World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

World Bank places Sri Lanka among the "highly vulnerable" countries

உலக வங்கி இலங்கையை "அதிகளவு பலவீனமான" நாடுகளுடன் பட்டியலிட்டுள்ளது

By Saman Gunadasa
30 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இணைந்து அக்டோபர் 10 அன்று நடத்திய கூட்டத்திற்கு சற்று முன்னதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கை, தற்போது நிலவும் பூகோள நிதி நெருக்கடி மற்றும் கடன் சிக்கலில் பாதிக்கப்படக் கூடிய "அதிகளவு பலவீனமானவையாக" கருதப்படும் 28 நாடுகளில் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள நாடுகள் பிரதானமாக சிறிய, மிக வறிய மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட நாடுகளாகும். இவற்றில் எரிட்றியா, எத்தியோப்பியா, தஜிகிஸ்தான், மடகஸ்கார், நேபாளம், ருவண்டா, மாலாவி, ஐவரி கோஸ்ட், பீஜி, ஹைட்டி, சீச்செல்ஸ் மற்றும் மொரிடானியா போன்ற நாடுகளும் அடங்குகின்றன. சீச்செல்ஸ் கடன் தீர்க்கத் தவறியுள்ளதோடு அது வெளிநாடுகளில் பெற்ற கடன்களுக்கு வட்டியை செலுத்த முடியாமல் இருப்பதாக அக்டோபர் 1 அன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 10 கூட்டத்திற்கு முன்னதாக நியூ யோர்க்கில் பேசிய உலக வங்கி தலைவர் ரொபட் ஸோலிக், இந்த சர்வதேச நிதி நெருக்கடி பல நாடுகளை மோசமாக தாக்குகின்றது என்பதை ஏற்றுக்கொண்டார். "செப்டெம்பர் மாத நிகழ்வுகள் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சரிவின் புள்ளியாக இருக்கக் கூடும். ஏற்றுமதியிலான வீழ்ச்சி முதலீடுகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். நாணய இறுக்கத்துடன் சேர்த்து சீர்குலைந்து வரும் நிதி நிலைமகளை, வர்த்தகத் தோல்விகளை ஏற்படுத்துவதோடு வங்கித் தேவைகளையும் சாத்தியமாக்கும். சில நாடுகள் சென்மதி நிலுவை நெருக்கடியை நோக்கி சரியும்," என அவர் தெரிவித்தார்.

கடன் செலுத்தத் தவறுவதை முன்கூட்டியே தடுப்பதன் பேரில், உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் மானியங்கள் மற்றும் சமூக செலவுகள் உட்பட அரசாங்க செலவுகளை வெட்டிக் குறைத்தல் மற்றும் தனியார்மயமாக்கத்தை துரிதப்படுத்துதல் ஊடாக வரவு செலவு பற்றாக்குறையை கட்டுப்படுத்தக் கோருகின்றது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் தாங்க முடியாதவர்களின் -பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள்- மீது மிகப் பாரமாக சுமத்தப்படும்.

இலங்கையில், மத்திய வங்கி ஆளுனரான அஜித் நிவார்ட் கப்ரால் உலக வங்கி அறிக்கையை மூடி மறைக்க முயற்சித்தார். அக்டோபர் 24 நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில், நிலைமை அந்தளவு மோசமாக இல்லை என்பதை வலியுறுத்த சிரமப்பட்டார். ஆனால், அவர் தீட்டிய சித்திரம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கவில்லை: துரிதமாக வடிந்து செல்லும் வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு, ஸ்திரமற்ற ரூபாய், விமானம் ஏறிக்கொண்டிருக்கும் முதலீடுகள்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு வெறும் மூன்றே மாதங்களில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அல்லது 30 வீதத்தால் மூழ்கிப் போயுள்ளது என கப்ரால் ஏற்றுக்கொண்டார். இந்த ஒதுக்கீடு ஆகஸ்ட் முற்பகுதியில் 3.4 பில்லியன் டொலர்களில் இருந்து கடந்த வாரம் 2.6 பில்லியனாக இருந்தது. "ஊதிப் பெருக்கும் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை நிரப்புவதற்காக கடந்த இரு ஆண்டுகளில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயம் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் இந்த ஆண்டு சென்மதி நிலுவை பிரச்சினைகள் வெடித்துள்ளதாகவே தோன்றுகிறது," என கப்ரால் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தமும், அதே போல் உயர்ந்த எரிபொருள் செலவு மற்றும் உணவுப் பொருள் இறக்குமதியும் திறைசேரி வற்றிப் போவதற்கு பிரதான காரணமாக இருந்துள்ளன. 2006ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்து, பாதுகாப்புச் செலவானது 2006ம் ஆண்டு 96 பில்லியனில் இருந்து 2008ம் ஆண்டில் 167 பில்லியனாக அதிகரித்தது. இது 70 வீதத்துக்கும் மேலான அதிகரிப்பாகும்.

கடந்த ஆண்டு முதல், அரசாங்கம் சர்வதேச நிதி சந்தைகளில் உயர்ந்த வட்டி வீதத்துடன் 800 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றது. இந்த மாத முற்பகுதியில், இன்னும் 300 மில்லியன் டொலர்களை வாங்குவதற்கும் பிரேரித்தது. 2007 மத்திய வங்கி அறிக்கையின் படி, நாட்டின் மொத்த கடன் தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 85.8 வீதமாக உள்ளது. வரவு செலவுத் திட்டத்துக்கான வெளிநாட்டு நிதி வழங்கல், 2006ம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 2.5 வீதத்தில் இருந்து 2007ம் ஆண்டு 3.7 வீதமாக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி திறைசேரியில் உள்ள ஓட்டைகளை நிரப்புவதற்கு திறைசேரி உண்டியல்களையும் மற்றும் பிணைகளையும் வெளியிட்டுள்ளதுடன் கடன்களையும் பெற்றுள்ளது. அரசாங்கம் முதல் தடவையாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறைசேரி உண்டியல்களில் 10 வீதத்தை விற்பனை செய்ய அனுமதித்துள்ளது. எவ்வாறெனினும், எழுச்சியுறுகின்ற பொருளாதாரம் என சொல்லப்படுவதில் இருந்து முதலீடுகள் வெளியில் எடுத்துச் செல்லப்படும் சர்வதேச நிலைமையுடன் சேர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூபாயின் செல்வாக்கிலான அடைமானங்களையும் இப்போது விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கப் பிணைகளில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டை உச்ச அளவாக வங்கியிடம் இருந்த போதிலும், கடந்த ஆகஸ்ட்டில் 200 மில்லியன் டொலர் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என கப்ரால் சுட்டிக்காட்டினார். அடுத்து வரும் மாதங்களில் மேலும் 200 மில்லியன் டொலர் வெளிச்செல்லக் கூடும் என அவர் எச்சரித்தார்.

அண்மைய ஆண்டுகளில், இலங்கை ரூபாய் கூர்மையாக வீழ்ச்சி கண்டதுடன், பணவீக்க வீதம் அதிகரிப்பதற்கும் பங்களிப்பு செய்தது. இப்போது பணவீக்கம் 28 வீதமாக உள்ளது. சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பான வேலைநிறுத்த மற்றும் போராட்ட அலைகளை எதிர்கொண்ட அரசாங்கம், பணவீக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கியை நெருக்கியது. மிதந்துகொண்டிருந்த நாணய மாற்று வீதம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கைவிடப்பட்டு அமெரிக்க டொலருக்கு 108 ரூபா என்ற முகாமைபடுத்தப்பட்ட வீதத்தால் பதிலீடு செய்யப்பட்டது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியமையால் அமெரிக்க டொலர்களுக்கான கேள்வி அதிகரித்து, 108 ரூபா என்ற வீதத்தை பாதுகாக்க மீண்டும் மீண்டும் சந்தையில் தலையீடு செய்ய மத்திய வங்கி நெருக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய வங்கி மிகப்பெரும் உலைச்சலுக்குள்ளாகியது. மத்திய வங்கி செப்டெம்பர் மாதத்தில் 202 மில்லியன் டொலர்களையும் அக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மேலும் 150 மில்லியன் டொலர்களையும் செலவிட்டிருந்தது.

முகாமைத்துவப்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதத்தின் விளைவாக வெளிநாட்டு பிணைகள் தொடர்ந்தும் வெளியேறுவதையிட்டு பெரும் வர்த்தகர்கள் பீதியை வெளியிட்டிருந்தனர். "மென்மையான ஆப்பு அடிக்கும் நடவடிக்கைகளும் நாணயங்களின் பயன்தராத தலையீடுகளும் செங்குத்தான நாணய வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இது 2000த்தில் கிழக்கு ஆசியாவிலும் இலங்கையிலும் நடந்தது போல் மற்றும் இப்போது ஐஸ்லாந்து, உக்ரெயின், பெலரஸ் மற்றும் பாகிஸ்தானிலும் இடம்பறுவது போல் வங்கித் துறை மற்றும் பொருளாதார குழப்ப நிலையை விளைவிக்கும்," என லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் அண்மையில் எழுதியிருந்தது.

2000ம் ஆண்டில், இலங்கை ரூபாயின் பெறுமதி மூழ்கிப் போனதோடு வெளிநாட்டு அடைமானங்கள் நாடகபாணியில் வீழ்ச்சியடைந்ததால், ஒரு கூர்மையான சென்மதி நிலுவை நெருக்கடி உருவாகியது. சர்வதேச நாணய நிதியம் மிதக்கும் நாணய மாற்று வீதத்தை அமுல்படுத்துமாறும், மானியங்களை வெட்டிக் குறைக்குமாறும், பாதுகாப்பு வரி உட்பட வரிகளை அதிகரிக்குமாறும் அரசாங்கத்தை நெருக்கியது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் உழைக்கும் மக்களையும் வறியவர்களையுமே பாதிக்கும்.

ஏனைய பங்குச் சந்தைகளைப் போல் ஆவியாகும் நிலையில் இல்லாவிட்டாலும், கொழும்பு பங்குச் சந்தை பூகோள நிதி ஸ்திரமின்மைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. அக்டோபர் 17 முதல் அக்டோபர் 24 வரையான வாரத்தில், அனைத்து பங்கு விலை சுட்டெண் 8.4 வீதத்தாலும் மற்றும் பெறுமான வலுவுடைய மிலங்கா சுட்டெண் 7.8 வீதத்தாலும் சரிந்தன. இந்த ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்களும் 25 வீதத்தால் சரிந்தன.

இலங்கை ஏற்றுமதியும் நெருக்கடிகளை சந்திக்கின்றது. நாட்டின் மூன்றாவது பெரிய அந்நிய செலாவணியை ஈட்டுவது தேயிலையாகும். தேயிலைத் தோட்டங்களில் அரை மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தேயிலை விலை மற்றும் விற்பனையும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "அனைத்து பங்கு உரிமையாளர்களும் தேயிலை ஏல விற்பனையின் இயக்கம் பற்றி கவலை தெரிவிக்கின்றனர். குறைந்த கேள்வி மற்றும் குறைந்த விலையின் காரணமாக ஏலச் சந்தையில் இருந்து எல்லாமாக 65 வீதமான தேயிலை பங்குகள் கடந்த சில வாரங்களில் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன''.

ஏனைய நுகர்வுப் பொருட்களைப் போல் தேயிலை விலையும் கடந்த ஆண்டு கடைப் பகுதியில் இருந்து அதிகரித்துக்கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் அந்நிய செலாவனியை தேயிலையில் இருந்து பெற திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கு இனியும் அடைய முடியாததாகும். பெருந்தோட்ட உரிமையாளர்கள் ஆறு முதல் ஏழு பில்லியன் ரூபா வரையான நிதி பிணையை வழங்குமாறு கோரி அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தனர். அதன் பின்னர் இதற்கு திட்டமொன்றை வகுக்குமாறு மத்திய வங்கி ஆளுனருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு பிரதான ஏற்றுமதி வருமானமான ஆடைக் கைத்தொழிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலான பின்னடைவுகளால் மோசமாக பாதிக்கப்படவுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவர் அனுர ஏக்கநாயக்க, இந்த இரு வர்த்தகங்களிலும் எந்தவொரு பின்னடைவோ அல்லது வளர்ச்சி மந்தமோ ஏற்பட்டாலும் இலங்கை உற்பத்திகளுக்கான கேள்வியில் "நிச்சயமான மற்றும் குறிப்பிடத்தக்க" பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

பிரதான ஆடை ஏற்றுமதி நிறுவனமான எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் தலைவர் மஹேஷ் அமலீன் விளக்குகையில், "அமெரிக்க பின்னடைவின் தாக்கம் அடுந்த ஆண்டின் முதல் அரைப் பகுதியில் எம்மைத் தாக்கும். அடுத்த ஆண்டு முழுதும் சிரமமானதாக இருந்தாலும், முதல் பாதி மிகவும் கடுமையானதாக இருக்கும்," என்றார். ஆடைத் தொழிற்துறையில் சுமார் 270,000 தொழிலாளர்கள், பிரதானமாக பெண்கள் வேலை செய்வதோடு மொத்த தேசிய உற்பத்தியில் இது 10 வீதமாகும்.

பூகோள பொருளாதார நிலைகுலைவு நெருக்கடியின் முழு தாக்கமும் இலங்கை போன்ற நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்படுவதிலும், அதைத் தொடர்ந்து தேயிலை மற்றும் ஏனைய வர்த்தகப் பொருட்களின் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பிலும் மற்றும் அரசாங்கம் மானியங்களையும் சமூக சேவைகளையும் மேலும் வெட்டித் தள்ளுவதன் மூலம் பொருளாதார நெருக்கடியினதும் மற்றும் யுத்தத்தினதும் சுமைகளை மக்கள் மீது திணிப்பதாலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவர்.