World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Nick Beams addresses 70th anniversary meeting

Capitalist breakdown and the revolutionary perspective of the Fourth International

70 வது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் நிக் பீம்ஸ் உரையாற்றுகிறார்

முதலாளித்துவ நிலைமுறிவும் நான்காம் அகிலத்தின் புரட்சிகர முன்னோக்கும்

By Nick Beams
4 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 28ம் தேதி நான்காம் அகிலம் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு விழாவை ஒட்டி சிட்னியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிக் பீம்ஸ் ஆற்றிய உரை கீழே பிரசுரிக்கப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரான பீம்ஸ் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார்.

1938ல் நான்காம் அகிலம் நிறுவப்பட்டமை மற்றும் 1953ல் இருந்து ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் வழிநடத்தப்பட்டு வரும் 70 வருட கால போராட்டம் ஆகியவற்றின் வரலாற்று முக்கியத்துவம் இப்பொழுது உலகப் பொருளாதாரத்தில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் கொந்தளிப்பான நிகழ்வுகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நிதிய அமைப்புமுறைக்குள் பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகள் என்ற புதிய தகவல்களைக் கொண்டு வருகின்றது. உலக நிதிய முறையை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக மத்திய வங்கிகள் மற்றும் நிதிய அதிகாரிகளால் இவ்விதத்தில் வீசப்படும் நிதி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள், டிரில்லியன் டாலர்களாக சென்று கொண்டிருக்கும் நிதியின் முழுவிவரத்தையும் அறிந்து வைத்துக் கொண்டிருப்பது கிட்டத்தட்ட முடியாததாயிருக்கிறது.

கடந்த இரு வாரங்களில் 158 ஆண்டுகளாக இயங்கி வந்த லெஹ்மன் பிரதர்ஸ் திவாலானது, பங்கு பேர சந்தை மற்றும் முதலீட்டு வங்கியான மெரில் லிஞ்ச் எடுத்துக் கொள்ளப்பட்டது, திவால்தன்மையில் இருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு வங்கி ஸ்தானத்தைப் பெறுவதற்கு கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் மோர்கன் ஸ்ரான்லியால் எடுக்கப்பட்ட நகர்வு ஆகியவற்றை நாம் பார்த்து வருகிறோம். இதே காலத்தில், வோல் ஸ்ட்ரீட்டில் எஞ்சிய நான்கு முதலீட்டு வங்கிகள், மார்ச் மாதம் பேர் ஸ்டேர்ன்ஸ் மடிந்ததை தொடர்ந்து ஏதேனும் ஒருவிதத்தில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. மேலும் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான AIG கிட்டத்தட்ட $85 பில்லியன் நிதியில் பிணை எடுப்பதற்கு இருந்தது. கடந்த வியாழனன்று $307 பில்லியன் சொத்து மதிப்புக்களுடன், $188 பில்லியன் சேமிப்புக்கள், மற்றும் 220 கிளைகளைக் கொண்டிருந்த வாஷிங்டன் மியூச்சுவல் சரிந்ததானது, வரலாற்றில் மிகப் பெரிய வங்கிச் சரிவாக ஆனது.

புஷ் நிர்வாகம், ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய ஆதரவுடன், வோல் ஸ்ட்ரீட் கணக்குப் புத்தகங்களில் இருக்கும் மதிப்பே இல்லாத நிதியச் சொத்துக்களை வாங்குவதன் மூலம் $700 பில்லியன் நிதியை வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுப்பதற்காக செலவழிக்கிறது.

உலக முதலாளித்துவ முறையானது பெருமந்த நிலைக்கு இட்டுச்சென்ற 1929 நிகழ்வுகளுக்கு பின்னர் அதன் மிகக் கடுமையான நிதிய நெருக்கடியில் நுழைந்துள்ளது என்று கூறுவது இப்பொழுது வர்ணனையாளர்களுக்கும் பொருளாதாரப் பண்டிதர்களுக்கும் வாடிக்கையாகியுள்ளது.

உலகெங்கிலும் இருக்கும் மக்கள் 1933 இல் நாஜிக்கள் ஜேர்மனியில் அதிகாரத்திற்கு வந்த பின் என்ன நடந்தது என்பது பற்றி நினைவுகூரத் தொடங்கிவிட்டனர்; அவையாவன, பெரும் வேலையின்மை, உலகம் போட்டி முகாம்களாகவும், பேரரசுகளாக பிரிந்தது, வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் இரண்டாம் உலகப் போர் வெடித்தது, பல மில்லியன் மக்கள் மடிந்தது ஆகியனவாகும்.

பண்டிதர்கள், செய்தியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உலகம் ஒன்றும் முடிவிற்கு வந்துவிடவில்லை என்றும், 1930கள் போல் மீண்டும் வராது என்றும் உத்தரவாதம் கொடுக்கின்றனர்; ஏனெனில் அரசாங்கங்களும் நிதிய அதிகாரிகளும் பிரச்சினைகளை பற்றி நன்கு அறிந்து அவற்றைத் தீர்க்கும் வகையை கொடுள்ளார்கள் என்று, ஐயத்தைப் போக்க கூறிவருகின்றனர்.

இத்தகைய ஐயம்போக்கும் சொற்கள் நேற்றுவரை புதிய நிதியமைப்பு முறையின் சிறப்புக்களைப் புகழ்ந்தவர்களால் கூறப்படவில்லை என்றால் அவை சற்றே கூடுதலான முக்கியத்துவத்தை பெற்றிருக்கும்.

மார்க்சிச இயக்கத்தை பொறுத்தவரையில், இந்த நெருக்கடி ஆகாயத்தில் இருந்து இறங்கிவிடவில்லை. எமது இயக்கம் விளக்கியுள்ளதுபோல், இவை ஆழ்ந்துள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடுகள்தான்; தவிர்க்க முடியாமல் இது முதலாளித்துவ முறையின் நிலைமுறிவிற்கு இட்டுச் செல்லுகிறது.

"நிலைமுறிவு" என்று நாம் கூறும்போது முதலாளித்துவம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் திடீரென உறைந்துபோய், செயலற்றுப் போதல் என்று ஒற்றை நிகழ்வை சுட்டிக்காட்டவில்லை; மாறாக ஒரு வரலாற்று நிகழ்வுபோக்கை குறிப்பிடுகின்றோம். நிதிய முறையின் உள்வெடிப்பு, கடன் மற்றும், நிதியச் சந்தைகளின் சரிவு, பெரிய வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் திவாலாகுதல் ஆகிய உலக முதலாளித்துவ முறையின் கட்டமைப்புக்களில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்கள் போன்றவை பல ஆண்டுகளாகவும், ஏன் தசாப்தங்களாக பொருளாதார வாழ்வின் அடித்தளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாறுதல்களின் விளைவாகும்.

நிலைமுறிவு என்று கூறும்போது முதலாளித்துவம் இயங்காமல் நின்றுவிடுகிறது என்ற பொருளைக் கொடுக்கவில்லை. இது வரலாற்றில் பழைய பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கள் மற்றும் கருத்தியல்கள், சிந்திக்கும் வழிமுறைகள் ஆகியவை புதிய வகையிலான அரசியல் போராட்டங்கள் வளர்வதற்கு வழிசெய்யும் ஒரு புதிய காலம் ஆரம்பிப்பதை குறிக்கிறது. இந்த தீர்விலேதான் சமூகத்தின் விதியே தங்கியுள்ளது.

வர்க்கப் போராட்டத்தை, "ஒரு நேரம் வெளிப்படையாகவும், ஒரு நேரம் மறைமுகமாகவும் நடக்கும்" என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் அது சற்றே மறைக்கப்பட்டிருந்தது; அதாவது தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளில் நடைபெற்ற முடிவிலா தாக்குதல்களுக்கு தக்க விடையிறுப்பை அபிவிருத்திசெய்ய முடியாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அமெரிக்காவில் இந்த போராட்டம் மேல்மட்டத்திற்கு வெடித்து எழுந்துள்ளது; வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புத் திட்டத்தற்கு எதிரான பாரிய சீற்றமாக வெளிப்பட்டுள்ளது. இந்தக் கோபம் ஒரு புதிய அரசியல் சகாப்தம் தொடங்குதை குறிக்கிறது.

உலக முதலாளித்தவ ஒழுங்கு சிதைதல் கட்டவிழ்கிறது என்பதின் பொருள் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு சமூகத்தை ஒரு புதிய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அறநெறி அஸ்திவராங்களில் மறு சீரமைக்கும் தேவையை எதிர்கொள்ள இருக்கிறது என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் இரத்தம் தோய்ந்த வரலாறு மிகத் தெளிவாக நிரூபிப்பது போல், இந்தக் கடமை பூர்த்திசெய்யப்படுவதில்தான் மனித குலத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு

சமூகம் அடிப்படையாக மறு- ஓழுங்கமைக்கப்படுவதின் தேவை தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளிவருகிறது; இது சோசலிஸ்ட்டுக்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக வெளிவந்துள்ளது. இது முற்றிலும் புறநிலை ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதியத் தன்னலக் குழு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளான பெரு வணிகத்தின் இரு கட்சிகள் ஆகியவை ஒரு பொருளாதார திட்டத்தை தீட்டியுள்ளன; அது பின்வருவனவற்றை திணிக்க வேலைசெய்கிறது: மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பினால் தோற்றுவிக்கப்பட்ட சமூகத்தின் வளங்கள் செல்வந்தர்கள், மிகப் பெரும் செல்வந்தர்கள் மற்றும் பணக்காரர்களின் செல்வத்தைத் தக்கவைத்துக்கொள்ள கட்டாயம் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதாகும். இந்த அடுக்குத்தான் "தடையற்ற சந்தை" என்ற பதாகையின் கீழ் ஊகமுறை மற்றும் பெரிதும் ஐயத்திற்குரிய நிதிய நடவடிக்கைகள் மூலம் இலாபம் அடைந்தது, கடந்த 25 ஆண்டுகளில் வருமான அளவில் செல்வத்தின் பரந்த அளவிலான மறுபங்கீட்டைக் கண்டிருக்கிறது.

செய்தி ஊடகத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் வேண்டுமென்றே தோற்றுவித்திருக்கும் அரசியல் குழப்பம் இருந்த போதிலும், இத்திட்டம் உண்மையில் என்ன என்பது உணரப்பட்டுள்ளது: வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு என்பது சமூகத்தின் மிகச் சிறிய பகுதியான பெரும் செல்வம் கொழிக்கும் தட்டினை பெரும்பான்மை மக்களின் இழப்பில் தப்பவைத்தல் என்பதே அது.

2008 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஏற்கனவே அது நடப்பதற்கு முன்பே பொருளற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது; ஏனெனில் சமூகத் திட்டங்கள் பற்றிய எந்த ஒரு வாய்ப்புவளமும் இப்பொழுது ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும். மாறாக அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் 2,300 டாலருக்கு ஒப்பான நிதி செல்வந்தர்களுக்கு மாற்றப்பட உள்ளது. ஜனாதிபதி வேட்பாளரின் முதல் விவாதத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட வினாக்களில் முதலாவது இதுதான்; பிணை எடுப்புத் திட்டத்தை ஒட்டி, எந்த அரசாங்க திட்டங்களை குறைக்கலாம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கின்றீர்கள்? அனைவரும் குறைப்புக்கள் இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டனர்; நடக்க வேண்டிய விஷயமாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் இத்திட்டத்தை ஜனநாயக முறைப்படி செய்ய முடியாது; எனவே, நாம் பார்ப்பதுபோல் நிதி மந்திரி போல்சன் முன்வைத்துள்ள நடவடிக்கைகளில், ஒரு சர்வாதிகாரத்தின் ஆதாரத்தை பார்க்கலாம்.

ஒரு ஆரம்ப சட்டவரைவு செலவினங்களை பற்றிக் கண்காணிக்கும் சட்டமியற்றும் பிரிவென்று கூறப்படும் காங்கிரசிற்கு அனுப்பப்பட்டது; அது மூன்று பக்கங்களைத்தான் கொண்டிருந்தது; ஒரு குறைந்த பிணையுள்ள அடைமானத்திற்கு தேவையான காகித வேலையை விட மிகக் குறைவு, என்று ஒரு வர்ணனையாளர் நியூ யோர்க் டைம்ஸில் குறிப்பிட்டார்!

இந்த ஆரம்ப வரைவின்படி, நிதி மந்திரிக்கு "எந்த வரம்பும் இல்லாமல்" கிடைக்கும் அதிகாரங்கள் உட்பட, "அரசாங்கத்தின் நிதிய முகவர்களாக குறிக்கப்படும் நிதிய அமைப்புக்கள்", "இச்சட்டம் தொடர்புடைய நியாயமான கடமைகள்'' அனைத்தையும் செய்யும். இதன் பொருள் எந்த நிதிய அமைப்புக்கள் ஊக வணிகத்தில் ஈடுபட்டனவோ, சிலவற்றை பொறுத்தவரையில் நெருக்கடிக்கு வழிவகுத்த, முற்றிலும் குற்றம் சார்ந்த செயல்களை புரிந்தனவோ, அவை நிதி அமைச்சகம் ஒழுங்கமைக்கும் இந்த பிணை எடுப்பிற்கு அழைக்கப்பட வேண்டும். சமீபத்தில் WSWS ல் வந்த கட்டுரை ஒன்று "நலன்களின் மோதல்" என்ற வார்த்தை பிரயோகம் என்ன நடக்கிறது என்பது பற்றி ஆய்வதற்கே ஆரம்பிக்கவில்லை, என குறிப்பிட்டது.

மேலும், இத்திட்டம் நிதி அமைச்சகத்திற்கு சட்டபூர்வ பாதுகாப்பை அளிக்கிறது. "அதிகாரத்தின் கீழ் செயலர் எடுக்கும் முடிவுகள் பரிசீலனைக்கு உட்பட்டவை அல்ல... எந்த நீதிமன்றமோ அல்லது நிர்வாக அமைப்போ இதனை பரிசீலனை செய்ய முடியாது."

நியூ யோர்க் டைம்ஸ் செப்டம்பர் 23 ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்த சொற்களின் மூலம், "அமெரிக்க நிதி மந்திரி (எதிர்வரும் சில மாதங்களில் அவர் யாராயினும் சரி) அமெரிக்காவின் பொருளாதார மற்றும் நிதிய வாழ்வின் மீது நம்பமுடியாத அளவிற்கு மிகுந்த அதிகாரங்களை ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இருப்பார். இது "9/11க்குப் பின்னர் தேசப்பற்று சட்டத்திற்கு (Patriot Act) இணையான நிதிய ரீதியான அதிகாரம் ஆகும்." போல்சன் திட்டமிட்டுள்ள சட்டவரைவு "அமெரிக்க பொருளாதார வரலாற்றில் மிக வியக்கத்தக்க அதிகார கைப்பற்றுதல் ஆகும்" என்று டைம்ஸ் விவரித்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் அரசியலில் நீண்ட காலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படைக் கருத்து, நெருக்கடியின்போது தற்செயலான, தேவையற்ற கூறுபாடுகள் அகற்றப்படும்போது உண்மையான உறவுகள் வெளிப்படும் என்று கூறுகிறது. இந்த நெருக்கடியிலும் இதுதான் வெளிவந்துள்ளது. இது மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தும் அரசாங்கம் அல்ல; மில்லியன் கணக்கான மக்கள் பொருளாதார விளைவுகளை நிர்ணயிக்கும் "தடையற்ற சந்தையும்" அல்ல; செல்வந்தர்களுக்காக, செல்வந்தர்களால், செல்வந்தர்களே நடத்தும் அரசாங்கம்தான் இது. இது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு அல்ல, மாறாக நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரம் நடக்கும் நாடாகும்.

அமெரிக்க நிதி மூலதனத்தின் நலனுக்காக எண்ணெய் மற்றும் பிற மூலவளங்களை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆரம்பித்துள்ள கொள்ளை முறை போர்கள், இப்பொழுது உள்நாட்டிலும் வெளிப்படையாக கொண்டுவர பட்டுள்ளது. இவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டதில், இன்னும் ஆழ்ந்த முறையில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலை அதிகப்படுத்தும்.

உலக நிதிய நெருக்கடி விரிவடைந்துள்ள நிலையில், இலாபங்கள் தனியார்மயமாக்கப்படுதலும், இழப்புக்கள் சமூகமயமாக்கப்படலும் என்ற ஒரு புதிய சொற்றொடரை நாம் அடிக்கடி கேட்கிறோம். இது அழகிய முறையில் என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகக் கூறுவது மட்டும் அல்ல; இன்னும் பரந்த அளவில் எதிர்வரும்காலத்தில் போராடப்படவேண்டியுள்ள அடிப்படை அரசியல் பிரச்சினைகளையும் சுட்டிக் காட்டுகிறது.

இதிலிருந்து உடனடியாக எழும் கேள்வி இதுதான்: சமூகத்தின் பொருளாதார மறு சீரமைப்பு எவருடைய நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது? சமூகத்தின் வளங்கள் மாபெரும் செல்வம் உடைய, நிதிய முறையின் செயற்பாடுகளில் பெரும் நலன்களை அடைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினரை காப்பாற்றுவதற்கு எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்?

இழப்புக்கள் அனைத்தும் சமூகமயமாக்கப்படவேண்டும் என்றால், அதாவது செலவினங்கள் முழுவதையும் சமூகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், இலாபங்கள் மட்டும் ஏன் சமூகமயப்படுத்தப்படக்கூடாது? அல்லது, வேறுவிதமாகக் கூறினால், முழு சமூகத்தின் நலன்களுக்காக கட்டுப்படுத்தி, ஒழுங்கமைக்கும் வகையில் முழு வங்கி மற்றும் நிதிய முறையை பொது உடைமையின் கீழ் ஏன் கொண்டுவரக் கூடாது?

பாரிய பிணை எடுப்பு நடவடிகைக்கான காரணம் அது இல்லாமல் உண்மையில் ஒரு முன்னோடியில்லாத பரிமாணத்தில் பொருளாதாரச் சரிவு நிகழும் என்பதாகும். உதாரணமாக பில்லியனர் முதலீட்டாளரான Warren Buffet "அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய உருகிவழிதல்" பற்றி எச்சரித்துள்ளார்.

எனவே பெரும் செல்வந்தர்களுக்கு பிணை எடுப்பது ஒன்றும் தவறில்லை என்றும் இது மக்கள் அனைவரின் பொருளாதார நலன்களைக் காப்பாற்றும் என்றும் வாதிடப்படுகிறது.

வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்துள்ள கட்டுரை ஒன்று செப்டம்பர் 17 புதனன்று நிதிய முறையில் மதிப்பற்ற சொத்துக்களை அரசாங்கம் தன் கணக்கில் எடுத்துக் கொள்ள அழுத்தம் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருந்தபொழுது நடந்த ஒரு காட்சியை விளக்கியுள்ளது.

"தன்னுடைய அலுவலகத்தில் புதனன்று உயர்மட்ட ஆலோசகர்களுடன் பரபரப்புடன் குழுமியிருந்த நிதி மந்திரி ஹென்றி போல்சன், ஒவ்வொரு சந்தையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக பயனில்லாது போக தொடங்குகையில் தன்னுடைய நிதிய தகவல்தொகுப்பு முடிவை பெரும் பீதியுடன் பார்த்தார். முதலீட்டாளர்கள் பணச் சந்தை பரஸ்பர நிதிகளில் இருந்து ஓடுகின்றனர்; இவைதான் நீண்ட காலமாக மிகப் பாதுகாப்பான சேமிப்புக்கள் என்று கருதப்பட்டன. வங்கிகள் அன்றாட வணிகத்திற்கு நம்பியிருக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான சந்தை இல்லாமற் போய்விட்டது. அத்தகைய கருவிகள் இல்லாவிடின் பொருளாதாரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். விரைவில் நுகர்வோர்கள் பீதியடைவர்."[Wall Street Journal September 20, 2008].

செப்டம்பர் 18 வியாழனை ஒட்டி, ஒரு நிதிய உருகிவழிதல் தொடங்கிவிட்டது.

ஆனால் நாம் இன்னும் தீவிர வடிவில் எழுப்பிய பிரச்சினைகளைத்தான் கூறுகிறது. இந்த தற்போதைய பொருளாதார ஒழுங்கமைப்பை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடர முடியும்? அமெரிக்க மக்கள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின்மீது பொருளாதார பேரழிவை சுமத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ள முதலாளித்துவ சந்தை மற்றும் இடைவிடாமல் இலாபத்தை நோக்கி செல்லும் ஒரு சமூகப் பொருளாதார அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தக்க நேரம் வந்துவிட்டது.

ஒரு பேரழிவைத் தடுப்பதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் திரட்டப்பட வேண்டும் என்பது தேவையானால், இந்த வளங்கள் முதலில் இந்த பேரழிவை ஏற்படுத்தியவர்களின் கரங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும் என்பது இருமடங்கு தேவை என்பது உறுதியாகும்; அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்; இவர்களுடைய மூளை மற்றும் உடல்ரீதியான உழைப்புக்கள்தான் அவ்வளங்களை தோற்றுவித்தன.

கடந்த மூன்று தசாப்தங்களாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு மத்திய சிந்தனைப் போக்கை கொடுப்பதில் முக்கியமாக இருந்த சந்தை கட்டுக்கதைகள் மற்றும் மந்திரங்கள் இந்த அமெரிக்க நிதிய நெருக்கடியினால் உறுதியாக சிதைக்கப்பட்டு விட்டன.

சமூகப் பணிகள், சுகாதாரம், கல்வி, கூடுதலான உள்கட்டுமானம் மற்றும் பிற தற்கால வாழ்வின் தேவைகளுக்கான கோரிக்கை எழுப்பப்பட்ட போது, எழுந்த ஓலமான விடை, பெரிய அரசாங்கம் இதற்கான விடையல்ல என்பதுதான்! அவற்றின்மீது பணத்தை வாரி இறைப்பதின் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாது என்று கூறப்பட்டது. அத்தகைய தேவைகளை நிறைவேற்ற வளங்கள் கிடையாது. சமூகப் பணிகள் வசதிகள் ஆகியவற்றிற்கு பணம் செலுத்த விதிமுறைகள் இல்லை, பயன்படுத்துவோர் பணம் செலுத்துதல், என்பது ஒன்றுதான் சாத்தியமான வருங்காலப் பொருளாதார திட்டம் என கூறப்பட்டது.

இத்தகைய வெற்றுச் சொற்றடர்கள் நன்கு, உண்மையில் சிதைந்துள்ளன; அவை பயன்கொடுக்கும் வர்க்க நலன்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய அரசாங்கம்? நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களை காப்பாற்ற வேண்டும் என்றால் வானம்தான் வரம்பாகின்றது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான வீழ்ச்சி

ஆயினும், இந்நெருக்கடியானது கடந்த மூன்று தசாப்தங்களின் "தடையற்ற சந்தை" அரசியலின் கருத்தியல் அஸ்திவாரங்களை உடைத்ததைவிட கூடுதலாகவும் செய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், மறு சீரைமப்பிற்கு உலக முதலாளித்துவம் கொண்டிருந்த பொருளாதார அஸ்திவாரங்கள், நான்கு தசாப்தங்கள் அரசியல், பொருளாதார கொந்தளிப்பிற்கு பின்னர் சிதைவின் மிக முன்னேறிய கட்டத்தை அடைந்துவிட்டன.

இருபதாம் நூற்றாண்டு முழுவதையும், குறிப்பாக கடந்த 60 ஆண்டுகள் முழுவதையும் மீளாய்வு செய்தால், முதலாளித்துவ அமைப்புமுறை தப்பிப் பிழைத்தலில் முக்கிய புறநிலைக்காரணியாக இருந்தது, அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமை என்பது தெளிவாகும்.

எமது இயக்கமான நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்தின் பழைய தலைமைகளான ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள், சமூக ஜனநாயக மற்றும் தொழிற்கட்சிகள், தொழிற்சங்க தலைமைகள், அவற்றிற்கு வக்காலத்து வாங்கி பாதுகாத்த மத்தியதர வர்க்க தீவிரப்போக்குடைய குழுக்கள் ஆகியோரும் சேர்ந்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை நிலைநிறுத்தக் கொண்டிருந்த முக்கிய அரசியல் பங்கை அம்பலப்படுத்தியுள்ளது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபித வேலைத்திட்டம் கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கின்றது: "உலக நிலைமை முழுவதுமே பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியால் பிரதானமாக பண்பிடப்படுகிறது. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான புறநிலை முன்தேவைகள் 'கனிந்துவிட்டன' என்பது மட்டும் இல்லாமல் ஓரளவிற்கு அழுகவும் தொடங்கிவிட்டன. ஒரு சோசலிசப் புரட்சி இல்லாவிட்டால், அடுத்த வரலாற்றுக் காலத்தில், மனிதகுலத்தின் கலாச்சாரம் அனைத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்தும். இப்பொழுது செயல்படும் முறை பாட்டாளி வர்க்கத்திற்கு வந்துள்ளது, அதாவது, முக்கியமாக அதன் புரட்சிகர முன்னணிக்கு வந்துள்ளது. மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமை நெருக்கடி என்பதாக குறைக்கப்பட்டுள்ளது."

இச்சொற்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு அவை எழுதப்பட்ட போது கொண்டிருந்த உண்மையையே இப்பொழுதும் கொண்டுள்ளன. ஆனால் முதலாளித்துவம் அப்பொழுதில் இருந்து தப்பியதை எது விளக்குகிறது? எமது இயக்கம் வரலாற்று நிகழ்வுப்போக்கில் புரட்சிகரத் தலைமையின் பங்கு என்ற "அகநிலைக் காரணி" பங்கு பற்றிய மிக ஆழ்ந்த ஊக்குவிப்பின் அடிப்படையில் நிறுவப்பட்டது. தொழிலாள வர்க்க தலைமைகளின் காட்டிக் கொடுப்புக்களினால்தான் முதலாளித்துவம் தப்பியுள்ளது என்பதில் சந்தேகமே கிடையாது.

ஆனால் நாம் ஒன்றும் வரலாற்று அகநிலைவாதிகள் அல்ல. புரட்சிகள் ஒரு சில குறிப்பிட்ட, உறுதியான புறநிலை சூழ்நிலைமைகளில்தான் சாத்தியமாக முடியும்; இவை முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சி மற்றும் அதில் இருக்கும் முரண்பாடுகளின் செயற்பாடுகளினால் தோற்றுவிக்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னரும், அதற்கு முன்பும் பின்னரும் இருந்த புரட்சிகர எழுச்சிகளில் இருந்து முதலாளித்துவம் தப்பிப் பிழைக்க சக்திவாய்ந்த புறநிலை நிகழ்வுபோக்குகள் வகை செய்தன. இந்தக் காரணிகளில் மிகவும் முக்கியமானது அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமை ஆகும்; அதுதான் கடந்த ஆறு தசாப்தங்களாக உலக முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு தேவையான பொருளார அஸ்திவாரங்களை வழங்கி இருக்கிறது.

எனவேதான் இந்த நெருக்கடி அத்தகைய நீண்டகால விளைவுகளைக் கொண்ட மற்றும் புரட்சிகர உட்குறிப்புக்களை கொண்டிருக்கிறது; இது அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான சரிவு, சிதைவு மற்றும் அழிந்துவிடுதலைக் காட்டுகிறது. இதன் பொருள் ஒரு புதிய புரட்சிகர சகாப்தம் தோன்றியுள்ளது என்பதாகும்; இதற்காக நான்காம் அகிலமும் தொழிலாள வர்க்கமும் கட்டாயம் தயாரிக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ ஒழுங்கின் சிந்தனைவாத பாதுகாவலர்கள் கிட்டத்தட்ட உள்ளுணர்வில், அரைகுறை உணர்மையுடனும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பங்கு பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இக்காரணத்தை ஒட்டித்தான் பெருமந்த நிலை காலத்திற்குப் பின்னான மிக ஆழ்ந்த நெருக்கடி என்றாலும் அவர்கள் "உலகம் ஒன்றும் முடிவிற்கு வந்துவிடவில்லை" என்று வலியுறுத்துகின்றனர்.

Australian ல் செப்டம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்ட, லண்டனில் இருக்கும் டைம்ஸ் ஏட்டின் முக்கிய பொருளாதார வர்ணனையாளர் Anatole Kaletsky உடைய சமீபத்திய கட்டுரையை குறிப்பதின் மூலம் இக்கருத்தை விளக்குவதற்கு அனுமதிக்கவும். அமெரிக்க பெரும் அடைமான நிறுவனங்களான பிரெட்டி மாக் மற்றும் பானி மே இரண்டும் $85 பில்லியன் நிதியின் பிணை எடுப்பு பெற்ற இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின் இது வெளிவந்தது.

தன்னுடைய கட்டுரையை கீழ்க்கண்ட வகையில் காலேட்ஸ்கி ஆரம்பித்தார்: "பெரிதான ஒன்று', அரக்கத்தனமான கொந்தளிப்பு, பொதுவாக ஓரளவு அரசாங்க ஆதரவுடன் தொடர்வது, ஒவ்வொரு பெரிய நிதிய நெருக்கடியின் குறைந்த புள்ளியையும் பொதுவாகக் காட்டுவது என்பது இதுதானா? அளவின் தன்மையில் பார்க்கும்போது அதில் சந்தேகத்திற்கு இடமில்லை. பானி மே மற்றும் பிரெட்டி மாக் மீட்கப்படுதல் என்பது ...உலகில் எங்கும் எந்த நிதியச் சந்தைகளிலும் முந்தைய எந்த அரசாங்க குறுக்கீட்டினாலும் காப்பாற்றப்பட்டதைவிட பத்து மடங்கு மிகப் பெரிய செயலாகும்."

அவரின் முடிவு பின்வருமாறு: "இத்திட்டம் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் நிதிய முறையை மீண்டும் அதன் கால்களில் நிறுத்த போதாது என்றால், வேறு எது செய்ய முடியும் என்பதைக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. இந்த பொதிக்கு எதிராகப் பந்தயம் கட்டுபவர்கள் அமெரிக்க பொருளாதாரம் மீள முடியாத வகையில் தவிர்க்க முடியாத சரிவிற்கு உட்பட்டுவிட்டது என்பதற்குத்தான் பந்தயம் கட்டுகின்றனர். அத்தகைய பந்தயம் கடந்த காலத்தில் எப்பொழுதும் தவறாகி விட்டது; இம்முறையும் மீண்டும் தவறாகிவிடக்கூடும். ஞாயிறு அநேகமாய் மிகப் பெரிய விஷயமாகத்தான் இருந்தது --அமெரிக்க பொருளாதார மீட்பிற்கு இப்பொழுது உறுதி கிடைத்துள்ளது."

அதற்குப் பின் இரு வாரங்களில் நடந்ததையும் கணக்கில் எடுத்துக் கொள்கையில், குறைந்த பட்சம் நாம் கூறக்கூடியது திரு.காலேட்ஸ்கியின் உத்தரவாதங்கள் பெரிதும் அவசரப்பட்டு கூறப்பட்டவையாகும். பானி-பிரெட்டி பிணை எடுப்பு முன்னர் எங்கும் நடந்ததைவிட பத்து மடங்கு மிகப் பெரியது என்றால், தற்போதைய நடவடிக்கை குறைந்தது அதைப்போல் 90 மடங்கு பெரியது ஆகும்!

இங்கு முக்கியமானது அந்த அளவுக்கு முன்கணிப்பு என்பது அல்ல; மாறாக கொடுக்கப்படும் காரணம் சற்றும் பொருத்தமில்லாமல் இருப்பது என்பதுதான். அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அதன் உலக மேலாதிக்கத்தை ஒரு நிரந்தரமான நிலை என்பதை திரு.காலேட்ஸ்கி உறுதியாக எடுத்துக் கொண்டுள்ளார். இதுதான் தற்போதைய தலைமுறை மக்களின் பெரும்பான்மையின் வாழ்வை உள்ளடக்கிய கடந்த 60 ஆண்டுகளின் பொருளாதார மற்றும் அரசியல் வடிவமைப்பிற்கு மையமாக இருந்தது. அதாவது, உண்மையில் இவ்வுலகத்தில் வாழ்ந்தவர்களுடைய கணிசமான விகிதத்தையும் சூழ்ந்திருந்தது; எனவே வேறு எதையும் கற்பனை கூட செய்யத் தோன்றவில்லை. எப்பொழுதும் போல் புறநிலை வரலாற்று நிகழ்போக்கிற்கு மிகவும் பின்தங்கிய நிலையில்தான் சிந்தனை தங்கியுள்ளது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் பெரும் சரிவு--அது எப்படி இயலும்? ஆயினும்கூட அது நடந்து கொண்டிருக்கிறது; இது ஒரு புதிய வரலாற்று சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது; இதில் பொருளாதார மற்றும் அரசியலில் பழைய மற்றும் வெளித்தோற்றத்தில் நிரந்தர அமைப்புக்களாக தெரிபவை கற்பனை செய்ய முடியாத மாற்றத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றன. இதில் இருந்து புதிய அரசியல் உறவுகளும் வாய்ப்புக்களும் எழுச்சி பெறும்.

நிக்சனும் பிரெட்டன் வூட்ஸும்

இப்புள்ளிக்கு எவ்வாறு நாம் வந்துள்ளோம் என்பதை தெளிவுபடுத்த திரு.காலெட்ஸ்கி மற்றும் அவருடைய சக பண்டிதர்களையும் விட்டு நீங்கும் முன், நாம் அவருடைய கருத்துக்களை கூடுதலாக கவனிக்க வேண்டும். எப்படி அமெரிக்கா மடிதல் என்பதன் பேரில் பந்தயம் கட்டல் கடந்த காலத்தில் தவறாக இருந்திருக்கும், இப்பொழுதும் தவறாக இருக்கிறது என்று காலேட்ஸ்கி கூறுகிறார்.

இந்த வினாவை பெருமந்த காலம் தொடங்கி வரலாற்றளவில் ஆராய்வோம். அது எப்படிக் கடக்கப்பட்டது? ரூஸ்வெல்ட்டின் அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகள் அல்லது அதன் 1930 களின் புதிய உடன்பாட்டினால் (New Deal) அல்ல. ரூஸ்வெல்ட் அமல்படுத்திய நடவடிக்கைகள் தோல்வியுற்றன; 1937-38 ஐ ஒட்டி அமெரிக்க முதலாளித்துவம் 1932 சரிவில் இருந்ததைப் போலவே விரைவான கீழ்நோக்குச் சரிவில்தான் சென்று கொண்டிருந்தது.

புதிய உடன்பாட்டு (New Deal) நடவடிக்கைகளின் மடிதல் என்பது சில நீண்டகால விளைவுகளை கொடுக்கும் முடிவுகளுக்கு அமெரிக்க அரசியல் உயரடுக்கின் முக்கிய பிரிவுகளை வரச்செய்தது. 1930 களின் இறுதியை ஒட்டி நெருக்கடியை கடக்கும் ஒரே பாதை உலகப் பொருளாதாரத்தை திரும்பத் தயாரித்தல் என்பதுதான் என்று முடிவு செய்யப்பட்டது.

பழைய பிளவுகள், பழைய பேரரசுகள் மற்றும் பழைய முகாம்கள் உலகச் சந்தை புதுப்பிக்கப்படுவதற்கான வகையில் உடைக்கப்பட வேண்டி இருந்தது, மூலதனம் மற்றும் பொருட்கள் தடையற்ற முறையில் இடமாற்றத்திற்கும் வகை செய்வது இவைதான் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்கு முக்கியமானதாக இருந்தது. இத்திட்டத்தின் கீழ்தான் மிக அடிப்படையான உணர்வில் அமெரிக்கா போரில் ஈடுபட்டிருந்தது. லியோன் ட்ரொட்ஸ்கி 1934ல் விளக்கியிருந்தபடி, "அமெரிக்க முதலாளித்துவம், 1914ல் ஜேர்மனியை போர்ப்பாதையில் தள்ளிய அதே பிரச்சினைகளைத்தான் எதிர்கொண்டுள்ளது. உலகம் பங்கீடு செய்யப்பட்டிருக்கிறதா? அது கட்டாயம் மறு பங்கீடு செய்யப்பட வேண்டும். ஜேர்மனியை பொறுத்த வரையில் அது "ஐரோப்பாவை ஒழுங்குபடுத்துதல்" ஆகும். அமெரிக்கா கட்டாயம் "உலகை 'ஒழுங்குபடுத்த' வேண்டும்."

போருக்குப் பின் ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்புக்கள், கம்யூனிஸ்ட்டுக்கள் இத்தாலியிலும் பிரான்சிலும் முதலாளித்துவ அரசாங்கங்களுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்காவிற்கு அதன் மேலாதிக்கத்தை செலுத்த மற்றும் புதிய அஸ்திவாரங்களின் கீழ் உலக முதலாளித்துவத்தை மறுசீரமைப்பதற்கு உகந்த நிலைமைகளை உருவாக்கின. 1944ல் கொண்டவரப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் உடன்பாடு ஒரு புதிய சர்வதேச நாணய முறையை நிறுவி, உலக வணிகத்தின் விரிவாக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டது. 1947ம் ஆண்டு மார்ஷல் திட்டம் ஐரோப்பிய பொருளாதாரங்களை மறு கட்டமைத்து இன்னும் திறமையான அமெரிக்க இணைப்பு முறை (Assembly-Line) பொருட்கள் உற்பத்தி வகையை ஐரோப்பாவில் வளர்ப்பதற்கு அஸ்திவாரம் போட்டது. ஒன்றாக இணைந்த முறையில் இந்த நடவடிக்கைகள் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தளத்தை நிறுவின.

அமெரிக்க மேலாதிக்கத்தின்கீழ் போருக்குப் பிந்தைய மறு சீரமைப்பு ஒரு புதிய முதலாளித்துவ முறை மேலேற்றத்திற்கு வழிவகுத்தது. ஒரு பொற்காலம் உதயமானது போல் தோன்றியது. பூர்ஷ்வாக்களின் சிந்தனையாளர்கள், பெரு மந்த நிலையின் படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்பட்டன என்று அறிவித்தனர். சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்கட்சி அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினராலும் இது எதிரொலிக்கப்பட்டது. முதலாளித்துவ முறையை கட்டுப்படுத்த இயலும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மார்க்சிச இறுதித் தீர்ப்பளிப்போர் தவறாக்கப்பட்டுவிட்டனர் என்றும் கூறப்பட்டது: அதன் தீர்க்கப்படமுடியாத முரண்பாடுகளால் முதலாளித்துவம் அழிந்துபோகவில்லை என்றனர்.

ஆனால் வரலாறு, விரைவில் அத்தகைய முரண்பாடுகள் உண்மையில் விளங்குகின்றன, அவை கடக்கப்பட்டுவிட்டன என்று கூறுவதற்கில்லை என்பதைத்தான் நிரூபணம் செய்துள்ளது. இது 1960களில் வளர்ச்சியடைய ஆரம்பித்த பொருளாதார குழப்பங்களால் எடுத்துக்காட்டப்பட்டன. இந்த தசாப்தத்தின் முடிவில், அமெரிக்கா அதிகரித்துவரும் செலுத்துமதி நிலுவையால் பாதிக்கப்பட்டதுடன், முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் முதல் தடவையாக 1971 இல் வர்த்தக நிலுவையாலும் பாதிக்கப்பட்டது.

பிரெட்டன் வூட்ஸ் நாணயநிதியமுறைப்படி, உலகின் முக்கிய நாணயங்களின் மதிப்புக்கள் அமெரிக்க டாலருடனான தொடர்பை ஒட்டி நிர்ணயிக்கப்பட்டன; இது தங்கத்தை ஆதாரமாகக் கொண்டிருந்ததால் 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் 1970 களின் ஆரம்பத்தில் உலகின் மற்ற பகுதிகளில் சுழற்சியில் இருந்த டாலர்கள் அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்புக்களைவிட பெருமளவு அதிகமாயிற்று. சர்வதேச வணிகத்தின் விரிவாக்கமே அது அடிப்படையாகக் கொண்டிருந்த நாணயநிதிய முறையை கீழறுத்தது.

பிரெட்டன் வூட்ஸ் முறையைத் தக்கவைக்கும் நடவடிக்கைக்கு, அமெரிக்கா வெளியே செலவழிப்பதை குறைப்பது தேவைப்பட்டது, அதாவது வியட்நாம் போர் செலவு உயர்ந்த கட்டத்தில் இருந்த நேரத்தில்; மற்றும் உள்நாட்டில் பொருளாதாரப் பின்னடைவு நிலைமைகளை திணித்த நிலையில், அதாவது முதலீடு மற்றும் இராணுவம் இரண்டிலும் செலவைக் குறைப்பது தேவைப்பட்டது. இந்த இரண்டையுமே அமெரிக்க நிர்வாகம் செயல்படுத்தத் தயாராக இல்லை. மற்றொரு மாற்றீடு ஒப்புமையில் கூடுதலாக இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை குறைத்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பா மறுபடியும் எழுச்சி பெற்றுவிட்டன என்பதை அங்கீகரிக்கும் ஒரு புதிய சர்வதேச நாணயநிதிய உறவுகள் முறையை வகுப்பதாக இருந்தது. அது ஏற்கப்பட முடியாதது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

நிக்சன் நிர்வாகம் அமெரிக்காவின் தலையாய நிலைப்பாட்டை காப்பாற்றும் வேறு ஒரு வழியைப் பின்பற்ற முயற்சி செய்தது. ஆகஸ்ட் 1971ல் அது அமெரிக்க டாலருக்கான தங்க ஆதரவை விலக்கியது. 1973ம் ஆண்டு நிலையான நாணய உறவுகள் முறை அகற்றப்பட்டது; அதற்கு அடுத்த ஆண்டு சர்வதேச நிதிய மூலதன இயக்கங்களை கட்டுப்படுத்தும் கருவிகளும் அகற்றப்பட்டன.

1971-73ல் நிக்சன் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அமெரிக்காவை அதன் போட்டியாளர்களின் இழப்பில் உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. ஆனால் 1970கள் முழுவதும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமாகியது. கார்ட்டர் நிர்வாகம் ஒரு ஒருங்கிணைந்த உலக ஏற்றத்திற்கு எடுத்த முயற்சி தோல்வியுற்றது, தசாப்த இறுதியில் அமெரிக்காவும் உலகப் பொருளாதாரங்களும் ஒரே நேரத்தில் பணவீக்க உயர்வு மற்றும் பெருகிய வேலையின்மை என்ற தேக்க-பணவீக்கத்தைக் (Stagflation) கொண்டது.

அமெரிக்க டாலர் சரிந்ததில் பிரதிபலித்த 1979 ம் ஆண்டு வளர்ந்து கொண்டிருந்த நெருக்கடியின் நடுவே, அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பின் தலைவராக போல் வோல்க்கரை நியமனம் செய்த வகையில் இன்னும் கூடுதலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

மிக அதிகமான வட்டி விகிதங்களை தளமாகக் கொண்டு, பெரு மந்த நிலைக்குப் பின்னர் ஆழ்ந்த பொருளாதாரப் பின்னடைவை தோற்றுவித்ததை அடிப்படையாக கொண்ட வோல்க்கர் நடவடிக்கைகள் அமெரிக்க முதலாளித்துவம் அதன் உலக மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மறு கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

1865 உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிந்தைய காலத்தில் இருந்து அமெரிக்கா அதிகாரத்திற்கு உயர்ந்தமை அதன் தொழில்துறை மற்றும் உற்பத்திசெய்யும் கொள்திறனின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டிருந்தது. தொழில்துறை மூலதனத்தின் முழுப் பிரிவுகளையும் அழித்த வோல்க்கர் நடவடிக்கைகள் நிதி மூலதனத்தை அடித்தளமாககொண்ட ஒரு புதிய வகையிலான திரட்சி (Accumulation) ஆரம்பிப்பதற்கு கட்டியம் கூறின; இந்தப் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் அமெரிக்க பங்குச் சந்தை உயரத் தொடங்கிய பொழுது 1982 ல் ஏற்பட்டது எனலாம்.

Dow Jones குறியீடு 1982ல் இன்னமும் 1,000 புள்ளிகளுக்கும் கீழாகத்தான் இருந்தது; ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அக்குறியீடு அடையப்பட்டிருந்தது. ஜனவரி 1987ல் இது ஐந்து ஆண்டுகளில் 2,000 என்று ஆயிற்று. இதற்கிடையில் 1980களின் முதல் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க தொழிற்துறை போருக்கு பிந்தைய காலத்தின் ஆழ்ந்த பொருளாதார பின்னடைவை கொண்டிருந்தது.

ஆயினும்கூட, அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலைமை ஒன்றும் பாதுகாப்பாக இருந்துவிடவில்லை. அக்டோபர் 1987ல் பங்குச் சந்தை அதன் மிகப் பெரிய ஒரு நாள் சரிவைக் கண்டது; அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பும் இன்னும் பிற மத்திய வங்கிகளும் ஒரு உலகச் சரிவை தவிர்க்க பெரும் தலையீட்டை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து சேமிப்புக்கள் மற்றும் கடன் வழங்கல் நெருக்கடி ஏற்பட்டது; இதற்கு பாரிய அரசாங்க பிணை எடுப்பு தேவையாக இருந்தது; இதனை தொடர்ந்து 1990-92 ல் பொருளாதாரப் பின்னடைவு வந்தது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் அதிருஷ்டங்களில் ஒரு திருப்பு முனை சோவியத் ஒன்றியம் 1991ல் சரிந்ததுடனும் அதைத் தொடர்ந்து சீனாவும் உலகின் பிற பகுதிகளும் உலகந் தழுவிய மூலதனத்திற்கு திறக்கப்பட்டு விட்டதுடனும் ஏற்பட்டது. பேர்லின் சுவர் நவம்பர் 1989ல் இடிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை கிட்டத்தட்ட ஒரு பில்லியன் தொழிலாளர்கள் உலகின் தொழிலாளர் சந்தையில் மூலதனத்திற்கான உழைப்பு சந்தையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய குறைவூதியத் தொழிலாளர் கூட்டத்தை வரலாற்றில் உலக முதலாளித்துவம் ஒருபொழுதும் பெற்றதில்லை. இந்த நிகழ்வுபோக்குத்தான் நிதியமயப்படுத்தலின் அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவம் புதிய செல்வத்திரட்சி முறையை அடைவதை சாத்தியமாக்கியது.

Apple நிறுவனம் பற்றிய கீழுள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவு பணம் அதில் தொடர்புபட்டுள்ளது என்பதை காட்டுகிறது. அமெரிக்காவில் 299 டாலருக்கு விற்கப்படும் iPod விற்பனை பணத்தில், 4 டாலர் அதைத் தயாரிக்கும் சீன நிறுவனங்களுக்கு செல்லுகிறது; கிட்டத்தட்ட 160 டாலர் இதன் வடிவமைப்பு, போக்குவரத்து, சில்லறை விற்பனை ஆகியவற்றில் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களுக்குப் போகிறது.

சொத்துக்களை வாங்கி விற்றல்

சீனா மற்றும் பிற குறைவூதியத் தொழிலாளர் பகுதிகள் திறக்கப்பட்டுவிடப்பட்டது இருவித பாதிப்பை கொடுத்துள்ளது. ஒரு புறம், இது முதலாளித்துவ உற்பத்தி முறையில் அனைத்து செல்வக் குவிப்பிற்கும் ஆதாரமான உபரிமதிப்பின் திரட்சியை அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பொருட்கள் மலிவாகக் கிடைத்தல் என்பது வட்டி விகிதங்களை அமெரிக்காவிலும் மற்ற முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் 1990கள் முழுவதும் குறைக்க உதவியது; இதையொட்டி குறைவான வட்டிக்கு கடன் வழங்ககூடியதாக இருந்தது. இது தொடர்ச்சியான 1990களில் பங்குச் சந்தை குமிழி, இணையதளம் மற்றும் தொழில்நுட்ப குமிழி மற்றும் வீடு வாங்கல் விற்றலில் செழுமை போன்ற அமெரிக்க செழுமைகளுக்கு உத்வேகத்தை ஊட்டியது, இது 2002க்கு பின்னர் வீழ்ச்சியடைந்தது.

உலக முதலாளித்துவம் 1990 களின் ஆரம்பத்தில் இருந்து ஒருவித ஏற்ற நிலையைக் கண்டது; 1992ல் ஸ்காண்டிநேவிய வங்கி முறை மற்றும் ஸ்டேர்லிங் நெருக்கடி; 1994ல் அமெரிக்க வங்கிகள் மெக்சிகோ நாட்டின் பெசோ நெருக்கடியைக் கண்டபோது 50 பில்லியன் டாலர் பிணையெடுப்பு நடந்தது; 1997ல் ஆசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது; 1998ல் ரஷ்யாவின் கடன் செலுத்தத்தவறல்; அமெரிக்க தனியார் முதலீட்டு நிதி நிறுவனமான Long Term Captal Management 1998ல் சரிந்தது; இத்தகைய வளர்ந்துவரும் நிதியப் புயல்களும் கொந்தளிப்பும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஏற்றநிலை தொடர்ந்தது.

அமெரிக்காவில் செல்வத்திரட்சிக்கு வழி உற்பத்தித்தொழில்துறை அல்லது உற்பத்தித் தொழிலுடன் தொடர்புடைய நிதியப் பணிகளை அளித்தல் என்று இல்லாமல், கடன் பணத்தில் இருந்து சொத்துக்களை இலாபத்திற்கு வாங்கி விற்பதின் மூலம் திரட்டல் என்று ஆயிற்று.

ஒரு எளிதான கணக்கு எந்த அளவிற்கு பணம் பண்ணப்பட இருந்தது என்பதைக் காட்டும். ஒரு சொத்து 100 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டு, 10 மில்லியன் டாலர் பங்குகள் மற்றும் 90 மில்லியன் டாலர் கடன் வாங்கப்பட்ட நிதியமும் அதில் இருந்தால், 8 சதவிகித வட்டிக்கு இது வாங்கப்பட்டால் என கொண்டால், சொத்துக்கள் ஆண்டு ஒன்றிற்கு 10 சதவிகிதம்தான் கூடுதல் மதிப்பு பெறுகிறது என்றால், ஓராண்டு முடிவில் அதன் மதிப்பு 110 மில்லியன் டாலர் ஆகும். இதில் 7.2 மில்லியன் டாலர் வட்டிக்கு கொடுக்கப்பட்டு, 2.8 மில்லியன் டாலர் இலாபம் என ஆகும். அதாவது 28 சதவிகிதம் திரும்பக் கிடைக்கும் ஆதாயம். சொத்துக்கள் மதிப்பில் விரைவான பெருக்கம் இருந்தால், இந்த ஆதாய விகிதம் இன்னும் அதிகமாக போகும். உதாரணமாக சொத்தின் மதிப்பு 15 சதவிகிதம் என்று போனால் 10 மில்லியன் டாலருக்கு கிடைக்கும் இலாபம் 7.8 மில்லியன் டாலர் அல்லது 78 சதவிகிதம் என்று ஆகும்.

[இந்த எளிய உதாரணம் மிக அதிக கடன் இருக்கும் முறையில் ஏற்படக்கூடிய பேரழிவு பற்றி தாக்கத்தையும் அளிக்கிறது; சொத்துக்கள் மதிப்பு சரிந்தால் என்ன ஆகும் என்றும் தெரிகிறது. 10 சதவிகித ஏற்றத்திற்கு பதிலாக சொத்து மதிப்பு 2 சதவிகிதம் குறைந்து அதன் மதிப்பு ஆண்டு இறுதியில் 98 மில்லியன் டாலர் என்று இருப்பதாக கொள்ளுவோம். வங்கிகளுக்கு 7.2 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்; 0.8 மில்லியன் டாலர்தான் பங்கு மூலதனத்திற்கு கொடுக்கப்படும். அதாவது 0.2 மில்லியன் டாலர் அல்லது 92 சதவிகித ஆரம்ப மூலதனம் அழிக்கப்பட்டுவிடும்.]

இப்பொழுது மிக முக்கியமான வினா இதுதான்: சொத்துக்கள் மதிப்பை அதிகரிக்க செய்வது எது?. அது தொடர்ச்சியான கடன் வழங்கலை பொறுத்து உள்ளது.

இத்தகைய செல்வத்திரட்சியின் வடிவத்தின் முக்கியத்துவம் 1996ம் ஆண்டு வெளிநாட்டு கொள்கையில் "கடன்பத்திரங்கள்; புதிய செல்வ இயந்திரம்" ("Securities: The New Wealth Machine") என்ற தலைப்பில் வந்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்த அறிக்கை இப்புதிய நிதியக் கருவிகள் உலக செல்வத்தின் முக்கிய கூறுபாடு என்றும் அதை துரிதப்படுத்தும் ஆற்றல் உடையது என்றும் கடன் பத்திரங்களாக்குதல் என்பது "அடிப்படையில் சர்வதேச நிதிய முறையை மாற்றும்" என்றும் கூறியது.

இக்கட்டுரை செல்வம் தோற்றுவிப்பதற்கு ஒரு புதிய அணுகுமுறை "தேவைப்படுகிறது என்றும் அரசாங்கம் இதன் உற்பத்தி சொத்துக்களின் பங்கின் மதிப்பு சந்தையில் பெருகுவதற்கு வழிவகுக்க வேண்டும்" என்றும் கூறியது. அத்தகைய மூலோபாயம் "செல்வம் தோற்றுவித்து வளர்ச்சியை அடைவதை நோக்கமாக கொண்டிருக்கும் ஒரு பொருளாதார கொள்கையால் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதையொட்டி பொருட்கள், சேவைத்துறைகள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்க வேண்டியதில்லை, அவை இரண்டாம் பட்ச இலக்காகத்தான் இருக்கும்" என்றும் கூறப்பட்டது. சொத்துக்களின் மதிப்புக்கள் பெருகுவதற்கான பாதை நிதிய முறையில் கூடுதலான கடனை உட்செலுத்துவது ஆகும்.

கடன்பத்திரங்கள், சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டவற்றை, வாங்கி விற்பது செல்வக் குவிப்பிற்கு ஒரு புதிய பாதையாயிற்று. 1995ம் ஆண்டு சொத்து ஆதரவுடைய பத்திரங்களின் டாலர் மதிப்பு 108 பில்லியன் டாலர் என்று இருந்தது. 2000 ஐ ஒட்டி பங்குச் சந்தை குமிழின் உச்சக்கட்டத்தில் இது 1.07 டிரில்லியன் டாலர் என்று ஆயிற்று. டாலரின் மதிப்பு 2005ல் இப்பிரிவில் 1.1 டிரில்லியன் டாலர் என்றும் 2006ல் 1.23 டிரில்லியன் டாலர் என்றும் ஆயிற்று. வேறுவிதமாகக் கூறினால், ஒரு தசாப்த காலத்தில் இக்கடன்பத்திரங்களின் மதிப்பு பத்து மடங்கு உயர்ந்தன. இப்பொழுது நிலையற்ற திட்டமாக நொருங்கி விழுந்துள்ளது.

இந்த நிலையற்ற திட்டத்தின் அளவு கீ்ழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் புலனாகும். 1980ல் அமெரிக்க கடன் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு (GDP) 163 சதவிகிதம் என்று இருந்தது. 1987ல் இது 346 சதவிகிதம் ஆயிற்று. நிதித்துறையில் கடன்சுமையின் பெருக்கம் அதிகரித்தது மிக ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கிறது. 1980ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவிகிதம் என்பதில் இருந்து 2007ல் 116 சதவிகிதம் என ஆயிற்று.

திரு.காலேட்ஸ்கி மற்றும் பிறர், அமெரிக்க முதலாளித்துவ முறை தொடர்ந்து ஸ்திரமான, உயர்நிலையில் இருக்கும் என்று கொண்டிருந்த நம்பிக்கை தவறானது என்பதை இச் சிறு ஆய்வே தெளிவாக்குகிறது.

கடன் முறை

அமெரிக்க பொருளாதாரத்தை இப்பொழுது சூழ்ந்துள்ள நெருக்கடி ஏதோ புதிதாக வானத்தில் இருந்து இறங்கிவிடவில்லை. அமெரிக்காவிற்குள்ளேயே 1970களின் நெருக்கடியை கடப்பதற்காகவும் அதன் உலக மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்காகவும் தொடக்கப்பட்ட நடவடிக்கைகளின், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடந்து வரும் நிகழ்போக்கின் விளைவுதான் இது. மேலும் "அகற்றுதல்", சீனாவின் உயர்ஏற்றம் போன்ற பேச்சுக்கள் ஒருபுறம் இருந்தாலும், இது உலக முதலாளித்துவ முறை முழுவதற்குமான ஒரு நெருக்கடியாகும். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலக முதலாளித்துவம் நிலைகொண்டிருந்த மத்திய தூண், குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளில் இருந்தது, நம்முடைய கண்ணுக்கு முன்பாகவே சிதைந்து கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடி உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இதயத்தானத்தைத் தாக்கிவிட்டதுடன், கடந்த 25 ஆண்டுகளில் இலாபக் குவிப்பில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த அதன் சுழற்சிமுறையின் இயங்குமுறை, கடன் அமைப்புமுறையை பாதித்துவிட்டது என்ற உண்மையில் ஆழ்ந்த முக்கியத்துவம் உண்டு.

மார்க்ஸ் மூலதனம் நூலின் மூன்றாம் பகுதியில் கடன் முறையின் மிக முக்கியமான பங்கை, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பரப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகத்தின் மிக உயர்ந்த வடிவமான சோசலிசத்திற்கு மாறுதலுக்கான அஸ்திவாரம் போடுதல் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில், கடன் வசதிகள் உற்பத்தி சக்திகளின் விரிவாக்கத்திற்கு மகத்தான முறையில் உதவுகின்றன; ஏனெனில் உற்பத்தி என்பது தனி மூலதனத்தின் அடிப்படையைக் கொண்டு மட்டும் இப்பொழுது அமைக்கப்படுவதில்லை, ஆனால் சமூக மூலதனத்தின் மூலம் அமைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இது தனிநபர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஆபத்தினால் தனியார் சுவீகரிப்பை நியாயப்படுத்தல் அல்லது தனி நபரின் சேமிப்பு மூலம்தான் மூலதனக் குவிப்பு ஏற்படுகிறது என்று முதலாளித்துவ ஒழுங்கின் சிந்தனைப்போக்கின் அனைத்து நியாயப்படுத்தல்களையும் அழிக்கிறது. தனிநபர் தன்னுடைய இருப்புக்களையோ, சேமிப்புக்களையோ ஆபத்திற்கு உட்படுத்துவதில்லை கடன் முறையின் மூலம் பிறருடைய சேமிப்புக்கள், அதாவது சமூக சொத்தின் பரந்த திரட்சியைதான் ஆபத்திற்கு உட்படுத்துகிறார்.

தற்போதைய நெருக்கடியில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வகைகளில்தான் துல்லியமாக உற்பத்திமுறையின் சமூகத் தன்மை, செல்வத்தை தனியார் அபகரித்துக் கொள்ளுதல் இவற்றிற்கு இடையே இருக்கும் முரண்பாட்டின் ஆழ்ந்த தன்மையின் உச்ச கட்டத்தை கடன் அளித்தல் கொண்டுவருகிறது. மார்க்ஸ் எழுதினார்: "கடன் முறை ஒரு புதிய நிதிய பிரபுத்துவத்தை தோற்றுவிக்கிறது; நிறுவனத்தை ஊக்குவிப்பவர்கள், ஊக வணிகர்கள் மற்றும் பெயரளவு இயக்குனர்கள் என்ற போர்வையில் புதிய வகை ஒட்டுண்ணிகளை தோற்றுவிக்கிறது; முழு முறையும் ஏமாற்றுதல், பிறர் பொருளை அபகரித்தல் என்றும் பங்குகள் வெளியிடல், அவற்றைப் பற்றிய விவகாரங்களில் நிறுவனத்தை வளர்த்தல் என்ற விதத்தையும் ஏற்படுத்துகிறது."

இந்த நிகழ்வுபோக்கின் ஆரம்பங்களை காணும் வரையில்தான் மார்க்ஸ் வாழ்ந்தார்; ஆனால் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை இன்றைய நிலையைக் கூட சுருக்கிக் காட்டும் வகையில் எழுதியுள்ளார்.

"கடன் முறை, உற்பத்தி சக்திகளின் சடரீதியான வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது, உலகச் சந்தை தோற்றுவிக்க உதவுகிறது; ஒரு குறிப்பிட்ட மட்டத்தின் அபிவிருத்திக்கு முதலாளித்துவ உற்பத்திமுறையை கொண்டுவருவதுதான் அதன் வரலாற்றுப் பணி; ஒரு புதிய வகை உற்பத்திமுறைக்கு சடரீதியான அஸ்திவாரங்களை கொடுக்கிறது. அதே நேரத்தில் கடன் கொடுத்தல் இந்த முரண்பாடுகள், நெருக்கடிகள் ஆகியவை வன்முறைமிக்க வெடிப்புகளையும் விரைவுபடுத்துகிறது; இத்துடன் பழைய உற்பத்தி முறை கரைந்து போவதற்கான கூறுபாடுகளும் உள்ளன."

"கடன் முறை ஒரு இரட்டை தன்மைகளை தன்னுள்ளே உள்ளடக்கியுள்ளது: ஒரு புறம் அது முதலாளித்துவ உற்பத்திக்கு உந்துதலை வளர்க்கிறது, பிறர் உழைப்பை சுரண்டி செல்வம் குவிப்பதை ஊக்குவிக்கிறது; பாரிய முறையில் சூதாட்டம் ஏமாற்றுதல் இவற்றின் சிறப்பு வடிவத்தை வளர்க்கிறது; ஏற்கனவே குறைவாக இருக்கும் சமூக செல்வத்தை சுரண்டுபவர்கள் அதிகமாகாமல் கட்டுப்படுத்துகிறது; மறுபுறமோ இது ஒரு புதிய உற்பத்தி முறைக்கான மாற்றத்திற்கு வடிவத்தை கொண்டுள்ளது".

தற்போதைய நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை இப்பொழுது எதிர்கொள்ளும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளின் மீது முக்கிய கவனத்தை கொண்டு வருகிறது. உலகின் பெரும்பாலான மக்களுடைய நலன்களை பிரதிபலிக்கும் எந்த முயற்சி, எந்த திட்டம் பொருளாதார சீரழிவு, யுத்த அபாயம், சுற்றுச்சூழலின் ஆழமடைந்துவரும் நெருக்கடி போன்ற மனித குலத்தின் பண்பாடு முழுவதையும் இப்பொழுது அழிக்கும் அச்சுறுத்தலை தடுக்க முடியும்? இதனை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எவ்வாறான அரசியல் கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும்? இவைதான் இன்றுள்ள முக்கிய கேள்விகளாகும்.

நான்காம் அகிலத்தின் முன்னோக்கை 1938ல் விரிவாக்கம் செய்கையில் ட்ரொட்ஸ்கி, அதன் இயல்பு, வரலாற்றுப் பணிகளுக்கு பொருந்தும் முறையில் இது சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சி என்று அழைக்கப்பட வேண்டும் என விளக்கினார். 1914ல் வெடித்த முதல் உலகப் போர் எக்காலத்திற்குமாக அனைத்து தேசியவாத வேலைத் திட்டங்கள், முன்னோக்குகள் ஆகியவற்றிற்கு நிரந்தரமாக முடிவு கட்டிவிட்டது.

இந்த உலகக் கட்சி ஒரு வேலைத்திட்டத்தை கொண்டுள்ளது, சிந்தனைகளை நெருக்கமாகப் பிணைத்து அடிப்படைப் பணிகளை விரிவாகக் கூறும் திட்டம் அது என்று அவர் விளக்கினார். இத்திட்டம் உடனடி கொள்கைகள் கோரிக்கைகள் பற்றி மட்டும் கொண்டிருக்கவில்லை என்றும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய, வரலாற்று அனுபவங்களின் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது என்றும் கூறினார். அத்தகைய கருத்தாய்வின் அடிப்படையில்தான் ஒரு புரட்சிகர தலைமையை கல்வியூட்டவும் பயிற்றுவிக்கவும் முடியும். வேலைத்திட்டத்தை கட்சி அமைக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் கட்சியை வேலைத்திட்டம் அமைத்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

இக்கருத்து பல மத்தியவாதப் போக்குகள் மற்றும் அமைப்புக்களால் அந்த நேரத்தில் எதிர்க்கப்பட்டன (அவற்றுள் பலவும் நான்காம் அகிலத்தை விட பெரிய பிரிவுகளாக இருந்தன). அவை இப்படி வரலாற்றினதும் கொள்கையினதும் படிப்பினை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது வரட்டுவாதம் மற்றும் குறுங்குழுவாதம் என்றனர். அனைத்து எதிர்ப்பு போக்குகளும், குழுக்களும் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு ஒரு புதிய பரந்த தளம் உடைய அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றனர். ஆனால் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்குதான் பின்னர் வந்த நிகழ்வுகளால் சரியென நிரூபிக்கப்பட்டது. மற்ற கட்சிகள் எவையும் இரண்டாம் உலகப் போருக்கு பின் தப்பிப் பிழைக்கவில்லை.

போருக்கு பிந்தைய காலம் நான்காம் அகிலத்திற்கு புதிய பிரச்சினைகளையும் சவால்களையும் கொடுத்தது. ஸ்ராலினிச கட்சிகளின் காட்டிக் கொடுப்புக்களால் முதலாளித்துவ அரசியல் ஒழுங்கு மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது, மற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார புத்துயிர்ப்பு நான்காம் அகிலம் நிறுவப்பட்ட முன்னோக்குகளை செல்தகைமை அற்றது போல் காட்டியது. மேலும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கிழக்கு ஐரோப்பாவில் வெற்றிகளைக் கண்டது, சீனாவிலும் யூகோசுலாவியாவிலும் புரட்சிகள் வெற்றி பெற்றமை தொழிலாள வர்க்கத்திற்கு நான்காம் அகிலத்தை ஒரு புரட்சிகர தலைமையாக கட்டமைக்கப்படுவதின் மூலமாகத்தான் சோசலிசம் அடையப்பட முடியும் என்ற கருத்துக்களை மறுப்பது போல் தோன்றியது.

இப்புதிய நிலைமை நான்காம் அகிலத்திற்குள் பாரிய அரசியல் அழுத்தங்களை தோற்றுவித்தது. இந்த அழுத்தங்கள் திருத்தல்வாத கருத்துக்களின் வளர்ச்சியில் வெளிப்பட்டன; ஸ்ராலினிச, தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் குட்டி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தலைமைகள் பல விதங்களிலும் சோசலிசம் அடையப்படுவதற்கு தடைகளாக உள்ளனர் என்பற்கு பதிலாக அவற்றிற்கு அழுத்தம் கொடுத்தால் அவை சோசலிசத்தை அடைவதற்கான கருவிகளாகும் என்று இவை கூறின. இத்தகைய திருத்தவாத முன்னோக்குகள் நான்காம் அகிலத்தின் போருக்குப் பிந்தைய இரண்டு முக்கிய ஐரோப்பிய தலைவர்களால், அதாவது மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.

"நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம்?" என்று 1951ல் வெளியிடப்பட்ட ஆவணத்தில் பப்லோ எழுதினார்: "எமது இயக்கத்திற்கான புறநிலை சமூக யதார்த்தமானது அடிப்படையில் முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஸ்ராலினிச உலகம் என்பதாக உள்ளது. மேலும் நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இந்த இரு கூறுபாடுகள் அதிக அளவில் புறநிலை சமூக யதார்த்தமாக உள்ளன; அதுவும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்திகளில் பெரும்பாலானவை சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமை அல்லது அதன் செல்வாக்கின் கீழ் காணப்படுகின்றன."

இந்தப் பத்திதான் போருக்குப் பிந்தைய திருத்தல்வாதக் கண்ணோட்டத்தின் இதயத்தானமாக இருந்த பதிவுவாத முறையை (Impressionist Method) சுருக்கிக் கூறுவது ஆகும். 'உலகம் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஒரு புறமும் சோவியத் அதிகாரத்துவம் மறுபுறம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான பங்கு இல்லை, அதன் விளைவாக நான்காம் அகிலமும் அவ்விதமான பங்குவகிக்க முடியாது. இது தொழிலாள வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் பெரிய அதிகாரத்துவங்கள் மீது அழுத்தம் செலுத்தும் ஒருவிதக்குழு என்ற பங்காக அது குறைக்கப்பட்டது.

நான்காம் அகிலத்தின் மூன்றாம் அகல்பேரவை 1951ல் நடைபெற்றபோது, பப்லோ தன்னுடைய புதிய பார்வையின் உட்குறிப்புக்களை விளக்கிக் கூறினார். நான்காம் அகிலத்தின் சுயாதீனம் பற்றிய அனைத்துக் கேள்விகளும் ஒவ்வொரு நாட்டிலும் "பரந்துபட்ட இயக்கங்களுக்குள் உண்மையான ஒருங்கிணைப்பு" என்பதற்கு அடிபணியசெய்ய வேண்டிய தேவை வந்து விட்டது என்று அவர் வாதிட்டார்.

இதன் பொருள் நான்காம் அகிலத்தை கலைத்துவிடுதல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த முன்னோக்குதான் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) என்னும் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனனை நான்காம் அகிலத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுத வழிவகுத்தது. இந்த பகிரங்கக் கடிதம்தான், நான்காம் அகிலம் 1938ல் நிறுவப்பட்டதற்கான முக்கிய கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தி, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நிறுவப்பட வகை செய்தது.

மார்ச் 1954ல் எழுதிய கடிதம் ஒன்றில் கனன் பிளவில் ஏற்பட்ட பிரச்சினைகளை சுருக்கிக் கூறி, லெனின்-ட்ரொட்ஸ்கி புரட்சிகரக் கட்சி பற்றி கூறிய கருத்தாய்வை வலியுறுத்தி, புரட்சிகர போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய அகிலத்தின் பங்கு பற்றியும் தற்போதைய சகாப்தத்தில் இதுதான் மற்ற அனைத்தையும் விட மேலாதிக்கம் கொண்ட கருத்து என்றும் வலியுறுத்தினார். ஒரு அரை இயந்திர கதியில் சோசலிச மாற்றம் எப்படியும் ஏற்பட்டுவிடும் என்று கூறுவது மார்க்சிசத்தை முற்றிலும் கைவிட்டதற்கு ஒப்பாகும் என்றார் அவர்.

"இல்லை. இது ஒரு முழு நனவுடன் கூடிய நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும். மற்றும் வரலாற்று நிகழ்போக்கில் முழு நனவான கூறை பிரதிபலிக்கும் மார்க்சிச கட்சியின் தலைமை இதற்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும். வேறு எந்தக் கட்சியாலும் முடியாது. தொழிலாளர் இயக்கத்தில் வேறு எந்தப் போக்கும் இதற்கு பதிலாக செயல்படக்கூடிய மாற்றீடு ஆக முடியாது. அந்தக் காரணத்திற்காகவே எமது அணுகுமுறை மற்ற கட்சிகளை பொறுத்தவரையில் சமரசத்திற்கு இடமின்றி விரோதப்போக்கைத்தான் கொண்டிருக்கும்" என மேலும் குறிப்பிட்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

1953ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நிறுவப்பட்டது நான்காம் அகிலத்திற்குள் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு நீடித்த போராட்டத்தின் ஆரம்பம் என்பதை குறித்தது. 1963ல் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியமடையும் நடவடிக்கையை எடுத்தது; இதற்குக் காரணம் ஒரு தசாப்தத்திற்கு முன் இயக்கத்தை பிளவிற்கு உட்படுத்திய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன எனப்பட்டது. இந்த மறு ஐக்கியம் கியூபாவில் நடந்த நிகழ்வுகளான காஸ்ட்ரோவின் குட்டி முதலாளித்துவ தேசிய இயக்கம் தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவியுள்ளது என்றும் காஸ்ட்ரோவே ஒரு "நனவற்ற மார்க்ஸிஸ்ட்" ஆகிவிட்டார் என்ற அடிப்படையில் அதுபற்றிய பொது மதிப்பீட்டின் அடிப்படையை தளமாகக் கொண்டிருந்தது. 1953 பிரச்சினைகள் அனைத்தும் வேறுவிதத்தில் மறுபடியும் எழுப்பப்பட்டன. சோசலிசம் கியூபாவில் குட்டி முதலாளித்துவத்தின் கீழ் காஸ்ட்ரோவின் தலைமையில் சாதிக்கப்பட முடியும் என்றால், நான்காம் அகிலத்திற்கு என்ன தேவை என்பது வினாவாயிற்று.

மேலும் மத்தியதர வர்க்க தீவிரப்போக்குடைய குழுக்கள் அனைத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் பெருமித அடையாளமான சே குவாராவால் அடையாளம் காட்டப்படும் கியூபா ஆட்சியின் தன்மை, லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்த Ramon Mercader மெக்சிகோவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு கியூபாவிற்கு பயணித்தபோது உவந்து வரவேற்ற விதத்தில் நன்கு அடையாளம் காணப்பட்டது.

சோசலிச தொழிலாளர் கட்சியின் கலைப்புவாத முன்னோக்கை நிராகரிக்கும் போராட்டம் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகளான ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரால் நடத்தப்பட்டது; இவர்கள் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அவர்களுடைய நிலைப்பாடு, 1964ம் ஆண்டு இலங்கை பப்லோவாத இயக்கப் பிரிவான லங்கா சமஜமாஜ கட்சி (LSSP) திருமதி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டாட்சி அரசாங்கத்தில் நுழைந்த அளவில் சரியென உறுதியாயிற்று.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெளிப்பட்ட அனைத்து வரலாற்று, கோட்பாட்டு பிரச்சினைகளும் 1985-86ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) ஏற்பட்ட பிளவின்போது வெடித்து வந்தன; இது தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) என்னும் பிரிட்டிஷ் பகுதியின் தேசியவாத, சந்தர்ப்பவாத சீரழிவினால் தோற்றுவிக்கப்பட்டது.

1982ல் தொழிலாளர் கழகத்தால் (Workers League) எழுப்பப்பட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) அரசியல் நிலைப்பாடு பற்றிய வேறுபாடுகள், கட்சியின் பெருகிய சந்தர்ப்பவாத திருப்பத்தை பற்றியதும், குறிப்பாக மத்திய கிழக்கில் குட்டி முதலாளித்துவ தேசிய இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பை பற்றியதுமாகும். இந்த விமர்சனங்கள் ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமையினால் நசுக்கப்பட்டன.

ஆனால் 1985ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதம் கட்சிக்குள் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியபோது தொழிலாளர் கழகத்தின் தேசியச் செயலாளர் டேவிட் நோர்த் நான்காம் அகிலத்தின் பெரும்பாலான பிரிவுகளிடம் இருந்து ஆதரவைப் பெற முடிந்ததுடன், தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள்ளேயே ஒரு பிரிவின் ஆதரவையும் பெற முடிந்தது.

இந்தப் பிளவின்போது, ஜெரி ஹீலி டிராட்கிசத்தின் எதிராளிகளான சந்தர்ப்பவாதிகள் அனைவருடைய கண்ணோட்டத்தையும் சுருங்கக் காட்டும் வகையில் நின்றார். "நான்காம் அகிலம் தூய தண்ணீரில் வெள்ளையை விட அதிக வெள்ளை சோசலிசத்தை தொடர்வதாக நான்காம் அகிலத்தை கண்டித்து, எண்ணிக்கையில் மிகச் சிறியது" என்றும் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், கோட்பாட்டை கடைப்பிடிப்பது, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை முழுமையாக கடைப்பிடிப்பது என்பது தனிமைப்படுதலைத்தான் தோற்றுவிக்கும் என்பதாகும். அவருக்கு முன்பு இருந்த பப்லோ போல் இவரும் நான்காம் அகிலம் "உண்மையான பரந்துபட்ட மக்கள் இயக்கத்துடன்" ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுத்த வகையில், ஹீலியின் நோக்குநிலை, நான்காம் அகிலத்தில் இருந்து பிளந்து சென்ற பல போக்குகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை நாடிய வகையில் இருந்தன.

தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிரான போராட்டம் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான, நீடித்த போராட்டத்தில் ஒரு திருப்பு முனையைக் குறித்தது.

போருக்குப் பிந்தையகாலம் முழுவதும் நான்காம் அகிலத்தை தாக்கிய அனைத்து சந்தர்ப்பவாதப் போக்குகள் தமது வலிமையை இறுதிப் பகுப்பாய்வில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்ட மேலாதிக்கத்தில் இருந்து பெற்றன. ஆனால் 1985-86ல் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் உலக அரசியலின் கட்டமைப்பையே நொருக்கும் வழிவகையில் இருந்தன. சந்தர்ப்பவாதிகள் தங்களின் தளமாகக் கொண்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்களே வீழ்ச்சியடையும் தறுவாயில் இருந்தன.

ஒரு பரந்த மாற்றம்

இறுதிப் பகுப்பாய்வில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடி உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த மாறுதல்களான பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையின் விளைவாகும். ஒரு தேசிய முன்னோக்கை அடித்தளமாகக் கொண்ட கட்சிகள் அமைப்புக்கள் அனைத்திலும் சரிவையும், சீர்குலைவையும் கண்டிருக்கிறது.

மேலும் 1985-86 நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு தேசிய சந்தர்ப்பவாத தொழிலாளர் புரட்சிக் கட்சி மீது கொண்ட வெற்றி ஒரு வரலாற்றுத் தன்மை வாய்ந்த அரசியல் மாற்றத்தை முன்அறிவிக்கும் நிகழ்வு ஆகும். பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை, உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைதல், எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஒருங்கிணைதல் என்பவை இன்று நான்காம் அகிலத்தின் முன்னோக்கான சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியை கட்டியமைப்பதற்கு தேவையான புறநிலை சூழ்நிலைமையை உருவாக்கியுள்ளன.

ஜேம்ஸ் பி. கனனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "போதுமான எண்ணிக்கை மற்றும் பொருள் வசதிகள் நம்மிடம் இல்லாவிடினும் உலகின் மிகச் சரியான, சக்தி வாய்ந்த சிந்தனைகளுடன் நாம் உழைக்கிறோம். ஆனால் நீண்ட காலத்தில் சரியான சிந்தனைகள் தாம் எப்பொழுதும் வெற்றி அடைவதுடன், அவற்றிற்கு தேவையான பொருள்வழி வகைகள், சக்திகளுக்கு துணை நிற்கும்." ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கு இப்பொழுது சரி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு மேலெழுந்தவாரியான மட்டத்தில், கடந்த 20 ஆண்டுகளாக சோவியத் ஒன்றியம் சரிந்த பின்னர் நிலைமை கடினமாக இருந்தது. பல மில்லியன்கணக்கான மக்களுக்கு சோசலிசத்திற்கான முன்னோக்கு அதன் செல்தகைமையை (Validity) இழந்துவிட்டது என்ற கருத்தைத்தான் தோற்றுவித்தது. அவர்கள் சோவியத்தின் சிதைவு, சோசலிசத்தின் இறப்பை பிரதிபலிப்பது என்பதற்கு பதிலாக, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அக்டோபர் புரட்சியை பல தசாப்தங்கள் காட்டிக் கொடுத்ததின் விளைவைத்தான் பிரதிபலிக்கிறது என்பதை உணரவில்லை. நான்காம் அகிலத்தின் பகுப்பாய்வான, சோவியத்தின் சரிவு சமூகப் பொருளாதார நிகழ்போக்கின் விளைவே என்பதும் வெகு விரைவில் உலக முதலாளித்துவ முறையின் அஸ்திவாரங்களை நொருக்கும் என்றும் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதும் மிகவும் மாறுபாடாக இருந்தது. உண்மையில் இதற்கு எதிரானதுதான் அதாவது முதலாளித்துவம் ஒரு புதிய வாழ்வைப் பெற்றுள்ளது என்பது உண்மை போல் தோன்றியது. சிலரைப் பொறுத்த வரையில் வரலாறு முடிந்து விட்டது என்றே நினைக்கப்பட்டது.

ஆனால் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவின் பகுப்பாய்வு உலக முதலாளித்துவ ஒழுங்கின் நிலைமுறிவு இப்பொழுது நடந்து கொண்டிருப்பதின் மூலம் சரியென ஆகியுள்ளது; இந்த நிலைமுறிவு உலக சோசலிச முன்னோக்கை மிக உறுதியாக வரலாற்றுச் செயற்பட்டியலில் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இந்த அபிவிருத்திகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு 50 ஆண்டுகாலமாக டிராட்ஸ்கிசத்தை அனைத்துவித திருத்தல்வாதம், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றிற்கு எதிராகக் காக்கும் போராட்டத்தின் மிக முக்கியமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

1903ல் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் ஆகியோருக்கு இடையே நடந்த பிளவு சோசலிச இயக்கத்தில் பலராலும் ரஷ்யாவில் புரட்சிகர இயக்கத்தில் உள்ள முதிர்ச்சியற்ற தன்மையின் விளைவு என்று கருதப்பட்டது; அல்லது "பூசலிட்டுக் கொள்ளும் ரஷ்யர்களுடைய" செயல் எனப்பட்டது. ஆனால் 1917ம் ஆண்டு மென்ஷிவிக்குகள்தான் அக்டோபர் புரட்சியில் போல்ஷிவிக்குகள் தலைமையில் தூக்கிவீசப்பட்ட முதலாளித்துவ அரசாங்கத்திற்கு முக்கிய அரசியல் முண்டு கொடுக்கும் அமைப்பாக இருந்தனர்.

வரலாற்றில் இத்தகைய காலத்தைத்தான் நாம் மீண்டும் அடைந்துள்ளோம். சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான புரட்சிகர இயக்கம் நடத்திய போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை பெறும்; இது மார்க்சிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையே உள்ள மோதல் புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையே உள்ள மோதல் என்பது மில்லியன் கணக்கானவர்களுக்கு நன்கு தெளிவாகும்.

பிரான்சில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகள் பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் --இந்த நாட்டில்தான் வர்க்கப் போராட்டம் எப்பொழுதும் ஒரு முடிவிற்கு வரும் வகையில் போராட்டம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அங்கு Ligue Communiste Revolutionaire (LCR) எனப்படும் பப்பலோவாத கட்சி அடுத்த ஆண்டு ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை (NPA) நிறுவ உள்ளது. கடந்த மார்ச்சில் கொடுத்த பேட்டியொன்றில் LCR இன் தலைவர் ஒலிவியே பெசன்ஸநோ இந்த புதிய அமைப்பு எந்த சந்தர்ப்பவாத அடிப்படையில் கட்டமைக்கப்பட உள்ளது என்பது பற்றி வெளிப்படையாக விவரித்தார்.

"புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) தீவிரவாத இடதுகளின் மரபுகள் பலவற்றின் போக்குகளை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை கொண்டது. இத்தகைய ஒருங்கிணைப்பு, இப்பாரம்பரியங்களின் மரபுரிமை தொடர்பான வெளிப்படையான விவாதத்திற்கான நிபந்தனையாக உள்ளதா அல்லது நடைமுறையில் உறுதியான போராட்டங்களின் இணைப்பு மூலம் பெறும் என்பதை நம்புகிறதா எனக் காணல் வேண்டும். பல சிந்தனைப் போக்கு மற்றும் வரலாற்று "மரபியங்கள்" பற்றிய விவாதம் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கலாம். அவை ஐயத்திற்கு இடமின்றி நீண்டதாகவும் இருக்கும். ஆனால் நாம் அவற்றிலிருந்து ஆரம்பிக்க முடியாது! குறிப்பாக கட்சி அரசியலுக்கு தம்மை அர்ப்பணித்த நீண்ட வரலாற்றை கொண்டிருக்காத நிலையிலும் மற்றும் இந்த மரபுகளுடன் தம்மை குறிப்பாக அடையாளம் கண்டு கொள்ளாத நிலையில் உள்ள ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக கொண்டு வரும் நோக்கத்தை கொண்டிருக்கையில் இதிலிருந்து ஆரம்பிக்க முடியாது."

இப்படி வரலாறு மற்றும் கோட்பாடுகளை நிரகரிப்பதில் இருக்கும் அரசியல் பொருள் பற்றி தவறான நினைப்பிற்கு இடமில்லை. இதுதான் பெசன்ஸநோ பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு, 1936ல் பிரெஞ்சு முதலாளித்துவத்தை மீட்க முக்கிய பங்கு வகித்த, 1944-45 இலும் அவ்வாறே செய்த, பின்னர் 1968 இலும் செய்த அதன் முக்கிய தூண்களான சோசலிஸ்ட் கட்சி, எல்லாவற்றிற்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சியும் வீழ்ச்சியடைகையில் அந்த இடத்தை NPA இட்டு நிரப்புவதற்கு தயாராக உள்ளது என்பதைக் கூறும் அறிவிப்பைக் கொண்டிருக்கிறது. எதிர்வரவிருக்கும் புரட்சிகர நெருக்கடியில் இது முதலாளித்துவ ஒழுங்கமைப்பை காப்பாற்றுவதற்கு ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் கூட்டுச் சேரும்.

முதலாளித்துவம் இந்தத் தகவல் தாம் புரிந்துகொண்டதாக விடையிறுத்துள்ளது. எனவேதான் பெசன்ஸநோ இப்பொழுது செய்தி ஊடகம், பேச்சு நிகழ்வுகள் இவற்றில் பெரிதும் விரும்பப்படுபவராகவும் அரசியல் வர்ணனையாளர்கள் கூட்டத்திலும் பெரிதும் விரும்பப்படுகிறார்.

தகவல் அட்லான்டிக் கடந்தும் கவனிக்கப்பட்டது எனத் தோன்றுகிறது. நியூயோர்க் டைம்ஸ், செப்டம்பர் 13 பதிப்பில் பெசன்ஸநோ பற்றி மிக சாதகமாக கட்டுரை ஒன்றை, நீடித்த பேட்டிக்கு பின்னர் வெளியிட்டுள்ளது. இவரை "கடினமான பிரெஞ்சு இடதின் மிகத் திறமையான தலைவர் என்றும், சோசலிசக் கட்சி மற்றும் ஒருகாலத்தில் சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட்டுகளின் எஞ்சிய அதிருப்தி அடைந்த இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்" என்று விவரித்துள்ளது. எத்தகைய விளக்கம் இந்த கலங்கரை விளக்கத்தால் கொடுக்கப்படுகிறது! கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு இதைச் சுருக்கிக் கூறுகிறது: "இடதில் இருந்து வரும் ஒளி தன்னுடைய தோழர்களுக்கு பிரான்சின் பிரதான நீரோட்டத்திற்கு வழிகாட்டுகிறது."

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலம் நிறுவப்படுவதை வரவேற்கையில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "நாங்கள் மற்ற கட்சிகளை போல் அல்ல... எங்கள் நோக்கம் உழைப்பவர்கள் மற்றும் சுரண்டப்படுபவர்கள் முழு சடரீதியான மற்றும் உளமார்ந்த விடுதலையை சோசலிசப் புரட்சி மூலம் அடைய வேண்டும் என்பதாகும். எங்களைத் தவிர இதை எவரும் தயாரிக்க மாட்டார்கள், வேறு எவரும் வழிகாட்டவும் மாட்டார்கள்."

பழைய கட்சிகள் முற்றிலும் அழுகிவிட்டன என்று அவர் தொடர்ந்து கூறினார். "மனித குலத்தை பாதிக்கும் பெரும் நிகழ்வுகள்" இந்த காலம் கடந்த அமைப்புக்கள் மீது ஒன்றன்மேல் ஒன்றாக கற்களை விட்டுச் செல்லாது. "நான்காம் அகிலம்தான் வருங்காலத்தை நம்பிக்கையுடன் காண்கிறது. இதுதான் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சி ஆகும். இதைவிடப் பெரிய பணி உலகில் இருந்தது இல்லை. நம்மில் ஒவ்வொருவரிடமும் மகத்தான வரலாற்றுப் பொறுப்பு தங்கியுள்ளது."

இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் பின்னணியிலும் இச்சொற்கள் இன்னும் கூடுதலான முக்கியத்துவத்தை பெறுகின்றன.

முற்றும்