World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Police accused of summarily executing "terrorist suspects"

இந்தியா: "பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்களை" விசாரணையின்றி கொல்வதாக போலீஸ் மீது குற்றச்சாட்டு

By Ajay Prakash and Kranti Kumara
21 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இரு முஸ்லிம் இளைஞர்கள் இறப்பிற்குக் காரணமாக இருந்த டெல்லி போலீசாரின் செப்டம்பர் 19ம் தேதி தாக்குதல் பற்றி நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று குடி உரிமைகள் குழுக்கள் மற்றும் சில எதிர்க் கட்சிகளிடமிருந்து வந்த வேண்டுகோள்களை நிராகரித்தது.

ஒரு 17 வயது உயர்நிலைப்பள்ளி மாணவன் மொகம்மத் சஜித் மற்றும் 24 வயது பல்கலைக்கழக மாணவர் மொகம்மத் அடிப் அமின் ஆகிய இருவரும் "பயங்கரவாதிகள்" என்றும் செப்டம்பர் 13ம் தேதி புது டெல்லியின் 24 பேரைக் கொன்ற ஒரே நேரத்தில் வெடித்த குண்டுத் தாக்குதலை நடத்தியதில் பங்கு கொண்டவர்கள் என்றும் போலீஸ் கூறியுள்ளது. ஆனால் போலீஸின் கூற்றுக்கள் இறந்தவர்களின் நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆகியோரால் வன்மையாக மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 19ம் தேதி என்ன நடைபெற்றது என்னும் போலீஸ் விளக்கம் பல நேரில் பார்த்த சாட்சியங்களால் மறுக்கப்பட்டுள்ளது; அவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் மடிவதற்குக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சண்டை என்பது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கற்பனை என்றும் போலீஸார் அவர்களை எவ்வித விசாரணையும் இன்றி கொன்றுவிட்டனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் சில சம்பவங்களில் சாதாரணக் குடிமக்கள் கூட "பயங்கரவாத நேருக்குநேர் மோதல்" என்று அரங்கேற்றப்பட்ட போலி நிகழ்வுகளில் கொலை செய்துள்ள நீண்ட வரலாற்றை இந்திய பாதுகாப்புப் படையினர் கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடந்து பல நாட்கள் கழித்து ஜமியா நகருக்குச் சென்றிருந்த குடிமக்கள் உண்மை கண்டறியும் குழு, " 'நேருக்குநேர் மோதல்' எனப்படும் போலீசார் கூற்றிற்கு உடன்படும் ஒரு நபரைக் கூட இப்பகுதியில் நாங்கள் காணமுடியவில்லை" என்று தெரிவிக்கிறது. "மக்களிடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படும் நேரம், மற்றும் அதன் தன்மை ஒருதலைப்பட்சமானது என்ற ஒருமித்த கருத்து உள்ளது...இரு புறத்தில் இருந்தும் சுடப்பட்டன என்று எவரும் கூறவில்லை. ஒரே ஒரு புறத்தில் இருந்துதான் துப்பாக்கி வெடிப்பு சத்தம் கேட்டது என்று கூறியுள்ளனர்."

சமாஜ்வாடிக் கட்சி (SP), திருணமூல் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மத சார்பற்றது) போன்றவை "இந்த மோதல்" பற்றி நீதி விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளன. கடந்த வெள்ளியன்று டெல்லியின் ஜமியா நகரில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட திரிணமூல் காங்கிரசின் தலைவி மமதா பனார்ஜி வெளிப்படையாக ஒரு "போலி நேருக்குநேர் மோதலை" அரங்கேற்றியதாக போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பீதி-வெறி நிறைந்த சூழ்நிலை

அரசாங்கம், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகம் ஆகியன எழுப்பி விட்ட வெறித்தன்மை நிறைந்த சூழலில் செப்டம்பர் 19ம் தேதி போலீஸ் நடவடிக்கை ஏற்பட்டது.

ஒரு முழுமையாக வெளிப்பட்டிராத இந்திய முஜாஹிதீன் செப்டம்பர் 13 வெடிகுண்டு நிகழ்ச்சிக்குப் பொறுப்பு ஏற்ற நிலையில், அரசியல் நடைமுறயும் செய்தி ஊடகமும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை தொடக்கின. பல தலையங்கம் எழுதுபவர்கள் இந்தியாவின் இருப்பே பயங்கரவாதத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்றும் இந்தப் பயங்கரவாத ஆபத்தை எதிர்கொள்ளுவதற்கு மரபார்ந்த குடிமை உரிமைகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் அழுத்தத்தில் தள்ளப்பட்ட போலீசார் ஒரு பரந்த பொறுப்பற்ற வலையை முஸ்லிம் இளைஞர்களை இலக்கு கொண்டு விரித்தனர். ஒரு சமீபத்திய நிகழ்வில் தன்னுடைய உளப்போக்கு எப்படி இருந்தது என்பதைக் காட்டும் வகையில் கோல்கட்டா டெலிக்ராப் "செப்டம்பர் 13 தாக்குதலில் நடந்த தவறுகளுக்கு டெல்லி போலீசார் விடையிறுக்கும் வகையில் தாங்கள் திரண்டெழுந்து பதிலடி கொடுக்கும் விதத்தில் உறுதிப்படுத்தினர்." என்று எழுதியது.

AK 47 தாக்கும் ரைபிள்களை ஏந்திய சிறப்புப் படைகளின் தலைமையில் சென்ற போலீஸ் செப்டம்பர் 19 அன்று ஒரு முஸ்லிம்கள் நிறைந்த டெல்லி ஜமியா நகர் பகுதியில் பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் நோக்கம் SIMI என்னும் தடை செய்யப்பட்டுள்ள மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் தொடர்ச்சியான பல இந்திய முஜாஹிதின் தாக்குதல்களுக்கு காரணம் எனப்படும் அப்துல் சுபான் குரேஷி என்பவரைக் கைப்பற்றுதல் என்பதாகக் கூறப்பட்டது.

முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு எதிராக இழிந்த, பரபரப்பான பிரச்சாரங்களில் ஈடுபடும் பெருநிறுவனச் செய்தி ஊடகம் ஜமியா நகரில் போலீஸ் குரேஷியை பிடிப்பதற்கு நடத்திய, தோல்வியுற்ற தேடுதல், சஜித் மற்றும் அமினின் மரணத்தில் முடிந்தது பற்றி மூச்சுவிடாத ஆர்வத்துடன் எழுதியது. இதே விதத்தில்தான் டைம்ஸ் ஆப் இந்தியாவும் எழுதியது. பெரும் முன்பக்க தலையங்கம் ஒன்று "தலைநகரில் நடந்த துப்பாக்கி வேட்டையில் இரு டெல்லி குண்டுவீச்சாளர்கள் கொல்லப்பட்டனர்" என்று கூறியது.

டெல்லி போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவின் இணை ஆணையாளரான கமைல் சிங், "இந்திய முஜாஹிதின் தலைவரை அகற்றிவிட எங்களால் முடிந்தது" என்று பீற்றிக் கொண்டார். போலிசார் வேலை ஒன்றும் சந்தகத்திற்குரிய குற்றவாளிகளை "அகற்றுதல்" அல்ல சட்டத்திற்குட்பட்ட முறையில் ஒரு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த அவர்களைக் கைது செய்தல் மட்டுமே என்பதை புறக்கணித்த விதத்தில் செய்தி ஊடகமும் இவருடைய அறிவிப்பை பறைகொட்டி வெளியிட்டன.

நவம்பர் 23, 2007 ல் உத்தரப் பிரதேசம், ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மே 13 தேதிகளில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு பின்னணியில் "மூளையாக செயல்பட்டவர்கள்" இறந்துபட்ட இளைஞர்கள் என்று சிங் குறிப்பிட்டார். இவ்விதத்தில் ஒரே தாக்குதலில் தொடர்ச்சியான சிக்கல் வாய்ந்த வழக்குகளுக்கு முடிவு கண்டுவிட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இதன் பின் இத்தகைய கூற்றுக்களில் இருந்து அவர்கள் பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும்கூட, போலீசும் அரசாங்கமும் சோதனை நடத்தியது சரியே எனக் கூறுவதுடன் சஜித் அமின் இருவரையும் பயங்கவராதிகள் என்று முத்திரையிட்டுள்ளதையும் காக்கின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா பின்னர் கொடுத்த தகவல்படி செப்டம்பர் 19 தாக்குதல் ஜமியா நகரில் "SIMI இயக்கத்தின் மூத்த செயலர் ஒருவருடைய தோற்றத்தில் உள்ளார் என்பதை அறிந்தவுடன் நடந்தது எனத் தெரிகிறது. இவ்விதத்தில் ஆள்மாறாட்டம் என்ற வகையில் போலீசார் தாக்குதல் நடந்திருக்கக்கூடும்; ஏனெனில் இறந்த இருவரில் ஒருவர் குரேஷி என்று போலீசார் நம்பியது.

இன்றுவரை இரு மாணவர்களுக்கும் பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்கிறது என்ற கூற்றுக்கு எந்தச் சான்றையும் போலீசார் கொடுக்கவில்லை. அப்படி உறவுகள் இருந்திருந்தாலும் விசாரணையின்றி கொலை செய்தல் என்பது அரசாங்கம் செய்யும் குற்றம் என்றுதான் பொருள்படும்.

போலீஸ் கூற்றும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையும்

"பயங்கரவாதிகள் இரகசிய இருப்பிடத்தை" சஜித் மற்றும் அமின் வசித்துவந்த நான்கு மாடிகள் உடைய அடுக்கு இல்லங்கள் கண்டுபிபிடிக்கப்பட்டவுடன், விற்பனையாளராக மாறு வேஷம் பூண்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை வீட்டுக் கதவைத்தட்ட போலீஸ் அனுப்பிவைத்தது. இதன்பின் அந்த இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் நுழைந்து சஜித் மற்றும் அமினுடன் வாதிட்டுக் கொண்டிருக்கையில் போலீசார் அடுக்குமாடியைத் தாக்கினர், அப்போதுதான் அது துப்பாக்கிச் சூட்டின் கீழ்வந்தது.

அப்பொழுது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இரு முஸ்லிம் இளைஞர்களும் கொல்லப்பட்டனர் என்றும், முகம்மத் சயீட் என்னும் மூன்றாம் இளைஞர் கைதுசெய்யப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். "நேருக்குநேர்மோதல் வல்லுனரான" இன்ஸ்பெக்டர் சாந்த் ஷர்மாவும் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இடையில் இரு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

குடிமக்களுடைய உண்மை கண்டறியும் குழு -- போலீஸ் துஷ்பிரயோகம் பற்றியும் நாட்டின் முஸ்லிம் சிறுபான்மைக்கு எதிராக இந்திய நிறுவன அமைப்பினால் விரோதம் தூண்டப்படும் சூழ்நிலை பற்றியும் கவலைகொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள், குடியுரிமைக்கு போராடுபவர்கள் மற்றும் புத்திஜீவிகள் கொண்ட ஒரு தற்காலிக குழு -- போலீஸ் தெரிவித்துள்ள தகவலை பல்வேறு புள்ளிகளில் சவால் செயுதுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, பகுதிவாழ் மக்கள் துப்பாக்கிச் சண்டை நடந்ததை மறுத்துள்ளனர். ஒருபுறத்தில் இருந்துதான், அதாவது போலீஸ் தரப்பில் இருந்துதான் ஆயுதங்கள் வெளிப்பட்டன.

நான்காம் மாடியில் இருந்து மூவரை கீழ்மட்டத்திற்கு போலீசார் இழுத்துக் கொண்டு வந்ததை பார்த்ததாக சிலர் கூறுகின்றனர்.

இறந்த சஜித் இன் புகைப்படங்கள் "மேலிருந்து அவர் தலையை நோக்கி 7-8 குண்டுகள் துளைத்துள்ளதை காட்டுகின்றன. மிக அருகில் இருந்து இத்தோட்டாக்கள் வந்திருக்கவேண்டும்; மோதலில் இவ்வாறு நேர வாய்ப்பு இல்லை; அதில் சற்று தொலைவில் இருந்து குண்டுகள் வந்து காயத்தை ஏற்படுத்தும்." என்று உண்மை கண்டறியும் குழு குறிப்பிட்டுள்ளது.

மற்றும் இரு பயங்கரவாதிகள் தப்பி விட்டனர் என்று போலீசார் கூறுவது ஏற்பதற்கில்லை என்றும் அறிக்கை கூறுகிறது; "L-18 அடுக்கு வீட்டை சுற்றிப் பார்வையிட்ட பின்னர் (இங்குதான் சஹித் மற்றும் அமின் வசித்து வந்தனர்), தப்பியோடினர் என்ற கட்டுக் கதையை எவரும் ஏற்கமாட்டார்கள்; ஏனெனில் ஒரே ஒருவழிதான் உள்ளது; அதை போலீசார் ஆக்கிரமித்திருந்தனர். நான்காம் மாடியில் இருந்து எவரும் குதித்து தப்பி ஓடியிருக்கவும் முடியாது; ஏனெனில் அவ்வாறு குதித்தால் மரணம் ஏற்படும் அல்லது பெரும் காயங்கள் ஏற்படும்."

இன்ஸ்பெக்டர் எம்.சி. ஷர்மாவின் மரணம் பற்றிய போலீசாரின் விளக்கத்தின் மீதும் அறிக்கை சந்தேகம் கொண்டுள்ளது. ஒரு புகழ்பெற்ற "நேருக்குநேர் மோதல் வல்லுனர்" பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையில் தோட்டாக்கள் துளைக்காத பாதுகாப்பு கவசத்தை அணியாமல் ஏன் சென்றார் என்பது வினாவாகும்.

ஷர்மாவின் மரணம் பற்றிய பிரேத பரிசோதனை அறிக்கையும் மேலும் சில வினாக்களைத்தான் எழுப்பியுள்ளது. தோட்டாக்கள் காயத்தால் இறந்ததாகக் கூறப்படும் அவருடைய உடலில் பிரேத பரிசோதனையில் தோட்டாக்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை; உள் இரத்தப் போக்கினால் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைப் பகுதியில் நடத்தப்பட்ட பரந்த போலீஸ் செயற்பாடுகளின் விளைவாக ஜமியா நகர் பகுதி முழுவதும் அச்சம் நிறைந்த சூழ்நிலை உள்ளது பற்றியும் உண்மை கண்டறியும் குழு குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 19 தாக்குதலுக்கு முன்பும் பின்னரும் முஸ்லிம் இளைஞர்களை கைதுசெய்ய போடப்பட்ட வலை பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அச்ச உணர்வு ஜமியா நகருடன் நின்றுவிடவில்லை. அரசாங்கம் நியமித்த சச்சார் குழு அறிக்கை இந்திய முஸ்லிம் சிறுபான்மை குறித்தது, போலீஸ் தொல்லையால் எப்படி பாதிப்பிற்கு உட்பட்டுள்ளோம் என்று முஸ்லிம்கள் உணர்வதை கூறியுள்ளது.

காங்கிரசும் பிஜேபியும் போலிசை பாதுகாக்கிறது

ஜமியா நகர் மோதல் பற்றிய நீதி விசாரணைக்கான கோரிக்கையை பிரதம மந்திரி மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்; அவருடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் இத்தகைய கோரிக்கை "வரம்பு மீறியது" என்று உதறித் தள்ளினார்.

இந்திய முஸ்லீம் சமூகத்தின் சீற்றத்தை ஒட்டி, சில காங்கிரஸ் கட்சி அலுவலர்கள் ஜமியா நகர் மோதல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர்; ஆனால் திங்கன்று கட்சியின் முக்கிய அதிகாரி ஒருவர் போலீஸ் நடவடிக்கை பற்றி வெளி விசாரணை எதையும் காங்கிரஸ் கோரவில்லை என வலியுறுத்தினார். "தங்கள் கடமையை மிகச் சிறப்பாக போலீசார் செய்துள்ளனர். மக்கள் உள்ளங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடையிறுப்பர்." என்று ஜயந்தி நடராஜன் கூறினார்.

எதிர்பார்த்ததை போலவே இந்து மேலாதிக்கவாத BJP யும் போலீஸுக்கு ஆதரவாக நின்றது. குஜராத்தில் பிஜேபி முதல் மந்திரியாக இருக்கும் நரேந்திர மோடி, முன்பு ஒரு மோதலில் போலீசாரால் தேடப்பட்ட முஸ்லிம் மற்றும் அவருடைய மனைவி, கொல்லப்பட்டதை நியாயப்படுத்தித்தான் பேசியிருந்தார். (See "Gujarat elections: BJP chief minister reverts to Muslim-baiting")

BJP செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் ஜமியா நகர் நேருக்குநேர் மோதல் பற்றி நீதி விசாரணை வேண்டும் எனக் கூறும் எதிர்க்கட்சிகள் மீது அவை "வாக்கு வங்கி" அரசியலுக்காக இவ்வாறு செய்வதாகக் கூறினார்; அதாவது முஸ்லீம் வாக்குககளின் ஆதரவிற்காக இப்படிப் பேசுவதாகவும் இது "நம் பாதுகாப்புப் படைகளின் உளத் திண்மைக்கு ஈடு செய்யமுடியாத சேதத்தை ஏற்படுத்திவிடும்" என்றும் கூறியுள்ளார்.

BJP, காங்கிரஸும் அதன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் பயங்கரவாதத்தின் மீது "மிருதுவாக" செல்லுவதாக வரவிருக்கும் தேசியத் தேர்தல்களில் முக்கிய பிரச்சார கருத்தாக முன்வைக்க உள்ளது. POTA எனப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மறுபடியும் கொண்டுவரப்பட வேண்டாம் என்று அது விரும்புகிறது; அது 2002ல் BJP தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இருக்கும்போது இயற்றப்பட்டிருந்தது. போட்டாவின் கீழ் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாகுபாடு இன்றி கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பல ஆண்டுகளும் குற்றம் சுமத்தப்படாமல் சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தான் விரைவில் ஒரு புதிய பயங்கரவாத மசோதாவை இயற்ற இருப்பதாக அடையாளம் காட்டியுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி, காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லியின் தலைமையின் கீழான நிர்வாக ஆட்சி சீர்திருத்தக் குழு (ARC) என அழைக்கப்படும் அமைப்பு, பயங்கரவாதத்துடன் போராடுவதற்காக ஒரு புதிய மத்திய முகவாண்மையை நிறுவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததது. இதில் அரசாங்கத்திற்கு தனிநபர்களை ஓராண்டு வரை "தடுப்பு காவலில்" வைக்கும் அதிகாரம், மற்றும் நீதிமன்றங்களில் "ஒப்புதல் வாக்குமூலம்" ஏற்பதற்கான விதிமுறைகளை தளர்த்துதல் ஆகியவை உள்ளன; பிந்தையது பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்களை விசாரிக்க "வலியுறுத்தப்பட்டு" பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்கும் வகையில் இருக்கும்.

இந்தியாவின் புதிய பயங்கரவாத சட்டத்தை தயாரிக்கையில் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் பரந்த அளவில் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

"ஒரு வலுவான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவை" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் காந்தி-நேரு அரசியல் வம்சாவளியின் வாரிசுமான ராகுல் காந்தி கூறினார்; "அது தோற்கும் சட்டமாக இல்லாமல், சக்தி வாய்ந்த சட்டமாக" POTA வைப் போல் இருக்க வேண்டும் " என்றார்.

பெருநிறுவன செய்தி ஊடகம் அடக்குமுறை நடவடிக்கைகள் தேவை என்று கூச்சலிடுகின்றன; இதுதான் சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா வின் தலையங்கம் கூறும் கருத்தில் உதாரணமாக உள்ளது. "நெருக்கடி நேரத்தில், நாம் எப்பொழுதும் இருக்கும் என நினைக்கும் சில உரிமைகள், எந்த நெறியையும் விதிகளையும் மதிக்காமல் செயல்படும் பயங்கரவாதிகளை தடுப்பதற்காக தடைக்கு உட்பட வேண்டியுள்ளன."

இந்திய உயரடுக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதம் முற்றிலும் பிற்போக்குத்தனமானதாகும் --இது அரச அதிகாரங்களை கூடுதலாக கட்டமைக்க போலிக் காரணமாக பயன்படுவதுடன் பாதுகாப்பு பிரிவுகளின் வன்முறையை நியாயப்படுத்தவும் உதவுகிறது. இது முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும்.

இந்திய முதலாளித்துவத்தின் இரண்டாம் பெரிய கட்சியான BJP பலமுறையும் முஸ்லிம்-எதிர்ப்பு வன்முறையைத் தூண்டியுள்ளது; மிக இழிவான முறையில் 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியும், குஜராத்தில் 2002 பெப்ருவரி மார்ச் மாதமும் நடத்தியுள்ளது. ஒரு மதசார்பற்ற இந்தியாவிற்கு தான்தான் ஆதார அடித்தளம் என்று பறைசாற்றிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியிடமும், நீண்ட நாட்கள் இந்து வலதிற்கு சரணடைந்து ஒத்துழைத்த இத்தகைய வரலாறு உள்ளது. காங்கிரஸ் தலைமையில் இருக்கும் அரசாங்கங்களில், பாதுகாப்புப் பிரிவினர் இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் வெறித்தனமாக நடந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்திய உயரடுக்கைப் பொறுத்தவரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுத்ல் என்பதன் பொருள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை கட்டவிழ்த்தல் ஆகும்; இந்த மனமாற்றமானது ஏற்கனவே இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் வகுப்புவாத அரசியலுக்கு ஆதரவளிக்க இட்டுச்சென்றுள்ளது அல்லது அப்பிரிவை பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் "பழி வாங்குவதை" நாடுதற்கு மேலும் இட்டுச்சென்றுள்ளது.