World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian minister condemned for urging probe into killing of police chief during Mumbai attack

மும்பை தாக்குதலின்போது போலீஸ் தலைமை அதிகாரி கொலைசெய்யப்பட்டது குறித்து விசாரணை வேண்டும் என்று கூறியதற்காக இந்திய மந்திரி மீது கண்டனம்

By Kranti Kumara
23 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

சிறுபான்மையினருக்கான இந்தியாவின் மந்திரியான அப்துல் ரஹ்மான் அந்துலே மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் (ATS) தலைமை அதிகாரி கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற மூன்று நாள் பயங்கரவாத தாக்குதலின் போது கொல்லப்பட்டது குறித்து விசாரணை வேண்டும் என்று விடுத்த அழைப்பு ஒரு அரசியல் கூக்குரலை எழுப்பியுள்ளது. இந்து மேலாதிக்க கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் வலதுசாரிக் கூட்டுக் கட்சிகளும், இந்தியாவின் கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சித் தலைமைக்குள் பலரும் அந்துலே இராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர ATS ன் தலைமை அதிகாரியாக இருந்த ஹேமந்த் கார்கரேயும் மற்றும் இரு மூத்த அதிகாரிகள் உட்பட ஐந்து போலீசாரும் நவம்பர் 26 மும்பைத் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டனர்.

அவர் கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்வரை முஸ்லிம்களை கொல்லுதல் மற்றும் வகுப்புவாத பூசல்களை தூண்டிவிடும் ஒரு இந்து மேலாதிக்க பயங்கரவாத வலைப் பின்னல் நடத்திய குண்டுவீச்சுக்கள் பற்றி கார்க்கரே விசாரணை நடத்தி வந்தார். மேலகாம் (மகாராஷ்டிரா) மற்றும் மடோசாவில் (குஜராத்) செப்டம்பர் 29 அன்று தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு பொறுப்பு என்று போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 11 இந்து தீவிரவாதிகளை கைது செய்யுமாறு கார்க்கரே உத்தரவிட்டிருந்தார். ஒருவேளை அவர்கள் பிற குண்டுவீச்சுக்களிலும் தொடர்பு கொண்டிருக்கக் கூடும்; அவற்றில் 2006ம் ஆண்டில் சம்ஜ்ஹுவாதா இரயில் மீதான தாக்குதலும் அடங்கும்.

இந்து பயங்கரவாத வலைப்பின்னலின் தலைவர்கள் "உத்தியோகபூர்வ" இந்து மேலாதிக்க வலதுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தனர் --அதாவது உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி பிஜேபி, ஆர்எஸ்எஸ், விஹெச்பி ஆகியவற்றுடன்; இதில் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். (See: India: Hindu supremacist terror network had ties to military.)

பிஜேபி மற்றும் அதன் கூட்டுக் கட்சிகள் இந்து பயங்கரவாத வலைப்பின்னல் பற்றிய விசாரணையை கடுமையாகக் கண்டித்தனர். ஒரு "இந்து எதிர்ப்பு" சூனிய வேட்டையை ஆரம்பித்துள்ளார் என்று கார்க்கரே குற்றம் சாட்டப்பட்டார். உயர்மட்ட பிஜேபி தலைவர்கள், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளரான எல்.கே. அத்வானி உட்பட பலரும் பகிரங்கமாக கார்க்கரேயின் நேர்மையை பற்றியும் வினாவிற்கு உட்படுத்தி, அவர் விசாரணைக் குழுவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

கிட்டத்தட்ட கார்க்கரே இறந்து ஒரு மாதத்திற்கு பின்னரும் அவர் இறந்த சூழ்நிலை தெளிவற்று உள்ளது; அந்துலேயின் கருத்துக்கள் வெளிப்படுத்துவது போல் பல கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளிக்கிறது.

பெருநிறுவன செய்தி ஊடகம் அவருடைய இறப்பு பற்றி குறைந்தது இரு மாறுபட்ட கருத்துக்களை கூறி, அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்பது பற்றி தீவிர வினாக்களை எழுப்பியுள்ளது.

கார்க்கரே மும்பையின் காமா மருத்துவமனையில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது; இது முக்கிய தாக்குதல் மையங்களான தாஜ் மஹால் மற்றும் ஒபேராய்-டிரைடன்ட் ஓட்டல்களிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. மருத்துவமனையில் காயமுற்றிருக்கும் ஒரு சக ஊழியரை பார்ப்பதற்காக அவர் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து (தாக்குதல்கள் நடந்த பல இடங்களில் ஒன்று) சென்றதாக சில தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் மருத்துவமனையே தாக்குதலுக்கு உட்பட்டது; கார்க்கரே அவருடைய படைகளை மும்பையின் மையப்பகுதியில் கமாண்டோ முறையில் நடத்தப்படும் தாக்குதல்களை நசுக்குவதற்கு ஈடுபடுத்துவதற்கு பதிலாக எதற்காக ஒரு காயமுற்ற சக ஊழியரின் கட்டிலுக்கு விரைந்து செல்ல வேண்டும்?

கார்க்கரேயின் இறப்பு மும்பைத் தாக்குதல் பற்றி விடையிறுக்கப்படாத பல தொடர் வினாக்களில் ஒன்றுதான். வரவிருக்கும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளம் இவ்வினாக்களில் சிலவற்றிற்கு மீண்டும் வரும்; அதில் மும்பை இலக்கு கொள்ளப்படுகிறது என்ற உள்நாட்டு, சர்வதேச தகவல் ஆதாரங்கள் பல முறை கூறிய எச்சரிக்கைகள் இருந்தும், இந்திய அதிகாரிகள் ஏன் தாக்குதலை தவிர்க்க முடியவில்லை என்பதும் விவாதிக்கப்படும்.

இதுவரை தெரிந்துள்ள விவரப்படி, ஒரு மகத்தான, முழுமையான பாதுகாப்பு சரிவு ஏற்பட்டிருக்க வேண்டும் --இந்தியாவின் உள்நாட்டு மந்திரி சிதம்பரமே அதைத்தான் கூறியுள்ளார்-- அல்லது இந்திய பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் சில கூறுபாடுகள் தாழ்ந்த அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே "கவனக் குறைவாக" இருந்திருக்க வேண்டும்.

கடந்த வாரத்து தொடர்ச்சியான செய்தி ஊடக நேர்காணல்களில் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால மூத்த உறுப்பினராக இருக்கும் அந்துலே, கார்க்கரேயின் மரணம் பற்றி சில முக்கிய வினாக்களை எழுப்பினார்; குறிப்பாக அவர் ஏன் காமா மருத்துவமனைக்குச் சென்றார் என்று கேட்டார்.

அவர் இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறினார்: "அனைத்தையும் தெரிந்திருந்த எவரோ ஒருவர் அவரை (கார்க்கரேயை) தவறான திசையில் அனுப்பியுள்ளார்; இல்லாவிடில் அவர் ஏன் காமா மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும்?"

"அவர் தாஜ், ஒபேராய் அல்லது நாரிமன் இல்லத்திற்கு போயிருக்க வேண்டும். இந்த மூன்று இடங்களில் நடைபெற்றுவருவது போல் அதிகம் நடக்காத இடத்திற்கு அவர் சென்றார். ஒரு தொலைபேசித் தகவலின் அடிப்படையில் அவர் காமா மருத்துவமனைக்கு சென்றார். அந்த தொலைபேசி அழைப்பை எவர் கொடுத்தது? இது விசாரிக்கப்பட வேண்டும்."

அந்துலே தொடர்ந்து கூறினார்: "பயங்கரவாதத்தில் முஸ்லீம் அல்லாதவர்களும் இருந்ததை கார்க்கரே கண்டுபிடித்திருந்தார்.... பயங்கரவாதத்தின் வேர்களுக்கு செல்லும் எவருமே இலக்கிற்கு ஆளாகியுள்ளனர். மேம்போக்காகக் கூறுகையில் அவர்களுக்கு [பயங்கரவாதிகள்] கார்க்கரேயைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் [கார்க்கரே] பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டாரா அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மற்றொன்றினால் பாதிக்கப்பட்டாரா, எனக்குத் தெரியவில்லை."

"பயங்கரவாதத்துடன் கூடிய மற்றொன்று", அதாவது இந்து பயங்கரவாத இணையத்தை அவர் அம்பலப்படுத்தியதை எதிர்த்த சக்திகள் மும்பை பயங்கரவாத தாக்குதலை சூழ்ந்துள்ள குழப்பத்தை பயன்படுத்தி அவரைப் படுகொலை செய்திருக்கக்கூடும், என்ற அந்துலேயின் கருத்து உடனடியான, கடுமையான எதிர்ப்பை பிஜேபி, சிவசேனை மற்றும் பிற லவதுசாரிக் கூட்டுக்களிடம் இருந்து பெற்றது. அவர்கள் இந்தியா பாக்கிஸ்தானுக்கு எதிராக நடத்தும் பிரச்சாரத்தை குறைமதிப்பிற்கு அந்துலே உட்படுத்தவதாகக் குற்றம் சாட்டினர்; பாக்கிஸ்தான் அதன் நிலத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதித்த பொறுப்பை உடையது என்று புது தில்லி கூறிவருகிறது.; மேலும் அவர் உடனடியாக இராஜிநாமா செய்யவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

காங்கிரஸ் கட்சித் தலைமை உடனடியாக கார்க்கரே பற்றிய கருத்துக்களில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டது; "நாங்கள் அந்துலேயின் அறிக்கையில் இருக்கும் அனுமானங்கள் மற்றும் முழக்கங்களை ஏற்கவில்லை" என்று ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். "கார்க்கரே கொலையுண்டது பற்றி குழப்பத்தை ஏற்படுத்த தேவையில்லை என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்."

தன்னுடைய கருத்துக்களில் இருந்து பின்வாங்க மறுத்த அந்துலே இராஜிநாமா செய்யத்தயார் என்று கூறியுள்ளார். இதுவரையிலேனும் அவருடைய இராஜிநாமா ஏற்கப்படவில்லை.

கடந்த வார இறுதியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கார்க்கரேயின் மரணம் சரியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றுதான் அந்துலே வலியுறுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டார். "அவர் கூறியது தவறாக வெளிவந்துள்ளது" என்றார் சிங். "ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விசாரணை தேவை என்று அவர் கோரியுள்ளார். அவருடைய அறிக்கையில் ஆட்சேபிக்கத் தக்கது என்ன?" என்றார்.

உண்மையில் எந்த புறநிலை நோக்கருக்கும் அந்துலேயின் வினாக்களும், கார்க்கரே மரணம் பற்றிய அவர் அழைப்பு விடுத்துள்ள விசாரணையும் முற்றிலும் முறையாகத்தான் தெரியும்.

அப்படியானால் பிஜேபி மற்றும் காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவு கார்க்கரே இறப்பு பற்றி விசாரணை வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அந்துலே பற்றி எதற்காக இவ்வளவு காழ்ப்பு உணர்வு காட்ட வேண்டும் என்பதை எப்படி விளக்குவது? கார்க்கரேயோ விளக்கப்படாத சூழ்நிலையில் கொல்லப்பட்டுள்ளார்; அதுவும் இந்து பயங்கரவாதம் பற்றி அரசியல் வெடிப்புத்தன்மை உடைய விசாரணையை முன்னின்று அவர் நடத்தி வருகையில் கொல்லப்பட்டுள்ளார்.

முதலில் அந்துலேயின் கருத்துக்கள், மும்பை தாக்குதலை பயன்படுத்திக் கொள்ள முற்பட்ட முழு இந்திய நடைமுறை முயற்சிக்கும் குறுக்கே நிற்கிறது: இந்தியாவின் வரலாற்று போட்டிநாடு பாக்கிஸ்தான் மீது குறிப்பாக அழுத்தம் கொடுப்பதற்கும், ஜம்மு, காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு எழுச்சிக்கு அரசியல் மற்றும் பிற விதங்களில் அது உதவியளிப்பதை நிறுத்த வேண்டும் என்பது; இரண்டாவதாக, அடிப்படை ஜனநாயக, நீதிமுறை கொள்கைகளை அகற்றும் விதத்திலும் பல்வேறு இன வழி பிரிவினைவாத அமைப்புக்களுடன், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கும் எதிராக அதை எளிதாக பயன்படுத்தக் கூடியவகையில், பயங்கரவாதம் என்ற வரையறையை கொண்டுள்ள ஒரு கடுமையான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவருதல் என்பதாகும்.

இரண்டாவதாக, அந்துலேயின் கருத்துக்கள் இந்து தீவிரவாத பயங்கரவாதம் என்னும் வெடிப்புத் தன்மை உடைய பிரச்சினையை உளைச்சல் தரும் விதத்தில் மீண்டும் எழுப்புகிறது; இதில் எந்த அளவிற்கு இந்தியாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளே வகுப்புவாத தன்மை பெற்றுள்ளது என்பது தெரியவரக்கூடும்.

கார்க்கரேயை எவர் கொன்றிருந்தாலும் மும்பை கொடூரத்தை முழு இந்திய அரசியல் நடைமுறையும் ஒன்றாகச் சேர்ந்து இந்து பயங்கரவாத இணையத்தை பொது விவாதத்தில் இருந்து அகற்ற முற்பட்டுள்ளனர் என்பது உண்மை ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே இந்து மேலாதிக்க வலது, இந்து பயங்கரவாத வலைப்பின்னல் அம்பலப்படுத்தப்படுவது பற்றி எதிர்த்து, அஞ்சியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலும், இன்னும் பொதுவாக இந்திய உயரடுக்கை பொறுத்தவரையில், இந்து பயங்கரவாத விசாணையை அவை மும்பைத் தாக்குதலைப் பயன்படுத்தி இந்தியாவின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை மிக அதிக வலதிற்கு மாற்றும் முயற்சிக்கு ஒரு தடை என பார்க்கிறது.

மும்பை தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில், இந்து பயங்கரவாதிகளுக்கான பிஜேபி-யின் வக்காலத்துக்களை எளிதில் அலட்சியப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், இதையும் விட அடிப்படையில், முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிரான அப்பட்டமான இனக் கொலைகள் உள்ளடங்கலான, இந்து வலதின் பலதசாப்தங்கள் நீடித்திருந்த வன்முறை தூண்டும் சான்றுகளையும் அக்கறையற்ற வகையில் அலட்சியப்படுத்தி, காங்கிரஸ் தலைமையானது "வெளிநாட்டு" பயங்கரவாதத்திற்கு எதிராக "தேசிய ஐக்கியம்" என்ற பெயரில், விரைவில் பிஜேபி உடன் ஒன்றாகச் சேர்ந்து ஆதரித்தது.