World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police re-arrest relative of SEP member

இலங்கைப் பொலிஸ் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவரின் உறவினரை மீண்டும் கைது செய்துள்ளது

By Nanda Wickramasinghe
12 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கைப் பொலிசார், கடந்து மாதம் சந்திரலிங்கம் இளஞ்செழியனை மீண்டும் கைது செய்துள்ளனர். அவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) அங்கத்தவர் வேலும்மயிலும் கமலதாசனுடன் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த இருவரும் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்த பிரச்சாரத்தை அடுத்து விடுதலை செய்யப்பட்டதற்கு முன்னதாக எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி எட்டு நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருத்தார்கள்.

இளஞ்செழியன் ஒக்டோபர் 3ம் திகதி மேற்குக் கரையோர நகரமான நீர்கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், சோ.ச.க. அவர் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிந்து கொண்டது. சோ.ச.க. வின் முன்னைய பிரச்சாரத்தின் தாக்கத்தைப் பற்றி நன்றாக முன்னுணர்ந்திருந்த நீர்கொழும்பு பொலிசார், கைது பற்றி கட்சிக்கு அறிவிக்க வேண்டாம் என இளஞ்செழியனின் உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அவ்வாறு சொன்னால் அவரை விடுதலை செய்து கொள்வதில் மேலும் சிரமம் ஏற்படும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இளஞ்செழியன் இப்போது ஒரு மாதத்துக்கும் மேலாக இலங்கையின் கொடூரமான அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சட்டம் விசாரணைகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இன்றி கைதிகளை நீண்டகாலம் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கின்றது. நீர்கொழும்பு பொலிசார் ஒக்டோபர் 31 அன்று நீதவான் முன்நிலைக்கு கொண்டு வந்து மேலும் மூன்று வாரங்களுக்கு தடுப்புக் காவல் கட்டளையைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த நடைமுறை ஏறத்தாள வரையறையின்றி தொடரமுடியும்.

அரசாங்கம் 2006 நடுப்பகுதியில் மீண்டும் நாட்டை யுத்தத்துக்குள் மூழ்கடித்ததிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அதன் அங்கத்தவர்கள் என்ற ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு மாதக் கணக்கில் அல்லது வாரக்கணக்கில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

கமலதாசன் மற்றும் அவரது மைத்துனரான இளஞ்செழியனும் முதலில் செப்டம்பர் 15 அன்று நீர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு செல்லும் பஸ்ஸில் ஏறியிருந்த போது, அடையாளப்படுத்துவதற்கு போதுமான ஆவனங்களை வைத்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யபட்டார்கள். கமலதாசன் கட்சியின் நீண்டகால அங்கத்தவர் என்று சோ.ச.க. உறுதிப்படுத்திய போதிலும் அவர்கள் எட்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை மட்டுமன்றி, புலிகளின் பிரிவினைவாத அரசியலையும் மற்றும் சிங்களப் பொது மக்கள் மீதான புலிகளின் தாக்குதல்களையும் எதிர்ப்பதில் சோ.ச.க. இலங்கையில் பிரசித்திபெற்றதாகும்.

இளஞ்செழியனும் கமலதாசனும் இறுதியாக செப்டம்பர் 23 விடுவிக்கப்பட்டார்கள். அவர்களை விடுவிக்க உள்ளூர் நீதவானிடம் சம்பிரதாய பூர்வமாக முற்படுத்திய போது, "மேலதிக விசாரணைகள் முலம்" அவர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை பொலிசார் ஒத்துக் கொண்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸார், கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) மற்றும் இருவரின் பூர்வீகமான யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் பொலிஸ் நிலையத்தில் இருந்தும் அறிக்கைகளைக் கேட்டிருந்தனர்.

இளஞ்செழியன் போலிக் காரணங்களின் அடிப்படையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரன் என்ற வேறொரு தமிழரை மலேசியாவில் இருந்து திரும்பிய பின்பு கைது செய்ததையடுத்தே, இளஞ்செழியனை பொலிசார் கைது செய்தனர். சந்திரன் தான் மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக 2004ல் இளஞ்செழியனுடன் தங்கியிருந்ததாக பொலிசாருக்கு கூறியுள்ளார். ஏன் சந்திரன் கைதுசெய்யப்பட்டார் என்பதை பொலிசார் இன்னமும் விளங்கப்படுத்தவில்லை. ஆனால் அவர் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்று மறைமுகமாகக் தெரிவித்துள்ளனர்.

இளஞ்செழியனின் குடும்ப அங்கத்தவர்களின் படி, சந்திரன் யாழ்ப்பாணத்தில் இருந்து நீர்கொழும்புக்கு வந்து சேர்ந்தபோது இளஞ்செழியனுடன் தங்கியுள்ளார். இளஞ்செழியனுக்கோ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கோ சந்திரனின் பின்னணி தெரிந்திருக்கவில்லை. இளஞ்செழியன் நான்கு வருடங்களுக்கு முன்னர் வழியில் அறிமுகமானவருக்கு சில நாட்கள் தங்குமிட வசதிகொடுக்கும் சாதாரண உதவியையே செய்துள்ளார்!

இளஞ்செழியன் மீண்டும் கைது செய்யப்பட்டதிலிருந்து நீர்கொழும்பு பொலிசார் அவரின் வீட்டிற்கு பல தடவைகள் சென்றுள்ளனர். ஒக்டோபர் 21, பொலிஸ் அதிகாரிகள் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகளைத் தேடுவதாகக் கூறிக்கொண்டு நாய்கள் மற்றும் உபகரணங்களுடன் சென்று வீடு முழுவதும் துருவித் துருவித் தேடினார்கள். அவர்கள் குற்றஞ்சாட்டக் கூடிய எவ்விதமான ஆதாரங்களையும் கண்டு பிடிக்காததோடு ஒரு மாதத்துக்கும் மேலாக இளஞ்செழியனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.

இந்த புதிய கைதானது கமலதாசனையும் சோசலிச சமத்துவக் கட்சியையும் பொலிசார் இலக்கு வைக்கலாம் என்பதற்கான முன்னெச்சரிக்கையாகும். இளஞ்செழியனை ஒக்டோபர் 3ம் திகதி கைது செய்யும் போது, வடபகுதி நகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றுவிட்ட கமலதாசனைப் பற்றியும் பொலிசார் விசாரித்துள்ளனர்.

கமலதாசன் மற்றும் இளஞ்செழியனும் செப்டம்பரில் விடுதலையான சிறிது காலத்தின் பின்னர், நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.எஸ். விதான, பொலிஸ் மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) எழுதிய கடிதத்தில் "மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, அவர்கள் எந்தவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றே தகவல்கள் கிடைத்துள்ளன," என விளக்கியிருந்தார். அதன் ஒரு பிரதி சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இளஞ்செழியன் மீண்டும் கைது செய்யப்பட்ட உடனேயே, விதான மேலும் ஒரு அச்சமூட்டும் குறிப்பொன்றை சேர்த்து ஒக்டோர் 9 அன்று டயசுக்கு நேரடியாக எழுதியிருந்தார். அந்த இருவருக்கும் எதிராக எதுவிதமான சான்றுகளும் கண்டுபிடக்கப்படாமையால் இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளும் அதே சமயம், பொலிஸ் அத்தியட்சகர் எழுதியதாவது: "இந்த நபர் (கமலதாசன்) பற்றி மேலும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்." வேறு வார்த்தைகளில் சொன்னால், பொலிஸ் கமலதாசனை தொடர்ந்து கொண்டிருப்பதோடு அவரது கோவை இன்னமும் மூடப்படவில்லை.

நீர்கொழும்பு பொலிசாரின் நடவடிக்கைகளில் பழிவாங்கும் நோக்கம் இருக்கலாம். கமலதாசனும் இளஞ்செழியனும் சட்டவிரோதமாகவும் எதேச்சதிகாரமான முறையிலும் கைது செய்யப்பட்டமை பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்டதையிட்டு அவர்கள் சீற்றமடைந்துள்ளனர். அச்சமயம் சோ.ச.க. சுட்டிக்காட்டியது போல், இருவரது தடுத்து வைப்பும் அரசாங்கத்தின் அவரகாலச் சட்டத்தின் கீழ் உள்ள அடிப்படையான விதிகளைக் மீறும் நடவடிக்கையாகும்.

அதே சமயம், அரசாங்கம் எதிர்கொணடுள்ள நெருக்கடியை சோ.ச.க. குறைத்து மதிப்பிடவில்லை. நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, சாத்தியமான பொருளாதார அழிவை எதிர்கொண்டுள்ளார். இந்த பொருளாதார நெருக்கடி ஆழமடைந்துவரும் பூகோள நிதி பொறிவினால் மேலும் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவச் செலவு பணவீக்கத்துக்கு எண்ணெய் வார்த்துள்ளது. பணவீக்கம் இப்போது 30 வீதமாக உள்ளதோடு பரந்த அரசியல் அமைதியின்மையையும் தோற்றுவித்துள்ளது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் மாணவர்களின், விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உட்பட எந்தவொரு எதிர்ப்புக்கும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, அவர்களை தேசிய பாதுகாப்பை கீழறுப்பவர்களாகக் கண்டனம் செய்வதும் "பயங்கரவாதத்துக்கு உதவுவதாக" அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதுமேயாகும். நாட்டின் தமிழ் சிறுபான்மையினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆட்சி, எதேச்சதிகாரமான கைதுகளை மட்டுமன்றி, பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைத்து செயற்படும் கொலைப் படைகளை கட்டவிழ்த்து விடுவதையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இந்த கொலைப் படைகள் கடந்த இரு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்களை கடத்தியுள்ளது அல்லது கொலைசெய்துள்ளன. அரசாங்கம் ஆழமான நெருக்கடிக்குள் நுழைகின்ற நிலையில், அது தனது எதிரிகளை அடக்குவதற்கான முயற்சியில் ஆத்திரமூட்டல்கள் மற்றும் வன்முறைகளையும் பயன்படுத்தத் தயங்காது.

இழஞ்செழியன் மீண்டும் கைதுசெய்யப்பட்டதையும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தொடரும் தாக்குதல்களையும் எதிர்க்குமாறு நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். அந்த அடிப்படையில் மட்டுமே, உழைக்கும் மக்கள் இனப் பிளவுகளுக்கு எதிராக ஐக்கியமாகி, தமது சொந்த சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக, குறிப்பாக ஏற்கனவே 70,000க்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்துள்ள 25 ஆண்டுகால நாட்டின் கொடூரமான யுத்தத்துக்கு முடிவுகட்ட, போராட்டத்தை தொடங்க முடியும்.