World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Conflict between Turkey and the US intensifies

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் தீவிரமடைகிறது

By Peter Schwarz
17 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

வடக்கு ஈராக்கில் துருக்கி இராணுவத்தின் இராணுவத் தலையீடு குறித்த பிரச்சனை தொடர்பாக துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது.

அண்டை நாடான ஈராக் மீது இராணுவ நடவடிக்கைகள் எடுக்க இராணுவத்திற்கு அதிகாரத்தை வழங்கும் ஒரு மசோதாவிற்கு திங்களன்று (15.10.2007) துருக்கி அரசாங்கம் ஒப்புதளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து. புதனன்று இது தொடர்பாக துருக்கி பாராளுமன்றம் வாக்கெடுப்பு நடத்த உள்ளது. ஆட்சியிலிருக்கும் AKP (நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி) ஒரு பெரியளவிலான பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்கிறமையால், இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்படும் என உறுதியாக நம்பப்படுகிறது.

இந்த மசோதா ஓர் ஆண்டுக்கு அண்டை நாடான ஈராக்கில் தலையிட அரசாங்கத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் பரவலான அதிகாரங்களை வழங்குகிறது. வடக்கு ஈராக்கில் தளங்களை ஆக்கிரமித்துள்ள பிரிவினைவாத குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக எவ்விதமான திட்டமிட்ட துருக்கி நடவடிக்கையும் பிரத்தியேகமாக திருப்பி விடப்பட வேண்டும் என பிரதம மந்திரி ரெசிப் டெயேப் எர்டோகான் வலியுறுத்தினார். ஆனால் இந்த மசோதாவில் துருக்கிய தலையீடுகள் எதுவரை செல்லும் என்ற புவியியல் எல்லைகள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்படவில்லை.

வடக்கு ஈராக்கில் சுதந்திர குர்திஷ் அரசின் உருவாக்கத்தை தடுக்கவும் மற்றும் ஆண்டு முடிவில் சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ள தன்னாட்சி அதிகாரமுள்ள குர்திஷ்தான் பிராந்தியத்துடன் கிர்குக் நகரத்தின் இணைப்பையும் அன்காரா தடைசெய்ய தீர்மானித்துள்ளது என்பது வெளிப்படையாக அறிந்த ஒன்றாகும்.

கிர்குக் நகரம் வடக்கு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி பிராந்தியத்தின் மையத்தில் அமைந்திருப்பதுடன், அதன் வருவாய்கள் குர்திஷ் அரசுக்கு ஒரு நிலையான நிதி அடித்தளத்தை வழங்கும். பெருமளவிலான துர்க்மான் மற்றும் அசிரிய சிறுபான்மையின மக்கள் குர்திஷ் மற்றும் அரேபியர்களும் இப்பகுதியில் வாழ்கின்றனர். குர்திஷ் பிராந்திய அரசாங்கம் இந்த பிற இன குழுக்களை அடக்கிவைப்பதன் ஊடாக அந்நகரில் குர்திஷ் செல்வாக்கை திட்டமிட்டமுறையில் விரிவாக்கிவருகிறது.

இப்பகுதியை ஆக்கிரமிக்க துருக்கி இராணுவத்தால் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் அங்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும் என்றும், எந்தவொரு படையெடுப்பு நிகழ்விலும் இருக்கும் பெரியளவு இழப்புகளை துருக்கி கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெளிவுபடுத்தி இருந்தன. பாக்தாத்தில் உள்ள ஈராக் அரசாங்கமும் துருக்கிய தலையீட்டிற்கு உறுதியாக எதிராக இருப்பதுடன், இந்த விடயம் தொடர்பாக அதன் வெளியுறவுத்துறை மந்திரியை அன்காராவிற்கும் அனுப்பியது.

துருக்கி இராணுவத்தின் எந்தவிதமான திடீர் படையெடுப்பும், அமைதியான வடக்கு ஈராக்கை குழப்பத்தில் மூழ்கடித்துவிடும் மற்றும் அமெரிக்காவின் இரு பாரம்பரிய கூட்டணிகளான நேட்டோ உறுப்பினரான துருக்கிக்கும் மற்றும் ஈராக்கிய குர்திஷ்களுக்கும் இடையே ஒரு புதிய மோதலை உருவாக்கிவிடும் என வாஷிங்டன் அஞ்சுகிறது.

எனவே, துருக்கிய அரசாங்கத்தை ஓர் இராணுவ தலையீட்டில் இருந்து விலகி கொள்ளுமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் கேட்டுக் கொண்டார். சனியன்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ், தாம் துருக்கிய ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நாங்கள் அனைவரும் ஒரு ஸ்திரமான ஈராக் அமைவதையே விரும்புகிறோம், மேலும் அதனை நிலைகுலைக்கும் எவ்வித நடவடிக்கையும் நம் இருபக்க நலன்களையும் பாதிக்கும்" என தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.

அவரின் கோரிக்கை வெற்றிகரமாக அமையவில்லை. துருக்கிய அரசாங்கத்தால் ஏற்று கொள்ளப்பட்டிருக்கும் மசோதா இராணுவ தலையீட்டிற்கான ஒரு கால வரையறையை கொண்டிருக்கவில்லை. மேலும் ஓர் அரசாங்க செய்தி தொடர்பாளர் சமரசப்படுத்தும் வகையில் பின்வருமாறு கூறினார்: "அதை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என நாங்கள் நம்புகிறோம்." ஆனால் அன்காராவில் யுத்தபேரிகையை ஒலித்தல் தெளிவாக கேட்கின்றது.

"எங்கள் பொறுமை ஓர் எல்லைக்கு வந்துவிட்டது" என எச்சரித்த பிரதம மந்திரி எர்டோகன் தொடர்ந்து கூறுகையில், "பயங்கரவாதம் அண்டை நாட்டை தளமாக கொண்டிருந்து, அது தொடர்பாக அந்நாடு மிக குறைவாக செயல்பட்டால், அதற்கான எதிர் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எங்களை வந்து சேர்கிறது." எனத் தெரிவித்தார். சர்வதேச எதிர்நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்கபட்டபோது, "நாங்கள் இந்த வழியை தேர்ந்தெடுக்கிறோம், அதற்கான விலையை நாங்கள் ஏற்கனவே கணக்கிட்டு இருக்கிறோம்; அக்கூலியைச் செலுத்தி விடுவோம்." என்று பதிலளித்தார்.

ஈராக் தொடர்பாக தமக்கு பிரசங்கம் வழங்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாதென அவர் மறுத்தார். "பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஈராக் மீது ஒரு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர், யாரும் எங்களிடம் அனுமதி கேட்கவில்லை." என கூறிய அவர், ஈராக்கிற்கு எதிரான ஒரு நடவடிக்கையில் யாரிடமிருந்தும் அறிவுரை பெற வேண்டிய அவசியம் தம் நாட்டிற்கு இல்லை எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே துருக்கிய துருப்புகள் கடந்த வார இறுதியில் 250 இற்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளையும் மற்றும் குறைந்தபட்சம் 10 ஏவுகணைகளையும் ஈராக் பிராந்தியத்தில் வீசின. இராணுவ வல்லுனர்களின் கருத்துப்படி, ஈராக் மீதான ஓர் ஊடுருவல் விரைவில் நடைபெறும், எவ்வகையிலும் வெற்றி பெறும் நோக்கில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக அந்நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள கரடுமுரடான மலைகளில் இது ஆரம்பிக்கலாம்.

1915 இன் இனப்படுகொலை எனப்படும் பெருமளவிலான ஆர்மினியர்களின் படுகொலைகளை குறிப்பிடும் ஒரு மசோதாவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது அன்காரா மற்றும் வாஷிங்டன் இடையேயான பதட்டங்களை அதிகரித்துள்ளது. இது துருக்கி நாட்டு கொள்கையின் ஓர் அடிப்படை தூணைத் தொடுகிறது. துருக்கிய இராணுவ படைத்தளபதி ஜெனரல் யாசர் புயூகனெட், Milliyet எனும் செய்திதாளுக்கு அளித்த பேட்டியில், மசோதா செனட்டிற்கு அனுப்பப்படுமேயானால் "அமெரிக்காவுடனான இராணுவ உறவுகள் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது" என எச்சரித்தார்.

இந்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டால் இன்சிர்லிக்கில் உள்ள அமெரிக்க விமானத்தளத்தை மூடும்படி அன்காரா எச்சரித்துள்ளது. ஈராக்கிற்கு எதிரான அதன் யுத்தத்தில் அமெரிக்க தளவாட வினியோகத்தின் ஒரு பெரும்பகுதி இந்த தளத்தின் வழியாகவே செல்கிறது.

வரலாற்றுக் கேள்விகள்

குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு எதிரான நடவடிக்கை மீதும், 1915ல் துருக்கி இராணுவ நடவடிக்கைகளின் படுகொலைகளை வரையறுப்பது தொடர்பான எதிரும் புதிருமான விவாதத்தில் பல முக்கிய பூகோளஅரசியல் விடயங்கள் மையத்தில் அமைந்திருக்கின்றன. பாக்தாத்தில் ஹூசைன் ஆட்சி தூக்கி எறியப்பட்டதும் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஈராக் துண்டாக்கப்படுவதும், முதல் உலக போரில் ஒட்டோமான் பேரரசின் அழிவின்மேல் காலனித்துவ சக்திகளால் அமைக்கப்பட்ட ஸ்திரமற்ற சமநிலையை முற்றுமுழுவதுமாக தகர்த்தெறிந்திருக்கிறது.

முதல் உலக யுத்தத்தை தொடர்ந்து, வெற்றிபெற்ற சக்திகள் பாலைவன நிலங்களில் செயற்கையான எல்லைகோடுகளை வரைந்து, ஓர் இனத்தினருக்கு எதிராக மற்றொன்றை தூண்டி, தமது காலனித்துவ ஆட்சியை பாதுகாக்க ஊழல்மிக்க அரச பரம்பரையினரை அதிகாரத்தில் அமர்த்தினர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பொதுவான தேசிய ''சுதந்திரம்'' பெற்ற பின்னரும் இந்த எல்லைகள் மற்றும் அமைப்புகள் பெருமளவில் பாதிப்படையாமல் இருந்தன.

முன்னாள் ஒட்டோமான் பேரரசின் எல்லைகளுக்குள் துருக்கியின் செல்வாக்கு எதுவும் எஞ்சி இருக்கக்கூடாது என்பதே இந்த பெரிய சக்திகளின் விருப்பங்களாக இருந்தது. 1920ல் Sèvres உடன்படிக்கை குர்திஷ் மற்றும் ஆர்மேனிய நாடுகளை உருவாக்குவதும், இன்றைய துருக்கியின் பெரும்பான்மையான பகுதிக்களை கிரேக்கத்திற்கு மாற்ற கருதியது. முஸ்தபா கெமல் அட்டாதுர்க் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக கலகஞ்செய்ததுடன், மூன்று ஆண்டு யுத்தமும் நடத்தினர். இதன் விளைவாக 1923ல் Lausanne இல் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

இதுதான் தற்கால துருக்கியின் தொடக்கமாக இருந்ததுடன், தேசியவாதத்தை ஒரு அரச வெறியாக உயர்த்திப் பிடித்தது. நவீன துருக்கியின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த, அர்மீனியர்களுக்கு எதிரான படுமோசமான படுகொலை பற்றிய எந்தவிதமான விவாதமும் தடை செய்யப்பட்டதுடன் மற்றும் குர்திஷ் போன்ற தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்து செய்யப்படும் எவ்விதமான முயற்சியும் தேசிய அரசின் உருவாக்கத்துடன் தொடர்புபட்ட கட்டுக்கதைகளுக்கு ஒரு மிகப் பெரிய ஆபத்தாகவும் கருதப்பட்டது.

பனிப்போரின் போது துருக்கி, அமெரிக்காவின் தூண்டுதலில் நீந்தியது மற்றும் நேட்டோவின் கிழக்கு பக்கத்தில் ஒரு முக்கிய மூலோபாய பங்களிப்பையும் அளித்தது. தொடர்ச்சியான இராணுவ பதவிக் கவிழ்ப்புகள் மற்றும் எப்போதும் அமெரிக்காவின் பின்பக்கம் சார்ந்திருந்ததன் மூலம் துருக்கிய ஆளும் மேற்தட்டு அதன் அதிகாரங்களை பாதுகாத்தது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியாலும் மற்றும் ஈராக் யுத்த தாக்குதலாலும் சர்வதேச சூழ்நிலை முற்றுமுழுதாக மாறிவிட்டது. அமெரிக்கவுடனான அதன் கூட்டு துருக்கிய முதலாளித்துவத்தின் பாதுகாப்பிற்கு ஒரு நம்பத்தக்க உத்தரவாதமாக செயல்படவில்லை. ஸ்திரத்தன்மையின் ஒரு காரணியாக இருந்து ஸ்திரமின்மையின் முக்கிய காரணியாக அமெரிக்கா மாற்றப்பட்டுவிட்டது. பண்டைய வரலாற்று முரண்பாடுகள் மீண்டும் புதிதாக முளைவிடுவதுடன் Sèvres மற்றும் Lausanne இல் வரையறுக்கப்பட்ட எல்லைகள் மீண்டும் ஒருமுறை கேள்விக்குரியனவாய் மாறி உள்ளன.

துருக்கி ஒரு அதிகரித்துவரும் மூர்க்கமான வெளியுறவு கொள்கையை கையாண்டு வருகிறது. மத்திய ஆசியாவில் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் (சிறிய வெற்றியுடன்) துருக்கி ஆக்கிரமிப்பு பகுதிகளில் 1990களில் அது தனது நலன்களை முன்னெடுக்க முயற்சித்தது. AKP ஆட்சியின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்புகளை உருவாக்க துருக்கிய ஆளும் மேற்தட்டு அதன் முயற்சிகளை புதுப்பித்து இருந்தது - ஆனால் இதில் மீண்டும் ஒருமுறை அது நிராகரிக்கப்பட்டது. தற்போது அது, ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது. இவ்வாறு செய்கையில் அமெரிக்காவின் விருப்பங்களை துருக்கி குறைந்த, மிக குறைந்த அளவே கருத்தில் எடுத்துக் கொள்கிறது.

வடக்கு ஈராக்கில் துருக்கியால் எடுக்கப்பட கூடிய இராணுவ நடவடிக்கைகள் மீதான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், சிரிய நாட்டு தலைவர் பஷர் அல்-அஷாத் ஈராக் சூழ்நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் குழப்பங்கள் குறித்து பேச அன்காராவிற்கு பயணித்தது கவனிக்கத்தக்கதாகும். எவ்வாறிருப்பினும், சிரியா அமெரிக்காவின் "பயங்கரவாத நாடுகள்" பட்டியலில் இருக்கிறது, சமீபத்திய ஆண்டுகளில் டமாஸ்கஸுடன் அன்காரா தனது கூட்டணியை மேம்படுத்தி இருக்கிறது. தமது சொந்த நாட்டில் உள்ள குர்திஷ் சிறுபான்மையினரின் விளைவு குறித்த அச்சத்துடன் - துருக்கியை போன்றே, சிரியாவும் வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஷ் அரசை பலமாக எதிர்க்கிறது.

துருக்கிய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட திசை மாற்றம், அதன் நாட்டிற்குள்ளேயே செய்யப்படும் தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் தொடர்புபட்டுள்ளது என்பது சிலகாலமாக தெரியவருகின்றது. AKP சில பெயரளவிலான பெரிய சலுகைகளை குர்திஷ்களுக்கு வழங்கியதுடன், அரசு இயந்திரங்களுக்குள் இருந்த மிகவும் வலதுசாரி பிரிவினர் சிலரை ஒடுக்கியுள்ளது. ஆனால் ஈராக்கில் இராணுவ தலையீட்டைத் தொடர்வது குறித்த முடிவினால் அந்த சூழல் மாறி இருக்கிறது.

ஈராக்கிலுள்ள குர்திஷ் அகதிகள் மட்டுமின்றி, துருக்கியில் வாழும் குர்திஸ்களும் அதேபோன்று பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், துருக்கியில் உள்ள ஜெனரல்கள் மற்றும் வலதுசாரி தேசியவாதிகளின் நிலை வலிவூட்டப்படுகிறது. ஈராக்கில் ஒரு தாக்குதல் நடத்த அரசாங்கம் காட்டி இருக்கும் பச்சை கொடி அறிவிப்பில் இந்த வலதுசாரிகளின் கைகளும் பலம் பெற்றுள்ளன.

ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான உயிர்களை விலையாகப் பெற்றிருக்கும் ஈராக்கின் இரத்த ஆறு, தற்போது அந்த முழு பிராந்தியத்தையும் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

சிரியா ஜனாதிபதி அன்காராவிற்கு பயணித்த அதே நாள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெஹ்ரான் வந்தடைந்தார். 1979ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர், ஒரு சர்வதேச சக்தியாக விளங்கும் அந்நாட்டின் தலைவர் ஈரானுக்கு வந்தது அதுவே முதல் முறையாகும். கடலுக்கடியில் புதைந்திருக்கும் பெரிய அளவிலான எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை வினியோகிப்பது குறித்து விவாதிக்க, 'காஸ்பியன் கடலின் அண்டை நாடுகள்' என்ற கருத்தரங்கில் புட்டின் கலந்து கொண்டார்.

ஒரு பக்கம் இருக்கும் ரஷ்யா, அஜெர்பாய்ஜான், கஜாகஸ்தான் நாடுகளுக்கும், மற்றொரு பக்கம் இருக்கும் ஈரான், துர்க்மெனிஸ்தான் ஆகியவைகளுக்கிடையே இங்கு பெரும் வேறுபாடுகள் உள்ளன. காஸ்பியனில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெருமளவிலான இயற்கை வளங்களின் மீது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கும் ஒரு தீவிரமான ஆர்வம் இருந்து வருகிறது.