World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy announces vast attacks on French workers' rights and conditions

பிரெஞ்சு தொழிலாளர்களின் உரிமைகள், நிலைமை மீது சார்க்கோசி பரந்த தாக்குதல்களை அறிவிக்கிறார்

By Antoine Lerougetel
3 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 18, 19 தேதிகளில் நிகழ்த்திய இரு முக்கிய கொள்கைகள் பற்றிய உரைகளில், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் எந்த பிரெஞ்சு ஜனாதிபதியும் நடத்தாத அளவிற்கு தொழிலாள வர்க்கத்தின் சமூக, ஜனநாயக உரிமைகள் மற்றும் வேலை நிலைமை, வாழ்க்கை நிலைமைகள் மீதான தொலைதூர விளைவுகள் தரும் தாக்குதல்களுக்கான திட்டத்தை எடுத்துக் கூறினார். இவை செயல்படுத்தப்பட்டால், அவை பல தசாப்தங்கள் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற நலன்களை அழிக்கும் மற்றும் அவர்களை போருக்கு முந்தைய நிலைமைகளுக்கு தள்ளிவிடும்.

அவருடைய செப்டம்பர் 18ம் தேதி உரையில் தன்னுடைய "சமூக ஒப்பந்தத்தை" கோடிட்டுக் காட்டுகையில் சார்க்கோசி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முன்வைத்தார்.

* "சிறப்புத் திட்ட" ஓய்வூதிய திட்டங்கள் பிரான்ஸ் நகர பொதுப் போக்குவரத்து, இரயில்வே, எரிவாயு மற்றும் மின்சாரத் தொழில்களில் பணியாற்றும் 1.6 மில்லியன் தொழிலாளர்கள், அனுபவித்து வந்த ஓய்வூதிய திட்டங்கள் கைவிடப்படும். அவர்களுடைய ஓய்வூதியங்கள் பொதுத்துறையின் இதர 5 மில்லியன் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களுக்கு இணையாக கொண்டுவரப்படும்; இவை 2003ம் ஆண்டில் மிகக் கடுமையாக குறைக்கப்பட்டவை ஆகும். "சிறப்புத் திட்டங்களில்" சில தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற இருந்த வயது வரம்பான 50, 55 என்பன இப்பொழுது 60 என்று மாற்றப்படும்; குறைந்தது 40 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதிய தொகைகள் கணக்கீடு, முந்தைய 25 ஆண்டுகளின் அடிப்படையில் என்று இருக்குமே அன்றி வேலையின் கடைசி 6 மாதங்களின் அடிப்படையில் என்று இருக்காது; இது மிகக் கணிசமான குறைப்புக்களை ஏற்படுத்திவிடும்.

* 16 அல்லது அதற்கும் குறைந்த வயதில் வேலை பார்க்கத் தொடங்கிய "நீண்டகாலம் பணியாற்றிய" தொழிலாளர்கள், 60 வயதிற்கு முன் முழு ஓய்வூதியத் தொகையில் ஓய்வு பெறும் உரிமைபெறுவதற்கு 42 ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டும் என்பது, கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் கருவூலத்திற்கு 2 பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்தும்; 430,000 தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தற்போது 40 ஆண்டுகள் இருந்தாலே அவர்கள் முழு ஓய்வூதியம் பெறமுடியும். மற்ற பிற பொதுத்துறை பிரிவுகளின் ஊழியர்கள் அனைவரும் 41 ஆண்டுகள் வேலை பார்த்திருந்தால்தான் முழு ஓய்வூதிய உரிமைகளை பெறமுடியும்; 2003ல் இது 37.5 ஆண்டுகள் என்று இருந்தது.

* தேசிய வேலை கொடுக்கும் அமைப்பு (ANPE) மற்றும் UNEDIC (தொழிலதிபர்களும் தொழிற்சங்கங்களும் கூட்டாக நிர்வகிக்கும் வேலையின்மைக்கான நலநிதி) ஆகியவை இந்த நிதிகளை பெற விரும்புவோர் மீது கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கும் நோக்கத்துடன் ஒன்றாக இணைக்கப்படும். இணைந்த அமைப்பு, ஒழுங்குவிதிகள் கடைபிடிக்கப்படாவிட்டால் தடைகளை சுமத்தும்: இரண்டு வேலைகளை மறுக்கும் தொழிலாளர் அல்லது மறுபயிற்சிக்கான வாய்ப்புக்களை மறுக்கும் தொழிலாளியின் நலன்கள் நிறுத்திவிடப்படும். இது வேலை கொடுப்பவருடன் தடையற்ற முறையில் தன்னுடைய உழைப்பு சக்தியைப் பேரம் பேசும் தொழிலாளரின் உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும்; இந்தக் கொள்கைதான் சுதந்திர மற்றும் அடிமை உழைப்புக்களுக்கு இடையே வேறுபாட்டை நிர்ணயிப்பது ஆகும்.

* முன்கூட்டி ஓய்வுபெறுதலை தடுக்கும் வகையில் வரிகள் குறைக்காத நிலை மற்றும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு மக்கள் 65 வயது வரை உழைக்கவேண்டும் என்பது தக்க வைக்கப்படும்.

* குறைந்தபட்ச ஊதியம் (SMIC) வாழ்க்கைச் செலவு உயர்வுடன் இனி தொடர்புபடுத்தப்பட மாட்டாது. ஆனால் "பொருளாதார அடிப்படைகள்" அதாவது பெருவணிகத்தின் தேவைகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு அது ஒரு குழுவினால் நிர்ணயிக்கப்படும்.

* தொழிலாளர் சட்டம் பற்றிய ஒரு 'சீர்திருத்தம்', "வேலை ஒப்பந்தத்தை சூழ்ந்து குவிந்துள்ள பாதுகாப்புக்களை ...உரிமைகள் மிக அதிகமாக இருப்பதை" குறைத்துவிடும். (சார்க்கோசி)

* தனியொருவர் கையில் இருந்து செலவழிக்கப்பட வேண்டிய சுகாதாதார கட்டணங்கள் ஆண்டு ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 50 யூரோக்கள் அளவில் உயர்த்தப்படும்.

இதற்கு மறுநாள், இரண்டாம் உரையில், சார்க்கோசி பொதுப் பணித்துறையில் இருக்கும் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு பற்றிய தாக்குதல் ஒன்றை கோடிட்டுக்காட்டியதுடன், அவர்கள் உரிமைகள் மற்றும் அந்தஸ்து என தகுதிகளினாலும் அனுபவத்தாலும் பெற்றவை வெட்டப்படும் என்றார். "முற்றிலும் இயந்திரகதியில் உள்ள, சட்டபூர்வ, சமத்துவ வகையிலான, பெயரிடாத அணுகுமுறையில் இருந்து" வெளியேற விரும்பி, "ஊதியங்கள் தனிநபர் திறமைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என்று கொண்டுவர விரும்புகிறேன்"; மேலும் "200 அரசாங்க தணிக்கையாளர்களை கொண்ட 18 தணிக்கைக் குழுக்கள், அரசு செலவீனங்களின் டிரில்லியன் யூரோக்கள் முழுவதிற்குமான சீர்திருத்தங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்." என்று கூறியதுடன் கீழ்க்கண்ட நடவடிக்கைகளையும் அறிவித்தார்:

* பொதுப்பணித் துறையில் இரண்டு பேர் ஓய்வு பெற்றால், ஒருவருடைய இடத்திற்கு ஆள் நியமிக்கப்படமாட்டாது; மிகப் பெரிய அளவில் அதிக நேரம் வேலை செய்வதற்கு ஊதியம் அளிக்கப்படும்.

* வேலைகளின் நகரும்தன்மை என்பதை ஆரம்பித்து வைப்பதன் மூலம் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் என்பது உடைக்கப்படுதல்: "தேவைகளுக்கு ஏற்ப வளங்கள் தொடர்ச்சியாக மாறுபட்ட விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்." பொதுத்துறை தொழிலாளர்கள் தனியார் பிரிவிற்கு செல்ல விரும்பினால் ரொக்க ஊக்கத் தொகைகளை பெறுவர்; தனியார் பிரிவு முறையிலான ஒப்பந்த முறைகளில் பொதுப்பணித் துறைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உண்டு; அவர்கள் இப்பொழுது பொதுப்பணி தொழிலாளர்கள் பெறும் உரிமைகளையும், உறுதிப்பாடுகளையும் கொண்டிருக்க மாட்டார்கள். ஊதியம் வழங்குதல் என்ற முழுமுறையும் இக்கொள்கைகளின் அடிப்படையில் சீரமைக்கப்படும்; ஊதியமானது ஏற்படுத்தப்பட்ட அனைவருக்குமான உரிமைகள் என்ற அடிப்படையை காட்டிலும் முடிவுகள் மற்றும் தனிநபர் திறன் இவற்றால் வலியுறுத்தப்படும்.

* பொருளாதார முன்னுரிமைகள் கருத்தில் கொள்ளப்பட்டு கல்வியின் அளவு, தரம் ஆகியவை குறைக்கப்படும்: "தேசிய கல்விப்பணியில் ஊழியர் குறைப்புக்கள் வேகம் மொத்தத்தில் பாடத் திட்டம், பள்ளி நேரம் இவற்றை மாற்றியமைப்பதில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும்; அவை எமது சேமிப்பு முயற்சிகளை சரிப்படுத்துவதற்கு தேவையாகும்." இத்தகைய அணுகுமுறை "கணக்காயரின் கருத்தின்படியான கல்விமுறை" என்று நன்கு அறியப்படும்.

முந்தைய பிரெஞ்சு அரசாங்கங்கள் இதேவித அல்லது இதேபோன்ற தாக்குதல்களைத்தான் ஓய்வூதியங்கள், பொதுப் பணித்துறை மற்றும் கல்வித்துறையில் சார்க்கோசி கூறியது போல் திட்டமிட்டிருந்தன (ஆனாலும் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டவை அல்ல); ஆயினும் அம்முயற்சிகள் சமரசத்திற்கு உட்படுமாறு கட்டாயம் பெற்றன அல்லது பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே பகுதியளவில் திரும்பப் பெறப்பட்டது.

1995ம் ஆண்டு "சிறப்பு திட்ட" ஓய்வூதிய திட்டங்களை அகற்றும் வகையில் அப்பொழுது கோலிச பிரதம மந்திரியாக இருந்த அலன் யூப்பேயினால் கொண்டுவரப்பட்ட முயற்சிகள் நாட்டையே ஸ்தம்பிக்க செய்ய வைத்தது. இறுதியில் யூப்பே இராஜிநாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 2003, 2006 தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் மகத்தான வெகுஜன இயக்கங்கள் இன்னும் கடுமையான வகையில் பிரெஞ்சு அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்வதை தடைக்கு உட்படுத்தின.

இதன் விளைவாக, மற்ற அதன் ஐரோப்பிய போட்டி நாடுகளைவிட உலகந்தழுவிய கடும் போட்டியில், குறிப்பாக பிரிட்டன் ஜேர்மனிக்கு எதிராக, பிரான்ஸ் பின்தங்க நேரிட்டது; அந்நாடுகளின் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் போருக்கு பிந்தைய நலன்புரி அரசில் எஞ்சியிருந்த சலுகைகளையும் அகற்றிவிட்டன. இதன் விளைவாக பிரான்சின் எதிர்மறை வணிக இடைவெளி உறுதியாக விரிவடைந்து வருகிறது--2003ல் 2.4 பில்லியன் யூரோக்கள் என்பதில் இருந்து 2004ல் 5.3 பில்லியன் யூரோக்கள் என்றும், 2005ல் 21.2 பில்லியன் யூரோக்கள் என்றும், கடந்த ஆண்டு 28 பில்லியன் யூரோக்கள் என்றும் இந்த ஆண்டு 30 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக என்ற மதிப்பீட்டிலும் உள்ளது. பொதுச் செலவு 1974ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37 சதவிகிதத்தில் இருந்து 2007ல் 53 சதவிகிதம் என 1 டிரில்லியன் யூரோக்கள் என்று உயர்ந்துவிட்டது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்குகளை பொறுத்தவரையில், பிரான்சின் நலன்புரி அரசு முறை முழுமையாக தகர்க்கப்பட வேண்டும் என்பது இனியும் ஒத்திப்போட முடியாததாகிவிட்டது.

செப்டம்பர் 24ம் தேதி பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் வானொலிப் பேட்டி ஒன்றில் பிரான்சின் பொது நிதியங்கள், குவிந்துவிட்ட கடன்களினால் "செயல்பட முடியாத நிலைக்கு வந்துவிட்டன" என்று கூறினார். கோர்சிகாவிற்கு பயணம் செய்திருந்தபோது, "நிதி ரீதியாக பேசுவதாயின்", பிரான்ஸ் "திவால் நிலையில் உள்ளது" என்று அவர் அறிவித்தார்; இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சமூக செலவினங்களை குறைத்தல் என்ற கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அக்டோபர் 24ம் தேதி Spiegel Online, "சார்க்கோசி பல ஆண்டுகள் ஜேர்மனி இதேபோல் செயல்பட்டு கொண்டுவந்த சீர்திருத்த வழிவகைகளை ஆறே மாத காலத்தில் முடிப்பதற்கான திட்டங்களை கொண்டுள்ளார்" என்று கூறியது.

"சலுகைகள் மீதான" வார்த்தைஜால தாக்குதல்

தொழிலாளர்கள் குறைக்கப்பட்ட உரிமைகளை தாங்களே ஏற்பதற்கு மற்றவர்களுடைய குறைந்த மட்ட உரிமைகளை ஒரு வாதமாக பயன்படுத்துதல் என்பது சார்க்கோசிக்கு உகந்த நடைமுறை திட்டங்களில் ஒன்றாகும்; உண்மையில் "சலுகை பெற்றவர்களுக்கு" எதிராக குறைந்த வாய்ப்பு உடையவர்களை தூண்டிவிடுதலாகும்.

இவருடைய "சமூக ஒப்பந்தம்" உரையில் "சிறப்பு திட்ட" ஓய்வூதியங்களை பற்றி இவர் குறிப்பிடுவதாவது: "இது ஒரு சமபங்கு நிலைமை பற்றியதாகும். இவற்றை சேர்க்காமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொள்ளமாட்டோம். ஒரு பொறியியில் தொழிலாளியோ ஆசிரியரோ சேவை செய்யவேண்டிய காலம் 37.5 ல் இருந்து 40 என்று இருப்பதையும் நாளை 41 ஆண்டுகள் என்று இருப்பதையும் ஏற்க வேண்டும் என்றால், ஒரு பெரிய பொதுப் பணித்துறையில் இருக்கும் தொழிலாளி 37.5 ஆண்டுகள் அல்லது அதையும் விடக் குறைவான ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதை எவ்வாறு அவர்களுக்கு விளக்க முடியும்?"

இங்கு "சிறப்பு திட்டங்கள்" அகற்றப்பட வேண்டும் என்பது அனைத்து ஓய்வூதியங்களின் மீதான தாக்குதல்கள் பற்றி புதிதாக நடத்துவதற்கு ஒரு கட்டாய முதல் தேவை என்று சார்க்கோசி ஒப்புக் கொள்ளுகிறார். "சிறப்பு திட்டங்களில்" சேமிப்புக்கள் குறைந்த ஓய்வூதியங்களை உயர்த்துவதற்கான நிதியத்திற்கு உதவும் என்றும் நலத்தின்பால் அக்கறையின்றி தெரிவிக்கிறார்.

மருந்துகள் பெறுதல் என்ற பிரச்சினையை பொறுத்தவரையிலும் இதேபோன்ற இணைப்பைத்தான் அவர் முன்வைக்கிறார்; இதில் ஒரு தேசிய இனத்தை மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக மோதவைக்கும் வகையில் செய்கிறார்: "மருத்துவரை சந்தித்தல்களில் 90 சதவிகிதம் மருந்துகள் எழுதிக் கொடுப்பதில்தான் முடிவடைவது சரியல்ல; இந்த விகிதம் ஹாலந்தில் 40 என்றுதான் உள்ளது." சுகாதார வசதிக்கு கட்டணம் சுமத்துவதை நியாயப்படுத்தும் வகையில் இந்தப் பணம் ஆல்ஷிமர் மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்குத்தான் செல்லும் என்ற வகையில் நியாயப்படுத்துகிறார்.

நோயாளிகள் நோய்க்கு பணம் செலுத்த வேண்டும், ஓய்வூதியக்காரர்கள் ஓய்வூதியக்காரர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்; ஆனால் நிதிய உயரடுக்கின் இழிந்தவகையிலான செல்வக்குவிப்பிற்கு, கிட்டத்தட்ட 10-15 பில்லியன் யூரோக்கள் வரிவிலக்கு அளிக்கப்படும்.

தொழிற்சங்கங்களின் சேவைகளை சார்க்கோசி பயன்படுத்துகிறார்

தனக்கு முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களுடைய கதியை தவிர்க்கும் வகையில், சார்க்கோசி தொழிற்சங்கங்களின் பணிகளை தொழிலாளர்கள் மீதான தன்னுடைய தாக்குதலுக்கு உபயோகிப்பதில் தீவிரமாக உள்ளார். தேசியவாத பார்வை கொண்டு பிரெஞ்சு நிறுவனங்கள் பூகோளரீதியில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்கு முழுமையாக அர்ப்பணித்துள்ள இந்த அமைப்புக்கள், பிரெஞ்சு முதலாளித்துவத்தை தொடர்ந்தும் போட்டித் தன்மைமிக்கதாக உறுதிப்படுத்துவதற்கு செய்யும் எதையும் நிறுத்தப்போவதில்லை என்பதை அவர் அறிவார்.

கடந்த காலத்தில், தொழிற்சங்கங்கள் வாடிக்கையாக பெரும் வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுத்து அவை பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு அச்சுறுத்தல் தராமலும், அரசாங்கத்தின் உறுதி குலையாமலும் பார்த்துக் கொள்ள உதவின. ஆனால் சார்க்கோசி, அவை இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். பிரெஞ்சு முதலாளித்துவத்தின் தற்போதைய நிலைமையானது தொழிற்சங்கங்கள் நலன்புரி அரசு மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளை தகர்ப்பதற்கான உந்துதலில் நேரடிப் பங்காளிகளாக செயல்படவேண்டும் என்பதை தேவையாக கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழிற்சங்கங்களுக்கும், மிகவும் பிடிவாதத்துடன் தொழிலாள வர்க்க எதிர்ப்புடைய பிரெஞ்சு ஜனாதிபதிக்கும் இடையில், பெருநிறுவன பங்காளித் தன்மை எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்தது என்பது சார்க்கோசியின் செப்டம்பர் 18ம் தேதி உரையில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய இலக்கை அடைவதற்கு இன்றியமையாத கருவியாக தொழிற்சங்கங்கள் இருக்கும் என்று தான் கருதுவதாக அவர் தெளிவாக்கினார். "சமூக உரையாடல்", "சமூகப் பங்காளிகள்" என்று ஒரு ஒன்பது-பக்க பேச்சில் 20 தடவைக்கும் மேலாக வந்துள்ள வெளிப்பாடுகளின் முக்கியத்துவம் இதுதான்.

தன்னுடைய பேச்சின் முடிவில், பிரெஞ்சு ஜனாதிபதி வலியுறுத்தியதாவது: "சமூகப் பங்காளிகளும் இன்னும் பொதுவான முறையில் மத்தியஸ்த அமைப்புக்களும் இதுகாறும் இல்லாத அளவிற்கு, கவனமுடன் கேட்கப்படுவர், மதிக்கப்படுவர் என்பதை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். என்னுடைய கதவுகள் எப்போதுமே திறந்துள்ளன; திறந்தே இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த பெரும் சமூகப் பங்காளிகள் பால் நான் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் அவர்களை நன்கு அறிவேன்; அவர்கள் எனது தலைமுறையை சேர்ந்தவர்கள்; அதாவது எமது தற்போதைய முறையில் இருக்கும் தவறுகளை அறிந்துகொள்ள நல்ல அனுபவம் படைத்தவர்கள்; அதேநேரத்தில் மாற்றங்களை விரும்புதற்கு மற்றும் சமூக புதுமையை கற்பனை செய்து மாற்றும் துணிவும் கொள்வதற்கு ஏற்ற இளமை வாய்ந்தவர்கள்."

தொழிற்சங்கங்கள்மீது இவர் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் தெளிவான முறையில் முதலாளிகள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல், வேலைப்பாதுகாப்பு உறுதிமொழிகளை பலவீனப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது; இப்பிரச்சினைதான் முதல் வேலை ஒப்பந்த (Contrat de première embauche -CPE) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மையக் கூறுபாடாக கடந்த ஆண்டு இருந்தது.

தொழில் சட்டங்கள், பணி ஒப்பந்தங்கள் ஆகியவை குறித்து சார்க்கோசி கூறியதாவது: "சமூகப் பங்காளிகள் இந்த கடினமான பிரச்சினையை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது பற்றி நான் பெரிதும் உவகை அடைகிறேன். புதுமையான சமரசத்திட்டத்தை அவர்கள் முன்வைக்கும் திறன் உடையவர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு... ஒரு உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், சட்டம் அதை செயலில் கொள்ளும். உடன்பாடு இல்லை என்றால், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இதன் பின் சமூகப் பங்காளிகளுடன் நடத்தும் விவாதத்தில், அவர்களது உரையாடலின் இருப்பு நிலைக் குறிப்பை கணக்கில் கொள்ளும்." இப்படி உயர்த்திக் கூறப்பட்டுள்ள பத்தி சார்க்கோசி தான் நம்பியிருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்மீது கொண்டிருக்கும் இகழ்வை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வேலையிழந்த தொழிலாளர்களின் பொதுநல நிதி பெறும் உரிமைகள் குறைக்கப்படுவது பற்றி சார்க்கோசி கூறினார்: "சமூகப் பங்காளிகள் இருக்கும் முறை முற்றிலும் மறு ஆய்வு செய்யப்படுவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்."

சார்க்கோசியின் பங்காளிகள் என்ற முறையில் தங்கள் பணியை தொடரும்போது தொழிற்சங்கங்கள் அவர்கள் நீண்ட காலமாக கொண்டுள்ள தந்திரோபாயமான தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள், நிலைமைகள் மீதான மகத்தான தாக்குதலை தன்னார்வத்துடன் வெளிப்படுத்துவதை பெரிதும் குறைக்க முற்படுகின்றன. இதற்கு முதல் நடவடிக்கையாக பாரிசில் அக்டோபர் 13ம் தேதி ஒரு தேசிய ஆர்ப்பாட்டம் உள்ளது; ஆரம்பத்தில் இது இரயில் தொழிலாளர்கள் வேலை இழப்புக்களுக்கு எதிராக மற்றும் தங்கள் ஓய்வூதிய பாதுகாப்பிற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 18ம் தேதி நடவடிக்கை தினம் என்ற அறிவிப்பு வந்துள்ளது; சார்க்கோசியின் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் வெளிவந்து ஒரு முழு மாதத்திற்கு பின்னரே இது நடைபெற உள்ளது.

செப்டம்பர் 25ம் தேதி ஸ்ராலினிச தலைமையிலான CGT (General Confederation of Labour) வழிநடத்திய மாநாடு, கம்யூனிஸ்ட் நாளேடான L'Humanite யில் வந்துள்ள கருத்து பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மிகத் திறமையுடன் வெகுஜன எதிர்ப்பை நெரிக்கும் முயற்சிகளுக்கு தக்க உதாரணம் ஆகும். "ஒரு உறுதியான நிலை வெளிவந்தது; தொழிலாளர்களை திரட்டுவது என்பது தவிர்க்கமுடியாதது" என்று கட்டுரை கூறுகிறது. ஆனால் இது எப்படி மெதுவாக செல்லும் என்பதையும் அது கூறுகிறது. ஒரு பிரதிநிதி அறிவித்தார்: "எமது பெட்டிகளை கீழே இறக்கி வைக்க, விவாதிக்க, விஷயங்களை விளக்க நமக்கு கட்டாயம் நேரம் இருக்க வேண்டும்."

CGT இன் ஓய்வூதியப் பொறுப்பு அதிகாரியான Jean-Christophe Duigou, "சமூகத்தின் வெப்ப நிலை கருத்திற் கொள்ளப்பட்டு அதற்கேற்ப தொழிற்சங்க விடையிறுப்பு அமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். மற்றொரு பேச்சாளர் இரயில் தொழிலாளர் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு வரையறுக்கப்படாத நிகழ்வுக்காக காத்திருக்க வேண்டும் என்றார்: "தங்கள் விருப்பப்படி செய்வதற்கு இரயில் தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது.... சில சமயம் அல்லது வேறு சமயம் விஷயங்களை பற்ற வைக்கும் கூறுகள் அங்கு இருக்கலாம்."

மே மாதம் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, தொழிற்சங்க தலைவர்கள் ஜனாதிபதியுடன் இடைவிடா ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அவருடைய திட்டத்திற்கு அச்சம்தரும் வெகுஜன எதிர்ப்புக்கு எதிரான ஒரு நிரந்தரப் போர்க் குழு என்ற தன்மையை கொண்டிருக்க கூடிய இக்கூட்டங்கள், அக்டோபரில் முத்தரப்பு மாநாடுகளாக (தொழிற்சங்கங்கள், முதலாளிகள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என) விரிவாக்கப்படக்கூடும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் முழு நேர அதிகாரிகள் கொண்ட பிரான்சின் சிறு படைக்கு இவை அனைத்திலும் என்ன கிடைக்க இருக்கிறது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவேண்டியுள்ளது. இப்பொழுதும்கூட தொழிற்சங்க நிதிகளில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவை குறைந்துவரும் உறுப்பினர்கள் கட்டணங்களால் கொள்ளப்படவில்லை, மாறாக பல்வேறு அரசாங்க உதவிக்கொடைகளால் கொள்ளப்படுகின்றன.

புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (LCR) போன்ற "இடது" குழுக்கள் தொடர்ந்து தொழிற்சங்கங்களை போற்றிப் புகழ்வதுடன் தொழிலாளர்களை தங்கள் நலன்களுக்காக அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

இளைஞர்களும் தொழிலாள வர்க்கமும் "இடது" கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் குட்டி முதலாளித்துவ வால்கள் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் சுயாதீன முறையில், சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்குகளின் அடிப்படையில் ஒரு கட்சியை கட்டுவதன் மூலமே இத்தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.