World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military drives closer to LTTE stronghold

இலங்கை இராணுவம் புலிகளின் கோட்டையை நெருங்குகிறது

By Sarath Kumara
7 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல நாட்களாக நடந்த "உக்கிரமான மோதலின்" பின்னர் கடந்த புதன் கிழமை வடக்கு மாகாணத்தின் வன்னி பிரதேசத்தில் உள்ள அக்கராயன் குளத்தைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. அக்கராயன் குளமானது பிரிவினைவாத விடுதலைப் புலிகளின் தலைமையகமும் இராணுவ மையமும் இருக்கும் கிளிநொச்சியில் இருந்து தெற்காக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

பத்திரிகையாளர்கள் முன்னணி நிலைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதால் சுயாதீனமான செய்திகள் கிடையாது. எவ்வாறாயினும், புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இந்திய சஞ்சிகையான நக்கீரனுக்கு வழங்கிய பேட்டியில், அரசாங்கத் துருப்புகள் "கிளிநொச்சி நகரை அண்மித்து விட்டதாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் "கிளிநொச்சியைக் கைப்பற்றுவது என்பது (ஜனாதிபதி மகிந்த) இராஜபக்ஷவின் ஒரு பகல்கனவு" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த இரு மாதங்களாக, கிளிநொச்சியின் மேற்கே உள்ள பிரதான நிலைகளைக் கைப்பற்ற இராணுவமும் புலிகளும் கடுமையான மோதல்களில் ஈடுபட்டன. இரு தரப்புகளிடம் இருந்தும் மிக அதிகமான பக்கச் சார்பான விபரங்கள் வருவதால் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை பற்றிய அறிகுறிகள் கிடையாது. வடக்கில் கடுமையான பருவ மழை தாக்கிய போதிலும் இராணுவம் தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருக்கினறது. மிகப் பெரும்பான்மையான சிப்பாய்களுக்கு தங்குமிடப் பற்றாக் குறை இருப்பதால் முழுமையாக நனைந்து திகைப்பூட்டும் நிலமையின் கீழ் யுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கடந்த ஒக்டோபர் 26 அன்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

கிளிநொச்சியை நோக்கி முன்நகரும் இராணுவத்தின் முடிவானது அதனது மூலோபாய முக்கியத்துவத்தை மட்டுமன்றி, பிரச்சார வெற்றிக்கான கொழும்பு அரசாங்கத்தின் அவநம்பிக்கையான உந்துதலையும் கோடிட்டுக் காட்டுகிறது. 2006 நடுப்பகுதியில் இனவாத யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தை திருப்பவும், வாழ்க்கைத் தரம் சீரழிந்து கொண்டிருப்பது தொடர்பான எதிர்ப்புக்களை நசுக்குவதற்கும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல்களை சுரண்டிக்கொண்டுள்ளார்.

புலிகளுடனான யுத்தத்தில் மிக விரைவான வெற்றியைப் பெறுவோம் என கூறிக்கொண்ட போதிலும், அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் மூன்றாவது வருடத்தை எட்டிவிட்டது. பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் பிரதான காரணியாக பிரமாண்டமான இராணுவச் செலவினங்கள் உள்ளன. இப்போது பணவீக்கம் 30 வீதத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது. பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 7 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தில் 177 பில்லியன் ரூபாய்கள் அல்லது 1.7 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

2006ல் கிழக்கு மாகாணத்தில் இராணுவம் ஒரு ஒப்பீட்டளவில் விரைவான வெற்றியை அடைந்தது. இந்த மாகாணத்தில் 2004ல் உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் தம்மை பலவீனப்படுத்தும் பிளவை புலிகள் எதிர்கொண்டிருந்தனர். வடக்குப் பிரதேசங்களில், கசப்பான மற்றும் நீண்ட சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2007 யூலையில் இருந்து, மன்னார், விடத்தல் தீவு மற்றும் நாச்சிக் குடா உட்பட மேற்கு கரையோர பகுதியில் பல பிரதான பிரதேசங்களை புலிகள் இழந்தனர்.

அக்கராயன் குளத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக, ஒக்டோபர் 29 அன்று மேற்கு கரையோரத்தில் புலிகளின் பிரதான கடற்படைத் தளமான நாச்சிக்குடாவை இராணுவம் கைப்பற்றியது. புலிகள் இரண்டு மாதங்கள் நீடித்த கடுமையான மோதல்களின் பின்னர் தமது நிலைகளில் இருந்து மேலும் வடக்குப் பக்கமாக பின்வாங்கியிருந்தனர். பூநகரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் தான் நாச்சிக்குடா உள்ளது. பூநகரியானது மேற்குக் கரையோரப் பகுதியில் எஞ்சியிருக்கும் புலிகளின் கடைசி பிரதான தளமும் மற்றும் தென்னிந்தியாவிலிருந்து புலிகளுக்கான விநியோகப் பாதையை இணைக்கும் பிரதான இடமுமாகும்.

பூநகரி ஊடாக வடபகுதியின் யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறப்பதற்கான பரந்த தாக்குதல்களின் ஒரு பாகமாகவே நாச்சிக் குடா கைப்பற்றப்பட்டது. இராணுவம், 1990 இல் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள படைகளுக்கு தரைவழிப் பாதையால் விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

இராணுவம் கிழக்கில் மணலாறு பகுதியில் இன்னுமொரு முன்னரங்கில் இருந்தும் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. முன்னேற்றங்கள் மந்தமாக இருந்த போதிலும் இராணுவம் அண்மையில் கஜபாபுர என்ற சிறிய கிராமத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. கிழக்கின் நிலைகளில் உள்ள இராணுவத்தின் உச்சக் கட்ட இலக்கு, முல்லைத்தீவில் உள்ள பிரதான புலிகளின் தளங்களைக் கைப்பற்றுவதாகும்.

இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா, திங்கட் கிழமை நடைபெற்ற ஒரு இராணுவ விழாவில் யுத்தம் "80 வீதம் முடிந்து விட்டது" என தற்பெருமையுடன் கூறினார். அவர் 2006 நடுப்பகுதியில் இருந்து புலிகளின் பிடியில் இருந்த 80 வீதமான பிரதேசங்களை இராணுவம் மீளக் கைப்பற்றியதாகவும் 12,000 புலி போராளிகளைக் கொன்றுவிட்டதாகவும் அறிவித்தார். "இந்த யுத்தம் முடிவுறுவதை மக்கள் பார்க்க முடியும்" என்றும் அவர் பிரகடனம் செய்தார்.

புலிகள், மிகப் பெரிய இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு எதிராக ஒரு அவநம்பிக்கையான தற்காப்பு சண்டையில் ஈடுபடுகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை. புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுத் தளத்தை தாக்கியழித்ததுடன் கடுமையான தோல்விகளை அரசாங்கப் படைகளுக்கு ஏற்படுத்திய 2000ம் ஆண்டில் இருந்தே இராணுவத்துக்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு விரிவாக்கப்பட்டு வந்தது. கடந்து மூன்று வருடங்களாக, இலங்கை கடற்படை, புலிகளின் பல விநியோகக் கப்பல்களை மூழ்கடித்து அவர்களின் பிரதான விநியோகப் பாதைகளைத் தடுத்தது.

இராணுவத் தளங்களுக்கு எதிராக அவ்வப்போது நடத்தும் திடீர் தாக்குதல்கள் மற்றும் இரு இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி நடத்தும் விமானத் தாக்குதலாக புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒக்டோபர் 28 இரவு, புலிகள் விமானத்தின் மூலம் மன்னார் பிரதேச இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் தலைநகர் கொழும்பில் உள்ள களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் மீதும் சிறிய குண்டுகளைப் போட்டனர். அது இரண்டு இடங்களிலும் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.

ஆனால், இராணுவம் இராணுவ முன்னேற்றங்களைத் தக்கவைத்துள்ள அதேசமயம், அரசாங்கமும் இராணுவமும் தென் பகுதியில் யுத்தத்துக்கான அரசியல் எதிர்ப்பு சம்பந்தமாக ஆழமாக கவலை கொண்டுள்ளன. இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களில் கூடுதலானவர்கள் ஏழ்மையான சிங்களக் கிராமங்களில் இருந்து பொருளாதார காரணங்களால் இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டவர்கள்.

மோதல்கள் தீவிரமடைகின்ற நிலையில் போரில் இறந்தவர்களின் புள்ளிவிபரங்களை தொடர்ந்தும் வழங்குவதில்லை என்று ஒக்டோபர் 24ம் திகதி பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததது. இது "இராணுவ நடவடிக்கைகளின் பாதுகாப்புக்கு தேவையானது" என அது சுட்டிக் காட்டியது. இம் முடிவு யுத்தச்செலவு அதிகரித்துச் செல்லுவது தொடர்பான வெறுப்பு மற்றும் சீற்றத்தைக் கட்டுப் படுத்துவதை தெளிவான இலக்காகக் கொண்டது.

இராணுவத்தின் முன்னைய புள்ளி விபரங்கள் கூட, அண்மையில் நடந்த சண்டைகளில் நூற்றுக் கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதைத் தெளிவாக்குகிறது. இவை தென்பகுதி கிராமவாசிகளின் மத்தியில் எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் கிளறிவிட்டுள்ளது. கடந்த மாதத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசாரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் விவாதத்தின் போது, அக்டோபரில் 177 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும் 1,122 பேர் காயமடைந்ததாகவும் அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும், புலிகள் சிங்களத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு அழைப்பும் விடுப்பதற்கு இயல்பிலேயே இலாயக்கற்றவர்கள். அரசாங்கம் சிங்கள மேலாதிக்கவாதத்தை தமது அடித்தளமாகக் கொண்டிருப்பதைப் போலவே, புலிகளும் கொழும்பில் ஆட்சியாளர்கள் செய்து வருகிற குற்றங்கள் முழுவதற்கும் "சிங்கள மக்கள்" மீது பழி சுமத்துவதன் மூலம் தமிழ் இனவாதத்தைக் கிளறிவிடுகின்றனர். அதன் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதல்கள் அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரத்துக்கு ஆதாரத்தை வழங்கவும் தமிழ் சிங்கள தொழிலாளர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தவும் மட்டுமே சேவை செய்கிறது.

2002ல் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையை இவ்வருட முற்பகுதியில் கிழித்தெறிந்த ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, இராணுவத் தாக்குதல்களை நிறுத்த அழைப்பு விடுவதற்கு எவ்விதமான எண்ணமும் கிடையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். புலிகள் இராணுவ ரீதியாக முற்றாக அழிக்கப்படும் வரையும் யுத்தம் தொடரும் என்று ஒக்டோபர் 31 இல் இந்தியா டுடே சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

"யுத்தத்தில் பொதுமக்கள் சாகும் எண்ணிக்கை பூஜ்யமாக இருக்க வேண்டும்" என்பதற்காகவே முன்னேற்றம் மெதுவானதாக இருக்கிறது என்று இராஜபக்ஷ கூறிக்கொண்டார். ஆயினும் இதில் உண்மை கிடையாது. இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கு கிலியூட்டுவதற்காக சரமாரியான ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.

1983 இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கொல்லப்பட்ட 60,000க்கும் கூடுதலானவர்களுக்கும் மேலாக, 2006 நடுப்பகுதியில் இருந்து 10,000 பேர் -பெரும்பாலானவர்கள் பொதுமக்கள்- கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில், இலட்சக்கணக்கானவர்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து பயங்கரமான நிலையில் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.

இனப்பிரச்சினை என்று சொல்லப்படுவதற்கு "இராணுவத் தீர்வு இல்லை" என்று இராஜபக்ஷ தனது பேட்டியில் பிரகடனம் செய்தார். அரசாங்கம் வடக்கைக் கைப்பற்றிய பின்னர், "கிழக்கில் செய்ததைப் போல் அரசியல் தீர்வொன்றை அமுல்படுத்தும்" என அவர் தெரிவித்தார்.

கிழக்கில் ''அரசியல் தீர்வு'' என்பது புலிகளிடம் இருந்து பிரிந்து போன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டி.எம்.வி.பி.) உதவியுடனான ஒரு இராணுவ ஆக்கிரமிப்பாகும். தனது அரசியல் எதிரிகளையும் உள்ளூர் பொது மக்களையும் அச்சுறுத்த ஆயுதம் தாங்கிய டி.எம்.வி.பி. உறுப்பினர்களை பயன்படுத்தும் அதன் உப தலைவரான எஸ். சந்திரகாந்தனே கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராவார்.

புலிகளை அதன் எஞ்சியுள்ள வடக்கு கோட்டையில் இருந்து வெளியேற்றி இராணுவம் வெற்றி பெற்றாலும் கூட, யுத்தத்துக்கு வழிவகுத்த இனவாத பதட்ட நிலைமைகள் வேறு ஒரு வடிவத்தில் வெடிக்கும். அரை நூற்றாண்டுக்கு மேலாக, கொழும்பில் இருந்த அரசாங்கங்கள், தமது ஆட்சிக்கு ஒரு சமூகத் தளத்தை உருவாக்கிக் கொள்ளவும் தொழிலாளர் வர்க்கத்தை பிளவு படுத்தவும் ஒரு வழிமுறையாக தமிழர் விரோத இனவாதத்தைக் கிளறிவிட்டன.

புலிகள் மீதான இராணுவ வெற்றியானது சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழியமைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அதன் ஆட்சிக்கு முண்டு கொடுக்க சர்வதிகார வழிமுறைகளை நாடத் தள்ளப்படும். இதன் அறிகுறியாக, தற்போதைய படை வலுவான 125,000 என்ற எண்ணிக்கையை வருடக் கடைசியில் மேலும் அதிகரிப்பதற்காக புதிதாக 14,000 பேரை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அண்மையில் அறிவித்தார்.