதிச் சுமையையும் கட்டியடிக்கின்றது. இராணுவச் செலவுக்கு பணம் சேகரிப்பதற்காக, அரசாங்கம் சேவைகளையும் மாணியங்களையும் வெட்டித் தள்ளியுள்ளது. எஞ்சியுள்ள வரவுசெலவுத் திட்ட ஓட்டைகளை நிரப்புவதற்கு, அது சாதாரணமாக அச்சடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது பணவீக்கத்திற்கு மேலும் எண்ணெய் வார்க்கும்.

அரசாங்கம் யுத்தத்திற்கு இடைவிடாமல் ஆதரவளிக்கும் ஜே.வி.பி. யின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அவநம்பிக்கையான நிலையில் இருந்தது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்காத ஜே.வி.பி., பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை ஆதரிப்பதானது, அதன் வெற்று மக்கள்வாத மற்றும் எப்போதாவது கக்கும் சோசலிச வாய்வீச்சுக்களையும், தொழிலாளர்களின் குறிப்பாக சிங்கள கிராமப்புற ஏழைகளின் பாதுகாவலனாக அது காட்டிக்கொள்வதையும் மேலும் மேலும் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது.

ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்கும் அல்லது வாக்கெடுப்பைப் பகிஷ்கரிக்கும் என்ற ஊகங்கள் ஏராளமாகக் காணப்பட்டன. ஆயினும், இரண்டு விடயங்களிலும், ஜே.வி.பி. அரசாங்கத்துடனும் மற்றும் வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரம் மீதான அதன் இடைவிடாத தாக்குதல்களுடனும் அணிதிரண்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கும். உள்நாட்டில் தெளிவாகவே அம்பலத்துக்கு வந்துள்ள ஜே.வி.பி., புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் யூ.என்.பி. யுடனும் சேர்ந்து வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் கடைசி நிமிடம் வரை ஊசலாடிக்கொண்டிருந்தது. வரவுசெலவுத் திட்டத்திற்கு கடைசியாக அங்கீகாரம் வழங்கும் வாக்கெடுப்பு டிசம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

நவம்பர் 19ம் திகதி நடந்த வாக்கெடுப்பை நெருங்கிய காலத்தில், தனது எளிதில் கையாள முடியாத 13 கட்சிகளின் கூட்டணியும் மற்றும் குழுக்களும் ஒன்றாக இருக்காததையிட்டு இராஜபக்ஷ கவலையடைந்திருந்தது தெளிவு. செவ்வாய் கிழமையன்று அமைச்சரவை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் எச்சரித்தவாறு, திரைமறைவில் பேரம் பேசுதல் மிகவும் கூர்மையாக இருந்துள்ளது. "விலை கொடுத்து வாங்கக்கூடிய விலைப் பட்டியல் பொருத்திய விற்பனைப் பண்டங்களைப் போலவே பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் பார்க்கின்றனர்," என ஹக்கீம் தெரிவித்தார். ஆளும் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அவர்கள் ஒரு பக்கம் சார்ந்திருப்பதற்காக கொடுக்கப்பட்ட சன்மானமாக ஏதாவதொரு அமைச்சுப் பதவியில் உள்ளனர்.

நவம்பர் 14 அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச இராஜபக்ஷ, எதிர்க் கட்சி ஆசனத்தில் வந்து அமர்ந்தார். பொது தொழில் முயற்சி குழுவின் (கோப்) தலைவராக இருந்த அவர், அரசாங்க நிறுவனங்களில் மோசடிகளை விசாரிப்பதற்குப் பொறுப்பானவராக இருந்தார். அவர் தற்போதைய அமைச்சரவையை 30 உறுப்பினர்கள் வரை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு கோப் அறிக்கையில் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரு அமைச்சரவை அமைச்சர்களை நீக்குமாறும் கோரினார்.

யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்னதிலக்கே, அரசாங்கத்தின் பக்கம் தாவினார். அனைவரும் இராஜபக்ஷவுக்கும் மற்றும் அவரால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என அவர் பிரகடனம் செய்தார். வரவுசெலவுத் திட்ட வாக்களிப்பு நடந்து இரண்டு நாட்களின் பின்னர், அவர் இராஜபக்ஷ அரசாங்கத்தின் 109வது அமைச்சராக பதவியேற்றார்.

இராஜபக்ஷ வரவுசெலவுத் திட்டத்தை நியாயப்படுத்தவும் அரசாங்கத் தரப்பினர் உட்பட எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்காக தேசபக்தியை கிளறிவிடும் இசிவு நோய் பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில்" இருந்து ஒரு பகுதியை எடுத்துக்கொண்ட இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், வழமைபோல் யுத்தம் சம்பந்தப்பட்ட எந்தவொரு எதிர்ப்பையும் "புலி பயங்கரவாதத்திற்கான" ஆதரவாக வகைப்படுத்தினர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தெரிவித்ததாவது: "நாம் நாட்டை அபிவிருத்தி செய்யும் அதே வேளை பயங்கரவாதத்தையும் அழிப்பதற்காகவே இந்த வரவுசெலவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்... புலிகளும் அதே போல் ஏனையவர்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க விரும்புகின்றனர்." கடந்த வாரம் விஜேதாச எதிர்த் தரப்பில் இணைவதற்காக சென்றபோது, அவர் "புலி" என அரசாங்கத் தரப்பினர் கூச்சலிட்டனர்.

அரசாங்கமும் அதன் பங்காளிகளும் மிகவும் நேரடியான அச்சுறுத்தல்களை விடுக்கத் தயங்கவில்லை. முன்னணி யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களை, மோசடி குற்றச்சாட்டுக்களின் பெயரில் விசாரணைக்காக பொலிஸ் தினைக்களத்தின் குற்றவியல் விசாரனைப் பிரிவினர் இழுத்தனர். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்றழைக்கப்படும் அரசாங்க சார்பு துணைப்படைக் குழுவொன்று தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கடந்த திங்களன்று தமிழ் கூட்டமைப்பு முறைப்பாடு செய்தது. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான டி. கனகசபை, அவரது உறவினர் ஒருவர் கடத்தப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பிற்கு வரவில்லை. கடந்தப்பட்டவர் வாக்கெடுப்பின் பின்னர் "கண்டுபிடிக்கப்பட்டார்".

ஊடகங்களில் ஒரு பகுதி இனவாத பிரச்சாரத்தில் இணைந்துகொண்டன. வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை "மஹிந்த எதிர் பிரபாகரன்" என்ற தலைப்பில் நவம்பர் 19 ஒரு ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டிருந்தது. இந்த வரவுசெலவுத் திட்டம் "யுத்த வரவுசெலவுத் திட்டத்திற்குரிய அனைத்து சிறப்புப் பண்புகளையும்" கொண்டுள்ளது என்பதை ஐலண்ட் ஏற்றுக்கொண்டது. "அரசாங்கத்தைக் கவிழ்த்தல் என்ற பெயரில் அனைவரும்" யுத்தத்தை எதிர்க்கும் சக்திகளுடன் இணைந்து கொண்டுள்ளனர் என வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்தவர்களை அது குற்றஞ்சாட்டியது.

எதிர்க் கட்சிகள்

அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்தை ஆதரிக்கின்ற போதிலும் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் உழைக்கும் மக்களைக் காப்பவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. போன்ற மோசடி எதிர்க் கட்சிகள் மீது ஐலண்ட் ஆசிரியர் தலைப்பு விரல் நீட்டுகின்றது.

யூ.என்.பி. பேச்சாளர்கள் மோசடிகளுக்காக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியதோடு வரவுசெலவுத் திட்டத்தின் பொருளாதார நோக்கங்களை -பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடிய பிரமாண்டமான கடன் மற்றும் புதிய வரிகளை அமுல்படுத்துதல்- வலிமையுடன் விமர்சித்தது. ஆனால் அவர்கள் பிரமாண்டமான இராணுவச் செலவுகளைப் பற்றியோ அல்லது யுத்தத்தைப் பற்றியோ எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைப்பதை விடாமுயற்சியுடன் தவிர்த்துக்கொண்டனர்.

1983ல் முதலாவதாக உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததற்குப் பொறுப்பான யூ.என்.பி., நிச்சயமாக யுத்தத்தின் எதிரியல்ல. ஆயினும் 2002ல், யுத்தம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையிட்டு ஆளும் வட்டாரத்தில் தோன்றிய கவலைகளுக்குப் பிரதிபலித்த யூ.என்.பி., யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டதோடு புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களையும் ஆரம்பித்தது. 2005ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்டதை அடுத்து, யூ.என்.பி. பெருமளவில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பாதையில் வீழ்ந்துகொண்டது. அதே சமயம், யுத்தம் தொடர்பான வெகுஜனங்களின் எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருவதைக் குறைந்தபட்ச காரணமாகக் கூட எடுத்துக்கொள்ளாத யூ.என்.பி., அரசாங்கம் பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடியைத் தோன்றுவிக்கின்றது என்ற பெரும் வர்த்தகர் கும்பலின் கவலையையே தொடர்ந்தும் பிரதிபலிக்கின்றது.

ஜே.வி.பி. யின் சமநிலைப்படுத்தும் நடவடிக்கை மேலும் சித்திரவதையானது. நாடகபாணியில் பாதுகாப்புச் செலவை அதிகரித்ததோடு உழைக்கும் மக்கள் மீது மிகப்பெரும் சுமைகளைத் திணித்த இராஜபக்ஷவின் கடந்த இரு வரவுசெலவுத் திட்டங்களுக்கும் ஜே.வி.பி. வாக்களித்தது. இம்முறை, நீண்ட ஊசலாட்டத்தின் பின்னர், அது வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்றும் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் கட்டளையிடவில்லை எனவும் விமர்சிக்கின்றது. ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைவாசி அதிகரிப்பு, அரசாங்க மோசடிகள் மற்றும் அமைச்சரவை செலவுகள் தொடர்பாகவும் விமர்சித்தனர்.

இராஜபக்ஷவுடனும் அவரின் அரசாங்கத்துடனும் ஜே.வி.பி. நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதனால் உழைக்கும் மக்களின் கண்களின் முன்னால் அதிருப்திக்குள்ளாகி வருவதையிட்டு அது மிகவும் நடுக்கம் கொண்டுள்ளது. 2004ல் ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வதன் பேரில் அது ஸ்ரீ.ல.சு.க. மற்றும் யூ.என்.பி. மீதான பரந்த அதிருப்தியை சுரண்டிக்கொண்டது. ஆயினும், அண்மையில், எந்தவொரு புதிய தேர்தலிலும் பாராளுமன்ற ஆசனங்களை இழக்க நேரிடும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள ஜே.வி.பி., அரசாங்கம் இடைக்காலத் தேர்தல்கள் எதையும் நடத்துவதை எதிர்க்கின்றது.

ஜே.வி.பி. யினர் வாழ்க்கைத் தரத்தைக் காப்பவர்களாக பாராளுமன்றத்தில் காட்டிக்கொள்ளும் அதே வேளை, தாம் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு விலையாக யுத்தத்தை உக்கிரமாக்கவேண்டும் எனக் கோருகின்றனர். வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக, ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கிழித்தெறிதல், யுத்தத்திற்கு அரசியல் தீர்வு காண்பதன் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவை கலைத்தல், இலங்கைக்கு ஐ.நா. பிரதிநிதிகள் விஜயம் செய்வதை தடை செய்தல், இலங்கையின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் காக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதியெடுத்தல் ஆகிய நான்கு நிபந்தினைகளை விதித்தார்.

அமரசிங்கவால் குறிவைக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருபவை அல்ல. இராஜபக்ஷ யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறா விட்டாலும், அது கிழக்கில் புலிகளின் பெரும்பலான பிராந்தியங்களை இராணுவ ரீதியில் கைப்பற்றுவதையும் வடக்கில் புதிய தாக்குதல்களை முன்னெடுப்பதையும் நிறுத்தவில்லை. தாம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பாசாங்கு காட்டி, பெரும் வல்லரசுகளை தன் பக்கம் வைத்துக்கொள்வதன் பேரிலேயே அரசாங்கம் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவை ஸ்தாபித்தது. ஐ.நா. வைப் பொறுத்தவரை, இராணுவம் ஜனநாயக உரிமைகளை மோசமான முறையில் மீறுவதை ஐ.நா. குறிப்பிட்ட வரையறைகளுடன் தன்னும் விமர்சிப்பதை ஜே.வி.பி. கசப்புடன் எதிர்க்கின்றது.

யுத்த வரவுசெலவுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்கத் தவறியமை தொடர்பான அரசாங்கத்தின் விமர்சனத்தையிட்டு ஜே.வி.பி. குறிப்பாக நுண்ணுனர்வுடன் உள்ளது. செவ்வாய்க் கிழமை நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஜே.வி.பி. க்கு "தேசப்பற்று இல்லை" என்ற குற்றச்சாட்டுக்களை அமரசிங்க நிராகரித்தார். அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரி சுமைகளைத் திணித்துள்ளதாலும் கடன்களை அதிகரித்துள்ளதாலுமே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தமது கட்சி வாக்களித்ததாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், இலங்கை அரசாங்கம் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய முறையாக பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்சிலின் சாதனைகளை அமரசிங்க தூக்கிப் பிடித்தார். "அவர் தனது சொந்த நலன்களை அர்ப்பணித்ததன் மூலம் ஒரு உதாரணத்தை உருவாக்கிய காரணத்தால் அவர் நாட்டின் அனைத்து தரப்பினரதும் ஆதரவைப் பெற்றுக்கொண்டார்," என ஜே.வி.பி. தலைவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இராணுவச் செலவைக் குறைப்பதற்குப் பதிலாக, வெகுஜனங்களின் ஆத்திரத்தை தணிக்க பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பழமைவாத தலைவரைப் போல், "அர்ப்பணிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும்" சைகைகளை காட்ட வேண்டும் என்பதாகும். அத்தகைய ஒரு தோரணையைக் காட்ட இலங்கை ஜனாதிபதி விரும்பினால், டிசம்பர் 14 அன்று யுத்த வரவுசெலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. வாக்களிக்கத் தயாராக இருக்கும் என அமரசிங்க விளக்கினார்.

உழைக்கும் மக்கள் தமது அடிப்படை உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பேணிக்கொள்ள, யுத்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராகப் போராடத் தள்ளப்பட்டுள்ளனர். ஆயினும், வரவுசெலவுத் திட்ட விவாதம் வெளிப்படுத்தியிருப்பது போல், அவர்களால் எந்தவொரு பாராளுமன்ற எதிர்க் கட்சிகளையும் நம்பியிருக்க முடியாது.