World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

World financial crisis bankrupts Eastern Europe: The toll of capitalist restoration

கிழக்கு ஐரோப்பாவை உலக நிதிய நெருக்கடி திவால் ஆக்குகிறது: முதலாளித்துவ மீட்பின் பலி

By Alex Lantier
10 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

கிழக்கு ஐரோப்பா முழுவதும் நடக்கும் பரந்த அரசு பிணை எடுப்புக்கள் முதலாளித்துவ மீட்புத் திட்டம் பற்றிய ஒரு வரலாற்று தீர்ப்பை கொடுக்கின்றன. பொருளாதார வாழ்வை தடைசெய்யும் முக்கிய சக்தி அரசு குறுக்கீடு என்று தடையற்ற சந்தையின் கணிப்பாளர்கள் கூறிவந்ததற்கு முற்றிலும் மாறான வகையில், பிராந்திய நிதிய தன்னல சிறுகுழுப் பிரபுக்கள் தங்கள் மகத்தான செல்வக் குவிப்பைக் காப்பாற்ற அரசை நாடி நிற்கின்றனர்.

1989-91 ஆண்டுகளில் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள் சரிந்தபின், முதலாளித்துவ ஆதரவு சீர்திருத்தவாதிகளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் இருந்த அவர்களுடைய நண்பர்களும் ஜனநாயகத்தின் புதிய உதயம் வந்து விட்டது என்று பிரகடனம் செய்து, சந்தைப் பொருளாதாரம் செழிப்பு, சுதந்திரம் ஆகியவற்றிற்கான அடிப்படை தளத்தை நிறுவும் என்று உறுதிமொழி கொடுத்தனர். ஆனால் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி தோற்றுவித்து அதன் பின் அதன் விரிவாக்கம் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படுத்திய தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறை தகர்க்கப்பட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஆழ்ந்த வறுமையில், திக்கற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். தொழில்கள் மூடப்பட்டு பல மில்லியன்களை கொண்டிருந்த புதிய உயரடுக்கு வணிகர்களின் நலன்களுக்கு விற்கப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் ஸ்ராலினிச எந்திரத்தின் அணிகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

இந்த நிலைமையை உயர்த்திக் காட்டுதல் இதற்கு முன்பு இருந்த அடக்குமுறை நிறைந்த, பொருளாதார தன்னுரிமை பெற்ற ஸ்ராலினிச ஆட்சிகள் பற்றிய ஏக்க நினைவுகளை வெளிப்படுத்துகிறது என்ற உட்குறிப்பு பொருளை தராது. சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது மற்றும் "ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற தத்துவத்தை பிரகடனம் செய்தது ஆகியவை சர்வதேச அளவிலும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயும் எதிர்ப்புரட்சி கொள்கைகளுக்கு அரங்கு அமைத்ததுடன், சோவியத்திற்குள் அதனை தனிமைப்படுத்தியதுடன் தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறை மற்றும் பொருளாதார திட்டமிடலை கீழறுத்தன. அதிகாரத்துவம் அதன் சலுகைகள் மற்றும் செல்வத்தை பாதுகாப்பதற்காக தேசிய பொருளாதாரத்தை நிர்மூலமாக்குவதற்கு மேலை ஏகாதிபத்தியத்துடன் இணைந்த வகையில் அதிகாரத்துவத்தால் எடுக்கப்பட்ட முடிவில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

முதலாளித்துவம் மீட்கப்பட்டால் எப்படி ரஷ்யா பேரழிவிற்கு உட்படும் என்பது ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கெதிரான மார்க்சிச எதிர்ப்பாளர்களால் பல தசாப்தங்கள் நிகழ்வு நடப்பதற்கு முன்பே கணித்துக் கூறப்பட்டது. அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராகவும் பின்னர் ஸ்ராலினால் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டபின், நான்காம் அகிலத்தை நிறுவியவருமான லியோன் ட்ரொட்ஸ்கி 1929ம் ஆண்டு ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்பு என்பது "ஒரு சார்பு உடைய, அரைகுறை முதலாளித்துவமாக எந்த வருங்கால சிறப்பும் இல்லாமல் இருக்கும். ரஷ்யா 2 என்பது ரஷ்யா 1க்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட நிலை ஒன்றில் இருக்கும். அனைத்து முரண்பாடுகளும் இடர்பாடுகளும் இருந்த போதிலும் தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறை மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் ஏகபோக உரிமை இவற்றை கொண்டிருந்த சோவியத் முறை நாட்டின் பொருளாதார, பண்பாட்டு சுதந்திரத்திற்கு பாதுகாப்பான முறை ஆகும்" என்று எழுதினார்.

இத்தகைய தெளிவான தீர்ப்புரை மிக துன்பியலான முறையில் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத்திற்கு பிந்தைய கால நிகழ்வுகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் தயாரித்த அறிக்கை ஒன்றின்படி, 1990 க்கும் 1997க்கும் இடையே மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 12 சதவிகிதம் வீழ்ச்சியுற்றது. முந்தைய சோவியத் ஒன்றியத்தில் GDP 1990 அளவில் 55 சதவிகிதத்தைத்தான் எட்டியது. தடையற்ற சந்தை என்னும் "அதிர்ச்சி வைத்தியம்" தொழில்துறையில் அதிக பிரிவுகளை மூடி, மில்லியன் கணக்கானவர்களை வேலைகளில் இருந்து அகற்றியபின், குடிப்பழக்க அடிமை, நோய்களில் தள்ளியதுடன், தற்கொலை வீதங்கள் வெடித்தன.

அக்டோபர் 25, 2008ல் நியூ யோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரை குறிப்பிட்டவாறு, "2006ம் ஆண்டு ரஷ்யாவில் பொதுவாக ஆயுட்கால எதிர்பார்ப்பு 67 ஆண்டுகளுக்கு சற்று குறைவு என்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1950 களில் அது இருந்த நிலையை விட உண்மையில் மிகக் குறைவு ஆகும். ஒரு கல்வியறிவு படைத்த, நகர்ப்புற சமூகம் சமாதான காலத்தில் இருந்த நிலைக்கு இத்தகைய மகத்தான பொதுச் சுகாதாரப் பிரிவு தோல்வி என்பது அசாதாரண வரலாற்றுப் பொருத்தமின்மை ஆகும். ரஷ்யாவில் சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பு என்பது இப்பொழுது இந்தியாவிற்கு ஒப்பாகத்தான் உள்ளது; ரஷ்ய ஆடவர்களுக்கு இன்று 60 ஆண்டுகள்தான் என்று இருக்கிறது; இது பாக்கிஸ்தானில் ஒத்த வயதுள்ளவர்களின் சராசரியைவிடக் குறைவு ஆகும்."

சோவியத் சகாப்தத்திற்கு பின்னர் ரஷ்யா ஒவ்வொரு இரு பிறப்புக்களுக்கும் மூன்று இறப்புக்களை காண்கிறது. 1965ம் ஆண்டு தரத்தில் இருந்து இறப்பு விகிதங்கள் பெருகிவிட்டன; வேலைபார்க்கும் வயதில் இருக்கும் ஆண்களுக்கு 50 சதவிகிதமும் அத்தகைய பெண்களுக்கு 30 சதவிகிதமும் அதிகரித்துவிட்டன.

ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு, 1990 களின் பேரழிவுகளுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார மீட்பு ஓரளவு இருந்தாலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மீட்பு உண்மையில் நிதிய புதைசேற்றைத்தான் தளமாகக் கொண்டுள்ளது --எண்ணெய், எரிவாயு, உலோகப் பொருட்கள் விலை ஏற்றுமதியின் உயர்வினாலும், மேலை வங்கிகளில் இருந்து பெற்ற குறைந்த வட்டிக் கடன் $1.6 டிரில்லியனாலும் இது நடந்தது; மேற்கு ஐரோப்பிய ஏற்றுமதிச் சந்தைகளுடைய தேவைக்கு ஏற்ப குறைவூதிய தொழிற்சாலைகள் பல முறையும் அமைக்கப்பட்டன.

கடன்கள் மற்றும் பொருட்கள் குமிழி மேலை நாடுகளில் வெடித்ததும் கிழக்கு ஐரோப்பாவை பேரழிவிற்கு உட்படுத்தின. மேலை வங்கிகள் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டிருக்கும் நிலையில் கிழக்கு ஐரோப்பிய தன்னலக் குழுக்கள் தங்கள் மக்களை இன்னும் சூறையாடும் விதத்தில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.

உதாரணமாக ரஷ்யாவின் தன்னலச் சிறுகுழுக்கள் நாட்டின் அரச வங்கியின் உத்தரவின்பேரில் மேலை வங்கிகளுக்கு $650 பில்லியன் நாணய இருப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன; இந்த நிதி பல ஆண்டுகள் எண்ணெய் ஏற்றுமதி மூலம் குவிக்கப்பட்டது ஆகும். அறிவிக்கப்பட்டுள்ள $200 பில்லியன் பிணை எடுப்பில், இன்றுவரை கொடுக்கப்பட்டுள்ள $10 பில்லியன் பணத்தில் $6.5 பில்லியன் இரண்டு பில்லியனர்களுக்கு சென்றுள்ளது. உலோகச் சீமான் ஒலெக் டெரிபக்சா $4.5 பில்லியனை பிரான்சின் BNP Paribas தலைமையில் இருக்கும் வங்கிக் கூட்டிற்கு Norilsk Nickel ஐ கட்டாயமாக விற்காமல் இருப்பதற்காக வாங்கியுள்ளார்; மிகைல் ப்ரீட்மன் VimpelCom என்னும் இவருடைய ஆல்பாக் குழுவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தை Deutsche Bank எடுத்துக் கொள்ளுவதைத் தடுப்பதற்காக $2 பில்லியனை வாங்கியுள்ளார்.

பொது நிதியங்களைச் சூறையாடுவதும் போதாது என்று இருக்கும் இடங்களில் தன்னல சிறுகுழுக்கள் தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் நேரடியாகத் தாக்குதலை நடத்தும். உக்ரைன் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோ மற்றும் பிரதம மந்திரி (இயற்கை எரிவாயுப் பிரபுவும்கூட) யூலியா டிமோஷெங்கோ ஆகியோரின் போட்டி முகாம்கள் ஒன்று சேர்ந்து சர்வதேச நிதிய அமைப்பு IMF 16.5 பில்லியன் டாலரை பிணை எடுப்பிற்கு ஈடு கொடுப்பதற்காக அது கோரிய சமூக வெட்டுக்களை ஒருமனதாக இயற்றின. குறைந்தபட்ச ஊதியத்தையும் உக்ரைன் உறைய வைப்பதுடன் சமூகநல செலவினங்களை குறைக்கும்; நாட்டின் பொருளாதாரம் பின்னடைவில் நுழையும் நிலையில் இது செய்யப்படுகிறது; ஏனெனில் உலகப் பொருளாதார சரிவினால் உக்ரைன் ஏற்றுமதியில் முக்கியமாக இருக்கும் எஃகுவிற்கு தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

IMF ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கியில் இருந்து ஹங்கேரி $25 பில்லியனை பிணை எடுப்பிற்கு பெற்றுள்ளது. கடனின் மகத்தான தன்மை "மத்திய, கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளில் பரிவு பீதியைப் பரப்புவதற்கு முன்பு சந்தை நெருக்கடியை அகற்றுவதற்காக" இது செய்யப்பட்டுள்ளது என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. போலந்தும் செக் குடியரசும் "தொற்றுதலுக்கு வாய்ப்பு உடையவை" என்று செய்தித்தாள் இனம் பிரித்துக் காட்டுகிறது. பெலாரசும் IMF இடம் இருந்து பிணை எடுப்பிற்கு பேச்சு வார்த்தைகளை நடத்துகிறது.

கடன் நெருக்கடி இப்பகுதியில் பொருளாதார அழிவைக் கட்டவிழ்த்துள்ளது மட்டும் இல்லாமல் பிரதான அரசுகளுக்கு இடையே அரசியல், இராணுவ செல்வாக்கு பற்றிய ஆபத்தான போட்டி புதுப்பிக்கப்படவும் வகை செய்துள்ளது. தெற்கு ஒசேஷியாவில் இருந்து பிரிய முற்படும் ஜோர்ஜிய மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய சமாதானக் காப்பாளர்களை ஜோர்ஜியா தாக்குவதற்கு ஊக்கம் கொடுத்த சில வாரங்களுக்குள் இந்த நெருக்கடி வந்துள்ளது; அத்தாக்குதல் ஒரு உலகளாவிய பூசலை அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே ஏற்படுத்தியிருக்கும். அதன் ஜோர்ஜிய நெருக்கடியை பயன்படுத்தி வாஷிங்டன் போலந்திலும் செக் குடியரசிலும் இராணுவத் தள உரிமைகளை பெற பேச்சு வார்த்தைகளை நடத்தியது.

எண்ணெயை அநேகமாக முற்றிலும் நம்பியிருக்கும் பொருளாதாரத்தை கொண்டுள்ள ரஷ்யா, இந்த ஆண்டு பங்குச் சந்தை சரிவு 70 சதவிகிதத்தை கண்ட ரஷ்யா உலக நிதிய நெருக்கடி, மந்த நிலை ஆகியவற்றினால் ஒரு பலவீனமான பங்கைத்தான் ஏற்க வேண்டும். லண்டனை தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: "அதன் உண்மையான கனத்திற்கு ஏற்ப ரஷ்யா அதன் புவி அரசியல் அபிலாசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்; அதாவது வளர்ந்து வரும் பொருளாதாரம், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்தை மட்டும் கொண்ட தன்மை, அமெரிக்காவின் வாழ்க்கைத் தரங்களில் கால் பகுதி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்."

ஒரு கிழக்கு ஐரோப்பிய நெருக்கடி அமெரிக்காவிற்கும் மேலை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு மோதலையும் உருவாக்கக் கூடும்; அங்கு பல நாடுகள் ஜோர்ஜியாவை நேட்டோவினுள் சேர்க்க விரும்பும் அமெரிக்க முயற்சிகளை எதிர்க்கின்றன. இன்று இந்த நெருக்கடி இப்பகுதியை, மேற்கு ஐரோப்பிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியை, தாக்கியுள்ளது: கிழக்கு ஐரோப்பாவிற்கு வரும் வெளிநாட்டுக் கடன்களான 1.6 டிரில்லியன் டாலரில் 1.5 டிரில்லியன் டாலர் மேலை ஐரோப்பிய வங்களிடம் இருந்து வருகிறது; அதே நேரத்தில் அமெரிக்கா ஐயத்திற்கு இடமின்றி IMF ன் பிணை எடுப்பைப் பயன்படுத்தி இப்பகுதியில் அதன் ஐரோப்பிய போட்டி நாடுகளின் இழப்பில் தன்னுடைய நலன்களை விரிவாக்கிக் கொள்ளும்.

மேலும் மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் ஆளும் உயரடுக்குகளுக்கு தெற்கு ஆசிய நிதிய நெருக்கடி மற்றும் 1990 களின் கடைசியில் IMF இன் பிணை எடுப்பு ஆகியவற்றின் முன்னோடித் தன்மை பற்றி நன்கு தெரியும்; அப்பொழுது அமெரிக்கா IMF ஐ ஒரு ஈர்க்கும் குதிரையாக வைத்து ஜப்பானின் இழப்பில் தன்னுடைய பொருளாதார செல்வாக்கை பெருக்கிக் கொள்ள IMF ஐ பயன்படுத்தியது.

பொருளாதார நெருக்கடி மற்றும் போர் அச்சுறுத்தல் ஆகியவை இப்பகுதியில் இருக்கும் மக்களின் முழு உணர்வில் சக்தி வாய்ந்த பாதிப்பைக் கொண்டுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் உழைக்கும் மக்கள் முதலாளித்துவ மீட்சி பற்றி இருப்பு நிலைக் குறிப்பை வரைந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். மார்க்சிசம் பற்றிய ஸ்ராலிச கெடுநோக்குடைய திரித்தல் மற்றும் வரலாறு பற்றிய சோவியத் அதிகாரத்துவத்தின் பொய்மைப்படுத்தல் பற்றி ரஷ்யாவில் பராமரிக்கப்படும் முறையற்ற ஒரு நகைச்சுவை, "கம்யூனிசத்தை பற்றி நமக்குக் கற்பிக்கப்பட்டது அனைத்தும் தவறு; முதலாளித்துவத்தை பற்றி அவர்கள் கூறியது அனைத்தும் உண்மைதான்" என்பதாகும்.